Flipkart

Amazon

Amazon

Saturday, November 10, 2012

குப்பை 1 - குழந்தைகள் உலகம்

"ச்சை... இந்தக் குழந்தைங்கள சமாளிக்கறதுக்குள்ள..." அலுத்துக்கொண்டார், அந்த மிலிட்டரி நண்பர். மிஷின் கன்களோடும், சத்தத்தோடும், தோரணையோடும் வாழ்க்கையை அணுக பழகிவிட்டிருந்தவரை பேரக்குழந்தைகளை கவனிக்கச் சொன்னால் வேறு எப்படி இருந்திருக்கும்.

அவர் என்னிடம் சொன்னார் , "ஒரு நாள் இந்தக்குழந்தைங்களோட விளையாட விடாப்புடியா கூட்டிட்டு போச்சு தம்பி, போலீஸ் விளையாட்டாம், நான் உணர்ச்சி வசப்பட்டு திருடன் வேஷம் போட்டு இருந்த குழந்தைய இறுக்க புடிச்சு தூக்கிட்டேன், அதுக்கு அப்பறம் அதுங்க என்னைய விளையாட கூப்பிடுறதே இல்ல... ஆனா அவங்க விளையாடுறப்ப நான் கவனிப்பேன், திருடன போலீஸ் குழந்தை புடிக்காது, சும்மா தொடும், அப்பறம் ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டே கட்டிப் புடிச்சுக்குவாங்க" என்றார்.

"நாட்டுல கூட இப்ப அதான் சார் நடக்குது" என்றேன்.

ஆனால் யோசித்து பார்க்கையில் ஒரு உண்மை சட்டென புரிகிறது. என்றேனும் ஒரு நாள் நீங்கள் குழந்தைகளின் உலகத்தை அணுகி இருக்கிறீர்களா, அவர்களோடு சேர்ந்து பூதமாக, அவுட் ஆனவனாக, கண்ணைக் கட்டிக்கொண்டவனாக, துரத்துபவனாக, ஓடுபவனாக, ஸ்பைடர் மேனாக, பவர் ரேஞ்சர்ஸாக, டோராவாக உறவாடி இருக்கிறீர்களா? குழந்தைகளின் உலகம் அதி அற்புதமானது. நீங்கள் நிஜ உலகில் ஒரு நாட்டின் முதலமைச்சராக இருக்கலாம், பெரிய நிறுவனத்தின் நிர்வாகியாக இருக்கலாம். ஆனால், ஒரு குழந்தையின் சமஸ்தானத்தில் உங்களால் ஒரு சிப்பந்தி வேலையைக்கூட சிறப்பாக செய்யமுடியாது. உங்களுக்கு நிர்வாகம் தெரியலாம், ஆனால் குழந்தைகளைத் தெரியாது. உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். நீங்கள் எந்தப்பணி செய்பவராக இருந்தாலும் சரி, இதை முயன்று பாருங்கள். உங்கள் பணி சார்பான விளையாட்டை விளையாடலாம் என உங்கள் குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் உங்கள் கதாப்பாத்திரத்தையே விளையாண்டு பாருங்கள். நீங்கள் தினசரி செய்யும் கண்ணில் படாத தவறையும், உங்கள் குழந்தை சுட்டிக்காட்டும். குழந்தைகளின் அந்த அதி அற்புத உலகத்தில், உங்களால் எந்த வேடத்தையும் சரியாக செய்ய முடியாது!


என் அம்மா ஆசிரியலாதலால், பள்ளிக்கு அடிக்கடி சென்று வரும் வாய்ப்பும், அந்த குழந்தைகளின் சினேகமும் இயல்பாகவே கிட்டி இருந்தது. ஒரு முறை அவர்கள் கண்ணாமூச்சி ஆடும் போது பார்த்தேன். சத்தியமாக ஆச்சிரியப்பட்டுப்போனேன். அவர்கள் எந்தத் துணியும் உபயோகிக்கவில்லை. கையால் கண்ணை மூடியபடி விளையாண்டு கொண்டு இருந்தார்கள். ஆனாலும், ஒருவரேனும் கண் திறந்து யாராவது தென்படுகிறார்களா என்று பார்க்க முனையவில்லை.

ஒரு பையனை அழைத்து நைசாக கேட்டேன்

"ஏன் டா, கண்ணத்திறந்து லேசா பாத்து இருந்தா யாரையாவது தொட்டு இருக்கலாம் இல்ல..."

"இல்லண்ணே, இந்த வெள்ளாட்டுல கண்ண தொறக்க கூடாது...." சொல்லி விட்டு அடுத்த சுற்று விளையாட போய்விட்டிருந்தான் அவன். எனக்கோ பொட்டிலடித்தாற் போல் ஆகிவிட்டிருந்தது. என்ன பண்ணிக்கொண்டிருக்கிறேன் நான்? சற்று நிதானித்து பார்த்தால் இதைத்தான் எல்லோரும் எப்போதும் செய்து கொண்டிருக்கிறோம்.

குழந்தைகளை பெரியவர்களாக்கும் முயற்சியில் குழந்தைகளிடம் இருக்கவேண்டிய குழந்தைத்தன்மையை கொன்று கொண்டு இருக்கிறோம். இது வரை எனக்கு முத்தம் கொடுத்த எந்த குழந்தையும் நான் என்ன ஜாதி எனக்கேட்டதில்லை. ஆனால், பல முறை கவனித்திருக்கிறேன், முத்தம் பெறுவதற்கு முன் குழந்தையின் ஜாதியை விசாரித்தற்பவர்களை. ஒஷோ சொல்வார், "எனது வாழ்க்கையில் நிகழ்ந்த அழகான விஷயம் எனது குழந்தைப் பருவம் தான். எனக்கு இந்த ஏட்டுக்கல்வியை கட்டாயப்படுத்தி புகுத்த முயற்சிக்காத எனது பாட்டிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்".

குழந்தைகளுக்கு நாம் புகுட்டுவது கல்வியே அல்ல. இந்த சமூகக் குப்பைகளை மேலும் அசுத்தமாக்க, அந்த அசுத்தம் தெரியாமல் அதன் மீது வாசனை திரவியம் தெளிக்கவே நாம் அவர்களுக்கு பழக்கி வருகிறோம். உ ண்மையிலே ஒரு குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை Opinion of Choice அதாவது தேர்ந்தெடுக்கும் உரிமையை நாம் இந்த மண்ணில் பிறக்கும் எந்தக்குழந்தைக்கும் வழங்குவது கிடையாது. என்னவென்று கேட்கிறீர்களா? ஜாதி, மதம் , கடவுள் , படிப்பு, வேலை, நட்பு வட்டம் என அடுக்கிக்கொண்டே போகலாம். சிலருக்கு முட்டாள்த்தனமாக தெரியலாம் இதில் ஜாதி மதத்தை சேர்த்தது, ஆனால் கூர்ந்து படியுங்கள்.

நீங்கள் ஒரு கதவை திறந்து கொண்டு ஒரு வீட்டுக்குள் செல்வதாக வைத்துக்கொள்வோம். இப்போது, யாருக்கு யார் கட்டுப்பட்டவர், யாருக்கு யார் உரிமை கொண்டாடலாம்? உங்களையும் வீட்டையும் பாதுகாப்பதால், கதவு உங்களுக்கு உரிமை கொண்டாடலாமா? அப்படித்தான் குழந்தைகளும், இந்த உலகம் என்னும் வீட்டை அவர்கள்களுக்காக திறந்து விட்ட கதவுகள் நீங்கள். பெற்றவர்கள்  என்ற வார்த்தயிலேயே, நீங்கள் குழந்தையை பெற்றவர்கள் (You're receivers) என்பது உங்களுக்கு தெளிவாகியிருக்க வேண்டும். உங்களுக்கு அவர்கள் மீது உரிமை கொண்டாட சிறிதளவேனும் நியாயமில்லை, அவர்களிடம் அன்பு செய்தலும், அன்பை பெறுதலுமே உங்களுகிடப்பட்ட கடன். அப்படி இருக்க, என் ஜாதி தான் என் பிள்ளை எனச் சொல்வது எந்த வகையில் நியாயம். ஒரு குழந்தை பிறந்தது தொட்டு, இவர் தான் உன் கடவுள், இது தான் உன் சுற்றம் எனத்தொடங்கி இந்த ஜாதிப்பெண்ணைத் தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது வரை நாமே வரையறுக்கிறோமே, இது எந்த வகையில் நியாயம்?

இவை இன்னின்னவென்று மட்டும் ஒரு குழந்தைக்கு விளக்கி உன் பாதையை நீயே தேர்தெடு எனக்கூறும் எத்தனை பெற்றோர்களை உங்களுக்கு தெரியும்?  நம் குழந்தைக்கென ஒரு தனி பார்வை , ஒரு கோணம் உருவாக வேண்டுமென்று என்றேனும் கவலை கொண்டிருக்கிறோமா? அவர்கள் நம் கையை மீறி, நமது அறிவின் எல்லையை மீறி எங்கும் சென்று விடக்கூடாது என்பதில் நாம் எவ்வளவு கவனமாய் இருக்கிறோம்.

நமக்கே விளங்காத, நம்மால் விவரிக்க அல்லது நியாப்படுத்த முடியாத நியதிகளை ஒரு அப்பாவிக் குழந்தையின் செவிகளில் செலுத்துவதை விடவும் ஒரு பெரிய பாவம் இருக்க முடியாது. ஆனால், சிறிதேனும் கூச்சமே இன்றி இந்த பாவத்தை நாம் சிரமேற்கொண்டு வருகிறோம். காரணம், நாமும் இதே சமூகச் சாக்கடையில் வளர்ந்த கொசுக்கள் தான். சுய சிந்தனையையும், தனியான ஒரு கோணத்தையும் உருவாக்குவதை விட்டுவிட்டு, சந்ததியை உருவாக்குகிறோம்.

மலாலா யூசுப் பற்றி பலரும் பெருமையாக பேசும் போது , அந்தச்சிறுமி சொன்ன வாசகம் ஒன்றை குறிப்பிடுவார்கள் "எனக்கு தரையில் அமர்ந்து படிப்பது குறித்து சிறிதேனும் அக்கறையில்லை. எனக்கு வேண்டியதெல்லாம் கல்வி தான். எங்கு அமர்ந்து படித்தாலும் சரி"என்கிறாள் அவள். நான் அவர்களிடம் சொல்வேன் " இவர்களிடம் அவள் கல்வி கற்பதற்கு சும்மா இருந்துவிடலாம்" என்பேன். மிகுந்த ஆத்திரத்தோடு என்னிடம் சண்டைக்கு வருவார்கள். பிறகு அவர்களிடம் " ஒரு பெண்ணை, என்ன காரணமாய் இருந்தாலும், ஒதுக்கி பிரித்து தரையில் அமர வைக்க வேண்டும் என நினைப்பவன்/ள் ஒரு ஆசிரியனாக ஆசானக இருக்க தகுதி உள்ளவனா? அவனிடம் கற்பதன் பெயர் கல்வியா... அந்தக்கல்வியில் அவன் கக்கிய நஞ்சு அல்லவா தோய்க்கப்பட்டு இருக்கும்" எனக் கூறிய பின் அமைதியடைவார்கள்.

நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரை எனக்கு சில வருடங்களாகத் தெரியும். ஒரு மணி நேரம் அளவாளவிக்கொண்டிருந்தோம். பின்  கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டிருந்த அவர் மகனை அழைத்து வந்து பாடச்சொன்னார். அவனுக்கு ஒரு ஏழு வயதிருக்கும்.  சட்டையின் நுனியை திருகிக்கொண்டே, ஆங்கில ரைம்ஸ் சிலவற்றை பாடிக்காட்டினான். அவர் ஒரு பெரிய மென்பொருள் பொறியியலாளர். பையனை, சில லகரங்கள் செலவில் பெரும் தனியார் பள்ளி ஒன்றில் படிக்க வைத்து வந்தார். பையனை பார்த்தேன், பாடி முடித்து விட்டு, மீண்டும் போய் கம்ப்யூட்டரில் அமர்ந்து விளையாடத்தொடங்கினான்.

"என் சார், பையன வெளியில அழைச்சிட்டு போய் விளையாட வெக்கலாமே, இந்த வயசில போய், வீட்டுக்குள்ளையே" என இழுத்து நிறுத்தேன்.

"இல்லப்பா, இந்த ஏரியா ஒரு மாதிரி, இந்த பசங்களோட எல்லாம் சேந்தா இவனுக்கு இவனுங்க பழக்கம் ஒட்டிக்கும்... மோர் ஓவர் அவன் விளையாடுற கேம்ஸ் எல்லாமே, நான் சரி பார்த்து வாங்குனது.. அவன் வயசுக்கு அவன் மூளைய பன் மடங்கு பெறுக்கும். பின்னாடி கம்யூட்டர் இன்ஜினியர் ஆகணும் இல்ல  " என்றார்.

ஒரு ஏழு வயது பையனின் கல்வியை தீர்மானிக்க ஒரு தகப்பனுக்கு உரிமை யார் கொடுத்தது. அவனால் எதிர்க்க முடியாது மற்றும் அவன் என் பணத்தில் குளித்து , உண்டு , உடுத்துகிறான் என்ற கர்வமே அன்றி வேறொன்று இருக்க முடியுமா?

இதை நான் அவரிடம் கேட்கையில் "முட்டாள் தனமான வாதங்கள். என்ன சொல்ல வர்ற. ஒரு தகப்பனா, என் பையனுக்கு என்ன நல்லது கெட்டதுன்னு நான் சொல்லக்கூடாதுன்னு சொல்றியா?" என்றார்.

"அப்படி சொல்ல சார், எது நல்லது கெட்டது ந்னு சொல்லுங்க. ஆனா, அவனை தீர்மானிக்க விடுங்க. அவன் கெட்ட வழியையே தேர்ந்து எடுத்தாலும் சரி, அது தப்புன்னு அவனே உணர ஒரு வழி கண்டு புடிங்க. ஏன்னா ஒரு வேள உங்களுக்கு கெட்டதா படுற சில விஷயங்கள், மத்தவங்களுக்கு சரியா படலாம் இல்ல...."

"என்ன சொல்ல வர்ற... அவன் எந்த பொண்ணோட சுத்தனாலும், நைட்டு பார்ட்டிக்கெல்லாம் போனாலும் அப்படியே விட்டுரு ந்னு சொல்றீயா?"

"சார், அவனுக்கு ஏழு தான் சார் வயசு...  நான் என்ன சொல்லுறேன்னா, அவனுக்கு பார்ட்டின்னா இன்னது, அதுல இது கெட்டது, இது நல்லதுன்னு சொல்லுங்க, அவனா போகணுமா வேணாமான்னு தீர்மானிக்கட்டும். பின்னாடி அவன் ஒரு இன்ஜினியர் ஆகி, வெளி நாடு போகும் போது, காய்ஞ்ச மாடு பாயிற மாதிரி பாஞ்சா என்னா செய்வீங்க?"      ####

ஒரு நாளில் பேசி முடிகிற விஷயமா இது, ஆனாலும் என்ன சொன்னாலும் சரி, அவர் மாறுகிறவராக இல்லை. ஆட்டு மந்தை கூட்டத்தில் தன் மகன் இருந்து விட்டுப்போகட்டும் அதனால் பிழையில்லை, ஆனால், சுய சிந்தனை என்ற பெயரில் தனது கவுரவம் கெடும் வகையில் ஏதேனும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தார் அவர்.

இந்திய சமூகச்சூழலின் சாபக்கேடு இது. இங்கே யார் உருவாக்கினார்கள் எனத்தெரியாமலேயே, மரியாதை/கவுரவத்திற்கான அளவுகோல் அச்சிடப்பட்டு இருக்கிறது. சமூகச்சாக்கடையில் இரண்டற கலந்து விட வேண்டும் என்ற அச்சத்தில், அது குறித்த கேள்விகள் முளையிலேயே கிள்ளப்படுகின்றன. இது பெரியவர்கள் விஷயம் என குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தட்டிக்கழிப்படும் ஒவ்வொரு கேள்விக்கு பின்னாலும், அந்த கேள்விக்கு விடை தெரியாத, விடைக்கு விளக்கமோ நியாயமோ தெரியாத கையாலாகத்தனம் ஒளிந்து கொண்டு இருக்கிறது.

அந்த நண்பரிடம் விடை பெற்று திரும்பும் போது கவனித்தேன். வேலி ஓரமாக ஒரு சிறுவன் நின்று இவனோடு ஏதோ சைகையில் பேசிக்கொண்டு இருந்தான். பதிலுக்கு இவனும் சைகையிலேயே பதில் சொல்லிக்கொண்டிருந்தான் "அப்பா வெளிய போகட்டும் டா"

நான் சிரித்துக்கொண்டேன். குழந்தைகளின் அந்த அதி அற்புத உலகத்தில், உங்களால் எந்த வேடத்தையும் சரியாக செய்ய முடியாது!

--- கிளறுவோம்

#### - இந்த இடத்தில், இதன் தொடர்ச்சியாக எனக்கும் அவருக்கும் இது தொடர்பாக ஒரு நீண்ட விவாதம் நடந்தது. அதில் பாலியல் கல்வி முக்கியமாக பேசப்பட்டதால், அது அடுத்த வார குப்பையில் வெளிவரும்.

10 comments:

  1. வாழ்க்கைய எப்படி புத்தகம் மாதிரி படிச்சு புரிஞ்சுக்கறதுங்கறதை தெரிஞ்ச நிறைய பேர் கூட பழகுவிங்க போல, நீங்க சொல்லுற விஷ்யங்கள் கண்டிப்பா எல்லாராலயும் விவாதிக்க பட வேண்டியது தான், தொடருங்கள்

    ReplyDelete
  2. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இந்த இடுக்கையின் கருத்துக்கள் பலருக்கும் உடன்பாடாகவே இருக்க முடியும். தொடர்ந்து எழுதுங்கள். பின் தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. நன்றி நண்பா! விவாதிப்போம்!!!!!!!

    ReplyDelete
  4. 'பெற்றவர்கள் என்ற வார்த்தயிலேயே, நீங்கள் குழந்தையை பெற்றவர்கள் (You’re receivers) என்பது உங்களுக்கு தெளிவாகியிருக்க வேண்டும்.'
    அற்புதமான வரிகள்!

    'நம் குழந்தைக்கென ஒரு தனி பார்வை , ஒரு கோணம் உருவாக வேண்டுமென்று என்றேனும் கவலை கொண்டிருக்கிறோமா?'

    மிக மிக உண்மை.

    நான் ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருந்தபோது அந்தப் பள்ளியின் மேலாளர் 'குழந்தைகளை இவரைப்போல இருங்கள், அவரைப்போல இருங்கள் என்று சொல்லக் கூடாது. அவர்களுக்கென்று ஒரு தனி பாதையை அவர்களே அமைத்துக் கொள்ளட்டும் என்பார்.

    உங்கள் பதிவைப் படித்தபின் அவரது சொற்களின் முழு அர்த்தம் புரிகிறது.

    குழந்தைகளின் உலகத்தில் நுழைவது என்பது பெரியவர்களால் முடியாத ஒன்று.

    பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு!

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  5. சிலம்பரசன்5:07 PM, November 10, 2012

    அருமை டா...

    ReplyDelete
  6. சூப்பர்

    ReplyDelete
  7. தங்களைப் போன்ற மனிதர்கள் மிக அரிது:(
    வாழ்த்துக்கள், தொடர்ந்து கிளரறுங்கள்..

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..