Flipkart

Amazon

Amazon

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, July 8, 2013

அப்பறம் பாஸ், Life எப்படி போகுது?

                               ஒரு பால்ய தோழியுடன் நீண்ட நாட்கள் கழித்து நேற்று பேசினேன். ஒரு இந்திய முதலாளியின் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறாள். ஒரு பிரபல யுனிவர்சிட்டியில் எம்.எஸ் செய்வதாக சொல்லி வேலைக்கு எடுத்தார்கள். தோழி B.sc.. எம்.எஸ் செய்ய 16 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் (Only Engineers Qualify). இது ஒன்று தான் வழி என்பதால் ஏகப்பட்ட B.Sc,BCA  படித்தவர்கள் இதில் சேருவார்கள். நான்கு வருட ஒப்பந்தம். நான்கு வருட வேலை, வார இறுதியில் கல்லூரி.

                                  வாழ்கை செட்டில்ட்ன்னு வேலைக்கு ஆர்வமா சேர்ந்தாள் தோழி. நாலு வருஷம் கழிச்சு வெளிநாடு போலாமுன்னு பாஸ்போர்ட் மொதக்கொண்டு எடுத்து வெச்சாச்சு. ஒரு எட்டு மாசம் ஆச்சு. வேலை. காலேஜ். வேலை. காலேஜ். மெஷின் லைஃப். ரொட்டீன் லைஃப், படிக்கவே போரடிக்கல? அதே தான் அவளுக்கும். வெளில வரும் போது Work Experience Certificate கிடைக்காதாம். MS படித்ததால், Student Internship ஆகத்தான் கணக்காம். அவள் குரலில் ஒரு வெறுப்பு தொனித்ததை உணர முடிந்தது. பெங்களூர், சென்னை என மாற்றி மாற்றி பணிபுரிவதால் பெரிய அளவில் நட்பு வட்டமும் இல்லை. "நாலு வருஷம் கழிச்சு வெளி நாடு போகணும்ன்னு இப்ப ஆசையே இல்ல டா... நாலு வருஷம் முடிச்சு இந்த சாஃப்ட்வேர் கருமத்த விட்டு வெளிய வந்தா போதும்ன்னு தோணுது"ன்னா.

                                   ஆங்கிலப்படம் பார்க்கும் பழக்கமுள்ள எவரும் பார்த்திருக்கூடிய ஒரு படம் "The Shawshank Redemption". அதிலொரு காட்சி.  ஐம்பது ஆண்டுகள் சிறையில் கழித்த ஒருவரை விடுவித்து வெளி உலகிற்கு அனுப்புவார்கள். அவர் அதை தடுக்க எவ்வளோ முயன்றும் முடியாது. வெளியில் சென்ற அவர் ஒரு வாரத்தில் தூக்கு போட்டு செத்துப்போவார். அற்புதமான காட்சி அது. அவரை பற்றி "He was Institutionalized" என்பார் அவர் நண்பர். அவருக்கு அந்த சுவருக்குள் தான் உலகம். அதை தாண்டிய உலகத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வாமை உள்ள பொருள் போல அதை தாண்டிய உலகத்தை அவர் மனம் மறுதலித்து விடும்.

                                   இங்கே பெரும்பாலானோரின் வாழ்க்கை முறை அப்படித்தான். அது ஒரு Routine. ஒரு வேளை அதிலிருந்து அவர்களை வெளியில் இழுத்தால் அவர்கள் செத்துப்போவார்கள். நம் சமூகம் அப்படித்தான் வளர்ந்திருக்கிறது. "Settle" என்ற வார்த்தை அதற்கனவே உயயோகப்படுத்தப்படுகிறது. என் கல்லூரி பேராசியர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார் "Settling business is done at the graveyard. We have to move our asses till then".

                                   இத்தனை இழுவை ஏன் போட்டேன் என்றால், இந்த கேள்விய சொல்லத்தான் "அப்பறம் பாஸ், Life எப்டி போகுது. என்ன பண்ணலாமின்னு இருக்கீங்க?". கிட்டத்திட்ட இதே கேள்வியை, பதங்களை மாற்றி, நிற்கும் பொசிஷனை மாற்றி , சட்டை கலரை மாற்றி பல உருவங்கள் கடந்த சில நாட்களாக என்னிடம் கேட்கின்றன. காரணமில்லாமல் இல்லை. கல்லூரியை முடித்து, கல்லூரி நேர்முகத்தேர்வில் வேலைக்கு எடுத்த ஒரு பன்னாட்டு கம்பேனிக்காரன் கூப்பிடுவான் என காத்திருக்கும் அநேகர் எதிர்கொள்ளும் கேள்வி இது.

                                 எல்லோரும் கேட்பதால் மட்டுமல்லாமல், இது எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் ஒரு பதிவு, ஒரு Self Note.  நான் நதி போல, எதை எதிர்கொள்ளப்போகிறேன் என எனக்கே தெரியாது, பாதை செல்லும் வழியில் அப்படியே போய்க்கொண்டே இருப்பவன். ஆனால், நிஜத்தில் எதற்கும் பணம் வேண்டுமே. அதனால் எதாவது செய்தாக வேண்டும். Travelஇன் மீது அதி தீவிர ஈடுபாடு உண்டு. அதற்கும் பணம் வேண்டும். இரண்டு ஒலிம்பிக்ஸ், ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட், கால்பந்து, அப்பறம் ஒரு விம்பிள்டன் பார்க்க வேண்டும். அதற்கும் பணம் வேண்டும். 143 நாடுகள் பார்க்க வேண்டிய நாடுகள் என நான் தயாரித்துள்ள பட்டியலில் உண்டு.

                                    திருமணம் என புருவம் உயர்த்தினார் அப்பா. எனக்கானவள் எந்த தேசத்தில், எந்த இனத்தில் பிறந்திருக்கிறாள் என இன்னமும் தெரியவில்லை என்றேன். சிரித்துக் கொண்டார். எங்களுக்குக்காக அதை மட்டும் பண்ணிக்கோ என்றார். "ம்ம்" என்றேன் வெறுமனே.

                                  நமது சமூக சூழலில் ஒருவரின் உட்பட்ச லட்சியமே, ஒரு பிள்ளை பெற்று அவனை இன்ஜினியருக்கோ, டாக்டருக்கோ படிக்க வைத்து, நம் சாதியில் ஒரு பெண்ணை கட்டி வைத்து, அவனுக்கு பிறக்கும் பிள்ளைக்கும் நாம் அவனுக்கு செய்ததையே அவனை செய்ய வைப்பது. இது ஒரு முற்றுப்பெறாத கதை.

                                        நான் இதற்கு முற்றிலும் மாறானவன். எனக்கு மதமில்லை, சாதியில்லை. பொது வாழ்வில் மக்கள் பெருமை என கூறும் எந்த ஒரு அடையாள பாரத்தையும் நான் சுமப்பதில்லை. பொதுபுத்திக்கு விரோதமானவனை நேசிக்கலாம், ஆனால் கட்டிக்கொள்ள சரிப்படாது என்பாள் என் பழைய தோழி ஒருத்தி. சரி தான். இது வரை எந்தப்பெண்ணும் மாற்றிப்பேசியது இல்லை.

                                        ம்ம்... எங்கே விட்டோம். ம், பணம். பயப்படாதீர்கள். சாரு போல அக்கவுண்ட் நம்பர் கொடுக்கும் உத்தேசமில்லை.எந்த ஆசையை எடுத்தாலும், பணத்தில் வந்தே முட்டுகிறது. பேசாமல் ஜனாதிபதி ஆகிவிடலாம். ஆனால், ஒன்றுக்கும் உதவாத இந்த மனசாட்சி கேட்டுத்தொலைக்காது. ஈமு கோழி போல எதாவது கரடி வளர்க்கும் திட்டம் ஆரம்பித்து ஏமாற்றலாம், ஆனால் இங்கும் மனசாட்சி இடிக்கிறது. சரி, எதாவது செய்வோம். ஆனால், இந்த ரொட்டீன் லைஃப் எனக்கு சரிப்படாது.  நான் செட்டில் ஆவது சுடுகாட்டில் தான்.

படம் ConAir. "You know what is insane. Working on a damn office from 9 to 5 for 50 years and then settling in a village, waiting for a day to die to save our dignity, that we go reach the rest room in time. That is insane"

என்னிடம் இந்த கேள்வி கேட்கும் அனைவருக்கும் இந்த பதிவின் சுட்டியை கொடுக்கப்போகிறேன். :-)

"மவனே இனிமே கேப்ப?"


Monday, April 29, 2013

மூன்று விஷயங்கள் : மற்றுமொரு பக்கம் 4


1. அந்த தோழி கல்லூரி பருவத்தை கடந்து ஆறேழு ஆண்டுகள் ஆகி இருக்கும். நேற்று நீயா நானாவை பார்த்து விட்டு, கல்லூரி கால நட்பில் பெண்கள் தன் நண்பனை தொட அனுமதிக்கக்கூடாது என்றார். எனக்கு தலை கிறுகிறுத்துவிட்டது. சிறு பிள்ளை போல குட் டச் பேட் டச் இவருக்கு சொல்லிக்கொடுக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. தொடுதல் என்றால் மாரை பிடித்து பிசைதல் என்று நினைத்திருப்பாரோ? ஏதோ ஒரு பாறையில் ஏறுகையில் கையை பிடித்து தூக்கி விடுதல், காய்ச்சல் அடிக்கும் போது "ஏன் டீ லூசு, டாக்ட்டர்ட்ட போனியா" என்று நெற்றி தொடுதல் எல்லாம் காமத்தில் சேருமென்றுஎன்னால் ஏற்கவே முடியவில்லை.

அந்த வயதிற்கென இருக்கும் இனக்கவர்ச்சியை நான் முழுதாக புறந்தள்ளவில்லை. அதே நேரத்தில், ஆக்சிடென்ட்டை தவிர்க்க ஹெல்மெட் போட்டு செல்வதற்கும், ரோட்டில் செல்லவே மாட்டேன் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. Explicit ஆக உன் சுண்டு விரல் கூட என் கை விரல்களின் மீது கூட படக்கூடாது என ஒரு ஆண் பெண் நட்பு இருப்பது சாத்தியமே இல்லை. நட்பின் அடிப்படையான நம்பிக்கை அங்கு சிதைக்கப்படுகிறதே?

பெற்றோர் பக்கம் நின்று ஒன்றே ஒன்றை சொல்கிறேன் - இப்படி முழுக்க உங்கள் கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கப்படும் பெண்ணை கல்லூரி முடிந்தவுடன் கட்டிக்க்கொடுப்பார்கள் எனில் கூட பரவாயில்லை. ஆனால், முழுக்க கட்டுப்பாட்டில் இருந்து விட்டு, வேலைக்கு செல்லும் போது முழுக்க சுதந்திரம் கிடைத்தால், அதை சரியாக பயன்படுத்தும் பக்குவம் அவர்களுக்கு இருக்காது. காரணம் நீங்கள் இத்தனை நாள் செய்த Spoon Feeding.

ஒரு வயதிற்கு என நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. பதின்ம வயதில் (Adolescence age) இனக்கவர்ச்சி அதில் ஒன்று. பெற்றோர்களாக நீங்களும் அதை கடந்தே வந்திருப்பீர்கள்.  கைப்பிடித்து வழிகாட்டியாக அந்த வயதில் உதவுதல் சரியாய் இருக்குமே அன்றி, அடைத்து வைத்து 22இல் டான்னு அவளுக்கு/அவனுக்கு பொறுப்பு வந்துரும் அப்ப அவுத்து உட்டுடுவேன் என்பது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். பொறுப்பு ஒரு Continuous process.

2. மேற்சொன்ன காரணிகள் நேராக இட்டுச்செல்வது எங்க பொண்ணு "தப்பா" போயிருமோ என்று. உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், காதலிப்பதை "தப்பு" என சொல்வீர்களே ஆனால், அவர்கள் உங்களை புழுவினும் கீழாகத்தான் பார்ப்பார்கள். என் சாதி சமூகம் தான் எனக்கு முக்கியம் என வெறி பிடித்து அலைபவர்கள் அலையுங்கள்; உங்களை திருத்துவது என் வேலை இல்லை.

  என் பெண்ணுக்கு தேர்ந்தெடுக்க தெரியாது அல்லது உறவினர்களால் சாதியை விட முடியாமல் பிடித்து தொங்குபவர்களுக்கு சொல்கிறேன், உங்கள் மகனுக்கோ மகளுக்கோ காதலிக்க கற்றுக்கொடுங்கள், தன் துணையை தேர்ந்தெடுக்க அவருக்கு உரிமையை கொடுக்கும் முன்னர், அதற்கான பக்குவத்தையும் நீங்களே உருவாக்கிவிடுங்கள்.

உங்கள் உறவினர்களுக்கு, சாதிக்கு நேர்மையாய் இருப்பதை விட, உங்கள் மார்பை தன் கவசமென எண்ணி, நீங்கள் நல்லதைத் தவிர வேறெதுவும் நினைக்க மாட்டீர்கள் என எண்ணி உங்கள் அனுமதி முக்கியமென எண்ணும் உங்கள் பெண்ணுக்கு பிடித்த அப்பாவை வாழ்ந்து பாருங்கள். அதன் சுகமே தனி சார்!

3. கமல் டீடீக்கு முத்தம் கொடுத்தது சரியா?

          ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா, முடியல. இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள். தனி மனித ஒழுக்கம் பேணுபவர்கள் யாரும் மற்றவர்கள் மீது அதை திணிக்க மாட்டார்கள். சொந்த வாழ்க்கையில் தான் ஒழுக்கம் என நம்புவதை கடை பிடிக்க முடியாதவர்களுக்கு "பார், இவனை விட நான் ஒழுக்கமானவன் தான்" என தன் மனதை சமாதானப்படுத்த ஒரு ஆள் தேவைப்படுகிறார். பார்க்கும் எல்லோரையும் குறை கூறி அதன் மூலம் தனது ஒழுக்கமின்மையை போக்கிக்கொள்கிறார்கள் இவர்கள்.

இவர்களுக்கான பதில் இது தான்.






ஏனய்யா, இது தவறென்றால்



இதுவும் தவறா?

மகள்களை பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று! - தங்க மீன்கள்.

Monday, March 25, 2013

கடவுள் - மற்றுமொரு பக்கம் - 3 :





                        கடவுள் குறித்த என்னுடைய  நினைவுகள் ஒரு மாரியம்மன் கோவிலில் என் அம்மாவுக்கு சாமி வந்திலிருந்து தொடங்குகின்றன.  எனக்கு மிகச்சிறிய வயது அப்போது. பார்த்தது நினைவில் இல்லை எனினும், அது குறித்து வீட்டில் அவ்வப்போது பேசியதின் விளைவாக தோன்றிய காட்சிப் பிம்பம் நான் அதை பார்த்ததாகவே எண்ணச்செய்கிறது. திருமணம் ஆகும் போது, அப்பா நாத்திகர் – திமுக காரர். சொற்பகாலம் கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். அரசியலை விட்டுவந்த பிறகு, குடும்பம்-குழந்தை என சுமை அழுத்த, ஏதோ ஒரு நோய்க்கு வேண்டப்போய் வழக்கம்போலவே ஆட்டுமந்தையிலொன்றாய் அரைகுறை ஆத்திகரானார் அப்பா. அரைகுறை என நான் குறிப்பிடுவதன் காரணம், கடவுள் குறித்த தர்க்கங்களோ, உணர்ச்சிகளோ இல்லையெனினும் "ஒரு வேள இருந்துட்டா... எதுக்கு வம்பு?" என சாமி கும்பிட வந்தவர் அவர்.

                            பால்ய காலங்களில் எனக்கு பிடித்த கற்பனை விளையாட்டு தோழர்களுள் தொந்தி விநாயகரும், முருகனும், ரேகான் என்ற ஒரு பேயும் கூட ஒரு அங்கம். பின்னொரு கோடைக்கால மதியத்தில், தொந்தியோடு இருப்பதால் தான் உனக்கு பெண் கிடைக்கவில்லை என கணபதியை நான் ஒரண்டை இழுக்க முடிவுக்கு வந்தது அந்த சினேகம்.  பின்னர் விவரம் தெரிந்துவிட்டதாக கர்வம் கொண்ட பொழுதுகளில் புத்தகங்களின் பால் ஈர்க்கப்பட்டு, பல மனிதர்களையும், கடவுள்களையும் தர்க்கங்களையும் கடந்த பின் சட்டென ஒரு நாள் கரைந்து போய் இருந்தது, சாமி கும்பிடும் பழக்கம்.

                   எதேச்சயாய் ஒரு நாள், அம்மா வைத்த விபூதியை தட்டிவிட்டு "எனக்கிதெல்லாம் பிடிக்கலம்மா" என்ற போது அவள் அதிர்ந்து தான் போயிருப்பாள். ஆனால், காலப்போக்கில், அவள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது , அப்பா "அம்மா... தாயே மகமாயி, காப்பாத்தும்மா" எனக்கதறி, "இந்த .... பயலாலதான் எல்லாம்... உன்னய பகச்சான்ல" என்ற போது, படுக்கையிலிருந்தவாரே உச்சு கொட்டி அவரை அதட்டியதும் அதே அம்மா தான். சட்டென கையைப்பிடித்து கரகரவென வந்த அழுகையை அடக்கிக்கொண்டேன். ஒரு வாரம் கழித்து அம்மா வீடு திரும்பிய அன்று அவளுக்கு தோசை ஊட்டிவிட்டுக்கொண்டிருக்கும் போது, "மொத வாய் உனக்கு" என அவள் என் கையை திருப்பி எனக்கே ஊட்டிவிட்ட போது தோன்றியது, கடவுளை வெளியில் தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

                              கடந்த வாரம் இஸ்லாமிய தோழி ஒருத்தியுடன் ஏதேச்சயாய் தொடங்கிய கடவுள் குறித்த விவாதம் பால்ய கால நினைவுகளை கிளறி விட்டது.  பத்து புத்தகங்களை படித்து விட்டு, "வேர் இஸ் திஸ் போப், ஐ வாண்ட் டூ ஆர்கியூ வித் ஹிம்" என அலைந்ததும், அனைத்து மதங்களையும் ஒட்டுமொத்தமாய் அழித்துவிட்டு மக்கள் திருந்தி தேன் ஆறு ஓட ஆரம்பிக்கையில் விழித்து காலி சொம்பில் தண்ணீர் துழாவிய கனவுகளுமாய் நினைவில் இழைகிறது.  யோசித்து பார்த்தால் வியப்பாய் இருக்கிறது, அறிவியல் எவ்வளவு வளர்ந்தால் என்ன? நம்பிக்கையை அடிப்படையாய் வைத்துக்கொண்டு பேசுகிற மனிதர்களிடம் எவ்வாறு விவாதிப்பது?
கல்பனா சாவ்லாவே விண்வெளிக்கு விநாயகரை தூக்கிச்சென்றாளே?
என்ன இருந்தாலும், எவ்வளவு சாதித்தாலும், மனித மனத்தால் சகித்துக்கொள்ள முடியாத பாரங்களை சுமக்க ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது. லஞ்சம் வாங்குவனாயினும், ஆரோக்கியம் வேண்டுபவனாயினும் கடவுளை பாட்னராக்கி கொள்வதில் மனத்திருப்தி காண்கிறார்கள்.

   

                             ஏதேனும் "விடுமுறை" நாட்களில் வீட்டு வாசலில் எந்த வேடம் அணிந்தவன் வந்து நின்றாலும், "இப்ப தான் இந்த கோவிலுக்கு போகணுமின்னு நெனச்சேன், சாமியே வந்துருச்சு" எனக்காசு போடுவார் அம்மா. நான் நினைத்துக்கொள்வேன், "அவனை பொறுத்த வரை நீ தான் சாமி". கடவுள் ஒரு நாளில் நேரில் வந்தால் அவரைக் கொன்று போடுவார்கள் என்றே தோன்றுகிறது (அய்ய்யய்யோ இது என் கதையின் ஒன் லைன் ஆச்சே, திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறேனே... சுட்டுடுவாங்களே...). பெரு நகரச் சாலையில் ஓவியம் வரைபனில் தொடங்கி, பொம்மை விற்பவன், சிலை வடிப்பவன், பிச்சை எடுப்பவர்கள், ஏன் மதசார்புள்ள (அற்றவும் தான்) அரசுகள் எத்தனை பேர் "இன் த நேம் ஆஃப் காட்"இல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கடவுள் நேரில் வந்தால், ஒரு நாளில் கோடிக்கணக்கானோரின் பிழைப்பு அம்பேல்!


                                                        எப்போது சாருவின் "முள்"ஐ மீள் வாசிப்பு செய்தாலும், கண் முன் தோன்றி மறையும்  "தீபா" ஒருத்தி விட்டுப் போன சவாலாய் இன்னமும் இருக்கிறது "உன்ன சாமி கும்பிட வெச்சு காமிக்கிறேன்". கோவிலுக்கு செல்லும் வழியில் விபத்தில் உயிரிழந்த நண்பனின் தாயின் சிதையை எரித்து விட்டு திரும்புகையில் கூடியிருந்த சனம் போலவே மனமும்  இல்லாத கடவுளை சபித்துக்கொண்டே வந்தது. உலகில் பலருக்கு கடவுள் குறித்த நம்பிக்கை இழப்புகளிலிருந்து தான் தொடங்குகிறது. பிரிவு, வறுமை, வேலை இழப்பு, பணம் பறிபோதல் , மரணம் என ஏதோ ஒன்றின் இழப்பில் தான் கடவுள் மீதான நம்பிக்கையோ, அவ நம்பிக்கையோ துவங்குகிறது. "கடவுள் இருக்கான் கொமாரு" என்றோ "என்ன சார் கடவுள் இது, என்ன மாதிரியான சிஸ்டம் சார் இது" என வெதும்பும் போதோ, எப்படியாயினும் கடவுள் குறித்த நம்பிக்கை உணர்வுப்பூர்வமானது.

"பசியிலிருப்பவனிடமும் காதலிருப்பவனிடமும்
அதன் அறிவியல் காரணிகளை சொல்லிக்கொண்டிருந்தால்
நீங்கள் ஒரு முட்டாள் அறிவுஜீவி"

                     என்ற என் பழைய கவிதை நினைவுக்கு வந்தது. இது கடவுள் நம்பிக்கைகக்கும் அட்சர சுத்தமாய் பொருந்தும் என்றே தோன்றுகிறது. ஈழத்தின் கதை எத்தனை பேரை நாத்திகராக்கியிருக்கும்? மொத்த குடும்பத்தையும் கோவிலுக்கு வண்டி கட்டி கிளம்பிய நாளில் பரிகொடுத்த மீதமிருக்கும் ஒருவர், இனி கோவிலுக்கு செல்வாரா? ஒரு சடலத்தை அடக்கம் செய்ய மின் மயானம் நோக்கிப்போகையில், யாரோ ஒருவர், "என் சமூகம் உனக்கு முன்பாக செல்கிறது" என மைக்கில் அலறுகிறாரே. அவர் ஏன் இன்னமும் ஆத்திகராய் இருக்கிறார்?

 நீலமணியின் கவிதை ஒன்று நினைவுச்சுழலில் இருந்து வந்து விழுகிறது

"தட்டினால் திறக்கப்படும் என்கிறார்கள்
சாத்தி வைப்பானேன்?"

இன்னொன்று, நீலமணி இந்த மாதிரி ஹைக்கூக்களில் கில்லாடி

"என்ன வரம் வேண்டுமென்று கேட்டார் கடவுள்
 அது தெரியாத நீ என்ன கடவுளென்றேன்"

                                         மனவளர்ச்சியற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்றில் சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்க்கும் இன்பராஜ், சுமதி டீச்சர், அக்குழந்தைகளை கவனிப்பதையே தனது வாழ்கையாக்கிக்கொண்ட சாந்தி பெர்ணாண்டஸ் சிஸ்டர், போராடுவதையே வாழ்கையாக்கிக்கொண்ட திருமுருகன் காந்தி அண்ணன் போன்றோர், பிச்சை எடுத்தாலும் குழந்தைகளை யாராவது பிச்சை எடுக்கவிடுவதைக்கண்டால் பொங்கி அவர்களிடம் குழந்தையை மீட்கும் ஒரு முதிய பிச்சைக்காரர், உலகம் அழியுமென வதந்தி கிளம்பிய அன்று ஒரு லட்சத்தை எல்லோருக்கும் பிரித்து வழங்கிய ஈரோட்டு பெரியவர் என எத்தனை எத்தனை கடவுள்களால் சூழப்பட்டு இருக்கிறோம் நாம். எப்போதோ மேத்ஸ் நோட்டின் கடைசி பக்கத்தில் எழுதிய பழைய கவிதை ஒன்று நினைவில் இடறுகிறது.

"பார்க்குமிடமெங்கும் பரவிக்கிடக்கிறார் கடவுள்
 நின்று புன்னகைக்க நேரமின்றி
விரைந்து கடக்கிறோம் நாம்
கோவிலுக்கு."

Monday, February 4, 2013

கமலும் நானும் : தேவர் மகனிலிருந்து விஸ்வரூபம் வரை!

                 எனக்கு கமலை ஒரு கலைஞனாக நிரம்ப பிடிக்கும். தமிழ் நாட்டில் உள்ள பல் துறை திறமைகளை உள்ளடக்கிய வெகு சில நைச்சியமான கலைஞர்களுள் கமலும் ஒருவர். ஒரு கலைஞனுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே விஸ்வரூபத்தின் வெளியீட்டை மனப்பூர்வமாக ஆதரித்தேன். யூ ட்யூபிலேயே உள்ள கொலைக்காட்சிகளை விஸ்வரூபத்தில் எடுத்தால் எதிர்ப்போம் என்பது வெறும் ஸ்டண்ட்டு தான். ஆனால், இதுவே கமல் குறித்த என் மதிப்பீடாக எடுத்துக்கொள்ளப்படுவதை நான் விரும்பவில்லை.



              சதிலீலாவதி தொடங்கி மைக்கேல் மதன காமராஜன், வசூல் ராஜா, பஞ்ச தந்திரம் என க்ரேசி-கமல் கூட்டணியை ம்ம்ம் டிவைன் என ரசித்து சுவைத்தவன் தான் நானும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர். பொதுவில் ஒழுக்கம் குறித்து பேசிக்கொண்டு உள்ளுக்குள் அழுக்கை தேக்கும் கோமாளிகள் போல் அல்லாமல், தன் தாம்பத்திய/செக்ஸ் வாழ்க்கையில் வெளிப்படை தன்மையை கடைபிடித்தவர் என பல விஷயங்கள் அவரிடம் எனக்கு பிடிக்கும். இவ்வளவு ஏன்? ஸ்ருதி ஹாசனை அவர் வளர்த்த விதம் இன்று வரை எனக்கு ஆச்சரியம் தான். இதில் என்ன ஆச்சரியம் என்பவர்கள், சம காலத்தில் ஐஸ்வர்யா ரஜினி எவ்வாறு வளர்ந்தார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.



           "ஹே ராம்" போன்ற படம் எடுக்க நிறைய துணிச்சல் வேண்டும். இதில் சுவையே காந்தி "ஹே ராம்" என்றே கத்தவில்லை என்றது தான். கோட்சேவின் கூற்றுப்படி அவ்வளவு சக்தி வாய்ந்த தோட்டாக்களை நெஞ்சில் தாங்கிய வயதான ஒருவர் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாது. நாம் காந்தியை பிம்பமாக பார்த்து பழகிவிட்டதால், காங்கிரஸ் பேரியக்கம் அப்படி அதை வார்த்து விட்டதால் தான் இப்படி. சரி போகட்டும். இப்படி பல விதங்களில் எனக்கு கமலை பிடிக்கும்.



                   நிற்க. ஆனால், நல்லதொரு ரசிகனின் குணம், வெறுமனே முகஸ்துதி செய்வதல்ல. விமர்சிப்பதும் தான். எனக்கு கமலின் சில விமர்சனங்களும் ஆதங்கங்களும் இருக்கவே செய்தன. முதலில் நான் கண்டிக்க வேண்டியது, தேவர் மகனிலும், விருமாண்டியிலும் கமல் கக்கிய நீறு பூத்த நெருப்பாக ஜாதி வெறி. இதிலெல்லாம் ஜாதி வெறியை தூண்டு காட்சிகள் இருக்கு என்று நான் சொல்லவில்லை. இல்லாமலிருந்தால், நன்றாய் இருந்திருக்கும் என்று தான் சொல்கிறேன். முதலில், இது எப்படி ஜாதி வெறியாகும் என கேட்பவர்களுக்கு : ஒரு படம் பார்க்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, ஸ்படர் மேனோ அல்லது நம்ம ஊர் சிவாஜியோ அல்லது அந்நியனோ, திரை அரங்கை விட்டு வெளியேறிய சில மணி நேரத்துக்கு நாம் நம்மை அந்த ஹீரோவாகவே நினைத்துக்கொள்வோம். நம் நடை பாவனை எல்லாம் அவரை இமிடேட் செய்ய முயற்சிக்கும். சிறு வயதில் அதிகமாய் இருக்கும் இந்த எண்ணம், வயதாக வயதாக குறையும். ஆனாலும், என்ன தான் தைரியசாலியாய், நாத்திகனாய் இருந்தாலும் கூட ஒரு திரில்லர் பார்த்துவிட்டு இருட்டை பார்த்தால் சற்று கிலி பிடிக்கத்தான் செய்யும். அதே தான். பெயரின் பின்னால் தேவர், நாடார் என சாதிப்பெயர்கள் ஒட்டிக்கொண்டிருந்த காலகட்டம் இது.


"போற்றிப்பாடடி பொண்ணே..தேவர் காலடி மண்ணே...
 பெருசெல்லாம் சொன்னாங்க... சொன்னபடி நின்னாங்க...
 முக்குலத்த சேர்ந்த தேவர் மகன் தான்...
  முன்னோருக்கு முன்னோரெல்லாம்.....1 2 3 அல்ல ( நூத்து கணக்காம்)"

                   இளசுகள் மத்தியில் சாதி வெறி தூவ இது போதாதா? தன் தந்தையை, தன் குலத்தை பற்றிய பெருமை, அதன் போதை அவன் மனதில் ஏறாதா? இதே படத்தில் வில்லனும் அதே சாதி ஆனாலும், அவனாக தன்னை கற்பனை செய்ய ரசிகன் என்ன கிறுக்கனா? ஒரு தகவல் சொல்கிறேன் கேளுங்கள். கிரேக்க கொடுங்கோல் மன்னன் கலிக்யூலா முதல் ஹிட்லர், ஜப்பான், அமெரிக்கா (இரண்டாம் உலகப்போரின் போது) வரை கடவுளின் வழியில் நேரடியாக பிறந்தவர்கள் நாம் எனக்கூறி தான் போர் வெறியை தன் சிப்பாய்களுக்கு ஊட்டினார்கள்.  விருமாண்டியிலும் இதே ரீதியில், தான் சண்டியர் என குறிப்பிட்ட இளைஞர்கள் திரிய சில திரிகள் இருந்தன.



      இரண்டாவது, நம் தமிழ் சமூகம் முட்டாள்கள் நிரம்பியது (கட்ஜு சொன்னது போல). இதில் வேடிக்கை, அதில் முட்டாள்கள் பலரும் அறிவு ஜீவி பட்டத்தை கட்டிக்கொண்டு ஒரு சமூக பாதுகாப்பில் இருப்பது தான். சரி, விஷயத்திற்கு வருவோம். இத்தகைய முட்டாள் சமூகத்துக்கு, செய்தி சொல்ல சரியான ஊடகம் சினிமா தான். யோசித்து பாருங்கள், எம்.ஜி.ஆருக்கு பிறகு இங்கு சினிமா தொடர்பில்லாத முதல்வர்களே இல்லை. சினிமாவையும், நிஜத்தையும் பிரித்து பார்க்க முடியாத மக்கள் தானே, விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க காரணம்? இத்தகைய சூழலில், பகுத்தறிவை வளர்க்கும் வண்ணம் அவர் ஒரு படம் எடுக்கலைன்னு தான் சொல்லுவேன். "அன்பே சிவம்" ஒரு அற்புதமான படம். எனக்கு அதில் நிறைய மாற்றங்கள் வேண்டும் என தோன்றினாலும், தமிழ் சினிமாவிற்கு இதுவே மிகை. (கழுத்து வரைக்கும் பட்டன் போட்டது அவ்வ்) இதையும் மாற்றினால், அது ஈரானியப்படமாகிவிடும், ஒரு பய தியேட்டருக்கு வரமாட்டான்.



       ஆனால், அன்பே சிவம் தவிர்த்து பெரிய அளவில் கமல் நாத்திகத்தை பரப்பவில்லை. இந்து மதத்தை சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஓட்டினாலும், சைவத்தை மட்டுமே ஓட்டுவதாகக்கூட ஒரு புகார் உண்டு. ஆனால், கமல் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என நான் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன். உன்னைப்போல் ஒருவனிலும் கூட அவர் இந்து மதத்தையும் இஸ்லாத்தையும் ஓட்டிய காட்சியெல்லாம் உண்டு. அவர் சொல்ல வரும் நுண்ணிய கருத்துக்களெல்லாம் ஏ சென்ட்டரோடு முடிந்து போய் விடுவதில் எனக்கு ஏக வருத்தம் தான்.

       மற்றபடி, எனக்கு எல்லா மதங்களும் முட்டாள்தனங்கள் தான் என்பதால், மத உணர்வுகளை புண்படுத்துதல் பற்றி பெரிதாய் கவலையில்லை. முட்டாள்கள் கும்பலாக இருப்பதினால், தனி மனிதன் அவர்களை அறிவின் பக்கம் இழுக்க நினைப்பது ஆபத்து தானே என்பதால் அதை வருத்தத்தோடு தவிர்க்க வேண்டியுள்ளது.


கமல் ரசிகர்களுக்கு ஓரு ட்ரீட் விடீயோ :



கடைசியாய் கமலுக்கு சில வரிகள் :

                       நீங்கள் வியாபாரி என எத்தனை தடவை நீங்களே சொன்னாலும், அதை வெறுமே நம்ப மனம் மறுக்கிறது கமல். தமிழகத்தில் போதுமான அளவு குரல் உள்ளவர் நீங்கள். செய்ய வேண்டியவை நிறைய உள்ளது ஒரு கலைஞனாக மட்டுமல்ல மனிதனாகவும்.

                                                                                                                                                                                செய்வீர்கள் என்ற  நம்பிக்கையில்,
                                                                                                                                                                                         உங்கள் மற்றுமொரு ரசிகன்



Tuesday, January 29, 2013

அனுபவம் : திருப்பூர் புத்தக கண்காட்சி


               புத்தகம் என்ற வார்த்தையை பிரித்தெழுதச்சொன்னால் புது அகம் என்றே பிரிப்பேன் நான்.  நண்பர் வேதாளம் ஒரு முறை அவருக்கு மிகப்பிடித்த கீச்சுகளில் ஒன்றாக “புத்தகங்கள் புரட்டுகின்றன, நம்மை” என்ற கீச்சை குறிப்பிட்டார். மனதிற்கு அவ்வளவு நெருக்கமானவை புத்தகங்கள். ஒரு வாசிப்பனுபவம் தரும் சுகம், ஒரு அனாதாமதேய பயணம் தரும் சுகத்தை ஒத்தது. யோசித்து பாருங்கள், அரூவமாக ஒரு பயணம், பிறிதொருவரின் வாழ்க்கையினூடே, அவர்களின் அனுபவங்களினூடே, அவர்களின் சுகதுக்களினூடே, அவர்களின் அழுகைனூடே ஒரு பயணம். யாரோ ஒருவராக, அடையளமற்றவராக பயணிப்பது சுகம். புத்தகங்கள் வாயிலாக நாம் வாழ்வை ரசமாக தரிசிக்க முடியும்.

             மூன்று நாட்கள் கொடைக்கானல் சுற்றுலா முடிந்து, இன்று தான் திருப்பூர் புத்தக திருவிழா செல்லும் பேரு வாய்த்தது. ஐந்தரை மணி வாக்கில் உள்ளே நுழைந்தேன். ஆரம்பம் தொட்டே புத்தகங்கள் என்னை கேலி செய்து கொண்டே இருந்தது போல பிரமை தட்டியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. புத்தகங்களை வாங்கும் போது முதலில் விலையை தேடும் அனுபவம் நிறைய வலி தரக்கூடியது. விலைக்காக ஒரு நூலை புறக்கணித்தல் அவ்வளவு எளிதானதல்ல. ஒரு குவளை நீரை இரு மான்கள் குடிக்க நினைத்தது போல, இரண்டு புத்தகங்களில் ஒன்றை எடுக்க சொன்னால் மனது வெறுமனே என்னை முறைக்கிறது. இன்று வாங்க வேண்டிய புத்தகங்கள் குறித்து ஒரு கணக்கெடுக்கத்தான் வந்திருந்தேன் என்பதால், மனதுக்குள் புத்தகங்களை வரிசைப்படித்தியபடியே நடந்தேன்.

                   காவல் கோட்டம் (சாகித்திய அகாதெமி ஸ்டாலில் குறைந்த விலையில் கிடைக்கிறது), கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை, ஜானகிராமனின் மோக முள், பா.ராவின் டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம், எஸ்.ராவின் புத்தனாவது சுலபம், ஆலீஸின் அற்புத உலகம், ஆதலினால் உட்பட சில புத்தகங்கள், கி.ராவின் புத்தகங்களில் நான்கு, அழகிய பெரியவனின் சமீபத்திய நூல்கள், ஜெமோவின் அனல்காற்று, விஷ்ணுபுரம், கொற்றவை, பின்தொடரும் நிழலின் குரல், ஜே.கேவின் நூல்கள் இரண்டு, சுந்தர ராமசாமியின் நூல்கள், அ.முத்து கிருஷ்ணனின் “அப்சலை தூக்கிலிடாதே” (அருந்ததி ராய் எழுதியதன் மொழிபெயர்ப்பு), மலம் தோய்ந்த மானுடம், கூடங்குளம் பற்றிய ஒரு நூல், பிரமிளின் மறு பதிப்புகள், வண்ண நிலவனின் மறக்க முடியாத மனிதர்கள், லா.ச.ராவின் நூல்கள் சில, கலைஞரின் நெஞ்சுக்கு நீதி, யாரோ ஒருவர் எழுதிய அடியாள் என்ற நூல், அசோகமித்திரனின் சில நாவல்கள், சாருவின் எக்சைல், எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், காமரூப கதைகள், ஜீரோ டிகிரி, என் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதாவின் நூல்களுள் நான் படிக்காதவை என பட்டியலின் நீளம் பெரிதாகிக்கொண்டே போனது. (இதைத்தவிர சில நூல்கள் மனதில் குறித்தவை, பெயர் மறந்துவிட்டது) இதைத்தவிர அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி, லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் (War and peace) சிட்னி ஷெல்டன், அகதா கிறிஸ்டி, ஜெஃப்ரி ஆர்சர் எழுதிய சில நூல்களை குறித்து தொலைத்துவிட்டேன். மொத்தம் கணக்குப்படி பதினோறாயிரத்தை தாண்டி விட்டது. இதுவும் கூட நிறைய குறைத்தலுக்கு பின்னால் தான். நண்பர்கள் சிலர் புத்தகம் பகிர்வதாக சொல்லியுள்ளதால், அவர்களோடு கலந்தாலோசித்த பின் இன்னமும் குறையலாம். கிழக்கில் அரவிந்தன் நீலகண்டன் விஷம் கக்கியிருக்கும் கம்யூனிசம் குறித்த நூல் இருந்தது வாங்கலாமா வேண்டாமா என யோசித்தபடி இருக்கிறேன்.

            
காலச்சுவடு பதிப்பகத்தை மேய்ந்து கொண்டிருந்த போது, உங்கள் பெயரென்ன என ஒருவர் கேட்டார். ஆ, எங்கேயோ பார்த்த முகம் என அவதானப்பதற்குள் என் பெயரைச்சொல்லி தான் தான் அரசு என அறிமுகப்படுத்திக்கொண்டார். ஏற்கனவே, இவரது புகைப்படத்தை பார்த்து தொலைபேசியிலும் அளவளாவி இருக்கிறேன் எனினும்,  நேரில் இன்னமும் இளமையாக தோன்றுகிறார். இவரை தம்பி என விளிப்பதா இல்லை அண்ணனென்பதா என ஒரு கணம் குழம்பிப்போனேன். இவரோடு பதிவர் சிவா அண்ணனும், லெனினும் (கீழே இருக்கும் வீடியோவில் நம் ராஜநாயஹம் சாரை பேட்டி கண்டவர்) உடனிருந்தார். புத்தகங்கள் குறித்தும் எதிலிருந்து இலக்கியத்தை தொடங்கலாம் என்றும் வழிகாட்டினார்கள். ஒவ்வொருவரும் ஒரு நூலகம் நடத்துமளவு புத்தகம் குவித்துள்ளவர்கள். மணல் கடிகை, மோக முள் ஆகியற்றை வாங்குமாறு அண்ணன் பரிந்துரைத்தார். (ஏற்கனவே லிஸ்டில் இருந்ததை அவரிடம் நான் சொல்லவில்லை). அண்ணன் பரிந்துரைத்த ஜேஜே சில குறிப்புகளை ( நீண்ட நாட்களாக படிக்க நினைத்த நூல்) ஒரு பதிவர் எனக்கு ஓசியில் தருவதாக சொல்லி இழுத்தடித்த கதையை இங்கே நினைவு கூர்கிறேன் (ஏனுங்க உங்களுக்குத்தான் J).

   நான் பார்த்த வரை பெரும்பாலான கூட்டம், சமையல் செய்யும் நூல்கள், ஜோதிட நூல்கள் என ரயிலில் விற்கக்கூடிய புத்தகங்களையே அதிகம் மொய்த்தது. இதை விட அதிக கூட்டம் டெல்லி அப்பளத்துக்கும், பஞ்சு மிட்டாய்க்கும் தான் அலை மோதியது. நிறைய நல்ல இலக்கிய நூல்களை வாங்க ஆளிலில்லாது போல ஒரு தோற்றம். எல்லா ஸ்டால்களிலும் நன்றாகவே புத்தகம் அடுக்கி இருந்தார்கள், உயிர்மையைத்தவிர. உயிர்மையில் நூல்களை தேட வேண்டி இருந்தது.

சாகித்திய அகாதெமி ஸ்டாலில் பல நூல்கள் சகாய விலையில் கிடைத்தது, மனதுக்கு ஆறுதலளித்தது. சேர்தளம் நண்பர்கள் இம்முறை ஒரு ஸ்டால் அமைத்திருந்தார்கள்.



இன்னமும் காத்திருக்கின்றன புத்தகங்கள். வாங்கிவந்து மறுபடியும் எழுதுகிறேன்.  
          
Verdict : திருப்பூர் சுற்று வட்டாரங்களில் இருப்பின் தவறவிடாமல் வாருங்கள். புத்தகங்கள் நம்மை தேர்ந்தெடுக்கட்டும்!