Flipkart

Amazon

Amazon

Saturday, October 26, 2013

உதிரிச் சொற்கள்

                       நீண்ட நாட்களாக எழுதவில்லை. எண்ணத்தில் உதிக்கும் சொற்கள் வடிக்க இடமின்றி மனக் கானகத்தில் பொருளற்று உலாவிக்கொண்டிருக்கின்றன. அறிவார்ந்து பேச சிலரை தேர்ந்தெடுக்க சில நாட்கள் பிடிக்கும். அப்படி அல்லாமல் எல்லோரிடமும் சொற்களை உதிர்த்தால் அது உலகின் மிகப்பெரிய விரயம்.

                       நேற்று சில நண்பர்களை சந்தித்தேன். பேச்சு நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்த விசயங்களை தழுவி ஓடியது. ஜவுளி கடைக்கு பேர் போன ஒருத்தரின் பேத்தியை நாடக காதல் புரிந்து பணம் பறிக்கப்பட்டதாக நண்பர் ஒருவர் சொன்னார். இருக்கலாம். இந்த வாரத்தில் நான் கேட்கும் முறிந்த/சிதைந்த/பணம் பறித்த காதல் கதைகளில் இதுவும் ஒன்று.

                    நீட்டி முழக்கி எழுத நேரமில்லாததால், இதை ஒரு சிறிய கட்டுரையாக்கி விடுகிறேன். தொடர்புடைய ஒரு சிறுகதையை எழுத உத்தேசம், நேரம் கிடைக்கட்டும்.  பிறந்தது முதல் ஒருகுழந்தை முதல் பிசியாக இருக்க வைக்கப்படுகிறது . பாட்டு, நடனம், ஓவியம் ஏதோ ஒரு எக்ஸ்ட்ரா திறமை (!! ஞே) அவனுக்கு/அவளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பின் ஏதோ ஒரு ஆங்கிலம் பேசாவிடில் பைன் விதிக்கும் ஒரு மனப்பாட பயிற்சி கூடத்தில் (பொது வழக்கில் பள்ளி) சேர்க்கப்படுகிறான்.அவன் உலகம் நண்பர்களோடு சுருங்கும் போது அவனது தேடல் சினிமா, விளையாட்டு, காமம் என்ற அளவோடு நின்று விடுகிறது. 

                     கல்லூரியிலும் இது தொடரும். ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் கல்லூரி முடித்து வெளிவரும் போது, இந்தியாவை பொறுத்த வரை அவர்களுக்கு சமூக புரிதலோ வாழ்க்கை குறித்த எந்த வித அறிவோ இருப்பதில்லை. அவர்கள் அறிவென கருதுவதெல்லாம் சினிமா, விளையாட்டு அல்லது மிஞ்சிப் போனால் நியூஸ் பேப்பரும் சேத்தன் பகத்தும் தான். இதை கடந்த சில நாட்களாக நேரடியாக காண முடிந்தது. ஏதோ ஒரு அடையாளத்தை தேடிக்கொள்ளும் பொருட்டு, ஒரு அற்புதமான வாழ்வை அதன் பருவங்களை, அப்பருவங்களின் அழகியலை  நாம் புறக்கணிக்கிறோம். 

                         ஒரு பெண்ணை Impress செய்வது மிக எளிதாக இருக்கிறது. நீங்கள் கொஞ்சம் நடித்தால் போதும். எல்லா காதல்களிலும் நடித்தலும், Impress ஆதலும், திருமணத்திற்கு பின்பு அந்த முகமூடி கிழிகையில் ஏற்படும் அதிர்ச்சியுமே விவாகரத்துகளை அதிகரிக்கிறது. அழகு, Handsome, பேச்சு திறமை போன்ற விஷயங்கள் காதலை தீர்மானிப்பதில் தேவையின்றி பெரும்பங்கு வகிக்கின்றன. பெரும் பதவிக்கும், சமூக அந்தஸ்திற்கும் அறிவுக்கும் சம்மந்தமில்லை என்ற என் எண்ணம் மீண்டும் ஒரு முறை உறுதிபட்டுள்ளது. மிக எச்சரிக்கையாய் இருக்கிறேன் பேர்வழி என பெண்கள் மிகச்சரியாக நல்லவர்களையும், ஏமாற்றுபவர்களையும் Vice versa வாக புரிந்து கொள்ளுதலை தினமும் பார்க்கிறேன். சொன்னால், பெண்ணியவாதிகள் பொங்குவார்கள், காரணம் வளர்த்த ஆணாகவே இருக்கலாம், ஆனால் நிறைய ஐடி பெண்கள் கொஞ்சம் மடக்க எளிதான முட்டாள்கள் தான்.

                          ஐடி கம்பேனியில் வேலை பார்ப்பவர்களை எல்லோரும் கரித்துக்கொட்டிவிட்டால் ஆச்சு. முன்பொரு காலத்தில் அரசு வேலைக்கு இதே நிலைமை தான். ஆனால், அவர்கள் கஷ்டம் நீவிர் அறியாதது. நேற்று பெசன்ட் நகர் சிக்னலில் பைக்கில் இன்ஸூரன்ஸ் இன்றி மாட்டினேன். ஐடி எனத்தெரிந்ததும் 1500 ,500 ,300 என பேரம் பேசிய போலீஸ்காரர், "கண்ட கண்ட எடத்துல பணத்த பொழியறீங்க. எங்களுக்கு குடுக்க ஏன்டா எறியுது" என்றார்.  ஐடி என்றாலே ஏதோ பரமானந்தத்தில் திளைப்பது போல இவர்களுக்கொரு பிரமை.

இந்த நாட்டின் பிரஜை ஒவ்வொருவரையும் மாற்றி மாற்றி இன்னொருவரின் வாழ்வை வாழச்செய்ய வேண்டும். இங்கு ஒருவருமே மகழ்ச்சியாகவோ சுதந்திரமாகவோ இல்லை என்பது புரியும்.

இணையம் எல்லோருக்குள்ளும் குறட்டைவிட்டுக்கொண்டிருந்த கல்யாண் ஜுவல்லர்ஸ் பிரபுவை, மூக்கினுள் புல்லை விட்டு அலறிக்கொண்டு விழித்தெழ வைத்திருக்கிறது. காலை எழுந்தவுடன் பல்லில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டே பாலஸ்தீன மக்களுக்காக போராட ஆரம்பித்து நியூஸ் பேப்பரில் வரும் இரங்கல் செய்தி தவிர்த்து பாக்கி எல்லாவற்றிக்கும் சொல்ல கருத்தோ, ஆதரவோ, பொங்கலோ ஏதோ ஒன்றை எல்லோரும் உருவாக்கிக் கொள்கிறோம்.

 நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது, ஒன்றுமே தெரியாத, எதைப்பற்றியுமே கவலை இல்லாத இளம் தலைமுறையை செய்திகளின் பால் ஈர்ப்பது நல்லது தானே என்றார். நான் கூட மூன்றாண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் சிந்தித்தேன். அது ஓரளவு சரியும் கூட. ஆனால், முழுக்க அல்ல. இளைஞர்கள் இன்று லயித்து கிடக்கும் பேஸ்புக், முழுக்க முழுக்க இல்லையெனினும் பெரும்பாலும் திராபையான கருத்துக் குப்பைகளால் நிரம்பியுள்ளது.

இணையத்தில் தான் வித்தியாசமானவன் என்பதை காட்டிக்கொள்ள முன்பெல்லாம் முற்போக்கை தேர்ந்தெடுத்தார்கள். இப்போது அது உல்டாவாகிவருகிறது. எல்லோரும் முற்போக்கெனில், பிற்போக்கானவன் தானே வித்தியாசமானவன் என்ற தியரியை வைத்து  நான் பிற்போக்கு என்றே கூறிக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு ஜாதி ஜட்டியை தூக்கி பிடிக்கிறார்கள். எப்போதோ படித்த முல்லா கதைகளை அப்துல் கலாம், ரஜினி, மோடி என பிடித்த பெயரில் கலந்து கட்டி அடிக்கிறார்கள். Name-Droppingஐ அருமையாக பழக்கிவிடுகிறது இணையம். மத பழமைவாத, அடிப்படைவாத ஆட்கள் அருவாளோடு கெத்தாக திரிகிறார்கள். 


இப்போது ஏன் இதையெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறேன்... என்னை என்னாவாக பாவித்துக்கொண்டு உங்களுக்கு உபதேசித்துக்கொண்டிருக்கிறேன்? ஒரு பட்டாம்பூச்சிக்கு லாவாக்களுக்கு புத்தி சொல்ல எந்த அருகடதையும் கிடையாது. இவை கடக்கப்போகும் யாவற்றையும் பட்டாம்பூச்சி முன்னமே கடந்திருக்கலாம், அவற்றை அது அனுபவம் எனகூறிக்கொள்ளலாம். ஆனால், அதே அனுபவத்தை அடையப்போகும் அவற்றை காப்பாற்றுகிறேன் என தடுக்க, அவற்றை திசைதிருப்ப எனக்கு என்ன உரிமையுள்ளது??