Flipkart

Amazon

Amazon

Tuesday, January 29, 2013

அனுபவம் : திருப்பூர் புத்தக கண்காட்சி


               புத்தகம் என்ற வார்த்தையை பிரித்தெழுதச்சொன்னால் புது அகம் என்றே பிரிப்பேன் நான்நண்பர் வேதாளம் ஒரு முறை அவருக்கு மிகப்பிடித்த கீச்சுகளில் ஒன்றாகபுத்தகங்கள் புரட்டுகின்றன, நம்மைஎன்ற கீச்சை குறிப்பிட்டார். மனதிற்கு அவ்வளவு நெருக்கமானவை புத்தகங்கள். ஒரு வாசிப்பனுபவம் தரும் சுகம், ஒரு அனாதாமதேய பயணம் தரும் சுகத்தை ஒத்தது. யோசித்து பாருங்கள், அரூவமாக ஒரு பயணம், பிறிதொருவரின் வாழ்க்கையினூடே, அவர்களின் அனுபவங்களினூடே, அவர்களின் சுகதுக்களினூடே, அவர்களின் அழுகைனூடே ஒரு பயணம். யாரோ ஒருவராக, அடையளமற்றவராக பயணிப்பது சுகம். புத்தகங்கள் வாயிலாக நாம் வாழ்வை ரசமாக தரிசிக்க முடியும்.

             மூன்று நாட்கள் கொடைக்கானல் சுற்றுலா முடிந்து, இன்று தான் திருப்பூர் புத்தக திருவிழா செல்லும் பேரு வாய்த்தது. ஐந்தரை மணி வாக்கில் உள்ளே நுழைந்தேன். ஆரம்பம் தொட்டே புத்தகங்கள் என்னை கேலி செய்து கொண்டே இருந்தது போல பிரமை தட்டியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. புத்தகங்களை வாங்கும் போது முதலில் விலையை தேடும் அனுபவம் நிறைய வலி தரக்கூடியது. விலைக்காக ஒரு நூலை புறக்கணித்தல் அவ்வளவு எளிதானதல்ல. ஒரு குவளை நீரை இரு மான்கள் குடிக்க நினைத்தது போல, இரண்டு புத்தகங்களில் ஒன்றை எடுக்க சொன்னால் மனது வெறுமனே என்னை முறைக்கிறது. இன்று வாங்க வேண்டிய புத்தகங்கள் குறித்து ஒரு கணக்கெடுக்கத்தான் வந்திருந்தேன் என்பதால், மனதுக்குள் புத்தகங்களை வரிசைப்படித்தியபடியே நடந்தேன்.

                   காவல் கோட்டம் (சாகித்திய அகாதெமி ஸ்டாலில் குறைந்த விலையில் கிடைக்கிறது), கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை, ஜானகிராமனின் மோக முள், பா.ராவின் டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம், எஸ்.ராவின் புத்தனாவது சுலபம், ஆலீஸின் அற்புத உலகம், ஆதலினால் உட்பட சில புத்தகங்கள், கி.ராவின் புத்தகங்களில் நான்கு, அழகிய பெரியவனின் சமீபத்திய நூல்கள், ஜெமோவின் அனல்காற்று, விஷ்ணுபுரம், கொற்றவை, பின்தொடரும் நிழலின் குரல், ஜே.கேவின் நூல்கள் இரண்டு, சுந்தர ராமசாமியின் நூல்கள், .முத்து கிருஷ்ணனின்அப்சலை தூக்கிலிடாதே” (அருந்ததி ராய் எழுதியதன் மொழிபெயர்ப்பு), மலம் தோய்ந்த மானுடம், கூடங்குளம் பற்றிய ஒரு நூல், பிரமிளின் மறு பதிப்புகள், வண்ண நிலவனின் மறக்க முடியாத மனிதர்கள், லா..ராவின் நூல்கள் சில, கலைஞரின் நெஞ்சுக்கு நீதி, யாரோ ஒருவர் எழுதிய அடியாள் என்ற நூல், அசோகமித்திரனின் சில நாவல்கள், சாருவின் எக்சைல், எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், காமரூப கதைகள், ஜீரோ டிகிரி, என் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதாவின் நூல்களுள் நான் படிக்காதவை என பட்டியலின் நீளம் பெரிதாகிக்கொண்டே போனது. (இதைத்தவிர சில நூல்கள் மனதில் குறித்தவை, பெயர் மறந்துவிட்டது) இதைத்தவிர அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி, லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் (War and peace) சிட்னி ஷெல்டன், அகதா கிறிஸ்டி, ஜெஃப்ரி ஆர்சர் எழுதிய சில நூல்களை குறித்து தொலைத்துவிட்டேன். மொத்தம் கணக்குப்படி பதினோறாயிரத்தை தாண்டி விட்டது. இதுவும் கூட நிறைய குறைத்தலுக்கு பின்னால் தான். நண்பர்கள் சிலர் புத்தகம் பகிர்வதாக சொல்லியுள்ளதால், அவர்களோடு கலந்தாலோசித்த பின் இன்னமும் குறையலாம். கிழக்கில் அரவிந்தன் நீலகண்டன் விஷம் கக்கியிருக்கும் கம்யூனிசம் குறித்த நூல் இருந்தது வாங்கலாமா வேண்டாமா என யோசித்தபடி இருக்கிறேன்.

            
காலச்சுவடு பதிப்பகத்தை மேய்ந்து கொண்டிருந்த போது, உங்கள் பெயரென்ன என ஒருவர் கேட்டார். , எங்கேயோ பார்த்த முகம் என அவதானப்பதற்குள் என் பெயரைச்சொல்லி தான் தான் அரசு என அறிமுகப்படுத்திக்கொண்டார். ஏற்கனவே, இவரது புகைப்படத்தை பார்த்து தொலைபேசியிலும் அளவளாவி இருக்கிறேன் எனினும்நேரில் இன்னமும் இளமையாக தோன்றுகிறார். இவரை தம்பி என விளிப்பதா இல்லை அண்ணனென்பதா என ஒரு கணம் குழம்பிப்போனேன். இவரோடு பதிவர் சிவா அண்ணனும், லெனினும் (கீழே இருக்கும் வீடியோவில் நம் ராஜநாயஹம் சாரை பேட்டி கண்டவர்) உடனிருந்தார். புத்தகங்கள் குறித்தும் எதிலிருந்து இலக்கியத்தை தொடங்கலாம் என்றும் வழிகாட்டினார்கள். ஒவ்வொருவரும் ஒரு நூலகம் நடத்துமளவு புத்தகம் குவித்துள்ளவர்கள். மணல் கடிகை, மோக முள் ஆகியற்றை வாங்குமாறு அண்ணன் பரிந்துரைத்தார். (ஏற்கனவே லிஸ்டில் இருந்ததை அவரிடம் நான் சொல்லவில்லை). அண்ணன் பரிந்துரைத்த ஜேஜே சில குறிப்புகளை ( நீண்ட நாட்களாக படிக்க நினைத்த நூல்) ஒரு பதிவர் எனக்கு ஓசியில் தருவதாக சொல்லி இழுத்தடித்த கதையை இங்கே நினைவு கூர்கிறேன் (ஏனுங்க உங்களுக்குத்தான் J).

   நான் பார்த்த வரை பெரும்பாலான கூட்டம், சமையல் செய்யும் நூல்கள், ஜோதிட நூல்கள் என ரயிலில் விற்கக்கூடிய புத்தகங்களையே அதிகம் மொய்த்தது. இதை விட அதிக கூட்டம் டெல்லி அப்பளத்துக்கும், பஞ்சு மிட்டாய்க்கும் தான் அலை மோதியது. நிறைய நல்ல இலக்கிய நூல்களை வாங்க ஆளிலில்லாது போல ஒரு தோற்றம். எல்லா ஸ்டால்களிலும் நன்றாகவே புத்தகம் அடுக்கி இருந்தார்கள், உயிர்மையைத்தவிர. உயிர்மையில் நூல்களை தேட வேண்டி இருந்தது.

சாகித்திய அகாதெமி ஸ்டாலில் பல நூல்கள் சகாய விலையில் கிடைத்தது, மனதுக்கு ஆறுதலளித்தது. சேர்தளம் நண்பர்கள் இம்முறை ஒரு ஸ்டால் அமைத்திருந்தார்கள்.



இன்னமும் காத்திருக்கின்றன புத்தகங்கள். வாங்கிவந்து மறுபடியும் எழுதுகிறேன்.  
          
Verdict : திருப்பூர் சுற்று வட்டாரங்களில் இருப்பின் தவறவிடாமல் வாருங்கள். புத்தகங்கள் நம்மை தேர்ந்தெடுக்கட்டும்!

Sunday, January 20, 2013

ஒரு முத்தமும் சில பதில்களும் : ஞானியின் ஓ பக்கங்கள் கட்டுரைக்கான எதிர்வினை


:
             சில நாட்களுக்கு முன்பு ஞானி தனது முகநூல்பக்கத்தில் கருத்தொன்றை பதிந்திருந்தார். அதற்கு கீழே இந்த கமெண்ட்டை இட்டு இருந்தேன். புத்தக கண்காட்சி அது இதுவென பிசியாக இருப்பதால், அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை போல. இருக்கட்டும். இதன் தொடர்ச்சியாக பதிவர்கள் டைனோ பாய் (Dyno Buoy – கூகுள் ப்ளஸ்ஸில் இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது) ஞானி பக்கத்தில் ஒரு போஸ்ட் இட்டிருந்தார். ஞானியும் “ஓ பக்கங்களில்” முத்தமும் கேள்வியும் என எழுதி இருந்தார். அப்பத்திக்கான எதிர்வினையே இக்கட்டுரை.

       ஜெமோவை முன்னிறுத்தி ராதாவை பார்த்தும், மணிரத்னத்தை பார்த்தும் நான் கேட்கிறேன் “இது ‘அறமா’குமா” என பொங்கி இருந்தார் ஞானி. முதலில் பதினைந்து வயது பெண் எப்படிப்பட்ட பாத்திரங்களில் நடிக்கலாம் என்ற கேள்வியை எல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு பார்த்தால், தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகிகளை அறிமுகப்படுத்துவது வெறும் உடற்கூறை முன்னிறுத்தித்தான் என்பதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.

          அடுத்து துளசி முத்த விவகாரம். கதைக்கு தேவையாக இருக்கும் பட்சத்தில், ஒரு படைப்பாளியின் கோணத்தில் பதினைந்து வயதியில் அச்சிறுமியை அப்படி முத்தமிட்டு நடிக்க வைத்ததில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் உடன்பாடு இருக்கும் பட்சத்தில் யாதொரும் தவறும் இல்லை. உலகப்படங்கள் பலவற்றில் இது நடந்து கொண்டு தான் உள்ளது. ஆனால், மனசாட்சி இல்லாமல், உலகப்படங்களை தமிழ் சினிமாவோடு ஒப்பிடும் சாருவின் அறம் என்னிடம் இல்லை. ஆனால், தமிழ் சினிமாவில் கதை இருக்கும் படங்களே வரவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. கதையோடு அல்லது திரைக்கதையோடு படம் எடுக்கும் வெகு சிலரின் மணிரத்னமும் ஒருவர். எனவே, படத்தை பார்க்காமல், கதை என்னவென்றே தெரியாமல், இதை எதிர்க்க யாருக்கும் உரிமை இல்லை. பதினைந்து வயதில் காதல் வருவது (அது காதலோ, Infatuationனோ) வருவது இயல்பு. அதை காட்சிப்படுத்துவது ஒரு கலைஞனின் உரிமை. ஒரு படைப்பாளியின் கையை ஏற்கனவே நமது சென்சார் கட்டிப்போடும் நிலையில் இன்னமும் இவ்வாறெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்தால், நல்ல படங்களே எடுக்க முடியாது.

        இதை விட முக்கியமாக எதிர்க்கப்பட வேண்டியது "Axe" விளம்பரம் போன்ற எண்ண்ற்ற விளம்பரங்களே, அவ்விளரம்பரங்களில் உள்ள ஆடையோ ஆபாசமோ அல்ல அவற்றை நான் எதிர்க்க காரணம். மாறாக, அவை பெண்ணை வெறும் நறுமணத்திற்கோ வேறு எதற்கோ மயங்கும் பொருளாக சித்தரிப்பதும் தான். மிக முக்கியமாக, நம் விடலைகளுக்கு சினிமாவையும் வாழ்க்கையையும் வேறுபடுத்தி பார்க்க கற்றுக்கொடுக்க வேண்டும். கணினி திரை இல்லாத காலகட்டங்களில் கூட மஞ்சள் புத்தகங்கள் மூலம் ரகசியமாய் அறிந்து கொண்ட பார்னோ, இன்று கணினிக்குள்ளும், கைப்பேசிக்குள்ளும் சுருங்கி விட்டது. ஒரு ஆய்வின் படி, சினிமாக்களை தியேட்டரில் சென்று பார்க்கும் வசதியுடைய எல்லார் வீட்டு சிறுவர்களும் (90 சதவீதம்) ஏதோ ஒரு வகையில் ஸ்மார்ட் போனோ கணினியோ பயன்படுத்துகிறார்கள். எனவே, இவர்கள் வெகுஜன படத்தில் உள்ள பாடல்களை, ஆபாசத்தை பார்த்து தான் கெட்டுப்போகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன். அதை அவர்கள் எதோ ஒரு வெப்சைட்டில் பார்த்துக்கொண்டு விடுவார்கள்.  நான் சொல்வதைக்கூட விடுங்கள், ஒரு பதினைந்து வயது சிறுவனிடம் போய் பேசிப்பாருங்கள்.

ஆனால், அந்த சித்தரிப்பு முக்கியமானது. உதாரணமாக, அந்த முத்தம் கொடுக்க அந்த பெண்ணின் ஒப்புதல் தேவையில்லை என காட்சிப்படுத்தப்பட்டிருந்தால், அது அவர்கள் மனதில் பதிந்து விடுகிறது. இதே போலத்தான், சிகரெட்டை ஹீரோ பிடிப்பதும், தண்ணீ அடிப்பதம் ஹீரோயிஸ செயலாக மனதில் நிலைத்து விடுகிறது. 

         மீண்டும் சொல்கிறேன். என் கருத்தை திரித்து புரிந்து கொள்ளாதீர்கள். பெண்களை எப்படி சித்தரிக்கிறார்கள் என்பது மிக முக்கியம். எதிர்க்க வேண்டும் எனில் “இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள” என்றாரே எம்.ஜி.ஆர் அதையல்லவா முதலில் எதிர்க்க வேண்டும்? ஆபாச சினிமா என்பது சதை இருக்கும் எல்லா சினிமாக்களும் அல்ல. ஒரு பாலியல் வக்கிரத்தை சித்தரிக்கும் படைப்பாளியோ அல்லது ஒரு பதின் வயது காதலை காட்சிப்படுத்தும் படைப்பாளியோ அதை வேறு எப்படித்தான் காட்சிப்படுத்த முடியும்?

 டெல்லி பாலியல் வன்முறையைக்கூட வைத்து சம்பாதிக்க சினிமா எடுக்கிறார்கள், எத்தனையோ பி க்ரேட் படங்களில் சிறு வயது பெண்கள் நடிக்கிறார்கள். அதை எல்லாம் விட்டு விட்டு "கடல்" படத்தில் எதற்கான காட்சி அது என்று கூட தெரியாமலிருக்கும் போது ஞானி பொங்குவது ஏன் என்று புரியவில்லை.. (கதைக்கு தேவையோ இல்லையோ, அப்படி நடிக்கக்கூடாது என்பாறேயானால் அக்கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை).

           இதன் ஒரு கமெண்ட்டில் “அலைபாயுதே” கூட ஆபாச படம், தவறான எண்ணத்தை விதைக்கிறது என்று ஒருவர் கமெண்ட்டி இருந்தார். அதை 120 ஷேர் செய்தவர்களின் மன நிலை என்னவென்பதை யூகிக்க முடிந்தது!

Tuesday, January 8, 2013

வன்புணர்வு - உடை - சமூக வக்கிரம்


                  இந்திய/தமிழ்ச் சூழலில் இக்கட்டுரை எழுப்பப்போகும் எனக்கான எதிர்வினைகளை நங்கு உணர்ந்தே இதை எழுத தொடங்குகிறேன். நிறைய எழுத இருந்தாலும், நேர பற்றாக்குறையால் பெரும்பாலான சொற்கள் எழுதாமலேயே கிடக்கின்றன. அதற்கு முன்னதாக மீனா கந்தாசாமி அவுட்லுக்கில் எழுதிய இக்கட்டுரையையும், நீண்ட நாள் கழித்து நான் எந்த விவாதமுமின்றி ஒத்துக்கொள்ளும் வகையில் ஜெமோ எழுதிய இதையும் படித்து விடுங்களேன்.

நண்பர் @Alexxious ஒரு கீச்சிட்டிருந்தார்.

“வன்புணர்வுக்கு காரணம் உடை என்கிறவன் ஆண் குறியால் சிந்திக்கிறான் !!”

               நைச்சியமானதோரு முள் குத்தல். இந்த சமூகமும் அதன் மனிதர்களும் வெளித்தோற்றத்தில் மாறிய அளவுக்கு உட்புறம் மாறவில்லை. அழுக்கு பிடித்த அசிங்கமான கருத்தியலை அனைத்து மட்டத்திலும் நாம் காண முடிகிறது.


              இரவு பதினோரு மணிக்கு ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிரே விருட்டென கடந்த  ஒரு ஸ்கூட்டியை “தேவடியா, எங்க போய் சுத்தீட்டு வருதோ” என்றான் நண்பன் ஒருவன். அவள் யாரென்று சொல்ல யார் அவனுக்கு உரிமை அளித்தது? அவள் மருத்துவமனையில் இருக்கும் அவள் தாயாரைக்காண செல்லலாம், குடும்ப சூழ்நிலை காரணமாக கால் சென்டரிலோ வேறு எங்கோ வேலைக்கு செல்லலாம், இவ்வளவு ஏன், அவள் பப்பிற்கு கூட செல்லட்டுமே. அவளைத் தேவடியாளாக்க உங்களுக்கோ எனக்கோ என்ன உரிமை இருக்கிறது?
வேசிகள் குறித்த குறுங்கவிதை தொகுப்பு புத்தகமொன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் ஒரு சின்ன ஹைக்கூ இது.


“எங்களை விட நீங்கள் ஒன்றும் மோசமில்லை தான்
 நாங்கள் உடம்பை விற்கிறோம்
 நீங்கள் ஆன்மாவை”

            பெண் என்பவள் பலவித கட்டுப்பாடுகளுக்கு ஆட்பட்டவள் என்ற மன நிலை, சிறு வயது முதலே புகட்டப்பட்டு வரும் சமூகமிது. இதில் எந்த பேதமுமில்லை. பல பெண்களே, இந்த கட்டுரையின் பின்னூட்டத்தில் நாங்கள் எப்படி ஆண்களுக்கு இணையாக முடியும் என்று கேட்டாலும் கேட்பார்கள். அப்படித்தான் நாம் வளர்க்கப்பட்டு இருக்கிறோம்.


            பெண்களே பெண்களுக்கு எதிரி என்ற கூற்றை மெய்பிப்பது போல, எந்ததாயும் தன் பெண்ணை ஒரு “ஆணாக” வளர்க்க முன்வருவது இல்லை. அடக்கம், ஒழுக்கம், கற்பு என்ற பெயரில் பல ஆண்டுகளாக பெண்கள் சுரண்டப்பட்டு வருகிறார்கள். எத்தனை பேர் ஆண்களின் கற்பு குறித்து விலாவாரியாக பேசுகிறார்கள்?

            இவன் உயர்ந்த சாதிக்காரன் இவன் இவளை கற்பழித்திருக்க மாட்டான் என உச்ச நீதிமன்றமே குற்றவாளிகளை விடுதலை செய்கிறது (பன்வாரி தேவி வழக்கு). பல ஆண்டுகளாக பெண்கள் சுரண்டப்படுபவர்களாவே இருக்கிறார்கள், அதுவும் ஜாதி ரீதியில் இது மிகக்கொடுமையானது. ஆனால், இக்கட்டுரை ஜாதி ரீதியை தவிர்த்து விட்டு இன்ன பிற வகைகளை பற்றியே பேசுகிறது. ஏன் எனில், கணவன், அப்பா என பலரால் ஆதிக்கத்துக்கு ஆளாக்கப்படும் படித்த பெண்களுக்கே கூட அது ஆதிக்கம் என்றே புரிவதில்லை.


            ஒரு பக்கம் “பெண்கள் என்றால் துணி துவைச்சு போட்டு, ஆணுக்கு பணிவிடை செய்யணுமின்னு” ஆர் எஸ் எஸ் தலைவரும், இன்னொரு பக்கம் மாணவி அண்ணான்னு சொல்லி கதறி இருந்தால் விட்டு இருப்பார்கள், அவள் மீதும் தப்பு இருக்குன்னு ஒரு கிறுக்கு புடிச்ச சாமியாரும் சொல்லும் போது எந்த மதமும் பெண்கள் மீதான அடக்குமுறையில் இருந்து சளைத்ததல்லன்னு தெளிவாகவே அறிய முடியும். மதுரை ஆதினம், எல்லா பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்றதும், பாண்டிச்சேரி அரசு போட்ட சட்டங்களும் மொத்தமாக அறிவார்ந்த ஒரு சமூகத்தை குழியில் போட்டு புதைக்கக்கூடியவை.


நேரமின்மையால் சொல்ல வந்த கேள்வி பதில்களை பட்டியலிட்டு விடுகிறேன். பின்னூட்டத்தில் வந்து காறி உமிழும் அறிவு ஜீவிக்களுக்கு பதில் அளிக்கப்படும்.


ஏன் பாலியல் ரீதியான சுரண்டல்கள் பல தளத்தில் நடக்கும் போது, ஆடை கட்டுப்பாடு பற்றி அதிகம் எழுத வேண்டும்?

             ஏன் எனில் இங்கு இருப்பவர்கள் எல்லோரும் அறிவு ஜீவி பட்டத்தை தலையில் சுமப்பவர்கள். ஒரு அறிவார்ந்த சமூகத்தின் அடிப்படை அறிவு, ஆணும் பெண்ணும் எப்போதும் சமம் என்பது. இத்தகைய அறிவு ஜீவிக்களே, பெண்களுக்கு கட்டுப்பாடு (ஆடையாகட்டும் எதாகட்டும்) விதிக்கலாம் என்ற எண்ணத்தில் பேசினால், பாமரர்களுக்கு (??!!) எப்படி விளங்க வைப்பது. குடிப்பது தவறென்றால், யார் குடித்தாலும் தவறு தான், பெண்கள் குடித்தால் அதகத்தவறு என்பவன் கூட இன்னமும் பழமை மன நிலையில் இருப்பவன் தான்.

உங்கள் வீட்டுப்பெண்களுக்கு இப்படித்தான்…?

               என் வீட்டுப்பெண் அம்மா, மனைவி, மகள் என யாராக இருந்தாலும், அவர்கள் உடை விஷயத்தில் என் தலையீடு இருக்காது. அறிவார்ந்த ஒரு மனிதனின் செயல்பாடு இது தான்.

எதார்த்தத்தில் நீங்கள் சொல்வது சாத்தியமா?

                 ஒரு காலத்தில் எதார்த்ததில் சாத்தியமில்லாமல் இருந்த பல விஷயங்கள் இன்று சாத்தியம். இது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் மேலாடை அணிய அனுமதிக்கப்படாத பெண்களில் இருந்து செல்போன் வரை எல்லாவற்றிக்கும் பொருந்தும். மாற்றம் நிச்சயம் நிகழும்,அதை நோக்கிய நகர்வின் வேகம் அதில் பங்கெடுக்கும் நபர்களின் கூட்டுத்தொகையை பொருத்தது.

ஆனால், இன்று மினி ஸ்கர்ட் போட்டு என் பெண்ணை வெளியே அனுப்ப முடியுமா?
         
            இன்று ஒரு பெண்ணை இரவிலோ, அல்லது மினி ஸ்கர்ட் போட்டோ அனுப்ப முடியாது என்ற எதார்த்த நிலையை நானும் ஒப்புக்கொள்கிறேன். இங்கே மிக கவனமாக கவனிக்க வேண்டியது, ஆடை குறித்த விவாதத்தில் இரண்டு வகையினர் ஆடை கட்டுப்பாடு குறித்து பேசுகிறார்கள். முதல் தரப்பினர், ஆடை கட்டுப்பாட்டை ஒரு தற்காலிக நிலைப்பாடாக்கி, சமூக மாற்றத்தை முதன்மையாக கோருகிறார்கள். அவர்கள் குறித்து நமக்கு பிரச்சனை இல்லை. அது தான் நமது கருத்தும். இரண்டாவது தரப்பு, பெண்கள் தனக்கு கீழானவர்கள் என்ற அடி மன பழமைவாத புழுப்பிடித்த சாக்கடையிலிருந்து அள்ளித்தெளிக்கும் முத்துக்கள் தான் பிரச்சனையே!

ஒரு பெண் ஆடை குறைவாக அணிந்தால் Provoke ஆகாதா?

        Slut walk என்று ஒரு போராட்டம் இருக்கிறது தெரியுமா? ஒரு பெண் நிர்வாணமாகவே வந்தாலும் அவளைத்தொட எந்த ஒரு ஆணுக்கும் அனுமதி இல்லை என்ற கருத்தை வலியுறுத்துவது அது. அதை அப்படியே நான் வழி மொழிகிறேன். ஒரு பெண் எப்படி இருந்தாலும், அவள் உங்கள் மனைவியாகவோ, ஏன் வேசியாகவோ இருந்தாலும் கூட வன் புணர்ச்சி செய்ய உங்களுக்கு உரிமையில்லை. அப்படி செய்பவன் ஆணே இல்லை என்ற கருத்தை வளரும் ஆண் தலைமுறையின் மனதில் விதைக்க வேண்டும்.





  ஆடை கட்டுபாடு கற்பழிப்புகளை குறைக்குமே?

     அது ஒரு  தற்காலிக மன நிலை எனில் பிரச்சனை இல்லை என முதலிலேயே சொல்லியாயிற்று, ஆனால், இது கற்பழிப்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் என்பது முட்டாள்தனம். 13 வயது, 5 வயது சிறுமியை எல்லாம் Provoked ஆ வா கற்பழிச்சாங்க??? உங்களை பொறுத்த வரை பெண்களை எல்லாம், "இதப்போட்டுக்க" என உத்தரவிடுவது சுலபம். ஆனால், ஆண்களுக்கு கற்றுத்தருவது கடினம். அதுதானே?

இது ஒரு பெரிய சமூக மாற்றம் தான் ஒத்துக்கறேன். அதுக்காக ஊரெங்கும் கொசு என கொசு வலை போர்த்திக்கொண்டு அலைய முடியாது. கொசு ஒழிப்பு தான் ஒரே வழி.   

       மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இப்போதைய நிலையில் தற்காலிக தீர்வாக ஆடை கட்டுப்பாட்டை முன் வைப்பவதற்கும், ஆர் எஸ் எஸ் ப்ஓல, அவர்களையும் சூழ்நிலையையும் பயன்படுத்தி மீண்டும் பெண்களை வீட்டுக்குள் தள்ளும் முட்டாள்களுக்கும் வேறுபாடு உண்டு.  புரிந்து கொள்ளுங்கள்.