Flipkart

Sunday, December 22, 2013

ஐடி வேலையும் அரை கவளம் பர்கரும்!

                                                                                ஊருப்பக்கம் யாருனா ஆடு, மாடு வளத்துனா அதுங்களுக்கெல்லாம் ஆகாரம் வெச்ச பொறவு தான் வந்து சாப்பிட உட்காருவாங்க.  நாம சாப்பிடும் போது அதுங்களுக்கு பசிக்கக்கூடாதென்றது ஒரு காரணம், சாப்பிடும் போது கத்தி பாதில எழுப்பி விட்டுடுமேன்றது இன்னொரு காரணம். ஆனா, கம்யூட்டருக்கு இப்படி தண்ணி காட்டிட்டு நம்மளால நிம்மதி அரை கவளம் பர்கர கூட கடிக்க முடியாது, போனுல உலகத்துல ஏதோ ஒரு மூலைல இருந்து ஒருத்தன் நம்மள கடிப்பான்.

                 ஐடி வேலை பார்க்கும் எல்லோரும் சீட்டில் புட்டத்தை அழுந்த தேய்த்து அதற்கு மாதமாதம் வரும் விரல்களில் அடங்காத லகரங்களை எதிர்பாலினத்தரோடு குடித்து கூத்தடித்து தினம் ஒருவரோடு சல்லாபித்து வாழ்ந்து வருவதாக ஒரு பிம்பம் எல்லா மனதினுள்ளும் கட்டமைக்கப்பட்டுள்ளது. பொம்பள புள்ளைங்கள ஐடிக்கா அனுப்பறீங்க என்பது தொட்டு ஐடி நாய்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது வரை வசவு மொழிகளே கேட்டுக்கேட்டு வதங்கிப்போன வர்க்கம் இது.

              எல்லோரும் நினைப்பது போல இது ஒன்னும் பணம் காய்ச்சி மரம் இல்ல சாமிங்களா. காலைல அரக்க பரக்க எந்திரிச்சு ட்ராப்பிக்ல,சேத்துல, ஓடுற ஓ.எம்.ஆர் தண்ணில நீந்தி போய் என்ன கருமம்ன்னு எங்களுக்கே புரியாதத புரிஞ்சா மாதிரி நடிச்சு அத வெள்ளக்காரனுக்கும் புரிய வெச்சு(!!) சாயுங்காலம் ஏழு மணிக்கு கெளம்ப ஆரம்பிச்சா, அப்ப தான் புதுப் பொண்டாட்டிய மூடோட பாக்கற மாதிரி அவசர அவசரமா பக்கத்துல வந்து அவன் காலைல இருந்து செய்ய வேண்டிய வேலைய நம்ம தலைல கட்டுவான் ஒரு சொட்டத்தலையன் (ஒரு வேல அவன் வேணா நீங்க சொல்றா மாதிரி வாழுவான் போல யாரு கண்டா). இதை வாரம் ஐந்து முறை, சில வாரங்களில் ஏழு முறை கூட செஞ்சுட்டு வந்தா நம்ம பேர காட்டி 1 மணி நேரத்துக்கு இத்தினி டாலர்ன்னு கணக்கு போட்டு வாங்கீட்டு, அதுல 16 மணி நேரத்துக்கான காச நமக்கு ஒரு மாச சம்பளமா குடுப்பான்.

             ஒரு மெட்ரோ நகரத்தில் வீட்டு வாடகை தெரியுமா? பள்ளிக்கட்டணம்? பெட்ரோல் செலவு? ஒத்துக்கறோம் அய்யா, குடுக்கற காசை வாங்கீட்டு மூடிட்டு வர வர்க்கம் தான் நாங்க. அது ஒண்ணே ஒண்ணு தான் எங்க தப்பு.  அப்பறம் இன்னொன்னு ஐடிகாரனுங்க எல்லா விஷயத்துலையும் கருத்து சொல்றானுங்களாம். யோவ், தமிழ் நாட்ல இன்னிக்கு இதெல்லாம் சொல்லாதவன் எங்கய்யா இருக்கான்?

எல்லா பீட்லையும் முட்டாளும், Name dropping ஆளுங்களும் இருக்கத்தான் செய்யறாங்க. எல்லா நொட்டையும் சொல்லீட்டு எதுக்குய்யா உங்க பசங்கள ஐடி படிக்க வெக்கறீங்க? சமூகத்த திருத்தற நொன்னைங்க 20 வருஷமா வந்து நடக்கற ஐடி தற்கொலைகள தடுக்க வேண்டியது தான?

ஐடிகாரனுங்க கிட்ட தப்பே இல்லையான்னு கேக்காதீங்க. ஐடியில் இருக்கும் பெரும்பாலானவர்கள் மத்திய வர்க்கத்து மனோபாவ வார்ப்புகள். நமக்கேன் வம்பு டைப். இவர்களை பணந்தின்னிகளாக மாற்றிவிட்டது பணத்தாசை பிடித்த அவர்களது சுற்றம்/சமூகம். எதுக்கு சுத்தறோம்ன்னே தெரியாத செக்கு மாடு மாதிரின்னார் வா.மணிகண்டன். மிகச்சரியான உதாரணம். சமீபத்துல ஒரு கன்பெஷன் படிச்சேன். தற்கொலை பண்ணிக்க கூட ஆன்லைன்ல விஷம் ஆர்டர் பண்ணி இருக்கான். அடப்பாவிங்களா, கம்யூட்டருக்கு வெளிய ஒரு உலகம் இயங்கறதே மறந்துருச்சான்னு நெனச்சேன்.

இப்போ சொல்றேன் நோட் பண்ணிக்குங்க. என் முதல் நாவல், ஐடி துறை எப்படி ஒரு குடும்பத்துக்குள்ள ஒட்டகம் மாதிரி நுழையுதுன்னு பேசும். டாட்.

Thursday, December 5, 2013

நாவலிலிருந்து

                     அவள் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தாள். மார்பு ஒவ்வொரு அடிக்கும் விம்மி விம்மி தாழ்ந்து கொண்டிருந்தது. நெற்றியிலும் கழுத்திலும் வியர்வை கசகசத்தது. முன் கழுத்திலிருந்து கிளம்பிய வியர்வை மார்ப்பு குழியின் வழியோடி தொப்புளில் நின்று குறுகுறுப்பூட்டியது.

             காதுதருகில் கிசுகிசுப்பாய் ஒரு குரல் சில சமயம் கெஞ்சும் தொனியிலும், சில சம்யம் அதிகாரமாகவும், சில முறை  மன்னிப்பு கேட்கும் பாவனையும் நிற்கச்சொல்லிக்கொண்டே இருந்தது. அதை புறக்கணித்தபடி அவள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாள். அந்தக் குரல் மிகவும் நெருக்கமான குரல் என மனது அவளிடம் சொல்லிக்கொண்டே இருந்தது.

              எப்போதோ காதலித்த பழைய காதலர்களுள் ஒருவனாக இருக்கலாம். அவள் காதலர்களை நினைத்துக்கொண்டாள். எழுத்துக்கள் வட்டமிட்டு பல்வேறு பெயர்களை காட்டின. ஏனோ முரளியின் பெயர் ஆதிக்கம் செலுத்தியது போலிருந்தது.  அவனை நினைத்துக்கொண்டாள். அவனுக்கு இப்போது திருமணம் முடிந்திருக்கலாம். குழந்தை கூட இருக்கலாம். எதாவது ஒரு குழந்தைக்கோ அல்லது அது செல்லமாக வளர்க்கும் நாய்க்கோ தன் பெயர் வைத்திருப்பான். எப்போதாவது அவன் மனைவி இடது கழுத்தறுகே முத்தமிட்டு கடிக்கும் போது தன்னை நினைத்துக்கொள்வானாயிருக்கும்.

             காதோர கிசுகிசுப்பு இதற்குள் கூச்சலாய் மாறி மீண்டும் கிசுகிசுப்பாகி  இருந்தது. எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என யோசித்து பார்த்தாள்.  அந்த குரலிற்கு நிற்கக்கூடாது என்பதற்காகவே ஓடுவதாகவே தோன்றியது. எப்போதிலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறோம் என யோசிக்க முயன்றாள். ஏதோ கனவின் மத்தியில் இருப்பது போல இருந்தது. இந்த ஓட்டத்தின் தொடக்கமே அடுத்த நொடி நிகழவிருப்பதாய்
தோன்றியது. திரும்பி பார்க்கலாமா என யோசித்தாள். ஆனால், பயமானது ஆர்வம் பாசம் என அனைத்தையும் வென்றது.  மீண்டும் துவண்ட கால்களை கோணல் மாணலாக வைத்து ஓடலானாள்.

ஓடிக்கொண்டிருப்பது நின்று திரும்பிப்பார்க்க பயந்து தான் என அவளுக்கு தோன்றியது. வாழ்ந்து கொண்டிருப்பது மரணத்தின் மீதான பயத்தால் தான் என்று அவளுக்கு தோன்றியது. கோபப்படுவது இயலாமையின் சாரம் என்று தோன்றியது. எதிர்காலத்தையே பார்த்து ஓடுவது நினைவுகள் தரக்கூடிய வலியிலிருந்து தப்பிக்கவே என்று தோன்றியது. கனவிலியே இருக்க விரும்புவது விழிக்க விருப்பமினையால் என்று தோன்றியது.

விழிப்பு அவளை துரத்திக்கொண்டிருப்பதாக தோன்றியது.


------

அடுத்த ஜென்மத்தில் நான் சொல்லி "2324"ஆம் ஆண்டு ஈ-புத்தக , ஆடியோ புத்தக திருவிழாவிற்கு வெளிவர இருக்கும் எனது "மணல் மழை" நாவலில் இருந்து.

Saturday, October 26, 2013

உதிரிச் சொற்கள்

                       நீண்ட நாட்களாக எழுதவில்லை. எண்ணத்தில் உதிக்கும் சொற்கள் வடிக்க இடமின்றி மனக் கானகத்தில் பொருளற்று உலாவிக்கொண்டிருக்கின்றன. அறிவார்ந்து பேச சிலரை தேர்ந்தெடுக்க சில நாட்கள் பிடிக்கும். அப்படி அல்லாமல் எல்லோரிடமும் சொற்களை உதிர்த்தால் அது உலகின் மிகப்பெரிய விரயம்.

                       நேற்று சில நண்பர்களை சந்தித்தேன். பேச்சு நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்த விசயங்களை தழுவி ஓடியது. ஜவுளி கடைக்கு பேர் போன ஒருத்தரின் பேத்தியை நாடக காதல் புரிந்து பணம் பறிக்கப்பட்டதாக நண்பர் ஒருவர் சொன்னார். இருக்கலாம். இந்த வாரத்தில் நான் கேட்கும் முறிந்த/சிதைந்த/பணம் பறித்த காதல் கதைகளில் இதுவும் ஒன்று.

                    நீட்டி முழக்கி எழுத நேரமில்லாததால், இதை ஒரு சிறிய கட்டுரையாக்கி விடுகிறேன். தொடர்புடைய ஒரு சிறுகதையை எழுத உத்தேசம், நேரம் கிடைக்கட்டும்.  பிறந்தது முதல் ஒருகுழந்தை முதல் பிசியாக இருக்க வைக்கப்படுகிறது . பாட்டு, நடனம், ஓவியம் ஏதோ ஒரு எக்ஸ்ட்ரா திறமை (!! ஞே) அவனுக்கு/அவளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பின் ஏதோ ஒரு ஆங்கிலம் பேசாவிடில் பைன் விதிக்கும் ஒரு மனப்பாட பயிற்சி கூடத்தில் (பொது வழக்கில் பள்ளி) சேர்க்கப்படுகிறான்.அவன் உலகம் நண்பர்களோடு சுருங்கும் போது அவனது தேடல் சினிமா, விளையாட்டு, காமம் என்ற அளவோடு நின்று விடுகிறது. 

                     கல்லூரியிலும் இது தொடரும். ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் கல்லூரி முடித்து வெளிவரும் போது, இந்தியாவை பொறுத்த வரை அவர்களுக்கு சமூக புரிதலோ வாழ்க்கை குறித்த எந்த வித அறிவோ இருப்பதில்லை. அவர்கள் அறிவென கருதுவதெல்லாம் சினிமா, விளையாட்டு அல்லது மிஞ்சிப் போனால் நியூஸ் பேப்பரும் சேத்தன் பகத்தும் தான். இதை கடந்த சில நாட்களாக நேரடியாக காண முடிந்தது. ஏதோ ஒரு அடையாளத்தை தேடிக்கொள்ளும் பொருட்டு, ஒரு அற்புதமான வாழ்வை அதன் பருவங்களை, அப்பருவங்களின் அழகியலை  நாம் புறக்கணிக்கிறோம். 

                         ஒரு பெண்ணை Impress செய்வது மிக எளிதாக இருக்கிறது. நீங்கள் கொஞ்சம் நடித்தால் போதும். எல்லா காதல்களிலும் நடித்தலும், Impress ஆதலும், திருமணத்திற்கு பின்பு அந்த முகமூடி கிழிகையில் ஏற்படும் அதிர்ச்சியுமே விவாகரத்துகளை அதிகரிக்கிறது. அழகு, Handsome, பேச்சு திறமை போன்ற விஷயங்கள் காதலை தீர்மானிப்பதில் தேவையின்றி பெரும்பங்கு வகிக்கின்றன. பெரும் பதவிக்கும், சமூக அந்தஸ்திற்கும் அறிவுக்கும் சம்மந்தமில்லை என்ற என் எண்ணம் மீண்டும் ஒரு முறை உறுதிபட்டுள்ளது. மிக எச்சரிக்கையாய் இருக்கிறேன் பேர்வழி என பெண்கள் மிகச்சரியாக நல்லவர்களையும், ஏமாற்றுபவர்களையும் Vice versa வாக புரிந்து கொள்ளுதலை தினமும் பார்க்கிறேன். சொன்னால், பெண்ணியவாதிகள் பொங்குவார்கள், காரணம் வளர்த்த ஆணாகவே இருக்கலாம், ஆனால் நிறைய ஐடி பெண்கள் கொஞ்சம் மடக்க எளிதான முட்டாள்கள் தான்.

                          ஐடி கம்பேனியில் வேலை பார்ப்பவர்களை எல்லோரும் கரித்துக்கொட்டிவிட்டால் ஆச்சு. முன்பொரு காலத்தில் அரசு வேலைக்கு இதே நிலைமை தான். ஆனால், அவர்கள் கஷ்டம் நீவிர் அறியாதது. நேற்று பெசன்ட் நகர் சிக்னலில் பைக்கில் இன்ஸூரன்ஸ் இன்றி மாட்டினேன். ஐடி எனத்தெரிந்ததும் 1500 ,500 ,300 என பேரம் பேசிய போலீஸ்காரர், "கண்ட கண்ட எடத்துல பணத்த பொழியறீங்க. எங்களுக்கு குடுக்க ஏன்டா எறியுது" என்றார்.  ஐடி என்றாலே ஏதோ பரமானந்தத்தில் திளைப்பது போல இவர்களுக்கொரு பிரமை.

இந்த நாட்டின் பிரஜை ஒவ்வொருவரையும் மாற்றி மாற்றி இன்னொருவரின் வாழ்வை வாழச்செய்ய வேண்டும். இங்கு ஒருவருமே மகழ்ச்சியாகவோ சுதந்திரமாகவோ இல்லை என்பது புரியும்.

இணையம் எல்லோருக்குள்ளும் குறட்டைவிட்டுக்கொண்டிருந்த கல்யாண் ஜுவல்லர்ஸ் பிரபுவை, மூக்கினுள் புல்லை விட்டு அலறிக்கொண்டு விழித்தெழ வைத்திருக்கிறது. காலை எழுந்தவுடன் பல்லில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டே பாலஸ்தீன மக்களுக்காக போராட ஆரம்பித்து நியூஸ் பேப்பரில் வரும் இரங்கல் செய்தி தவிர்த்து பாக்கி எல்லாவற்றிக்கும் சொல்ல கருத்தோ, ஆதரவோ, பொங்கலோ ஏதோ ஒன்றை எல்லோரும் உருவாக்கிக் கொள்கிறோம்.

 நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது, ஒன்றுமே தெரியாத, எதைப்பற்றியுமே கவலை இல்லாத இளம் தலைமுறையை செய்திகளின் பால் ஈர்ப்பது நல்லது தானே என்றார். நான் கூட மூன்றாண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் சிந்தித்தேன். அது ஓரளவு சரியும் கூட. ஆனால், முழுக்க அல்ல. இளைஞர்கள் இன்று லயித்து கிடக்கும் பேஸ்புக், முழுக்க முழுக்க இல்லையெனினும் பெரும்பாலும் திராபையான கருத்துக் குப்பைகளால் நிரம்பியுள்ளது.

இணையத்தில் தான் வித்தியாசமானவன் என்பதை காட்டிக்கொள்ள முன்பெல்லாம் முற்போக்கை தேர்ந்தெடுத்தார்கள். இப்போது அது உல்டாவாகிவருகிறது. எல்லோரும் முற்போக்கெனில், பிற்போக்கானவன் தானே வித்தியாசமானவன் என்ற தியரியை வைத்து  நான் பிற்போக்கு என்றே கூறிக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு ஜாதி ஜட்டியை தூக்கி பிடிக்கிறார்கள். எப்போதோ படித்த முல்லா கதைகளை அப்துல் கலாம், ரஜினி, மோடி என பிடித்த பெயரில் கலந்து கட்டி அடிக்கிறார்கள். Name-Droppingஐ அருமையாக பழக்கிவிடுகிறது இணையம். மத பழமைவாத, அடிப்படைவாத ஆட்கள் அருவாளோடு கெத்தாக திரிகிறார்கள். 


இப்போது ஏன் இதையெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறேன்... என்னை என்னாவாக பாவித்துக்கொண்டு உங்களுக்கு உபதேசித்துக்கொண்டிருக்கிறேன்? ஒரு பட்டாம்பூச்சிக்கு லாவாக்களுக்கு புத்தி சொல்ல எந்த அருகடதையும் கிடையாது. இவை கடக்கப்போகும் யாவற்றையும் பட்டாம்பூச்சி முன்னமே கடந்திருக்கலாம், அவற்றை அது அனுபவம் எனகூறிக்கொள்ளலாம். ஆனால், அதே அனுபவத்தை அடையப்போகும் அவற்றை காப்பாற்றுகிறேன் என தடுக்க, அவற்றை திசைதிருப்ப எனக்கு என்ன உரிமையுள்ளது??


Monday, July 8, 2013

அப்பறம் பாஸ், Life எப்படி போகுது?

                               ஒரு பால்ய தோழியுடன் நீண்ட நாட்கள் கழித்து நேற்று பேசினேன். ஒரு இந்திய முதலாளியின் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறாள். ஒரு பிரபல யுனிவர்சிட்டியில் எம்.எஸ் செய்வதாக சொல்லி வேலைக்கு எடுத்தார்கள். தோழி B.sc.. எம்.எஸ் செய்ய 16 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் (Only Engineers Qualify). இது ஒன்று தான் வழி என்பதால் ஏகப்பட்ட B.Sc,BCA  படித்தவர்கள் இதில் சேருவார்கள். நான்கு வருட ஒப்பந்தம். நான்கு வருட வேலை, வார இறுதியில் கல்லூரி.

                                  வாழ்கை செட்டில்ட்ன்னு வேலைக்கு ஆர்வமா சேர்ந்தாள் தோழி. நாலு வருஷம் கழிச்சு வெளிநாடு போலாமுன்னு பாஸ்போர்ட் மொதக்கொண்டு எடுத்து வெச்சாச்சு. ஒரு எட்டு மாசம் ஆச்சு. வேலை. காலேஜ். வேலை. காலேஜ். மெஷின் லைஃப். ரொட்டீன் லைஃப், படிக்கவே போரடிக்கல? அதே தான் அவளுக்கும். வெளில வரும் போது Work Experience Certificate கிடைக்காதாம். MS படித்ததால், Student Internship ஆகத்தான் கணக்காம். அவள் குரலில் ஒரு வெறுப்பு தொனித்ததை உணர முடிந்தது. பெங்களூர், சென்னை என மாற்றி மாற்றி பணிபுரிவதால் பெரிய அளவில் நட்பு வட்டமும் இல்லை. "நாலு வருஷம் கழிச்சு வெளி நாடு போகணும்ன்னு இப்ப ஆசையே இல்ல டா... நாலு வருஷம் முடிச்சு இந்த சாஃப்ட்வேர் கருமத்த விட்டு வெளிய வந்தா போதும்ன்னு தோணுது"ன்னா.

                                   ஆங்கிலப்படம் பார்க்கும் பழக்கமுள்ள எவரும் பார்த்திருக்கூடிய ஒரு படம் "The Shawshank Redemption". அதிலொரு காட்சி.  ஐம்பது ஆண்டுகள் சிறையில் கழித்த ஒருவரை விடுவித்து வெளி உலகிற்கு அனுப்புவார்கள். அவர் அதை தடுக்க எவ்வளோ முயன்றும் முடியாது. வெளியில் சென்ற அவர் ஒரு வாரத்தில் தூக்கு போட்டு செத்துப்போவார். அற்புதமான காட்சி அது. அவரை பற்றி "He was Institutionalized" என்பார் அவர் நண்பர். அவருக்கு அந்த சுவருக்குள் தான் உலகம். அதை தாண்டிய உலகத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வாமை உள்ள பொருள் போல அதை தாண்டிய உலகத்தை அவர் மனம் மறுதலித்து விடும்.

                                   இங்கே பெரும்பாலானோரின் வாழ்க்கை முறை அப்படித்தான். அது ஒரு Routine. ஒரு வேளை அதிலிருந்து அவர்களை வெளியில் இழுத்தால் அவர்கள் செத்துப்போவார்கள். நம் சமூகம் அப்படித்தான் வளர்ந்திருக்கிறது. "Settle" என்ற வார்த்தை அதற்கனவே உயயோகப்படுத்தப்படுகிறது. என் கல்லூரி பேராசியர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார் "Settling business is done at the graveyard. We have to move our asses till then".

                                   இத்தனை இழுவை ஏன் போட்டேன் என்றால், இந்த கேள்விய சொல்லத்தான் "அப்பறம் பாஸ், Life எப்டி போகுது. என்ன பண்ணலாமின்னு இருக்கீங்க?". கிட்டத்திட்ட இதே கேள்வியை, பதங்களை மாற்றி, நிற்கும் பொசிஷனை மாற்றி , சட்டை கலரை மாற்றி பல உருவங்கள் கடந்த சில நாட்களாக என்னிடம் கேட்கின்றன. காரணமில்லாமல் இல்லை. கல்லூரியை முடித்து, கல்லூரி நேர்முகத்தேர்வில் வேலைக்கு எடுத்த ஒரு பன்னாட்டு கம்பேனிக்காரன் கூப்பிடுவான் என காத்திருக்கும் அநேகர் எதிர்கொள்ளும் கேள்வி இது.

                                 எல்லோரும் கேட்பதால் மட்டுமல்லாமல், இது எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் ஒரு பதிவு, ஒரு Self Note.  நான் நதி போல, எதை எதிர்கொள்ளப்போகிறேன் என எனக்கே தெரியாது, பாதை செல்லும் வழியில் அப்படியே போய்க்கொண்டே இருப்பவன். ஆனால், நிஜத்தில் எதற்கும் பணம் வேண்டுமே. அதனால் எதாவது செய்தாக வேண்டும். Travelஇன் மீது அதி தீவிர ஈடுபாடு உண்டு. அதற்கும் பணம் வேண்டும். இரண்டு ஒலிம்பிக்ஸ், ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட், கால்பந்து, அப்பறம் ஒரு விம்பிள்டன் பார்க்க வேண்டும். அதற்கும் பணம் வேண்டும். 143 நாடுகள் பார்க்க வேண்டிய நாடுகள் என நான் தயாரித்துள்ள பட்டியலில் உண்டு.

                                    திருமணம் என புருவம் உயர்த்தினார் அப்பா. எனக்கானவள் எந்த தேசத்தில், எந்த இனத்தில் பிறந்திருக்கிறாள் என இன்னமும் தெரியவில்லை என்றேன். சிரித்துக் கொண்டார். எங்களுக்குக்காக அதை மட்டும் பண்ணிக்கோ என்றார். "ம்ம்" என்றேன் வெறுமனே.

                                  நமது சமூக சூழலில் ஒருவரின் உட்பட்ச லட்சியமே, ஒரு பிள்ளை பெற்று அவனை இன்ஜினியருக்கோ, டாக்டருக்கோ படிக்க வைத்து, நம் சாதியில் ஒரு பெண்ணை கட்டி வைத்து, அவனுக்கு பிறக்கும் பிள்ளைக்கும் நாம் அவனுக்கு செய்ததையே அவனை செய்ய வைப்பது. இது ஒரு முற்றுப்பெறாத கதை.

                                        நான் இதற்கு முற்றிலும் மாறானவன். எனக்கு மதமில்லை, சாதியில்லை. பொது வாழ்வில் மக்கள் பெருமை என கூறும் எந்த ஒரு அடையாள பாரத்தையும் நான் சுமப்பதில்லை. பொதுபுத்திக்கு விரோதமானவனை நேசிக்கலாம், ஆனால் கட்டிக்கொள்ள சரிப்படாது என்பாள் என் பழைய தோழி ஒருத்தி. சரி தான். இது வரை எந்தப்பெண்ணும் மாற்றிப்பேசியது இல்லை.

                                        ம்ம்... எங்கே விட்டோம். ம், பணம். பயப்படாதீர்கள். சாரு போல அக்கவுண்ட் நம்பர் கொடுக்கும் உத்தேசமில்லை.எந்த ஆசையை எடுத்தாலும், பணத்தில் வந்தே முட்டுகிறது. பேசாமல் ஜனாதிபதி ஆகிவிடலாம். ஆனால், ஒன்றுக்கும் உதவாத இந்த மனசாட்சி கேட்டுத்தொலைக்காது. ஈமு கோழி போல எதாவது கரடி வளர்க்கும் திட்டம் ஆரம்பித்து ஏமாற்றலாம், ஆனால் இங்கும் மனசாட்சி இடிக்கிறது. சரி, எதாவது செய்வோம். ஆனால், இந்த ரொட்டீன் லைஃப் எனக்கு சரிப்படாது.  நான் செட்டில் ஆவது சுடுகாட்டில் தான்.

படம் ConAir. "You know what is insane. Working on a damn office from 9 to 5 for 50 years and then settling in a village, waiting for a day to die to save our dignity, that we go reach the rest room in time. That is insane"

என்னிடம் இந்த கேள்வி கேட்கும் அனைவருக்கும் இந்த பதிவின் சுட்டியை கொடுக்கப்போகிறேன். :-)

"மவனே இனிமே கேப்ப?"


Sunday, July 7, 2013

பாமக - விசி - திராவிடம் - ஜாதி - கலப்பு மணம் - எதிர்காலம் : மற்றுமொரு பக்கம் 8 :


** தலைப்பை போலவே கட்டுரை முழுக்க என் புரிதலில் அடிப்படையிலான அவதானிப்புகளால் ஆனாது. ஜாதிய வரலாற்றை, அடக்குமுறையை ஒரே கட்டுரையில் சொல்லி விட முடியாதது போல, எதிர்காலத்தையும் ஒரே கட்டுரையில் அடக்கி விட முடியாது. இக்கட்டுரை நீண்ட ஒரு விவாதத்திற்கு அடிகோலும்.

** இதற்கு முன் ஆழி செந்தில் நாதன் அவர்கள் எழுதிய இது தொடர்பான கட்டுரையை படித்தேன். அதில் அவர் சொன்ன விஷயங்களை எழுத வேண்டும் என் நினைத்திருந்தேன். அவற்றை தவிர்க்கிறேன்.

** இது வெறும் திவ்யா- இளவரசன் விவகாரம் வாயிலாக ஜாதிய அமைப்பை, வரும்காலத்தை ஆராய்வதல்ல. அதனால் தான் இவ்விகாரத்தின் சூடு அடங்கி எழுதுகிறேன்.

1. காதல் மட்டுமே ஜாதியை ஒழிக்கும் என நான் முற்றாக நம்பியது கிடையாது. ஜாதிக்கு எதிரான சமூக, அரசியல்  நிலைப்பாடு தான் அதை ஒழிக்கும் என்றே நம்பி வந்திருக்கிறேன்.

2. தமிழகம் முழுவதும் ஜாதி ரீதியான விவகாரங்களை ஆராய்ந்தால், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான அனுபவம் கிடைக்கும். அவற்றும் இருக்கும் பொதுத்தன்மையை மட்டும் பார்ப்போம்.

3. திராவிட இயக்கம் இப்போது முற்றாக தோய்ந்து விட்டது. திமுக கட்சியான பிறகு செய்ய வேண்டிய சமரசங்களில் முக்கியமானதாக பகுத்தறிவு மாறிப்போனது. அனைத்து ஜாதி அர்ச்சகர், தமிழ் பூசைகள் எல்லாம் நல்ல திட்டங்கள் தாம் பெயரளவில். ஜாதி ஒழிப்பென்ற அளவில் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. அடிப்படை காரணம் முக்கியமானது. எல்லா ஊர்களிலும் ஜாதியின் அடிப்படையில் தான் சீட் ஒதுக்க வேண்டி உள்ளது. உள்ளாட்ச்சி, சட்டமன்றம், பாராலுமன்றம் என எதுவும் இதுக்கு விதிவிலக்க. இங்கே Mutual dependency வருகிறது. ஜாதிக்காரனுக்கு சீட்டு குடுத்தா தான் ஜெயிப்பான், ஜெயிச்சா தான் பவர், பவர் இருந்தா தான் எதையுமே செய்ய முடியும்..ஆனா ஜாதிக்காரன் எப்படி ஜாதிய ஒழிக்க விடுவான்??

4. மேற்கண்ட பாயிண்ட்டால் எந்த கட்சியும் ஜாதியை ஒழிக்க முன்வராது. புதிய அரசியல் கட்சி ஆகாது. நாம் சிறுபான்மையினர் ஐயா.

5. அந்தப்பக்கம் என்ன நடக்கிறது? பாமக மட்டுமல்ல, அனைத்து சமுதாய பேரியக்கம் என்ற பெயரில் ஒன்று சேர்ந்த எல்லோருமே கேவலமான நோக்கம் உடையவர்கள். இது தலித் - தலித்தல்லாதோர் என்ற பிரிவு ஏற்படுத்த முனைப்புடன் செய்யப்பட்டது. இதில் வட நாட்டு ஹிந்து முஸ்லீம் கலவரம் தூண்டப்பட்ட அதே பார்முலா இருக்கலாம். If you know what I mean...

6. இப்போது Exogamy, மூலம் ஜாதியை உடைத்தல் தான் வரும்காலத்தில் சரியாக வரும் என எண்ணத்தோன்றுகிறது.

7. ஒரு பக்கம் சிறுவர்கள் முதற்கொண்டு எல்லோருக்கும் ஜாதி வெறி ஊட்டுகிறார்கள், பல்வேறு வழிகளில். நண்பர் ஒருவர் 2 வயது குழந்தை படம் போட்டு ஏதோ புஜ்ஜிமா **வை (ஜாதிப்பெயர்)  என பேனர் பார்த்ததாக சொன்னார்.. :-(

8.  ஜாதி ரீதியான மூளை சலவை Castration போன்றது. இவர்கள் காதலிக்க மாட்டார்கள் அல்லது சொந்த ஜாதி பெண்களை காதலிப்பார்கள்.

10. ஆனால், பெண்ணை வெறும் சதையாக பார்க்கும் மனோபாவம் தான் இவர்களுக்கிருக்கும் என்பதால், இப்படி ஜாதிக்குள் இறுகும் சமூகத்தை சேர்ந்த பெண்கள் மிகவும் துன்பமான வாழ்க்கையிலேயே உழலுவார்கள்.

11. எதிர்காலத்தில் காதல் - கலப்பு மணத்திற்கு பாதுகாப்பு  கொடுக்கும் வலுவான இயக்கம் வேஆண்டும். ஒரு காலத்தில் திகவில் எல்லோரும் சொந்தம் போல பழகினார்கள். இப்போது திக அல்லாத, பகுத்தறிவை தாண்டி - சுதந்திரம் - காதல் என்ற வெளிப்பார்வையில் ஒரு புது அமைப்பு தேவை. இந்த அமைப்பு நண்பர்களாகவும், உறவாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும்.

12. எல்லோரும் சமூகத்தை திருத்தி விட கிளம்ப முடியாது. ஆனால், Doing your bit is enough. ஒரு ஜாதி வெறி பிடித்த எச்சில்கலை நாய்க்கு இருக்கும் அதே கர்வம் நமக்கும் இருக்க வேண்டும்.

13. மீண்டும் அந்தப்பக்கம். குழந்தைகள் முதல் வளர்க்கப்படும் ஜாதிபற்று, வெறும் ஜாதிக்காரர்கள் மட்டும் கலந்து கொள்ளும் விழாக்கள் அமைத்து அதில் பேசி வெறியாக்கப்படுகிறது. வெள்ளை சட்டை, பந்தா, இத்தியாதிகள்.  15 வயது வரை இப்படி வளர்ந்த ஒருவனை எப்படி திருத்துவது??

14. வரும்காலத்தில் திருமணம் தாண்டி, நட்பு, உறவு என எல்லாமே ஜாதிக்காரன் தான் என ஆக்க ஒவ்வொரு ஜாதிக்கூட்டமும் முயன்று வருகிறது. இதன் வருங்காலம் மிக மோசமாய் இருக்கும்.

15. அரசியல் ரீதியில் ஒன்றூம் செய்ய முடியாது, எல்லா ஜாதி தலைவர்களையும் திருத்துவதோ, நாடு கடத்துவதோ சினிமாவில் முடியலாம், நிஜத்தில் ம்ஹூம். இப்போது ஒரே வழி காதல், நட்பு உறவில் ஜாதியை ஒழிக்கணும். அதற்கு காதல் மணம் புரிந்தவர்கள் தங்கள் பிள்ளைக்கு NO CASTE போட முன் வரணும் அவர்கள் பொருளாதாரம் அதற்கு இடம் தரணும் அல்லது அதற்கேற்ற ஒரு ரிசர்வேஷன் வரணும்.

16. இப்போது காதலிச்சா வெட்டுவாங்கன்னு பயம் இருக்கு. அந்த பயம் அகலணும். சட்டம் மூலமா ;-) ஒரு பயம் காதல பிரிக்க நெனைக்கற  ஜாதி கும்பலுக்கு வரணும்., காதலிக்கறவங்களுக்கு ஒரு பாதுகாப்புணர்வு வரணும்.

17. Emotional blackmails can be tackled with emotional blackmails again and if not can be ignored.

பல அவதானிப்புகள் சிதறி இருக்கலாம். மன்னிக்கவும்.

படம் : சிறு வயதில் சாதி உணர்வு :-(Saturday, June 15, 2013

ரஜினி : மற்றுமொரு பக்கம் - 7


            வசூல் மன்னன் - சூப்பர் ஸ்டார் - அமிதாப் போன்ற பாலிவுட் நடிகர்களெல்லாம் அப்பாவாக நடிக்கப்போன பின்னரும், தனக்கு மகளாய் நடித்த நடிகைகள் தனக்கு அம்மாவை நடிக்க இன்றும் யூத்தாக நடித்துக்கொண்டிருப்பவர் - தமிழகத்தின் அப்பழுக்கற்ற ஹீரோ என்ற பிம்பம் உடையவர் - வாய்ஸ் உடையவர் - பல்வேறு நாடுகளில் ரசிகர்களைக் கொண்ட - அனைத்து சென்டர்களிலும் ரசிகர்களை கொண்ட நடிகர் - அதற்கும் மேலானவர் - ஆதர்சம் - ரஜினிக்குண்டான பிம்பம் பிரம்மாண்டமானது.

             ரஜினி எப்படி இந்த இடத்தை பிடித்தார்.  எண்பதுகளில் ரஜினி படம் வந்து தான் ரஜினிப்படத்தை தியேட்டரை விட்டு தூக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் எல்லாமே சூப்பர் ஹிட் என சொல்லிவிட முடியாமல் இருந்தது. 1980ஐ எடுத்துக்கொள்வோம். 79இல் வந்த அன்னை ஓர் ஆலயம் சூப்பர் ஹிட். 1980இன் ஆரம்பத்தில் வந்த பில்லா ப்ளாக்பஸ்டர், ஆனால் அதை தொடர்ந்த காலி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி எல்லாம் வந்த வேகத்தில் சுருங்கின, மீண்டும் பொல்லாதவன் ஹிட், முரட்டுக்காளை ஹிட். இங்கே ப்ளாப் ஆன படங்களை மக்கள் நினைவே வைத்துக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

        ஒரு வருடத்திற்கு ரஜினி நாலு ஹிட் கொடுக்கிறார் என்பதே பேச்சு, அவர் எத்தனை நடித்தால் என்ன? ரஜினி மிக வேகமாக பி,சி சென்ட்டர்களின் ஆதர்ச நாயகனாக வளர்ந்து நின்றார். ஏ க்ளாஸ் ரசிகர்கள் அவர் படத்தை இப்போது ரசிக்கத்துவங்கி இருந்தனர். தளபதிக்கு பிறகு ரஜினி க்ராபில் ஏற்றம் தான். இப்போது தான் ரஜினியின் படங்களில் ஒரு சின்ன மாற்றம் வருகிறது. தளபதி, ராபின் ஹுட், உழைப்பாளி என ரஜினி ஏற்று நடித்த பல வேடங்கள் ஏழை வேஷம். தங்களுள் ஒருவராக ரஜினியை கொண்டாட வைத்தது இது தான். நம் மக்கள் சினிமா முட்டாள்கள் இதற்கு வகைதொகையே கிடையாது. எம்.ஜி.ஆர் சாக மாட்டான் என நம்புபவனுக்கும், ரஜினி வாய்ஸ் சரியாய் இருக்கும் என எண்ணுபவனுக்கும், விஜயால் நாடாள முடியும் என நம்புபவனுக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.             எங்கே விட்டேன், ம்ம்... பாஷா, பாஷாவிற்கு பிறகான படங்களில் ரஜினி பணக்காரனாக நடிக்க ஆரம்பித்தார்.  ஏழைகளால், கூட இருக்கும் துரோகிகளால் (இவர்கள் ஏழையாக அண்டிப்பிழைப்பவர்களாக இருப்பார்கள்) வஞ்சிக்கப்படும் ஹீரோ. முத்து படத்தில் பணக்காரராக இருந்தும் வேலைக்காரனாக, அருணாசலத்திலும் அப்படியே, படையப்பாவிலும் தன் சொத்து மணிவண்ணனால் ஏய்க்கப்படும்.

         ரஜினிக்கு ஏற்கனவே ஒரு இமேஜ் உண்டு. அவரது கேரக்டர்கள் பல நேரம் திருநீறு பூசிக்கொண்டிருக்கும் (பக்தியாம்), பெற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும், அநியாயம் என பொதுபுத்தியில் அமையப்பெற்றிருக்கும் எதையாவது கண்டால் பொங்கும், மற்றபடி பொதுபுத்தியை அப்படியே பின்பற்றும். படையப்பாவில் பாம்பை காப்பாற்றும், சாமி கும்பிடும், திமிர் பிடித்த பெண்ணை விரும்பாத, அம்மா சொன்னால் அதை செய்யும் பையன் (உஷ்ஷ்.... இதெல்லாம்).  பொதுபுத்தியில் நல்ல பையன் என இப்படிப்பட்ட பையங்களைத்தான் சொல்வார்கள்.

        என்பதுகளில் ரஜினியின் ரசிகனாய் இருந்தவர்கள் இப்போது தங்கள் மகன்கள் ரஜினியின் ரசிகனாய் இருப்பதற்கு தடையேதும் நிச்சயம் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் ரஜினி தான் Controversialஆக ஒன்றுமே சொல்லவில்லையே, அரைத்த மாவையே தானே அரைத்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே இந்தச் சமூகம் எப்படி உள்ளதோ ஆணாதிக்கம் (பொம்பள பொம்பளையா இருக்கணும் - படையப்பா, மன்னன்), சாதீய இறுக்கங்கள் (எந்தப்படத்திலாவது ரஜினி வேற்று/தாழ்ந்த சாதி பெண்ணை மணப்பதாக குறியீடு இருந்தால் சொல்லுங்கள்), என அத்தனையும் ஏற்றுக்கொண்டும் சிபிட்சத்தை கடைசியில் தரும் ஒரு பாத்திரமாக இருக்கும் ரஜினியினுடையது.

                           இதெல்லாம் வெறும் குறியீடுகளே. இதெல்லாம் நல்லது தானேப்பா என்றேர்களேயானால் உங்களை வெள்ளந்தியாகவே பார்க்கவேண்டியுள்ளது. இதெல்லாம் சும்மா உல்லுல்லாயி... சிவாஜியில் தமிழ் காலாச்சார் (ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இல்லை) பெண் வேண்டும் என்பார் ரசிநீ (Back sorry Post mordernism) ஸ்ரேயாவை கோவிலில் பார்ப்பார். நல்ல விஷயம் என்றார் நண்பர். வாருய்யா என அமர்த்தி ஒரு கூடை சன்லைட் பாட்டை ஸ்லோ மோஷனின் ஓடவிட்டேன், வெள்ளையாய் ஒரு திராவகம் ஒழுக (வாயிலிருந்தய்யா) ரசித்து பார்த்தார். அப்பறம் திரும்பி  இளித்தார். ரஜினி சங்கர் போன்றவர்களின் டெம்ப்ளேட் ரொம்ப எளிது, இச்சமூகத்தில் எதையும் சீர்திருத்தாக, எந்த கருத்தையும் ஆழமாய் முன் வைக்காத, ஆனால் அதே நேரத்தில் சமூகத்தை சுபிட்சமடைய வைக்கும் ஒரு ஹீரோ + அடக்க ஒடுக்கமான அவன் காதலி பாடலில் மட்டும் கவர்ச்சி காட்டுவாள் + நினைத்ததையே சொல்லும் அம்மா, அவள் பேச்சை கேட்டு நடக்கும் நல்ல பையன் ஹீரோ.

             இது தான் ரஜினியின் வெற்றி பார்முலா. இச்சமூகத்தின் மொத்த Envisageஐ பட ஹீரோ செய்வார். வெல்வார். ரஜினிக்கு ரசிகர்கள் குவிந்தது இப்படித்தான். இதே காலகட்டத்தில் கமல் பரீச்சை செய்தார், ரிஸ்க் எடுத்தார். அவரை ஏன் பலரும் பரிந்துரைப்பதில்லை? உங்களுக்கே தெரியும் இருப்பினும் விரிவாக அலசலாம். அடுத்த மற்றுமொரு பக்கத்தில் :)

       

Friday, June 14, 2013

இந்திய தேசியமும் கிரிக்கெட்டும் ஐபிஎல்லும்!

 முதலில் இப்படி ஒரு கட்டுரை போட்டியை அறிவித்தமைக்காக வினையூக்கிக்கு நன்றி. மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழ் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இது நிச்சயம் ஒரு உண்ணாவிரதத்தை முடிக்கும் பழச்சாறு போன்றது  :)

தமிழ் சொற்களின் முக்கியத்துவம், போட்டி விதிமுறை எல்லாம் தனித்தழின் பயன்பாட்டை வலியுறுத்தினாலும், இவை அனைத்தும்  கேள்வியிலேயே உள்ளதாலும், பொதுப்பயன்பாடு காரணமாகவும் மட்டைப்பந்து கிரிக்கெட் என்றே இக்கட்டுரையில் சுட்டப்படுகிறது.

           ஆங்கிலேயேர்கள்  தொடங்கி விட்டுச்சென்ற எல்லாவற்றையுமே நாம் இன்னமும் கொண்டாடிக்கொண்டு தான் இருக்கிறோம். அவற்றுள் முதன்மையானது ஆங்கிலேயே விளையாட்டான கிரிக்கெட். கிரிக்கெட்டுக்கும் இந்திய தேசியத்துக்கும் ஒரு பிணைப்பு உருவாகி வெகு காலமாகி விட்டது. இத்தொடர்பை காலத்தின் துணை கொண்டு இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம்.

           சுதந்திரம் கிடைத்த, அல்லது அதற்கு சற்று முந்தைய காலங்களில் இந்தியாவை பொறுத்த வரையில் கிரிக்கெட் ஒரு ஆங்கிலேயே விளையாட்டு. ஆனாலும், ஆங்கிலேய அரசில் பணியாற்றிய இந்திய அதிகாரிகளும், நிலச்சுவாந்தாரர்களும் கிரிக்கெட்டை அறிந்து வைத்திருந்தனர். அக்காலகட்டங்களில் கிரிக்கெட்டில் ஆங்கிலேயர்களை வீழ்த்துவது "அவர்கள் விளையாட்டில் அவர்களை தோற்கடிப்பது" என்ற ரீதியில் இந்தியர்களால் கொண்டாடப்பட்டது.

           ஐம்பதுகளில் வெறும் ஆறு நாள் போட்டிகள் (டெஸ்ட்) மட்டுமே இருந்த காரணத்தால், பல்வேறு போட்டிகள் வெற்றி தோல்வி இன்றியே முடிவடைந்தன (Draw). ஆனாலும் தனிப்பட்ட சாதனைகளும், எதிரணியை திணறடித்தலும் வெற்றியாக கொண்டாடப்பட்டது. அக்காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட்டை விட கொண்டாப்பட்ட ஒரு விளையாட்டு ஹாக்கி (Hockey). 1928 முதல் 1956 வரை நடந்த அனைத்து ஒலிம்பிக்கிலும் இந்திய ஹாக்கி அணி, தங்கங்களை குவித்தது.

            இரண்டாவதாக தொடங்கிய கிரிக்கெட் ஊடான புதிய-தேசியவாதம் (Neo-Nationalism) முக்கியமானது, அரசியல் கலந்தது, உலகமயமாக்கலை அடிப்படையாய் கொண்டது, இன்று வரையிலும் நீடிப்பது. இந்த தேசியவாதத்தை புரிந்து கொள்ள நாம் கொஞ்சம் இந்திய அரசியலையும் புரிந்து கொள்ளல் வேண்டும். இந்தியா, பார்ப்பனர்கள் ஆதிக்கம் மிகுந்த ஒரு நாடு. இதற்கான வரலாற்று ரீதியான காரணங்கள் எத்தனையோ உண்டு. சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் பல்வேறு துறைகளின் உயர் பொறுப்புகளில் அமர்ந்த பல்வேறு நபர்கள் பார்ப்பனர்களாகவே இருந்து ஒரு வேளை எதேச்சையானாதாக கூட இருக்கலாம். ஆனால், அவர்கள் தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட நியமனங்களில் பார்ப்பனர்களை நியமித்தது நிச்சயம் ஏதேச்சையானது அல்ல.

             கிரிக்கெட்டை பொறுத்த வரையில் ஆங்கிலேயே அரசில் மேற்தட்டில் இருந்தவர்கள் பார்ப்பனர்கள் என்பதால் பார்ப்பனர்கள் கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டதும் அவ்விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தியதும் இயற்கையானது. சுதந்திரத்திற்கு முன், பம்பாய் பிரசிடென்சி முதல் தர போட்டித்தொடரில் ஆங்கிலேயே, பார்சி, இந்து, முஸ்லீம் அணிகள் மோதும். இந்து  அணியில் அப்போதே பார்ப்பன ஆதிக்கம் காணப்பட்டது.

              இந்த புதிய  தேசியவாதம் எண்பதுகளின் தொடக்கத்தில் அல்லது மத்தியில் பரவத்தொடங்கியதாக பல்வேறு வரலாற்று ஆசியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஒரு மிக முக்கிய காரணம் தொலைக்காட்சி. வானோலியை போல் அல்லாமல் தொலைக்காட்சி தங்களுக்கு வீரர்களோடு மெய்நிகர் (Virtual) நெருக்கத்தை தருவதாக பல்வேறு பார்வையார்கள் அப்போதைய கணக்கெடுப்பொன்றில் தெரிவித்திருந்தனர். தொலைக்காட்சிகளும், வித்தியசமான படக்கோணங்களும் (Camera angles) பார்வையாளர்களை கவர்ந்திருந்தன.

              இந்தச் சூழ்நிலையில், 1983 இல் இந்திய அணி கிரிக்கெட் உலகப்கோப்பையை வென்ற போது, இந்திய ஊடகங்கள் எந்த மொழிப்பாகுபாடும் இல்லாமல் உலகை நாம் வென்றுவிட்டோம், உலகில் நாம் தான் தலைசிறந்தவர்கள் என்ற ரீதியில் கொண்டாடத்துவங்கின. ஒரு குறியீடாக நடிகர் சார்லி வடிவேலுவை தூக்கிக்கொண்டு வெற்றி வெற்றி என நாச்சியப்பன் பாத்திரக்கடைக்கு ஓடுவதை எடுத்துக்கொள்ளவும்.

                இப்போதும் கூட, இந்திய கிரிக்கெட் அணியிலும், ஊடகத்துறையிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலும் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாக இருந்தது ஏதேச்சையாக அமைந்தது என்றே நாம் எடுத்துக்கொள்வோம். இங்கே இருந்து சாதி ரீதியில் எதையும் ஆராயாமல் இந்த புதிய தேசியம் வளர்ந்த விதத்தை பற்றி பார்ர்போம். எந்த ஒரு தேசத்திலும் ஊடகங்களின் பங்கு முக்கியமானது.  அவை காட்சி ஊடகங்கள் ஆகட்டும், அல்லது பத்திரிக்கை ஊடகம் ஆகட்டும், மக்களின் மன நிலையை கட்டமைப்பதில் ஊடகங்கள் பெரும் பங்கு ஆற்றுகின்றன. திரும்பத்திரும்ப சொல்லப்படும் எதுவும் நம்பப்படும் என்பதற்கேற்ப கிரிக்கெட் இந்தியாவின் மிகமுக்கியமான விளையாட்டாக, அதையும் தாண்டி தேசிய கவுரமாக முன்னிறுத்தப்பட்டது. அது மக்களால் மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ளப்பட்டது.

                 இக்காலகட்டத்தில் பதவிவேற்ற ராஜீவ் காந்தியும் ஒரு கிரிக்கெட் பிரியர். இவரும் இந்தியா கிரிக்கெட்டில் வெல்வது இந்தியாவின் கவுரவம் சம்மந்தப்பட்டது என சொல்லிவைக்க அம்மாயை மெல்ல மெல்ல கட்டமைக்கபட்டது. மற்ற விளையாட்டுக்களை பின் தள்ளி "சோம்பேறிகளின் விளையாட்டு" என ஒரு காலத்தில் விளையாட்டு ஆசியர்களால் ஒதுக்கப்பட்ட கிரிக்கெட் முன்னிறுத்தப்பட்டது. இன்றளவும் இந்தியா 83 இல் உலகப்கோப்பையை வென்றது பாடமாக இருக்கிறதே ஒழிய , ஹாக்கியில் நாம் குவித்த ஆரம்ப கால ஒலிம்பிக் மெடல்கள் குறித்து எந்தப்பாடமும் இல்லை. சச்சின் குறித்தும் நம் பாட நூல்களில் இருப்பது நாம் அறிந்ததே. இந்தியாவின் கடைசி ஹாக்கி தங்கப்பதக்கம் 1980 ஒலிம்ப்பிக்கில் வாங்கியது தான். அதன் பிறகு துவங்கிய கிரிக்கெட் மோகம் இப்போதும் தொடர்கிறது.

            இதே நேரத்தில் பெருநிறுவனங்கள் (Corporates) கிரிக்கெட் சந்தைக்குள் நுழைந்தன. பெரும் விளம்பரங்களின் மூலம் கிரிக்கெட் வீரர்கள் நட்சத்திரங்கள் ஆக்கப்பட்டார்கள். சாலை சந்திப்புகளில் விளம்பர பலகைகளில் ஏதேனும் பெரு நிறுவன பொருளை வாங்கச்சொல்லி கண் சிமிட்டினார்கள். கிரிக்கெட் பரவியது! எல்லோரும் (ஒரு மட்டையும், பந்தும் இருந்தால் மட்டும் போதும்) எளிதாக விளையாடிவிடலாம் என்ற விசயமும் இதை  பிள்ளைகள் மத்தியில் பிரபலமாக்கியது.

            1987இல் இந்தியாவில் நிகழ்ந்த ரிலையன்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது நிகழ்ந்தவற்றை அறிந்தவர்கள் நாங்கு ஆண்டுகளில் கிரிக்கெட் மோகம் எப்படி இந்தியர்களிடையே வெகுவேகமாக பரவியிருக்கிறது என்பதை அறிந்திருப்பார்கள். இந்தியாவும் பாக்கிஸ்தானும் இரண்டு அரையிறுதிகளில் தனித்தனியே இருக்க, ஒரு வேளை இறுதிப்போட்டிக்கு இவ்விரு அணிகளும் தகுதி பெற்றால் என்னென்ன ஆகுமோ என பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர் மும்பை போலீசார். ஆனால், இரண்டு அணிகளுமே அரையிரறுதியில் தோல்வியுற்றன. பாக் அணி அரையிறுதியில் தோல்வியுற்றதை இந்தியாவே கொண்டாடடியதில் இருந்து தேசியத்துக்கும் கிரிக்கெட்டுக்குமான தொடர்பு, பாக் மீதான காழ்ப்பு எல்லாவற்றையும் ஒரு சேர அறிந்துகொள்ளலாம்.

           இப்படியாக கிரிக்கெட் பெரு நிறுவனகங்களின் தோள்களில் ஏறி, ஊடக உதவியுடன் இந்திய மக்களின் மனங்களின் ஆழமாக வேரூன்றியது. கிரிக்கெட் வீரர்கள் இந்தியர்களின் ஆதர்ச நாயகர்கள் ஆனார்கள். கிரிக்கெட்டை ஒட்டி வெளிவந்த படங்களும் வெற்றிபெற்றன. கிரிக்கெட் பற்றி தெரியாமல் இருப்பது முட்டாள்தனம் என்ற எண்ணமும் வளரத்தொடங்கியது. கடந்த இருபது ஆண்டுகளின் புதிய தேசிய எண்ணமும், கிரிக்கெட்டும் ஒன்றை ஒன்றை ஆதரித்து பெருமளவு வளர்ந்து, வேறூன்றி விட்டன.

         இந்த கட்டத்துல தான் வந்து சேர்ந்தது ஐபிஎல். ஐசிஎல் என்ற ஜீ குழுமத்தின் கிரிக்கெட் போட்டித்தொடருக்கு எதிராகவும், இந்தியாவில் கிரிக்கெட்டை வளர்க்கப்போகிறோம் என்ற ஜிலுஜிலு வாசகத்துடனும் நழைந்தது ஐபிஎல்.  அணிக்கு இருபதே ஓவர்கள், அதிரடி ஆட்டக்காரர்கள், நடனப்பெண்கள் என எதை எடுத்தாலும் கவர்ச்சி, எங்கு நோக்கினும் கவர்ச்சி. திரைப்படத்தை போல் மூன்றே மணி நேரம். திரைப்பட நட்சத்திரங்கள் அணிகளை வாங்கியும், உற்சாகப்படுத்தியும் இருக்க, ஐபிஎல் முதல் தொடர் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது.

           இந்த தொடர்வெற்றி கொஞ்சம் ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்தாலும் ஆறு தொடர்களாக தொடர்கிறது என்பது தான் உண்மை. ஐபிஎல்லின் அடிப்படையான பிராந்திய அணிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்த பிராந்திய ரீதியிலான பாசம், இருபது ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த கிரிக்கெட்-தேசியம் இடையிலான உறவை அசைத்துப்பார்த்தது முற்றிலும் உண்மையே.

          ரசிகர்கள் வீரர்களை தேசத்தின் பிரதிநிதிகளாக பார்ப்பது  நின்று போய், மாநிலத்தின், இனத்தின் பிரதிநிதிகளாய் பார்க்க ஆரம்பித்தார்கள். ஜார்கண்ட்காரான தோனி சென்னைப்பையனாக பார்க்கப்பட்டார். ஒரு பிராந்திய ரீதியான வெறுப்புணர்வு உருவானது. சச்சின் போன்ற தனி நபர்கள் மாநில உணர்வுகளையும் தாண்டி ஈர்த்தனர் என்பது நிஜம் தான் ஆனாலும் அந்தச்சதவீதம் மிகக்குறைவு. வெளி மாநிலத்தில் வசிக்கும் பெரும்பாலானோரிடம் "என்னப்பா உங்க டீம்  நேத்து ஊத்திக்கிச்சா" எனக்கேட்கும் அளவு பிராந்திய உணர்வு பரவியிருந்தது. அணி வீரர்களிடையே கூட மோதல் எழுந்தது. (கோஹ்லி, கம்பீர்) இருவரும் இந்திய அணிக்கென விளையாடினாலும் ஐபிஎல்லில் முட்டிக்கொண்டனர்.

         இப்படி தேசிய உணர்வு பிராந்திய உணர்வாய் மாறிக்கொண்டிருந்த நேரத்தில் கிரிக்கெட்டை அடிவேரோடு சாய்க்கும் நிகழ்ச்சிகள் தற்போது நடந்தேறியுள்ளன. ஐபிஎல் ஆறில் ஸ்ரீசாந்த் உட்பட ராஜஸ்தான் அணி வீரர்கள் சூதாட்டத்தில் (Not only betting, also Fixing)  பங்கேற்றது, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச்செய்ததுள்ளது. அதன் பிறகு குந்த்ரா, குருநாத் மெய்யப்பன் மீதான புகார்கள் ஐபிஎல் மொத்தமும் ஒரு திரைக்கதைக்கு உட்பட்டு நடப்பதாக ரசிகர்களை நினைக்கச்செய்திருக்கின்றன. இதன் விளைவுகள் என்னவென்று போகபோகத்தான் தெரியும். ஆனால், இப்போதைக்கு கிரிக்கெட் மீதான ஒரு வெறுப்பு தேசம் முழுக்க பரவியிருக்கிறது !Tuesday, June 4, 2013

சாதியம் நோக்கி அடி எடுக்கும் தமிழ் சினிமா - மற்றுமொரு பக்கம் 6

                                            வினையூக்கியின் கட்டுரை போட்டிக்கு கட்டுரைகளை சமர்பிக்க இன்னமும் 10 நாட்களே உள்ளன. அதற்காக படித்தும் எழுதியும் கொண்டிருக்கும் போது நேற்று முக நூலில் அருண் (தமிழ் ஸ்டுடியோ) எழுதிய குட்டிப்புலி விமர்சனமும் அதற்கு பலர் ஆற்றிய எதிர்வினைகளையும் காண நேர்ந்தது. அதில் முக்கியமான எதிர்வினை ராஜன் குறையினுடையது. ஏன் இதை முக்கியம் என குறிப்பிடுகிறேன் என்றால், அவர் பொதுபுத்தியின் பாற்பட்ட விமர்சனம் என்கிறார். தமிழ் ஸ்டுடியோ அருண் தனது விமர்சனத்தில் சசிக்குமாரை ராமதாசோடு ஒப்பிட்டு அவரை மிக ஆபத்தானர் என குறிப்பிட்டு இருந்தார். இன்னொரு பக்கம்  நண்பர் அதிஷா குட்டிப்புலியை பார்த்துவிட்டு கதறி இருந்தார்.

                                     குட்டிப்புலியை விமர்சிக்கும் பணியை தூசு தட்டி எடுக்க இப்பதிவுகளே காரணம். ராஜன் குறை விஸ்தாரமாக பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதி இருந்தார். அதில் கூறியுள்ளபடியே சுப்பிரமணியபுரம் நல்ல படம் தான். உண்மையிலேயே அது ஒரு Trend setter. அதே போல சமுத்திரக்கனியும், சசிக்குமாரும் ஒருவர் இயக்கி மற்றவர் நடித்த சில படங்களும் எந்த குறைகளும்/கறைகளும் இல்லாதவை தான். ஆனால், விவாதத்துக்குரிய இரு படங்களும் சசிக்குமார் நடித்தவை. அவரிடமும், சமுத்திரக்கனியிடமும் உதவி இயக்குனார இருந்தவர்கள் இயக்கியவை. கதையில், திரைக்கதையில் படமாக்கப்பட்ட விதத்தில் சசிக்குமாருக்கு தொடர்பேயில்லை என கண்ணை மூடிக்கொண்டு நாம் இயக்குனர்களை மட்டும் குற்றம் சாட்டிவிடலாம்.  எனவே, நாம் சசிக்குமாரை விட்டுவிட்டு இந்த இரு படங்களையும் மட்டும் விமர்சிப்போம். (சசிக்குமார் நாடோடிகளில் கலப்பு மணத்தை வெளிப்படையாக ஆதரித்ததாக ராஜன் குறை சொன்னதை அப்படியே ஏற்று)

                                    ஆங்கிலத்தில் Camouflage என்பார்கள். நம்மூரில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்போமே அது போல. மேலோட்டமாக பார்த்தால் தெரியாது, ஆனால் ஒரு கருத்து படத்தினூடாக பார்வையாளனின் மனதில் மெல்ல ஏற்றப்பட்டிருக்கும். சுந்திரபாண்டியனில் ஆரம்ப வசனம் ஒரு பொட்டல்வெளியை காட்டி "எவனாவது பாடுபட்டு வளத்துன பொண்ணுக மனச கெடுத்தாக்க அவன வெட்டிக்கூறு போடுற இடமும் இது தான்". ஓரிரு வார்த்தைகள் மாறுபட்டு இருக்கலாம். ஆனால், கவனியுங்கள். இந்த வார்த்தை தேர்வு முக்கியமானது. இதை ராஜன் குறை சொல்வதை போல யதார்த்ததின் பிரதிபலிப்பு என ஏற்றுக்கொள்ளவே இயலாது.

                              இதே வசனத்தை நாம் கொஞ்சம் மாற்றிப்போடுவோம். "இதே எடம் தான் நம் பெண்களை உருகி உருகி காதலிக்கும் அப்பாவி பசங்களை,  நம்ம சாதி வெறியர்கள் வெட்டிப்புதைக்கும் இடம்..." இரண்டு வசனங்களுக்கும் எவ்வளவு மாறுபாடு வருகிறது கவனித்தீர்களா? முன்னது சிலரை குஷிப்படுத்துவதற்கென்றே எழுதப்பட்டது. பின்னது அவர்களை காண்டாக்கிவிடும். இதே போன்ற பல விஷ விதைகள் படம் முழுக்க உள்ளன. சுந்திரபாண்டியனில் கொலை செய்து விட்டு (நண்பன் செய்தது என க்ளைமேக்சில் வரும்) அதை பேசித்தீர்த்துக்கொள்ளும் முறை (ஊர்-ஜாதி பெருசுகள்) ஒரு Camouflage.

                            குட்டிப்புலியில் தன் ஜாதி பெண்களை பிற ஜாதி ஆண்கள் சைட் அடித்தால் கூட (அது போலீஸ் என்றாலும்) தூக்கிப்போட்டு மிதிக்கும் ஹீரோ தன் ஜாதி இளைஞர்கள் நாலு பேரை கூடவே வைத்துக்கொண்டு சைட் அடிக்கிறார், தன் ஜாதி பெண்களை மட்டும். இதில் பொம்பள என ஆரம்பித்து அவர்களை தூக்குவது போல் தூக்கி கீழே எறியும் வசனங்கள் வேறு.

                            இதை ஏன் நான் Camouflage என்கிறேன் என்றால், வினி சர்ப்பனா என்ற ஒரு இளம் பத்திரிக்கையாளர், குட்டிப்பிலியை கிழித்து விட்டு கடைசியாக, ஊர் காவல் தெய்வங்கள் (லோக்கல் சாமிகள்) எப்படி உருவாகிறார்கள் என காட்டியது பாராட்டுக்குரியது என்றிருந்தார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. கவனியுங்கள், படத்தில் கௌரவக் கொலைகள் செய்பவர்கள் குலசாமியாக்கப்படுகிறார்கள். அவர்கள் ஹீரோ ஆக்கப்படுகிறார்கள். இது ஒருவகையான Envisage. நம் மனதில் மறைந்துள்ள சொல்லமுடியாத எண்ணத்தின் வெளிப்பாடு.

                         ஏன் இது யதார்த்தம் அல்ல என்றால், யதார்த்தம் பட்டவர்தனமாக இருக்க வேண்டும். வணிக சினிமாவில் யதார்த்தத்தை எடுத்துக்கொண்டால், நீங்கள் காதலையும், வழக்கும் எண் 18/9யையும், மகாநதியையும் காட்டலாம். இதில் எல்லாம் வணிக சினிமாவுக்கான சில சமரங்கள் இருந்தன என்றாலும் அவை எந்தப்பக்கச்சார்பும் எடுக்காதவை. யாரையும் குஷிப்படுத்தி அதன் மூலம் லாபம் பார்க்கலாம் என்ற நோக்கில் எடுக்கப்படாதவை.                        சரி இதற்காக சசிக்குமாரை ராமதாசுடன் ஒப்பிட வேண்டுமா எனில் இல்லை என்றே சொல்வேன். என்னை பொறுத்தவரையில் புலியை விட, பசுந்தோல் போற்றிய புலி ஆபத்தானது. ஜாதி வெறியை வெளிப்படையாய் காட்டுபவனை விட, அதை வாழைப்பழத்தில் ஊசி போல வலிக்காமல் சொருகுபவன் ஆபத்தானவன். சசிக்குமார் இதில் வெறும் நடிகர் தான் எனினும், இதில் நடித்ததை அவர் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

           நீங்கள் கேட்கலாம், இது அவ்வளவு ஆபத்தானதா. இந்த படத்தை பார்த்த உடனே எல்லோரும் தெருவில் இறங்கி கௌரவக்கொலை செய்யப்போகிறார்களா என்றால் இல்லை. ஆனாலும் இப்படம் அவ்வாறு செய்பவர்கள் செய்தவர்களுக்கு ஒரு மனோபலத்தை அளிக்கும். நாம் யாரும் இந்தியனையோ , அந்நியனையோ பார்த்து அவர்களைப் போல மாறிவிடவில்லை தான். ஆனால் நம் மனதில் ஒரு சின்ன பாதிப்பை ஒரு ஓரத்தில் அவை ஏற்படுத்தி இருக்கும்.

             இதை இங்கே சொல்ல முக்கிய காரணம். இது தமிழ் சினிமா. இங்கே காலம் காலமாக அரசியல் செய்பவர்கள், முதல்வர்கள் ஆனவர்கள் சினிமா நடிகர்கள், நடிகைகள். இன்றும் எம்.ஜி.ஆர் செத்துட்டார் எனச்சொன்னால் அடிக்கும் கிராமங்கள் உள்ளன. இன்னமும் எம்,ஜி,ஆர் சமாதியில் காதை வைத்து அவர் வாட்சு ஓடுதா, அவர் எதாவது பேசுவாரா எனக்கேட்கும் ஜனக்கும்பல் உள்ளது. இப்படி சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்து நோக்கத்தெரியாத நல்ல சினிமா எதுவென்றே அறியாமல், மசாலா குப்பைகளை ரசித்துப்பழகிய ஒரு சமூகத்தில் இப்படம் நிச்சயம் ஆபத்தானது தான். குப்பை தான். ஒதுக்கித்தள்ள வேண்டியது. நல்லதை மட்டும் எடுக்குமளவு நம் சமூகமின்னும் வளரல சாமி.
                       

Tuesday, May 28, 2013

மாவோயிசம் - சட்டீஸ்கர் கொலைகள் - ஒரு சின்ன விளக்கம்

                                  சமீபத்தில் நிகழ்ந்தேறிய சட்டீஸ்கர் கொலைகளுக்கு பின், "பசிக்கு சோறு போட்டால் சேவை,  காரணத்தை ஆராய்ந்தால் தீவிரவாதம்" என்ற ரீதியில் ஒரு ட்வீட் போட்டு இருந்தேன். பரவலாக அங்கீகரிக்கப்பட்ட கீச்சு என்றாலும் காவி அன்பர் ஒருவர் நான் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி ப்ளாக் செய்தார். அகமகிழ்ந்தேன்.

                        ஆனாலும், சமீபத்தில் சட்டீஸ்கரிலும் அதற்கு முன்னரும் நிகழ்த்தப்பட்ட கொலைகளும் நக்சல்கள்/மாவோக்களின் வன்முறை பாதையும் எந்தளவு சரி என்ற கேள்வி என்னிடமும் ஏனைய பலரிடமும் பல இடங்களில் முன்வைக்கப்படுகிறது.

                                  முதலில் ஒரு இளம் பெண்ணோ அல்லது வாலிபனோ வெறும் மூளைச்சலவைக்கு ஆட்படுதப்பட்டு தீவிரவாதிகளாக ஆக்கப்பட்டுவிடுவார்கள் என்று உங்களால் மனதார நம்ப முடிகிறதா? உங்கள் மகனையோ மகளையோ அப்படி மூளைச்சலவை செய்துவிட முடியுமா? முடியாதல்லவா? நக்சல்களாக உருவெடுக்கும் பெரும்பாலானோருக்கு தனித்தனியாக காரணங்கள், கதைகள், சோகங்கள் இருக்கின்றன. கண்ணுக்கு முன்னால் இரத்த பந்தம் உள்ள பெண் கற்பழிக்கப்பட்டு இருப்பார், ஏன் அது தாயாக கூட இருக்கலாம். ஒரே வாழ்வாதாரமான நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கும்.

                        அவர்கள் மண்ணின் வளத்தை சுரண்டிக்கொண்டு அவர்களை ஏய்த்துக்கொண்டிருப்போம். உள் நாட்டு தீவிரவாதத்தை ஒடுக்குவது என்பது அவர்களை அழித்தல் அல்ல, அந்த தீவிரவாதத்திற்கான காரணத்தை அழித்தல். மாவோக்களை விஷயத்தை பொறுத்தவரை, காரணம் நமது கேவலமான நிர்வாகம், அரசாங்கள், பாதுகாப்புப் படை. போலீஸ்காரர்களே பெண்களை கற்பழிக்கும் ஊரில் அவர்கள் என்ன தான் செய்வார்கள்?

                           இன்னொரு வாதத்தின் படி இவ்வாறான வன்முறை மீண்டும் நக்சல்கள் மீதான அரசின் கொள்கையை இறுக்கி அவர்களுக்கு பாதகமாக அமையாதா? என்பது. அமைதிப்பாதையில், ஜன நாயக வழியில் போராடலாமே என்பது.

                       நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். அமைதி வழியில் போராடிக்கொண்டிருக்கும் ஐரோம் சர்மிளையும், உதயகுமாரையும் இந்த அரசு எப்படி நடத்துகிறது? இதைப்பார்க்கும் யாரால் இந்தியாவில் ஜனநாயக பாதையில் நம்பிக்கை வைக்க முடியும்?   இக்கட்டுரையில் எவ்விதத்திலும் மாவோக்கள் செய்வது சரி என்று நான் சொல்லவில்லை. நம் அரசு செய்வது தவறு என்கிறேன். கிளைகளை வெட்டாதீர்கள் ஐயா. வேர்களை வெட்டுங்கள். இங்கு கிளைகள் மாவோக்கள், வேர் உங்கள் புழுப்பிடித்த அரசு கட்டமைப்பும் அதன் செயல்களும்.

Wednesday, May 8, 2013

ஸ்ருதிஹாசன் - Maxim : மற்றுமொரு பக்கம் - 6


18+ - படத்தை மட்டும் பார்த்துவிட்டு லைக்கை அமுக்கி தொலைக்காதீர்கள் :


 இப்போது தான் கமல் முத்த விவகாரம் குறித்து எழுதுகையில் ஸ்ருதி குறித்து குறிப்பிட்டேன். மீண்டும், ஸ்ருதியை பற்றி எழுத வேண்டி வந்திருக்கிறது. எனக்கும் உனக்கும் ஏதோ விட்ட குறை தொட்ட குறை இருக்கிறது செல்லம். பார்த்துக்கொள்வோம். சரி, உனக்கு ஒன்றே ஒன்றை சொல்ல விரும்பினேன். இது குறித்து  பழுத்த அனுபவம் வாய்ந்த நண்பர் ஒருவரோடு உரையாடுகையில் ஒத்திசைவுள்ள கருத்து ஒன்று உருவானது. எங்கள் இருவருக்குமே இப்படி நேரடியான முகத்திலடித்தாற்போலான கவர்ச்சி பிடிக்கவில்லை. கவர்ச்சியின் அழகே கொஞ்சம் மறைத்து கொஞ்சம் காட்டுவது தான். அதை கொஞ்சம் கவனித்தால் நலம்.
                 மேக்சிம் இதழில் ஸ்ருதி இருப்பது போல வந்த ஸ்டில் உண்மையா உடான்ஸா என தெரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்க மேக்சிம் அதிபரை தொடர்பு கொண்ட போது, அவரது அழகான செக்ரட்ரி எடுத்தார். (போனை) பேசிக்கொண்டே இருந்த போது, படுபாவி ஏர்டெல்காரன், காசு இல்லன்னு கட் பண்ணி உட்டுட்டான். மேக்சிம் இதழை அவ்வப்போது இணையத்தின் மூலம் காண்பவன் (கவனிக்க வாசித்தவன் அல்ல) என்ற முறையில் அது உண்மை என்றே தோன்றுகிறது. ஓக்கே, சீரியஸ் மோடுக்கு வருவோம்.

                  இதற்கிடையே இணைய வெளியில் வலம் வந்ததில், ஸ்ருதியின் படங்கள், வேறு எதற்கோ எடுக்கப்பட்ட ஸ்டில்கள் போல தெரிகிறது. இதனிடையே, MAXIM ஸ்டில்கள் பேஸ்புக்கில் எங்கு வெளியானாலும் அங்கு சென்று ஒரு க்ரூப் சென்று "அய்யகோ கமல் மகளா இப்படி" "இந்திய கலாச்சாரம் இழவு கொட்டுகிறதே" என மானாவாரியாக கமெண்டுகிறாரக்ள். பார்க்கவே பரிதபமாய் இருக்கிறது.

                      சில நாட்கள் முன்பு, நண்பர் ஒருவர் பூனம் பாண்டேவோ, சன்னி லியோனோ நினைவில்லை. அவர்களின், சின்ன வயசு போட்டோ என்று ஒரு படத்தை பகிர்ந்து அதனோடு இப்படி மானத்தை கெடுத்துக்கொண்டு வாழ்வோம் என அந்தப்பெண் அந்த வயதில் எதிர்பார்த்திருப்பாளா? எல்லா உயிரும் கவுரவமாகவே வாழ விரும்புகிறது என பதிவிட்டு இருந்தார்.

                   எனக்கு உண்மையிலேயே இது குறித்து எழுத எரிச்சலாய் இருக்கிறது ஐயா. ஆறு மாசம் இருக்கும். கி.ராவின் பேட்டி ஒன்று ஆ.வியில் வெளியானது. நினைவிருக்கிறதா? "எப்பப்பாத்தாலும் அதப் பத்தியே நெனச்சுக்கிட்டு இருந்தா அது வியாதி இல்லாம வேறென்ன?" என கேட்டிருப்பார் கி.ரா. பாக்கியராஜிடம்  "ஏன் முருங்கக்காய் மேட்டர்களை தொடுகிறீர்கள்" என எப்போது கேட்டாலும் சொல்வார், "அட, எத மறைச்சு மறைச்சு வெக்குறமோ, அதுல தானங்க சுவாரசியம் ஜாஸ்தி".

                  இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இளைஞர்களின் கவலை சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா என்பது தான் என்பது உங்களுக்கு தெரியுமா? கூகுள் தேடலில் Mastrubation and impotency என்ற வார்த்தைகள் எத்தனை முறை இந்தியாவில் தேடப்பட்டுள்ளது என அறிவீர்களா?

                    விஷயத்திற்கு வருகிறேன். மொத்தமாய் ஸ்ருதி மேட்டரிலும், மற்ற கலாச்சாரத்தை கெடுக்கும் பார்த்து புலம்புபவர்களுக்கு பொதுவாய் ஒன்ற் சொல்கிறேன்.  காண்பிப்பது அவர்கள் உரிமை. புடிச்சிருந்தா பாருங்க. இல்ல நான் ஒழுக்க சீலர்ன்னா, ஸ்ரோல் பண்ணி போய்கிட்டே இருங்க, Family Safety ஆப்ஷன் Enable பண்ணி வெச்சுக்குங்க.                       ஸ்ருதி மேட்டரில் புலம்புபவர்கள் இரண்டு ரகம். 1. கமல் பெண்ணாச்சே என புலம்புபவர்கள். 2. இந்திய கலாச்சாரம் இஸ்துகுச்சே என கூவுபவர்கள். முதலாம் ரகத்தினருக்கு ஒரே பதில் தான், "இது சப்ப மேட்டருங்க. கமல் கிட்ட கேட்டா கூட இதத்தான் அவர் சொல்வார். ஸ்ருதி என்ன செய்யவும் கமலின் அனுமதி தேவையில்லை. அவர் என்ன செய்ய வேண்டும் என தேர்ந்தெடுக்க அவருக்கு அனுமதி உண்டு." இந்த வாதத்தை நியாப்படுத்த என்னிடம் காரணம் உண்டு. ஒரு பேட்டியில் Sharon Stone Basic Instictஇல் நடித்ததை போல நடிப்பீர்களா என ஸ்ருதியிடம் கேட்டதற்கு அவர் கமல் முன்னிலையிலேயே "ஓ! யெஸ்" என்றார். கமலும் அதை ஆமோதிக்கவே செய்தார்.

               
                     இரண்டாவது ரகத்திற்கு வருவோம்.  ஒரு உளவியல் தியரி இருக்கிறது, சத்தம் போட்டு பேசுபவர்களின் பக்கம் பெரும்பாலும் நியாயம் இருக்காது. இந்த ஒழுக்கவியாதிகள் இப்படி பேச காரணம் "இதோ பாருங்கள், எல்லோரும் தப்பு செய்கிறார்கள். அய்யோ, என்னை விட அதிகமாய் செய்கிறார்கள். இவர்களோடு ஒப்பிடுகையில் நான் செய்த தப்பு ஒண்ணுமே இல்லை. நான் இவர்களை விட நல்லவன்" என காண்பித்துக்கொள்ளத் தான். இன்னொரு படம் பார்த்தேன், பிஜேபி பார்னை பேன் செய்யச் சொல்லி கையெழுத்து இயக்கம் நடத்துகிறதாம். பார்னை பேன் செய்வது வரவேற்கத்தக்க முடிவு தான். ஆனால், முதலில் அதை பாராளுமன்றத்தில் செய்ய வேண்டும் போலிருக்கிறதே! ஒரு கோட்டின் அருகில் பெரிய கோடை வரைந்து முந்தைய கோடை சிறிதாக்கும் அதே டெக்னிக். என்னைய விட அவன் கெட்டவன்! இந்த  நல்ல பெயர் இங்கு எல்லோருக்கும் முக்கியமாய் படுகிறது. வள்ளுவரே காமத்துப்பால் எழுதிய பின்பும், காமசூத்ரா எழுதிய காமத்தை ரகசியமாய் வைத்து இளைஞர்களை காவு கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

                       மேக்சிம் போன்ற இதழ்கள் பெண்களை பொருளாக, உடைமையாக்க எடுத்துக்கொள்ளும் அதே சிரத்தையை Chasity என்ற பெயரில் இந்த பொங்குபவர்களும் எடுத்துக்கொள்கிறார்கள்.

                              உங்களில் எத்தனை பேர் பெண்களை அல்லது அழகையே ரசிக்காதவர்கள்? மனைவியை தவிர மற்ற பெண்களை, காமமற்ற தோழியாகவோ, தங்கையாகவோ, தாயாகவோ பார்ப்பவர்கள்?? பார்ன் பாக்காதவர்கள்? ஏதோ ஒரு பெயர் தெரியாத பெண்ணை கண்களால் புணராதவர்கள்? இதோ இப்போதே உடலை காட்டிவிட்டாள் என்பதற்காக ஒரு நடிகையை "தே..." என வார்த்தையால் வன்புணர்ந்திருப்பீர்களே? இரண்டாம் ஜாமத்தில் உழைத்து பணி முடித்து செல்லும் பெண்ணை "இவல்லாம்" என கமெண்ட்டே நீங்கள் அடித்ததில்லையா நியாயமாரே?  குழந்தைக்கு பால் வாங்க  நூறு இரு நூறுக்கு பேரம் பேசிக்கொண்டிருக்கும் சாலையோர வனிதையரை பார்த்தும் பார்க்காமல் தானே கடந்து போகிறீர்கள்??  எல்லாம் கிடக்கட்டும் தலைவலி என ஒதுங்கும் மனைவியை இழுத்து புணராதவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள் பார்ப்போம்?

                             மானம் குறித்து முன்பு சொன்னேனே, அந்த சன்னி லியோன் போட்டோ. அதற்கிட்ட பின்னூட்டம் தான் நான் உங்கள் எல்லோருக்கும் சொல்லவிரும்புவது. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் ஏதோ அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிகழ்வு போல் ஆகிவிட்டது. உழைப்பவர்களை ஏய்ப்பத்தை எல்லா மட்டங்களிலும் நாம் நிகழ்த்தி வருகிறோம். லஞ்சம் கொடுப்பதற்கு உங்களுக்கு கூசாத போது, சாதி சாயத்தை உடல் முழுக்க பூசிக்கொள்ள உங்களுக்கு கூசாத போது, உடலை காட்டி நடிப்பது கேவலமான பிழைப்பு கிடையாது ஐயா. விபச்சாரி கூட உழைப்புக்கு ஊதியம் வாங்கும் போது, ஊதியம் போக லஞ்சம் வாங்க, கடமையை மீறும் அல்லது, அதை ஊக்கவிக்கும் நம்மை விட ஸ்ருதியும், பூனம் பாண்டேவும், சன்னி லியோனும் ஆயிரம் மடங்கு நேர்மையானவர்கள், நல்லவர்கள் தாம்!

  பின் குறிப்பு : அழகை ரசியுங்கள். இது அழகல்ல, ஆபாசம் எனில் தவிர்த்து விட்டு செல்லுங்கள். நீங்கள் புலம்ப, புலம்ப இது என்ன மேட்டர்ன்னு தெரியாவதவன் கூட வந்து பாப்பான். உங்க பிரச்சனை அந்த பொண்ணு காட்றதா? இல்ல பசங்க பாக்குறதா?
                           

                   


                   

Thursday, May 2, 2013

பீமதாசும் லவ்பெல்லும் - மற்றுமொரு பக்கம் 5 !

                                                நான் ஸ்கூல் படிக்கறப்ப பீம்தாசுன்னு ஒரு சொட்டைப்பையன் தான் எங்க "க்ளாஸ்" லீடரா இருந்தான். ஆச்சரியமா, அவன் பையனும் எங்க க்ளாஸ் தான். அந்த செவ்வெளநீ தலையன் பேரு லவ்பெல். எல்லா அப்பாக்கும் இருக்கற மாதிரி அவனுக்கும் தன் பையன ஸ்கூல் பீப்புள் லீடர் ஆக்கிப்பாக்கணுமின்னு ஆச.

                                    அவனும் என்னனென்னவோ பண்ணிப்பாத்தான் நடக்கல. ஒரு காலத்துல ஸ்கூலுக்குள்ள தண்ணி ஒழிப்பு, திருட்டு ரப்பர் அழிப்புன்னு நல்ல காரியங்க பண்ணிகிட்டு இருந்தவன், (எங்களுக்கு லன்ச் அவர்ல வேப்பமரத்தடி "இடஒதுக்கீடு" எல்லாம் வாங்கி தந்தவன்) திடீருன்னு "க்ளாஸ்" ரீதியா எங்கள பிரிச்சான். எங்க கிட்ட பேசும் போதெல்லாம், "நாமெல்லாம் க்ளாஸ் லீடரா இல்ல ஸ்கூல் லீடரா இருக்கறதுக்கே பொறந்தவங்க, நம்ம முப்பாட்டன் எல்லாம் பிரின்சிபல்லு, ஏன் கடவுள் வாழ்த்து பாடுறமே அந்த கடவுளே நம்ம க்ளாசுல மூணாவது பெஞ்சு கோமளாவ சைட் அடிச்சுகிட்டு கிடந்தவர் தான்"ன்னு பேசுவான். அதோட அந்த எடத்துலையே இல்லாத மத்த க்ளாஸ் பசங்கள பாத்து "உங்கம்மா கிட்ட போயி கேட்டுட்டு வாடா நீ எந்த க்ளாஸ்ன்னு, தேர்டு ஏ ல அவன் கண்ண அசைச்சா என்ன ஆகும் தெரியுமா? பிப்த்து பீல இவன் கால உட்டா என்ன ஆகும் தெரியுமான்னு" பீலா உடுவான். இவனுக்கு ஒரு அடியாள்  வேற. அவன் பேரு பென்சில் வெட்டி மரு ( இயவன் எவ்வளவு கேவலவாதின்னா, இவன் பேச ஆறம்பிச்சா பொண்ணுங்க எல்லாம் காத மூடிக்குவாங்கன்னா பாருங்களேன். சில பொண்ணுங்க மூக்கையும் மூசிக்கும், பயபுள்ள குளிக்கவே மாட்டான், பாக்க நல்லா புளி மூட்ட மாதிரி இருப்பான்) நாங்களும் வெறி புடிச்ச வேங்கையா எங்க க்ளாஸ் வீரத்தை மானத்தையும் நிலை நாட்டனுமின்னு முடிவு பண்ணினோம்! எங்களுக்கு புத்தி வந்துச்சு. எங்க க்ளாஸ்லயே இருந்துகிட்டு எங்க க்ளாஸ் பசங்க எல்லாத்தையும் ஒண்ணு சேத்துனோம், அவங்க கிட்ட நம்ம க்ளாஸோட பெருமை எல்லாம் சொன்னோம். அவங்களும் எங்க கூட சேந்தாங்க, க்ளாஸ் உணர்வு இல்லாதவனையும், எங்கய்யா (இனி பீமதாச அப்படித்தான் கூப்பிடணுமின்னு அவரே சொன்னாரு).

                    ஒரு நாள் நாங்க கூட்டத்துக்கு போறப்ப நடந்த பிரச்சனைல, கொஞ்சம் அடிதடி ஆகிடுச்சு. இதுக்கு இடையில ஸ்கூலுக்குள்ள கலவரத்த தூண்டி உட்டான்னு அவன் மேல காண்டாயி, பிரின்சிபல் அவன லெப்ட் ரைட் வாங்கீட்டாரு. நாங்க எங்க தலைவனுக்கு வந்த அவமானத்த எங்களோடதா நினைச்சு ஸ்கூல் போர்ட ஒடைக்கறது, மிஸ் முந்தானைய புடிச்சு இழுக்கறது போன்ற அற வழி போராட்டங்கள்ல ஈடுபட்டோம். இதை என்னபோ நாங்க மட்டும் தான் பண்ற மாதிரியும், மத்த க்ளாஸ் பசங்க மேல தப்பே இல்லாத மாதிரியும் எங்களையே குத்தம் சொன்னாங்க எல்லாரும்.

                    ஒரே ஒரு பையன் மட்டும் எங்க க்ளாசுல எங்க கூட சேர மாட்டான். அவனை அன்னைக்கு ஒரு நாள் புடிச்சு வற்புறுத்தி கேட்டப்ப சொன்னான், "ஏன் டா அந்த லூசுக்... தான் அப்படி பண்றான்னா நீங்க ஏன்டா புத்தி கெட்டு அலையறீங்க. நாம நல்லா படிச்சா, நல்லா வெளையாண்டு ஒழுக்கமாவும் இருந்தா நம்மள்ள ஒருத்தர் ஸ்கூல் பீப்புள் லீடரா வரலாம். அத விட்டுட்டு அவன் சொல்றத கேட்டுட்டு ஆடுறீங்க. அவங்க இங்க நம்ம கிட்ட இப்படி எல்லாம் சொல்லீட்டு வெளிய போயி, நம்ம க்ளாஸ் வஞ்சிக்கப்பட்ட க்ளாசு, இந்த க்ளாசுல தான் லேடீஸ் டீச்சரே இல்ல, படிக்கிற யாருக்கும் டவுசரே இல்லன்னு சோகக்கத சொல்றான். உண்மையிலேயே எல்லா க்ளாசுலையும் நல்லவன், கெட்டவன், படிக்கறவன், சாதிக்கறவன் எல்லாரும் இருக்காங்க டா.  அந்த சொட்டக்க்... தான் பையன ஸ்கூல் லீடராக்கறதுக்காக உங்களை எல்லாம் தூண்டி விடுறான். நல்லா யோசிச்சு பாருங்க, இப்ப பிரச்சன வந்தா மேல் லெவல்ல இருக்கற அவன் தப்பிச்சுருவான், கீழ் லெவல்ல இருக்கற பசங்க தான் எல்லா க்ளாஸ்லையும் பாதிக்கப்படுவாங்க. ஏன்னா, எல்லா க்ளாஸ்ல இருக்கற மேல் லெவல் பசங்க, பாதுகாப்பா தான் இருப்பாங்க. நமக்கு மரியாத, நாம ஒரே ஸ்கூலா இருந்தா தான் டா, இப்படி க்ளாஸ் க்ளாஸா பிரிஞ்சா இல்ல"ந்னான் ஒரே மூச்சுல.

             எங்க எல்லாத்துக்கும் செருப்பால அடிச்சா மாதிரி ஆயிடுச்சு. அவன் ஒரு காலத்துல நானோ என் பையனோ, பதவிக்கு வந்தா செப்பலால அடிங்கன்னு சொல்லீட்டு, போர்ட் அழிக்கற சுகாதார பதவிக்கு வந்தது எல்லாம் கண்ணுல நிழலாடுச்சு. "ஏன் டா பாடு, எங்க க்ளாசுக்கு நல்லது பண்ணுறேன்னு எங்கள தூண்டி உட்டு நீயும் உன் புள்ளையும் பதவிக்கு வறீங்கங்களா"ன்னு அவன அரச மரத்தடியில வெச்சு குமுறு குமுறுன்னு குமுறுனது வேற கத!

 நாங்க திருந்தீட்டோம் - அப்ப நீங்க?


Monday, April 29, 2013

மூன்று விஷயங்கள் : மற்றுமொரு பக்கம் 4


1. அந்த தோழி கல்லூரி பருவத்தை கடந்து ஆறேழு ஆண்டுகள் ஆகி இருக்கும். நேற்று நீயா நானாவை பார்த்து விட்டு, கல்லூரி கால நட்பில் பெண்கள் தன் நண்பனை தொட அனுமதிக்கக்கூடாது என்றார். எனக்கு தலை கிறுகிறுத்துவிட்டது. சிறு பிள்ளை போல குட் டச் பேட் டச் இவருக்கு சொல்லிக்கொடுக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. தொடுதல் என்றால் மாரை பிடித்து பிசைதல் என்று நினைத்திருப்பாரோ? ஏதோ ஒரு பாறையில் ஏறுகையில் கையை பிடித்து தூக்கி விடுதல், காய்ச்சல் அடிக்கும் போது "ஏன் டீ லூசு, டாக்ட்டர்ட்ட போனியா" என்று நெற்றி தொடுதல் எல்லாம் காமத்தில் சேருமென்றுஎன்னால் ஏற்கவே முடியவில்லை.

அந்த வயதிற்கென இருக்கும் இனக்கவர்ச்சியை நான் முழுதாக புறந்தள்ளவில்லை. அதே நேரத்தில், ஆக்சிடென்ட்டை தவிர்க்க ஹெல்மெட் போட்டு செல்வதற்கும், ரோட்டில் செல்லவே மாட்டேன் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. Explicit ஆக உன் சுண்டு விரல் கூட என் கை விரல்களின் மீது கூட படக்கூடாது என ஒரு ஆண் பெண் நட்பு இருப்பது சாத்தியமே இல்லை. நட்பின் அடிப்படையான நம்பிக்கை அங்கு சிதைக்கப்படுகிறதே?

பெற்றோர் பக்கம் நின்று ஒன்றே ஒன்றை சொல்கிறேன் - இப்படி முழுக்க உங்கள் கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கப்படும் பெண்ணை கல்லூரி முடிந்தவுடன் கட்டிக்க்கொடுப்பார்கள் எனில் கூட பரவாயில்லை. ஆனால், முழுக்க கட்டுப்பாட்டில் இருந்து விட்டு, வேலைக்கு செல்லும் போது முழுக்க சுதந்திரம் கிடைத்தால், அதை சரியாக பயன்படுத்தும் பக்குவம் அவர்களுக்கு இருக்காது. காரணம் நீங்கள் இத்தனை நாள் செய்த Spoon Feeding.

ஒரு வயதிற்கு என நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. பதின்ம வயதில் (Adolescence age) இனக்கவர்ச்சி அதில் ஒன்று. பெற்றோர்களாக நீங்களும் அதை கடந்தே வந்திருப்பீர்கள்.  கைப்பிடித்து வழிகாட்டியாக அந்த வயதில் உதவுதல் சரியாய் இருக்குமே அன்றி, அடைத்து வைத்து 22இல் டான்னு அவளுக்கு/அவனுக்கு பொறுப்பு வந்துரும் அப்ப அவுத்து உட்டுடுவேன் என்பது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். பொறுப்பு ஒரு Continuous process.

2. மேற்சொன்ன காரணிகள் நேராக இட்டுச்செல்வது எங்க பொண்ணு "தப்பா" போயிருமோ என்று. உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், காதலிப்பதை "தப்பு" என சொல்வீர்களே ஆனால், அவர்கள் உங்களை புழுவினும் கீழாகத்தான் பார்ப்பார்கள். என் சாதி சமூகம் தான் எனக்கு முக்கியம் என வெறி பிடித்து அலைபவர்கள் அலையுங்கள்; உங்களை திருத்துவது என் வேலை இல்லை.

  என் பெண்ணுக்கு தேர்ந்தெடுக்க தெரியாது அல்லது உறவினர்களால் சாதியை விட முடியாமல் பிடித்து தொங்குபவர்களுக்கு சொல்கிறேன், உங்கள் மகனுக்கோ மகளுக்கோ காதலிக்க கற்றுக்கொடுங்கள், தன் துணையை தேர்ந்தெடுக்க அவருக்கு உரிமையை கொடுக்கும் முன்னர், அதற்கான பக்குவத்தையும் நீங்களே உருவாக்கிவிடுங்கள்.

உங்கள் உறவினர்களுக்கு, சாதிக்கு நேர்மையாய் இருப்பதை விட, உங்கள் மார்பை தன் கவசமென எண்ணி, நீங்கள் நல்லதைத் தவிர வேறெதுவும் நினைக்க மாட்டீர்கள் என எண்ணி உங்கள் அனுமதி முக்கியமென எண்ணும் உங்கள் பெண்ணுக்கு பிடித்த அப்பாவை வாழ்ந்து பாருங்கள். அதன் சுகமே தனி சார்!

3. கமல் டீடீக்கு முத்தம் கொடுத்தது சரியா?

          ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா, முடியல. இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள். தனி மனித ஒழுக்கம் பேணுபவர்கள் யாரும் மற்றவர்கள் மீது அதை திணிக்க மாட்டார்கள். சொந்த வாழ்க்கையில் தான் ஒழுக்கம் என நம்புவதை கடை பிடிக்க முடியாதவர்களுக்கு "பார், இவனை விட நான் ஒழுக்கமானவன் தான்" என தன் மனதை சமாதானப்படுத்த ஒரு ஆள் தேவைப்படுகிறார். பார்க்கும் எல்லோரையும் குறை கூறி அதன் மூலம் தனது ஒழுக்கமின்மையை போக்கிக்கொள்கிறார்கள் இவர்கள்.

இவர்களுக்கான பதில் இது தான்.


ஏனய்யா, இது தவறென்றால்இதுவும் தவறா?

மகள்களை பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று! - தங்க மீன்கள்.

Saturday, April 27, 2013

இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்கல!

        
                          படுக்கையில் வீழ்வதற்கும் உறக்கம் நம்மை ஆட்கொள்வற்கும் இடைப்பட்ட நேரத்தில் மனித மனம்  நிகழ்த்திவிடும் பயணம் அசாத்தியமானது. படுத்தவுடன் உறங்கிவிடுபவர்கள்  இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். சில இரவுகள் ஏதோ ஒரு பாடலினாலோ, பேருந்தில் ஒரு நொடி கவனித்த பெண் பழைய காதலி சாயலில் இருந்ததினாலோ என ஏதோ ஒரு காரணத்திற்காக உறக்கமில்லாமல் கடந்ததும் உண்டு. நேற்றைய இரவு என் உறக்கத்தை கலைத்துப் போட்டது நண்பர் @raGuCயின் ஒற்றை ட்வீட்.

அதற்கான என் பதிகளும் அவரது ட்விட்லாங்கரும் :
http://t.co/gWBMpsX4xx

           ட்வீட்டின் சாரத்தை கவனித்தவர்களுகும், ரகுவை அறிந்தவர்களுக்கும் நன்றாக புரியும். அந்த ட்வீட்டின் பின்னால் இருப்பது விரக்தி. "யாமர்க்கும் குடியல்லோம்" என பயோ வைத்திருக்கும் ஒருவர், "சாதியை பிடித்துக்கொள்ளுங்கள் இல்லையேல் அழிக்கப்படுவீர்கள்" என கீச்சுவது, எனக்கு எதைஎதையோ நினைவூட்டிவிட்டது.


           
                 மனித குல வரலாற்றின் ஏதேதோ பாகங்கள் சிதறல்களாய் என்னைச் சுற்றி வட்டமிட்டன. ஈழத்தின் வரலாறு, இன்று சரணடைந்து வாழ வழியற்று பாலியல் தொழில் செய்யும் சகோதரிகளின் கதை, எரியும் பனிக்காட்டில் மனைவியையே கூட்டிக்கொடுத்து பிழைக்க வேண்டிய மக்களின் நிலை என அறுந்தறுந்து ஏதேதோ நினைவுகள்.   நானறிந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நண்பர்களின் முகமும், தோழிகளின் அழுகையும் மேலும் உறக்கம் கலைத்து மனதை பிசைந்தன. என் வீடு கொஞ்சம் வித்தியாசமானது, அம்மா அப்பாவிற்கு நிச்சியிக்கப்பட்ட திருமணமெனினும், அவர்கள் இருவரும் ஜாதி மீது பற்று அற்றவர்கள். கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிக்கும் பருவத்திலேயே ஜாதிய விழுமியங்கள் குறித்தான கருத்தாக்கம் எனக்கும் தெளிவாக உருவானது. சாதிய கட்டமைப்பு இன்றைய நிலையில் தேவையில்லை என்பதே அன்று முதல் இன்று வரை எனது எண்ணமாக இருந்தது, இருக்கிறது.                          என் அம்மா ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை. நம்புங்கள், அங்கு புதிதாக ஆசிரியையாய் வந்த ஒரு Scheduled Caste வகுப்பை சேர்ந்த ஆசிரியை உபயோப்படுத்தியதை (டீ க்ளாஸ், தட்டு, இன்ன பிற) மற்ற ஆசிரியைகள் தொடமாட்டார்கள். இத்தனைக்கும் இது தென்னகத்தில் அல்ல, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள .பள்ளி ஒன்றில். அதன் பிறகு அவர்களிடம் பேசி, மேலதிகாரியிடம் புகார் அளிக்கப்படும் என மிரட்டி, கொஞ்சம் சகஜமாக இருக்கிறது நிலைமை இப்போது. தோழி ஒருத்தியின் பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள். அப்பா தலித், பெண் கொங்கு சமூத்தின் முக்கிய சாதி. சந்தேகமே இல்லாமல் ஏகப்பட்ட பிரச்சனைகள்.  தற்போது அவளுக்கு இருபது வயது, ஆறு வயதில் மேல் சாதி வீட்டினரின் சட்டியை தொட்டதற்காய் காலில் போடப்பட்ட சூட்டின் வலி இன்னமும் அவள் கண்ணீரில் வழிகிறது.                          கிராமம், நகரம் என எந்தப்பாகுபாடுமில்லாமல் சாதி தமிழகமெங்கும் கோலோச்சிக் கொண்டு இருக்கிறது. கடந்து பத்தாண்டுகளில் அதன் வேகம் பன்மடங்கு பெருகி இருக்கிறது. பரமக்குடி, தருமபுரி, மரக்கானம் என சமீபத்திய நிகழ்வுகள் பெரும் அச்சத்தை தருகின்றன. கிராமங்களில் சாதி வெளிப்படையாக பேசப்பட்டாலும், நகரங்களில் அந்நிலை இல்லாமல் இருந்தது. தற்போது நகரங்களிலும் சாதியை வெளிப்படையாக பேசக்கூடிய சூழ்நிலை வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். ஜனனி அய்யர், நரேஷ் அய்யர் என பேஷன் பெயர்கள் ஒரு காரணம். ஒரு புறம் ராமதாசு, இன்னொரு புறம் கொங்கு ஈசுவரன் வகையறாக்கள், தேவர் விழாக் கூட்டம் என ஜாதியை மையமிட்ட விழாக்கள் மற்றொரு காரணம்.                          மேற்கண்ட அச்சத்தைத் தான் ரகுவின் கீச்சு பிரதிபலித்தது. இத்தனை நாள் நடத்திய போராட்டங்கள் அத்தனையும் கடந்த சில வருடங்களில் உடைத்தெறியப்பட்டு மீண்டும் நாற்பதுகளுக்கே சென்ற உணர்வை தருகிறது. அவரது தர்க்கங்களை இல்லை என என்னால் புறந்தள்ளிவிட முடியவில்லை. தேவர் ஜெயந்தியையோ, ராமதாசு நடத்திய வன்னியர் கூட்டத்தையோ பார்த்த யாருக்கும் இது தான் தோன்றும். ஏகப்பட்ட இளைஞர்கள் ஆட்டுமந்தைகளைப்போல் அங்கே குவிந்து கிடந்தனர். மதுவோடு சேர்த்து அவர்தம் சாதி பெருமையையும் அவர்களை வெறிகொள்ளச் செய்திருப்பதை கண்கூடாக காண முடிந்தது. ஏதோ காலத்தில் அவர்கள் முன்னோர்கள் நிகழ்த்தியதாக சொல்லப்படும் வீரதீர செயல்கள் தற்போது அவர்களை நிதானமிழக்கச் செய்வதை உணரமுடிகிறது, மதுவை விட ஆபத்தான, அதிக நாள் நிலைக்ககூடிய போதையிது.ஒரு சாதி வெறியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

“சார் கவாஸ்க்கர தெரியுமா?”

“ஓ”


“ரோஹன்?”

“யாரது?”

“அவர் பையன் சார். என்ன பண்றான் தெரியுமா?”

“பிசினஸ்?”

“க்ரிக்கெட். டீம்ல இடம் கெடைக்காம உட்கார்ந்திருக்கான் தெரியுமா சார்? அப்பா பண்ண சாதனைக்கே பையன் உரிமை கொண்டாட முடியாது.”

                          தேவர் பெருமகனார் பண்ண நல்ல விசயங்களுக்கோ, காமாரஜர் ஆற்றிய தொண்டுகளுக்கோ, தீரன் சின்னமலை செய்த வீரசெயல்களுக்கோ அவர்கள் மட்டுமே பொறுப்பு. அவற்றை உரிமை கொண்டாட இத்தேசத்திற்கே உரிமை இல்லை என்னும் போது, சாதியின் பெயரால் அதை சுருக்குவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?                          இது ஒரு புறம் எனில் தலித்துகள் கூட சாதியை வேண்டாம் என ஒதுக்கவில்லை என்றார் ரகு. மிகச்சரி தான். அதிகாரத்துக்கு எதிராய் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுவதை ஜாதி வெறி என்றுவிட முடியாது தான். எனவே தான் விசி ஜாதிக்கட்சி என்பது மிக மேலோட்டமான கருத்தியல் என திரும்பத்திரும்ப பதிவு செய்திருக்கிறேன். ஆனால், இந்த அடையாள அரசியலைத் தாண்டி, விழுப்புரம் கோகிலா சம்பவம் மூலமாக வெளிச்சத்திற்கு வந்தது, தலித்துகளுக்கு உள்ளான சாதி வன்மம்.

                          சமீப காலங்களில், எங்கெங்கிலும் சாதி ஒற்றுமை பலப்படுத்தபடுவது கண்கூடு. தேவர் விழாவும், வன்னியர் சாதி மாநாடும், கொமுக எல்லாம் ஒரு பருக்கை உதாரணம் தான். எப்போதுமே, வேட்பாளர் தேர்வு சாதியை முன்வைத்து நடக்கும் திராவிட அரசியலில் (திமுக, அதிமுக என எந்தக்கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல) ஜாதிக்கு, ஜாதிவெறிக்கு எதிராக ஒரு அரசு செயல்படும் என எதிர்பார்த்தால் நம்மை விட முட்டாள்கள் இருக்கவே முடியாது. அதன் காரணமாகத்தான் பெரியார் போன்ற ஒரு தலைவர் வேண்டும் என்றேன். ஒற்றை போராளி என்ற அர்த்தத்தில் அல்ல, இயக்கம் சார்ந்த பாதுகாப்பு அல்லது ஒருகிணைப்புக்காக.

                          யோசித்துப்பார்த்தால், ரகு சொல்வதைப் போல சாதி கவசம் இல்லாதவர்கள் எல்லாம் அழித்தொழிக்கப்படுவார்கள் என்றே தோன்றுகிறது. என்ன செய்ய? என் சாதியை தூக்கிப்பிடிக்கவா? அக்கொடியை தொடுகையில் கையில் மலம் புரட்டியது போல உணர்வேனே என்ன செய்ய? தாழ்த்தப்பட்ட தோழிகளின் கண்ணீர் என்னை சுட்டெரிக்குமே என்ன செய்ய?

                          “The Longest Yard” என்றோரு படம். சிறை குறித்த ஒரு சுமாரான ஆங்கிலப்படம். ஒரு கால்பந்து வீரன். ஏற்கனவே, பணத்திற்காக  Match Fixingஇல் ஈடுபட்டு இருப்பான் அவன். ஒரு கட்டத்தில், மீண்டும் வேண்டுமென்றே தோற்க வேண்டும் அல்லது, வாழ்க்கை முழுக்க சிறையில் கழிக்க வேண்டும் என்ற நிலையில் பின்னதை தேர்ந்தெடுப்பான் அவன்.                          ஒரு அற்புதமான வசனம். அவனுக்கும் ஏற்கனவே ஒரு போலீஸ் வார்டனை அடித்து அதற்காக தண்டனை காலம் முடிந்து இருபது ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஒருவருக்கும்,
             
“Do you regret for hitting the warden now?”

“No”


“Do you still feel that one shot is worth the 20 years you spent in the closed hell?”

“Worth every second”

                          அவ்வளவே. ஒரே ஒரு அடி. ஒரு பெருமிதம். இருபது வருடங்கள் சிறையில் கழித்தாலும் பராயில்லை என ஒருவருக்கு தோன்றுமா? இது வெறும் சினிமா காட்சி அல்ல. வரலாறு நெடுக இப்பெருமிதத்திற்காகத் தான் ஒவ்வொரு மனிதனும் போராடுகிறான். சாதியை தூக்கிப்பிடிப்பவன் கூட அதைத் தன் பெருமையாகவே பார்க்கிறான். அதில் தான், சில நாய்கள் குளிர் காய்கின்றன.

                           சத்தியமாக என்னால் என் சாதியை தூக்கிப்பிடிக்க முடியாது, எந்த சாதியையும். ஏன் எனில், நான் வளர்ந்தது அப்படி. என் மூளை அப்படி சிந்திப்பதை விட செயலற்றுப்போய்விடவே விரும்பும். அப்படி ஒரு நிலை வந்தால், அப்போராட்டத்தில் நாசமத்துப் போகிறேன் என்றே சொல்வேன். ஆனால், ரகு சொன்னது போல “Surivival of the fittest” கணக்கில் சாதிக்கொடி பிடித்தலை சேர்த்தாகி விட்டதா?? இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறா என்னும் மேம்போக்கான எண்ணம், இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்கல? என அதை சரியானதாக்கும் நாள் அருகில் தான் இருக்கிறதா? இவ்வெழுத்தும் பேச்சும் வெறும் வெளிவேஷமென நம் ஒவ்வொருவர் மனதிலும் சாதி சாக்கடை இன்னமும் இருக்கிறதா? எல்லோரும் மனதிற்கும் ராமதாசு தானா? :-(
ஒரே ஒரு உறுதியை இங்கே எடுக்கிறேன். என் திருமணம் சாதி மறுப்புத்திருமணமாகத்தான் இருக்கும். என் குழந்தை எந்த மதம்/சாதியையும் சார்ந்து வளராது.

கொந்தளிப்பான கடல் போல மனம் அலைகிறது. முக நூலில் பூபதி முருகேஷ் ஒரு பதிவிடுகிறார். நீங்கள் என்ன சொன்னாலும் என் சமூகத்தை வெறுத்தொதுக்க முடியவில்லை என்ற ரீதியில். இத்தனைக்கும் நான் பார்த்த வரையில் பொது வெளியில் சாதி பற்றி அதிகமாக வெறிகொள்ளாதவர் அவர். அப்படியெனில் ரகு சொன்னது தான் வருங்காலமா? அனுபவஸ்த நண்பர்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். ஏதோ, சினிமா விமர்சனங்களையும், நகைச்சுவையையும் மட்டும் எழுதி இந்த வலைமனையை வைத்திருக்க விரும்பவில்லை.எழுத்து மட்டும் தானா என்பவர்களுக்கு, நான் என்ன செய்கிறேன் என நண்பர்கள் அறிவார்கள், புகைப்படம் எடுத்து இணையதளங்களில் பகிர்ந்து யாரையும் நம்பவைக்கவேண்டிய அவசியம் இல்லை! சாதிவெறி சார்ந்த கருத்துக்களுக்கு எதிர்காலத்தில் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்க முடியாமல் போகும் என தோன்றும் போது, வலைமனையை மூடிவிட்டு, என் வாழ்க்கையை மட்டுமாது என் கொள்கைப்படி வாழ்ந்துவிடுவேன்.

இங்கு மூச்சுவிடுவதே எமக்கு போராட்டம் தான். இங்கு யாவரும் போராளிகள் தான்!

                          மண்டியிட்டு வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று உயிர்விடுதலே மேல்!