Flipkart

Amazon

Amazon

Saturday, June 15, 2013

ரஜினி : மற்றுமொரு பக்கம் - 7


            வசூல் மன்னன் - சூப்பர் ஸ்டார் - அமிதாப் போன்ற பாலிவுட் நடிகர்களெல்லாம் அப்பாவாக நடிக்கப்போன பின்னரும், தனக்கு மகளாய் நடித்த நடிகைகள் தனக்கு அம்மாவை நடிக்க இன்றும் யூத்தாக நடித்துக்கொண்டிருப்பவர் - தமிழகத்தின் அப்பழுக்கற்ற ஹீரோ என்ற பிம்பம் உடையவர் - வாய்ஸ் உடையவர் - பல்வேறு நாடுகளில் ரசிகர்களைக் கொண்ட - அனைத்து சென்டர்களிலும் ரசிகர்களை கொண்ட நடிகர் - அதற்கும் மேலானவர் - ஆதர்சம் - ரஜினிக்குண்டான பிம்பம் பிரம்மாண்டமானது.

             ரஜினி எப்படி இந்த இடத்தை பிடித்தார்.  எண்பதுகளில் ரஜினி படம் வந்து தான் ரஜினிப்படத்தை தியேட்டரை விட்டு தூக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் எல்லாமே சூப்பர் ஹிட் என சொல்லிவிட முடியாமல் இருந்தது. 1980ஐ எடுத்துக்கொள்வோம். 79இல் வந்த அன்னை ஓர் ஆலயம் சூப்பர் ஹிட். 1980இன் ஆரம்பத்தில் வந்த பில்லா ப்ளாக்பஸ்டர், ஆனால் அதை தொடர்ந்த காலி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி எல்லாம் வந்த வேகத்தில் சுருங்கின, மீண்டும் பொல்லாதவன் ஹிட், முரட்டுக்காளை ஹிட். இங்கே ப்ளாப் ஆன படங்களை மக்கள் நினைவே வைத்துக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

        ஒரு வருடத்திற்கு ரஜினி நாலு ஹிட் கொடுக்கிறார் என்பதே பேச்சு, அவர் எத்தனை நடித்தால் என்ன? ரஜினி மிக வேகமாக பி,சி சென்ட்டர்களின் ஆதர்ச நாயகனாக வளர்ந்து நின்றார். ஏ க்ளாஸ் ரசிகர்கள் அவர் படத்தை இப்போது ரசிக்கத்துவங்கி இருந்தனர். தளபதிக்கு பிறகு ரஜினி க்ராபில் ஏற்றம் தான். இப்போது தான் ரஜினியின் படங்களில் ஒரு சின்ன மாற்றம் வருகிறது. தளபதி, ராபின் ஹுட், உழைப்பாளி என ரஜினி ஏற்று நடித்த பல வேடங்கள் ஏழை வேஷம். தங்களுள் ஒருவராக ரஜினியை கொண்டாட வைத்தது இது தான். நம் மக்கள் சினிமா முட்டாள்கள் இதற்கு வகைதொகையே கிடையாது. எம்.ஜி.ஆர் சாக மாட்டான் என நம்புபவனுக்கும், ரஜினி வாய்ஸ் சரியாய் இருக்கும் என எண்ணுபவனுக்கும், விஜயால் நாடாள முடியும் என நம்புபவனுக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.



             எங்கே விட்டேன், ம்ம்... பாஷா, பாஷாவிற்கு பிறகான படங்களில் ரஜினி பணக்காரனாக நடிக்க ஆரம்பித்தார்.  ஏழைகளால், கூட இருக்கும் துரோகிகளால் (இவர்கள் ஏழையாக அண்டிப்பிழைப்பவர்களாக இருப்பார்கள்) வஞ்சிக்கப்படும் ஹீரோ. முத்து படத்தில் பணக்காரராக இருந்தும் வேலைக்காரனாக, அருணாசலத்திலும் அப்படியே, படையப்பாவிலும் தன் சொத்து மணிவண்ணனால் ஏய்க்கப்படும்.

         ரஜினிக்கு ஏற்கனவே ஒரு இமேஜ் உண்டு. அவரது கேரக்டர்கள் பல நேரம் திருநீறு பூசிக்கொண்டிருக்கும் (பக்தியாம்), பெற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும், அநியாயம் என பொதுபுத்தியில் அமையப்பெற்றிருக்கும் எதையாவது கண்டால் பொங்கும், மற்றபடி பொதுபுத்தியை அப்படியே பின்பற்றும். படையப்பாவில் பாம்பை காப்பாற்றும், சாமி கும்பிடும், திமிர் பிடித்த பெண்ணை விரும்பாத, அம்மா சொன்னால் அதை செய்யும் பையன் (உஷ்ஷ்.... இதெல்லாம்).  பொதுபுத்தியில் நல்ல பையன் என இப்படிப்பட்ட பையங்களைத்தான் சொல்வார்கள்.

        என்பதுகளில் ரஜினியின் ரசிகனாய் இருந்தவர்கள் இப்போது தங்கள் மகன்கள் ரஜினியின் ரசிகனாய் இருப்பதற்கு தடையேதும் நிச்சயம் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் ரஜினி தான் Controversialஆக ஒன்றுமே சொல்லவில்லையே, அரைத்த மாவையே தானே அரைத்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே இந்தச் சமூகம் எப்படி உள்ளதோ ஆணாதிக்கம் (பொம்பள பொம்பளையா இருக்கணும் - படையப்பா, மன்னன்), சாதீய இறுக்கங்கள் (எந்தப்படத்திலாவது ரஜினி வேற்று/தாழ்ந்த சாதி பெண்ணை மணப்பதாக குறியீடு இருந்தால் சொல்லுங்கள்), என அத்தனையும் ஏற்றுக்கொண்டும் சிபிட்சத்தை கடைசியில் தரும் ஒரு பாத்திரமாக இருக்கும் ரஜினியினுடையது.

                           இதெல்லாம் வெறும் குறியீடுகளே. இதெல்லாம் நல்லது தானேப்பா என்றேர்களேயானால் உங்களை வெள்ளந்தியாகவே பார்க்கவேண்டியுள்ளது. இதெல்லாம் சும்மா உல்லுல்லாயி... சிவாஜியில் தமிழ் காலாச்சார் (ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இல்லை) பெண் வேண்டும் என்பார் ரசிநீ (Back sorry Post mordernism) ஸ்ரேயாவை கோவிலில் பார்ப்பார். நல்ல விஷயம் என்றார் நண்பர். வாருய்யா என அமர்த்தி ஒரு கூடை சன்லைட் பாட்டை ஸ்லோ மோஷனின் ஓடவிட்டேன், வெள்ளையாய் ஒரு திராவகம் ஒழுக (வாயிலிருந்தய்யா) ரசித்து பார்த்தார். அப்பறம் திரும்பி  இளித்தார். ரஜினி சங்கர் போன்றவர்களின் டெம்ப்ளேட் ரொம்ப எளிது, இச்சமூகத்தில் எதையும் சீர்திருத்தாக, எந்த கருத்தையும் ஆழமாய் முன் வைக்காத, ஆனால் அதே நேரத்தில் சமூகத்தை சுபிட்சமடைய வைக்கும் ஒரு ஹீரோ + அடக்க ஒடுக்கமான அவன் காதலி பாடலில் மட்டும் கவர்ச்சி காட்டுவாள் + நினைத்ததையே சொல்லும் அம்மா, அவள் பேச்சை கேட்டு நடக்கும் நல்ல பையன் ஹீரோ.

             இது தான் ரஜினியின் வெற்றி பார்முலா. இச்சமூகத்தின் மொத்த Envisageஐ பட ஹீரோ செய்வார். வெல்வார். ரஜினிக்கு ரசிகர்கள் குவிந்தது இப்படித்தான். இதே காலகட்டத்தில் கமல் பரீச்சை செய்தார், ரிஸ்க் எடுத்தார். அவரை ஏன் பலரும் பரிந்துரைப்பதில்லை? உங்களுக்கே தெரியும் இருப்பினும் விரிவாக அலசலாம். அடுத்த மற்றுமொரு பக்கத்தில் :)

       

Friday, June 14, 2013

இந்திய தேசியமும் கிரிக்கெட்டும் ஐபிஎல்லும்!

 முதலில் இப்படி ஒரு கட்டுரை போட்டியை அறிவித்தமைக்காக வினையூக்கிக்கு நன்றி. மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழ் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இது நிச்சயம் ஒரு உண்ணாவிரதத்தை முடிக்கும் பழச்சாறு போன்றது  :)

தமிழ் சொற்களின் முக்கியத்துவம், போட்டி விதிமுறை எல்லாம் தனித்தழின் பயன்பாட்டை வலியுறுத்தினாலும், இவை அனைத்தும்  கேள்வியிலேயே உள்ளதாலும், பொதுப்பயன்பாடு காரணமாகவும் மட்டைப்பந்து கிரிக்கெட் என்றே இக்கட்டுரையில் சுட்டப்படுகிறது.

           ஆங்கிலேயேர்கள்  தொடங்கி விட்டுச்சென்ற எல்லாவற்றையுமே நாம் இன்னமும் கொண்டாடிக்கொண்டு தான் இருக்கிறோம். அவற்றுள் முதன்மையானது ஆங்கிலேயே விளையாட்டான கிரிக்கெட். கிரிக்கெட்டுக்கும் இந்திய தேசியத்துக்கும் ஒரு பிணைப்பு உருவாகி வெகு காலமாகி விட்டது. இத்தொடர்பை காலத்தின் துணை கொண்டு இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம்.

           சுதந்திரம் கிடைத்த, அல்லது அதற்கு சற்று முந்தைய காலங்களில் இந்தியாவை பொறுத்த வரையில் கிரிக்கெட் ஒரு ஆங்கிலேயே விளையாட்டு. ஆனாலும், ஆங்கிலேய அரசில் பணியாற்றிய இந்திய அதிகாரிகளும், நிலச்சுவாந்தாரர்களும் கிரிக்கெட்டை அறிந்து வைத்திருந்தனர். அக்காலகட்டங்களில் கிரிக்கெட்டில் ஆங்கிலேயர்களை வீழ்த்துவது "அவர்கள் விளையாட்டில் அவர்களை தோற்கடிப்பது" என்ற ரீதியில் இந்தியர்களால் கொண்டாடப்பட்டது.

           ஐம்பதுகளில் வெறும் ஆறு நாள் போட்டிகள் (டெஸ்ட்) மட்டுமே இருந்த காரணத்தால், பல்வேறு போட்டிகள் வெற்றி தோல்வி இன்றியே முடிவடைந்தன (Draw). ஆனாலும் தனிப்பட்ட சாதனைகளும், எதிரணியை திணறடித்தலும் வெற்றியாக கொண்டாடப்பட்டது. அக்காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட்டை விட கொண்டாப்பட்ட ஒரு விளையாட்டு ஹாக்கி (Hockey). 1928 முதல் 1956 வரை நடந்த அனைத்து ஒலிம்பிக்கிலும் இந்திய ஹாக்கி அணி, தங்கங்களை குவித்தது.

            இரண்டாவதாக தொடங்கிய கிரிக்கெட் ஊடான புதிய-தேசியவாதம் (Neo-Nationalism) முக்கியமானது, அரசியல் கலந்தது, உலகமயமாக்கலை அடிப்படையாய் கொண்டது, இன்று வரையிலும் நீடிப்பது. இந்த தேசியவாதத்தை புரிந்து கொள்ள நாம் கொஞ்சம் இந்திய அரசியலையும் புரிந்து கொள்ளல் வேண்டும். இந்தியா, பார்ப்பனர்கள் ஆதிக்கம் மிகுந்த ஒரு நாடு. இதற்கான வரலாற்று ரீதியான காரணங்கள் எத்தனையோ உண்டு. சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் பல்வேறு துறைகளின் உயர் பொறுப்புகளில் அமர்ந்த பல்வேறு நபர்கள் பார்ப்பனர்களாகவே இருந்து ஒரு வேளை எதேச்சையானாதாக கூட இருக்கலாம். ஆனால், அவர்கள் தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட நியமனங்களில் பார்ப்பனர்களை நியமித்தது நிச்சயம் ஏதேச்சையானது அல்ல.

             கிரிக்கெட்டை பொறுத்த வரையில் ஆங்கிலேயே அரசில் மேற்தட்டில் இருந்தவர்கள் பார்ப்பனர்கள் என்பதால் பார்ப்பனர்கள் கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டதும் அவ்விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தியதும் இயற்கையானது. சுதந்திரத்திற்கு முன், பம்பாய் பிரசிடென்சி முதல் தர போட்டித்தொடரில் ஆங்கிலேயே, பார்சி, இந்து, முஸ்லீம் அணிகள் மோதும். இந்து  அணியில் அப்போதே பார்ப்பன ஆதிக்கம் காணப்பட்டது.

              இந்த புதிய  தேசியவாதம் எண்பதுகளின் தொடக்கத்தில் அல்லது மத்தியில் பரவத்தொடங்கியதாக பல்வேறு வரலாற்று ஆசியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஒரு மிக முக்கிய காரணம் தொலைக்காட்சி. வானோலியை போல் அல்லாமல் தொலைக்காட்சி தங்களுக்கு வீரர்களோடு மெய்நிகர் (Virtual) நெருக்கத்தை தருவதாக பல்வேறு பார்வையார்கள் அப்போதைய கணக்கெடுப்பொன்றில் தெரிவித்திருந்தனர். தொலைக்காட்சிகளும், வித்தியசமான படக்கோணங்களும் (Camera angles) பார்வையாளர்களை கவர்ந்திருந்தன.

              இந்தச் சூழ்நிலையில், 1983 இல் இந்திய அணி கிரிக்கெட் உலகப்கோப்பையை வென்ற போது, இந்திய ஊடகங்கள் எந்த மொழிப்பாகுபாடும் இல்லாமல் உலகை நாம் வென்றுவிட்டோம், உலகில் நாம் தான் தலைசிறந்தவர்கள் என்ற ரீதியில் கொண்டாடத்துவங்கின. ஒரு குறியீடாக நடிகர் சார்லி வடிவேலுவை தூக்கிக்கொண்டு வெற்றி வெற்றி என நாச்சியப்பன் பாத்திரக்கடைக்கு ஓடுவதை எடுத்துக்கொள்ளவும்.

                இப்போதும் கூட, இந்திய கிரிக்கெட் அணியிலும், ஊடகத்துறையிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலும் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாக இருந்தது ஏதேச்சையாக அமைந்தது என்றே நாம் எடுத்துக்கொள்வோம். இங்கே இருந்து சாதி ரீதியில் எதையும் ஆராயாமல் இந்த புதிய தேசியம் வளர்ந்த விதத்தை பற்றி பார்ர்போம். எந்த ஒரு தேசத்திலும் ஊடகங்களின் பங்கு முக்கியமானது.  அவை காட்சி ஊடகங்கள் ஆகட்டும், அல்லது பத்திரிக்கை ஊடகம் ஆகட்டும், மக்களின் மன நிலையை கட்டமைப்பதில் ஊடகங்கள் பெரும் பங்கு ஆற்றுகின்றன. திரும்பத்திரும்ப சொல்லப்படும் எதுவும் நம்பப்படும் என்பதற்கேற்ப கிரிக்கெட் இந்தியாவின் மிகமுக்கியமான விளையாட்டாக, அதையும் தாண்டி தேசிய கவுரமாக முன்னிறுத்தப்பட்டது. அது மக்களால் மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ளப்பட்டது.

                 இக்காலகட்டத்தில் பதவிவேற்ற ராஜீவ் காந்தியும் ஒரு கிரிக்கெட் பிரியர். இவரும் இந்தியா கிரிக்கெட்டில் வெல்வது இந்தியாவின் கவுரவம் சம்மந்தப்பட்டது என சொல்லிவைக்க அம்மாயை மெல்ல மெல்ல கட்டமைக்கபட்டது. மற்ற விளையாட்டுக்களை பின் தள்ளி "சோம்பேறிகளின் விளையாட்டு" என ஒரு காலத்தில் விளையாட்டு ஆசியர்களால் ஒதுக்கப்பட்ட கிரிக்கெட் முன்னிறுத்தப்பட்டது. இன்றளவும் இந்தியா 83 இல் உலகப்கோப்பையை வென்றது பாடமாக இருக்கிறதே ஒழிய , ஹாக்கியில் நாம் குவித்த ஆரம்ப கால ஒலிம்பிக் மெடல்கள் குறித்து எந்தப்பாடமும் இல்லை. சச்சின் குறித்தும் நம் பாட நூல்களில் இருப்பது நாம் அறிந்ததே. இந்தியாவின் கடைசி ஹாக்கி தங்கப்பதக்கம் 1980 ஒலிம்ப்பிக்கில் வாங்கியது தான். அதன் பிறகு துவங்கிய கிரிக்கெட் மோகம் இப்போதும் தொடர்கிறது.

            இதே நேரத்தில் பெருநிறுவனங்கள் (Corporates) கிரிக்கெட் சந்தைக்குள் நுழைந்தன. பெரும் விளம்பரங்களின் மூலம் கிரிக்கெட் வீரர்கள் நட்சத்திரங்கள் ஆக்கப்பட்டார்கள். சாலை சந்திப்புகளில் விளம்பர பலகைகளில் ஏதேனும் பெரு நிறுவன பொருளை வாங்கச்சொல்லி கண் சிமிட்டினார்கள். கிரிக்கெட் பரவியது! எல்லோரும் (ஒரு மட்டையும், பந்தும் இருந்தால் மட்டும் போதும்) எளிதாக விளையாடிவிடலாம் என்ற விசயமும் இதை  பிள்ளைகள் மத்தியில் பிரபலமாக்கியது.

            1987இல் இந்தியாவில் நிகழ்ந்த ரிலையன்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது நிகழ்ந்தவற்றை அறிந்தவர்கள் நாங்கு ஆண்டுகளில் கிரிக்கெட் மோகம் எப்படி இந்தியர்களிடையே வெகுவேகமாக பரவியிருக்கிறது என்பதை அறிந்திருப்பார்கள். இந்தியாவும் பாக்கிஸ்தானும் இரண்டு அரையிறுதிகளில் தனித்தனியே இருக்க, ஒரு வேளை இறுதிப்போட்டிக்கு இவ்விரு அணிகளும் தகுதி பெற்றால் என்னென்ன ஆகுமோ என பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர் மும்பை போலீசார். ஆனால், இரண்டு அணிகளுமே அரையிரறுதியில் தோல்வியுற்றன. பாக் அணி அரையிறுதியில் தோல்வியுற்றதை இந்தியாவே கொண்டாடடியதில் இருந்து தேசியத்துக்கும் கிரிக்கெட்டுக்குமான தொடர்பு, பாக் மீதான காழ்ப்பு எல்லாவற்றையும் ஒரு சேர அறிந்துகொள்ளலாம்.

           இப்படியாக கிரிக்கெட் பெரு நிறுவனகங்களின் தோள்களில் ஏறி, ஊடக உதவியுடன் இந்திய மக்களின் மனங்களின் ஆழமாக வேரூன்றியது. கிரிக்கெட் வீரர்கள் இந்தியர்களின் ஆதர்ச நாயகர்கள் ஆனார்கள். கிரிக்கெட்டை ஒட்டி வெளிவந்த படங்களும் வெற்றிபெற்றன. கிரிக்கெட் பற்றி தெரியாமல் இருப்பது முட்டாள்தனம் என்ற எண்ணமும் வளரத்தொடங்கியது. கடந்த இருபது ஆண்டுகளின் புதிய தேசிய எண்ணமும், கிரிக்கெட்டும் ஒன்றை ஒன்றை ஆதரித்து பெருமளவு வளர்ந்து, வேறூன்றி விட்டன.

         இந்த கட்டத்துல தான் வந்து சேர்ந்தது ஐபிஎல். ஐசிஎல் என்ற ஜீ குழுமத்தின் கிரிக்கெட் போட்டித்தொடருக்கு எதிராகவும், இந்தியாவில் கிரிக்கெட்டை வளர்க்கப்போகிறோம் என்ற ஜிலுஜிலு வாசகத்துடனும் நழைந்தது ஐபிஎல்.  அணிக்கு இருபதே ஓவர்கள், அதிரடி ஆட்டக்காரர்கள், நடனப்பெண்கள் என எதை எடுத்தாலும் கவர்ச்சி, எங்கு நோக்கினும் கவர்ச்சி. திரைப்படத்தை போல் மூன்றே மணி நேரம். திரைப்பட நட்சத்திரங்கள் அணிகளை வாங்கியும், உற்சாகப்படுத்தியும் இருக்க, ஐபிஎல் முதல் தொடர் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது.

           இந்த தொடர்வெற்றி கொஞ்சம் ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்தாலும் ஆறு தொடர்களாக தொடர்கிறது என்பது தான் உண்மை. ஐபிஎல்லின் அடிப்படையான பிராந்திய அணிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்த பிராந்திய ரீதியிலான பாசம், இருபது ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த கிரிக்கெட்-தேசியம் இடையிலான உறவை அசைத்துப்பார்த்தது முற்றிலும் உண்மையே.

          ரசிகர்கள் வீரர்களை தேசத்தின் பிரதிநிதிகளாக பார்ப்பது  நின்று போய், மாநிலத்தின், இனத்தின் பிரதிநிதிகளாய் பார்க்க ஆரம்பித்தார்கள். ஜார்கண்ட்காரான தோனி சென்னைப்பையனாக பார்க்கப்பட்டார். ஒரு பிராந்திய ரீதியான வெறுப்புணர்வு உருவானது. சச்சின் போன்ற தனி நபர்கள் மாநில உணர்வுகளையும் தாண்டி ஈர்த்தனர் என்பது நிஜம் தான் ஆனாலும் அந்தச்சதவீதம் மிகக்குறைவு. வெளி மாநிலத்தில் வசிக்கும் பெரும்பாலானோரிடம் "என்னப்பா உங்க டீம்  நேத்து ஊத்திக்கிச்சா" எனக்கேட்கும் அளவு பிராந்திய உணர்வு பரவியிருந்தது. அணி வீரர்களிடையே கூட மோதல் எழுந்தது. (கோஹ்லி, கம்பீர்) இருவரும் இந்திய அணிக்கென விளையாடினாலும் ஐபிஎல்லில் முட்டிக்கொண்டனர்.

         இப்படி தேசிய உணர்வு பிராந்திய உணர்வாய் மாறிக்கொண்டிருந்த நேரத்தில் கிரிக்கெட்டை அடிவேரோடு சாய்க்கும் நிகழ்ச்சிகள் தற்போது நடந்தேறியுள்ளன. ஐபிஎல் ஆறில் ஸ்ரீசாந்த் உட்பட ராஜஸ்தான் அணி வீரர்கள் சூதாட்டத்தில் (Not only betting, also Fixing)  பங்கேற்றது, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச்செய்ததுள்ளது. அதன் பிறகு குந்த்ரா, குருநாத் மெய்யப்பன் மீதான புகார்கள் ஐபிஎல் மொத்தமும் ஒரு திரைக்கதைக்கு உட்பட்டு நடப்பதாக ரசிகர்களை நினைக்கச்செய்திருக்கின்றன. இதன் விளைவுகள் என்னவென்று போகபோகத்தான் தெரியும். ஆனால், இப்போதைக்கு கிரிக்கெட் மீதான ஒரு வெறுப்பு தேசம் முழுக்க பரவியிருக்கிறது !



Tuesday, June 4, 2013

சாதியம் நோக்கி அடி எடுக்கும் தமிழ் சினிமா - மற்றுமொரு பக்கம் 6

                                            வினையூக்கியின் கட்டுரை போட்டிக்கு கட்டுரைகளை சமர்பிக்க இன்னமும் 10 நாட்களே உள்ளன. அதற்காக படித்தும் எழுதியும் கொண்டிருக்கும் போது நேற்று முக நூலில் அருண் (தமிழ் ஸ்டுடியோ) எழுதிய குட்டிப்புலி விமர்சனமும் அதற்கு பலர் ஆற்றிய எதிர்வினைகளையும் காண நேர்ந்தது. அதில் முக்கியமான எதிர்வினை ராஜன் குறையினுடையது. ஏன் இதை முக்கியம் என குறிப்பிடுகிறேன் என்றால், அவர் பொதுபுத்தியின் பாற்பட்ட விமர்சனம் என்கிறார். தமிழ் ஸ்டுடியோ அருண் தனது விமர்சனத்தில் சசிக்குமாரை ராமதாசோடு ஒப்பிட்டு அவரை மிக ஆபத்தானர் என குறிப்பிட்டு இருந்தார். இன்னொரு பக்கம்  நண்பர் அதிஷா குட்டிப்புலியை பார்த்துவிட்டு கதறி இருந்தார்.

                                     குட்டிப்புலியை விமர்சிக்கும் பணியை தூசு தட்டி எடுக்க இப்பதிவுகளே காரணம். ராஜன் குறை விஸ்தாரமாக பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதி இருந்தார். அதில் கூறியுள்ளபடியே சுப்பிரமணியபுரம் நல்ல படம் தான். உண்மையிலேயே அது ஒரு Trend setter. அதே போல சமுத்திரக்கனியும், சசிக்குமாரும் ஒருவர் இயக்கி மற்றவர் நடித்த சில படங்களும் எந்த குறைகளும்/கறைகளும் இல்லாதவை தான். ஆனால், விவாதத்துக்குரிய இரு படங்களும் சசிக்குமார் நடித்தவை. அவரிடமும், சமுத்திரக்கனியிடமும் உதவி இயக்குனார இருந்தவர்கள் இயக்கியவை. கதையில், திரைக்கதையில் படமாக்கப்பட்ட விதத்தில் சசிக்குமாருக்கு தொடர்பேயில்லை என கண்ணை மூடிக்கொண்டு நாம் இயக்குனர்களை மட்டும் குற்றம் சாட்டிவிடலாம்.  எனவே, நாம் சசிக்குமாரை விட்டுவிட்டு இந்த இரு படங்களையும் மட்டும் விமர்சிப்போம். (சசிக்குமார் நாடோடிகளில் கலப்பு மணத்தை வெளிப்படையாக ஆதரித்ததாக ராஜன் குறை சொன்னதை அப்படியே ஏற்று)

                                    ஆங்கிலத்தில் Camouflage என்பார்கள். நம்மூரில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்போமே அது போல. மேலோட்டமாக பார்த்தால் தெரியாது, ஆனால் ஒரு கருத்து படத்தினூடாக பார்வையாளனின் மனதில் மெல்ல ஏற்றப்பட்டிருக்கும். சுந்திரபாண்டியனில் ஆரம்ப வசனம் ஒரு பொட்டல்வெளியை காட்டி "எவனாவது பாடுபட்டு வளத்துன பொண்ணுக மனச கெடுத்தாக்க அவன வெட்டிக்கூறு போடுற இடமும் இது தான்". ஓரிரு வார்த்தைகள் மாறுபட்டு இருக்கலாம். ஆனால், கவனியுங்கள். இந்த வார்த்தை தேர்வு முக்கியமானது. இதை ராஜன் குறை சொல்வதை போல யதார்த்ததின் பிரதிபலிப்பு என ஏற்றுக்கொள்ளவே இயலாது.

                              இதே வசனத்தை நாம் கொஞ்சம் மாற்றிப்போடுவோம். "இதே எடம் தான் நம் பெண்களை உருகி உருகி காதலிக்கும் அப்பாவி பசங்களை,  நம்ம சாதி வெறியர்கள் வெட்டிப்புதைக்கும் இடம்..." இரண்டு வசனங்களுக்கும் எவ்வளவு மாறுபாடு வருகிறது கவனித்தீர்களா? முன்னது சிலரை குஷிப்படுத்துவதற்கென்றே எழுதப்பட்டது. பின்னது அவர்களை காண்டாக்கிவிடும். இதே போன்ற பல விஷ விதைகள் படம் முழுக்க உள்ளன. சுந்திரபாண்டியனில் கொலை செய்து விட்டு (நண்பன் செய்தது என க்ளைமேக்சில் வரும்) அதை பேசித்தீர்த்துக்கொள்ளும் முறை (ஊர்-ஜாதி பெருசுகள்) ஒரு Camouflage.

                            குட்டிப்புலியில் தன் ஜாதி பெண்களை பிற ஜாதி ஆண்கள் சைட் அடித்தால் கூட (அது போலீஸ் என்றாலும்) தூக்கிப்போட்டு மிதிக்கும் ஹீரோ தன் ஜாதி இளைஞர்கள் நாலு பேரை கூடவே வைத்துக்கொண்டு சைட் அடிக்கிறார், தன் ஜாதி பெண்களை மட்டும். இதில் பொம்பள என ஆரம்பித்து அவர்களை தூக்குவது போல் தூக்கி கீழே எறியும் வசனங்கள் வேறு.

                            இதை ஏன் நான் Camouflage என்கிறேன் என்றால், வினி சர்ப்பனா என்ற ஒரு இளம் பத்திரிக்கையாளர், குட்டிப்பிலியை கிழித்து விட்டு கடைசியாக, ஊர் காவல் தெய்வங்கள் (லோக்கல் சாமிகள்) எப்படி உருவாகிறார்கள் என காட்டியது பாராட்டுக்குரியது என்றிருந்தார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. கவனியுங்கள், படத்தில் கௌரவக் கொலைகள் செய்பவர்கள் குலசாமியாக்கப்படுகிறார்கள். அவர்கள் ஹீரோ ஆக்கப்படுகிறார்கள். இது ஒருவகையான Envisage. நம் மனதில் மறைந்துள்ள சொல்லமுடியாத எண்ணத்தின் வெளிப்பாடு.

                         ஏன் இது யதார்த்தம் அல்ல என்றால், யதார்த்தம் பட்டவர்தனமாக இருக்க வேண்டும். வணிக சினிமாவில் யதார்த்தத்தை எடுத்துக்கொண்டால், நீங்கள் காதலையும், வழக்கும் எண் 18/9யையும், மகாநதியையும் காட்டலாம். இதில் எல்லாம் வணிக சினிமாவுக்கான சில சமரங்கள் இருந்தன என்றாலும் அவை எந்தப்பக்கச்சார்பும் எடுக்காதவை. யாரையும் குஷிப்படுத்தி அதன் மூலம் லாபம் பார்க்கலாம் என்ற நோக்கில் எடுக்கப்படாதவை.



                        சரி இதற்காக சசிக்குமாரை ராமதாசுடன் ஒப்பிட வேண்டுமா எனில் இல்லை என்றே சொல்வேன். என்னை பொறுத்தவரையில் புலியை விட, பசுந்தோல் போற்றிய புலி ஆபத்தானது. ஜாதி வெறியை வெளிப்படையாய் காட்டுபவனை விட, அதை வாழைப்பழத்தில் ஊசி போல வலிக்காமல் சொருகுபவன் ஆபத்தானவன். சசிக்குமார் இதில் வெறும் நடிகர் தான் எனினும், இதில் நடித்ததை அவர் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

           நீங்கள் கேட்கலாம், இது அவ்வளவு ஆபத்தானதா. இந்த படத்தை பார்த்த உடனே எல்லோரும் தெருவில் இறங்கி கௌரவக்கொலை செய்யப்போகிறார்களா என்றால் இல்லை. ஆனாலும் இப்படம் அவ்வாறு செய்பவர்கள் செய்தவர்களுக்கு ஒரு மனோபலத்தை அளிக்கும். நாம் யாரும் இந்தியனையோ , அந்நியனையோ பார்த்து அவர்களைப் போல மாறிவிடவில்லை தான். ஆனால் நம் மனதில் ஒரு சின்ன பாதிப்பை ஒரு ஓரத்தில் அவை ஏற்படுத்தி இருக்கும்.

             இதை இங்கே சொல்ல முக்கிய காரணம். இது தமிழ் சினிமா. இங்கே காலம் காலமாக அரசியல் செய்பவர்கள், முதல்வர்கள் ஆனவர்கள் சினிமா நடிகர்கள், நடிகைகள். இன்றும் எம்.ஜி.ஆர் செத்துட்டார் எனச்சொன்னால் அடிக்கும் கிராமங்கள் உள்ளன. இன்னமும் எம்,ஜி,ஆர் சமாதியில் காதை வைத்து அவர் வாட்சு ஓடுதா, அவர் எதாவது பேசுவாரா எனக்கேட்கும் ஜனக்கும்பல் உள்ளது. இப்படி சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்து நோக்கத்தெரியாத நல்ல சினிமா எதுவென்றே அறியாமல், மசாலா குப்பைகளை ரசித்துப்பழகிய ஒரு சமூகத்தில் இப்படம் நிச்சயம் ஆபத்தானது தான். குப்பை தான். ஒதுக்கித்தள்ள வேண்டியது. நல்லதை மட்டும் எடுக்குமளவு நம் சமூகமின்னும் வளரல சாமி.