Flipkart

Amazon

Amazon

Showing posts with label ஜாதி. Show all posts
Showing posts with label ஜாதி. Show all posts

Sunday, February 8, 2015

சலுகை

https://twitter.com/Koothaadi/status/563979307324669954

https://twitter.com/lakschumi/status/564172264070189056

இந்த குறிப்பிட்ட ட்வீட் பற்றி நேற்று @shilphacharles ஓடு கடும் சண்டை. அவளது பாயிண்ட் 'இந்தச் சமூகம் இப்படி பெண்களை வைத்திருக்கிறது'
மிக validஆன பாயிண்ட். 70களில். இப்போதும் கூட படிக்க இயலாத கைக்குள்ளேயே வாழும் பெண்களுக்கு.

ஊருக்கு உபதேசம் செய்வதும், சொந்த வாழ்க்கையில் மண்ணாந்தையாய் வாழ்வதும் நம் கலாச்சாரம். இங்கே எத்தனை பேர் நியூமராலஜி லூசுத்தனம் என தெரிந்து தன் பிள்ளைகளுக்கு நியூமராலஜி படி பெயர் சூட்டி இருப்பார்கள்?

இந்த சின்ன ட்விட்டர் ஸ்பேசை sample space ஆக வைத்து பாருங்கள். 10% வருமான வரி வரம்புக்குள் வரும் திருமணமாகாத பெண்களை typical நம் சமூக பெண்கள் எனக்கொள்வோம். இதில் எத்தனை பேர் நான் சொன்ன மாப்பிள்ளைகளை திருமணசந்தையில் பெற்றோர் வாங்கித்தர காத்திருக்கிறார்கள்?

திருமணமான எத்தனை பெண்கள் சந்தைக்கு போகாமல் தானாய் தன் கணவனை தேர்ந்தெடுத்தார்கள்? இவர்களெல்லாம் இந்த சமூகம் தரும் அடையாளத்தை, சலுகைகளை, பாதுகாப்பை வாங்கிக்கொண்டு அடமானமாய் தன் உரிமைகளை வைக்கிறார்கள். Emotional blackmail, caste, relatives - and related perks இதையெல்லாம் பெற்றுக்கொண்டு உரிமை அடகு வைக்கும் போது அதற்கெதிராய் பேச மட்டும் செய்தால் அது அயோக்கியத்தனமில்லையா?

ஆண்கள் - ? அவர்கள் சதவீத அளவில் கொஞ்சம் மேல். சந்தைக்கு போகாமலிருப்பவர்கள், பெண்களைவிட சற்றே அதிகம். ஆனால் மீதமிருப்பவர்கள் - சந்தைக்காரர்களுக்கு அதோடு ஜாதிப்பற்றும், ஆணாதிக்கமும் இருக்கும். - சந்தைக்கு செல்லும் பெண்டிருக்கு இதுகள் தான் வாய்க்கும். and they deserve it.


Monday, September 29, 2014

மெட்ராஸ் - விமர்சனம்

மெட்ராஸ்

பெங்களூரு வந்து கிட்டத்திட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. நேற்று இரண்டாம் ஆட்டம்  முடித்துவிட்டு வரும் போது நண்பன் ஒருவனிடம் சென்னை-பெங்களூரு ஓப்பீடு பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அலுவலகத்தில் எப்போதும் ஓடும் டாப்பிக். தமிழர்கள் அல்லாதவர்களிடம் மெட்ராஸ் குறித்த ஒரு பிம்பம் உண்டு. தமிழ் இல்லன்னா பிழைக்க முடியாத ஒரு ஊர் அது. சென்னை ஹீட்டுப்பா... எனக்கு பெரிதாக ஸ்டீரியோடைப்புகளில் நம்பிக்கை இல்லை என்பதால் சண்டை வராது. சிரித்துக்கொண்டே போய்விடுவேன்.

நேத்து நண்பன் சொல்லிக்கொண்டிருந்தான். இங்கு எல்லாருக்குமே தமிழோ இந்தியோ தெரியுது. பிரச்சனை இல்லாத ஊர்ண்ணே. என் ஆபிசிலும் இதே தான் சொல்வார்கள். சென்னையில் ஹிந்தி பேசி பிழைக்க முடியாது. பெங்களூரில் கன்னடாக்காரர்களை பார்க்கவே முடிவதில்லை. எல்லாம் பெயர்ந்தவர்கள். இங்கே இருந்த மண்ணின் மைந்தர்கள், வீடு நிலம் மூலம் செட்டில் ஆனவர்கள் ஆனாலும் சரி, தங்கள் மொழி சார்ந்த அடையாளத்தை முற்றிலும் துடைத்தெறிந்து விட்டு வாழ்கிறார்கள். சினிமா, இலக்கியம் என எந்தக்கன்னடத்  தொடர்பும் அவர்கள் மொழி அடையாளத்தை உயிர்ப்புடன் வைக்கும் அளவு இல்லை. இந்த தலைமுறையினருக்காவது சற்று வருத்தம் இருக்கிறது. ஒரு இருபதாண்டுகள் கழித்தால், பெங்களூரில் பெங்களூரியன்ஸ் மட்டும் தான் இருப்பார்கள்.

மன்னிக்கவும். மெட்ராஸ் விமர்சனம் இடத்தான் ஆரம்பித்தேன். முன்னுரை கொஞ்சம் லெந்த்தா போச்சு.




சென்னை பல ஊர்களில் வந்து குவிந்த மக்களின் வாழ்வாதாரம். கட்டிடத்தில் பணிபுரியும் கூலிகள் தொடங்கி ஐடியில் ஐடி கார்டோடு திரியும் கூலிகள் வரை. ஆனால், மெட்ராஸ் அது வேறு. மெட்ராஸ், மெட்ராஸ்காரர்களின் ஊர். புளியந்தோப்பு - தலித்துகள் வாழும், அல்லது அவர்கள் வாழ பணிக்கப்பட்ட பகுதி. ஒரு சுவரை மையமாக வைத்து, அதிகாரத்திணிப்பை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறார் ரஞ்சித்.

தமிழ் பிரபாவின் விமர்சனத்தை கீழே பகிர்ந்துள்ளேன். வரிக்கு வரி நான் எழுத நினைத்ததையும், மேலும் சில வட சென்னை அத்தெண்டிக் அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளதால், விடுபட்டவையை மட்டும் நான் சொல்கிறேன்.

தமிழ் பிரபாவின் விமர்சனம் : https://www.facebook.com/prabha.prabakaran/posts/807940465924748

 பொதுவாக எனக்கு கார்த்தியின் முகம் அலர்ஜி. தெலுங்கு பாணி நடிப்பு அவருடையது. இப்படத்திலும் க்ளைமேக்ஸில் ஸ்கூல் பாடம் உட்பட சில இடத்தில் சிரிப்பு வந்தாலும், ஓரளவு சமாளிக்கிற அளவு ஒன்றியிருக்கார். வட சென்னையின் முகத்தை மிக யதார்த்தமான ஒரு கோணத்தில் காட்டியிருக்கிறார் ரஞ்சித். எல்லாருக்கும் இதில் புரிந்தது மேலோட்டமாய் தலித் அரசியல் - அதிகார அடக்குமுறை மட்டும் தான். எனக்குத்தெரிந்து ரஞ்சித் நுட்பமாய் சொன்னவை/ நான் ரசித்தவை :

1. அம்மக்களிடம் பொங்கும் காதலும், கனவுகளும் - அன்பும், அவன் மனைவியும் மோகம் கொள்ளும் இடங்கள் அனைத்துமே காதலின் உச்சம். எளிய மனிதர்களின் காதலை இதைவிடச்சிறப்பாக சொல்லிவிட முடியுமா எனத்தெரியவில்லை. பையனை புட் பால் பிளேயர் (கால்பந்து வீரன் :-) ) ஆக்குவது தொடங்கி எத்தனை கனவுகள்?

2. கலை. நடனக்குழு, புட்பால், கேரம் என விளையாட்டுகள். எல்லா ஏரியாவிலும் இக்குழுக்களில் திறமைமிக்க எத்தனையோ இளைஞர்கள் இருப்பார்கள். இதைப்பெரும்பாலும் வெறும் சீன் பேக் ட்ராப்பாக மட்டுமே நம்மாட்கள் பயன்படுத்தி வந்தார்கள். ரஞ்சித் கதையோட்டத்தில் அதை இணைத்துள்ளார் - முக்கியமாய் நடனம், புட்பால், கானா.

3. அரசியல் எப்போதுமே ஆடு புலி ஆட்டம் தான். புலிகள் ஆடுகளை மோதவிட்டு வழியுமவற்றின் குருதியை நக்கிக்குடிக்கும் ஆட்டம். மேலிருக்கும் புலிகளுக்கு எல்லாருமே ஆடுகள் தான். தலித் அடையாள அரசியலைத் தாண்டி, மாரி - சேது கூட்டணி, மாரியை போட்டுத்தள்ளிவிட்டு விஜி மேலே வருவது, யார் வந்தாலும் சுவர் தன்னிடம் இருக்கவேண்டுமென நினைக்கும் சேது, அதற்கு மேல், கீழே உள்ள நிலைமை தெரிந்தும் கூட்டணி வைக்கும் தலைவர்கள் (எனக்கு விசி-பாமக ஒரு கூட்டணியில் இருந்ததை குத்தியதாக தெரிந்தது) என ஒரு படி கீழே இருப்பவன் ஆடாகத்தான் பாவிக்கப்படுகிறான்.

4. முதலிலேயே புள்ள குட்டிய படிக்க வைங்கடா என யதார்த்தமாக சொல்லும், ஜாலி இளைஞனாக, கொலை செய்து விட்டு பின் அவ்ளோ தானாடா என பினாத்தும் போதும் நன்றாகவே நடித்திருக்கிறார் கார்த்தி.

5. ஜானி பற்றி ஊரே சிலாகித்து விட்டது. தொப்பி எட்த்துக்கிரேன் பாஸூ... ஹேட்ஸ் ஆஃப் ஜானி :)

                      மொத்தமாக வட சென்னையின் கனவுகள், காதல், அவ்விளைஞர்களின் திறமைகள், அவர்கள் வாழ்க்கைப்பாதையென அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி, அதன் முன் நிற்கும் வரலாற்றின் நெடிய தொடர் சங்கிலி சவால்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தியதால் மெட்ராஸ் மிக முக்கியமான படம்.

                 இன்னொரு பக்கம். பரபரக்கிற ஸ்க்ரீன் ப்ளே. அரசியல் சதுரங்கத்தின் சோல்ஜர்-மந்திரி ஆட்டம், மிக யதார்த்தமான ஒரு காதல், அட்டகாசமான சந்தோஷ் நாரயணின் பிண்ணனி, பாடல்கள் என ஒரு பக்கா கமிர்ஷியல் ஹிட். இதற்காக சில ட்ரேட் ஆஃப்களை ரஞ்சித் செய்திருந்தாலும் அது ஓக்கே தான்.

படம் முடிந்தவுடன் என் நண்பனிடம் இதைத்தான் சொன்னேன்

"ஆரண்ய காண்டம் ஒரு கல்ட் க்ளாசிக்காகி விட்டது, மற்றபடி சென்னை இளைஞர் பாத்திரத்தை கதா நாயகனாக கொண்ட படங்களெல்லாம் கமர்சியல், மெட்ராஸ் இரண்டுக்கும் இடையிலான பேலண்ஸ்"

பாரட்டுக்கள் ரஞ்சித், சந்தோஷ் நாராயண், முரளி. லாங்க் வே டு கோ.


Sunday, July 7, 2013

பாமக - விசி - திராவிடம் - ஜாதி - கலப்பு மணம் - எதிர்காலம் : மற்றுமொரு பக்கம் 8 :


** தலைப்பை போலவே கட்டுரை முழுக்க என் புரிதலில் அடிப்படையிலான அவதானிப்புகளால் ஆனாது. ஜாதிய வரலாற்றை, அடக்குமுறையை ஒரே கட்டுரையில் சொல்லி விட முடியாதது போல, எதிர்காலத்தையும் ஒரே கட்டுரையில் அடக்கி விட முடியாது. இக்கட்டுரை நீண்ட ஒரு விவாதத்திற்கு அடிகோலும்.

** இதற்கு முன் ஆழி செந்தில் நாதன் அவர்கள் எழுதிய இது தொடர்பான கட்டுரையை படித்தேன். அதில் அவர் சொன்ன விஷயங்களை எழுத வேண்டும் என் நினைத்திருந்தேன். அவற்றை தவிர்க்கிறேன்.

** இது வெறும் திவ்யா- இளவரசன் விவகாரம் வாயிலாக ஜாதிய அமைப்பை, வரும்காலத்தை ஆராய்வதல்ல. அதனால் தான் இவ்விகாரத்தின் சூடு அடங்கி எழுதுகிறேன்.

1. காதல் மட்டுமே ஜாதியை ஒழிக்கும் என நான் முற்றாக நம்பியது கிடையாது. ஜாதிக்கு எதிரான சமூக, அரசியல்  நிலைப்பாடு தான் அதை ஒழிக்கும் என்றே நம்பி வந்திருக்கிறேன்.

2. தமிழகம் முழுவதும் ஜாதி ரீதியான விவகாரங்களை ஆராய்ந்தால், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான அனுபவம் கிடைக்கும். அவற்றும் இருக்கும் பொதுத்தன்மையை மட்டும் பார்ப்போம்.

3. திராவிட இயக்கம் இப்போது முற்றாக தோய்ந்து விட்டது. திமுக கட்சியான பிறகு செய்ய வேண்டிய சமரசங்களில் முக்கியமானதாக பகுத்தறிவு மாறிப்போனது. அனைத்து ஜாதி அர்ச்சகர், தமிழ் பூசைகள் எல்லாம் நல்ல திட்டங்கள் தாம் பெயரளவில். ஜாதி ஒழிப்பென்ற அளவில் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. அடிப்படை காரணம் முக்கியமானது. எல்லா ஊர்களிலும் ஜாதியின் அடிப்படையில் தான் சீட் ஒதுக்க வேண்டி உள்ளது. உள்ளாட்ச்சி, சட்டமன்றம், பாராலுமன்றம் என எதுவும் இதுக்கு விதிவிலக்க. இங்கே Mutual dependency வருகிறது. ஜாதிக்காரனுக்கு சீட்டு குடுத்தா தான் ஜெயிப்பான், ஜெயிச்சா தான் பவர், பவர் இருந்தா தான் எதையுமே செய்ய முடியும்..ஆனா ஜாதிக்காரன் எப்படி ஜாதிய ஒழிக்க விடுவான்??

4. மேற்கண்ட பாயிண்ட்டால் எந்த கட்சியும் ஜாதியை ஒழிக்க முன்வராது. புதிய அரசியல் கட்சி ஆகாது. நாம் சிறுபான்மையினர் ஐயா.

5. அந்தப்பக்கம் என்ன நடக்கிறது? பாமக மட்டுமல்ல, அனைத்து சமுதாய பேரியக்கம் என்ற பெயரில் ஒன்று சேர்ந்த எல்லோருமே கேவலமான நோக்கம் உடையவர்கள். இது தலித் - தலித்தல்லாதோர் என்ற பிரிவு ஏற்படுத்த முனைப்புடன் செய்யப்பட்டது. இதில் வட நாட்டு ஹிந்து முஸ்லீம் கலவரம் தூண்டப்பட்ட அதே பார்முலா இருக்கலாம். If you know what I mean...

6. இப்போது Exogamy, மூலம் ஜாதியை உடைத்தல் தான் வரும்காலத்தில் சரியாக வரும் என எண்ணத்தோன்றுகிறது.

7. ஒரு பக்கம் சிறுவர்கள் முதற்கொண்டு எல்லோருக்கும் ஜாதி வெறி ஊட்டுகிறார்கள், பல்வேறு வழிகளில். நண்பர் ஒருவர் 2 வயது குழந்தை படம் போட்டு ஏதோ புஜ்ஜிமா **வை (ஜாதிப்பெயர்)  என பேனர் பார்த்ததாக சொன்னார்.. :-(

8.  ஜாதி ரீதியான மூளை சலவை Castration போன்றது. இவர்கள் காதலிக்க மாட்டார்கள் அல்லது சொந்த ஜாதி பெண்களை காதலிப்பார்கள்.

10. ஆனால், பெண்ணை வெறும் சதையாக பார்க்கும் மனோபாவம் தான் இவர்களுக்கிருக்கும் என்பதால், இப்படி ஜாதிக்குள் இறுகும் சமூகத்தை சேர்ந்த பெண்கள் மிகவும் துன்பமான வாழ்க்கையிலேயே உழலுவார்கள்.

11. எதிர்காலத்தில் காதல் - கலப்பு மணத்திற்கு பாதுகாப்பு  கொடுக்கும் வலுவான இயக்கம் வேஆண்டும். ஒரு காலத்தில் திகவில் எல்லோரும் சொந்தம் போல பழகினார்கள். இப்போது திக அல்லாத, பகுத்தறிவை தாண்டி - சுதந்திரம் - காதல் என்ற வெளிப்பார்வையில் ஒரு புது அமைப்பு தேவை. இந்த அமைப்பு நண்பர்களாகவும், உறவாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும்.

12. எல்லோரும் சமூகத்தை திருத்தி விட கிளம்ப முடியாது. ஆனால், Doing your bit is enough. ஒரு ஜாதி வெறி பிடித்த எச்சில்கலை நாய்க்கு இருக்கும் அதே கர்வம் நமக்கும் இருக்க வேண்டும்.

13. மீண்டும் அந்தப்பக்கம். குழந்தைகள் முதல் வளர்க்கப்படும் ஜாதிபற்று, வெறும் ஜாதிக்காரர்கள் மட்டும் கலந்து கொள்ளும் விழாக்கள் அமைத்து அதில் பேசி வெறியாக்கப்படுகிறது. வெள்ளை சட்டை, பந்தா, இத்தியாதிகள்.  15 வயது வரை இப்படி வளர்ந்த ஒருவனை எப்படி திருத்துவது??

14. வரும்காலத்தில் திருமணம் தாண்டி, நட்பு, உறவு என எல்லாமே ஜாதிக்காரன் தான் என ஆக்க ஒவ்வொரு ஜாதிக்கூட்டமும் முயன்று வருகிறது. இதன் வருங்காலம் மிக மோசமாய் இருக்கும்.

15. அரசியல் ரீதியில் ஒன்றூம் செய்ய முடியாது, எல்லா ஜாதி தலைவர்களையும் திருத்துவதோ, நாடு கடத்துவதோ சினிமாவில் முடியலாம், நிஜத்தில் ம்ஹூம். இப்போது ஒரே வழி காதல், நட்பு உறவில் ஜாதியை ஒழிக்கணும். அதற்கு காதல் மணம் புரிந்தவர்கள் தங்கள் பிள்ளைக்கு NO CASTE போட முன் வரணும் அவர்கள் பொருளாதாரம் அதற்கு இடம் தரணும் அல்லது அதற்கேற்ற ஒரு ரிசர்வேஷன் வரணும்.

16. இப்போது காதலிச்சா வெட்டுவாங்கன்னு பயம் இருக்கு. அந்த பயம் அகலணும். சட்டம் மூலமா ;-) ஒரு பயம் காதல பிரிக்க நெனைக்கற  ஜாதி கும்பலுக்கு வரணும்., காதலிக்கறவங்களுக்கு ஒரு பாதுகாப்புணர்வு வரணும்.

17. Emotional blackmails can be tackled with emotional blackmails again and if not can be ignored.

பல அவதானிப்புகள் சிதறி இருக்கலாம். மன்னிக்கவும்.

படம் : சிறு வயதில் சாதி உணர்வு :-(



Thursday, May 2, 2013

பீமதாசும் லவ்பெல்லும் - மற்றுமொரு பக்கம் 5 !

                                                நான் ஸ்கூல் படிக்கறப்ப பீம்தாசுன்னு ஒரு சொட்டைப்பையன் தான் எங்க "க்ளாஸ்" லீடரா இருந்தான். ஆச்சரியமா, அவன் பையனும் எங்க க்ளாஸ் தான். அந்த செவ்வெளநீ தலையன் பேரு லவ்பெல். எல்லா அப்பாக்கும் இருக்கற மாதிரி அவனுக்கும் தன் பையன ஸ்கூல் பீப்புள் லீடர் ஆக்கிப்பாக்கணுமின்னு ஆச.

                                    அவனும் என்னனென்னவோ பண்ணிப்பாத்தான் நடக்கல. ஒரு காலத்துல ஸ்கூலுக்குள்ள தண்ணி ஒழிப்பு, திருட்டு ரப்பர் அழிப்புன்னு நல்ல காரியங்க பண்ணிகிட்டு இருந்தவன், (எங்களுக்கு லன்ச் அவர்ல வேப்பமரத்தடி "இடஒதுக்கீடு" எல்லாம் வாங்கி தந்தவன்) திடீருன்னு "க்ளாஸ்" ரீதியா எங்கள பிரிச்சான். எங்க கிட்ட பேசும் போதெல்லாம், "நாமெல்லாம் க்ளாஸ் லீடரா இல்ல ஸ்கூல் லீடரா இருக்கறதுக்கே பொறந்தவங்க, நம்ம முப்பாட்டன் எல்லாம் பிரின்சிபல்லு, ஏன் கடவுள் வாழ்த்து பாடுறமே அந்த கடவுளே நம்ம க்ளாசுல மூணாவது பெஞ்சு கோமளாவ சைட் அடிச்சுகிட்டு கிடந்தவர் தான்"ன்னு பேசுவான். அதோட அந்த எடத்துலையே இல்லாத மத்த க்ளாஸ் பசங்கள பாத்து "உங்கம்மா கிட்ட போயி கேட்டுட்டு வாடா நீ எந்த க்ளாஸ்ன்னு, தேர்டு ஏ ல அவன் கண்ண அசைச்சா என்ன ஆகும் தெரியுமா? பிப்த்து பீல இவன் கால உட்டா என்ன ஆகும் தெரியுமான்னு" பீலா உடுவான். இவனுக்கு ஒரு அடியாள்  வேற. அவன் பேரு பென்சில் வெட்டி மரு ( இயவன் எவ்வளவு கேவலவாதின்னா, இவன் பேச ஆறம்பிச்சா பொண்ணுங்க எல்லாம் காத மூடிக்குவாங்கன்னா பாருங்களேன். சில பொண்ணுங்க மூக்கையும் மூசிக்கும், பயபுள்ள குளிக்கவே மாட்டான், பாக்க நல்லா புளி மூட்ட மாதிரி இருப்பான்) நாங்களும் வெறி புடிச்ச வேங்கையா எங்க க்ளாஸ் வீரத்தை மானத்தையும் நிலை நாட்டனுமின்னு முடிவு பண்ணினோம்! எங்களுக்கு புத்தி வந்துச்சு. எங்க க்ளாஸ்லயே இருந்துகிட்டு எங்க க்ளாஸ் பசங்க எல்லாத்தையும் ஒண்ணு சேத்துனோம், அவங்க கிட்ட நம்ம க்ளாஸோட பெருமை எல்லாம் சொன்னோம். அவங்களும் எங்க கூட சேந்தாங்க, க்ளாஸ் உணர்வு இல்லாதவனையும், எங்கய்யா (இனி பீமதாச அப்படித்தான் கூப்பிடணுமின்னு அவரே சொன்னாரு).

                    ஒரு நாள் நாங்க கூட்டத்துக்கு போறப்ப நடந்த பிரச்சனைல, கொஞ்சம் அடிதடி ஆகிடுச்சு. இதுக்கு இடையில ஸ்கூலுக்குள்ள கலவரத்த தூண்டி உட்டான்னு அவன் மேல காண்டாயி, பிரின்சிபல் அவன லெப்ட் ரைட் வாங்கீட்டாரு. நாங்க எங்க தலைவனுக்கு வந்த அவமானத்த எங்களோடதா நினைச்சு ஸ்கூல் போர்ட ஒடைக்கறது, மிஸ் முந்தானைய புடிச்சு இழுக்கறது போன்ற அற வழி போராட்டங்கள்ல ஈடுபட்டோம். இதை என்னபோ நாங்க மட்டும் தான் பண்ற மாதிரியும், மத்த க்ளாஸ் பசங்க மேல தப்பே இல்லாத மாதிரியும் எங்களையே குத்தம் சொன்னாங்க எல்லாரும்.

                    ஒரே ஒரு பையன் மட்டும் எங்க க்ளாசுல எங்க கூட சேர மாட்டான். அவனை அன்னைக்கு ஒரு நாள் புடிச்சு வற்புறுத்தி கேட்டப்ப சொன்னான், "ஏன் டா அந்த லூசுக்... தான் அப்படி பண்றான்னா நீங்க ஏன்டா புத்தி கெட்டு அலையறீங்க. நாம நல்லா படிச்சா, நல்லா வெளையாண்டு ஒழுக்கமாவும் இருந்தா நம்மள்ள ஒருத்தர் ஸ்கூல் பீப்புள் லீடரா வரலாம். அத விட்டுட்டு அவன் சொல்றத கேட்டுட்டு ஆடுறீங்க. அவங்க இங்க நம்ம கிட்ட இப்படி எல்லாம் சொல்லீட்டு வெளிய போயி, நம்ம க்ளாஸ் வஞ்சிக்கப்பட்ட க்ளாசு, இந்த க்ளாசுல தான் லேடீஸ் டீச்சரே இல்ல, படிக்கிற யாருக்கும் டவுசரே இல்லன்னு சோகக்கத சொல்றான். உண்மையிலேயே எல்லா க்ளாசுலையும் நல்லவன், கெட்டவன், படிக்கறவன், சாதிக்கறவன் எல்லாரும் இருக்காங்க டா.  அந்த சொட்டக்க்... தான் பையன ஸ்கூல் லீடராக்கறதுக்காக உங்களை எல்லாம் தூண்டி விடுறான். நல்லா யோசிச்சு பாருங்க, இப்ப பிரச்சன வந்தா மேல் லெவல்ல இருக்கற அவன் தப்பிச்சுருவான், கீழ் லெவல்ல இருக்கற பசங்க தான் எல்லா க்ளாஸ்லையும் பாதிக்கப்படுவாங்க. ஏன்னா, எல்லா க்ளாஸ்ல இருக்கற மேல் லெவல் பசங்க, பாதுகாப்பா தான் இருப்பாங்க. நமக்கு மரியாத, நாம ஒரே ஸ்கூலா இருந்தா தான் டா, இப்படி க்ளாஸ் க்ளாஸா பிரிஞ்சா இல்ல"ந்னான் ஒரே மூச்சுல.

             எங்க எல்லாத்துக்கும் செருப்பால அடிச்சா மாதிரி ஆயிடுச்சு. அவன் ஒரு காலத்துல நானோ என் பையனோ, பதவிக்கு வந்தா செப்பலால அடிங்கன்னு சொல்லீட்டு, போர்ட் அழிக்கற சுகாதார பதவிக்கு வந்தது எல்லாம் கண்ணுல நிழலாடுச்சு. "ஏன் டா பாடு, எங்க க்ளாசுக்கு நல்லது பண்ணுறேன்னு எங்கள தூண்டி உட்டு நீயும் உன் புள்ளையும் பதவிக்கு வறீங்கங்களா"ன்னு அவன அரச மரத்தடியில வெச்சு குமுறு குமுறுன்னு குமுறுனது வேற கத!

 நாங்க திருந்தீட்டோம் - அப்ப நீங்க?






Monday, April 29, 2013

மூன்று விஷயங்கள் : மற்றுமொரு பக்கம் 4


1. அந்த தோழி கல்லூரி பருவத்தை கடந்து ஆறேழு ஆண்டுகள் ஆகி இருக்கும். நேற்று நீயா நானாவை பார்த்து விட்டு, கல்லூரி கால நட்பில் பெண்கள் தன் நண்பனை தொட அனுமதிக்கக்கூடாது என்றார். எனக்கு தலை கிறுகிறுத்துவிட்டது. சிறு பிள்ளை போல குட் டச் பேட் டச் இவருக்கு சொல்லிக்கொடுக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. தொடுதல் என்றால் மாரை பிடித்து பிசைதல் என்று நினைத்திருப்பாரோ? ஏதோ ஒரு பாறையில் ஏறுகையில் கையை பிடித்து தூக்கி விடுதல், காய்ச்சல் அடிக்கும் போது "ஏன் டீ லூசு, டாக்ட்டர்ட்ட போனியா" என்று நெற்றி தொடுதல் எல்லாம் காமத்தில் சேருமென்றுஎன்னால் ஏற்கவே முடியவில்லை.

அந்த வயதிற்கென இருக்கும் இனக்கவர்ச்சியை நான் முழுதாக புறந்தள்ளவில்லை. அதே நேரத்தில், ஆக்சிடென்ட்டை தவிர்க்க ஹெல்மெட் போட்டு செல்வதற்கும், ரோட்டில் செல்லவே மாட்டேன் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. Explicit ஆக உன் சுண்டு விரல் கூட என் கை விரல்களின் மீது கூட படக்கூடாது என ஒரு ஆண் பெண் நட்பு இருப்பது சாத்தியமே இல்லை. நட்பின் அடிப்படையான நம்பிக்கை அங்கு சிதைக்கப்படுகிறதே?

பெற்றோர் பக்கம் நின்று ஒன்றே ஒன்றை சொல்கிறேன் - இப்படி முழுக்க உங்கள் கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கப்படும் பெண்ணை கல்லூரி முடிந்தவுடன் கட்டிக்க்கொடுப்பார்கள் எனில் கூட பரவாயில்லை. ஆனால், முழுக்க கட்டுப்பாட்டில் இருந்து விட்டு, வேலைக்கு செல்லும் போது முழுக்க சுதந்திரம் கிடைத்தால், அதை சரியாக பயன்படுத்தும் பக்குவம் அவர்களுக்கு இருக்காது. காரணம் நீங்கள் இத்தனை நாள் செய்த Spoon Feeding.

ஒரு வயதிற்கு என நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. பதின்ம வயதில் (Adolescence age) இனக்கவர்ச்சி அதில் ஒன்று. பெற்றோர்களாக நீங்களும் அதை கடந்தே வந்திருப்பீர்கள்.  கைப்பிடித்து வழிகாட்டியாக அந்த வயதில் உதவுதல் சரியாய் இருக்குமே அன்றி, அடைத்து வைத்து 22இல் டான்னு அவளுக்கு/அவனுக்கு பொறுப்பு வந்துரும் அப்ப அவுத்து உட்டுடுவேன் என்பது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். பொறுப்பு ஒரு Continuous process.

2. மேற்சொன்ன காரணிகள் நேராக இட்டுச்செல்வது எங்க பொண்ணு "தப்பா" போயிருமோ என்று. உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், காதலிப்பதை "தப்பு" என சொல்வீர்களே ஆனால், அவர்கள் உங்களை புழுவினும் கீழாகத்தான் பார்ப்பார்கள். என் சாதி சமூகம் தான் எனக்கு முக்கியம் என வெறி பிடித்து அலைபவர்கள் அலையுங்கள்; உங்களை திருத்துவது என் வேலை இல்லை.

  என் பெண்ணுக்கு தேர்ந்தெடுக்க தெரியாது அல்லது உறவினர்களால் சாதியை விட முடியாமல் பிடித்து தொங்குபவர்களுக்கு சொல்கிறேன், உங்கள் மகனுக்கோ மகளுக்கோ காதலிக்க கற்றுக்கொடுங்கள், தன் துணையை தேர்ந்தெடுக்க அவருக்கு உரிமையை கொடுக்கும் முன்னர், அதற்கான பக்குவத்தையும் நீங்களே உருவாக்கிவிடுங்கள்.

உங்கள் உறவினர்களுக்கு, சாதிக்கு நேர்மையாய் இருப்பதை விட, உங்கள் மார்பை தன் கவசமென எண்ணி, நீங்கள் நல்லதைத் தவிர வேறெதுவும் நினைக்க மாட்டீர்கள் என எண்ணி உங்கள் அனுமதி முக்கியமென எண்ணும் உங்கள் பெண்ணுக்கு பிடித்த அப்பாவை வாழ்ந்து பாருங்கள். அதன் சுகமே தனி சார்!

3. கமல் டீடீக்கு முத்தம் கொடுத்தது சரியா?

          ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா, முடியல. இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள். தனி மனித ஒழுக்கம் பேணுபவர்கள் யாரும் மற்றவர்கள் மீது அதை திணிக்க மாட்டார்கள். சொந்த வாழ்க்கையில் தான் ஒழுக்கம் என நம்புவதை கடை பிடிக்க முடியாதவர்களுக்கு "பார், இவனை விட நான் ஒழுக்கமானவன் தான்" என தன் மனதை சமாதானப்படுத்த ஒரு ஆள் தேவைப்படுகிறார். பார்க்கும் எல்லோரையும் குறை கூறி அதன் மூலம் தனது ஒழுக்கமின்மையை போக்கிக்கொள்கிறார்கள் இவர்கள்.

இவர்களுக்கான பதில் இது தான்.






ஏனய்யா, இது தவறென்றால்



இதுவும் தவறா?

மகள்களை பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று! - தங்க மீன்கள்.

Saturday, April 27, 2013

இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்கல!

        
                          படுக்கையில் வீழ்வதற்கும் உறக்கம் நம்மை ஆட்கொள்வற்கும் இடைப்பட்ட நேரத்தில் மனித மனம்  நிகழ்த்திவிடும் பயணம் அசாத்தியமானது. படுத்தவுடன் உறங்கிவிடுபவர்கள்  இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். சில இரவுகள் ஏதோ ஒரு பாடலினாலோ, பேருந்தில் ஒரு நொடி கவனித்த பெண் பழைய காதலி சாயலில் இருந்ததினாலோ என ஏதோ ஒரு காரணத்திற்காக உறக்கமில்லாமல் கடந்ததும் உண்டு. நேற்றைய இரவு என் உறக்கத்தை கலைத்துப் போட்டது நண்பர் @raGuCயின் ஒற்றை ட்வீட்.

அதற்கான என் பதிகளும் அவரது ட்விட்லாங்கரும் :
http://t.co/gWBMpsX4xx

           ட்வீட்டின் சாரத்தை கவனித்தவர்களுகும், ரகுவை அறிந்தவர்களுக்கும் நன்றாக புரியும். அந்த ட்வீட்டின் பின்னால் இருப்பது விரக்தி. "யாமர்க்கும் குடியல்லோம்" என பயோ வைத்திருக்கும் ஒருவர், "சாதியை பிடித்துக்கொள்ளுங்கள் இல்லையேல் அழிக்கப்படுவீர்கள்" என கீச்சுவது, எனக்கு எதைஎதையோ நினைவூட்டிவிட்டது.


           
                 மனித குல வரலாற்றின் ஏதேதோ பாகங்கள் சிதறல்களாய் என்னைச் சுற்றி வட்டமிட்டன. ஈழத்தின் வரலாறு, இன்று சரணடைந்து வாழ வழியற்று பாலியல் தொழில் செய்யும் சகோதரிகளின் கதை, எரியும் பனிக்காட்டில் மனைவியையே கூட்டிக்கொடுத்து பிழைக்க வேண்டிய மக்களின் நிலை என அறுந்தறுந்து ஏதேதோ நினைவுகள்.   நானறிந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நண்பர்களின் முகமும், தோழிகளின் அழுகையும் மேலும் உறக்கம் கலைத்து மனதை பிசைந்தன. என் வீடு கொஞ்சம் வித்தியாசமானது, அம்மா அப்பாவிற்கு நிச்சியிக்கப்பட்ட திருமணமெனினும், அவர்கள் இருவரும் ஜாதி மீது பற்று அற்றவர்கள். கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிக்கும் பருவத்திலேயே ஜாதிய விழுமியங்கள் குறித்தான கருத்தாக்கம் எனக்கும் தெளிவாக உருவானது. சாதிய கட்டமைப்பு இன்றைய நிலையில் தேவையில்லை என்பதே அன்று முதல் இன்று வரை எனது எண்ணமாக இருந்தது, இருக்கிறது.



                          என் அம்மா ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை. நம்புங்கள், அங்கு புதிதாக ஆசிரியையாய் வந்த ஒரு Scheduled Caste வகுப்பை சேர்ந்த ஆசிரியை உபயோப்படுத்தியதை (டீ க்ளாஸ், தட்டு, இன்ன பிற) மற்ற ஆசிரியைகள் தொடமாட்டார்கள். இத்தனைக்கும் இது தென்னகத்தில் அல்ல, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள .பள்ளி ஒன்றில். அதன் பிறகு அவர்களிடம் பேசி, மேலதிகாரியிடம் புகார் அளிக்கப்படும் என மிரட்டி, கொஞ்சம் சகஜமாக இருக்கிறது நிலைமை இப்போது. தோழி ஒருத்தியின் பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள். அப்பா தலித், பெண் கொங்கு சமூத்தின் முக்கிய சாதி. சந்தேகமே இல்லாமல் ஏகப்பட்ட பிரச்சனைகள்.  தற்போது அவளுக்கு இருபது வயது, ஆறு வயதில் மேல் சாதி வீட்டினரின் சட்டியை தொட்டதற்காய் காலில் போடப்பட்ட சூட்டின் வலி இன்னமும் அவள் கண்ணீரில் வழிகிறது.



                          கிராமம், நகரம் என எந்தப்பாகுபாடுமில்லாமல் சாதி தமிழகமெங்கும் கோலோச்சிக் கொண்டு இருக்கிறது. கடந்து பத்தாண்டுகளில் அதன் வேகம் பன்மடங்கு பெருகி இருக்கிறது. பரமக்குடி, தருமபுரி, மரக்கானம் என சமீபத்திய நிகழ்வுகள் பெரும் அச்சத்தை தருகின்றன. கிராமங்களில் சாதி வெளிப்படையாக பேசப்பட்டாலும், நகரங்களில் அந்நிலை இல்லாமல் இருந்தது. தற்போது நகரங்களிலும் சாதியை வெளிப்படையாக பேசக்கூடிய சூழ்நிலை வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். ஜனனி அய்யர், நரேஷ் அய்யர் என பேஷன் பெயர்கள் ஒரு காரணம். ஒரு புறம் ராமதாசு, இன்னொரு புறம் கொங்கு ஈசுவரன் வகையறாக்கள், தேவர் விழாக் கூட்டம் என ஜாதியை மையமிட்ட விழாக்கள் மற்றொரு காரணம்.



                          மேற்கண்ட அச்சத்தைத் தான் ரகுவின் கீச்சு பிரதிபலித்தது. இத்தனை நாள் நடத்திய போராட்டங்கள் அத்தனையும் கடந்த சில வருடங்களில் உடைத்தெறியப்பட்டு மீண்டும் நாற்பதுகளுக்கே சென்ற உணர்வை தருகிறது. அவரது தர்க்கங்களை இல்லை என என்னால் புறந்தள்ளிவிட முடியவில்லை. தேவர் ஜெயந்தியையோ, ராமதாசு நடத்திய வன்னியர் கூட்டத்தையோ பார்த்த யாருக்கும் இது தான் தோன்றும். ஏகப்பட்ட இளைஞர்கள் ஆட்டுமந்தைகளைப்போல் அங்கே குவிந்து கிடந்தனர். மதுவோடு சேர்த்து அவர்தம் சாதி பெருமையையும் அவர்களை வெறிகொள்ளச் செய்திருப்பதை கண்கூடாக காண முடிந்தது. ஏதோ காலத்தில் அவர்கள் முன்னோர்கள் நிகழ்த்தியதாக சொல்லப்படும் வீரதீர செயல்கள் தற்போது அவர்களை நிதானமிழக்கச் செய்வதை உணரமுடிகிறது, மதுவை விட ஆபத்தான, அதிக நாள் நிலைக்ககூடிய போதையிது.



ஒரு சாதி வெறியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

“சார் கவாஸ்க்கர தெரியுமா?”

“ஓ”


“ரோஹன்?”

“யாரது?”

“அவர் பையன் சார். என்ன பண்றான் தெரியுமா?”

“பிசினஸ்?”

“க்ரிக்கெட். டீம்ல இடம் கெடைக்காம உட்கார்ந்திருக்கான் தெரியுமா சார்? அப்பா பண்ண சாதனைக்கே பையன் உரிமை கொண்டாட முடியாது.”

                          தேவர் பெருமகனார் பண்ண நல்ல விசயங்களுக்கோ, காமாரஜர் ஆற்றிய தொண்டுகளுக்கோ, தீரன் சின்னமலை செய்த வீரசெயல்களுக்கோ அவர்கள் மட்டுமே பொறுப்பு. அவற்றை உரிமை கொண்டாட இத்தேசத்திற்கே உரிமை இல்லை என்னும் போது, சாதியின் பெயரால் அதை சுருக்குவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?



                          இது ஒரு புறம் எனில் தலித்துகள் கூட சாதியை வேண்டாம் என ஒதுக்கவில்லை என்றார் ரகு. மிகச்சரி தான். அதிகாரத்துக்கு எதிராய் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுவதை ஜாதி வெறி என்றுவிட முடியாது தான். எனவே தான் விசி ஜாதிக்கட்சி என்பது மிக மேலோட்டமான கருத்தியல் என திரும்பத்திரும்ப பதிவு செய்திருக்கிறேன். ஆனால், இந்த அடையாள அரசியலைத் தாண்டி, விழுப்புரம் கோகிலா சம்பவம் மூலமாக வெளிச்சத்திற்கு வந்தது, தலித்துகளுக்கு உள்ளான சாதி வன்மம்.

                          சமீப காலங்களில், எங்கெங்கிலும் சாதி ஒற்றுமை பலப்படுத்தபடுவது கண்கூடு. தேவர் விழாவும், வன்னியர் சாதி மாநாடும், கொமுக எல்லாம் ஒரு பருக்கை உதாரணம் தான். எப்போதுமே, வேட்பாளர் தேர்வு சாதியை முன்வைத்து நடக்கும் திராவிட அரசியலில் (திமுக, அதிமுக என எந்தக்கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல) ஜாதிக்கு, ஜாதிவெறிக்கு எதிராக ஒரு அரசு செயல்படும் என எதிர்பார்த்தால் நம்மை விட முட்டாள்கள் இருக்கவே முடியாது. அதன் காரணமாகத்தான் பெரியார் போன்ற ஒரு தலைவர் வேண்டும் என்றேன். ஒற்றை போராளி என்ற அர்த்தத்தில் அல்ல, இயக்கம் சார்ந்த பாதுகாப்பு அல்லது ஒருகிணைப்புக்காக.

                          யோசித்துப்பார்த்தால், ரகு சொல்வதைப் போல சாதி கவசம் இல்லாதவர்கள் எல்லாம் அழித்தொழிக்கப்படுவார்கள் என்றே தோன்றுகிறது. என்ன செய்ய? என் சாதியை தூக்கிப்பிடிக்கவா? அக்கொடியை தொடுகையில் கையில் மலம் புரட்டியது போல உணர்வேனே என்ன செய்ய? தாழ்த்தப்பட்ட தோழிகளின் கண்ணீர் என்னை சுட்டெரிக்குமே என்ன செய்ய?

                          “The Longest Yard” என்றோரு படம். சிறை குறித்த ஒரு சுமாரான ஆங்கிலப்படம். ஒரு கால்பந்து வீரன். ஏற்கனவே, பணத்திற்காக  Match Fixingஇல் ஈடுபட்டு இருப்பான் அவன். ஒரு கட்டத்தில், மீண்டும் வேண்டுமென்றே தோற்க வேண்டும் அல்லது, வாழ்க்கை முழுக்க சிறையில் கழிக்க வேண்டும் என்ற நிலையில் பின்னதை தேர்ந்தெடுப்பான் அவன்.



                          ஒரு அற்புதமான வசனம். அவனுக்கும் ஏற்கனவே ஒரு போலீஸ் வார்டனை அடித்து அதற்காக தண்டனை காலம் முடிந்து இருபது ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஒருவருக்கும்,
             
“Do you regret for hitting the warden now?”

“No”


“Do you still feel that one shot is worth the 20 years you spent in the closed hell?”

“Worth every second”

                          அவ்வளவே. ஒரே ஒரு அடி. ஒரு பெருமிதம். இருபது வருடங்கள் சிறையில் கழித்தாலும் பராயில்லை என ஒருவருக்கு தோன்றுமா? இது வெறும் சினிமா காட்சி அல்ல. வரலாறு நெடுக இப்பெருமிதத்திற்காகத் தான் ஒவ்வொரு மனிதனும் போராடுகிறான். சாதியை தூக்கிப்பிடிப்பவன் கூட அதைத் தன் பெருமையாகவே பார்க்கிறான். அதில் தான், சில நாய்கள் குளிர் காய்கின்றன.

                           சத்தியமாக என்னால் என் சாதியை தூக்கிப்பிடிக்க முடியாது, எந்த சாதியையும். ஏன் எனில், நான் வளர்ந்தது அப்படி. என் மூளை அப்படி சிந்திப்பதை விட செயலற்றுப்போய்விடவே விரும்பும். அப்படி ஒரு நிலை வந்தால், அப்போராட்டத்தில் நாசமத்துப் போகிறேன் என்றே சொல்வேன். ஆனால், ரகு சொன்னது போல “Surivival of the fittest” கணக்கில் சாதிக்கொடி பிடித்தலை சேர்த்தாகி விட்டதா?? இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறா என்னும் மேம்போக்கான எண்ணம், இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்கல? என அதை சரியானதாக்கும் நாள் அருகில் தான் இருக்கிறதா? இவ்வெழுத்தும் பேச்சும் வெறும் வெளிவேஷமென நம் ஒவ்வொருவர் மனதிலும் சாதி சாக்கடை இன்னமும் இருக்கிறதா? எல்லோரும் மனதிற்கும் ராமதாசு தானா? :-(




ஒரே ஒரு உறுதியை இங்கே எடுக்கிறேன். என் திருமணம் சாதி மறுப்புத்திருமணமாகத்தான் இருக்கும். என் குழந்தை எந்த மதம்/சாதியையும் சார்ந்து வளராது.

கொந்தளிப்பான கடல் போல மனம் அலைகிறது. முக நூலில் பூபதி முருகேஷ் ஒரு பதிவிடுகிறார். நீங்கள் என்ன சொன்னாலும் என் சமூகத்தை வெறுத்தொதுக்க முடியவில்லை என்ற ரீதியில். இத்தனைக்கும் நான் பார்த்த வரையில் பொது வெளியில் சாதி பற்றி அதிகமாக வெறிகொள்ளாதவர் அவர். அப்படியெனில் ரகு சொன்னது தான் வருங்காலமா? அனுபவஸ்த நண்பர்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். ஏதோ, சினிமா விமர்சனங்களையும், நகைச்சுவையையும் மட்டும் எழுதி இந்த வலைமனையை வைத்திருக்க விரும்பவில்லை.எழுத்து மட்டும் தானா என்பவர்களுக்கு, நான் என்ன செய்கிறேன் என நண்பர்கள் அறிவார்கள், புகைப்படம் எடுத்து இணையதளங்களில் பகிர்ந்து யாரையும் நம்பவைக்கவேண்டிய அவசியம் இல்லை! சாதிவெறி சார்ந்த கருத்துக்களுக்கு எதிர்காலத்தில் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்க முடியாமல் போகும் என தோன்றும் போது, வலைமனையை மூடிவிட்டு, என் வாழ்க்கையை மட்டுமாது என் கொள்கைப்படி வாழ்ந்துவிடுவேன்.

இங்கு மூச்சுவிடுவதே எமக்கு போராட்டம் தான். இங்கு யாவரும் போராளிகள் தான்!

                          மண்டியிட்டு வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று உயிர்விடுதலே மேல்!




     
               

Monday, December 17, 2012

கடற்கரை(றை) - சிறுகதை


                 உப்பு வாசம் கலந்த பழக்கப்பட்ட காற்று முகத்தில் அறைந்து முடியை அலைந்து விட்டு சென்றது. செருப்புகளை பைக்கினருகில் கழட்டி விட்டு விட்டு, வாசுகியின் கையை லேசாகப்பற்றியபடி மணலில் ஏறி நடக்கத்தொடங்கினான் விநயன். வாசுகி, விரல்களை அவன் உள்ளங்கையில் நிரடிக்கொண்டே நடந்தாள். புதிதாய் உடைத்துத் துருவிய தேங்காய் என குறுகுறுப்பூட்டியது அவள் விரல்கள்.  

                      இருவரது கைகளும் கண்ணாம்மூச்சி ஆடிக்கொண்டே வந்தன. வாசுகி, அவன் தோள் மீது சாய்வதும் நகர்வதுமாக       இருந்தாள். மண்ணில் அவர்கள் கால்கள் புதைவதும் எழுவதும் ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம் போல ஒரு               ஒத்திசைவை கொண்டிருந்தன.  

                      வானம் வாசுகியின் மேனியை பிரதிபலிப்பதாய் வெளிர் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது. வானத்தை பார்த்துக் கொண்டே நடந்த விநயனை தன் முகம் நோக்கித்திருப்பினாள் வாசுகி.

“ம்ம்…”

“இன்னியோட ரெண்டு வருஷமாச்சு”

“ம்ம்…”

“இன்னமும் ரெண்டு வாரத்துல என்ன இன்னோருத்தன் கைல புடிச்சுக்கொடுத்துருவாங்க, அப்பறம் இதே பீச்சுல ம்ம் ம்ம்ன்னு பினாத்திண்டு அலையப்போறேள்”

சிரித்துக்கொண்டான் விநயன். அவளது செயற்கையான வழக்குக்கென யூகித்துக்கொண்டாள்.

“அப்படி விட்டுடுவனா என் செல்லத்த? இப்ப கூட நீ சரின்னு சொன்னா உங்க அப்பா கிட்ட பேசுறேன்”.


             இதற்குள் கடல் சொற்ப தொலைவில் வந்திருக்க, உட்கார தோதான இடத்தை நான்கு கண்களும் பிரிந்து தேடின. சுற்றிலும் மணலைக் காட்டிலும் அதிகமாய் காதல் ஜோடிகள் அமர்ந்திருந்தன. இந்தியாவில் மக்கள் தொகை பெருகியதற்காக மீண்டும் ஒருமுறை வருத்தப்பட்டான் விநயன். வாசுகியின் கையை இன்னமும் இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தான். வாசுகி அவனுக்கு கிடைத்த ஒரு பரிசு. அவனுக்கு கிடைத்த ஒரே பரிசு. சிறு வயது முதல் தாய் தந்தை முகத்தைக் கூட பார்க்காமல் அநாதை பட்டம் சூடி வளர்ந்தவனுக்கு அன்பின் மொத்த உருவாய் கிடைத்தாள் அவள்.

            இதற்குள் ஒரு ஜோடி மணலை தட்டிவிட்டபடியே ஒரு நிலப்பரப்பை காலி செய்ய, விநயனும் வாசுகியும் அந்த இடத்தை தற்காலிகமாக நிரப்பினர். வாசுகி கையில் மணலை குவித்துப் பார்ப்பதும், பின் அதை தன் விரல்களினூடாக அருவி போல் கொட்டுவதுமாக இருந்தாள். விநயன் கழுத்தை முடிந்தவாக்கிலெல்லாம் திருப்பி கண்ணில் பட்டவர்களை கவனித்துக்கொண்டிருந்தான்.

     அவன் கவனத்தை கலைக்கும் விதமாக அவன் காது மடல்களை அவளது உஷ்ண சுவாசம் தீண்டியது. முகத்தை திருப்பி அந்த சுகத்தை இழக்க விரும்பாதவனாய், அவள் மடி மீது வைத்திருந்த தன் தலையை திருப்பாமலேயே “ம்ம்ம்ம்…” என்றான்.

“வந்ததுல இருந்து உம்முகொட்டிக்கிட்டே இருக்கீங்க. வேற எதுவுமே பேசல, இப்ப பேசப்போறீங்களா? இல்ல நான் போகட்டா?” போலியாய் கோபப்பட்டுக்கொண்டே அவன் மடி வைத்திருந்த தொடையை மெல்ல அசைத்தாள் வாசுகி.

“எத்தனை காதல் ஜோடிகள் பாத்தியா?” சம்மந்தம் இல்லாமல் ஒரு கேள்வியை கேட்ட அவனை பொய்க்கோபம் மாறாமல் பார்த்தாள் வாசுகி.

“நம்ம கதைய கேக்கவே யாரும் இல்ல… இதுல ஊர்ல இருக்கறவங்க கத நமக்கெதுக்கு?”

“இதுல எல்லாருமே நம்மல மாதிரி காதலிக்கறவங்கன்னு சொல்ல முடியாது. கள்ளக்காதல் ஜோடிங்க கூட நிறைய இருக்காங்க. எங்க ஆபிஸ் ல சுமதி இருக்க்காள்ள….” சொல்லிக்கொண்டே கொண்டே போனவனை அசுவாரசியமாய் பார்த்தாள் வாசுகி. உரையாடலின் இடையிலும் அவன் முடிகளை கோதிக்கொண்டிருந்த தன் விரல்களை நிறுத்தினாள் வாசுகி.

“எனக்கென்னவோ அந்த மும்பை மாபிள்ளைக்குத்தான் வாசுகிய கட்டிக்கற யோகமோன்னு தோணுது”

“அப்ப நான் தப்பிச்சேனா?” கேட்டுக்கொண்டே தன் விரல்களை அவள் இடையில் படர விட்டான் விநயன். பேசுவதை ஒரு வினாடி நிறுத்திவிட்டு சொக்கிக்கிடந்த வாசுகி, பின் சுதாரித்து அவன் விரல்களை கிள்ளி அங்கிருந்து எடுத்து விட்டாள்.

“சரி, கிளம்பு போய் மிஸ்டர் சந்திரமௌலிய பார்த்து இப்பவே பொண்ணு கேக்கறேன்”

“ஆமாம் இவரு மௌன ராகம் கார்த்திக்…. தம்பி எங்கப்பா தளபதி படத்துல வர ஷோபனா அப்பா கேரக்ட்டர், முடிவு மாற மாட்டார்.”

“பாத்துக்கலாம்” எல்லா ஆண்களும் சொல்லும் அதே அசால்ட்டான அபிநயத்தில் சொன்னான். பேதைகளுக்கு தைரியமூட்டுவதாய் எண்ணி கற்காலத்திலிருந்து சொல்லப்படும் வார்த்தை அது.

“இதுங்களுக்கெல்லாம் வேற எடமா கெடைக்கல, இங்க வந்து தான் இவனுங்க காதல வளக்கணுமாம், கொழந்த குட்டிய கூட்டிக்கு  வர முடியுதா?” ஒருவன் லேசான போதை வாடையடிக்க இவர்களை பார்த்தப்படியே திட்டிக்கொண்டே மணல் துகள்கள் காலை இடற தள்ளாடியபடி நடந்தான்.


   ஆரம்பத்தில் எல்லாம் இப்படி நடந்தால், விநயன் கோபப்படுவதும், சொன்னவனை அடிக்கப்பாய்வதும் அடிக்கடி நடக்கும். காலப்போக்கில் இதெல்லாம் பழகிவிட, அமைதியாய் இருக்கக் கற்றுக்கொண்டான்.
ஆனபோதும் உதடுகள் “ஏன் நீ தான் கட்டி விடுறது…”  என முணுமுணுத்தன. 

       இன்னமும் மடியிலிருந்து தலையை எடுக்காமலேயே அவளைப்பார்த்துச்சொன்னான் “ஏதோ இவனுங்க எல்லாம் யோக்கியம் மாதிரி?”

“ஏன்? அவர் கேட்டது சரி தான? நாம பண்றது தப்பு தானே?” அவனை சீண்டி விடுவதற்கென்ற எள்ளல் தொனியில் கேள்வி ஒன்றை உதிர்தாள் வாசுகி.

“என்ன தப்ப பண்ணீட்டோம் அப்படி? காதலர்களுக்கான ஸ்பேஸ் இங்க கொடுக்கப்படல. இவனுங்க ப்ளாஸ்டிக்க பீச்சுல போடுவானுங்க, கண்ட எடத்துல ஒண்ணுக்கடிப்பானுங்க, பஸ்ஸுல இருந்துகிட்டு மூஞ்சில எச்சி துப்புவானுங்க… இதெல்லாம் இவனுங்க கலாச்சாரத்த கெடுக்காது. நாம தான் கெடுத்துட்டோமா?” மூச்சு விடாமல் பேசியனவனை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் வாசுகி.



“பாவம், நாலு பேர் கொழந்தைங்கள கூட்டிக்கிட்டு வர வேண்டாம்?” மேலும் சீண்டும் நினைப்பில் இரண்டு புருவங்களையும் வில் போல் மேலே ஏற்றி கேட்டாள். 

              அந்த சில வினாடி இடைவேளையில், அவள் முகத்தின் வனப்பை ரசித்துக்கொண்டிருந்தவனாய் காணப்பட்ட விநயன் , கேள்வியால் இயக்கம் தடைபட்டு “ம்ம் லவ் பண்றதுக்குன்னு ஒரு இடத்த கட்டி விடச்சொல்லு” என முணகினான். மீண்டும் அவன் கைகள் அவள் இடையில் படர முயல,
“இதத்தான் சொன்னாங்க” என்று தட்டிவிட்டாள். கோபமாய் மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்தவனை சமாதானப்படுத்தும் முயற்சியாய், “அங்க பாரேன்” என அவனது முகவாயை பிடித்து திருப்பினாள்.

இரண்டு குழந்தைகள் ஒரு மணல் வீட்டை, கோட்டையை சிறிது சிறிதாக கட்டியிருந்தார்கள். விருட்டென வந்த ஒரு அலை அவர்கள் அரை மணி நேர உழைப்பை சட்டென கரைத்து விட்டு விழுந்து சென்று மறைந்தது. ஒரு வினாடி திகைத்த அந்த குழந்தைகள், மீண்டும் மணலை அள்ளி அடுத்த வீட்டை கட்ட ஆரம்பித்திருந்தன.

கவனித்துப்பார்த்த விநயன் பின் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டான். ரத்தச்சிகப்பு நிறத்திற்காய் இன்னேரம் மாறியிருந்த வானத்தையும் அதில் கருங்கீற்றுக்களாய் தெரியும் பறவைகளையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

“இப்ப என்ன கோவம் சாருக்கு?”

“தெரியாதாக்கும்…”

“இப்ப என்ன பண்ணினா கோவம் போகும்?”

“தெரியாதாக்கும்”

    வாசுகி மீண்டும் விநயனை மடியில் கிடத்த அவன் எதிர்ப்பேதும் இன்றி சாய்ந்தான். வாசுகி மெல்ல குனிந்து தன் மெல்லிய இதழ்களை அவன் இதழ்களின் மீது பதித்தாள். நெடு நாள் பசியெடுத்த வண்டு மலரை நுழைந்தது போல அவள் இதழை சுவைத்துக்கொண்டிருந்தான் அவன். முதன் முதலில் அவன் முத்தமிடுவது எப்படி எனக்கேட்டு அவள் விழுந்து விழுந்து சிரித்தது நினைவிற்கு வந்து பழிப்புக்காட்டியது.
“அய்யோ எம் பொண்ணே… அய்யோ” என்ற குரல் அவன் காதில் விழவும் யாரோ வீசியெறிந்த மணல் துகள்கள் அவன் காதில் விழுவதற்கும் சரியாய் இருந்தது.

                 விருட்டென வாசுகி எழுந்து நிற்க, இவனும் எழுந்து நின்று காதிலும் உடையிலும் இருந்த மணல்களை தட்ட ஆரம்பித்தான். அதற்குள்ளாக மணலை அள்ளிப்போட்டிருக்கும் என யூகிக்க்கூடிய வேகத்தில் வந்த ஒரு குண்டம்மா எதிரில் நின்றவாறு இரைந்து கொண்டிருந்தாள். காதில் வாசுகி தன் அம்மா தான் அந்த குண்டு மாமி என்றும், கூட இருப்பவர்கள் முறையே அப்பா, மற்றும்  தூரத்து சொந்த மாமா, மாமியென்றும் தெளிவித்தாள்.

“இப்படி என் மானத்த வாங்குறாளே… வாடீ இங்க…” அந்த அம்மா மேலும் ஆத்திரம் வந்தவளாய் கத்திக்கொண்டே மணலில் கஷ்ட்டப்பட்டு இவர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க, மழையில் நனைந்த கோழிக்குஞ்சு தாய்க்கோழியின்  அடியில் பதுங்குவதைப் போல அவன் விரல்களை பிடித்து தோள்களுக்குப் பின்னால் பதுங்கினாள் வாசுகி.
“அய்ய்யோ… என்ன குலமோ.. அவனோட போய் ஈஷிண்டு நிக்கறாளே…” சொல்லியபடியே குண்டம்மா இரண்டடி ஆக்க்ரோஷமாயும் அதே நேரம் உடல் ஒத்துழைக்காத படியால் ஆடி அசைந்தும் இரண்டடி எடுத்து வைக்க., விநயன் வாசுகியை காப்பாற்றும் விதமாய் அவளை ஒரு கையால் மறைத்துக்கொண்டே, இன்னொரு கையை குண்டம்மாவை நோக்கி நீட்டினான்.

“ நாங்க ரெண்டு பேரும் காதலிக்கறோம். இப்படி ஊர் பாக்கற மாதிரி கத்தாதீங்க. எதுவா இருந்தாலும் உக்காந்து பேசலாம்”

“ஊர் பாக்கறது இப்பத்தான் தெரியறதோ…” என ஏதோ சொல்ல வாயெடுத்த குண்டம்மாவை கையமர்த்தினார் வாசுகியின் அப்பா என அவன் கிசுகிசுத்த மனிதர். “இப்ப நீ எங்க கூட வரப்போறியா இல்லியா?”

அவள் பதிலேதும் சொல்லமலிருக்க விநயன் முந்திக்கொண்டு “எதுவாயிருந்தாலும் இங்கையே பேசலாம்” என்றான்.
“உன்கிட்ட பேச என்ன டா இருக்கு, நாயே..” என்றவர் மீண்டும் வாசுகியை பார்த்து “வரப்போறியா இல்லியா? இப்ப வரல நீ எப்பயும் இனி என் வீட்டுக்கு வரக்கூடாது” என்றார். குரலின் கட்டை இது தான் கடைசி முறை என்பதை பறைசாற்றும் விதமாய், உச்ச ஸ்தாயில் அமைந்திருந்தது.

           இதற்கும் வாசுகி பேசாமல் இருக்கவே மேலும் சில மண் தூற்றல்களுடனும் அர்ச்சனைகளுடனும் கிளம்பிச்சென்றது குண்டம்மாவின் குடும்பம். வாசுகியின் கை இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தது. கண்களில் இருந்து பொது இடமெனக்கருதியோ என்னவோ, கர்நாடகத்தண்ணீரைப் போல யோசித்து யோசித்து வழிந்து கொண்டிருந்ததது கண்ணீர்.

“ஏய்… வாசு… அழாத” சமாதனப்படுத்த முயன்று தோற்வன் சற்று நேரம் மௌனமாய் அப்படியே நின்றான். நிமிடங்கள் மௌனமாய் கழிந்தன. சற்று நேரம் மேலே பார்த்துக்கொண்டிருந்தவன், “கண்டுபிடித்துவிட்டேன்” என்றான்.

மெல்ல தலையை அவன் தோளில் இருந்து தூக்கி “என்ன?” என்றாள்.

“நிலாவில் தண்ணீர் இருக்கிறது” என்றான்.

சோகத்திலிருந்து நீங்கி சற்றே ஆச்சரியப்பட்டவளாய் “எப்படி?” என்றாள்.

“இதோ” என்றவன் அவள் கண்ணிலிருந்து வழிந்த நீரை ஆட்காட்டி விரலால் சுண்டி விட்டான். 

குறு நகை ஒன்று மெல்ல உதிர்ந்தது. 

சிரித்தாள், சிரித்தான். சிரித்தார்கள்.

இருவருமாய் திரும்பி கடலின் பக்கம் பார்த்தார்கள். அந்தக்குழந்தைகள் மீண்டும் தாங்கள் கட்டிய கோட்டையின் அருகில் நின்று அலைக்காய் காத்துக்கொண்டிருந்தன.







     

Tuesday, December 4, 2012

காதல் ஜாதியை ஒழிக்குமா? - ஓர் ஆய்வு



காதல் ஜாதியை/மதத்தை ஒழிக்குமா? - ஆம்.

காதல் மட்டும் ஜாதியை/மதத்தை ஒழித்துவிடுமா? - இல்லை.

                                                தமிழனத்தின் ஆதர்ச தலைவர், தமிழ் குடிதாங்கி, தமிழகம் கண்ட தன்நிகரற்ற ஒப்பற்ற தலைவர், வன்னியர் குல வைரம் மருத்துவர் அய்யா திரு ராமதாஸ் சொல்வது போல காதலால் மட்டுமே ஜாதியை ஒழித்து விடுதல் சாத்தியமில்லை தான்.

                                                இன்றைய பொருளாதார சூழ்நிலையில் மத்தியதர வர்க்கமும் அதற்கு மேற்பட்ட பணக்காரர்களும் 17 சதவீத  இடத்தை பிடிக்கிறார்கள். மீதமிருப்பவர்கள் ஏழைகள் மற்றும் லோயர் மிடில் க்ளாஸ். இதில் பெரும்பாலும் மேல் நிலையில், வெளி மா நிலங்களில்/ நாடுகளில்  இருப்பவர்கள் ஸ்டேட்டஸ் தான் பார்க்கிறார்கள்.  இவர்கள் பெரும்பாலும், தமிழன் என்ற இனத்தை மட்டுமே பார்க்கிறார்கள். முக்கிய காரணம், தாழ்த்தப்பட்ட மக்களில் வெகு சிலரே இந்த நிலைகளை அடைந்திருப்பர். இவர்களிடம் "யாருங்க இப்பெல்லாம் ஜாதி பாக்குறா?" என்ற கேள்வியை கூட நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், இவர்களின் எண்ணிக்கை மிகச்சொற்பமே.

                                           மீதமுள்ளவர்கள் சொந்த ஊரில் இருக்கும் மத்திய தர வர்க்கத்தினர் + பணக்காரர்கள் + ஏழைகள். இவர்கள் தம் சமுதாயத்தோடு நெருங்கிய தொடர்பிலிருப்பார்கள். ஒரு காதல் நிகழ்ந்தது என்றால், ஒரு வேளை அதில் ஆண் ஆதிக்க சாதியாகவும் பெண் 
தாழ்த்தப்பட்டவராகவும் இருந்தால் பல நேரங்களில் அது கடுமையான எதிர்ப்போடு நின்று விடுகிறது. அதற்கான காரணம், பெரும்பான்மையில் கணவனின் சாதியே மனைவியிடம்       வருங்கால சந்ததியிடமும் திணிக்கப்படுகிறது.  (ஆனால், இது சமீபத்திய மாற்றமே, முன்னாலெல்லாம், சண்டாளன் என்ற அடைமொழியில் கலப்பு மண வழி பிறந்தவர்களை அழைத்து வந்தது வரலாறு).

                                           ஆண் தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்து பெண் ஆதிக்கஜாதியாக இருந்தால், மிகப் பெரும்பாலும் அந்தக் காதல் காதலர்களோடு மட்டும் முடிவதில்லை. நகர்புறகமாக இருந்தால் குடும்ப உறுப்பினர்களின் கடுமையான புறக்கணிப்பை, எதி்ர்ப்பை சந்திக்க வேண்டிவரும். கிராமப்புறங்களில், இன்னமும் மோசமான வாழ்வியலை கேள்விக்குறியாக்கும் தாக்குதல்கள் நிகழும்.

                                           காதலர்களில் பெரும்பாலனவர்கள் தங்கள் தந்தை தாய் சமூகத்தினரை சமாதானம் செய்யும் பொருட்டும், வேறு பல்வேறு காரணங்களுக்காவும் ஏதோ ஒரு ஜாதிச்சாயத்தை  தன் குழந்தை மீது பூசுகின்றனர். பகுத்தறிவோ, ஜாதி மறுப்போ பெரும்பான்மையான காதலர்களின் தேர்வாக இருப்பதில்லை.

                                           சரி, காதல் தான் ஜாதியை ஒழிக்காதே, அப்புறம் ஏன், கலப்பு மணத்தை எதிர்த்து இந்த ஜாதி சங்கங்கள் களமிறங்குகின்றன. காதல் ஜாதியை சட்டென ஒழிக்காது என்பது உண்மை தான். ஆனால், மெல்ல மெல்ல இந்த மாற்றம் ஜாதிக்கட்டமைப்பை உடைத்து விடும்.  எப்படி? ஏன் இந்த ஜாதி அமைப்புகள் கலப்பு மண எதிர்ப்பை வலுவாக முன்னெடுக்கின்றன? பார்ப்போம்.

ஜாதி சங்கங்கள் - அமைப்புகள் : 

                                           கும்பல் மனப்பான்மை ஒரு மோசமான மன-நிலை. ஆங்கிலத்தில் Mob-attitude என்பார்கள். குழுவாய் இருப்பது ஒருவனுக்கு எதிர்பாராத அசுர பலத்தை தரும். ஆனால், இது சீழ்ப் பிடித்த இடத்தில் சொறியும் சுகத்தை போன்றது. வெறித்தனமாய் சொறிந்து முடித்த பின் ரணம் தான் மிஞ்சும். ஜாதி அமைப்புகளிலும் இதே தான் நடக்கிறது. தர்மபுரியிலோ, கீழ்வெண்மணியிலோ தவறு செய்த எல்லாரும் மிருகங்கள் அல்ல, ஓரிரு மிருகங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட, போதையேற்றப்பட்ட, வெறியூட்டப்பட்ட மதி கழன்ற மனிதர்கள்.

                                           இது போன்ற ஜாதி ரீதியிலான அமைப்புகளின் மூலத்தை இங்கு ஆராய அவசியமில்லை. இன்று அவற்றின் நிலை குறித்த தெளிதல் போதுமானது. இன்று ஜாதி சங்கங்கள், ஜாதி கட்சிகள் எல்லாம் வெறும் கும்பல்கள். சரி, இத்தனை தலைகள் எதற்கு, எதற்காக? ஒற்றை வரி பதில், அரசியல். நீட்டி முழக்கிச் சொல்வதாய்  இருந்தால் அதிகாரம், பணம், சமூக அந்தஸ்து, புகழ் ஆகியற்றோடு இவைதரும் போதை ஜாதி வெறியர்களை அவ்வாறே வைத்திருக்க துணை புரிகின்றன.

                                           எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். உங்கள் ஊரின் மைய ஜாதி ஆளைத்தான் எந்தக்கட்சியாக இருந்தாலும், சட்டசபை தேர்தலின் போது நிறுத்தும். ஏன்? ஓட்டு அரசியல். புழுத்து நாறிப்போன ஓட்டு அரசியல். ஜாதி முழுக்க முழுக்க அரசியலாகி விட்டது.

 மணிகண்டன் சுத்தமாக காதிலியே போட்டுக்கொள்ள தேவை இல்லாத பல முட்டாள்தனமான விஷயங்களை பேசி இருந்தாலும் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. திமுகவை விடுங்கள், எந்த கட்சிக்காவது, சாதி தவிர்த்த மாற்று முறைகளில், வேட்பாளரை தேர்வு செய்ய தைரியம் இருக்கிறதா? அந்தந்த பகுதியில் அந்தந்த சாதிக்காரனை நிறுத்தி விட்டு ஜாதியை ஒழிக்க முனைவது சாக்கடைக்குள் அமர்ந்து சந்தனம் உரைப்பது போல.

காதல் - ஏன் ஜாதி மதம் பார்ப்பதில்லை? :

                    பெரும்பாலும் வேற்று மதத்தாரோடு காதல் அரும்புவதில்லை. மதக்கலப்புகள் வெகு சொற்பமே. ஆனால், சாதி இந்துக்களின் பெண்கள் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மேல் காதல் கொள்வதற்கு பல்வேறு உளவியல் ரீதியிலான காரணங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக சினிமாக்களில் காட்டப்பட்டது போல, (சமீப உதாரணம் சுந்தரபாண்டியன்) பெண்களுக்கான மரியாதை இந்த "சாதீ இந்துக்களிடம்" மிகக்குறைவாகவே கிடைக்கிறது. கும்பல் மனப்பான்மையும், கொஞ்சம் பகட்டும், சில வெளியுலக தொடர்புகளும் இந்த ஆண்களுக்கு சிறு வயது முதலே ஆணாதிக்க மனோபாவத்தையும் , "இவளுக்கு என்ன தெரியும்? பொட்டக்களுத வீட்டுல தானெ கெடக்கா?" என்ற ஆழ்மன எண்ணத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன.

             இயல்பாகவே உழைத்து உண்டு, தாய்க்கு பல நேரங்களில் சமையற்கட்டிலும் கூட உதவி, அன்பாக அனுசரணையாக பேசியே பழக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட ஆண்கள் இந்த மாதிரி ஆணாதிக்கத்தை சிறு வயதிலிருந்தே பார்த்த, அனுபவித்த பெண்களை ஈர்ப்பது இயற்கை தானே. ஆனால், பெரும்பாலான காதல்களில், ஆண்கள் விலகிச்சென்றாலும் கூட,  பெண்கள் தான் தைரியமூட்டி காதலிக்கச்செய்கின்றனர்.

 ஜாதி சங்கங்களும்/கட்சிகளும் காதலும் :

            தொடங்கிய இடத்திற்கே வந்துவிட்டோம். ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள்? முதலிலேயே சொன்னதைப்போல, ஆண் ஆதிக்க சாதியை சேர்ந்தவர் என்றால், பெரிய அளவில் பிரச்சனை இருக்காது. ஆனால், பெண் ஆதிக்க சாதியை சேர்ந்தவர் என்னும் போது, கணவனின் ஜாதி அவளது அடையாளமாக மாறிப்போக அதிக வாய்ப்புகள் இருப்பதாலும், "நமக்கு கீழ வாழ்ந்தவன் இப்படி நம்ம வீட்டுப்புளைய கட்டிக்கற நிலைமைக்கு வந்துட்டானே" என்ற காழ்ப்பு உணர்ச்சியின் வெளிப்பாடும் வெறியாய் வெளிப்படுகின்றன. இதற்கு காரணம், திருமணத்தின் போது பெண்ணே புகுந்த வீட்டிற்கு வருபவள் என்பதனை நினைவில் கொள்க.

                                           சரி, எதற்காக ஜாதி தேவை இவர்களுக்கு? இதை எல்லாம் களைந்து விட்டு "மனிதனாய்" வாழ முடியாதா? இவர்கள் சாக்கடையில் உழலும் பன்றிகளாய், மலத்தை அண்டும் பூச்சிகளாய்த்தான் வாழ்நாள் முழுக்க இருப்பார்களா?. ஒற்றை வரி பதில், ஆம்.

                                           சரி, அப்படியெனில் ஏன்? முதலிலே குறிப்பிட்டது போல அரசியல் ரீதியில் ஒரு பகுதியில் பலம் பெற, எதேனும் ஒரு ஒற்றுமை தேவை. இருக்கவே இருக்கு ஜாதி. இன்றைய சினிமாக்களின் ப்ரோஜக்ஷனும், சிறு வயது முதலில் ஊட்டி வளர்க்கப்பட்ட ஜாதி நஞ்சும் ஒவ்வொரு தலைமுறையையும் ஜாதி வெறிக்குழியில் தள்ளுகிறது. அப்பனை, சிற்றப்பனை, பெரியப்பனை, அவர்கள் தோரணைகளையும், பகட்டையும் கண்டு மயங்கிய இவர்கள் ஜாதி சிறப்பானது என்ற மாயையில் சிறு வயதில் ஊறி, பின் வயது வந்த பின் அது சாக்கடை என்றே கண்டு கொண்டாலும் அது அளிக்கும் போதை நிமிர்த்தமாக, அதில் கிடந்து ஊறவே விரும்புகின்றனர்.

                                           இன்று உலகமயமாக்கலும், நட்பு வட்டத்தின் பெருக்கமும், அறிவின் வளர்ச்சியும் மெல்ல மெல்ல ஜாதி சாக்கடையை மீறிய காதலுக்கு, திருமணத்திற்கு வாலிபர்களை/இளம் பெண்களை இட்டுச்செல்வதை, இவர்களால் பொறுக்க முடியவில்லை. எங்கே, தங்களது ஒட்டுண்ணி ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று இவர்கள் அஞ்சும் நிலை வந்துவிட்டது. காதல் ஜாதியை ஒழிக்காது, பெற்றோர் சம்மதம் வேண்டும், இன்னபிற அறிக்கைகளும் அச்சத்தின் விளைவாய் வந்த குளிர் காய்ச்சலின் பதற்ற பிதற்றல்களே.

நாம் என்ன செய்ய வேண்டும்? :

                                           ஒவ்வொரு தனி மனிதனும் தன் துணையை தானே தேர்ந்தெடுக்க அரசியலமைப்புச்சட்டம் அடிப்படை உரிமை என இடமளிக்கிறது. அதை மனதளவில் நேர்மையாய் செய்தாலே போதுமானது. காதல், பகுத்தறிவை நோக்கி திருப்பப்பட வேண்டும். திருமணமான பின் அடுத்த தலைமுறையை எதோ ஒரு ஜாதியின் கீழ் பதிவதன் மூலம், ஜாதி மாற்றப்படுமேயன்றி ஒழிக்கப்படாது. சில நேரங்களில், இட ஒதுக்கீடு கட்டாயம் பெறப்பட்டாக வேண்டும் என்ற சூழ் நிலையில் ஜாதியை குறிப்பிட வேண்டி வந்தாலும் கூட, வாழ்க்கையில் உயர்ந்த பின் எக்காரணம் கொண்டும் ஜாதியை குறிப்பிடக்கூடாது என்பதிலும், தன் பிள்ளைகளுக்கும் தன் துணையை தானே தீர்மானிக்கிற உரிமையை கொடுக்க மனவுவந்து முன் வர வேண்டும்.

                                           ஜாதிக்கு எதிரான அரசியல் மன நிலை தான் ஜாதியை ஒழிக்கும். ஒரு வேளை ஜாதிக்கட்சிகளை சீண்ட ஆளில்லாமல் போய்விட்டால், எந்தத்தொகுதியிலும் ஜாதியை பார்க்காமல் கலப்பு மனம் செய்தவர்களைத்தான் நிறுத்துவேன் என திமுகவும் அதிமுகவும் அறிக்கை வெளியிட்டால், ஒரே கணம் கனாக்கண்டு பாருங்கள். ஜாதியை விட்டுவிட்டு இவர்கள் எல்லாரும் ஓடி வந்துவிட மாட்டார்கள்? ஆம், சாதிக்கு எதிரான அரசியலே அதை ஒழிக்க வல்லது.

                                           தனி நபராக, அரசியல் கலப்பில்லாதவராக உங்கள் கடமை என்ன? மன்சாட்சி சொல்வதை கேளுங்கள். ஜாதீயம் பேசிக்கொண்டு உங்களோடு எவனவாது திரிந்தால், கத்தரித்து விடுங்கள். உங்கள் குழந்தைகளை ஜாதியத்தின் மலம் தோய்ந்த கரங்கள் தீண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவசியமில்லை என்று பட்ட அடுத்த நொடி, உங்கள் ஜாதி அடையாளத்தை துறந்து விடுங்கள். நட்புகளை உறவுகள் ஆக்கிக்கொள்ளுங்கள். மனிதராய் வாழுங்கள். 

தொடர்புடைய இடுகைகள் : http://www.koothaadi.in/2012/11/4.html