Flipkart

Monday, September 29, 2014

மெட்ராஸ் - விமர்சனம்

மெட்ராஸ்

பெங்களூரு வந்து கிட்டத்திட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. நேற்று இரண்டாம் ஆட்டம்  முடித்துவிட்டு வரும் போது நண்பன் ஒருவனிடம் சென்னை-பெங்களூரு ஓப்பீடு பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அலுவலகத்தில் எப்போதும் ஓடும் டாப்பிக். தமிழர்கள் அல்லாதவர்களிடம் மெட்ராஸ் குறித்த ஒரு பிம்பம் உண்டு. தமிழ் இல்லன்னா பிழைக்க முடியாத ஒரு ஊர் அது. சென்னை ஹீட்டுப்பா... எனக்கு பெரிதாக ஸ்டீரியோடைப்புகளில் நம்பிக்கை இல்லை என்பதால் சண்டை வராது. சிரித்துக்கொண்டே போய்விடுவேன்.

நேத்து நண்பன் சொல்லிக்கொண்டிருந்தான். இங்கு எல்லாருக்குமே தமிழோ இந்தியோ தெரியுது. பிரச்சனை இல்லாத ஊர்ண்ணே. என் ஆபிசிலும் இதே தான் சொல்வார்கள். சென்னையில் ஹிந்தி பேசி பிழைக்க முடியாது. பெங்களூரில் கன்னடாக்காரர்களை பார்க்கவே முடிவதில்லை. எல்லாம் பெயர்ந்தவர்கள். இங்கே இருந்த மண்ணின் மைந்தர்கள், வீடு நிலம் மூலம் செட்டில் ஆனவர்கள் ஆனாலும் சரி, தங்கள் மொழி சார்ந்த அடையாளத்தை முற்றிலும் துடைத்தெறிந்து விட்டு வாழ்கிறார்கள். சினிமா, இலக்கியம் என எந்தக்கன்னடத்  தொடர்பும் அவர்கள் மொழி அடையாளத்தை உயிர்ப்புடன் வைக்கும் அளவு இல்லை. இந்த தலைமுறையினருக்காவது சற்று வருத்தம் இருக்கிறது. ஒரு இருபதாண்டுகள் கழித்தால், பெங்களூரில் பெங்களூரியன்ஸ் மட்டும் தான் இருப்பார்கள்.

மன்னிக்கவும். மெட்ராஸ் விமர்சனம் இடத்தான் ஆரம்பித்தேன். முன்னுரை கொஞ்சம் லெந்த்தா போச்சு.
சென்னை பல ஊர்களில் வந்து குவிந்த மக்களின் வாழ்வாதாரம். கட்டிடத்தில் பணிபுரியும் கூலிகள் தொடங்கி ஐடியில் ஐடி கார்டோடு திரியும் கூலிகள் வரை. ஆனால், மெட்ராஸ் அது வேறு. மெட்ராஸ், மெட்ராஸ்காரர்களின் ஊர். புளியந்தோப்பு - தலித்துகள் வாழும், அல்லது அவர்கள் வாழ பணிக்கப்பட்ட பகுதி. ஒரு சுவரை மையமாக வைத்து, அதிகாரத்திணிப்பை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறார் ரஞ்சித்.

தமிழ் பிரபாவின் விமர்சனத்தை கீழே பகிர்ந்துள்ளேன். வரிக்கு வரி நான் எழுத நினைத்ததையும், மேலும் சில வட சென்னை அத்தெண்டிக் அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளதால், விடுபட்டவையை மட்டும் நான் சொல்கிறேன்.

தமிழ் பிரபாவின் விமர்சனம் : https://www.facebook.com/prabha.prabakaran/posts/807940465924748

 பொதுவாக எனக்கு கார்த்தியின் முகம் அலர்ஜி. தெலுங்கு பாணி நடிப்பு அவருடையது. இப்படத்திலும் க்ளைமேக்ஸில் ஸ்கூல் பாடம் உட்பட சில இடத்தில் சிரிப்பு வந்தாலும், ஓரளவு சமாளிக்கிற அளவு ஒன்றியிருக்கார். வட சென்னையின் முகத்தை மிக யதார்த்தமான ஒரு கோணத்தில் காட்டியிருக்கிறார் ரஞ்சித். எல்லாருக்கும் இதில் புரிந்தது மேலோட்டமாய் தலித் அரசியல் - அதிகார அடக்குமுறை மட்டும் தான். எனக்குத்தெரிந்து ரஞ்சித் நுட்பமாய் சொன்னவை/ நான் ரசித்தவை :

1. அம்மக்களிடம் பொங்கும் காதலும், கனவுகளும் - அன்பும், அவன் மனைவியும் மோகம் கொள்ளும் இடங்கள் அனைத்துமே காதலின் உச்சம். எளிய மனிதர்களின் காதலை இதைவிடச்சிறப்பாக சொல்லிவிட முடியுமா எனத்தெரியவில்லை. பையனை புட் பால் பிளேயர் (கால்பந்து வீரன் :-) ) ஆக்குவது தொடங்கி எத்தனை கனவுகள்?

2. கலை. நடனக்குழு, புட்பால், கேரம் என விளையாட்டுகள். எல்லா ஏரியாவிலும் இக்குழுக்களில் திறமைமிக்க எத்தனையோ இளைஞர்கள் இருப்பார்கள். இதைப்பெரும்பாலும் வெறும் சீன் பேக் ட்ராப்பாக மட்டுமே நம்மாட்கள் பயன்படுத்தி வந்தார்கள். ரஞ்சித் கதையோட்டத்தில் அதை இணைத்துள்ளார் - முக்கியமாய் நடனம், புட்பால், கானா.

3. அரசியல் எப்போதுமே ஆடு புலி ஆட்டம் தான். புலிகள் ஆடுகளை மோதவிட்டு வழியுமவற்றின் குருதியை நக்கிக்குடிக்கும் ஆட்டம். மேலிருக்கும் புலிகளுக்கு எல்லாருமே ஆடுகள் தான். தலித் அடையாள அரசியலைத் தாண்டி, மாரி - சேது கூட்டணி, மாரியை போட்டுத்தள்ளிவிட்டு விஜி மேலே வருவது, யார் வந்தாலும் சுவர் தன்னிடம் இருக்கவேண்டுமென நினைக்கும் சேது, அதற்கு மேல், கீழே உள்ள நிலைமை தெரிந்தும் கூட்டணி வைக்கும் தலைவர்கள் (எனக்கு விசி-பாமக ஒரு கூட்டணியில் இருந்ததை குத்தியதாக தெரிந்தது) என ஒரு படி கீழே இருப்பவன் ஆடாகத்தான் பாவிக்கப்படுகிறான்.

4. முதலிலேயே புள்ள குட்டிய படிக்க வைங்கடா என யதார்த்தமாக சொல்லும், ஜாலி இளைஞனாக, கொலை செய்து விட்டு பின் அவ்ளோ தானாடா என பினாத்தும் போதும் நன்றாகவே நடித்திருக்கிறார் கார்த்தி.

5. ஜானி பற்றி ஊரே சிலாகித்து விட்டது. தொப்பி எட்த்துக்கிரேன் பாஸூ... ஹேட்ஸ் ஆஃப் ஜானி :)

                      மொத்தமாக வட சென்னையின் கனவுகள், காதல், அவ்விளைஞர்களின் திறமைகள், அவர்கள் வாழ்க்கைப்பாதையென அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி, அதன் முன் நிற்கும் வரலாற்றின் நெடிய தொடர் சங்கிலி சவால்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தியதால் மெட்ராஸ் மிக முக்கியமான படம்.

                 இன்னொரு பக்கம். பரபரக்கிற ஸ்க்ரீன் ப்ளே. அரசியல் சதுரங்கத்தின் சோல்ஜர்-மந்திரி ஆட்டம், மிக யதார்த்தமான ஒரு காதல், அட்டகாசமான சந்தோஷ் நாரயணின் பிண்ணனி, பாடல்கள் என ஒரு பக்கா கமிர்ஷியல் ஹிட். இதற்காக சில ட்ரேட் ஆஃப்களை ரஞ்சித் செய்திருந்தாலும் அது ஓக்கே தான்.

படம் முடிந்தவுடன் என் நண்பனிடம் இதைத்தான் சொன்னேன்

"ஆரண்ய காண்டம் ஒரு கல்ட் க்ளாசிக்காகி விட்டது, மற்றபடி சென்னை இளைஞர் பாத்திரத்தை கதா நாயகனாக கொண்ட படங்களெல்லாம் கமர்சியல், மெட்ராஸ் இரண்டுக்கும் இடையிலான பேலண்ஸ்"

பாரட்டுக்கள் ரஞ்சித், சந்தோஷ் நாராயண், முரளி. லாங்க் வே டு கோ.


Tuesday, September 23, 2014

ஜில் கதை - 4

#ஜில்_கதைகள்

FB link - https://www.facebook.com/SHAN4Luv/posts/862637873749431?notif_t=like

ஜில் சோகமாக தன் காஃபி கப்பையே வெறித்தப்படி அமர்ந்திருந்தாள். சற்று நெருங்கி அமர்ந்து அவள் தோளில் கையைப்போட்டு இடப்புற கண்ணில் வழியலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்த நீரை தட்டி விட்டேன்.

தன் தோளை ஒரு முறை குலுக்கி என் கையை உதறியவள், "இந்தக் கண்ண தொடைக்கலாம்ல" என பொய்யாய் கோபப்பட்டாள்.

"என்னாச்சு ஜில்லு"

"ஒண்ணுமில்ல போ"

"என்னாச்சுன்னு கேக்கறேன்ல சொல்லு"

"பயமாயிருக்கு டா"

"ஏன்"

 மிக லேசாக தன் கருத்தை திருப்பினாள். வளர்பிறையில் நிலவு நாளுக்கு நாள் வளர்வதை பொறுமையோடு அமர்ந்து கவனித்திருக்கிறீர்களா? பதினைந்து நாள் நிகழ்வை இரண்டே நொடியில் நிகழ்த்திக்காட்டினால் ஜில். அவள் கருங்கூந்தல் இரவகன்று மெல்ல முக நிலவு உதயமானது. நிலவின் கண்களில் நீர்.

"ச்சு.... பாரு, கண்ல வெச்சுருக்கற உன் பிரண்டு கரையறா"

முறைத்தாள். அவள் தோழியின் நிறத்தை கிண்டல் செய்யும் போதெல்லாம், "இவர் அப்படியே வெண்ணிலா கலரு"ம்பா. இன்று அதீத மேக்கப்பிலிருந்தாள். அவளது மொச்சைக்கொட்டைகளை சுற்றி இடப்பட்டிருந்த ஐ லைனர் கரைந்து கன்னம் வரை கோடாய் வழிந்திருந்தது. இதிலும் அழகாய்த் தான் இருக்கிறாள். அழகான பெண்களுக்கு எது நிகழ்ந்தாலும், அதை அழகுணர்ச்சி மிக்கதாகவே பிம்பப்படுத்தி விடுகிறது மனது.

"இப்ப என்னாச்சு சொல்லப்போறியா இல்லையா?"

"இது சரிவருமா டா?"

 எனக்குப்புரிந்தது. எங்களைப்பற்றி கேட்கிறாள்.

"தெரியல ஜில்லு.... இப்போதைக்கு ஒரு இருபது லைக் வருது.... ஒரு ரெண்டு ஷேர்... நாலு டிஎம்... நீ உண்மை கேரக்டர்ன்னு வேற நம்புறாங்க... சரி வரும்ன்னு தான் நெனைக்கறேன்.."

"ஒத படுவ... நாயே... நெஜமாவே பயமாயிருக்கு டா...எங்க வீட்ட பத்தி உனக்கு தெரியாது"

"உஷ்ஷ்ஷ்..." அவள் உதட்டை என் முதல் மூன்று விரல்களால் அழுத்தி மூடினேன். நான்காம் விரலால் அவள் முகத்தை என்னை நோக்கி திருப்பினேன். என் முகம் இருந்த நெருக்கத்தை பார்ததும்  அவள் இதழ்கள் தங்களை அனிச்சையாய் ஈரப்படுத்திக்கொண்டன. எனக்கு சிரிப்பு வந்தது. லேசாய் கண்கள் சொருகி மூடினாள்.

"அடச்சீ...சீரியஸா ஒரு டயலாக் ரெடி பண்ணா சட்டுன்னு மூட ம்ம்மூடாக்கற"

"ஹா ஹா...ஷை... நீ இருக்கியே" என்றாள் கண்ணீர் சிதறி விழ சிரித்துக்கொண்டே. பெண்கள் அழுது முடித்துவுடன் குலுங்கிச்சிரிக்கும் காட்சி தான் தாய்மைக்கு அடுத்தபடியாய் மிக அழகானது. அடுத்த முறை உங்கள் காதலி அழுகையில் துடைத்து விடாமல் அவளை சிரிக்க வைக்க முயற்சி செய்யுங்கள் (முடியவில்லை எனில் ஜில்லுக்கு தெரியாமல் என்னை தொடர்பு கொள்ளுங்கள்)

"சரி... இங்க பாரு... இது ஏன் ஆரம்பிச்சு...எதுவரைக்கும் போகும் எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனா, நீ என்னைய விட்டு விலகணும்ன்னு நீயா நினைக்கற வரைக்கும், இங்க யாரும், யாரும், என்ன உன் கிட்ட இருந்து பிரிக்க மாட்டாங்க, நான் உட்பட"

"நெஜம்மா?"

 நான் ஒரு புன்னகையோடு அவள் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் கண்களில் கலவரம் மறைந்து வெட்கம் உதிப்பது தெரிந்தது. பெண்களையும் குழந்தைகளியும் ஏன் ஒப்பிடுகிறார்கள் எனப் புரிந்தது போலிருந்து. ஏன் இப்படி ஒருத்தியிடம் காதலில் விழுந்தேன் என வியப்பாய் இருந்த அதே சமயம், அவளோடு அந்த நொடியில் மீண்டும் காதலில் விழத்தயாராய் இருந்தேன்.

யோசனையை மறைக்க இதழ்களில் புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நிமிர்ந்தேன். ஜில் அங்கு இல்லை. எதிரில் டேபிள் மின் விளக்கை பிரதிபலித்தபடி காலியாய் இருந்தது.

ஜில் கதைகள் - "நான் அழகா இருக்கேன்னு தான் என்ன காதலிக்கறியா" - 3

https://www.facebook.com/SHAN4Luv/posts/862209690458916

இன்று தாமதமாகத்தான் அலுவலகம் சென்றேன். லிப்டிற்கு வெளியேவே ஜில் நின்றிருந்தாள். கூடவே அவளது தோழி ஒருத்தி. கருப்பாய், பூசினாற் போல் உடம்பு, முடியை தோள் வரை விட்டு கத்தரித்திருந்தாள்.

இருவருக்கும் ஹாய் சொல்லியபடியே உள்ளே செல்ல எத்தனித்தேன். ஜில் தன் இடது கையை நீட்டி, என் இடுப்பை வளைத்து இருந்த இடத்திற்கே தள்ளினாள்.

"வேல இருக்கு ஜில்லு"

"என்ன விட முக்கியமா?"

"சரி, சொல்லு"

"நான் அழகா இருக்கனா?"

"இதுக்குத்தான் நிறுத்தினியா... இந்த உலகத்திலயே...ஏன் ஏலியன்ஸ் எல்லாம் சேத்திக்கூட அழகான பெண் நீ தான்"

"அப்போ அதான் இல்ல"

"எதான்?"

"நான் அழகா இருக்கேன்"

"ஆமா"

"அப்போ, அதுனால தான் என்ன லவ் பண்ற இல்ல?"

"ஏய்... என்னாச்சு உனக்கு, லூசு மாதிரி பேசற... அப்படி பாத்தா எத்தன அழகான பொண்ணுங்க இருக்காங்க.."

"இப்ப தான், நான் தான் இருக்கறதுலயே அழகான பொண்ணுன்ன"

"உஸ்ஸ்... என்னம்மா வேணும் உனக்கிப்ப"

"இவ தான் சொன்னா... நீ என்ன காதலிக்கிறது வெறும் அழகுக்காகத்தானாம்...

அவளை முறைத்தேன்.

"எல்லாமே பார்வைல தான் ஜில்லு... இப்ப நான் உன்ன வர்ணிக்கற அதே மாதிரி இவளையும் காதலோட பாத்தா இவளும் அழகு தான்.."

"எங்க என்ன அசிங்கமாவும்...இவள அழகாவும் வர்ணி பாக்கலாம்"

"ம்ம்ம்... சரி"

மறுபடியும்.. ஜில் தனது தோழியோடு நின்றிருந்தாள். ஜில்லுக்கு சற்று மெலிந்த தேகம். மெலிந்த தேகமுள்ள பெண்களுக்கே உள்ள வெட வெட சரீரம். ஜில் புடவை கட்டினால், ஏதேனும் தலைவர் பிறந்த நாள் அன்று அலங்கரிப்பட்ட கொடிக்கம்பமொன்று நடந்து வருவது போன்றே தோன்றும். முகேஷ் கன்னங்கள், ஓமக்குச்சி நரசிம்மனின் இடை...

"ம்ம்...போதும் போதும்... இவள வர்ணி"

அவள் தோழி என்னையே பார்த்தபடி நின்றிருந்தாள். கூர்மையான லேசாக மையிட்ட கண்கள். கூர் நாசி. அளவெடுத்து செய்வதில் சற்றே அம்மா பாசமாய் இரண்டு கரண்டி அதிகமாய் போட்டது போல உடம்பு. தோள் வரை புரண்ட கூந்தல் அடர் கருப்பு, பினிஷிங்க் டச்சாக லேசாய் சுருண்டிருந்தது. ஒற்றைக் கையை தன் ஸ்கேட்டிங் வித்தை ட்ராக் இடுப்பில் வைத்து இரு விழிகளையும் வலது ஓரம் கொணர்ந்து....

"ஏய் நிறுத்து நிறுத்து..."

"சொல்லு"

"அப்ப நீ அவளையும் ரசிச்சுருக்க.."

"அய்யோ...அதில்ல ஜில்லு..."

"காதலிச்சாத்தான் அவள அழகா வர்ணிக்க முடியும்ன்ன... அப்ப அவளையும் காதலிக்கற..."

"அடப்போங்கடி...."

Thursday, September 18, 2014

ஜில் கதை‬ - 2

https://www.facebook.com/SHAN4Luv/posts/860157000664185

இன்று மதியம் தான் ஜில்லை பார்க்க நேரம் வாய்த்தது. காலையில் இருவருவமே அவரவர் அமேரிக்க ஆன்சைட்டிடம் பொய் சொல்லிக்கொண்டிருந்தோம். மதியம் என் பழைய டீம்மேட் ஒருத்தனை பார்க்க செல்கையில் எதிர்பட்டாள்.


இந்த முறையும் வழியை மறித்தபடியே தான் நின்றாள். அவளை கவனியாயது போல, இயல்பாக எக்ஸ்கியூஸ் மீ சொல்லியபடியே அவள் இடுப்பை தொட்டு இன்னொரு புறம் நகர்த்த பார்த்தேன். கையை தட்டிவிட்டு விட்டு முறைத்தாள். இரு கைகளையும் தனது மணல் முகடுகளுக்கு குறுக்காக கட்டியபடி, இடப்புறமாக சற்றேறக்குறைய 60 டிகிரி கோணத்தில் கீழே பார்த்து முறைத்தாள்.


நான் அவள் முகத்தை என்னை நோக்கி திருப்ப முயன்றேன். பிடிக்கும் போது போக்கு காட்டி பின் வழுக்கும் சாரைப்பாம்பு போல, என்னை ஒரே ஒரு மைக்ரோ வினாடி தனது பார்வையால் தீண்டி விட்டு வலப்பக்கம் திரும்பிக்கொண்டாள். அவள் கூந்தல் மெல்ல என் கைகளின் மேல் உரசி விலகியது. அவற்றை லேசாக இழுத்து, கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் உலவவிட்டபடியே மெல்ல தடவினேன்.


உங்களிடம் சொல்லி இருக்கிறேனா? பொதுவாகவே எனக்கு பெண்களிடம் ஈர்ப்பான விஷயம் கூந்தல் தான். புதிதாய் பிறந்த பூனைக்குட்டிக்கு மூன்றாம் வாரம் முளைக்கும் மீசை போல அவ்வளவு மென்மையான முடி ஜில்லுக்கு.. அவள் தலையை கோதி விட்டு முகர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொர்க்கத்தில் இப்படித்தான் வாசனை அடிக்கும் என மனப்பூர்வமாக நம்பி வந்திருக்கிறேன்.


அடர்த்தியான கருப்பில் லேசான பழுப்பு தூவிய நிறம். அவளிடம் நான் விழுந்ததே அந்த மசுருக்காத்தான் என பல முறை சொல்லியிருக்கிறேன். அவளுக்கு "மயிர்" என்ற வார்த்தை பிடிக்காது. கிடக்கட்டும். என்ன என்றேன். இது F1 ட்ராக்காடா என்றாள் தனது செந்நிற வானவில்லை சுட்டினாள். யாரோ மொழிபெயர்த்து படித்துக்காட்டியிருக்கிறார்கள். தமிழை பொறுமையாய் எழுத்துக்கூட்டி படிக்கும் ஜாதியில்லை அவள்.


சிரித்தபடியே இன்னமும் என்னென்னவோ சொல்லலாமே என்றேன். ஏவாளின் புருவம், மாலை பீடித்த ஆறாம் விநாடி இளம் ஆரஞ்சில் தென்படும் மூன்றாம் பிறை நிலா....


ஸ்ஸ் நிறுத்து என்றாள்.


இதழோரம் புன்னகையை தேக்கியபடி, அவள் விழி முயல்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணின் குழிக்குள்ளிருந்து தப்பிக்க வழி தேடுவது போல அவை அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. மீண்டும் தலையை குனிந்த படி ஏதோ முணுமுணுத்தாள்.


சிரித்தபடியே யாரேனும் கவனிக்கிறார்களா என சுற்றிலும் லேசாக தலையை திருப்பி, இமையை முழுவதாக கீழிறக்கி மீண்டும் திறக்கையில் விழியை மறுபுறம் கொண்டு சென்று பார்த்தேன். அங்குமிங்குமாக சிலர் அரைப்பார்வையும் முழு கவனத்தையும் என் மீது வைத்துக்கொண்டிருந்தார்கள்.


சட்டென கன்னத்தில் ஏதோ பாதி வெட்டிய ஸ்ட்ராபெரி பழமொன்று உரசினாற் போல் இருந்தது. திரும்பிப்பார்த்தேன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கம்பளம் விரிக்கப்பட்ட தரை ஏசியில் விரைத்து கிடந்தது. ஜில்லு தென்படவில்லை.


#ஜில்_கதைகள் ‪#‎ஜில்_கதை_2‬ ‪#‎தொடரும்‬

ஜில் கதைகள் - 1

https://www.facebook.com/SHAN4Luv/posts/859717640708121

இன்று காலை அலுவலக மிஷினில் காபி பிடித்து காலை உணவை முடிக்கலாமென சக்கரை பாக்கெட்டை பிரித்து கோப்பையில் கொட்டிக்கொண்டிருந்தேன். ஜில் திடீரென எங்கிருந்தோ முளைத்து எனக்கும் மெஷினுக்குமான இடைவெளியை விண்வெளியாக்கியடி நின்றாள்.


கண்களில் நிஜக்கோபம். உதடு லேசாக சுழித்திருந்தாள். அடிக்கடி சொல்லியிருக்கிறேன். ஜில்லு உன் கோபம் தான் உன் பாவனைகளிலேயே செக்ஸியானது. அலுவலகத்தில் கோபப்படாதே, முத்தம் கூட தர முடியாமல் என் அவஸ்தை தாளது என்று. பெண்கள் என்றைக்கு என் பேச்சை கேட்டிருக்கிறார்கள். சரி, பொதுப்படுத்த வேண்டாம், ஜில்லு என்றைக்கும் கேட்டதில்லை.


மீண்டும் ஒரு முறை முன் விழுந்த முடியை கோதி, தனது எஃப். ஒன் சர்க்க்யூட் வளைவுகளில் இரு கைகளையும் வைத்து முறைப்பு மாறாமல் நின்றாள். எனக்கு புரிந்தது. கடந்த ஒரு வாரத்தில் எங்கேயோ வைத்து, விரலிடுக்கில் சிகரட்டோடொ, முகமருகே புகை பாவவோ என்னை பார்த்திருக்கிறாள். ரெட் லைட் ஏரியா சென்றால் கூட சரி, சிகரெட் ஆகவே ஆகாது என்றிருக்கிறாள் ஒரு முறை.


"என்ன?"


"என்ன?"


"என்ன, சொல்லு"


"தம் அடிக்கறியா?"


"ம்ம்.."


"தைரியமா...ம்ம்ம்ங்கற"


"ம்ம்ம்..."


"இப்ப எதுக்கு இதெல்லாம்?"


"ம்ம்.."


"இப்ப மரியாதையா காரணம் சொல்லப்போறியா இல்லையா?"


"பெரிசா காரணம் எதுவும் இல்ல, அடிக்காம இருக்க" என்றேன்.


ஒரு நொடி விட்டத்தில் இருந்து தவறி விழுந்த பூனை போல் பார்த்தவள், ஒரு கெட்டவார்த்தையோடு சேர்த்து 'நான் இல்ல' என்பதையும் முணுமுணுத்துவிட்டு, கையிலிருந்த காபிக்கோப்பையை பிடுங்கி குப்பையில் எறிந்து விட்டுப்போனாள்.


சிரித்தபடியே மீண்டும் ஒரு பேப்பர் கப்பை எடுத்து சக்கரை நிரப்ப ஆரம்பித்தேன். அதில் ஏற்கன்வே சர்க்கரை இருந்தது


‪#‎ஜில்_கதைகள்‬ ‪#‎தொடரும்‬