Flipkart

Amazon

Amazon

Sunday, December 23, 2012

ஆடை குறைப்பு - எதிர்வினை - விவாதம்



அன்புள்ள கணேஷ் வசந்த்,

               ஜெயமோகன் தளத்தை நிறைய வாசிப்பதாலோ என்னவோ, இப்படி தொடங்கவே வருகிறது. ஆனால், பயப்படாமல் படியுங்கள், அவரைப்போல மெலோ ட்ராமாவோ, உங்களை இனி மேல் சந்திக்க விரும்பவில்லை போன்ற எச்சரிக்கைகளோ விடுக்கப்போவதில்லை.

           எனது காமம் குறித்த கட்டுரையை நீங்கள் படிக்கவில்லை என்ற முடிவிற்கே நான் வர வேண்டியுள்ளது. ஏன் எனில் அதில் நான் பதிலளித்த பல கேள்விகளை நீங்கள் மீண்டும் எழுப்பி உள்ளீர்கள். கற்பழிப்பு குறித்தும் அதற்கான தண்டனை குறித்தும் நாமிருவம் சற்றேறக்குறைய ஒரே மன நிலையில் இருப்பதாக படுகிறது. எனவே ஆடை சுதந்திரத்தை பற்றி மட்டுமே இப்பதில் கட்டுரை பேசக்கடவுது.

       முதலில் ஒன்றை தெளிபடுத்திக்கொள்வோம்.  பெண்களின் உடை பற்றி கருத்து சொல்லும் உரிமை நம்மிருவருக்கும் இருப்பதால் தானே இந்த விவாதமே நடக்கிறது. ஆனால், கருத்தை தெரிவிக்கும் உரிமையும், கருத்தை திணப்பதும் வேறு வேறு என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். சானியா, விளையாடும் உடை எனக்கு ஆபாசமாக படுகிறது என்று நான் சொன்னால் அது என் கருத்து. அதையே “சானியா இந்த உடை அணிந்து விளையாடக்கூடாது என்றோ, இந்த உடையைத்தான் அணிய வேண்டும்” என்றோ கூறுவது கருத்து திணிப்பு. அதை நான் நேரடியாக அவரிடம் சொன்னாலும், அறிக்கையாக வெளியிட்டாலும் அது திணிப்பே தான். எனவே, கருத்து சொல்ல உங்களுக்கு பூரண உரிமை உண்டு. நீங்களே சொன்னதைப்போல உங்கள் வீட்டு பெண்ணே ஆனாலும் திணிக்க உரிமை இல்லை.


  “இன்னொரு ஹைதர் அலி காலத்து வசனம் வச்சிருக்காங்க, “பெண்களோட ஆடைல இல்ல குறை அதை பார்க்கும் ஆண்கள் கண்ணில் தான் இருக்கிறது குறைன்னு, இந்த வசனத்த ஆட்டோல எழுதிப்போடும் நாளை ஆவலோடு நான் எதிர்பார்கிறேன்! இத ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு பெண்களுக்கு ஒரு விசயத்த சொல்ல விரும்புறேன், நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஆண்களோட கண்கள் காமப்பார்வைன்கிற குறை அதிகம் உள்ள கண்களே, இது ஒரு அசிங்கமான குணம்தான், சந்தேகமே இல்ல

             இல்லை, கணேஷ் இதை அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. இது இயற்கை. இது இல்லாமல், எதுவுமே இல்லை. பெண் இதே போல ஆணை பார்ப்பதில்லை என்பதெல்லாம் பொய் கணேஷ். கடந்த வாரம் உலகம் அழிந்தால் என்ன செய்வீர்கள் அதற்கு முந்தைய நாள் என்ற கேள்வியை “18-21” வயதுள்ள பெண்களிடம் கேட்க நேர்ந்தது. அவர்களின் விடையில் “டேட்டிங்க்” தவறாமல் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பெண்களின் மொபைலில் சூர்யாவின் சட்டையற்ற படம் வால்பேப்பராக இருந்ததை சாட்சியாக பார்த்த அனுபவம் உண்டு. அவர்களுக்கு அதை வெளிப்படுத்தும் ஸ்பேஸ் இல்லை.

                 இந்தப்பார்வையை இரண்டு வெவ்வேறு கோணங்களில் இருந்து ஆராய்வோம்.முதலில், இயற்கை விதியின் படி ஆண் மீது பெண்ணும், பெண் மீது ஆணும் கவர்ச்சி கொள்வது இயல்பு. இந்த இயல்பே, எந்த ஒரு இனத்தின் (மனித/மிருக) பெருக்கத்திலும் பங்கு வகிக்கிறது. இரண்டாவது வரலாற்று ரீதியானது. நமது வரலாற்றில் பல்லாயிரக்காண ஆண்டுகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் ஆடை அணியவே (ஆண்/பெண்) உரிமை மறுக்கப்பட்டனர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். (இங்கே மீண்டும் ஒரு விஷயத்தை எல்லோரும் குறித்துக்கொள்ளுங்கள், சென்ற கட்டுரையும், அதற்கான வசந்தின் எதிர்வினையும் மேல் மட்ட/ நடுத்தர – பொதுவெளியில் நடமாடும் பெண்களை குறித்தே எழுதப்பட்டது. பழங்குடியின/தலித்/இலங்கை இவை எல்லாம் இதில் சற்றும் தொடர்பில்லாதவை.)

        மேற்கத்திய கலாச்சாரம் மாறிய அளவிற்கு இந்தியாவில் கலாச்சாரம் மாறாத (வளராத என்றே நான் குறிப்பிடுவேன்) தற்கு ஏகப்பட்ட காரணிகள் உண்டு. அதில் நாம் காலனியாக இருந்தது, நமது பொருளாதார நிலைமை, இஸ்லாமிய இந்துத்வா பழமைவாதிகள் போன்றவை முக்கியமானவை. இவை பெண்ணை ஆணிலிருந்து வேறுபடுத்தி ஆணாதிக்க மனோ நிலையை வளர்த்தவை. இதில் ஹிஜாப் பற்றியேல்லாம் நான் பேச ஆரம்பித்தால், ஹைதர் அலி காலத்திலிருந்து தோண்டி எடுத்து என்னை திட்டுவார்கள் என்பதால், அதை விட்டு விட்டு பெரும்பான்மை சூழலை கவனிப்போம்..

     உங்கள் ஆடை கட்டுப்பாடு குறித்த காரணங்களுக்கான எதிர்வினையாற்றும் முன், ரவிக்கை முகலாயர்கள் கொண்டுவந்தது என்பதனை நினைவில் கொள்க. நீங்கள் சொல்லும் அனைத்தும் நிதர்சனம் குறித்த உங்கள் கவலைகளின் பரிணாமம் என்றே பார்க்கிறேன். ஆனால், நீங்களும் மாற்றம் நிகழும் போது அதில் ஒத்திசைவோடு பங்கேற்பீர்கள் என்றே நம்புகிறேன். அதே போல சினிமா பார்த்து விட்டு அதில் போடும் உடைகள் தான், “சுதந்திர உடைகள்” ந்னு நினைக்கும் மனப்பாங்கு உள்ளவர்களை விட்டுவிடலாம்.
காரணிகளில் வராத இது :

ஆனா இந்த மாதிரி அசிங்கமான குணம் ஆண்களுக்கு இருக்குங்கிறது நிச்சயமா பெண்களுக்கு தெரியும்னு நான் நம்புறேன்பெண்களுக்குள்ள சிறப்பு குணம் அதுஆனா அப்பிடி தெரிஞ்சும்பெண்கள் ஆடைக்குறைப்ப செய்யறது... ஆணோட மோசமான பார்வைய அங்கீகரிக்கிறது மற்றும் தூண்டுவது மாதிரியான செயல்தானேஇது ஒரு தப்பான தூண்டுதல்ன்னு நெனைக்கிறேன். “




          இஸ்லாமியர்களிடம் ஹிஜாப் (பர்தா) குறித்து நியாயம் கேட்டால், ஒரு பெண்ணின் முகமே பாலியல் ரீதியாக உணர்ச்சிகளை தூண்டக்கூடியது என்பார்கள். நான் சொல்கிறேன், குரலே பாலியல் ரீதியில் ஒரு ஆணை தூண்டக்கூடியது. ஸ்ரேயா கோஷலின் குரலில்மாஜா மாஜாபாடல் கேட்டு இருக்கிறீர்களா? (சில்லுன்னு ஒரு காதல்). அதைக்கேட்ட பின்னும் குறியில் ஏதேனும் மாற்றம் ஏற்படாவிட்டாலும் கூட மனதிலாவது காமத்தின் சாயல் படிந்தே தீரும் எந்த ஒரு ஆணுக்கும். ஒரு பெண் சிரிப்பதை பார்த்தால் கூட காம உணர்வு ஏற்படும் தான். இது உடை விஷயத்தில் மற்ற எதனையும் விட அதிகம் என்பதை உங்கள் வழி நின்று நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், “சேலைதான் உலகின் மிக செக்ஸியான (பாலியல் ரீதியில் ஒரு ஆணை கவர்ந்திழுக்கக்கூடிய உடை) “சேலைதான் என்கிறேன். இது குறித்த மேலதிக தகவல்களை நீங்கள் லக்கி போன்ற ஆன்றோர்களை கேட்டும் தெளிவடையலாம். நிச்சயம் ஒரே விடீயோக்களை லைக் செய்திருக்கும் எங்கள் கருத்து மாற வாய்ப்பில்லை. எனவே, ஒரு பெண் உங்களை ஆடை குறைப்பு செய்து தான் தூண்ட வேண்டும் என்பதல்ல, ஒரு களுக் சிரிப்பில், கொஞ்சல் பார்வையில் சாய்த்து விடலாம். நீங்கள் சொல்வது போல, 99 சதவீத பெண்கள் தங்களை ஆண்கள் பார்க்க வேண்டும் என விரும்புவார்களே தவிர, தங்கள் அந்தரங்கத்தை ஆண்கள் பார்க்க வேண்டும் என கடைவிரிக்க மாட்டார்கள். அந்த உடை அவர்களின் சவுகரியம் கருதியே. இன்னொன்று, அப்படியே அப்பெண்கள் (மிகச்சொற்பமான எண்ணிக்கையில்) “காட்டுவதற்காகவேஉடையணிந்ததாய் உங்களுக்கு தெரிந்தால், “அதை பார்ப்பதுஆண்களின் இயல்பே. இயற்கை நியதி அது. பிம்பம்கள் புணரப்படுவது (மனதளவில் நீங்கள் குறிப்பிட்ட நிலை) இயற்கையே.




                   இனி நீங்கள் ஏன் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு தேவை என்றீர்கள் என்பதையும், அதற்கு நீங்கள் அடுக்கும் காரணங்களையும் அவறிற்கான பதிலையும்/ எதிர் கேள்வியையும் பார்ப்போம்.



1.                     நீங்கள் கோவிலில் பூசாரியை எப்படிப்பார்க்கிறீர்கள்? கிண்டலாகவாகவா? முதல் பட்டன் கழட்டி விடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ரீதியிலான கிண்டலோ/கேலியோ/எரிச்சல் மனப்பான்மையோ எதிர் பாலினத்திடம் இருந்து கிடைக்கிறதா? கேலியும் கிண்டலும் அளவு மீறாம இருக்கற வரைக்கும் பிரச்சனை இல்ல. கிண்டல் வேற, Bullying வேற, ரேப் வேற

2.    இது தான் உண்மை நிலவரம். ஒத்துக்கறேன். ஆனா, இதை மாற்றணுமின்னு தானே கரடி மாதிரி கத்திகிட்டு இருக்கேன். எதார்த்தம் இது தான்னு நானும் நீங்களும் பேசுவது மாதிரியே, நாளைக்கு உங்க பையனும் என் பையனும் பேசிக்க கூடாதுன்னு ஆசைப்படுறேன் அது தப்பா? சமூகம் அப்படி பாக்குதுன்னு பழிய தூக்கி போடாதீங்க. யாருங்க சமூகம்? நீங்களும் நானும் மாறுற மாதிரி நம்மள உள் அடக்கிய இந்த சமூகம் மாறமால போயிடும். கலிலியோ சொன்னப்ப ஒட்டுமொத்த சமூகமும் அவருக்கு எதிராத்தான் இருந்துச்சு. உலகம் தட்டைன்னு எழுதி கொடுத்த அப்புறம் தான் அவருக்கு மரண தண்டனையில இருந்தே விடுதலை கிடைச்சுது. சமூகம் சொன்னதுனால் உலகம் தட்டையா என்ன? நாம் பேசுவது இன்றைய சமுதாயத்தை பற்றி மட்டும் அல்ல, வரும் காலத்தின் இந்த சமுதாயத்தின் போக்கையுன் குறித்தே என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நான் அடுத்த வீட்டு பெண் பற்றி மட்டுமல்ல, என் மனைவி, என் மகள் என அனைவரையும் உத்தேசித்தே பேசுகிறேன்.

3.    நீங்கள் சந்தித்த பெண்களை போன்றவர்களை நானும் சந்தித்தே உள்ளேன். இன்றைய சூழ் நிலையில் பெரும்பான்மை பெண்களுக்கான அரசியல்/சமூக அறிவு மெருமளவில் வளரவில்லை. இது குறித்து எந்த பெண்ணும் பின்னூட்டத்தில் என்னை கேள்விகேட்க மாட்டார். ஏன் என்பதற்கு ஒரு சிறிய காரணம், இங்கே வந்து இந்த தலைப்பை படிக்கும் பெண்களில் பெரும்பாலானோர் தங்கள் தோழிகளில் பலருக்கு இவற்றில் உள்ள ஞானத்தின் அளவை அறிந்திருப்பர். இவர்கள் பேசும் போது கூட “மொக்க போடாதடீ” என்ற பதிலே இவர்களுக்கு கிடைத்திருக்க கூடும். ஒரு வேளை பெண்கள் குறித்த என் புரிதல் தவறாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால் , இந்த பத்திக்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறேன்.

4.    “அந்த மாதிரி ஆடை” – இது ஒரு சமூக நோய்கூறு மன நிலை வசந்த். என் மனதளவில் சொல்லுகிறேன். அந்த உடையில் ஆசிரியரையும், மருத்துவரையும் நான் ஏற்பேன். எவ்வித தயக்கமும் இல்லாமல். இத்தனைக்கும் என் தாய் ஒரு ஆசிரியை. உங்களுக்கு தெளிவாகவே விளக்குகிறேன். நீங்கள் நெருங்கிய ஒருவரின் சிகிச்சைக்காக மேற்கத்திய நாடு செல்கிறீகள் என்று வைத்துக்கொள்வோம். அங்கே இருக்கும் மருத்துவரின் ஆடையை பார்த்துவிட்டு திரும்ப வந்துவிடுவீர்களா? இதற்கு பதிலாக கலாச்சாரத்தை இழுக்காதீர்கள். இந்த கலாச்சாரத்தின் பெரும் பகுதி வழக்கொழிந்த குப்பை. கொஞ்சமே கொஞ்சம் இருக்கும் நல்ல விசயங்களுக்காக மொத்த கலாச்சார குப்பையும் சுமக்க முடியாது. நீங்கள் இதை படிக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். அடுத்து, பன்னாட்டு நிறுவனங்கள். வசந்த், அது நம்மை அடிமையாக்கும் ஒரு முயற்சி தான். ஆண்களுக்கு கூடத்தான் “பார்மல்” பேண்ட் சர்ட் அணிந்து வர வேண்டும் என்ற விதி உள்ளது. அதன் அர்த்தம் நமது டீ-ஷர்ட் நம்மை ஆபாசமாக காட்டுகிறது என்பதா? சரி, ஒரு நிறுவன கழிவறையில் டன் கணக்கில் காண்டங்கள் கண்டுஎடுத்ததை இக்கட்டுரையில் குறிப்பிட்டேனே? எதிர் வினையை எதிர்பார்க்கிறேன்.

5.   வசதி – ஆண்கள் ஆடை குறைப்பு – என்ன வசந்த் நம்ம இருவத்தி நாலு மணி நேரமும் ட்யூட்டிலயேவா இருக்கோம்? இல்ல, வாக்கிங்க் போறப்பையோ, பக்கத்து தெருவுக்கோ லுங்கில இல்லாம , டை கட்டிட்டு தான் போறீங்களா? டூர் போகும் போது எல்லாம் டீ-ஷர்ட் ஜீன்ஸா இல்ல பார்மல் டக்-இன்னா?

              இதை விட வசதியான உடை உடுத்தும் பெண்கள்//// இத கேட்டா எனக்கே டென்ஷன் ஆகுது வசந்த். பெண் வேஷம் போட்ட நடிகர்களோட பேட்டிய படிங்க அந்த உடைகளின் சிரமம் புரியும்.

              அடுத்து தன்னம்பிக்கை. உடைக்கும் தன்னம்பிக்கையும் சம்மந்தம் இருக்குன்றத ஒத்துக்குவீங்கறத நம்புறேன். புது உடை நமக்கு தன்னம்பிக்கை அளிப்பது போல. மீண்டும், நீங்க தடுமாறுறத நான் தான் இயற்கைன்னு ஒத்துக்கறேனே. நீங்க தடுமாறுறீங்கன்ற காரணத்துக்காக உடைகளை ஏன் மாற்றணும். நான் சொன்னது போல ஒரு பெண்ணின் பார்வை, சிரிப்பு கூட என்னை தடுமாற வைக்கும் (உண்மை தானே?) அப்போ சிரிக்கவும், பேசவும் கட்டுப்பாடு விதிச்சிடலாமா?

             அடுத்து பெண்கள் ஏன் பெண்களுக்கான உடை சுதந்திரத்தை ஆதரிக்கிறார்கள். இது இருக்கட்டும். நான் கேட்கிறேன். உங்களுக்கு, இந்த பார்மல் பேண்ட் போட்டுட்டு வேலைக்கு வான்னு சொன்னப்ப கொஞ்சம் சங்கடமா இல்ல. சரி, நாளைக்கே உங்க கம்பேனி “கோட்-சூட்” போட்டுட்டு கோபி ஸ்டைல வந்தாத்தான் உள்ள விடுவோம்ன்னு சொன்னா போராட மாட்டீங்க?

             சரி, பெண் ஆணை ஈர்க்கை முயற்சிப்பதற்காக உடை அணிகிறாள் என்ற உங்கள் வாதிற்காக கேட்கிறேன். ஆண் ஒரு பெண்ணை ஈர்க்க தனது திறமைகளை வெளிப்படுத்தி வழியும் போது, அதை பெரிய தவறென பார்க்காத நீங்கள், ஒரு பெண் ஒரு ஆணை வசீகரிக்க முயல்வதில் ஏன் குற்றம் காணுகிறீர்கள்? நீங்கள்  ஆர்ம்ஸ் ஏற்றிக்காட்டுவது எதற்கு? எதிர்த்த வீட்டு மாமாவின் அன்பை பெறவா? பெண் ஒரு ஆணை கவர முயற்சிப்பதும் இயற்கை என்ற ரீதியிலேயே நான் பார்க்கிறேன். இது தேவை இல்லாத/ சிறு பிள்ளைத்தனமான ஒரு கவர்ச்சி முயற்சியே ஆனாலும் அது இயற்கையின் நியதி என்றே பார்க்கிறேன் நான்.
       
          நீங்கள் சொல்வது போல, சில நோய்க்கூறு மன நிலை உடைய ஆண்கள் பெண்களின் இந்த உடையை ஒரு குறையாக சொல்லிவிடக்கூடாது என்ற உங்களது கவலையை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில் , இதற்கான தீர்வாக தலைமுறை வழியாக மெல்ல ஒரு மாற்றத்தை ஆண்கள் மனதில் ஏற்படுத்தாமல் ஆடை கட்டுப்பாட்டை அதற்கு தீர்வாக சுட்டுவது ஏமாற்றத்தையே அளிக்கிறது.

        இதற்கு மாற்றுத்தீர்வாக பாலியல் கல்வி, Value based education , பெண்-ஆண் இடையேயான புரிதல் வளர்த்தல், இரண்டு பேருக்கும் ஆன்மா ஒன்று தான்- கூடு தான் வேறு என அறிய வைத்தல் என பல அடுத்த தலைமுறைக்கான தீர்வுகளை பேசி இருந்தேன். அது குறித்து நீங்கள் பேசாததும் வருத்தமே அளிக்கிறது. எனக்கு நான் வருங்காலத்தில் செய்ய வேண்டியதை சொல்வதாகவும், நீங்கள் நிகழ் காலம் குறித்த உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாகவுமே படுகிறது.

       நீங்கள் என்னை மேற்கத்திய பித்தன் என்றே தூற்றினாலும் கூட கவலையில்லை. அப்படிப்பட்ட கட்டடற்ற ஒரு உடை சுதந்திரத்தை தான் நான் விரும்புகிறேன். “கோவா”வில் நுழைந்த போது முதலில் எனக்கு தோன்றிய கேள்வி “இவர்களுக்கு எல்லாம் எப்படி மூடு வரும்” என்பதாகத்தான் இருந்தது. சற்று நாட்களில் என்னால் மார்பை , பால் கொடுக்க பயன்படும் உறுப்பின் உபரிச்சதையாக என்னால் பார்க்க முடிந்தது. கண், காதை பார்ப்பதைப்போல.

    இப்படி பார்க்கும் ஒரு தலைமுறையைத் தான் நான் உருவாக்க முயற்சிக்க வேண்டுமே அன்றி, கட்டுப்பாடுகளை விதிக்கலாகாது, நீங்கள் சொல்லும் கட்டுபாடு ஒரு வேளை இடைக்கால  ஒரு தீர்வாக அமையுமேயன்றி முற்றான தீர்வாகாது. நிதர்சனம், சமூகம் என்ற போர்வையில் நான் சாதியையோ, தீண்டாமையோ நியாப்படுத்தினால் உங்களுக்கு வரும் கோபம் போன்றதே, இந்த விசயத்தில் உங்களுக்கு நிகழ்ந்த எதிர்வினைகளும். தயவு செய்து, நிதர்சனத்தை பேசும் போது, இப்போது நிதர்சனம் இப்படி இருக்கிறது. வருங்காலத்தில் இவையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பட்டியலிடும் பொதும், அதன் தொலை நோக்கை ஆராய்ந்து பாருங்கள். மற்றவரின் இடத்திலிருந்தும்.

 நன்றி

 கூத்தாடி




        

2 comments:

  1. உங்களுடைய இரண்டு கட்டுரைகளும் படித்தேன், நிறைய கருத்துக்கள் உள்ளன. என்னை பொருத்தவரை மனிதனுக்கு சுய ஒழுக்கத்தை தற்கால கல்வி முறை சொல்லி கொடுக்கவில்லை, வலுவிழந்த சமூதாயமாக தான் இருக்கின்றது. பெண்ணின் விருப்பம் இன்றி அணுகுவது தவறு என்பது ஒவோருவர் அடிமனதில் இருந்தால் மட்டுமே இத்தகைய தவறுகள் குறையும், சட்டமும் தண்டனையும் கடுமை ஆக வேண்டும்.

    உங்கள் பதிவில் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன,
    1. உங்கள் சிந்தனை மேற்க்கத்திய கலாச்சாரத்தை ஒட்டியே இருக்கின்றது. யாரும் யாருடனும் போகலாம் என்ற மேற்க்கத்திய கலாச்சார நிலை வர வேண்டும் என்றும், பழமை பண்பாடுகள் தேவையற்றவை என்பது போல உங்கள் கருத்து உள்ளது. என்னை பொருத்தமட்டும் நமது கலாச்சாரத்தில் பல உண்மைகள் இருக்கின்றன, அது காலபோக்கில் திரித்தோ மாற்றியோ தற்காலத்தில் வழக்கத்தில் உள்ளது. அதன் உண்மை பொருள் நாம் ஆராய்ந்து எடுத்துரைக்க வேண்டியும்.
    2. இந்தியாவில் பெண்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக மேலாடை அணியவில்லை என்று பதிவு செய்துள்ளீர்கள், இதற்கான ஆதாரம் பகிரவும். மேலும் அடிமைத்தனம், பிரிவினை போன்றவையும் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளீர், அதகான சான்றையும் பகிரவும்.
    3. என்னுடைய இந்த கருத்துக்கள் தமிழ் கலாச்சார ரீதியாக நான் முன்வைப்பவை, ஆகையால் அதை சார்ந்த விசையங்களை பகிரவும்.

    ReplyDelete
  2. தமிழ் இளமாறன்,

    நானே குறிப்பிட்டிருந்தேன். என்னை நீங்கள் மேற்கு கலாச்சாரத்தின் பிரதிநிதியாக பார்க்கக்கூடுமென்று. நான் அதற்கு ஒரு போதும் வக்காலத்து வாங்குவதில்லை என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தாலி தேவையில்லை, பெண்ணின் உடை போன்ற பெரியாரின் பல கருத்துக்கள் கூட மேற்கத்திய தாக்கம் என்பதாக நீங்கள் கருதுவீர்களே ஆனால், என் கருத்துக்களும் அதை ஒட்டியே இருக்கக்கூடும்.

    கலாச்சாரம் குறித்து http://www.koothaadi.in/2012/11/3_8571.html என்ற பதவை எழுதி உள்ளேன். அதை படிக்கவும்.

    எனது நிலையை மிகத்தெளியாவாக குறிப்பிட வேண்டும் எனில் "கலாச்சாரம் குறித்தோ அதை பின்பற்றுவது குறித்தோ எனக்கு எந்த ஒரு கருத்துமில்லை. தனி மனித விருப்பமே அனைத்திலும் மேலானது, தனி மனிதர்களின் கூட்டமைப்பே சமூகம் ஆயினும் காலத்திற்கேற்ப கலாச்சாரத்தில் மாற்றம் நிகழ்வதும், சிலர் கலாச்சாரத்தை ஒட்டுமொத்தமாகவோ, சிறிது பிறழ்ந்தோ பின்பற்ற மறுப்பதும் நிச்சயம் நிகழவே செய்யும். எந்த கலாச்சாரத்திலும் மாற்ற முடியாத விசயம் இது. இப்படி ஒரு நிலை வருமாயின் அந்த Transgressive வகை ஆட்களை அவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடச் சொல்கிறேன். அவர்களை உங்களால் முடிந்தால் சொல்லித்திருத்துங்கள் என்கிறேன்".

    நான் வெறுமனே இப்படிச்சொல்லிவிடவில்லை. இதை கேட்க உங்களுக்கு கடினமாகவே இருக்கும் என்பதையும் அறிவேன். ஆனால், கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இவள் பதினோரு மணிக்கு வெளியே வருவதாலும், இவள் ஆபாசமாக உடை அணிந்திருப்பதாலும் இவளுக்கு நான் தண்டனை கொடுக்கிறேன் என்ற மனோ நிலை வர தனி மனித சுதந்திரம் போற்றப்படாதது காரணி இல்லையா??

    கலாச்சாரத்தின் உண்மை பொருள் உணர்ந்து பின்பற்றுபவர்கள் குறித்து மகிழ்ச்சியே. ஆனால், கலாச்சாரத்தை யார் மீதும் திணிக்காதீர்கள் என்கிறேன்.

    இன்னொன்று, குடும்ப அமைப்பை கலைத்து விட்டு, மொத்தமாக யாரோடு யாரும் செல்லலாம் எனச்சொல்லவில்லை. இங்கே பாலியல் தொழில் நடக்கவில்லையா? கள்ள உறவுகளே இல்லையா? ஒரு வெளிப்படைதன்மையை உருவாக்க வேண்டும் என்கிறேன். அதற்கு முன்னதாக அது குறித்த அறிவையும் புரிதலையும் வளர்க்கச்சொல்கிறேன். இது குறித்து "காமம்" என்ற கட்டுரையின் சுட்டி கொடுத்துள்ளேன். படிக்கவும்.

    //////// இந்தியாவில் பெண்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக மேலாடை அணியவில்லை என்று பதிவு செய்துள்ளீர்கள், இதற்கான ஆதாரம் பகிரவும். மேலும் அடிமைத்தனம், பிரிவினை போன்றவையும் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளீர், அதகான சான்றையும் பகிரவும்.////////

    மேலாடை குறித்து : விடுதலைக்கு முன்னான இந்திய வரலாற்றை தெளிவாக ஆராயும் எந்த ஒரு நூலிலும் இதை நீங்கள் காணலாம்.

    சில :

    http://en.wikipedia.org/wiki/Castes_and_Tribes_of_Southern_India

    The tribes and castes of Bengal : Herbert Hope Risley

    http://archive.org/details/peopleofindiaser01greauoft

    அடிமைத்தனம் பிரிவினை குறித்தெல்லாம் நான் எழுதியதாக தெரியவில்லை. தேடிரும் பார்த்துவிட்டேன் கட்டுரை முழுக்க, எங்கே என்று சொன்னால் விளக்குவேன். ஆனால், சாதி ரீதியிலும் மத ரீதியிலும் நாம் எத்தனை ஆண்டுகள் பிரிந்து கிடந்தோம் என்பதையும் ஒத்துக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

    ///// 3.என்னுடைய இந்த கருத்துக்கள் தமிழ் கலாச்சார ரீதியாக நான் முன்வைப்பவை, ஆகையால் அதை சார்ந்த விசையங்களை பகிரவும்.////

    தமிழ் கலாச்சாரத்தில் பல நல்ல விசயங்கள இருந்தாலும், அது பார்ப்பனீயத்தில் சிக்கி "தீட்டு" என பெண்களை வெளியே உட்கார வைப்பது, "பூப்படைதலுக்கு சடங்கு நிகழ்த்துவது" "விதவைக்கு பொட்டெடுப்பது" "சகுனம் பார்ப்பது" என பாழ்பட்டு விட்டது. கலாச்சாரத்தை முன் வைத்து யாரையும் அதன் படி நடக்க கட்டாயப்படுத்தார்தீர்கள் என்பதே என் நிலை.

    நன்றி

    கூத்தாடி

    விரிவான கடித விவாதத்திற்கு : admin@koothaadi.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு கடிதம் அனுப்பலாம்!

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..