Flipkart

Amazon

Amazon

Saturday, September 22, 2012

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு - ஒரு ஆய்வு


என் நண்பன் Tr Sandeep கிற்காக இல்லையென்றாலும் எனக்காகவாவது நான் என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது. அப்படி ஒரு கேள்வியை அவன் கேட்டான் “உனக்கு காங்கிரஸ் பிடிக்காது என்பதற்காக இந்த அரசு செய்யும் எல்லாவற்றையும் எதிர்க்கிறாய். வினவு போல் ஆகிவிட்டாய்” என்கிறான்.

அப்படியா ஆகிவிட்டேன் நான்? இந்த விவாதம் எங்களுக்குள் நடந்தது, நாங்கள் “சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை” பற்றி பேசிக்கொண்டிருந்தபோது. உண்மையிலேயே திறந்த மனதுடன் இந்த் எஃப்.டீ.ஐ பற்றி ஆராய்து என் கருத்டடள் முன் வைக்கிறேன். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


பொருளாதாரத்தை பற்றிய அடிப்படை அறிவு உள்ள எவரும் புரிந்து கொள்ளும் விதமாக இக்கட்டுரை அமையும்.

     மார்க்ஸ் எழுதிய “மூலதனம்” என்னும் நூலை படித்திருக்கிறீர்களா? சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த புத்தகம் அது. அந்த புத்தகத்தின் சாரம் இது தான். நீங்கள் ஒரு பென்சில் வாங்குகிறீர்கள். இப்போது அந்த பென்சிலுக்கு நீங்கள் உரிமையாளர், காரணம் நீங்கள் ஐந்து ரூபாய் செலுத்தி அந்த பென்சிலை வாங்கி இருக்கிறீர்கள். சரி, அந்த ஐந்து ரூபாய் எப்படி பிரிக்கப்படுகிறது எனப்பார்ப்போம். அந்த பென்சிலை உருவாக்க தேவையான மூலப்பொருட்கள், இடம், இயந்திரங்கள் எல்லாவற்றையும் வாங்கிப்போட்ட முதலாளிக்கு அந்தப் பணம் சென்று சேரும். அவர் எத்தனை ஐந்து ரூபாய் வந்தாலும் வைத்துக் கொண்டு உழைத்து அந்த பென்சிலை உருவாக்குகிற தொழிலாளிக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை தருவார். இதில் முதலாளி பக்கம் நியாயம் உள்ள ஒரே வாதம் “நஷ்டதத்தையும் அவர் தானே ஏற்றுக்கொள்கிறார்” என்பது தான். ஆனால், நிஜத்தில் நஷ்டம் ஏற்பட்டால், சம்பள குறைப்பு, ஆள் குறைப்பு, என அவதிப்படுவது தொழிலாளர்கள் தான்.

     இந்த முன்னுரை, இந்த சில்லரை வர்த்தகம் பற்றி புரிந்து கொள்ள மிக அவசியமாகும்.  முதலில் சில்லறை வர்த்தகம் குறித்தும், அதில் அன்னிய முதலீடு குறித்தும் பார்ப்போம். பின் அதற்கு எதிரான ஆதராவன கேள்வி பதில்கள் தொடரும்.

     ஒரு குட்டிக் கதை. ஒரு ஊரில் ஒரு பள்ளிக்கூடம், பத்தாவது வரை உள்ள மாணவர்கள் படித்து வந்த ஒரு பள்ளிக்கூடம் அது. அந்த ஊர் ஒரு கிராமம், அந்த ஊர் மக்கள் பெரிதாக நகர வாசனை நுகர்ந்ததில்லை. அந்த பள்ளிக்கூட வாசலில் ஒரு பாட்டி அமர்ந்து நெல்லிக்காய், மாங்காய் , தேன் மிட்டாய் என வார-நாட்களுக்கு ஒன்றாக பல திண்பண்டகளை விற்பாள். அது தான் அவளுக்கு பிழைப்பு. மாங்காய் வாங்க வரும் பிள்ளைகளை விட, அவளிடம் கதை கேட்க வரும் பிள்ளைகள் தான் அதிகம். அவ்வளவு அருமையாய் கதை சொல்வாள் பாட்டி. வாழ்க்கை பிரச்சனை இல்லாமல் போய் கொண்டிருந்தது பாட்டிக்கு, அந்த புதிய வீடியோ கேம் கடை வரும் வரை.



     ஒரு நாள் பாட்டி வழக்கம் போல கூடையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். இன்று வழக்கதிற்கு மாறாக பிள்ளைகள் கூட்டம், இன்று சொற்பமாக இருந்தது. தூரத்தில் புதிதாக பளபளப்பான பேனருடன் கூடிய ஒரு கடை திறக்கப்பட்டு இருந்தது. வந்த பிள்ளைகளிடம் விசாரித்து பார்த்தாள் பாட்டி, அது ஒரு விடியோ கேம் கடையென்றும், அங்கேயே “பர்கர்” “பீட்சா” போன்ற ஆரோக்கியமான நவீன உணவு வகைகளை மிகக்குறைந்த விலைக்கு தருவதாகவும் அவர்கள் கூறினர். பாட்டிக்கு அது வரை வாழ்க்கை குறித்த பயம் வந்ததில்லை. அதன் பின் பாட்டி, புதுப்புது உணவுகளை அறிமுகப்படுத்திப்பார்த்தாள். கடலை மிட்டாய், பொரி உருண்டை என அவளுக்கு தெரிந்த எல்லவற்றையும் செய்து கொணர்ந்து உட்கார்ந்தாள். ஆனால் அவற்றை எறும்பு தின்றது தான் மிச்சம். ஒரு வாரம் இருக்கும். அதன் பின் பாட்டியை யாரும் பார்க்கவில்லை, பாட்டி அமர்ந்திருந்த இடத்தில் சில கட்டெறும்புகள் மட்டும் மொய்த்துக்கொண்டிருந்தன.

     இந்தியர்களுக்கும் மற்ற நாட்டுக்கார்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு ஒன்று இருக்கிறது. அது எமோஷன். நமக்கு பழக்கம் முக்கியம், நமக்கு தான் செண்டிமென்ட் முக்கியம், நாம் தொழிலையும் நட்பையும் பிரித்துப்பார்ப்பது கிடையாது. நமக்குத் தான் தெரியும், பணத்தை விட பழக்கமும் மனிதர்களும் முக்கியம் என்று. நாம் பால்காரையும், கீரை விற்பவளையும் அண்ணா , அக்கா என உறவு முறையிட்டே அழைத்து வந்திருக்கிறோம்.



தள்ளுவண்டிக்காரனிடம், அம்மா பேரம் செய்வதை பார்த்திருக்கிறேன். “அந்த முக்குல இருக்கற கடைல மூணு ரூவா தான், நீ என்ன்மோ நாலு ரூபா சொல்ற”. சரி தான், அவள் சொல்வதில் நியாயம் இல்லாமல் இல்லை, அங்கே மூன்று ரூபாய் தான். ஏன் என்றால் அவள் மொத்தமாக வாங்குகிறான். ஒரு தள்ளு வண்டி வியாவாரி, 2-3 நாட்களுக்குத்தான் காய்கறி வாங்க முடியும், அவன் இத்தனை தெருக்கள் வெய்யில தள்ளிக்கொண்டு வந்தானே அதற்கு ஒரு 1 ரூபாய் அதிகமாய் கொடுத்தால் தான் என்ன? இதே அம்மா தான்,  ரிலையன்ஸ் பிரஷ்ஷில் காய்கறியை எந்த பேரமும் பேசாமல் வாங்கி வந்ததோடு மட்டுமல்லாமல், விலை குறைவு என பக்கத்து வீட்டுக்காரிக்கும் பரிந்துரைக்கிறாள்? அந்த பெட்ரோல் செலவை உங்கப்பனா கணக்கு போடுவான்?



     சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது, கூடாரத்துக்குள் ஒட்டகத்தை நுழைய விட்ட கதை. என்ன நடக்கும் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

     1)   ஏர்டெல், ரிலைடன்ஸ் போன்ற இந்திய பண முதலைகளோடு 51-49 என்கிற கணக்கில் வால்மார்ட் போன்ற சில்லரை வர்த்தக சங்கிலி தொடர் கடைகள் அமைக்கப்படும். மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்படும் இந்த கடைகளுக்கு லோக்கலில் இருந்தே ஆட்கள் வேலைக்கு எடுக்கப்படுவார்கள். பின்ன மாதம் 5000 ரூபாய்க்கு தினமும் 12 மணி நேரம் கால் கடுக்க நிற்க அமெரிக்கனா வருவான்? இந்த திட்டத்தின் மூலம், இந்தியாவின் வேலை இல்லா திண்டாட்டம் ஒழிக்கப்படும்.

     2)   எல்லா பொருட்களும் மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கும். ஆம், அப்போ தானே நீங்க இங்க வந்து வாங்குவீங்க? அண்ணாச்சி மனைவி கூட அவர் கடையில் பொருள் வாங்காமல், வால் மார்ட்டில் தான் வாங்குவாள்.

     3)   ஒரு கட்டத்தில் வால்மார்ட்டின் சொந்த பிராண்ட்டும், மத்த பெரிய பிராண்டுகள் லோக்கல் பிராண்டுகளுக்கு பதிலாக அந்த இடத்தை நிரப்பும். உதாரணமாக, பவர் சோப்பின் விலைக்கே ஒரு வெளி நாட்டு சோர் (தரத்துடன்!!!??) விற்க்கப்படும். இது பவர் சோப்பின் விற்பனையை கிட்டத்திட்ட முடக்கிவிடும்.

4)   கஸ்ட்டமர் கார்டுகள், பாயிண்ட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். பாயிண்ட் அதிகமாக வேண்டும் என்பதற்காக அவசரத்துக்கு குளியல் சோப்பு வாங்க வேண்டும் என்றால் கூட கார்டை எடுத்துக்கொண்டு இந்த கடைக்கு ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

5)    இந்த கடையில் நீங்கள் பார்க்கும் உங்கள் பட்ஜெட்டுக்கு எட்டாத ஒரு பொருள், உங்களுக்கு ஏக்கத்தை அளித்து, பின் கடன் வாங்கியாவது அந்த பொருளை வாங்க வேண்டும் என்ற எண்ணம் வளரும்.



இது ஒரு புறம் இருக்கட்டும். In the mean while, அண்ணாச்சி குடும்பத்தில் என்ன நடக்குது என பார்ப்போம்.

     “என்னங்க உங்கள பார்க்க யாரோ வந்திருக்காங்க” அரிசி புடைத்துக்கொண்டிருந்த அண்ணாச்சியின் மனைவி குரல் கொடுத்தாள். அண்ணாச்சி பேப்பரை மடித்து வைத்து விட்டு வெளியே வந்தார்.

     “வாங்க செல்வம், உட்காருங்க”

அண்ணாச்சி கண் காட்ட, அவர் மனைவி, சொம்பில் தண்ணீர் கொணர்ந்து வைத்தாள். மோர் தண்ணீராக மாறி 6 மாசமாச்சு. சம்பிரதாய பேச்சுக்கள் முடிந்து வந்த விஷயத்தை ஆரம்பித்தார் புரோக்கர் செலவம்.

“என்ன அண்ணாச்சி, கடைய விக்குதீங்களாமே?”

“ஆமா, செல்வம், வியாபாரம் படுத்துருச்சு, எப்பவும் கடைக்கு பொடைச்ச அரிசில சமைக்குதவ இப்போ அரிசி பொடைக்குதா பாக்கிதீல்ல?”

செல்வம் எதுவும் பேசவில்லை, தொலைக்காட்சியில் ஓடிக்கொண்ருந்த விளமபரத்தை மௌனமாக பார்த்தார். “மிகக் குறைந்த விலையின் சென்னைக்கு மிக மிக அருகில் காஞ்சிவரம் மாவட்டம் இருப்பதாக பொய் சொல்லிக்கொண்டிருந்தாள்” ஒரு பெண்.
“இந்த செல்லியம்மன் டவுன்ஷிப் பக்கத்துலையே வால்மார்ட் கடை இருக்குங்க, உங்களுக்கு தேவையான குண்டூசில இருந்து புள்ள குட்டி வரைக்கும் எல்லாமே கிடைக்கும்”

“பையன் எங்க அண்ணாச்சி?” பேச்சை மாற்ற முயன்றார் செலவம்.

“வேலைக்கு போய்திருக்கான். அவன் பேச்ச கேட்டு படிப்ப நிப்பாட்டுனது தப்பா போச்சு, படிப்பு வரல கடைய பாத்துகதேன்னான், இப்போ” தொண்டை அடைத்தது அண்ணாச்சிக்கு. “இங்கிருக்கற நிலத்த வித்து குடுத்துரு செல்வம், ஊர் பக்கம் போயி, சின்னதா ஒரு மிளிகை கடை ஆரம்பிச்சு அவனுக்கு குடுத்துருவேன். அவன் தினமும் வேலைக்கு போயிட்டு வந்து ராத்தூங்க முடியாம கஷ்ட்டபடுறத காண சகிக்கல வே. அந்த கடையில உக்காத விட மாட்டாங்களாமுல்ல” கனத்தது  அண்ணாச்சியின் குரல்.

     செல்வம் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். அண்ணாச்சி தொடர்ந்தார்.

“அங்கிட்டு ஏ.சி மிஷன் போட்டு விக்குதாங்க. காய் கறி எத்தன நாள் வெச்சிருந்தாலும் புதுசாவே இருக்காம். எல்லா பொருளும் சல்லிசா கிடைக்குதாம்…….”

பேசிக்கொண்டே இருந்தார் அண்ணாச்சி.



Mean While, ஒரு விவசாயி வீட்டில் என்ன நடக்குதுன்னு பாப்போம்.

     “ஏ புள்ள தண்ணி கொண்டு வா” சொல்லிவிட்டு வியர்வை வழித்து விட்டெறிந்தார் வேலாயுதம். ஒடிசலான தேகம், உழைப்பு வியாதி எதுவும் அண்டாமல் உடலை பார்த்துக்கொண்டிருந்தது.

     “என்னங்க ஆச்சு” படபடப்பாக தண்ணியை அவர் கையில் திணித்தவாறே கேட்டாள் அவர் மனைவி.

தண்ணீரை அண்ணாந்து குடித்தார் வேலாயுதம். அவர் அவளின் பொறுமையை சோதிப்பதாகவே தோன்றியது.

     “அவிங்க குடுக்கறது தான் புள்ள வெல, இப்பெல்லாம் முன்ன மாதிரி கிடையாது. மொத்தமே நாலு வியாபாரிங்க தேன். நம்ம தக்காளிய எல்லாம் சாஸ் தொழிற்சாலைக்கு அனுப்ப போறாங்களாம். நம்ம விலை அதிகமா கேட்டா, நீ இல்லைன்ன இன்னொருத்தன், ஆனா உன்னால எங்கள தவிற வேற யார் கிட்டையும் விக்க முடியாதுன்னு சொல்லுறாங்க. நமக்கும் மட்டும் இல்ல, சங்கிலிக்கு கூட, குவிண்டாலும் ரெண்டாயிரம் குடுத்தாங்க வெங்காயத்துக்கு…” விளக்கிக்கொண்டு இருந்தார் வேலாயுதம்.

Mean While, பார்லிமென்ட்டில்,

“என் கரங்களை நீங்கள் பலப்படுத்த வேண்டும்” எதோ ஒரு ஊழல் தொடர்பாக பிரதமர் பேசிக்கொண்டிருக்கிறார் (அட இவருக்கு பேச வருமா!!)

கேள்வி – பதில் :

1)   இதனால் வேலை வாய்ப்பு கிடைக்குமே?

என் நண்பன் பிக் பசாரில் வேலை செய்கிறான். பார்ட் டைம் நேரம் மதியம் 2:30 – இரவு 8:30. சம்பளம் 3500/-.
பின் குறிப்பு : வேலை நேரத்தில் உட்கார கூடாது.

2)   விவசாயிகளிடத்தில் நேரடி கொள்முதல் செய்யப்படுவதால், அவர்களுக்கு லாபம் கிடைக்குமே?

வாதம் தவறு. இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள். அவர்களின் லாபம், விவசாயிக்கு போகாது பதிலாக, இந்த பண முதலை நிறுவனங்களுக்கே போகும்.

3)   KFC, Mc Donolands வந்த போது, இந்திய உணவங்கள் அழிய வில்லையே?

உணவை பொருத்த வரை இந்தியர்களின் உணர்வே வேறு. இந்த காலத்து இளைஞர்களுக்கும் கூட தினமும் KFCஇல் தின்ன பிடிக்காது. என்றாவது ஒரு நாள் தான் சரிப்படும்.
     மிக நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நாம் வீட்டில் சமைக்க பயன்படும் பொருட்களை விற்கும் அங்காடிகளையும் , இந்த உணவகங்களையும் ஒப்பிடுவது முட்டாள் தனம். நீங்கள் ஹோட்டலின் மாதம் ஒரு முறை தின்றே ஆக வேண்டும் என எந்த விதியும் இல்லை. ஆனால், மாதம் ஒரு முறையாவது உப்பும், மிளகாய் பொடியும் வாங்கித்தான் ஆக வேண்டும். இவை FMCG (Fast moving Consumer Goods) எனப்படும். எந்த ஒரு பங்குச்சந்தை சரிந்தாலும், அதை தூக்கி நிறுத்துவது இந்த FMCG ஆகத்தான் இருக்கும்.

4)   விவசாயிகள், வியாபாரிகள் எக்கேடோ கெட்டுப் போகட்டும். மீதி இருக்கும் நுகர்வோருக்கு இது பயனளிக்குமே?

என்ன ஆட்டிடூயுட் சார் இது? சரி போகட்டும். கேட்டுக்குங்க. நாலு பேர் கடை நடத்தும் போது தான் விலை குறைத்து தர முடியும். போட்டியே இல்லை என்னும் நிலை வரும் போது, அவன் வைப்பது தான் விலை. காரணம் ஆயிரம் சொல்லிக்கலாம். அதன் பிறகு அவர்கள் வைக்கும் விலையை கொடுத்தே ஆக வேண்டிய நிலை ஏற்படும். நம்மால் இது போன்ற ஸ்டோர்களில் பேரம் பேச முடியாது என்பதை நினைவில் கொள்க. விலை ஏறாது என யாராவது உத்தரவாதம் தர முடியுமா?

இது தான் ரிலையன்ஸ் நிறுவனம், குஜராத்தில் பாலிஸ்ட்டர் நூலிழை தயாரிப்பில் நுழைந்த போது நிகழ்ந்தது. நீங்கள் டாட்ட கோல்ட் ப்ளஸ்சும், கல்யாணும் வந்த பிறகு நிலை என்ன என சிறு நகை வியாபாரிகளிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் எதோ செம்பை தங்கம் என விற்பதாக காட்டுவார்கள் இவர்கள் விளம்பரத்தில்.

“மன்மதன் அம்பு” படத்தில், ஒரு லைன் வரம் “தகிடுதத்தான் “ பாடலில் “ அடேய் பணக்காரா..கீர வாங்க காரில் போயி பேரம் பண்ணுற”….

5)   உலகம் முழுவதும் “Globalisation” ஐ நோக்கி நகரும் போது, நாம் நாடு என்ற எல்லைக்குள் நம்மை சுருக்கிக்கொள்வது சாத்தியமா? இது பிற்போக்குத்தனமில்லையா?

இது பிற்போக்கு தனமல்ல. இந்த கேள்வி “எல்லா நாடுகளும் காலனியாதிக்கதை ஏற்றுக்கொள்ளும் போது நாம் மட்டும் ஏன் விடுதலைக்காக போராட வேண்டும்?” என்று கேட்பது போல.
நீங்கள் ஐ போன் வாங்குவதை யாரும் தடை செய்யவில்லை. இங்கே ஒரு மளிகை கடை என்பது, விவசாயிக்கும், நுகரும் மக்களும் இடையில் உள்ள ஒரு அமைப்பே. அதை மொத்தமாக ஒரு பெரிய வியாபாரியிடம் விட்டால், ஏற்கனவே அதை செய்யும் சிறு, குறு வியாபாரிகள், சின்ன தொழிலதிபர்கள் (உதாரணம் – பால்கோவா செய்பவர்) (இவர்கள் தொகை 4.5 - 10 கோடி இந்தியாவில்) பாதிக்கபடுவார்கள்.
இப்போ ஓபாமா, விசா பாலிசியில் மாற்றம் செய்து, இந்தியர்களின் வேலையை அமெரிக்கனுக்கு கொடுத்தாரே அது பிற்போக்குத்தனமா?



எனக்கு தெரிந்த பொதுவான கேள்விகளுக்கு பதில சொல்லிட்டேன். வேற எதாவது வாதம், கேள்வி இருந்தா கமெண்ட்டுங்க, பதில் சொல்றேன். என் வாதம் தப்பா இருந்தா ஏத்துக்கறேன்.
கடைசியா, ஒரு வேண்டுகோள், உங்க தெருவுல, ஒரு கடையில, நாலங்கு மிட்டாய் டப்பா, முட்டை, எலிமிச்சம் பழம், கீரை, வெத்தல பாக்கு இதெல்லாம் விக்குமே, அந்த “ஆத்தா கடை”, அந்த பாட்டி சாவுக்கு காரணம் ஆயிடாதீங்க.