Flipkart

Amazon

Amazon

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, September 18, 2014

ஜில் கதை‬ - 2

https://www.facebook.com/SHAN4Luv/posts/860157000664185

இன்று மதியம் தான் ஜில்லை பார்க்க நேரம் வாய்த்தது. காலையில் இருவருவமே அவரவர் அமேரிக்க ஆன்சைட்டிடம் பொய் சொல்லிக்கொண்டிருந்தோம். மதியம் என் பழைய டீம்மேட் ஒருத்தனை பார்க்க செல்கையில் எதிர்பட்டாள்.


இந்த முறையும் வழியை மறித்தபடியே தான் நின்றாள். அவளை கவனியாயது போல, இயல்பாக எக்ஸ்கியூஸ் மீ சொல்லியபடியே அவள் இடுப்பை தொட்டு இன்னொரு புறம் நகர்த்த பார்த்தேன். கையை தட்டிவிட்டு விட்டு முறைத்தாள். இரு கைகளையும் தனது மணல் முகடுகளுக்கு குறுக்காக கட்டியபடி, இடப்புறமாக சற்றேறக்குறைய 60 டிகிரி கோணத்தில் கீழே பார்த்து முறைத்தாள்.


நான் அவள் முகத்தை என்னை நோக்கி திருப்ப முயன்றேன். பிடிக்கும் போது போக்கு காட்டி பின் வழுக்கும் சாரைப்பாம்பு போல, என்னை ஒரே ஒரு மைக்ரோ வினாடி தனது பார்வையால் தீண்டி விட்டு வலப்பக்கம் திரும்பிக்கொண்டாள். அவள் கூந்தல் மெல்ல என் கைகளின் மேல் உரசி விலகியது. அவற்றை லேசாக இழுத்து, கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் உலவவிட்டபடியே மெல்ல தடவினேன்.


உங்களிடம் சொல்லி இருக்கிறேனா? பொதுவாகவே எனக்கு பெண்களிடம் ஈர்ப்பான விஷயம் கூந்தல் தான். புதிதாய் பிறந்த பூனைக்குட்டிக்கு மூன்றாம் வாரம் முளைக்கும் மீசை போல அவ்வளவு மென்மையான முடி ஜில்லுக்கு.. அவள் தலையை கோதி விட்டு முகர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொர்க்கத்தில் இப்படித்தான் வாசனை அடிக்கும் என மனப்பூர்வமாக நம்பி வந்திருக்கிறேன்.


அடர்த்தியான கருப்பில் லேசான பழுப்பு தூவிய நிறம். அவளிடம் நான் விழுந்ததே அந்த மசுருக்காத்தான் என பல முறை சொல்லியிருக்கிறேன். அவளுக்கு "மயிர்" என்ற வார்த்தை பிடிக்காது. கிடக்கட்டும். என்ன என்றேன். இது F1 ட்ராக்காடா என்றாள் தனது செந்நிற வானவில்லை சுட்டினாள். யாரோ மொழிபெயர்த்து படித்துக்காட்டியிருக்கிறார்கள். தமிழை பொறுமையாய் எழுத்துக்கூட்டி படிக்கும் ஜாதியில்லை அவள்.


சிரித்தபடியே இன்னமும் என்னென்னவோ சொல்லலாமே என்றேன். ஏவாளின் புருவம், மாலை பீடித்த ஆறாம் விநாடி இளம் ஆரஞ்சில் தென்படும் மூன்றாம் பிறை நிலா....


ஸ்ஸ் நிறுத்து என்றாள்.


இதழோரம் புன்னகையை தேக்கியபடி, அவள் விழி முயல்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணின் குழிக்குள்ளிருந்து தப்பிக்க வழி தேடுவது போல அவை அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. மீண்டும் தலையை குனிந்த படி ஏதோ முணுமுணுத்தாள்.


சிரித்தபடியே யாரேனும் கவனிக்கிறார்களா என சுற்றிலும் லேசாக தலையை திருப்பி, இமையை முழுவதாக கீழிறக்கி மீண்டும் திறக்கையில் விழியை மறுபுறம் கொண்டு சென்று பார்த்தேன். அங்குமிங்குமாக சிலர் அரைப்பார்வையும் முழு கவனத்தையும் என் மீது வைத்துக்கொண்டிருந்தார்கள்.


சட்டென கன்னத்தில் ஏதோ பாதி வெட்டிய ஸ்ட்ராபெரி பழமொன்று உரசினாற் போல் இருந்தது. திரும்பிப்பார்த்தேன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கம்பளம் விரிக்கப்பட்ட தரை ஏசியில் விரைத்து கிடந்தது. ஜில்லு தென்படவில்லை.


#ஜில்_கதைகள் ‪#‎ஜில்_கதை_2‬ ‪#‎தொடரும்‬

ஜில் கதைகள் - 1

https://www.facebook.com/SHAN4Luv/posts/859717640708121

இன்று காலை அலுவலக மிஷினில் காபி பிடித்து காலை உணவை முடிக்கலாமென சக்கரை பாக்கெட்டை பிரித்து கோப்பையில் கொட்டிக்கொண்டிருந்தேன். ஜில் திடீரென எங்கிருந்தோ முளைத்து எனக்கும் மெஷினுக்குமான இடைவெளியை விண்வெளியாக்கியடி நின்றாள்.


கண்களில் நிஜக்கோபம். உதடு லேசாக சுழித்திருந்தாள். அடிக்கடி சொல்லியிருக்கிறேன். ஜில்லு உன் கோபம் தான் உன் பாவனைகளிலேயே செக்ஸியானது. அலுவலகத்தில் கோபப்படாதே, முத்தம் கூட தர முடியாமல் என் அவஸ்தை தாளது என்று. பெண்கள் என்றைக்கு என் பேச்சை கேட்டிருக்கிறார்கள். சரி, பொதுப்படுத்த வேண்டாம், ஜில்லு என்றைக்கும் கேட்டதில்லை.


மீண்டும் ஒரு முறை முன் விழுந்த முடியை கோதி, தனது எஃப். ஒன் சர்க்க்யூட் வளைவுகளில் இரு கைகளையும் வைத்து முறைப்பு மாறாமல் நின்றாள். எனக்கு புரிந்தது. கடந்த ஒரு வாரத்தில் எங்கேயோ வைத்து, விரலிடுக்கில் சிகரட்டோடொ, முகமருகே புகை பாவவோ என்னை பார்த்திருக்கிறாள். ரெட் லைட் ஏரியா சென்றால் கூட சரி, சிகரெட் ஆகவே ஆகாது என்றிருக்கிறாள் ஒரு முறை.


"என்ன?"


"என்ன?"


"என்ன, சொல்லு"


"தம் அடிக்கறியா?"


"ம்ம்.."


"தைரியமா...ம்ம்ம்ங்கற"


"ம்ம்ம்..."


"இப்ப எதுக்கு இதெல்லாம்?"


"ம்ம்.."


"இப்ப மரியாதையா காரணம் சொல்லப்போறியா இல்லையா?"


"பெரிசா காரணம் எதுவும் இல்ல, அடிக்காம இருக்க" என்றேன்.


ஒரு நொடி விட்டத்தில் இருந்து தவறி விழுந்த பூனை போல் பார்த்தவள், ஒரு கெட்டவார்த்தையோடு சேர்த்து 'நான் இல்ல' என்பதையும் முணுமுணுத்துவிட்டு, கையிலிருந்த காபிக்கோப்பையை பிடுங்கி குப்பையில் எறிந்து விட்டுப்போனாள்.


சிரித்தபடியே மீண்டும் ஒரு பேப்பர் கப்பை எடுத்து சக்கரை நிரப்ப ஆரம்பித்தேன். அதில் ஏற்கன்வே சர்க்கரை இருந்தது


‪#‎ஜில்_கதைகள்‬ ‪#‎தொடரும்‬

Monday, December 17, 2012

கடற்கரை(றை) - சிறுகதை


                 உப்பு வாசம் கலந்த பழக்கப்பட்ட காற்று முகத்தில் அறைந்து முடியை அலைந்து விட்டு சென்றது. செருப்புகளை பைக்கினருகில் கழட்டி விட்டு விட்டு, வாசுகியின் கையை லேசாகப்பற்றியபடி மணலில் ஏறி நடக்கத்தொடங்கினான் விநயன். வாசுகி, விரல்களை அவன் உள்ளங்கையில் நிரடிக்கொண்டே நடந்தாள். புதிதாய் உடைத்துத் துருவிய தேங்காய் என குறுகுறுப்பூட்டியது அவள் விரல்கள்.  

                      இருவரது கைகளும் கண்ணாம்மூச்சி ஆடிக்கொண்டே வந்தன. வாசுகி, அவன் தோள் மீது சாய்வதும் நகர்வதுமாக       இருந்தாள். மண்ணில் அவர்கள் கால்கள் புதைவதும் எழுவதும் ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம் போல ஒரு               ஒத்திசைவை கொண்டிருந்தன.  

                      வானம் வாசுகியின் மேனியை பிரதிபலிப்பதாய் வெளிர் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது. வானத்தை பார்த்துக் கொண்டே நடந்த விநயனை தன் முகம் நோக்கித்திருப்பினாள் வாசுகி.

“ம்ம்…”

“இன்னியோட ரெண்டு வருஷமாச்சு”

“ம்ம்…”

“இன்னமும் ரெண்டு வாரத்துல என்ன இன்னோருத்தன் கைல புடிச்சுக்கொடுத்துருவாங்க, அப்பறம் இதே பீச்சுல ம்ம் ம்ம்ன்னு பினாத்திண்டு அலையப்போறேள்”

சிரித்துக்கொண்டான் விநயன். அவளது செயற்கையான வழக்குக்கென யூகித்துக்கொண்டாள்.

“அப்படி விட்டுடுவனா என் செல்லத்த? இப்ப கூட நீ சரின்னு சொன்னா உங்க அப்பா கிட்ட பேசுறேன்”.


             இதற்குள் கடல் சொற்ப தொலைவில் வந்திருக்க, உட்கார தோதான இடத்தை நான்கு கண்களும் பிரிந்து தேடின. சுற்றிலும் மணலைக் காட்டிலும் அதிகமாய் காதல் ஜோடிகள் அமர்ந்திருந்தன. இந்தியாவில் மக்கள் தொகை பெருகியதற்காக மீண்டும் ஒருமுறை வருத்தப்பட்டான் விநயன். வாசுகியின் கையை இன்னமும் இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தான். வாசுகி அவனுக்கு கிடைத்த ஒரு பரிசு. அவனுக்கு கிடைத்த ஒரே பரிசு. சிறு வயது முதல் தாய் தந்தை முகத்தைக் கூட பார்க்காமல் அநாதை பட்டம் சூடி வளர்ந்தவனுக்கு அன்பின் மொத்த உருவாய் கிடைத்தாள் அவள்.

            இதற்குள் ஒரு ஜோடி மணலை தட்டிவிட்டபடியே ஒரு நிலப்பரப்பை காலி செய்ய, விநயனும் வாசுகியும் அந்த இடத்தை தற்காலிகமாக நிரப்பினர். வாசுகி கையில் மணலை குவித்துப் பார்ப்பதும், பின் அதை தன் விரல்களினூடாக அருவி போல் கொட்டுவதுமாக இருந்தாள். விநயன் கழுத்தை முடிந்தவாக்கிலெல்லாம் திருப்பி கண்ணில் பட்டவர்களை கவனித்துக்கொண்டிருந்தான்.

     அவன் கவனத்தை கலைக்கும் விதமாக அவன் காது மடல்களை அவளது உஷ்ண சுவாசம் தீண்டியது. முகத்தை திருப்பி அந்த சுகத்தை இழக்க விரும்பாதவனாய், அவள் மடி மீது வைத்திருந்த தன் தலையை திருப்பாமலேயே “ம்ம்ம்ம்…” என்றான்.

“வந்ததுல இருந்து உம்முகொட்டிக்கிட்டே இருக்கீங்க. வேற எதுவுமே பேசல, இப்ப பேசப்போறீங்களா? இல்ல நான் போகட்டா?” போலியாய் கோபப்பட்டுக்கொண்டே அவன் மடி வைத்திருந்த தொடையை மெல்ல அசைத்தாள் வாசுகி.

“எத்தனை காதல் ஜோடிகள் பாத்தியா?” சம்மந்தம் இல்லாமல் ஒரு கேள்வியை கேட்ட அவனை பொய்க்கோபம் மாறாமல் பார்த்தாள் வாசுகி.

“நம்ம கதைய கேக்கவே யாரும் இல்ல… இதுல ஊர்ல இருக்கறவங்க கத நமக்கெதுக்கு?”

“இதுல எல்லாருமே நம்மல மாதிரி காதலிக்கறவங்கன்னு சொல்ல முடியாது. கள்ளக்காதல் ஜோடிங்க கூட நிறைய இருக்காங்க. எங்க ஆபிஸ் ல சுமதி இருக்க்காள்ள….” சொல்லிக்கொண்டே கொண்டே போனவனை அசுவாரசியமாய் பார்த்தாள் வாசுகி. உரையாடலின் இடையிலும் அவன் முடிகளை கோதிக்கொண்டிருந்த தன் விரல்களை நிறுத்தினாள் வாசுகி.

“எனக்கென்னவோ அந்த மும்பை மாபிள்ளைக்குத்தான் வாசுகிய கட்டிக்கற யோகமோன்னு தோணுது”

“அப்ப நான் தப்பிச்சேனா?” கேட்டுக்கொண்டே தன் விரல்களை அவள் இடையில் படர விட்டான் விநயன். பேசுவதை ஒரு வினாடி நிறுத்திவிட்டு சொக்கிக்கிடந்த வாசுகி, பின் சுதாரித்து அவன் விரல்களை கிள்ளி அங்கிருந்து எடுத்து விட்டாள்.

“சரி, கிளம்பு போய் மிஸ்டர் சந்திரமௌலிய பார்த்து இப்பவே பொண்ணு கேக்கறேன்”

“ஆமாம் இவரு மௌன ராகம் கார்த்திக்…. தம்பி எங்கப்பா தளபதி படத்துல வர ஷோபனா அப்பா கேரக்ட்டர், முடிவு மாற மாட்டார்.”

“பாத்துக்கலாம்” எல்லா ஆண்களும் சொல்லும் அதே அசால்ட்டான அபிநயத்தில் சொன்னான். பேதைகளுக்கு தைரியமூட்டுவதாய் எண்ணி கற்காலத்திலிருந்து சொல்லப்படும் வார்த்தை அது.

“இதுங்களுக்கெல்லாம் வேற எடமா கெடைக்கல, இங்க வந்து தான் இவனுங்க காதல வளக்கணுமாம், கொழந்த குட்டிய கூட்டிக்கு  வர முடியுதா?” ஒருவன் லேசான போதை வாடையடிக்க இவர்களை பார்த்தப்படியே திட்டிக்கொண்டே மணல் துகள்கள் காலை இடற தள்ளாடியபடி நடந்தான்.


   ஆரம்பத்தில் எல்லாம் இப்படி நடந்தால், விநயன் கோபப்படுவதும், சொன்னவனை அடிக்கப்பாய்வதும் அடிக்கடி நடக்கும். காலப்போக்கில் இதெல்லாம் பழகிவிட, அமைதியாய் இருக்கக் கற்றுக்கொண்டான்.
ஆனபோதும் உதடுகள் “ஏன் நீ தான் கட்டி விடுறது…”  என முணுமுணுத்தன. 

       இன்னமும் மடியிலிருந்து தலையை எடுக்காமலேயே அவளைப்பார்த்துச்சொன்னான் “ஏதோ இவனுங்க எல்லாம் யோக்கியம் மாதிரி?”

“ஏன்? அவர் கேட்டது சரி தான? நாம பண்றது தப்பு தானே?” அவனை சீண்டி விடுவதற்கென்ற எள்ளல் தொனியில் கேள்வி ஒன்றை உதிர்தாள் வாசுகி.

“என்ன தப்ப பண்ணீட்டோம் அப்படி? காதலர்களுக்கான ஸ்பேஸ் இங்க கொடுக்கப்படல. இவனுங்க ப்ளாஸ்டிக்க பீச்சுல போடுவானுங்க, கண்ட எடத்துல ஒண்ணுக்கடிப்பானுங்க, பஸ்ஸுல இருந்துகிட்டு மூஞ்சில எச்சி துப்புவானுங்க… இதெல்லாம் இவனுங்க கலாச்சாரத்த கெடுக்காது. நாம தான் கெடுத்துட்டோமா?” மூச்சு விடாமல் பேசியனவனை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் வாசுகி.



“பாவம், நாலு பேர் கொழந்தைங்கள கூட்டிக்கிட்டு வர வேண்டாம்?” மேலும் சீண்டும் நினைப்பில் இரண்டு புருவங்களையும் வில் போல் மேலே ஏற்றி கேட்டாள். 

              அந்த சில வினாடி இடைவேளையில், அவள் முகத்தின் வனப்பை ரசித்துக்கொண்டிருந்தவனாய் காணப்பட்ட விநயன் , கேள்வியால் இயக்கம் தடைபட்டு “ம்ம் லவ் பண்றதுக்குன்னு ஒரு இடத்த கட்டி விடச்சொல்லு” என முணகினான். மீண்டும் அவன் கைகள் அவள் இடையில் படர முயல,
“இதத்தான் சொன்னாங்க” என்று தட்டிவிட்டாள். கோபமாய் மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்தவனை சமாதானப்படுத்தும் முயற்சியாய், “அங்க பாரேன்” என அவனது முகவாயை பிடித்து திருப்பினாள்.

இரண்டு குழந்தைகள் ஒரு மணல் வீட்டை, கோட்டையை சிறிது சிறிதாக கட்டியிருந்தார்கள். விருட்டென வந்த ஒரு அலை அவர்கள் அரை மணி நேர உழைப்பை சட்டென கரைத்து விட்டு விழுந்து சென்று மறைந்தது. ஒரு வினாடி திகைத்த அந்த குழந்தைகள், மீண்டும் மணலை அள்ளி அடுத்த வீட்டை கட்ட ஆரம்பித்திருந்தன.

கவனித்துப்பார்த்த விநயன் பின் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டான். ரத்தச்சிகப்பு நிறத்திற்காய் இன்னேரம் மாறியிருந்த வானத்தையும் அதில் கருங்கீற்றுக்களாய் தெரியும் பறவைகளையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

“இப்ப என்ன கோவம் சாருக்கு?”

“தெரியாதாக்கும்…”

“இப்ப என்ன பண்ணினா கோவம் போகும்?”

“தெரியாதாக்கும்”

    வாசுகி மீண்டும் விநயனை மடியில் கிடத்த அவன் எதிர்ப்பேதும் இன்றி சாய்ந்தான். வாசுகி மெல்ல குனிந்து தன் மெல்லிய இதழ்களை அவன் இதழ்களின் மீது பதித்தாள். நெடு நாள் பசியெடுத்த வண்டு மலரை நுழைந்தது போல அவள் இதழை சுவைத்துக்கொண்டிருந்தான் அவன். முதன் முதலில் அவன் முத்தமிடுவது எப்படி எனக்கேட்டு அவள் விழுந்து விழுந்து சிரித்தது நினைவிற்கு வந்து பழிப்புக்காட்டியது.
“அய்யோ எம் பொண்ணே… அய்யோ” என்ற குரல் அவன் காதில் விழவும் யாரோ வீசியெறிந்த மணல் துகள்கள் அவன் காதில் விழுவதற்கும் சரியாய் இருந்தது.

                 விருட்டென வாசுகி எழுந்து நிற்க, இவனும் எழுந்து நின்று காதிலும் உடையிலும் இருந்த மணல்களை தட்ட ஆரம்பித்தான். அதற்குள்ளாக மணலை அள்ளிப்போட்டிருக்கும் என யூகிக்க்கூடிய வேகத்தில் வந்த ஒரு குண்டம்மா எதிரில் நின்றவாறு இரைந்து கொண்டிருந்தாள். காதில் வாசுகி தன் அம்மா தான் அந்த குண்டு மாமி என்றும், கூட இருப்பவர்கள் முறையே அப்பா, மற்றும்  தூரத்து சொந்த மாமா, மாமியென்றும் தெளிவித்தாள்.

“இப்படி என் மானத்த வாங்குறாளே… வாடீ இங்க…” அந்த அம்மா மேலும் ஆத்திரம் வந்தவளாய் கத்திக்கொண்டே மணலில் கஷ்ட்டப்பட்டு இவர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க, மழையில் நனைந்த கோழிக்குஞ்சு தாய்க்கோழியின்  அடியில் பதுங்குவதைப் போல அவன் விரல்களை பிடித்து தோள்களுக்குப் பின்னால் பதுங்கினாள் வாசுகி.
“அய்ய்யோ… என்ன குலமோ.. அவனோட போய் ஈஷிண்டு நிக்கறாளே…” சொல்லியபடியே குண்டம்மா இரண்டடி ஆக்க்ரோஷமாயும் அதே நேரம் உடல் ஒத்துழைக்காத படியால் ஆடி அசைந்தும் இரண்டடி எடுத்து வைக்க., விநயன் வாசுகியை காப்பாற்றும் விதமாய் அவளை ஒரு கையால் மறைத்துக்கொண்டே, இன்னொரு கையை குண்டம்மாவை நோக்கி நீட்டினான்.

“ நாங்க ரெண்டு பேரும் காதலிக்கறோம். இப்படி ஊர் பாக்கற மாதிரி கத்தாதீங்க. எதுவா இருந்தாலும் உக்காந்து பேசலாம்”

“ஊர் பாக்கறது இப்பத்தான் தெரியறதோ…” என ஏதோ சொல்ல வாயெடுத்த குண்டம்மாவை கையமர்த்தினார் வாசுகியின் அப்பா என அவன் கிசுகிசுத்த மனிதர். “இப்ப நீ எங்க கூட வரப்போறியா இல்லியா?”

அவள் பதிலேதும் சொல்லமலிருக்க விநயன் முந்திக்கொண்டு “எதுவாயிருந்தாலும் இங்கையே பேசலாம்” என்றான்.
“உன்கிட்ட பேச என்ன டா இருக்கு, நாயே..” என்றவர் மீண்டும் வாசுகியை பார்த்து “வரப்போறியா இல்லியா? இப்ப வரல நீ எப்பயும் இனி என் வீட்டுக்கு வரக்கூடாது” என்றார். குரலின் கட்டை இது தான் கடைசி முறை என்பதை பறைசாற்றும் விதமாய், உச்ச ஸ்தாயில் அமைந்திருந்தது.

           இதற்கும் வாசுகி பேசாமல் இருக்கவே மேலும் சில மண் தூற்றல்களுடனும் அர்ச்சனைகளுடனும் கிளம்பிச்சென்றது குண்டம்மாவின் குடும்பம். வாசுகியின் கை இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தது. கண்களில் இருந்து பொது இடமெனக்கருதியோ என்னவோ, கர்நாடகத்தண்ணீரைப் போல யோசித்து யோசித்து வழிந்து கொண்டிருந்ததது கண்ணீர்.

“ஏய்… வாசு… அழாத” சமாதனப்படுத்த முயன்று தோற்வன் சற்று நேரம் மௌனமாய் அப்படியே நின்றான். நிமிடங்கள் மௌனமாய் கழிந்தன. சற்று நேரம் மேலே பார்த்துக்கொண்டிருந்தவன், “கண்டுபிடித்துவிட்டேன்” என்றான்.

மெல்ல தலையை அவன் தோளில் இருந்து தூக்கி “என்ன?” என்றாள்.

“நிலாவில் தண்ணீர் இருக்கிறது” என்றான்.

சோகத்திலிருந்து நீங்கி சற்றே ஆச்சரியப்பட்டவளாய் “எப்படி?” என்றாள்.

“இதோ” என்றவன் அவள் கண்ணிலிருந்து வழிந்த நீரை ஆட்காட்டி விரலால் சுண்டி விட்டான். 

குறு நகை ஒன்று மெல்ல உதிர்ந்தது. 

சிரித்தாள், சிரித்தான். சிரித்தார்கள்.

இருவருமாய் திரும்பி கடலின் பக்கம் பார்த்தார்கள். அந்தக்குழந்தைகள் மீண்டும் தாங்கள் கட்டிய கோட்டையின் அருகில் நின்று அலைக்காய் காத்துக்கொண்டிருந்தன.







     

Friday, December 14, 2012

எதாவது செய்யணும் சார்! - சிறுகதை


                    நான் வழக்கமாக பூ வாங்கும் பூக்காரியின் மகனவன். என் மனைவியின் ஆதர்ச பூக்காரி அவள். நாங்கள் இந்த ஊருக்கு வந்த புதிதில் குடியிருந்த தெருவிலுள்ள, ஒரு பெரிய பெருமாள் கோவிலின் முன் அமர்ந்து பூ விற்றுக்கொண்டிருப்பாள். என்னமோ அவளிடம் வாங்கும் பூக்களில் மட்டும் தான் இயற்கை மணமுண்டு என்பாள் அவள். இதற்காகவே வீடு மாறி சென்ற பின்னும் இரண்டு கிலோமீட்டர் சுற்றி வந்து இவளிடமே பூ வாங்கிச்செல்வேன். ஒரு முறை, கண்டுபிடிக்க முடியாது என்றெண்ணி வேறொரு கடையில் வாங்கிச்சென்ற போது, நவீன சினிமாக்களில் வரும் அம்மன் போல, கோரதாண்டவம் ஆடித்தீர்த்து விட்டாள் என் பத்தினி. முயன்று பார்த்துவிட்டேன், இந்த பூவின் தனித்துவத்தை இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவதாரங்களையும் தாரங்களையும் நம்மால் என்றுமே புரிந்து கொள்ள முடியாது போலும்!

           கிட்டத்திட்ட இருபது வருடங்களாக அவனை பார்த்து வருகிறேன், நான் திருமணமான புதிதில் அம்மாவின் காலையே சுற்றி வந்து கொண்டிருப்பான். பள்ளியில் சேர்த்து விடச்சொல்லி என் போன்ற பலரும் சொன்ன பிறகே, அவனை பூக்காரி பள்ளியில் சேர்த்ததாக நினைவு. எனவே அவன் படிப்பு விஷயத்தில் அவ்வப்போது அக்கறை இருப்பதாக காட்டிக்கொள்வதும், அதற்கு நானுமொரு காரணம் என கர்வம் கொள்வதும் என் கைமீறிய நிகழ்வுகள்.

           படிப்பை பொருத்தவரையில் அவன் அதிஷ்டம் செய்தவன் என்றே சொல்வேன். “அப்பனை தின்று பிறந்தவன்” போன்ற ஏச்சுக்களை தாங்க முடியாமல் கணவன் ஊரைத் துறந்த பூக்காரியிடம் இதைச்சொன்னால், மனமிகமகிழ்வாள். அவன் படிக்க நிதியுதவி கிடைத்ததால் நான் இப்படிச் சொல்லவில்லை. பள்ளி நூல்களைத் தாண்டி அவன் ஏகப்பட்ட புத்தகங்களை வாங்கிப் படித்தான். எனக்கே புரியாத சில புத்தகங்களை அவன் படித்து விவரிக்கையிலும், விமர்சிக்கையிலும், பெண் பார்க்க சென்ற அன்று மச்சினியை பார்த்து இளித்தது போல இலக்கின்றி சிரித்து வைப்பேன்.

           ஒரு நாள் எதேச்சையாக தொடங்கியது எங்கள் நட்பு. எனக்கே வெட்கமாய்த்தானிருந்தது, என்னை விட பல வயது குறைந்த ஒரு சிறுவனுடன் நட்பு பாராட்ட. ஆனால், அப்படித்தான் அது அமையப்பெற்றது. எனக்கும் வாசிப்புக்கும் வெகு தூரம். சலூனில் முடி வெட்டும் முன்னர் கிடைக்கும் நேரத்திலேயே என் வாசிப்பனுபவம் ஞானப்பராப்தி பெற்று விட்டது. ஆனால், அவன் வாசிப்புக்கலையை அனுபவித்தறிந்தான் எனச்சொல்வதே சரி. வாசித்தல், ஒருவனின் சிந்தனனை போக்கையும், வாழ்க்கை முறையையும் மாற்றும் என்பதை அவன் வாயிலாக கண்டேன். என்னை புத்தகங்கள் ஈர்க்காவிட்டாலும் அவன் ஈர்த்து விட்டான்.

     அன்றொரு நாள் பூக்காரி, உரிமையுடன் கேட்டுக்கொண்டதன் பேரில் தொடங்கியது அது.

“அண்ணே, இவனுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க அண்ணே.. அவிக அப்பன மாதிரியே கண்டதையும் படிச்சிட்டு, கண்ட மாதிரி பேசுறான். ஒழுங்கா பாடத்த படிக்க சொல்லுங்க… மத்தவங்க மாதிரி என்னால காசு, பணம் குடுத்து படிக்க வெக்க முடியுமா?”

அவன் அப்பா, தீவிர கம்யூனிசவாதி. கம்யூனிசவாதி என்று சொன்னால் இன்றைய கம்யூனிஸ்டு கட்சிக்காரர்களோடு சேர்த்து குழப்பிக்கொள்ளக்கூடாது. தோழர் ஜீவாவை போல “பிழைக்கத் தெரியாத” மனிதரவர். மார்க்சியத்தை படித்தவர். அவர் இல்லாத போதும் கூட, அவன் தாயையும் மீறி இவனை மார்க்ஸ் ஈர்த்தது ஆச்சரியமே.

“என்னப்பா ஒழுங்கா படிக்க மாட்டேன்றியாமே…” அவன் கையில் புரட்டிக்கொண்டிருந்த சிகப்பு கலர் புக்கை பார்த்துவிட்டு சொன்னேன் “இதப்படிக்கற நேரம் பாடபுக்க படிக்கலாமில்ல….”

“என்ன சார் இப்படி சொல்லீட்டீங்க..” எனத்தொடங்கி மார்க்ஸ் வெகுகாலத்துக்கு முன்பே தன் வறுமையை புரிந்து கொண்டதை பற்றி எல்லாம் சொன்னான்.

“நான் நல்லாத்தான் சார் படிக்கிறேன். அம்மாவுக்கு நானும் அப்பா மாதிரி ஆயிடுவனோன்னு பயம்”.

“அடுத்து என்ன படிக்கிற? இன்ஜினியரிங்கா?” என்றேன் பேச்சை மாற்ற விரும்பி. அவன் மீண்டும் மார்க்ஸ் குறித்து விளக்கமளித்தால், அதை கேட்கும் பொறுமை என் செவிகளுக்கு இல்லை.

“இல்ல சார், சட்டம் படிக்கலாமின்னு இருக்கேன்”

“சட்டமா? அதுல என்னப்பா பெருசா சம்பாதிக்க முடியும்?”

“அப்ப சம்பாதிக்கறதுக்காகத்தான் படிப்பா சார்?”

“வேறெதுக்கு?”

“இல்ல சார், காசுக்காக நான் படிக்கல. என் படிப்பு என் மனத்திருப்திக்கு. அது எனக்கு அர வயிறொ கால் வயிறோ ஊத்துனா கூட போதும் சார்”.

அதன் பின் விரும்பியோ விரும்பாமலோ, பூ வாங்கச் செல்லும் போதெல்லாம் அவனுடன் பேசுவது வழக்கமாகிவிட்டது. அவனோடு பேசும் போதெல்லாம் விவாதம் எழுவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

ஒரு முறை,

“கடவுள் இல்லங்கற, சரி. அந்த கடவுள் இருக்கப்போய் தானே , அம்மா பூ வித்து நீ படிச்ச”

“அது ஜனங்களோட முட்டாள்தனம் சார். பொண்டாட்டிக்கு பூ குடுக்கறவன் இருக்கற வரைக்கும் பூ விக்கும்” என்றான்.

“அது சரி, அப்ப ஏன் கோவிலுக்கு முன்னாடி வியாபாரம் பண்ணுறாங்க 
உங்கம்மா.. இடத்த மாத்த வேண்டியது தான” கேட்டுவிட்டு பெருமிதமாய் அவனை பார்த்தேன்.

“முட்டாள்கள் கூடுமிடத்தில் தானே சார் தொழில் செய்ய முடியும்”.

      இப்படியான பல வாதங்களில் தோற்று போய்விடும்போதெல்லாம், என்னை விட அதிக ஞானமுள்ள ஒருத்தர் அவனை வாதிட்டு தோற்கடிப்பார்கள் என எண்ணி சுயதிருப்தி அடைவேன். ஆமாம், சுயதிருத்தி என்றொரு வார்த்தை உண்டா? சரி, அது இலக்கியவாதிகளின் பிரச்சனை. நமக்கென்ன. பெரும்பாலும் கடவுள் குறித்த விவாதம் வரும் போதெல்லாம்   “அப்பறம் ஏன் சார் எங்க அப்பா..” என ஒரு நிமிடம் வெறிப்பான். அதற்கு எனக்கு சத்தியமாய் பதில் தெரியவில்லை. தெரியாத ஒன்றுக்காக வக்காலத்து வாங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவனோடு எப்போது பேசினாலும், ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அவன் வெறும் பேச்சோடு நிற்கிறவனாக தெரியவில்லை. லத்தீன் அமேரிக்க நாடுகளின் மீதான அமேரிக்க ஆதிக்கம் முதல் தர்மபுரி கலவரம் வரை அனைத்தையும் அலசுவான். “எதாவது செய்யணும் சார்” என்பான் அடிக்கடி.

“தர்மபுரில 300 வீடுகள எரிச்சு உடைமங்கள நாசம் பண்ணீட்டாங்க.. எதாவது செய்யணும் சார்.”

“இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் நடத்தறது நியாயமே இல்ல.. எதாவது செய்யணும் சார்”

            சாத்தியமா இல்லையா என்றெல்லாம் அவனுக்கு கவலை இல்லை. எதாவது செய்யணும்; எதாவது. சொல்வதோடு நிற்காமல் அதில் என்ன செய்ய முடியும் என்று யோசிப்பான். சாத்தியமெனில் அதை செய்தும் முடிப்பான். உள்ளூர் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடுவான். எங்கு மக்கள் போராட்டம் நிகழ்தாலும் இவன் தலை அதிலெங்காவது தென்படும்.

இப்போதெல்லாம் மனைவி பூ கேட்பது வெகுவாக குறைந்திருந்தது. வயதாகி விட்டதாலோ என்னவோ, யாருக்கு தெரியும். அவனுடனான என் சந்திப்புகளும் கடந்த சில ஆண்டுகளாக குறைந்திருந்தது. அவன் இப்போது அம்மாவை சுற்றும் பிள்ளை அல்லவே. ஆனால், பூக்காரி என்னை பார்க்கும் போதெல்லாம் எதாவது அவனை பற்றி சொல்லிக்கொண்டேயிருப்பாள். அதை விட புலம்புவாள் எனக்கூறுதல் தகும். கடந்த ஆறு மாதங்களாக அவனை நான் முற்றிலும் மறந்திருந்தேன்.  ஊர் ஊராக கோவில் கோவிலாக சுற்றி விட்டு வந்திருந்தோம். எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடோ, ஆர்வமோ இருந்ததில்லை. அப்பா தொடங்கி, மனைவி வரையிலாக, என் ஆன்மீகம் என் கம்பேனியங்களின் விருப்படியே அமைந்து வந்தது.

“என்னங்க எல்லாக்கோவிலையும் பார்த்துட்டோம், திரும்ப ஒரு தடவ நம்ம பெருமாள் கோவில் போயிட்டு வந்துடலாமே…”

“சரி, ஒரு ரெண்டு நாள் போகட்டும்” அப்போதைக்கு சொல்லி வைத்தேன். 
எத்தனை கோவில் கட்டி வெச்சு இருக்காங்க ச்சை, ஆயாசமாய் இருந்ததெனக்கு.

என் பைக்கை பார்த்தேன். நீண்ட நாள் கவனிப்பின்றி , விவாகரத்தான சினிமா நடிகை போல இருந்தது அது. அதை தள்ளிக்கொண்டு மெக்கானிக்கல் ஷாப்பில் விட்டுவிட்டு வந்து ஒரு சிகரெட்டை வாங்கி உதட்டோரம் ஒட்டவைத்துக்கொண்டேன். எப்பவாவது சிகரெட் உண்டு. மனைவி கூடவே இருந்ததால் ஆறு மாசமா தொட முடியாத ஏக்கம் அரித்துக்கொண்டே இருந்தது. ரசித்து புகைத்துக்கொண்டிருந்தேன். ஒரு ஆம்னி வேன் அதிவேகத்தில், கொஞ்சம் தாறுமாறாக நான் நின்றிருந்த சாலைக்கு எதிர்புற ஒன்வேயில் வந்தது. தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு சைக்கிள்காரனை நேருக்கு நேர் தட்டித்தூக்கியது. அந்த வேனில் இருந்தவன், ஜன்னல் கண்ணாடியை இறக்கி ஒரு முறை எட்டிப் பார்த்தான். வேணுமின்னே தான் செஞ்சுருக்கான், ப்ளடி ராஸ்கல், என் மனசாட்சி திட்டியது. மீதி சிகரெட்டை ஆழ ஒரு முறை இழுத்துவிட்டு, வேகவேகமாய் அவனை நோக்கி நடந்தேன்.

             அங்கு கிடந்தவன், அவன், ஆம், அவனே தான். பூக்காரியின் மகன். மனசு கேட்காமல், சட்டென ஓடிப்போய் அவனை மடியில் கிடத்தி விட்டேன். ஆனால், என்ன செய்வதென்று தெரியவில்லை. எல்லாரும் சுற்றி நின்று  எதோ முனுமுனுத்துக்கொண்டிருந்தார்கள். அதற்குள் ஓடி வந்த ட்ராபிக் போலீஸ்காரர் ஒருவர், ஒரு அவசர ஊர்தியை வரவழைத்து அதில் ஏற்றிவிட்டார். நான் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். மரணமைடந்தவர்களை நிறைய பார்த்திருந்தாலும், மரணமடைவதை முதன் முறையாக இப்போது பார்க்கிறேன். அவன் ஆவி பிரிவதாக நான் கண்டது கற்பனையா நிஜமா என நினைவில்லை, மருத்துவமனையை அடைகையில், அவன் சலனமற்றுக் கிடந்தான். சம்பிரதாய சமாதானங்களோடு அவன் இறந்து விட்டதாக அறிவித்தார்கள்.

        பூக்காரியை என் மனைவி சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள். உலகமே முடிந்துவிட்ட பின் தனி மரமாய் நிற்பவளுக்கு என்ன ஆறுதல் கூறிவிட முடியும். நான் மெல்ல வந்தவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன். பலர் தான் அவனுக்கு விடுத்த எச்சரிக்கை பற்றியும் அதை அவன் புறந்தள்ளியதது குறித்தும் வருந்திக்கொண்டு இருந்தார்கள். அந்த பேச்சுக்களில் வருத்ததை விட, “இவனுக்கு வேணும்” என்ற ஆழ்மன வக்கிரமே அதிகம் தொனித்தது.

“எத்தன முற சொல்லி இருப்பேன் தெரியுங்களா, அந்த கவுன்சிலர் எவ்வளவு மணல் அள்ளுனா உனக்கென்ன, உன் பொழப்ப கவனின்னு, ஹ்ம்ம்ம் பூமி அம்மா மாதிரின்னான். இப்ப இவன் அம்மாவை யாருகாப்பாத்துவா சொல்லுங்க”

வெளியில் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார் “பின்னாடில இருந்து வந்து மோதி இருக்கானுங்க சார். இவனுங்கள இப்படியே விட்டுட கூடாது. எதாவது செய்யணும் சார்”. நானும் சொல்லிவைத்தேன் “ஆமாங்க, எதாவது செய்யணும்”.




Wednesday, November 7, 2012

உயிர்-மெய் எழுத்து


அரசுப் பேருந்துகளில் சரியாக பீக் டைமில் வருவது, ஒரு போர் நிகழும் சமயம் விலாசம் விசாரித்து வீடு வந்து சேருவது போலாகும். சரியான சித்ரவதை. ஒவ்வொரு ஜீவனின் மீதும் ஆதி மனிதனுக்குண்டான பூர்வாங்க வாசனை வீசிக்கொண்டிருக்கும். மனித உழைப்பை சுரண்டும் இந்த சமூகத்தில், அந்த சரண்டலுக்கு உள்ளானவன் சென்று சேரும் புகலிடமாய் டாஸ்மாக் மாறிய பின், ஆறு மணி பேருந்துகளில் மணம் கமழ்வது ஒன்றும் ஆச்சரியம் கொள்ள ஏதுமில்லை. நாசிக்குண்டான இயல்பை அது இழந்தால் மட்டுமே சுகமான பயணம் சாத்தியப்படும். அனுவிற்கு இந்த பயணம், பழகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தது.

ஓட்டமும் நடையுமாய் வந்து படியேறினாள் அனு. ஜீவா வருவதற்குள் வீட்டை கூடி விட வேண்டும். வந்துவட்டால் அதிகாரம் தூள் பறக்கும். சில நாட்களில் நானும் கூட உதவிக்கு வருகிறேன், என்று ஆரம்பித்து, இங்க தொட்டு அங்க தொட்டு வித்தியாசமாய் பண்ணுகிறேன் பேர்வழி என நாலு பொருட்களை உடைப்பது தான் மிச்சம்.

சிந்தனைகளுக்கிடையில் வீடு வந்துவிட்டிருந்தது. என்றைக்குமில்லாத திருநாளாக வீட்டுக்காரம்மா பார்வதி மாடிப்படியில் நின்று கொண்டிருந்தாள். இந்த நேரம் மாமி, மாமாவின் வாக்கிங் நேரம். மாமா வெளியே போயிருந்தாலும் மாமி கீழே தான் இருப்பாள். எப்போதும் அனுவாக கீழே வருவது தான் வழக்கம். உபயம் பார்வதியின் மூட்டு வலி. அவசரமாய் உற்பத்திசெய்து கொண்ட புன்னகை ஒன்றை உதிர்த்தபடியே, படியேறினாள் அனு.

“என்னம்மா மூட்டு வலி பரவாயில்லியா? சிரமட்டு மேல ஏறி வந்திருக்கீங்க?”

     கீழ் வீடு தான் பார்வதி அம்மாளின் வீடு. அவளும் அவர் கணவரும் மட்டும் தான், மாமாவிற்கு ஜீவா மீதும் அனு மீதும் கொள்ளைப் பிரியம். இவர்கள் வயதொத்த எல்லோர் மீதும் தான். இந்நேரம் பார்க்கில் உட்கார்ந்து தெருவில் இருக்கும் எல்லாருடனும் வாஞ்சையோடு அளவளாவுவார். இன்றூ அவர் இன்னும் வரவில்லை போலும். அது 30 வருடங்களாக குழந்தை இல்லாத குறையின் வெளிப்பாடக்கூட இருக்கலாம் என்பது ஜீவாவின் கருத்து.

பிரமை பிடித்தாற் போல் இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி அம்மாள்.

“அம்மா,” என அனு அவரை லேசாக தொட்டாள்.

தீயை தீண்டினாற் போல், வெடுக்கென கையை உதறினார் மாமி. எதுவும் பேசாமல் விடுவிடுவென்று படியிறங்கி சென்று விட்டாள். அனுவுக்கு ஒன்றும் புரியவில்லை. இரண்டு முறை கீழிறங்கி சென்று கூப்பிட்டு பார்த்தாள்.

“அவர் வரட்டும் பேசிக்கலாம்” குரல் மட்டும் வந்தது.

“என்னம்மா பேசணும்?”

பதில் வரவில்லை. சரி, அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டு நகர்ந்தாள். அவள் சட்டென நகர்ந்ததுக்கு ஒரு காரணம் இருந்தது. பார்வதி அம்மாளின் இயல்பே அப்படித்தான், சின்னச்சின்ன விஷயத்திற்கெல்லாம் பயங்கரமாக குதிப்பது போலத்தோன்றும். ஆனால் அடி மனதில் பாசம் அவ்வளவு தேங்கிக்கிடக்கும், அதை வெளிப்படுத்த தெரியாமல், கோபமாய் வெளிப்படுத்துவார். அவரை சமாதானப்ப்டுத்துவது, ஒரு குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பதை போல. மிக எளிது.

------------------------------------------------
     ஜீவா இன்னிக்கு கொஞ்சம் லேட். வழக்கமாக வருகைப்பதிவு எழு மணிக்கெல்லாம் நிகழ்ந்துவிட்டிருக்கும். இப்போது மணி எட்டு.
“நாதா… இன்று ஏன் இவ்வளவு தாமதம்?” சமையல் அறையிலிருந்து  கருவேப்பிலைகளின் தாளிப்பிணூடே இருந்து அனுவின் குரல் ஒலித்தது.

     சாதாரண நாட்களில் எல்லாம், இந்த குரல் கேட்ட உடனே, சமையற்கட்டினருகில் ஜீவாவின் நிழலாடும். இன்று குரல் கூட வராததிலிருந்து, இன்று எதோ மூடு சரியில்லை என அறிந்துகொண்டாள்.
“அனு இங்க வா” சிறிது நேரம் கழித்து சுரத்தில்லாமல் ஒலித்தது ஜீவாவின் குரல். போய் அருகில் அமர்ந்து தலையை கோதி விட்டாள். உங்களை நேசிக்கும் ஒரு ஜீவனின் தலைக்கோதலை விட மனதுக்கு ஒரு மருந்து எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காது.

“என்னாச்சு?”

“அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு…”

“இனி இன்னொரு வீடு தேடி அலையணும் அவ்வளவு தானே, இதுக்கு ஏன் அலட்டிக்கற..” அனு ஜீவாவை சமாதானம் பண்ண முயன்றாள்.

என்ன தான் சமாதானம் பண்ண முயன்றாலும், அது சுலபமில்லை என அனுவுக்கு தெரியும். உண்மையை சொல்லி வீடு கேட்ட இடத்தில் எல்லாம், கிண்டல் கேலி செய்து துரத்தினார்களே தவிர, வீடு கொடுக்கவில்லை. வேறு வழியில்லாமல், பொய் சொல்லி வீடு கேட்டு, பின் ஏற்கனவே உண்மை சொல்லி வீடு கேட்டவர்கள் மூலம் எப்படியோ உண்மை தெரிந்து, வாழ்க்கையில் ஒரு பகுதியாக, அவமானப்படுதலும், வீடு தேடுதலும் மாறிப்போய்விட்டிருந்தது.

“அதுக்கு இல்ல அனு, மாமா நம்ம மேல எவ்வளவு பாசம் கெச்சிருந்தாரு.. அவரு மூஞ்சில எப்படி முழிக்கறது” ஜீவாவின் குரல் ஒலித்ததோ ஒழிய முகம் தொங்கியே தான் இருந்தது.

“யாரு உனக்கு சொன்னா?”

“மாமி தான், காரி துப்பாத கொற தான். என்ன என்னம்மோ புழுவ பாக்கற மாதிரி பாக்கறாங்க. மாமா இன்னும் வரல. அவர் வந்த அப்பறம் உங்க சாமான தூக்கி வெளிய ஏறியறேன்னாங்க….” சாதாரண ஜீவாவின் தொனி ஏறியிருந்தது இந்த பேச்சில்.

அதற்குள் கீழே முனகல் சத்தம் கேட்டிருந்தது.

அனு எட்டிப்பார்த்தாள்.

“ஜீவா ஏகப்பட்ட பேர் கூடி இருக்கானுங்க, இன்னிக்கு இடியும் மின்னலும் ஹெவியா இருக்கும்மின்னு நினைக்கிறேன்” என்றாள் அனு.  நான்கு வருடங்களாக 23 வீடு மாறி ஆகிவிட்டது. எத்தனையோ அவமானங்கள், வலிகள், வாழ்க்கையை பக்குவப்படுத்தியாகிவிட்டது. பிரச்சனைகள் வரும் போது அது குறித்து பகடி செய்வது, ஜீவாவிடம் இருந்து ஒட்டிக்கொண்ட பழக்கம். அந்த பழக்கம் தான் அனுவை ஜீவாவிடம் இழுத்துப்போட்டது எனவும் சொல்லலாம்.

“என்னடா செல்லம், இது என் டயாலக் ஆச்சே” சொல்லிக்கொண்டே ஜீவா எட்டிப்பார்த்தான். “எல்லாம் இந்த எதிர் வீட்டு த***** தடியன் செய்யறது. அவன் உன்ன பாக்கற பார்வையே சரி இருக்காது”

“ஏய், கெட்ட வார்த்த பேசுனா அவ்ளொ தான் சொல்லீட்டேன்” கண்களை உருட்டினாள் அனு. ஒரு சொட்டு கண்ணீர் எட்டிப்பார்த்து இருந்தது அந்த கண்களில் இருந்து. என்ன தான் உணர்வுகளை மறைக்க முயன்றாலும், இந்த கண்கள் அதை வெளிப்படுத்தி விடுகின்றன. எப்போதும் எட்டிப் போய் துடைக்கும் ஜீவாவிற்கு இன்று ஏனோ அதை துடைக்கத்தோன்றவில்லை.
தூரத்தில் ஒரு வெளிச்சப்பொட்டு தெரிந்தது, இவ்வளவு மங்கலான வெளிச்சப்பொட்டு மாமா ஸ்கூட்டராகத்தான் இருக்க வேண்டும்.
“கடங்காரி கீழ வாடி” பார்வதி அம்மாளின் குரல் மேலே வரை கேட்டது. அது எப்படித்தான் இந்த வெளிச்சத்தை பார்த்தவுடன் இந்தம்மாளுக்கு இவ்வளவு தைரியம் வருகிறதோ.

யாரையும் எதுவும் பேச வேண்டாம் எனக்கூறி விட்டார் மாமா. எதையும் எப்போதும் உட்கார்ந்து பேசினால் தீர்வு கிடைக்கும் என்பது அவரது சித்தாந்தம். ஆனால், கவுரவத்தின் மீது ஏக பற்று உடையவர். உங்களுக்கு நீங்கள் கட்டி இருக்கும் வேட்டி வேண்டுமா இல்லை கவுரவமா என்றால் கவுரவம் தான் யோசிக்காமலேயே சொல்லிவிடுவார். எனவே இந்த வீட்டில் இடம் கிடைக்கும் என்பது கனவில் கூட நிகழ வாய்ப்பில்லை.



எல்லோரும் அவர்களுக்குள் முனகிக்கொண்டு இருந்தனர். பெரும்பாலும் எல்லாம் கெட்ட வார்த்தைகள். அனு ஒரு மூலையில் குறுகி அழுது கொண்டிருந்தாள். அவளை கீழே வர வேண்டாம் என்று ஜீவா சொல்லியிருந்தும் அனு கேட்காமல் வந்திருந்தாள்.
ஐந்தாறு “தே” வார்த்தைகளை கேட்ட பின் பொறுமை இழந்த அனு கதறி அழ ஆரம்பித்தாள்.

“அப்படி என்னம்மா நாங்க தப்பு பண்ணோம், “

“பண்றதையும் பண்ணீட்டு கேக்கறா பாரு….. “ எதிர் வீட்டு ஆடிட்டரின் குரல் அது.

“தெருவில நாங்க மானம் மரியாதையோட இருக்க வேணாம்” இது மூணாவது வீட்டு பத்மினி.

“நாங்க பண்ணினது தப்பு தான், பெரிய தப்பு. ஆனா, இது வரைக்கும் உண்மைய சொன்ன எங்கயும் வீடு கிடைக்கல. அதனால் தான் பொய் சொன்னோம். உங்கள ஏமாத்தணுமின்னு எந்த நோக்கமும் இல்ல… வேற வழி தெரியல… இன்னும் ஒரு வாரம் டைம் குடுங்க காலி பண்ணீறோம்” ஜீவா பேச மாமா ஜீவாவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“ஒரு வாரம் டைம் வேணுமாமில்ல, பெட்டி படுக்கைய தூக்கி வெளிய ஏறிங்க… ஊர் மேயற கழுதைங்க தான….” என கூட்டத்தில் இருந்து ஒரு குரல் ஒலிக்க ஜீவாவின் ரத்தம் சூடேறியது.

“என்ன டா, ******. எனக்கு பேச தெரியாம இல்ல. அப்படி பேசுனா உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும். நீ வந்து கூட்… குடுத்தியா..  உங்கள மாதிரி வெறும் உடம்புக்கு ஆசைப்படுற காதல் இல்ல இது.. ஒரு பொண்ண பாக்கும் போதே அவ போட்டு இருக்கற பிரா கலர யோசிக்காத ஒரு ஆம்பள முன்னாடி வாங்கடா பாக்கலாம்“ பேசிக்கொண்டிருந்த ஜீவாவை எட்டிப்பிடித்து அமைதிப்படுத்தினார் மாமா.

பின் நிமிர்ந்து எல்லாரையும் பார்த்தும் தெளிவாக ஆனால் உரத்த குரலில் சொன்னார்.

“குழந்தைங்க இங்க தான் தங்குவாங்க. இது நான் உழைச்சு கட்டின வீடு. என் இஷ்டம்… நீங்க எல்லாரும் உங்க வேலைய பாத்துட்டு போலாம்”.
இந்த பதில் கூடி இருந்த கூட்டத்திற்கு மட்டுமல்ல. பார்வதி அம்மாளுக்கும் ஜீவாவிற்குமே அதிர்ச்சியாக இருந்தது. கவுரவம் கவுரவம் என குதிக்கும் மாமாவா இப்படி, உள்ளுக்குள் ஆச்சரிப்பட்டாலும், கண்ணீர் மெல்ல எட்டிப்பார்த்தது ஜீவாவின் இடது கண்ணிலிருந்து.

“நீங்க சரின்னு சொன்னாலும், நாங்க எல்லாம் ஒத்துக்க மாட்டோம். நாங்க எல்லாம் இங்க வாழ வேணாமா?” என ஒருவர் கேட்க கூட்டம் ஆமோதித்தது.

கூட்டம் ஒரு வகையான போதை. கூட்டம் ஒரு வகையான சிறை. சமூகத்தில் தனக்கிருக்கும் மதிப்பை தக்க வைக்கவோ, வலுவாக கூட்டதில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதாக மனதை ஏமாற்றவோ எதோ ஒரு காரணத்தால் கூட்டம் உங்களை சுய கருத்தை கொள்ள விடாமல் செய்து விடும். ஒரு குழு மன நிலை என்றைக்குமே ஒரு பயனுள்ள தனி மனிதனை அமைத்து விடாது, அமையவும் விடாது.

கூட்டம் மீண்டும் முனக ஆரம்பிக்க, இடைவெட்டினார் மாமா.
“என்ன நீங்கெல்லாம் யோக்கியமா?” கேட்டுவிட்டு எதிர்வீட்டு வைத்தியலிங்கத்தை முறைத்தார் மாமா.

“நீ அனுவ எப்படி பாப்பன்னு எனக்கு தெரியாதா? உன் வீட்டுல ஒரு வேலக்காரி இருந்தாளே, உன் மக வயசிருக்கும் அவ கிட்ட நீ என்ன பண்ணின, அவ வேலைய விட்டுப் போகும் போது என் கிட்ட எல்லாத்தையும் கொட்டிட்டு தான் போனா…. ஆடிட்டர் சார், போன மாசம், ***** இண்டஸ்ட்ரீஸ் கணக்கு முடிச்சீங்களே, அந்த பைவ் ஸ்டார் ஹோட்டல்ல, அது என்ன வகையான கவுரவம் சார்… லஞ்சம் வாங்கறது பெத்த தாய…. “ நிறுத்திக்கொண்டார் மாமா.

கூட்டம் ஸ்தம்பித்துப்போய் இருந்தது. இதுவரை அவர்கள் சாந்தமான மாமாவையே பார்த்துவந்துள்ளனர். யாரை பார்த்தாலும் “சவுக்கியமா கொழந்தே” என்றே அழைப்பார்.

பார்வதியிடமே சிறு சத்தம் இல்லை. இப்படி ஒரு கணவரை அவள் 30 வருடமாக பார்த்தில்லை.

"காமம்ங்கறது உங்களுக்கெல்லாம் வெறும் உடல் சார்ந்த விஷயம். அதானால தான் இத இவ்வளவு பெருசு படுத்துறீங்க.
இவங்களுக்குள்ள இருக்கற அன்ப உங்களால புரிஞ்சுக்க முடியாது. ஏன்னா அன்புக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையே. நீங்க பண்ணாத தப்பு என்னத்த இந்த கொழந்தைங்க பண்ணீட்டாங்க?"
"அக்கா தங்கச்சின்னு பொய் சொல்லி வீடு கேட்டு இப்படி, மானமுள்ளவங்க எல்லாம் இந்த தெருவில வாழ வேணாம்... கருமம் கருமம்..." தலையில் அடித்துக்கொண்டது கூட்டத்திருந்த ஒரு பெண் குரல்.

"உண்மைய சொல்லி வீடு கேட்டு இருந்தா நீங்க குடுத்து இருப்பீங்களா? உங்க மான ரோஷத்த பத்தி எனக்கு தெரியாது, இந்த தெருவுல எத்தன பேரு சொந்த சம்பாத்தியத்துல வீடு கட்டுனீங்க எத்தன பேரு ஊர ஏச்சு கட்டுனீங்கன்னு எனக்கு தெரியும். இவங்க உணர்வுகள நீங்க புரிஞ்சுக்கலைன்னாலும் பராவாயில்ல, அத காயப்படுத்தாதீங்க..."
 
மாமா தொண்டையை கணைத்துக்கொண்டு மீண்டும் சொன்னார்.

“என் வீடு, என் இஷ்டம். இதுக்கு மேல இதப்பத்தி பேசுனா உங்க மரியாதை தான் கெடும். கெளம்பலாம்” சொல்லிவிட்டு விறுவிறுவென உள்ளே சென்றுவிட்டார் மாமா.

பார்வதி அம்மாள் இருவரையும் பார்த்துய் பேந்த பேந்த விழித்தாள். பின் உள்ளே சென்று விட்டாள். கூட்டம் கலைந்தது, முனுமுனுத்த படியே.


அன்றிறவு,

“ஏங்க” பார்வதி பரிமாறிக்கொண்டே மாமாவை உசுப்பினாள்.
“என்ன கேக்கப்போறன்னு தெரியும் பார்வதி, கவுரவம் கவுரவமின்னு குதிப்பீங்களே அதானே…”
“
இல்லீங்க, அக்கா தங்கச்சின்னு சொல்லீட்டு இப்படி தப்பான உறவு வெச்சுட்டு இருக்காங்களே.. ரெண்டு பேரும் பொம்பளைங்க வெக்கமே இல்லாம…. இவங்கள எப்படிங்க…”

"அவங்களுக்குள்ள இருக்கற காதல், காமத்தோட நீட்சி பார்வதி. இப்ப நம்ம ரெண்டு பேருக்கும், ஒருத்தருக்கு ஒருத்தோரட துணை தேவைப்படுது... இது என்ன காமமா? அந்த மாதிரி தான் இவங்களும்....."

சாப்பிடுவதை நிறுத்தி விட்டு சிறிது நேரம் பார்வதியையே வெறித்தார் மாமா.

“சொல்லுங்க, ஏன்?” பார்வதி அம்மாளின் குரல் சுரத்தில்லாமல் தான் ஒலித்தது. வயதானவர்களை புரிந்து கொளவது மிகக்கடிமான செயல், அவர்களுக்கே கூட. பார்வதி அம்மாளுக்கு இப்போது வரை, தனக்கு ஜீவா, அனுவின் மீது கோபம் இருக்கிறதா, அது இந்த கூட்டத்தால் மிகைப்படுத்தப்பட்டதா எனத்தெரியவில்லை. அதனால் தானோ என்னவோ மாமா அப்படி பேசியும், அவளுக்கு அதை எதிர்க்கணும் என்று தோன்றவில்லை.

“கௌதம பார்த்தேன்” என்றார் மாமா. சட்டென நிமிர்ந்தாள் பார்வதி அம்மாள்.

           கௌதம், இவர்களின் மகன். எல்லோரும் நினைப்பது போல இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாமல் இல்லை. இருந்தான் , கௌதம் , ஒரே மகன். கட்டுப்பாடோடும் செல்லத்தோடும் வளர்த்து வந்தார்கள். எல்லாம் அவன் பதின் வயதை எட்டும் வரை தான். பதின் வயதில், அவனுள் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அவனுள் தூங்கிக்கிடந்த பெண்ணின் தன்மை மெல்ல மெல்ல வெளிப்பட ஆரம்பித்தது. வெளியிலும் சொல்ல முடியாமல், உள்ளுக்குள்ளும் வைத்துக்கொள்ள தெரியாமல் அவன் நரக வேதனையை அனுபவித்ததென்னவோ உண்மை.

இந்த விஷயம் மெல்ல கசிந்த போது மாமாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவனை வீட்டை விட்டு அனுப்பி விட்டார். அவனை வீட்டை விட்டு அனுப்பும் போது அவர் அதை வலியோடு தான் செய்தார் என சொல்வதற்கில்லை. ஆனால், காலம் வலிகளை தர தவறுவதில்லை. சமூகம் குறித்த பயத்தால் தான் செய்த பிழையை அவர் நன்கு உணர்ந்திருந்தார். இத்தனை தூக்கமில்லாத இரவுகளில் இந்த சமூகம் ஒரு நாள் கூட தனக்கு தாலாட்டு பாடியதில்லை.

பார்வதி அம்மாள் ஒன்றும் பேசத்தோன்றாமல் பார்த்துக்கொண்டிருக்க அவர் தொடர்ந்தார்.

“போன வருஷம் ஒரு நாள் ரயில் வந்துகிட்டு இருக்கும் போது, ஒரு நாலு பேர் கூட்டமா வந்து பிச்ச கேட்டாங்க. ஒரு பத்து ரூபா குடுத்தேன். ஒருத்தி அத வாங்காம, என் மூஞ்சில துப்பீட்டு நகர்ந்துட்டா. அப்ப தான் கவனிச்சேன், முகத்துல அந்த தழும்பு, அந்த நம்ப கவுதம்…” அவர் குரல் தழுதழுத்தது.

 “அதுக்கப்பறம் எப்படியெல்லாமோ அவன தேடிப்பாத்தேன். அவன் கிடைக்கல, அவன் கடைசியா மண்ண வாரி இறைச்சது இன்னும் எனக்கு நினைவிருக்கு”, வழியும் கண்ணீரை துடைக்கக்கூட தோன்றாமல் பேசிக்கொண்டிருந்தார் கணேசமூர்த்தி.

பார்வதியால் பேச முடியவில்லை. நடந்ததை நினைத்துப்பார்த்து கண்ணீர் விடத்தான் முடிந்தது. தான் பிடிவாதம் பிடித்திருந்தால், ஒரு வேளை கவுதம் இன்று தங்களோடு இருந்திருப்பானோ. தெரியவில்லை. ஆனால், பிள்ளை பாசத்தை தாண்டி அன்று கவுரவம் கண்ணை மறைத்தது ஆச்சரியம் தான். இரண்டாவது மகன் பிறக்கும் சமயம் பார்த்து, கவுதமை இவர் துரத்தியதும், பின் சாக்கு போக்கு சொல்லி, பின் உண்மை வெளிப்பட்டு, அழுது புரண்டு, தேத்திக்கொண்டு, வாழ்க்கையை இந்த சாக்கடை சமூகத்தில் இணைத்துக்கொண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

மெல்ல அவரே தொடர்ந்தார்.


“கொழந்தைகள் டீ, அவங்களுக்கு எது சரின்னு படுறதோ அதப்பண்ணுறாங்க…. அதப்பண்ண அவங்களுக்கு உரிமை இருக்கு. அவங்களா அத பண்ணல, அவங்க சரீரம் அத கேக்கறது… புத்தியும் மனசும் அவங்கள கேக்குது. இதுவும் இயற்கை தான்… நம்மால தான் புரிஞ்சுக்க முடியல. நாகரீகம்ங்கற பேருல என்ன என்னமோ பண்ணுறோம், சடங்குகள சம்பரதாயங்கள மாத்திக்கறோம். இது அவங்க வாழ்க்க அவங்க விருப்பம், அவங்க இஷ்ட்டப்படி அவங்கள வாழ விட்டுடலாம்”.

அவர் உணர்ந்து பேசினாரா, இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை பார்வதிக்கு,

“இருங்க, கொழந்தைங்க சமைச்சு இருக்க மாட்டாங்க, நான் போய் அவங்களையும் சாப்பிட அழைச்சுட்டு வர்றேன்…” என்று எழுந்தாள்.

“ரெண்டு பேத்துக்கு மட்டும் தான்டீ சமச்சுருக்க…”

“ நான் சாப்பிடுறது இப்ப ரொம்ப முக்கியமா, அவங்கள வேற திட்டிட்டேன் பசியோட இருப்பாங்க….  திருப்பி சமைச்சுக்கலாம்” சொல்லிக்கொண்டே படியேறினாள்.

சிரித்துக்கொண்டார் கணேச மூர்த்தி, இந்தப் பெண்களைத்தான் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.







பின் குறிப்பு :

இந்த்தக்கதை யாரையும் புண்படுத்தவோ, காயப்படுத்தவோ எழுதப்பட்டதல்ல. இது போல, பொறுப்பு துறப்பு எனக்கு புதிது எனினும், கதையின் சீரியஸ்னெஸ் கருதி இதை சொல்கிறேன். மாற்றுக்கருத்துள்ள நண்பர்கள், விவாததத்திற்கு வரவேற்க்கப்படுகிறார்கள்.


கதையின் சுவாரசியம் கெடாத வகையிலும், ஜீவாவிடம் மேலோங்கி இருக்கும் வகையிலும், ஜீவா எட்டிப்பார்த்தான் என ஒரு இடத்தில் வரும். மற்றபடி எங்கேயும் ஜீவாவின் பால் குறிப்பிடப்பட்டு இருக்காது. இதையே ஆங்கிலத்தில் எழுதுவது எளிது. தமிழில் இது கத்தி மேல் நடக்கிற வேலை. ஜீவா பெண்ணைப்போல உடை தரித்திருப்பாள் என்பதும், ஏனைய பிரவும் வாசகர்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.







Saturday, March 24, 2012

கனவுகள் விற்பனைக்கு


Whoever had read my story “Love Agony and me” Here is the continuation in Tamil for now, The other lingual will be released a bit later.

டிஸ்கி : இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே! ஆனால், இதே போன்ற சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்திருந்தாலோ அல்லது இந்த கேரக்டர்கள் ஆங்காங்கே உலாவிக்கொண்டு இருந்தாலோ நிர்வாகம் பொறுப்பல்ல :)



முதல் பாகம் படிக்காதவர்களுக்கு முன் கதை சுருக்கம் :

சித்துவும் சிந்துவும் கல்லூரி நண்பர்கள். சித்து சிந்துவை ஒரு தலையாக காதலித்தான். கல்லூரி முடிந்து பின் இருவரும் கல்லூரி கிராஜுவேஷன் டேவில் அடுத்த ஆண்டு சந்திக்கிறார்கள். சிந்து தனக்கு சித்து மீது இருக்கும் காதலை உணர்ந்து அந்த மேடையிலேயே முத்தமிடுகிறாள். இருவரும் ஒன்று சேருகிறார்கள்.

7 வருடங்களுக்கு பிறகு,

கார் கல்லூரிக்குள்  நுழையும் போது மணி 10:20. நான் ராமகிருஷ்ணன், கல்லூரிக்குள் ராம் அல்லது ஈ**** . நான் என் மனைவி இருவருமே இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள். எல்லாருக்கும் கல்லூரி வாழ்க்கைல மறக்க முடியாத விஷயம் காதலா இருக்கும். நானும் என் வகுப்புத்தோழிய தான் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டேன். அவ பேரு ஆயிஷா. ஆனா காதலையும் தாண்டி என் கல்லூரி வாழ்க்கைல மறக்க முடியாத ஒருத்தன் இருக்கான், சித்து. எங்க கல்யாணத்துல  நடந்த எல்லா பிரச்சனையும் அவன் தான் தீர்த்தான். இன்னமும் எனக்கு ஆண் குழந்தை இல்ல. ஆனா பையன் பொறந்தா அவன் பேரத்தான் வெப்பேன். 

இன்னில இருந்து சரியா 7 வருஷம் முன்னாடி, எங்கள் கிராஜுவேஷன் டே. படிச்சு முடிச்சு ஒரு வருஷம் கழிச்சு தான் டிகிரி தருவாங்க. அதுக்கான விழா. எனக்கும் இவளுக்கும் கடைசி ஆண்டு முடிந்த உடனே, பல திரில்லிங்குகளுக்கு இடையில திருமணம் முடிஞ்சுருச்சு. சித்துவுக்கு திரும்பவும் கல்லூரிக்கு வருவதற்கு சுத்தமா விருப்பம் இல்லை. காரணம் மறக்க நினைக்கும் பழய ரணங்களை இந்த பயணம்  கீறி விடும் என்பது தான். சித்து எவ்வளவோ மறுத்து பார்த்தான். ஆனாலும் வேற வழி இல்லாம தான் அங்க வந்தான். அந்த காயம் காதல், அதற்கு கா’ரணம்’ சிந்து. அவ கிட்ட இவன் எத பார்த்து விழுந்தான் ந்னு நாங்க எல்லாம் பட்டிமன்றமே வெச்சு இருக்கோம். அப்படி ஒண்ணும் தேவதை எல்லாம் இல்லை சிந்து. அவன் கிட்ட நான் சொன்னதா சொல்லாதீங்க. என்ன உரிச்சுருவான். நாங்க யாரவது செத்து கிடந்தா கூட கூலா என்ன ஆச்சு ந்னு கேக்குறவன் சித்து. “நகம் வெட்டுறப்போ காயம் டா” என்று அவள் சொன்னதும், இவன் பதறியதை பார்த்து நாங்கள் கடுப்பானது உண்மை. எதனாலோ அவள் மீது பைத்தியமாக இருந்தான். சித்து பொண்ணுங்களையே பார்க்க மாட்டான் . சிந்து தான் அவன் முதன்முதலில் பார்த்த பெண் என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்று தான் எனக்கும் ஆசை. ஆனா என்ன பண்றது, அவன் அப்படிபட்டவன் கிடையாது, சிந்துவை அவன் பார்க்கும் வரை. 



                                                                                                   "வாழ்க்கை வாழ்வதற்கே அடுத்தவங்கள கஷ்ட்டபடுத்தாத எந்த விஷயமும் தப்பில்ல”ன்னு தத்துவம் சொல்லிகிட்டே சைட் அடிப்பான். ஆனா சிந்து வந்த பிறகு அவன் வாழ்க்கைல எல்லாமே மாறிடுச்சு. சிந்து வந்த பிறகு சைட் அடிக்கற விட்டுட்டான். யாரப் பார்த்தாலும் அவள மாதிரியே இருக்குன்னு சினிமா டயலாக் எல்லாம் பேசறான். சித்துவும் சிந்துவும் வெறும் நண்பர்கள் தான்ன்னு நானும் எல்லார் மாதிரியும் நினைச்சேன். ஆனா கல்லூரி கடைசி நாள் நான் படிச்ச சித்துவோட டைரி தான் எனக்கு உண்மைய புரிய வெச்சுது. இந்த நூற்றாண்டுலயும் டைரி எழுதற பழக்கம் உள்ளவன் அவன்.

சித்துவின் டைரி :
கல்லூரி மூன்றாம் வருடம் :
நவம்பர் 11, 2003 :
              நாளை எனக்கு நான்காவது செமஸ்ட்டர் தேர்வு, இன்று டைரி எழுதும் எண்ணமே இல்லை எனக்கு, இது வரை.
இன்னிக்கு ஒண்ணும் பெருசா நடக்கல. அவளுக்கு அந்த பாடம் வராது, இன்று முழுவதும் அவளுக்கு அதை சொல்லி குடுப்பதற்காகவே ஒதுக்கி இருந்தேன். எனக்கும் பெருசா அத பத்தி தெரியாதுன்னாலும் அவளுக்கு சொல்லி தரணும்ன்னே படிச்சேன். இது வரைக்கும் பல நாள் எனக்கு சொல்லி குடுத்து இருக்கா, நான் அவ சொன்னத கவனிச்சத விட அவ குரல ரசிச்ச நேரம் தான் ஜாஸ்தி. இது வரை நான் இவ்வளவு பேசியதே இல்லை ஒரே நாளில். அந்த நாள் அவளுக்கு தொண்டை வலிப்பதை கூட மறைத்து பேசினேன்.
“நான் யாரையாவது காதலிக்கறேன்ன்னு தெரிஞ்சா நீ என்ன பண்ணுவ?” 
இந்த குறுஞ்செய்தி இரவு 11 மணிக்கு அவளிடம் இருந்து வந்த்து. அப்போது தான் என் மூளைக்கு உறைத்தது. நாங்கள் காதலர்கள் அல்ல. நாங்கள் காதலிக்கவில்லை. ஆனால் நட்பை தாண்டிய எதோ ஒரு இனம் புரியாத உணர்வு எங்களுக்குள் இருப்பதாகவும் இல்லை என்றும் எனக்கு நானே வாதப்பிரதிவாதங்கள் நடத்தியது உண்டு 
“நீ அப்படி எல்லாம் பண்ன மாட்ட டா செல்லம்”
என்ன தான் மெசேஜ்ஜ தட்டி விட்டுட்டேன்னாலும். மனசு முதல் வருடத்தில் அறிமுகம் இல்லாத போது ஒரு நண்பன் சொன்னதையே பிடித்து தொங்கிக்கொண்டு இருந்தது.
“Have I said you about Nithin?”
முதல் வருடத்தில் என் நண்பன் சொன்ன அதே பெயர். உள்ளுக்குள் எரிச்சல் இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் மறுமொழி அனுப்பினேன்.
          “இல்லயே”
அப்பறம் அவளே பேசுனா அரை மணி நேரம் குறுங்கெய்திகளா வந்து குவியுது. இங்க என் மனசாட்சி வேற என்ன குத்தி கிழிக்குது. இது வரைக்கும் ஒரு மெசேஜ் எனக்குன்னு இப்படி அனுப்பி இருப்பாளா? கை வலிக்கும் அது இதுன்னு சாக்கு! ஆனா அந்தத் ….. (சென்சார்ட்) அவன பத்தி பேசும் போது மட்டும் எப்படி தான் இவ்வளவு தட்ட முடியுதோ.
மிக்ச்சரியா 12:05க்கு என் மொபைல உடைச்சேன்
!
           
சித்து தன்னோட வாழ்க்கைல யாருக்குமே சிந்து அளவுக்கு முக்கியத்துவம் குடுத்தது கிடையாது. அவன் பண்ணின தப்பே அது தான். அவளுக்கு அளவுக்கு அதிகமான, அவளுக்கு தகுதி இல்லாத முக்கியத்துவத்த குடுத்தது. அவள அவன் காதலிக்கறான்னே அவனுக்கு அன்னிக்கு தான் தெரிஞ்சுது.

         அதுக்கு முன்னாடியும் ரெண்டு பேரும் “ஐ லவ் யூ” சொல்லிக்குவாங்கன்னாலும் அது “கிலோ அஞ்சு ரூபா” ங்கற மாதிரி ரொம்ப சாதாரணமாத்தான் தெரிஞ்சுது.  எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சித்துவ மொதல்ல நேசிச்சது சிந்து தான். சிந்து , அத நட்பா பாத்தா. ஆனா, சித்து காதலா பாத்துட்டான். பசங்களோட வீக் பாயிண்ட்டே அதானே! இன்னும் நினைவு இருக்கு, சித்து என் கிட்ட ஒரு நாள் “மச்சி, அவ வெளில போலாம். கோவிலுக்கு போலாம்கறா டா. அவ சரி இல்ல டா.. எங்க ப்ரபோஸ் பண்ணீருவாளோன்னு பயமா இருக்கு” என்றது. அப்போது அவன் காதலில் இல்லை. அவள் இன்னொருவனை விரும்புகிறாள் என்பதை தாங்க முடியாத போது தான் தான் காதலில் இருப்பதையே உணர்ந்திருக்கிறான் அவன்.  




     அவளுக்கு எப்போதுமே பயம் அதிகம். முடிவு எடுக்கத்தெரியாது. அவளுக்கு எல்லாமே கத்துக்கொடுத்தது சித்து தான். ஒரு விஷயம் செஞ்சுட்டு ஏன் செஞ்சோம்ன்னு யோசிச்சிட்டே இருப்பா, அது நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ. அவள முழுசா மாத்துனான் சித்து. அவளுக்கு தான் அழகு ரொம்ப கம்மின்னு ஒரு எண்ணம் அதை போக்குனதே சித்து தான். அவ ஒண்ணும் அவ்வளவு அழகு இல்ல தான். ஆனா சித்து என்ன சொல்லுவான் தெரியுமா?

“அவ என் கண்ணுக்கு அழகு டா. Beauty and taste are relative theory. எனக்கு அவ அழகு. அவ்வளவு தான். அவளுக்கு மேக்-அப் போடவே தெரியாது மச்சி. அவ மேக்-அப் இல்லாம அவ்வளவு அழகா இருப்பா தெரியுமா? காலைல எந்திரிச்ச உடனே அவள பார்த்துட்டு ஒரு நாள் ‘அய்ய்யோ கொன்னுட்டா போ’. ஆனா அவ அழகு அவளுக்கே தெரியாது மச்சி… அவ இருக்காளே… “

இப்படித்தான் விட்டா அவள வர்ணிச்சுகிட்டே இருப்பான்.

     இந்த காதலிக்கறவங்களே இப்படித்தான் பாஸ். இதே நான் ஆயிஷா ஸ்லிம்மா இருக்கான்னு சொன்ன மட்டும் ஓட்டுவானுங்க. X-(

ஓவர் டூ கிராஜுவேஷன் டே

சித்துவின் டைரிகிராஜுவேஷன் டே : மார்ச் 11 , 2005
அவள் இத்தனை வருடம் தேக்கி வைத்திருந்த பாசத்தை எல்லாம் கோர்த்து முத்தமிட்டாள். என் கல்லூரி முதல்வருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. கல்லூரியின் முதல் மாணவியும், தட்டுத்தடுமாறி பாஸ் ஆன பையனும் நடு மேடையில் முத்தமிட்டுக்கொண்டால் பாவம் அவரால் என்ன தான் செய்ய முடியும்.
“சித்து,” என்றாள்
“ம்ம்ம்” என்றேன் என் உதட்டை எடுக்காமலேயே.
“நான் உன்ன எவ்ளோ மிஸ் பண்ணேன்னு தெரியுமா?”
“ஒரு கால் கூட பண்ணல” சொல்லிவிட்டு ஒரு அடி விலகி நின்றேன். 
பிரின்சி எங்கோ இருந்து ஓடி வந்தார்.
“என்ன இது? ஸ்டேஜுல. சிந்து, ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃப்ரம் யூ,”
“டேய் மூடிட்டு போடா” இது நான்.
சட்டென சிரித்த சிந்து என் வாயை தன் கையால் மூடினாள்.

“நீ திருந்தவே மாட்ட டா”
 சத்தியமா சிந்துவ பாக்க கூடாது ந்னு நினைச்சு இஷட்டமே இல்லாம தான் இந்த இடத்துக்கு வந்தேன். ஆனா, வழக்கம் போல ரெண்டே நிமிஷத்துல என் கோவம் போன இடமே தெரியாம பண்ணீட்டா. சிந்து எனக்கு என்னிக்குமே ஸ்பெஷல். நாங்க முதன் முதலா கிளோஸ் ஆனது ஒரு கல்லூரி ஐ.வி ல தான். யாருமே இல்லாமல் ஒரு இடத்தில் அவள் தனியாக தவிக்க பின் அவளுடன் பழக ஆரம்பித்து, இருவருக்கும் பல ஒற்றுமைகள் தெரிந்து. நட்புக்குள்ளும் ஊடல் கூடல் எல்லாம் இருக்கு பாஸ்ன்னு நான் வெளியில் சொல்ல ஆரம்பித்ததும் அப்போது தான்.
     எனக்கு அவ உலகத்துலயே முக்கியமானவளா இருந்தா ஒரு வருஷம் முன்னாடி. ஆனா இப்போ அவள பாக்க கூடாதுன்னு ஆசைப்படறேன். நான் அவளுக்கு அத பண்ணேன் இத பண்ணேன்ன்னு சொல்லி எல்லாம் காமிக்க முடியாது. ஆனா அவ எனக்காக எதுவுமே பண்ணலன்ங்கறது வலிக்குது. அவ என்னோட சொத்து இல்லங்கறது வலிக்குது. நான் இன்னிக்கு அவள பாக்க கூடாது. இப்படி எல்லாம் நினைச்சு தான் வந்தேன். ஆனா , மறுபடியும் கவுத்துட்டா!”

    
          நாம் மழை வர வேண்டும் என நினைத்த போதெல்லாம் மழை வருகிறதா என்ன? காதலும் மழை போல தான். பார்க்க நனைய பரவசம் ஆனால் வேண்டும் போது வராது. சிந்துவுக்கு தன்னை மற்றவர்கள் எதுவும் சொல்லிவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை. அவன் பல முறை மிகவும் ஆசைப்பட்டு கேட்ட பல விஷயங்களை அவள் செய்யாததற்க்கு காரணம் “ஊர் பார்த்தால் என்ன சொல்லும்?” என்பது தான். ஆனால் “எவன் பார்த்தால் எனக்கு என்ன?” என்பான் சித்து.
இது தான் சித்து எழுதிய கடைசி டைரிப்பக்கம். இதை அவன் எழுதி முடித்தவுடன்,
“சித்து,” கதவுக்கு பின்னால் இருந்து சிந்து அழைத்தால். 

 அன்று எல்லாரும் ஒரு பொதுவான நண்பர் வீட்டில் தங்கி இருந்தோம்.
சித்து என்னை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்தான். இந்த ஒரு வருடமாக சரக்கு அடித்து விட்டு, கதவுக்கு பின்னாடி சிந்து டா என்று அவன் புலம்புனது எல்லாம் இன்று உண்மை ஆகிவிட்டது.

ஒரு வருஷம் எவ்வளவு பேசுனான். இப்ப பாருங்க அவ பின்னாடி ஒரு நாய்க்குட்டி மாதிரி ஓடுறான். இந்த பசங்கள திருத்தவே முடியாது.

பின்னால் இருந்து ஆயிஷா “அங்க என்ன நின்னுகிட்டு யோசன?”.

“ஒண்ணுமில்லம்மா J” (ம்ம்ம்ஹும் திருத்தவே முடியாது)

         அவர்கள் ஜோடியாய் நடப்பதை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு! சின்னக் குழந்தைகள் போல துள்ளித்துள்ளி ஓடுகிறார்கள். கை கோர்த்து அவர்கள் நடப்பதை எத்தனை முறை கற்பனை செய்து சொல்லியிருக்கிறான் சித்து. ஒரு முனையில் இருந்து இன்னொன்றுக்கு தாவி விளையாடினார்கள். என்னை அறியாமலேயே என் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

           பக்கத்தில் ஏதோ ஒரு கோவிலில் திருவிழா. பாட்டை அலற விட்டு இருந்தார்கள். சித்துவோடு நாங்கள் இங்கே ரூம் எடுத்து படித்த போது அவன் கோவில் நிர்வாகத்தோடு நிறைய முறை சண்டையிட்டு இருக்கிறான். அவன் ஒரு பகுத்தறிவுவாதியாம்! (என்ன கருமமோ , லவ்வு பண்ணுறப்ப மட்டும் அறிவ கழட்டி அட்டாலில வெச்சுருவான் போல)
அப்போது, என்னை தாண்டி அவர்களை நோக்கி தறி கெட்டு விரைந்தது விளக்கு இல்லாத அந்த லாரி. ஓட்டுனர் குடித்திருப்பான் என நினைக்கிறேன். அதன்  ஹாரன் சத்தம் இந்த பாட்டு சத்ததை தாண்டி அவர்கள் காதில் விழ நியாமில்லை.

         “சித்துஊ….” வயிறு எக்கி கத்தினேன் பயனில்லை. அலைபேசியை தேடி அவனை அழைத்தேன். இன்னும் அவர்களுக்கும் லாரிக்கும் 10 அடி தான் இருந்தது.

எடுத்தான்.

         “பின்னாடி பார்ர்றா….”  நான் சொல்லி அவன் திரும்பவதற்கும் லாரி அவர்களை சந்திப்பதற்க்கும் ஒரு நொடி இடைவெளியே இருந்தது. என்ன நினைத்தானோ தெரியவில்லை. இவ்வளவு நேரம் அணைத்து பிடித்து இருந்த சிந்துவை சட்டென மறுமுனைக்கு தள்ளிவிட்டான். பின் அவன் பாய முயல அதற்க்குள் லாரி அவன் மீது மோதி தூக்கி வீசியது.
சித்துவுக்கு மருத்துவமனை என்றாலே பிடிக்காது. சிந்துவுக்கு ஒரு முறை கால் முறிந்த போது சித்து பட்ட வேதனை எல்லாருக்கும் தெரியும். பயபுள்ள ஒரு மாசம் தூங்க விடல என்னை.

         சில எலும்பு முறிவுகள் தான், உயிருக்கு ஒன்றும் இல்லை என் மருத்துவர் கூறி விட்டார். இது அபசகுனம் எனக்கூறி சிந்துவை அவள் அம்மா அழைத்து சென்று விட்டார். சிந்து வீட்டிற்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி. தங்கள் மகள் மேடையில் இவ்வாறு நடந்து கொள்வாள் என்று அவர்கள் எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள். ஏன் சித்துவே எதிர்பார்க்கவில்லை தான். அவர்களை சமாதானம் செய்வதாக வாக்குறுதி அளித்துச் சென்றாள் சிந்து.



“போயிட்டாளா?” அவளை அனுப்பி விட்டு உள்ளே வந்ததும் சித்து என்னிடம் கேட்டான்.

“டேய் முழிச்சிட்டா இருந்த? அப்பறம் ஏண்டா அவ வந்த தூங்கற மாதிரி நடிச்ச?” என்றேன்.

அவன் மெல்ல சிரித்தான். தலையை தூக்க முடியாத போது கூட சிரிக்கும் இவனை சிந்து அடிபட்ட போது நீங்கள் பார்த்திருக்க வேண்டும்!

“போகட்டும் டா. அவ எனக்கு வேணாம்”

எனக்கு தலை சுற்றுவது போல இருந்தது.

“டேய் இவள நினைச்சு தான் டா ஒரு வருஷம் புலம்புன?” எனக்கு உண்மையாகவே கோவம் தலைக்கேறி விட்டது.

“ஆமாம், ஆனா”

“என்ன ஆனா…”

“இந்த டாக்ட்டர எனக்கு  நல்லா தெரியும். சிந்துவுக்கு அடிபட்டப்ப இருந்து” என்றான்.

“அதுக்கு?”

“உங்ககிட்ட எனக்காக அவர் ஒரு பொய் சொல்லிட்டாரு, சித்து ஆயிசு இன்னும் நாலு மாசம் தான்” சொல்லிவிட்டு கண்ணடித்து சிரித்தான். எனக்கு காலுக்கு கீழே நிலம் நழுவுவது போன்ற உணர்வு!      
            
“காலேஜ்ன்னாலே சித்து சிந்து நியாபகம் தான் இல்ல”  என் நினைவை கலைத்தால் ஆயிஷா.
“சித்து ரொம்ப நல்லவன்,” நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டே சொன்னேன். ஆயிஷாவிற்கு சித்துவை பிடிக்காது. சுத்தாமாக பொறுப்பில்லாத எதற்க்குமே உதவாதவன் என்பது அவள் வாதம்.
அது ஒரு வகையில் உண்மை தான். சித்துவிற்கு வாழ்க்கையில் எதுவுமே அமைந்தது இல்லை. அவன் செய்த்து எதுவுமே சரியாக முடிந்தது இல்லை. தனக்கு அதிஷ்ட்டம் என்று ஒன்று இல்லை என நன்றாக தெரிந்தும் அதைப்பற்றி அவன் பெரிதாக அலட்டிக்கொண்டது இல்லை.

“ஹ்ம்ம்ம்” என்னிடம்  இருந்து ஒரு ஆழ்ந்த பெருமூச்சு வெளிப்பட்ட்து.
“இன்னிக்கு என்ன நாள் நியாபகம் இருக்கா?”

“ம்ம்… சித்து நினைவு நாள்” அவள் சொல்லிவிட்டு வேறு பக்கம் வெறித்தாள் “இன்னியோட அஞ்சு வருஷம் முடியுது”

நான் காரில் இருந்து இறங்கினேன். எல்லா பழைய நண்பர்களும் ஓடி வந்து கட்டிக்கொண்டார்கள். நட்பு வயதை மீறி இளமையானது. எவ்வளவு வயதானாலும், நாம் நண்பனை பார்த்த முதல் நாளுக்கு சென்று விடுவோம்.

எல்லாரும் ரொம்பவே மாறி இருந்தார்கள். “ஐ.டி பேட்ச் 2005” என்ற பேனர்கள் அங்கங்கே வைக்கப்பட்டு இருந்தன. எல்லார் முகத்திலும் பணக்காரத்தனம் தெரிந்தது. சாப்ட்வேர் வேலை காரணமாக உடல் பருத்து இருந்தது.  என் கண்கள் சிந்துவை தேடியது. அது அது… சிந்து தான் ஒரு கூட்டத்தின் மத்தியில் நின்று கொண்டு இருந்தாள். மெரூன் நிற புடவை, கூட ஒருவன் கண்ணாடி போட்டுக்கொண்டு நின்று கொண்டு இருந்தான். அவளுக்கும் அவனுக்கும் பொருத்தமே இல்லை. அவளை விட 10 மடங்கு பெரிதாக இருந்தான்.

சித்து இருந்திருந்தால் “இவன பாத்தா புள்ள புடிக்கறவன் மாதிரி இருக்கு” என சொல்லி இருப்பான்.

     “ஹேய்,” என்றபடி அவளை சென்று கட்டிக்கொண்டாள் ஆயிஷா.
என்னை அவள் அங்கு எதிர்பார்க்கவில்லை என நினைக்கிறேன். அவள் முகத்தில் ரத்தம் தொலைத்து இருந்தாள்.

அருகில் சென்று “எப்படி இருக்க?” என்றேன்.

“நல்லா இருக்கேன்” என்றாள்.

திரும்பி வருவதாக சொல்லிவிட்டு சென்றவள் திரும்பவே இல்லை. குற்ற உணர்ச்சி அவளை அரித்திருக்க வேண்டும்.

“இவர் என் ஹஸ்பண்ட், கல்யாண், டி.சி.எஸ் ல சீப் ப்ரோக்ராமர்”
சித்து இருந்த வரைக்கும் பெரிதாய் அவனுக்கு வேலையில் நாட்டமில்லை. ஏனோ தானோ என்றே வேலைக்கு சென்று வந்தான். உண்மையை  சொல்லப்போனால் சிந்து இல்லை என்றான பிறகு அவனுக்கு எதிலுமே நாட்டமில்லை.

அறிமுகப்படுத்திய கையோடு யாரையோ அழைப்பது போல் பாவனை செய்து விட்டு கழன்டு கொண்டாள் சிந்து. அந்த குண்டு கல்யாணோடு பேசிக்கொண்டு இருந்தேன்.

ஒரு பையன் என்னிடம் ஓடி வந்து “அங்கிள் சாக்லேட் எடுத்துக்குங்க” என்றான்.

சே இத்தனை வயசானாலும் யாரவது அங்கிள் என்று கூப்பிட்டால் வலிக்கிறது. ஏன் அண்ணன்ன்னு சொன்னா கொறஞ்சா போயிடுவான்?

“எதுக்கு தம்பி?” என்றேன்.

“எனக்கு இன்னிக்கு பர்த்-டே அங்கிள்,” என்றான்

“உன் பேர் என்னப்பா?,”

அதற்குள் யாரோ கூப்பிட அந்த சிறுவன் ஓடி விட்டான்.

“சித்தார்த்,” கல்யாண் சொன்னான் “ எங்க அப்பா பேரு, இத வெக்க கூடாதுன்னு சிந்து ஒரே ரகள, அவள சமாதனப்படுத்தறத்துக்குள்ள…”
அவன் பேசிக்கொண்டே போனான் எனக்கு எதுவுமே காதில் விழவில்லை. சித்து தன் மரணத்தின் போது சொன்னது என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்த்து.

“எனக்கு சிந்து அழுகற மாதிரி, கதர்ற மாதிரி தோணுது டா,”

“பையனுக்கு எவ்வளவு வயசு?”

“அஞ்சு”

நான் சிரித்தேன். அந்த பையனை என் கண்கள் தானாக தேடியது. சிந்துவுடன் ஏதோ விளையாடிக்கொண்டு இருந்தான்.

“சித்துவுக்கு சிந்துன்னா உசுரு, அவ இல்லாம ஒரு நாள் 
கூட தனியா தூங்க மாட்டான், சாப்பிட மாட்டான். அவ்வளவு பாசம் அவ மேல”

நான் சிரித்தேன். ஆனாலும் ஏனோ கண்ணீர் துளிர் விட்டு என் முகரோமங்களினூடே குறுகுறுத்தது.

“எனக்கு தெரியும்,” என்று சொல்லிவிட்டு சிந்துவையும் சித்துவையும் பார்த்தபடியே சொன்னேன் “சித்துவுக்கு சிந்துன்னா உசுரு”.