Flipkart

Amazon

Amazon

Showing posts with label மற்றுமொரு பக்கம். Show all posts
Showing posts with label மற்றுமொரு பக்கம். Show all posts

Sunday, July 7, 2013

பாமக - விசி - திராவிடம் - ஜாதி - கலப்பு மணம் - எதிர்காலம் : மற்றுமொரு பக்கம் 8 :


** தலைப்பை போலவே கட்டுரை முழுக்க என் புரிதலில் அடிப்படையிலான அவதானிப்புகளால் ஆனாது. ஜாதிய வரலாற்றை, அடக்குமுறையை ஒரே கட்டுரையில் சொல்லி விட முடியாதது போல, எதிர்காலத்தையும் ஒரே கட்டுரையில் அடக்கி விட முடியாது. இக்கட்டுரை நீண்ட ஒரு விவாதத்திற்கு அடிகோலும்.

** இதற்கு முன் ஆழி செந்தில் நாதன் அவர்கள் எழுதிய இது தொடர்பான கட்டுரையை படித்தேன். அதில் அவர் சொன்ன விஷயங்களை எழுத வேண்டும் என் நினைத்திருந்தேன். அவற்றை தவிர்க்கிறேன்.

** இது வெறும் திவ்யா- இளவரசன் விவகாரம் வாயிலாக ஜாதிய அமைப்பை, வரும்காலத்தை ஆராய்வதல்ல. அதனால் தான் இவ்விகாரத்தின் சூடு அடங்கி எழுதுகிறேன்.

1. காதல் மட்டுமே ஜாதியை ஒழிக்கும் என நான் முற்றாக நம்பியது கிடையாது. ஜாதிக்கு எதிரான சமூக, அரசியல்  நிலைப்பாடு தான் அதை ஒழிக்கும் என்றே நம்பி வந்திருக்கிறேன்.

2. தமிழகம் முழுவதும் ஜாதி ரீதியான விவகாரங்களை ஆராய்ந்தால், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான அனுபவம் கிடைக்கும். அவற்றும் இருக்கும் பொதுத்தன்மையை மட்டும் பார்ப்போம்.

3. திராவிட இயக்கம் இப்போது முற்றாக தோய்ந்து விட்டது. திமுக கட்சியான பிறகு செய்ய வேண்டிய சமரசங்களில் முக்கியமானதாக பகுத்தறிவு மாறிப்போனது. அனைத்து ஜாதி அர்ச்சகர், தமிழ் பூசைகள் எல்லாம் நல்ல திட்டங்கள் தாம் பெயரளவில். ஜாதி ஒழிப்பென்ற அளவில் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. அடிப்படை காரணம் முக்கியமானது. எல்லா ஊர்களிலும் ஜாதியின் அடிப்படையில் தான் சீட் ஒதுக்க வேண்டி உள்ளது. உள்ளாட்ச்சி, சட்டமன்றம், பாராலுமன்றம் என எதுவும் இதுக்கு விதிவிலக்க. இங்கே Mutual dependency வருகிறது. ஜாதிக்காரனுக்கு சீட்டு குடுத்தா தான் ஜெயிப்பான், ஜெயிச்சா தான் பவர், பவர் இருந்தா தான் எதையுமே செய்ய முடியும்..ஆனா ஜாதிக்காரன் எப்படி ஜாதிய ஒழிக்க விடுவான்??

4. மேற்கண்ட பாயிண்ட்டால் எந்த கட்சியும் ஜாதியை ஒழிக்க முன்வராது. புதிய அரசியல் கட்சி ஆகாது. நாம் சிறுபான்மையினர் ஐயா.

5. அந்தப்பக்கம் என்ன நடக்கிறது? பாமக மட்டுமல்ல, அனைத்து சமுதாய பேரியக்கம் என்ற பெயரில் ஒன்று சேர்ந்த எல்லோருமே கேவலமான நோக்கம் உடையவர்கள். இது தலித் - தலித்தல்லாதோர் என்ற பிரிவு ஏற்படுத்த முனைப்புடன் செய்யப்பட்டது. இதில் வட நாட்டு ஹிந்து முஸ்லீம் கலவரம் தூண்டப்பட்ட அதே பார்முலா இருக்கலாம். If you know what I mean...

6. இப்போது Exogamy, மூலம் ஜாதியை உடைத்தல் தான் வரும்காலத்தில் சரியாக வரும் என எண்ணத்தோன்றுகிறது.

7. ஒரு பக்கம் சிறுவர்கள் முதற்கொண்டு எல்லோருக்கும் ஜாதி வெறி ஊட்டுகிறார்கள், பல்வேறு வழிகளில். நண்பர் ஒருவர் 2 வயது குழந்தை படம் போட்டு ஏதோ புஜ்ஜிமா **வை (ஜாதிப்பெயர்)  என பேனர் பார்த்ததாக சொன்னார்.. :-(

8.  ஜாதி ரீதியான மூளை சலவை Castration போன்றது. இவர்கள் காதலிக்க மாட்டார்கள் அல்லது சொந்த ஜாதி பெண்களை காதலிப்பார்கள்.

10. ஆனால், பெண்ணை வெறும் சதையாக பார்க்கும் மனோபாவம் தான் இவர்களுக்கிருக்கும் என்பதால், இப்படி ஜாதிக்குள் இறுகும் சமூகத்தை சேர்ந்த பெண்கள் மிகவும் துன்பமான வாழ்க்கையிலேயே உழலுவார்கள்.

11. எதிர்காலத்தில் காதல் - கலப்பு மணத்திற்கு பாதுகாப்பு  கொடுக்கும் வலுவான இயக்கம் வேஆண்டும். ஒரு காலத்தில் திகவில் எல்லோரும் சொந்தம் போல பழகினார்கள். இப்போது திக அல்லாத, பகுத்தறிவை தாண்டி - சுதந்திரம் - காதல் என்ற வெளிப்பார்வையில் ஒரு புது அமைப்பு தேவை. இந்த அமைப்பு நண்பர்களாகவும், உறவாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும்.

12. எல்லோரும் சமூகத்தை திருத்தி விட கிளம்ப முடியாது. ஆனால், Doing your bit is enough. ஒரு ஜாதி வெறி பிடித்த எச்சில்கலை நாய்க்கு இருக்கும் அதே கர்வம் நமக்கும் இருக்க வேண்டும்.

13. மீண்டும் அந்தப்பக்கம். குழந்தைகள் முதல் வளர்க்கப்படும் ஜாதிபற்று, வெறும் ஜாதிக்காரர்கள் மட்டும் கலந்து கொள்ளும் விழாக்கள் அமைத்து அதில் பேசி வெறியாக்கப்படுகிறது. வெள்ளை சட்டை, பந்தா, இத்தியாதிகள்.  15 வயது வரை இப்படி வளர்ந்த ஒருவனை எப்படி திருத்துவது??

14. வரும்காலத்தில் திருமணம் தாண்டி, நட்பு, உறவு என எல்லாமே ஜாதிக்காரன் தான் என ஆக்க ஒவ்வொரு ஜாதிக்கூட்டமும் முயன்று வருகிறது. இதன் வருங்காலம் மிக மோசமாய் இருக்கும்.

15. அரசியல் ரீதியில் ஒன்றூம் செய்ய முடியாது, எல்லா ஜாதி தலைவர்களையும் திருத்துவதோ, நாடு கடத்துவதோ சினிமாவில் முடியலாம், நிஜத்தில் ம்ஹூம். இப்போது ஒரே வழி காதல், நட்பு உறவில் ஜாதியை ஒழிக்கணும். அதற்கு காதல் மணம் புரிந்தவர்கள் தங்கள் பிள்ளைக்கு NO CASTE போட முன் வரணும் அவர்கள் பொருளாதாரம் அதற்கு இடம் தரணும் அல்லது அதற்கேற்ற ஒரு ரிசர்வேஷன் வரணும்.

16. இப்போது காதலிச்சா வெட்டுவாங்கன்னு பயம் இருக்கு. அந்த பயம் அகலணும். சட்டம் மூலமா ;-) ஒரு பயம் காதல பிரிக்க நெனைக்கற  ஜாதி கும்பலுக்கு வரணும்., காதலிக்கறவங்களுக்கு ஒரு பாதுகாப்புணர்வு வரணும்.

17. Emotional blackmails can be tackled with emotional blackmails again and if not can be ignored.

பல அவதானிப்புகள் சிதறி இருக்கலாம். மன்னிக்கவும்.

படம் : சிறு வயதில் சாதி உணர்வு :-(



Saturday, June 15, 2013

ரஜினி : மற்றுமொரு பக்கம் - 7


            வசூல் மன்னன் - சூப்பர் ஸ்டார் - அமிதாப் போன்ற பாலிவுட் நடிகர்களெல்லாம் அப்பாவாக நடிக்கப்போன பின்னரும், தனக்கு மகளாய் நடித்த நடிகைகள் தனக்கு அம்மாவை நடிக்க இன்றும் யூத்தாக நடித்துக்கொண்டிருப்பவர் - தமிழகத்தின் அப்பழுக்கற்ற ஹீரோ என்ற பிம்பம் உடையவர் - வாய்ஸ் உடையவர் - பல்வேறு நாடுகளில் ரசிகர்களைக் கொண்ட - அனைத்து சென்டர்களிலும் ரசிகர்களை கொண்ட நடிகர் - அதற்கும் மேலானவர் - ஆதர்சம் - ரஜினிக்குண்டான பிம்பம் பிரம்மாண்டமானது.

             ரஜினி எப்படி இந்த இடத்தை பிடித்தார்.  எண்பதுகளில் ரஜினி படம் வந்து தான் ரஜினிப்படத்தை தியேட்டரை விட்டு தூக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் எல்லாமே சூப்பர் ஹிட் என சொல்லிவிட முடியாமல் இருந்தது. 1980ஐ எடுத்துக்கொள்வோம். 79இல் வந்த அன்னை ஓர் ஆலயம் சூப்பர் ஹிட். 1980இன் ஆரம்பத்தில் வந்த பில்லா ப்ளாக்பஸ்டர், ஆனால் அதை தொடர்ந்த காலி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி எல்லாம் வந்த வேகத்தில் சுருங்கின, மீண்டும் பொல்லாதவன் ஹிட், முரட்டுக்காளை ஹிட். இங்கே ப்ளாப் ஆன படங்களை மக்கள் நினைவே வைத்துக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

        ஒரு வருடத்திற்கு ரஜினி நாலு ஹிட் கொடுக்கிறார் என்பதே பேச்சு, அவர் எத்தனை நடித்தால் என்ன? ரஜினி மிக வேகமாக பி,சி சென்ட்டர்களின் ஆதர்ச நாயகனாக வளர்ந்து நின்றார். ஏ க்ளாஸ் ரசிகர்கள் அவர் படத்தை இப்போது ரசிக்கத்துவங்கி இருந்தனர். தளபதிக்கு பிறகு ரஜினி க்ராபில் ஏற்றம் தான். இப்போது தான் ரஜினியின் படங்களில் ஒரு சின்ன மாற்றம் வருகிறது. தளபதி, ராபின் ஹுட், உழைப்பாளி என ரஜினி ஏற்று நடித்த பல வேடங்கள் ஏழை வேஷம். தங்களுள் ஒருவராக ரஜினியை கொண்டாட வைத்தது இது தான். நம் மக்கள் சினிமா முட்டாள்கள் இதற்கு வகைதொகையே கிடையாது. எம்.ஜி.ஆர் சாக மாட்டான் என நம்புபவனுக்கும், ரஜினி வாய்ஸ் சரியாய் இருக்கும் என எண்ணுபவனுக்கும், விஜயால் நாடாள முடியும் என நம்புபவனுக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.



             எங்கே விட்டேன், ம்ம்... பாஷா, பாஷாவிற்கு பிறகான படங்களில் ரஜினி பணக்காரனாக நடிக்க ஆரம்பித்தார்.  ஏழைகளால், கூட இருக்கும் துரோகிகளால் (இவர்கள் ஏழையாக அண்டிப்பிழைப்பவர்களாக இருப்பார்கள்) வஞ்சிக்கப்படும் ஹீரோ. முத்து படத்தில் பணக்காரராக இருந்தும் வேலைக்காரனாக, அருணாசலத்திலும் அப்படியே, படையப்பாவிலும் தன் சொத்து மணிவண்ணனால் ஏய்க்கப்படும்.

         ரஜினிக்கு ஏற்கனவே ஒரு இமேஜ் உண்டு. அவரது கேரக்டர்கள் பல நேரம் திருநீறு பூசிக்கொண்டிருக்கும் (பக்தியாம்), பெற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும், அநியாயம் என பொதுபுத்தியில் அமையப்பெற்றிருக்கும் எதையாவது கண்டால் பொங்கும், மற்றபடி பொதுபுத்தியை அப்படியே பின்பற்றும். படையப்பாவில் பாம்பை காப்பாற்றும், சாமி கும்பிடும், திமிர் பிடித்த பெண்ணை விரும்பாத, அம்மா சொன்னால் அதை செய்யும் பையன் (உஷ்ஷ்.... இதெல்லாம்).  பொதுபுத்தியில் நல்ல பையன் என இப்படிப்பட்ட பையங்களைத்தான் சொல்வார்கள்.

        என்பதுகளில் ரஜினியின் ரசிகனாய் இருந்தவர்கள் இப்போது தங்கள் மகன்கள் ரஜினியின் ரசிகனாய் இருப்பதற்கு தடையேதும் நிச்சயம் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் ரஜினி தான் Controversialஆக ஒன்றுமே சொல்லவில்லையே, அரைத்த மாவையே தானே அரைத்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே இந்தச் சமூகம் எப்படி உள்ளதோ ஆணாதிக்கம் (பொம்பள பொம்பளையா இருக்கணும் - படையப்பா, மன்னன்), சாதீய இறுக்கங்கள் (எந்தப்படத்திலாவது ரஜினி வேற்று/தாழ்ந்த சாதி பெண்ணை மணப்பதாக குறியீடு இருந்தால் சொல்லுங்கள்), என அத்தனையும் ஏற்றுக்கொண்டும் சிபிட்சத்தை கடைசியில் தரும் ஒரு பாத்திரமாக இருக்கும் ரஜினியினுடையது.

                           இதெல்லாம் வெறும் குறியீடுகளே. இதெல்லாம் நல்லது தானேப்பா என்றேர்களேயானால் உங்களை வெள்ளந்தியாகவே பார்க்கவேண்டியுள்ளது. இதெல்லாம் சும்மா உல்லுல்லாயி... சிவாஜியில் தமிழ் காலாச்சார் (ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இல்லை) பெண் வேண்டும் என்பார் ரசிநீ (Back sorry Post mordernism) ஸ்ரேயாவை கோவிலில் பார்ப்பார். நல்ல விஷயம் என்றார் நண்பர். வாருய்யா என அமர்த்தி ஒரு கூடை சன்லைட் பாட்டை ஸ்லோ மோஷனின் ஓடவிட்டேன், வெள்ளையாய் ஒரு திராவகம் ஒழுக (வாயிலிருந்தய்யா) ரசித்து பார்த்தார். அப்பறம் திரும்பி  இளித்தார். ரஜினி சங்கர் போன்றவர்களின் டெம்ப்ளேட் ரொம்ப எளிது, இச்சமூகத்தில் எதையும் சீர்திருத்தாக, எந்த கருத்தையும் ஆழமாய் முன் வைக்காத, ஆனால் அதே நேரத்தில் சமூகத்தை சுபிட்சமடைய வைக்கும் ஒரு ஹீரோ + அடக்க ஒடுக்கமான அவன் காதலி பாடலில் மட்டும் கவர்ச்சி காட்டுவாள் + நினைத்ததையே சொல்லும் அம்மா, அவள் பேச்சை கேட்டு நடக்கும் நல்ல பையன் ஹீரோ.

             இது தான் ரஜினியின் வெற்றி பார்முலா. இச்சமூகத்தின் மொத்த Envisageஐ பட ஹீரோ செய்வார். வெல்வார். ரஜினிக்கு ரசிகர்கள் குவிந்தது இப்படித்தான். இதே காலகட்டத்தில் கமல் பரீச்சை செய்தார், ரிஸ்க் எடுத்தார். அவரை ஏன் பலரும் பரிந்துரைப்பதில்லை? உங்களுக்கே தெரியும் இருப்பினும் விரிவாக அலசலாம். அடுத்த மற்றுமொரு பக்கத்தில் :)

       

Tuesday, June 4, 2013

சாதியம் நோக்கி அடி எடுக்கும் தமிழ் சினிமா - மற்றுமொரு பக்கம் 6

                                            வினையூக்கியின் கட்டுரை போட்டிக்கு கட்டுரைகளை சமர்பிக்க இன்னமும் 10 நாட்களே உள்ளன. அதற்காக படித்தும் எழுதியும் கொண்டிருக்கும் போது நேற்று முக நூலில் அருண் (தமிழ் ஸ்டுடியோ) எழுதிய குட்டிப்புலி விமர்சனமும் அதற்கு பலர் ஆற்றிய எதிர்வினைகளையும் காண நேர்ந்தது. அதில் முக்கியமான எதிர்வினை ராஜன் குறையினுடையது. ஏன் இதை முக்கியம் என குறிப்பிடுகிறேன் என்றால், அவர் பொதுபுத்தியின் பாற்பட்ட விமர்சனம் என்கிறார். தமிழ் ஸ்டுடியோ அருண் தனது விமர்சனத்தில் சசிக்குமாரை ராமதாசோடு ஒப்பிட்டு அவரை மிக ஆபத்தானர் என குறிப்பிட்டு இருந்தார். இன்னொரு பக்கம்  நண்பர் அதிஷா குட்டிப்புலியை பார்த்துவிட்டு கதறி இருந்தார்.

                                     குட்டிப்புலியை விமர்சிக்கும் பணியை தூசு தட்டி எடுக்க இப்பதிவுகளே காரணம். ராஜன் குறை விஸ்தாரமாக பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதி இருந்தார். அதில் கூறியுள்ளபடியே சுப்பிரமணியபுரம் நல்ல படம் தான். உண்மையிலேயே அது ஒரு Trend setter. அதே போல சமுத்திரக்கனியும், சசிக்குமாரும் ஒருவர் இயக்கி மற்றவர் நடித்த சில படங்களும் எந்த குறைகளும்/கறைகளும் இல்லாதவை தான். ஆனால், விவாதத்துக்குரிய இரு படங்களும் சசிக்குமார் நடித்தவை. அவரிடமும், சமுத்திரக்கனியிடமும் உதவி இயக்குனார இருந்தவர்கள் இயக்கியவை. கதையில், திரைக்கதையில் படமாக்கப்பட்ட விதத்தில் சசிக்குமாருக்கு தொடர்பேயில்லை என கண்ணை மூடிக்கொண்டு நாம் இயக்குனர்களை மட்டும் குற்றம் சாட்டிவிடலாம்.  எனவே, நாம் சசிக்குமாரை விட்டுவிட்டு இந்த இரு படங்களையும் மட்டும் விமர்சிப்போம். (சசிக்குமார் நாடோடிகளில் கலப்பு மணத்தை வெளிப்படையாக ஆதரித்ததாக ராஜன் குறை சொன்னதை அப்படியே ஏற்று)

                                    ஆங்கிலத்தில் Camouflage என்பார்கள். நம்மூரில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்போமே அது போல. மேலோட்டமாக பார்த்தால் தெரியாது, ஆனால் ஒரு கருத்து படத்தினூடாக பார்வையாளனின் மனதில் மெல்ல ஏற்றப்பட்டிருக்கும். சுந்திரபாண்டியனில் ஆரம்ப வசனம் ஒரு பொட்டல்வெளியை காட்டி "எவனாவது பாடுபட்டு வளத்துன பொண்ணுக மனச கெடுத்தாக்க அவன வெட்டிக்கூறு போடுற இடமும் இது தான்". ஓரிரு வார்த்தைகள் மாறுபட்டு இருக்கலாம். ஆனால், கவனியுங்கள். இந்த வார்த்தை தேர்வு முக்கியமானது. இதை ராஜன் குறை சொல்வதை போல யதார்த்ததின் பிரதிபலிப்பு என ஏற்றுக்கொள்ளவே இயலாது.

                              இதே வசனத்தை நாம் கொஞ்சம் மாற்றிப்போடுவோம். "இதே எடம் தான் நம் பெண்களை உருகி உருகி காதலிக்கும் அப்பாவி பசங்களை,  நம்ம சாதி வெறியர்கள் வெட்டிப்புதைக்கும் இடம்..." இரண்டு வசனங்களுக்கும் எவ்வளவு மாறுபாடு வருகிறது கவனித்தீர்களா? முன்னது சிலரை குஷிப்படுத்துவதற்கென்றே எழுதப்பட்டது. பின்னது அவர்களை காண்டாக்கிவிடும். இதே போன்ற பல விஷ விதைகள் படம் முழுக்க உள்ளன. சுந்திரபாண்டியனில் கொலை செய்து விட்டு (நண்பன் செய்தது என க்ளைமேக்சில் வரும்) அதை பேசித்தீர்த்துக்கொள்ளும் முறை (ஊர்-ஜாதி பெருசுகள்) ஒரு Camouflage.

                            குட்டிப்புலியில் தன் ஜாதி பெண்களை பிற ஜாதி ஆண்கள் சைட் அடித்தால் கூட (அது போலீஸ் என்றாலும்) தூக்கிப்போட்டு மிதிக்கும் ஹீரோ தன் ஜாதி இளைஞர்கள் நாலு பேரை கூடவே வைத்துக்கொண்டு சைட் அடிக்கிறார், தன் ஜாதி பெண்களை மட்டும். இதில் பொம்பள என ஆரம்பித்து அவர்களை தூக்குவது போல் தூக்கி கீழே எறியும் வசனங்கள் வேறு.

                            இதை ஏன் நான் Camouflage என்கிறேன் என்றால், வினி சர்ப்பனா என்ற ஒரு இளம் பத்திரிக்கையாளர், குட்டிப்பிலியை கிழித்து விட்டு கடைசியாக, ஊர் காவல் தெய்வங்கள் (லோக்கல் சாமிகள்) எப்படி உருவாகிறார்கள் என காட்டியது பாராட்டுக்குரியது என்றிருந்தார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. கவனியுங்கள், படத்தில் கௌரவக் கொலைகள் செய்பவர்கள் குலசாமியாக்கப்படுகிறார்கள். அவர்கள் ஹீரோ ஆக்கப்படுகிறார்கள். இது ஒருவகையான Envisage. நம் மனதில் மறைந்துள்ள சொல்லமுடியாத எண்ணத்தின் வெளிப்பாடு.

                         ஏன் இது யதார்த்தம் அல்ல என்றால், யதார்த்தம் பட்டவர்தனமாக இருக்க வேண்டும். வணிக சினிமாவில் யதார்த்தத்தை எடுத்துக்கொண்டால், நீங்கள் காதலையும், வழக்கும் எண் 18/9யையும், மகாநதியையும் காட்டலாம். இதில் எல்லாம் வணிக சினிமாவுக்கான சில சமரங்கள் இருந்தன என்றாலும் அவை எந்தப்பக்கச்சார்பும் எடுக்காதவை. யாரையும் குஷிப்படுத்தி அதன் மூலம் லாபம் பார்க்கலாம் என்ற நோக்கில் எடுக்கப்படாதவை.



                        சரி இதற்காக சசிக்குமாரை ராமதாசுடன் ஒப்பிட வேண்டுமா எனில் இல்லை என்றே சொல்வேன். என்னை பொறுத்தவரையில் புலியை விட, பசுந்தோல் போற்றிய புலி ஆபத்தானது. ஜாதி வெறியை வெளிப்படையாய் காட்டுபவனை விட, அதை வாழைப்பழத்தில் ஊசி போல வலிக்காமல் சொருகுபவன் ஆபத்தானவன். சசிக்குமார் இதில் வெறும் நடிகர் தான் எனினும், இதில் நடித்ததை அவர் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

           நீங்கள் கேட்கலாம், இது அவ்வளவு ஆபத்தானதா. இந்த படத்தை பார்த்த உடனே எல்லோரும் தெருவில் இறங்கி கௌரவக்கொலை செய்யப்போகிறார்களா என்றால் இல்லை. ஆனாலும் இப்படம் அவ்வாறு செய்பவர்கள் செய்தவர்களுக்கு ஒரு மனோபலத்தை அளிக்கும். நாம் யாரும் இந்தியனையோ , அந்நியனையோ பார்த்து அவர்களைப் போல மாறிவிடவில்லை தான். ஆனால் நம் மனதில் ஒரு சின்ன பாதிப்பை ஒரு ஓரத்தில் அவை ஏற்படுத்தி இருக்கும்.

             இதை இங்கே சொல்ல முக்கிய காரணம். இது தமிழ் சினிமா. இங்கே காலம் காலமாக அரசியல் செய்பவர்கள், முதல்வர்கள் ஆனவர்கள் சினிமா நடிகர்கள், நடிகைகள். இன்றும் எம்.ஜி.ஆர் செத்துட்டார் எனச்சொன்னால் அடிக்கும் கிராமங்கள் உள்ளன. இன்னமும் எம்,ஜி,ஆர் சமாதியில் காதை வைத்து அவர் வாட்சு ஓடுதா, அவர் எதாவது பேசுவாரா எனக்கேட்கும் ஜனக்கும்பல் உள்ளது. இப்படி சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்து நோக்கத்தெரியாத நல்ல சினிமா எதுவென்றே அறியாமல், மசாலா குப்பைகளை ரசித்துப்பழகிய ஒரு சமூகத்தில் இப்படம் நிச்சயம் ஆபத்தானது தான். குப்பை தான். ஒதுக்கித்தள்ள வேண்டியது. நல்லதை மட்டும் எடுக்குமளவு நம் சமூகமின்னும் வளரல சாமி.
                       

Wednesday, May 8, 2013

ஸ்ருதிஹாசன் - Maxim : மற்றுமொரு பக்கம் - 6


18+ - படத்தை மட்டும் பார்த்துவிட்டு லைக்கை அமுக்கி தொலைக்காதீர்கள் :


 இப்போது தான் கமல் முத்த விவகாரம் குறித்து எழுதுகையில் ஸ்ருதி குறித்து குறிப்பிட்டேன். மீண்டும், ஸ்ருதியை பற்றி எழுத வேண்டி வந்திருக்கிறது. எனக்கும் உனக்கும் ஏதோ விட்ட குறை தொட்ட குறை இருக்கிறது செல்லம். பார்த்துக்கொள்வோம். சரி, உனக்கு ஒன்றே ஒன்றை சொல்ல விரும்பினேன். இது குறித்து  பழுத்த அனுபவம் வாய்ந்த நண்பர் ஒருவரோடு உரையாடுகையில் ஒத்திசைவுள்ள கருத்து ஒன்று உருவானது. எங்கள் இருவருக்குமே இப்படி நேரடியான முகத்திலடித்தாற்போலான கவர்ச்சி பிடிக்கவில்லை. கவர்ச்சியின் அழகே கொஞ்சம் மறைத்து கொஞ்சம் காட்டுவது தான். அதை கொஞ்சம் கவனித்தால் நலம்.




                 மேக்சிம் இதழில் ஸ்ருதி இருப்பது போல வந்த ஸ்டில் உண்மையா உடான்ஸா என தெரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்க மேக்சிம் அதிபரை தொடர்பு கொண்ட போது, அவரது அழகான செக்ரட்ரி எடுத்தார். (போனை) பேசிக்கொண்டே இருந்த போது, படுபாவி ஏர்டெல்காரன், காசு இல்லன்னு கட் பண்ணி உட்டுட்டான். மேக்சிம் இதழை அவ்வப்போது இணையத்தின் மூலம் காண்பவன் (கவனிக்க வாசித்தவன் அல்ல) என்ற முறையில் அது உண்மை என்றே தோன்றுகிறது. ஓக்கே, சீரியஸ் மோடுக்கு வருவோம்.

                  இதற்கிடையே இணைய வெளியில் வலம் வந்ததில், ஸ்ருதியின் படங்கள், வேறு எதற்கோ எடுக்கப்பட்ட ஸ்டில்கள் போல தெரிகிறது. இதனிடையே, MAXIM ஸ்டில்கள் பேஸ்புக்கில் எங்கு வெளியானாலும் அங்கு சென்று ஒரு க்ரூப் சென்று "அய்யகோ கமல் மகளா இப்படி" "இந்திய கலாச்சாரம் இழவு கொட்டுகிறதே" என மானாவாரியாக கமெண்டுகிறாரக்ள். பார்க்கவே பரிதபமாய் இருக்கிறது.

                      சில நாட்கள் முன்பு, நண்பர் ஒருவர் பூனம் பாண்டேவோ, சன்னி லியோனோ நினைவில்லை. அவர்களின், சின்ன வயசு போட்டோ என்று ஒரு படத்தை பகிர்ந்து அதனோடு இப்படி மானத்தை கெடுத்துக்கொண்டு வாழ்வோம் என அந்தப்பெண் அந்த வயதில் எதிர்பார்த்திருப்பாளா? எல்லா உயிரும் கவுரவமாகவே வாழ விரும்புகிறது என பதிவிட்டு இருந்தார்.

                   எனக்கு உண்மையிலேயே இது குறித்து எழுத எரிச்சலாய் இருக்கிறது ஐயா. ஆறு மாசம் இருக்கும். கி.ராவின் பேட்டி ஒன்று ஆ.வியில் வெளியானது. நினைவிருக்கிறதா? "எப்பப்பாத்தாலும் அதப் பத்தியே நெனச்சுக்கிட்டு இருந்தா அது வியாதி இல்லாம வேறென்ன?" என கேட்டிருப்பார் கி.ரா. பாக்கியராஜிடம்  "ஏன் முருங்கக்காய் மேட்டர்களை தொடுகிறீர்கள்" என எப்போது கேட்டாலும் சொல்வார், "அட, எத மறைச்சு மறைச்சு வெக்குறமோ, அதுல தானங்க சுவாரசியம் ஜாஸ்தி".

                  இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இளைஞர்களின் கவலை சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா என்பது தான் என்பது உங்களுக்கு தெரியுமா? கூகுள் தேடலில் Mastrubation and impotency என்ற வார்த்தைகள் எத்தனை முறை இந்தியாவில் தேடப்பட்டுள்ளது என அறிவீர்களா?

                    விஷயத்திற்கு வருகிறேன். மொத்தமாய் ஸ்ருதி மேட்டரிலும், மற்ற கலாச்சாரத்தை கெடுக்கும் பார்த்து புலம்புபவர்களுக்கு பொதுவாய் ஒன்ற் சொல்கிறேன்.  காண்பிப்பது அவர்கள் உரிமை. புடிச்சிருந்தா பாருங்க. இல்ல நான் ஒழுக்க சீலர்ன்னா, ஸ்ரோல் பண்ணி போய்கிட்டே இருங்க, Family Safety ஆப்ஷன் Enable பண்ணி வெச்சுக்குங்க.



                       ஸ்ருதி மேட்டரில் புலம்புபவர்கள் இரண்டு ரகம். 1. கமல் பெண்ணாச்சே என புலம்புபவர்கள். 2. இந்திய கலாச்சாரம் இஸ்துகுச்சே என கூவுபவர்கள். முதலாம் ரகத்தினருக்கு ஒரே பதில் தான், "இது சப்ப மேட்டருங்க. கமல் கிட்ட கேட்டா கூட இதத்தான் அவர் சொல்வார். ஸ்ருதி என்ன செய்யவும் கமலின் அனுமதி தேவையில்லை. அவர் என்ன செய்ய வேண்டும் என தேர்ந்தெடுக்க அவருக்கு அனுமதி உண்டு." இந்த வாதத்தை நியாப்படுத்த என்னிடம் காரணம் உண்டு. ஒரு பேட்டியில் Sharon Stone Basic Instictஇல் நடித்ததை போல நடிப்பீர்களா என ஸ்ருதியிடம் கேட்டதற்கு அவர் கமல் முன்னிலையிலேயே "ஓ! யெஸ்" என்றார். கமலும் அதை ஆமோதிக்கவே செய்தார்.

               
                     இரண்டாவது ரகத்திற்கு வருவோம்.  ஒரு உளவியல் தியரி இருக்கிறது, சத்தம் போட்டு பேசுபவர்களின் பக்கம் பெரும்பாலும் நியாயம் இருக்காது. இந்த ஒழுக்கவியாதிகள் இப்படி பேச காரணம் "இதோ பாருங்கள், எல்லோரும் தப்பு செய்கிறார்கள். அய்யோ, என்னை விட அதிகமாய் செய்கிறார்கள். இவர்களோடு ஒப்பிடுகையில் நான் செய்த தப்பு ஒண்ணுமே இல்லை. நான் இவர்களை விட நல்லவன்" என காண்பித்துக்கொள்ளத் தான். இன்னொரு படம் பார்த்தேன், பிஜேபி பார்னை பேன் செய்யச் சொல்லி கையெழுத்து இயக்கம் நடத்துகிறதாம். பார்னை பேன் செய்வது வரவேற்கத்தக்க முடிவு தான். ஆனால், முதலில் அதை பாராளுமன்றத்தில் செய்ய வேண்டும் போலிருக்கிறதே! ஒரு கோட்டின் அருகில் பெரிய கோடை வரைந்து முந்தைய கோடை சிறிதாக்கும் அதே டெக்னிக். என்னைய விட அவன் கெட்டவன்! இந்த  நல்ல பெயர் இங்கு எல்லோருக்கும் முக்கியமாய் படுகிறது. வள்ளுவரே காமத்துப்பால் எழுதிய பின்பும், காமசூத்ரா எழுதிய காமத்தை ரகசியமாய் வைத்து இளைஞர்களை காவு கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

                       மேக்சிம் போன்ற இதழ்கள் பெண்களை பொருளாக, உடைமையாக்க எடுத்துக்கொள்ளும் அதே சிரத்தையை Chasity என்ற பெயரில் இந்த பொங்குபவர்களும் எடுத்துக்கொள்கிறார்கள்.

                              உங்களில் எத்தனை பேர் பெண்களை அல்லது அழகையே ரசிக்காதவர்கள்? மனைவியை தவிர மற்ற பெண்களை, காமமற்ற தோழியாகவோ, தங்கையாகவோ, தாயாகவோ பார்ப்பவர்கள்?? பார்ன் பாக்காதவர்கள்? ஏதோ ஒரு பெயர் தெரியாத பெண்ணை கண்களால் புணராதவர்கள்? இதோ இப்போதே உடலை காட்டிவிட்டாள் என்பதற்காக ஒரு நடிகையை "தே..." என வார்த்தையால் வன்புணர்ந்திருப்பீர்களே? இரண்டாம் ஜாமத்தில் உழைத்து பணி முடித்து செல்லும் பெண்ணை "இவல்லாம்" என கமெண்ட்டே நீங்கள் அடித்ததில்லையா நியாயமாரே?  குழந்தைக்கு பால் வாங்க  நூறு இரு நூறுக்கு பேரம் பேசிக்கொண்டிருக்கும் சாலையோர வனிதையரை பார்த்தும் பார்க்காமல் தானே கடந்து போகிறீர்கள்??  எல்லாம் கிடக்கட்டும் தலைவலி என ஒதுங்கும் மனைவியை இழுத்து புணராதவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள் பார்ப்போம்?

                             மானம் குறித்து முன்பு சொன்னேனே, அந்த சன்னி லியோன் போட்டோ. அதற்கிட்ட பின்னூட்டம் தான் நான் உங்கள் எல்லோருக்கும் சொல்லவிரும்புவது. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் ஏதோ அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிகழ்வு போல் ஆகிவிட்டது. உழைப்பவர்களை ஏய்ப்பத்தை எல்லா மட்டங்களிலும் நாம் நிகழ்த்தி வருகிறோம். லஞ்சம் கொடுப்பதற்கு உங்களுக்கு கூசாத போது, சாதி சாயத்தை உடல் முழுக்க பூசிக்கொள்ள உங்களுக்கு கூசாத போது, உடலை காட்டி நடிப்பது கேவலமான பிழைப்பு கிடையாது ஐயா. விபச்சாரி கூட உழைப்புக்கு ஊதியம் வாங்கும் போது, ஊதியம் போக லஞ்சம் வாங்க, கடமையை மீறும் அல்லது, அதை ஊக்கவிக்கும் நம்மை விட ஸ்ருதியும், பூனம் பாண்டேவும், சன்னி லியோனும் ஆயிரம் மடங்கு நேர்மையானவர்கள், நல்லவர்கள் தாம்!

  பின் குறிப்பு : அழகை ரசியுங்கள். இது அழகல்ல, ஆபாசம் எனில் தவிர்த்து விட்டு செல்லுங்கள். நீங்கள் புலம்ப, புலம்ப இது என்ன மேட்டர்ன்னு தெரியாவதவன் கூட வந்து பாப்பான். உங்க பிரச்சனை அந்த பொண்ணு காட்றதா? இல்ல பசங்க பாக்குறதா?
                           

                   


                   

Thursday, May 2, 2013

பீமதாசும் லவ்பெல்லும் - மற்றுமொரு பக்கம் 5 !

                                                நான் ஸ்கூல் படிக்கறப்ப பீம்தாசுன்னு ஒரு சொட்டைப்பையன் தான் எங்க "க்ளாஸ்" லீடரா இருந்தான். ஆச்சரியமா, அவன் பையனும் எங்க க்ளாஸ் தான். அந்த செவ்வெளநீ தலையன் பேரு லவ்பெல். எல்லா அப்பாக்கும் இருக்கற மாதிரி அவனுக்கும் தன் பையன ஸ்கூல் பீப்புள் லீடர் ஆக்கிப்பாக்கணுமின்னு ஆச.

                                    அவனும் என்னனென்னவோ பண்ணிப்பாத்தான் நடக்கல. ஒரு காலத்துல ஸ்கூலுக்குள்ள தண்ணி ஒழிப்பு, திருட்டு ரப்பர் அழிப்புன்னு நல்ல காரியங்க பண்ணிகிட்டு இருந்தவன், (எங்களுக்கு லன்ச் அவர்ல வேப்பமரத்தடி "இடஒதுக்கீடு" எல்லாம் வாங்கி தந்தவன்) திடீருன்னு "க்ளாஸ்" ரீதியா எங்கள பிரிச்சான். எங்க கிட்ட பேசும் போதெல்லாம், "நாமெல்லாம் க்ளாஸ் லீடரா இல்ல ஸ்கூல் லீடரா இருக்கறதுக்கே பொறந்தவங்க, நம்ம முப்பாட்டன் எல்லாம் பிரின்சிபல்லு, ஏன் கடவுள் வாழ்த்து பாடுறமே அந்த கடவுளே நம்ம க்ளாசுல மூணாவது பெஞ்சு கோமளாவ சைட் அடிச்சுகிட்டு கிடந்தவர் தான்"ன்னு பேசுவான். அதோட அந்த எடத்துலையே இல்லாத மத்த க்ளாஸ் பசங்கள பாத்து "உங்கம்மா கிட்ட போயி கேட்டுட்டு வாடா நீ எந்த க்ளாஸ்ன்னு, தேர்டு ஏ ல அவன் கண்ண அசைச்சா என்ன ஆகும் தெரியுமா? பிப்த்து பீல இவன் கால உட்டா என்ன ஆகும் தெரியுமான்னு" பீலா உடுவான். இவனுக்கு ஒரு அடியாள்  வேற. அவன் பேரு பென்சில் வெட்டி மரு ( இயவன் எவ்வளவு கேவலவாதின்னா, இவன் பேச ஆறம்பிச்சா பொண்ணுங்க எல்லாம் காத மூடிக்குவாங்கன்னா பாருங்களேன். சில பொண்ணுங்க மூக்கையும் மூசிக்கும், பயபுள்ள குளிக்கவே மாட்டான், பாக்க நல்லா புளி மூட்ட மாதிரி இருப்பான்) நாங்களும் வெறி புடிச்ச வேங்கையா எங்க க்ளாஸ் வீரத்தை மானத்தையும் நிலை நாட்டனுமின்னு முடிவு பண்ணினோம்! எங்களுக்கு புத்தி வந்துச்சு. எங்க க்ளாஸ்லயே இருந்துகிட்டு எங்க க்ளாஸ் பசங்க எல்லாத்தையும் ஒண்ணு சேத்துனோம், அவங்க கிட்ட நம்ம க்ளாஸோட பெருமை எல்லாம் சொன்னோம். அவங்களும் எங்க கூட சேந்தாங்க, க்ளாஸ் உணர்வு இல்லாதவனையும், எங்கய்யா (இனி பீமதாச அப்படித்தான் கூப்பிடணுமின்னு அவரே சொன்னாரு).

                    ஒரு நாள் நாங்க கூட்டத்துக்கு போறப்ப நடந்த பிரச்சனைல, கொஞ்சம் அடிதடி ஆகிடுச்சு. இதுக்கு இடையில ஸ்கூலுக்குள்ள கலவரத்த தூண்டி உட்டான்னு அவன் மேல காண்டாயி, பிரின்சிபல் அவன லெப்ட் ரைட் வாங்கீட்டாரு. நாங்க எங்க தலைவனுக்கு வந்த அவமானத்த எங்களோடதா நினைச்சு ஸ்கூல் போர்ட ஒடைக்கறது, மிஸ் முந்தானைய புடிச்சு இழுக்கறது போன்ற அற வழி போராட்டங்கள்ல ஈடுபட்டோம். இதை என்னபோ நாங்க மட்டும் தான் பண்ற மாதிரியும், மத்த க்ளாஸ் பசங்க மேல தப்பே இல்லாத மாதிரியும் எங்களையே குத்தம் சொன்னாங்க எல்லாரும்.

                    ஒரே ஒரு பையன் மட்டும் எங்க க்ளாசுல எங்க கூட சேர மாட்டான். அவனை அன்னைக்கு ஒரு நாள் புடிச்சு வற்புறுத்தி கேட்டப்ப சொன்னான், "ஏன் டா அந்த லூசுக்... தான் அப்படி பண்றான்னா நீங்க ஏன்டா புத்தி கெட்டு அலையறீங்க. நாம நல்லா படிச்சா, நல்லா வெளையாண்டு ஒழுக்கமாவும் இருந்தா நம்மள்ள ஒருத்தர் ஸ்கூல் பீப்புள் லீடரா வரலாம். அத விட்டுட்டு அவன் சொல்றத கேட்டுட்டு ஆடுறீங்க. அவங்க இங்க நம்ம கிட்ட இப்படி எல்லாம் சொல்லீட்டு வெளிய போயி, நம்ம க்ளாஸ் வஞ்சிக்கப்பட்ட க்ளாசு, இந்த க்ளாசுல தான் லேடீஸ் டீச்சரே இல்ல, படிக்கிற யாருக்கும் டவுசரே இல்லன்னு சோகக்கத சொல்றான். உண்மையிலேயே எல்லா க்ளாசுலையும் நல்லவன், கெட்டவன், படிக்கறவன், சாதிக்கறவன் எல்லாரும் இருக்காங்க டா.  அந்த சொட்டக்க்... தான் பையன ஸ்கூல் லீடராக்கறதுக்காக உங்களை எல்லாம் தூண்டி விடுறான். நல்லா யோசிச்சு பாருங்க, இப்ப பிரச்சன வந்தா மேல் லெவல்ல இருக்கற அவன் தப்பிச்சுருவான், கீழ் லெவல்ல இருக்கற பசங்க தான் எல்லா க்ளாஸ்லையும் பாதிக்கப்படுவாங்க. ஏன்னா, எல்லா க்ளாஸ்ல இருக்கற மேல் லெவல் பசங்க, பாதுகாப்பா தான் இருப்பாங்க. நமக்கு மரியாத, நாம ஒரே ஸ்கூலா இருந்தா தான் டா, இப்படி க்ளாஸ் க்ளாஸா பிரிஞ்சா இல்ல"ந்னான் ஒரே மூச்சுல.

             எங்க எல்லாத்துக்கும் செருப்பால அடிச்சா மாதிரி ஆயிடுச்சு. அவன் ஒரு காலத்துல நானோ என் பையனோ, பதவிக்கு வந்தா செப்பலால அடிங்கன்னு சொல்லீட்டு, போர்ட் அழிக்கற சுகாதார பதவிக்கு வந்தது எல்லாம் கண்ணுல நிழலாடுச்சு. "ஏன் டா பாடு, எங்க க்ளாசுக்கு நல்லது பண்ணுறேன்னு எங்கள தூண்டி உட்டு நீயும் உன் புள்ளையும் பதவிக்கு வறீங்கங்களா"ன்னு அவன அரச மரத்தடியில வெச்சு குமுறு குமுறுன்னு குமுறுனது வேற கத!

 நாங்க திருந்தீட்டோம் - அப்ப நீங்க?






Monday, April 29, 2013

மூன்று விஷயங்கள் : மற்றுமொரு பக்கம் 4


1. அந்த தோழி கல்லூரி பருவத்தை கடந்து ஆறேழு ஆண்டுகள் ஆகி இருக்கும். நேற்று நீயா நானாவை பார்த்து விட்டு, கல்லூரி கால நட்பில் பெண்கள் தன் நண்பனை தொட அனுமதிக்கக்கூடாது என்றார். எனக்கு தலை கிறுகிறுத்துவிட்டது. சிறு பிள்ளை போல குட் டச் பேட் டச் இவருக்கு சொல்லிக்கொடுக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. தொடுதல் என்றால் மாரை பிடித்து பிசைதல் என்று நினைத்திருப்பாரோ? ஏதோ ஒரு பாறையில் ஏறுகையில் கையை பிடித்து தூக்கி விடுதல், காய்ச்சல் அடிக்கும் போது "ஏன் டீ லூசு, டாக்ட்டர்ட்ட போனியா" என்று நெற்றி தொடுதல் எல்லாம் காமத்தில் சேருமென்றுஎன்னால் ஏற்கவே முடியவில்லை.

அந்த வயதிற்கென இருக்கும் இனக்கவர்ச்சியை நான் முழுதாக புறந்தள்ளவில்லை. அதே நேரத்தில், ஆக்சிடென்ட்டை தவிர்க்க ஹெல்மெட் போட்டு செல்வதற்கும், ரோட்டில் செல்லவே மாட்டேன் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. Explicit ஆக உன் சுண்டு விரல் கூட என் கை விரல்களின் மீது கூட படக்கூடாது என ஒரு ஆண் பெண் நட்பு இருப்பது சாத்தியமே இல்லை. நட்பின் அடிப்படையான நம்பிக்கை அங்கு சிதைக்கப்படுகிறதே?

பெற்றோர் பக்கம் நின்று ஒன்றே ஒன்றை சொல்கிறேன் - இப்படி முழுக்க உங்கள் கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கப்படும் பெண்ணை கல்லூரி முடிந்தவுடன் கட்டிக்க்கொடுப்பார்கள் எனில் கூட பரவாயில்லை. ஆனால், முழுக்க கட்டுப்பாட்டில் இருந்து விட்டு, வேலைக்கு செல்லும் போது முழுக்க சுதந்திரம் கிடைத்தால், அதை சரியாக பயன்படுத்தும் பக்குவம் அவர்களுக்கு இருக்காது. காரணம் நீங்கள் இத்தனை நாள் செய்த Spoon Feeding.

ஒரு வயதிற்கு என நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. பதின்ம வயதில் (Adolescence age) இனக்கவர்ச்சி அதில் ஒன்று. பெற்றோர்களாக நீங்களும் அதை கடந்தே வந்திருப்பீர்கள்.  கைப்பிடித்து வழிகாட்டியாக அந்த வயதில் உதவுதல் சரியாய் இருக்குமே அன்றி, அடைத்து வைத்து 22இல் டான்னு அவளுக்கு/அவனுக்கு பொறுப்பு வந்துரும் அப்ப அவுத்து உட்டுடுவேன் என்பது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். பொறுப்பு ஒரு Continuous process.

2. மேற்சொன்ன காரணிகள் நேராக இட்டுச்செல்வது எங்க பொண்ணு "தப்பா" போயிருமோ என்று. உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், காதலிப்பதை "தப்பு" என சொல்வீர்களே ஆனால், அவர்கள் உங்களை புழுவினும் கீழாகத்தான் பார்ப்பார்கள். என் சாதி சமூகம் தான் எனக்கு முக்கியம் என வெறி பிடித்து அலைபவர்கள் அலையுங்கள்; உங்களை திருத்துவது என் வேலை இல்லை.

  என் பெண்ணுக்கு தேர்ந்தெடுக்க தெரியாது அல்லது உறவினர்களால் சாதியை விட முடியாமல் பிடித்து தொங்குபவர்களுக்கு சொல்கிறேன், உங்கள் மகனுக்கோ மகளுக்கோ காதலிக்க கற்றுக்கொடுங்கள், தன் துணையை தேர்ந்தெடுக்க அவருக்கு உரிமையை கொடுக்கும் முன்னர், அதற்கான பக்குவத்தையும் நீங்களே உருவாக்கிவிடுங்கள்.

உங்கள் உறவினர்களுக்கு, சாதிக்கு நேர்மையாய் இருப்பதை விட, உங்கள் மார்பை தன் கவசமென எண்ணி, நீங்கள் நல்லதைத் தவிர வேறெதுவும் நினைக்க மாட்டீர்கள் என எண்ணி உங்கள் அனுமதி முக்கியமென எண்ணும் உங்கள் பெண்ணுக்கு பிடித்த அப்பாவை வாழ்ந்து பாருங்கள். அதன் சுகமே தனி சார்!

3. கமல் டீடீக்கு முத்தம் கொடுத்தது சரியா?

          ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா, முடியல. இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள். தனி மனித ஒழுக்கம் பேணுபவர்கள் யாரும் மற்றவர்கள் மீது அதை திணிக்க மாட்டார்கள். சொந்த வாழ்க்கையில் தான் ஒழுக்கம் என நம்புவதை கடை பிடிக்க முடியாதவர்களுக்கு "பார், இவனை விட நான் ஒழுக்கமானவன் தான்" என தன் மனதை சமாதானப்படுத்த ஒரு ஆள் தேவைப்படுகிறார். பார்க்கும் எல்லோரையும் குறை கூறி அதன் மூலம் தனது ஒழுக்கமின்மையை போக்கிக்கொள்கிறார்கள் இவர்கள்.

இவர்களுக்கான பதில் இது தான்.






ஏனய்யா, இது தவறென்றால்



இதுவும் தவறா?

மகள்களை பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று! - தங்க மீன்கள்.

Monday, March 25, 2013

கடவுள் - மற்றுமொரு பக்கம் - 3 :





                        கடவுள் குறித்த என்னுடைய  நினைவுகள் ஒரு மாரியம்மன் கோவிலில் என் அம்மாவுக்கு சாமி வந்திலிருந்து தொடங்குகின்றன.  எனக்கு மிகச்சிறிய வயது அப்போது. பார்த்தது நினைவில் இல்லை எனினும், அது குறித்து வீட்டில் அவ்வப்போது பேசியதின் விளைவாக தோன்றிய காட்சிப் பிம்பம் நான் அதை பார்த்ததாகவே எண்ணச்செய்கிறது. திருமணம் ஆகும் போது, அப்பா நாத்திகர் – திமுக காரர். சொற்பகாலம் கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். அரசியலை விட்டுவந்த பிறகு, குடும்பம்-குழந்தை என சுமை அழுத்த, ஏதோ ஒரு நோய்க்கு வேண்டப்போய் வழக்கம்போலவே ஆட்டுமந்தையிலொன்றாய் அரைகுறை ஆத்திகரானார் அப்பா. அரைகுறை என நான் குறிப்பிடுவதன் காரணம், கடவுள் குறித்த தர்க்கங்களோ, உணர்ச்சிகளோ இல்லையெனினும் "ஒரு வேள இருந்துட்டா... எதுக்கு வம்பு?" என சாமி கும்பிட வந்தவர் அவர்.

                            பால்ய காலங்களில் எனக்கு பிடித்த கற்பனை விளையாட்டு தோழர்களுள் தொந்தி விநாயகரும், முருகனும், ரேகான் என்ற ஒரு பேயும் கூட ஒரு அங்கம். பின்னொரு கோடைக்கால மதியத்தில், தொந்தியோடு இருப்பதால் தான் உனக்கு பெண் கிடைக்கவில்லை என கணபதியை நான் ஒரண்டை இழுக்க முடிவுக்கு வந்தது அந்த சினேகம்.  பின்னர் விவரம் தெரிந்துவிட்டதாக கர்வம் கொண்ட பொழுதுகளில் புத்தகங்களின் பால் ஈர்க்கப்பட்டு, பல மனிதர்களையும், கடவுள்களையும் தர்க்கங்களையும் கடந்த பின் சட்டென ஒரு நாள் கரைந்து போய் இருந்தது, சாமி கும்பிடும் பழக்கம்.

                   எதேச்சயாய் ஒரு நாள், அம்மா வைத்த விபூதியை தட்டிவிட்டு "எனக்கிதெல்லாம் பிடிக்கலம்மா" என்ற போது அவள் அதிர்ந்து தான் போயிருப்பாள். ஆனால், காலப்போக்கில், அவள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது , அப்பா "அம்மா... தாயே மகமாயி, காப்பாத்தும்மா" எனக்கதறி, "இந்த .... பயலாலதான் எல்லாம்... உன்னய பகச்சான்ல" என்ற போது, படுக்கையிலிருந்தவாரே உச்சு கொட்டி அவரை அதட்டியதும் அதே அம்மா தான். சட்டென கையைப்பிடித்து கரகரவென வந்த அழுகையை அடக்கிக்கொண்டேன். ஒரு வாரம் கழித்து அம்மா வீடு திரும்பிய அன்று அவளுக்கு தோசை ஊட்டிவிட்டுக்கொண்டிருக்கும் போது, "மொத வாய் உனக்கு" என அவள் என் கையை திருப்பி எனக்கே ஊட்டிவிட்ட போது தோன்றியது, கடவுளை வெளியில் தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

                              கடந்த வாரம் இஸ்லாமிய தோழி ஒருத்தியுடன் ஏதேச்சயாய் தொடங்கிய கடவுள் குறித்த விவாதம் பால்ய கால நினைவுகளை கிளறி விட்டது.  பத்து புத்தகங்களை படித்து விட்டு, "வேர் இஸ் திஸ் போப், ஐ வாண்ட் டூ ஆர்கியூ வித் ஹிம்" என அலைந்ததும், அனைத்து மதங்களையும் ஒட்டுமொத்தமாய் அழித்துவிட்டு மக்கள் திருந்தி தேன் ஆறு ஓட ஆரம்பிக்கையில் விழித்து காலி சொம்பில் தண்ணீர் துழாவிய கனவுகளுமாய் நினைவில் இழைகிறது.  யோசித்து பார்த்தால் வியப்பாய் இருக்கிறது, அறிவியல் எவ்வளவு வளர்ந்தால் என்ன? நம்பிக்கையை அடிப்படையாய் வைத்துக்கொண்டு பேசுகிற மனிதர்களிடம் எவ்வாறு விவாதிப்பது?
கல்பனா சாவ்லாவே விண்வெளிக்கு விநாயகரை தூக்கிச்சென்றாளே?
என்ன இருந்தாலும், எவ்வளவு சாதித்தாலும், மனித மனத்தால் சகித்துக்கொள்ள முடியாத பாரங்களை சுமக்க ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது. லஞ்சம் வாங்குவனாயினும், ஆரோக்கியம் வேண்டுபவனாயினும் கடவுளை பாட்னராக்கி கொள்வதில் மனத்திருப்தி காண்கிறார்கள்.

   

                             ஏதேனும் "விடுமுறை" நாட்களில் வீட்டு வாசலில் எந்த வேடம் அணிந்தவன் வந்து நின்றாலும், "இப்ப தான் இந்த கோவிலுக்கு போகணுமின்னு நெனச்சேன், சாமியே வந்துருச்சு" எனக்காசு போடுவார் அம்மா. நான் நினைத்துக்கொள்வேன், "அவனை பொறுத்த வரை நீ தான் சாமி". கடவுள் ஒரு நாளில் நேரில் வந்தால் அவரைக் கொன்று போடுவார்கள் என்றே தோன்றுகிறது (அய்ய்யய்யோ இது என் கதையின் ஒன் லைன் ஆச்சே, திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறேனே... சுட்டுடுவாங்களே...). பெரு நகரச் சாலையில் ஓவியம் வரைபனில் தொடங்கி, பொம்மை விற்பவன், சிலை வடிப்பவன், பிச்சை எடுப்பவர்கள், ஏன் மதசார்புள்ள (அற்றவும் தான்) அரசுகள் எத்தனை பேர் "இன் த நேம் ஆஃப் காட்"இல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கடவுள் நேரில் வந்தால், ஒரு நாளில் கோடிக்கணக்கானோரின் பிழைப்பு அம்பேல்!


                                                        எப்போது சாருவின் "முள்"ஐ மீள் வாசிப்பு செய்தாலும், கண் முன் தோன்றி மறையும்  "தீபா" ஒருத்தி விட்டுப் போன சவாலாய் இன்னமும் இருக்கிறது "உன்ன சாமி கும்பிட வெச்சு காமிக்கிறேன்". கோவிலுக்கு செல்லும் வழியில் விபத்தில் உயிரிழந்த நண்பனின் தாயின் சிதையை எரித்து விட்டு திரும்புகையில் கூடியிருந்த சனம் போலவே மனமும்  இல்லாத கடவுளை சபித்துக்கொண்டே வந்தது. உலகில் பலருக்கு கடவுள் குறித்த நம்பிக்கை இழப்புகளிலிருந்து தான் தொடங்குகிறது. பிரிவு, வறுமை, வேலை இழப்பு, பணம் பறிபோதல் , மரணம் என ஏதோ ஒன்றின் இழப்பில் தான் கடவுள் மீதான நம்பிக்கையோ, அவ நம்பிக்கையோ துவங்குகிறது. "கடவுள் இருக்கான் கொமாரு" என்றோ "என்ன சார் கடவுள் இது, என்ன மாதிரியான சிஸ்டம் சார் இது" என வெதும்பும் போதோ, எப்படியாயினும் கடவுள் குறித்த நம்பிக்கை உணர்வுப்பூர்வமானது.

"பசியிலிருப்பவனிடமும் காதலிருப்பவனிடமும்
அதன் அறிவியல் காரணிகளை சொல்லிக்கொண்டிருந்தால்
நீங்கள் ஒரு முட்டாள் அறிவுஜீவி"

                     என்ற என் பழைய கவிதை நினைவுக்கு வந்தது. இது கடவுள் நம்பிக்கைகக்கும் அட்சர சுத்தமாய் பொருந்தும் என்றே தோன்றுகிறது. ஈழத்தின் கதை எத்தனை பேரை நாத்திகராக்கியிருக்கும்? மொத்த குடும்பத்தையும் கோவிலுக்கு வண்டி கட்டி கிளம்பிய நாளில் பரிகொடுத்த மீதமிருக்கும் ஒருவர், இனி கோவிலுக்கு செல்வாரா? ஒரு சடலத்தை அடக்கம் செய்ய மின் மயானம் நோக்கிப்போகையில், யாரோ ஒருவர், "என் சமூகம் உனக்கு முன்பாக செல்கிறது" என மைக்கில் அலறுகிறாரே. அவர் ஏன் இன்னமும் ஆத்திகராய் இருக்கிறார்?

 நீலமணியின் கவிதை ஒன்று நினைவுச்சுழலில் இருந்து வந்து விழுகிறது

"தட்டினால் திறக்கப்படும் என்கிறார்கள்
சாத்தி வைப்பானேன்?"

இன்னொன்று, நீலமணி இந்த மாதிரி ஹைக்கூக்களில் கில்லாடி

"என்ன வரம் வேண்டுமென்று கேட்டார் கடவுள்
 அது தெரியாத நீ என்ன கடவுளென்றேன்"

                                         மனவளர்ச்சியற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்றில் சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்க்கும் இன்பராஜ், சுமதி டீச்சர், அக்குழந்தைகளை கவனிப்பதையே தனது வாழ்கையாக்கிக்கொண்ட சாந்தி பெர்ணாண்டஸ் சிஸ்டர், போராடுவதையே வாழ்கையாக்கிக்கொண்ட திருமுருகன் காந்தி அண்ணன் போன்றோர், பிச்சை எடுத்தாலும் குழந்தைகளை யாராவது பிச்சை எடுக்கவிடுவதைக்கண்டால் பொங்கி அவர்களிடம் குழந்தையை மீட்கும் ஒரு முதிய பிச்சைக்காரர், உலகம் அழியுமென வதந்தி கிளம்பிய அன்று ஒரு லட்சத்தை எல்லோருக்கும் பிரித்து வழங்கிய ஈரோட்டு பெரியவர் என எத்தனை எத்தனை கடவுள்களால் சூழப்பட்டு இருக்கிறோம் நாம். எப்போதோ மேத்ஸ் நோட்டின் கடைசி பக்கத்தில் எழுதிய பழைய கவிதை ஒன்று நினைவில் இடறுகிறது.

"பார்க்குமிடமெங்கும் பரவிக்கிடக்கிறார் கடவுள்
 நின்று புன்னகைக்க நேரமின்றி
விரைந்து கடக்கிறோம் நாம்
கோவிலுக்கு."

Tuesday, March 12, 2013

மற்றுமொரு பக்கம் -2 ஆதலினால் காதல்கள் செய்வோம்


                                இந்த அத்தியாயத்தில் வரும் என் காதலிகள் அனைவருக்கும் பொதுப் பெயர் “தீபா”.

          டீச்சர்களில் யாரையும் காதலிக்கவில்லை என்று யாராவது சொன்னால் அதற்கு இரண்டே அர்த்தங்கள் தான். ஒன்று நீங்கள் படித்தது முழுக்க ஆண்கள் உள்ள, அவர்களே ஆசிரியராயும் இருக்கும் பள்ளி. இரண்டு, நீங்கள் சொல்வது பொய். நான்காம் வகுப்பில்,  பட்டு ஜரிகை சரசரக்க வந்த தீபா டீச்சர் தான் என் முதல் காதலி. இப்போது கூட சாரு நிவேதிதாவின் “முள்” படித்தால், அவர் கன்னத்தை தடவும் ஸ்பரிசம் ஒரு நொடி கானலாய் தோன்றும். நான் ஏழாவது முடித்து லீவில் இருக்கையில் அவர் சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து கொள்ள, முடிந்து போனது அந்த காதல். இப்போது கூட கல்லூரி பேராசிரியை ஒருவர் திருமணத்தின் போது என் மனம் சுக்கு நூறாய் உடைந்து அதை நான் தேடிக்கொண்டு இருபதற்கு காரணம் அந்த தீபா டீச்சரின் சாயலும் ஒரு காரணியாக இருக்கலாம்.

        பள்ளியில் அதன் பிறகு எண்ணிலடங்காத என்னிலடங்காத காதல்கள். “மச்சி அவ பாக்கறாடா” என தொடங்கிய இரண்டு காதல்கள். ஸ்கூலிலேயே காதலித்து அதை இப்போது வரை காப்பாற்றும் ஒரே நண்பனான செந்திலிடம் சொல்லப்போய் வெளியில் தெரிந்த தீபாவின் மீதான பிரேமை, பதினொன்றாம் வகுபுல் முதல் நாள் பார்த்து, அவள் உடுத்தியிருந்த ஆரஞ்சு வண்ண சுடியை மாதம் முழுக்க சிலாகித்து, அவள் பயாலஜி எடுத்ததால், ஒரு மணி நேரம் அவளை பயங்கரமாய் மிஸ் செய்து, இன்னமும் தொடரிலிருக்கும் அவளிடம் நான் சொல்லவே இல்லை என் காதலை. இப்போது, மாஸ்டர் டிகிரி படித்துக்கொண்டிருக்கிறாள். திருமண பத்திரிக்கைகாக பயந்தபடி காத்திருக்கிறேன். அவ்வப்போது அவள் குறுஞ்செய்தி வரும் போதெல்லாம் விம்மி அடங்குகிறது மனசு.

              என்னை பொறுத்த வரை, கடவுளுக்கு அடுத்த படியாக உலகின் மிகபெரிய மித் ஒரு தடவை தான் காதல் பூக்கும் என்பது தான். எனக்குள்ளும் என்னை சுற்றியும், நொடி தோறும் காதல்கள் பூத்துக்கொண்டே இருக்கின்றன. சின்ன வயசில் சர்க்கஸில் பார்த்த அந்த கயிற்றின் மேல் நடப்பவளை இன்று வரை திருப்பூரில் எப்போது சர்க்கஸ் போட்டாலும், சென்று தேடிக்கொண்டிருக்கும் அப்பா நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார் காதலை. பேச்சு வாக்கில் அந்த பெயர் கேட்கும் போதோ, நாங்கள் யாராவது ஓட்டும் போதோ, கல்யாணம் செய்து கொள்ளாத அவர் மாமனை நினைத்து, ஒரு நொடி மின்னல் கீற்றாய் வெட்கச்சிரிப்பை உதிர்க்கும் கௌரிப்பாட்டிக்கு திருமணம் நடந்து அவர் கணவனும் இறந்துவிட்டார்.

              கல்லூரியின் ஆரம்ப காலங்களில், ஒரு பெண்ணின் பின்னால் கிறுக்கன் போல திரிந்த அனுபவம், இப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவைக்கும். பேருந்துகளில் சில, முகநூலில் சில என நான் காதலித்தவர்களின் எண்ணிக்கையை விட என்னை காதலித்தவர்கள் எண்ணிக்கை வெகு குறைவே. இப்போது வரை காதலித்துக்கொண்டிருக்கும் கல்லூரி தோழி தீபாவை, “நாங்க லவ் பண்றோம் டா” என நண்பன் வந்து சொன்ன நாளின் இரவு மறக்க முடியாதது. காதலிப்பவளிடம் நட்போடு பழகுவதின் ஆகப்பெரும் சிக்கல் இது தான். அவள் இதை படித்து விட்டு, “யார்டா அது” என கேட்கும் போது, உள்ளே வழியும் உதிரத்தை மறைத்து சிரிக்க வேண்டும்.
    
                யோசித்து பார்த்தால், வட்டியும் முதலுமில் ராஜு முருகன் நட்பு குறித்து சொன்னது காதலுக்கும் பொருந்துகிறது. “ஒரு காலத்துல யாரோ ஒருத்தருக்கு நம்ம தான் உலகமாக இருந்தோம். இப்ப அவங்க உலகத்துலயே நாம இல்ல”.


Sunday, March 3, 2013

மற்றுமொரு பக்கம் - தொடர் பத்தி - 1

                இரண்டு நாள் இருக்கும். காலை பேருந்துக்காக காத்திருந்த போது கோகுல் தம்பி கூப்பிட்டான்.

"அண்ணே, நல்லா எழுதி இருக்கேண்ணே... தமிழ் "ஈசி" தான்" என்றான்.

          கொஞ்சம் இருமி, அந்த நேரத்தில் யோசித்து "அட, பொதுத்தேர்வு தொடங்கி விட்டதே" என பின் மண்டையில் பல்பு எரிந்து பின் வழக்கமான தேர்வு அறிவுரைகள் சொல்லிவிட்டு வைத்தேன். இந்த வருடம் பொதுத்தேர்வை வழக்கம் போல லட்சக்கணக்கில் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

            குப்பை கூளங்களை போல, வரைமுறை இல்லாமல் பொறியியல் கல்லூரிகளை திறந்து வைத்திருக்கிறோம். முன்பொரு காலத்தில் நிலக்கிழார், பெரு முதலாளி வர்க்கம், இன்று கல்லூரிகளை திறந்து வைத்து, கடை விரித்திருக்கிறது. ரேவதி அக்கா ஊரெல்லாம் அநியாய வட்டிக்கு கடன் வாங்கிய காசையையும், முருகேசன் சித்தப்பா விவசாய நிலம் விற்ற காசையும் தங்கப்பல் தெரிய சிரித்து வாங்கி வயிறு வளர்க்கிறார்கள். டொனேஷன் போக, ஏகப்பட்ட கட்டணங்கள்.

            நாலு வருட என் பொறியியல் வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்த ஒரே பாடம்  "நீ இதுக்கு சரி பட்டு வர மாட்ட" என்பது தான். கல்வி தந்தைகள் எல்லாரும் களவாணிகள் என்று நான் சொல்லவில்லை, அப்படி இல்லாதிருந்திருந்தால் நன்றாயிருக்குமே என அங்கலாய்க்கிறேன். சமூகம் பற்றிய அறிவை சற்றும் கற்றுத்தராமல், கார்பரெட்டுகளுக்கான அடிமைகளை வளர்த்தெடுக்கும் கல்விமுறை தான் இன்றைய இஞ்சினியரிங். வளர்ந்த வளரும் கல்லூரிகளில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பல நேரங்களில், இது சிறையா என சந்தேகிக்க வைக்கும். வளரதா கல்லூரிகளில் பேனரில் மட்டும் கட்டடங்களை காட்டி பணம் கறந்து , வெற்று மேசைகளை தேய்க்க வைக்கிறார்கள்.

எனக்கு தெரிந்து தோட்டா ஜெகன் அண்ணன் முதல் நண்பர் சுனில் வரை ஐடி வேலையை உதறி விட்டு வந்தவர்கள் எத்தனையோ பேர். வாழ்க்கையை கற்றுக்கொடுக்காமல் வெறும் வேலைவாய்ப்புக்கான கல்வியை தான் நாம் கொண்டாடி வருகிறோம்.


              இன்றைய குழந்தை வளர்ப்பு பெரும்பாலும் "கார்ப்பரேட் " மயமாகிவிட்டது. பிள்ளைகளை முதலீடாக பார்க்க பழகி விட்டோம். மூன்றாம் வீட்டு கீதா குழந்தை கற்றுக்கொள்வதாலேயே பாட்டும், பக்கத்து சீட்டு சுப்பிரமணியம் பையன் விளையாடுவதாலேயே டென்னிஸ் கோச்சிங்கும் நம் பிள்ளைகளுக்கும் அவசிமாகிப்போகிறது.

        சூப்பர் சிங்கரில் தலைகாட்டாத, இன்ஜினியரிங், மெடிக்கல் படிப்பதை தன் கனவென கொள்ளாத, வந்த மாமாவுக்கு ரைம்ஸ் பாடி காட்டாத, அம்மாவை மம்மி என்று அழைக்காத குழந்தைகள் சாபங்களாக பார்க்கப்படுகின்றன. கில்லியும், கபடியும் இருப்பது கூட தெரியாமல், அம்புலி மாமாவையும் டைகரையும் காட்டாமலேயே ஒரு தலைமுறை வளர்ந்து விடுதல் என் வரையில் கொடுமை.

          நான்கைந்து வருடங்கள் இருக்கும். ஒரு மே மாதத்தில், மோகன் அவசர அவசரமாக அதிகாலை ஒன்பதரை வாக்கில் காதினுள் இரைந்து எழுப்பினான். அவனோடு படித்த முகம் தெரியாத ஒருவனின் மரணச்செய்தி. பைக் கேட்டவனோடு கூடவே சென்றேன். ப்ளஸ் டூவில் தோல்வி, மரணத்திற்கு அவனை இட்டுச்சென்றுள்ளது. உண்மையில் அதுவா அவனி அது நோக்கி நெட்டித்தள்ளியது??

       அந்த சாவு வீட்டில் கூடியிருந்த கூட்டம், அவன் ஒரு வேளை சாகாமல் இருந்திருந்தால் அவனை பேசிப்பேசியே கொன்றிருக்காதா? என் சார் பையன் என அவன் அப்பாவை தூண்டி விட்டு கொன்றிருக்காதா? இந்த தேர்வுகளும் இஞ்சினியரிங்கும் தான் வாழ்க்கை என ஒரு தலைமுறையையே ஏமாற்றி அவர்கள் குழந்தை பருவத்தை, பதின்பருவத்தை கொன்றிருக்கிறோம்.

        விடியலுக்கு முந்தைய நேரம், ஒரு ரயில் நிலையத்தில் நின்ற ரயிலிருந்து இறங்கி, ஒரு பதினொரு வயது மதிக்கத்தக்க சிறுவனிடம் கேட்டேன்.

"தம்பி நீ ஸ்கூலுக்கு போவலியா?"

" போன வருஷம் வரைக்கும் போனேன். எழுத படிக்க தெரியும், அம்மாவுக்கு மேலுக்கு முடியல, அப்பா இல்ல.. அதான்" என்றான்.

"ஸ்கூலுக்கு போயிட்டு வந்து புத்தகம் விக்கலாமே", ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டே கேட்டேன்.

"அம்மாக்கு எதுனா ஆச்சுன்னா கூட இருந்து பாத்துக்குறியா?"

 படித்தவர்களுக்கே உரிய கள்ளப்பார்வை பார்த்து, மௌனமாய் நின்றேன்.

"படிக்கறேன் சார் இப்பவும்.  நல்லா எழுத படிக்க தெரியும். பின்னால பொறுமையா பத்தாப்பு எழுதிக்கலாம். இன்னமும் ஒரு பத்து வருசங்களிச்சு வாங்க, எங்கம்மா பேர்ல ஒரு புக்கு கட, இங்கயே வெச்சுகாட்றேன்"

   இன்ஜினியரிங்கை விட பெரிய படிப்புகள், அதிகாலை ரயில் நிலையங்களில் கிடைக்கின்றன.








       
 

மற்றுமொரு பக்கம் - புதிய பத்தி - அறிமுகம்

                      



       விஷுவல் மீடியத்தின் எழுச்சி எழுத்தின் முக்கியத்துவத்தையும் நித்தியத்துவத்தையும் குறைத்து வருகிறது. மனுஷ், சாரு போன்ற எழுத்தாளர்கள் கூட இ-புக் பக்கம் செல்வது போல தெரியும் போதெல்லாம், புது புத்தகத்தின் வாசம் மூச்சை நிறைத்து நெஞ்சை அடைக்கிறது.

                   விஷூவல் மீடியத்தின் பக்கம் செல்ல நண்பர்கள் முயற்சி எடுத்து, அது ஒரு பக்கம் நடந்து வந்தாலும், உள்ளே புழுக்கத்தில் ...
உழன்று கொண்டிருக்கும் எழுத்துக்காரணை, வாசிப்பு அனுபவந்த்தை நுகர்ந்தவனை சத்தமின்றி கொன்று விட முடியவில்லை. தன் கடைசி தபாலை விநியோகித்து விட்டு பணி ஓய்வு பெறும் தபால்காரனை போல, ஏக்கத்துடன் என் வளர்ச்சியை பார்க்கும் அவனை புறந்தள்ளி விட முடியவில்லை.

                     இன்னொரும் புறம் பதிவுலகம் மெல்ல கலகலத்துப்போய், பதிவுகள் வழக்கொழியும் என்ற நிலையில் முகநூலும் ட்விட்டரும் எழுத்துகளை கொஞ்சம் வாழ வைக்கும் என்றே தோன்றுகிறது. இதற்கு
Parisalkaaran Krishna Kumar அண்ணனுக்கு வந்த வரவேற்பான ஷேர்கள் ஒரு சாட்சி.

                    இன்னுமொரு பக்கம், வருங்காலத்தில் வாரப்பத்திரிக்கைகள் எல்லாம் இணையத்தை மையமாக கொண்டே இயங்கும் என்ற அவதானிப்பு என்னுள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. கதைகளும், தொடர்களும் முதலில் இணையத்திலும் பின் இதழ்களில் வரும் காலம் தொலைவில் இல்லை.

                        இவற்றை எல்லாம் தாண்டியும் என்னுள் இருக்கும் எழுத்துக்காரனுக்கு தீனி போடவும், இனி முக நூலை களமாக்கி, வார இதழ்களில் வெளிவருவது போல "பத்தி" எழுதலாம் என உத்தேசம்.

                         என் ஆசை நிறைவேறினால், இந்த பத்தியே கூட விரைவில் விகடனிலோ குங்குமத்திலோ வெளியாகலாம். (ம்ம்க்கும் என் ஆசைகள் எல்லாம் நிறைவேறி இருந்தால் சற்று முன்பு சாட் செய்த ஃபேக் ஐடியோடு சேர்த்து எனக்கு 13439 பெண்டாட்டிகள் இருந்திருப்பார்கள்)

                            நிச்சயம் அந்த வாரத்தின் சென்ஷனலைஸ்டு நியூஸ் சொல்லி உங்களை அறுத்து விட மாட்டேன். நான் ஏறிவுடன் பெருந்துறைக்கு டிக்கெட் நீட்டும் எந்த பெயர் தெரியாத பேருந்து நடத்துனர், பத்து நாள் முன்பு இறந்து போன எங்கள் ஏரியா டெயய்லர் தாத்தா என முகம் தொலைத்த ம்அனிதர்களும் அவர்களின் சொல்லப்படாத கதைளும் ஏராளம் இருக்கின்றன.

                          என் பத்தியின் வரவேற்பு உங்கள் ஷேர்களின் மூலம் மட்டுமே என்னால் கணக்கிடப்படும். இதுவரை படிக்காதவர்கள் நிச்சயம் லைக் தான் செய்வீர்கள். ஆனால், அதனால் பயனில்லை. வெறும் ஷேரை மட்டுமே கணிக்கிடப்போகிறேன்.

                            இன்று முதல் ஒவ்வொரு வாரமும், என் முக நூல் பிரத்தியேக பக்கத்திலும் என் சுவற்றிலும், என் வலை மனையிலும்....

"மற்றுமொரு பக்கம்"


 http://www.facebook.com/matrumorupakkam#!/

பின் குறிப்பு : உங்கள் வரவேற்பை பெற்ற குப்பை தொடர் கட்டுரை தொகுப்புகள் நிச்சயம் தொடரும். இந்த "மற்றுமொரு பக்கம்" பத்தி, குறுந்தொகுப்பு, முக நூல் ஸ்பெஷல், இன்னமும் வாசிப்பை நேசிப்பர்களுக்கும் அதற்கும் நேரம் குறைவாக இருப்போர்க்கும் சென்று சேர்க்கும் தளம்.

 இலக்கியத்திற்கு முக நூல் சரிபட்டே வராது என்பது என் தனி எண்ணம். என்ன ஆகிறதென்று பார்ப்போமே.