Flipkart

Amazon

Amazon

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Tuesday, October 28, 2014

ரமணா > கத்தி - ஏன்?

குறிப்பு :  கத்தி படத்தை ஏற்கனவே பலர் கிழித்து, கொண்டாடி எல்லாம் தொங்கவிட்டாயிற்று. விஜயை பகடி செய்வதோ, வெற்றி என கொக்கரிப்பதோ, கோக்ககோலாவில் நடிச்சுட்டு இத சொல்லலாமா என பொங்குவதோ இப்பதிவின் நோக்கமல்ல. இது 'சினிமா' விமர்சனம்.

               போதிய நேரமில்லாத காரணத்தால், முதலில் கதை மற்றும் அதன் கருவை விவாதித்து விட்டு பின் திரைக்கதையை அலசலாம். வழக்கம் போல ஒரு மிக வலிமையான கரு. விவசாயம் எப்படி உலகமயமாக்கலால் அழிகிறது. ஒரு விவசாய கிராமம். அதனிடம் இருக்கும் ஒரு வளம், அதாகப்பட்டது விவசாயத்திற்கு அடிப்படையான தண்ணீர். அதை உறிஞ்ச துடிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். உண்மையிலேயே வலுவான கதைக்கரு தான். தண்டகாரன்ய காடுகளில் தொடங்கி நக்சலைட்டுகளுக்கான அடிப்படை காரணம் வரை, உலகமயமாக்கலின் பின்னான வளச்சுரண்டலில் உரைந்திருக்கிறது.

             கத்தியின் திரைக்கதைக்கு முன் ரமணாவின் திரைக்கதையை யோசித்துப்பாருங்கள். முதல் காட்சியில் இருந்தே செட்டிங் தி ஸ்டேஜ் அது. விஜயகாந்த்தின் கேரக்ட்டரைஷேசன் மெல்லமாய், அழுத்தமாய் பதிவு செய்யப்படும். அது ஏன் என ஒரு சின்ன கேள்விக்குறி நமக்குள் விழுந்து அது விஸ்வரூபம் எடுக்கையில் ஒரு ப்ளாஷ் பேக்.  ரமணாவின் முக்கிய ப்ளஸ், அதன் திரைக்கதை தான். எல்லா கேரக்டர்களுக்கும் வேண்டிய முக்கியத்துவம் கொடுத்து, அந்த கேரக்டர் தனது குணாதிசயத்தை கடைசி வரை கொண்டிருப்பது போன்ற திரைக்கதை. எத்தனை கூஸ் பம்ப் மொமெண்ட்ஸ்? மருத்துவமனையில் பிணத்துக்கு வைத்தியம் பார்ப்பது தொடங்கி, "We are not sentimental fools" வரையில். யூகி சேது கேரக்டருக்கு எத்தனை வலு?  நீங்களே ஒவ்வொரு சீனாய் நினைத்துக்கொள்ளுங்கள். சுமாராய் நடிக்கக்கூடிய யார் நடித்திருந்தாலும் ஹிட் அடித்திருக்கும். நல்ல திரைக்கதை அது.

             ஆனால், இதையே கத்திக்கு பொருத்தி பார்த்தால் தெரியும். பார்வையாளன் தியேட்டருக்கு வந்த முதல் 10 நிமிடத்தில் அவனை கதைக்குள் இழுக்க வேண்டும் என்கிறார் சிட் பீல்ட். சமந்தா கால்ஷீட் இருப்பதற்காவும், பாட்டு படத்தில் வேண்டும் என்பதற்காவும் ஏனோ தானோவென 40 நிமிடங்களை சுட்டுத்தள்ளி இருக்கிறார் முருகதாஸ். சதீஷின் காமெடி, சமந்தாவின் லவ் சீன்ஸ் எல்லாம் விமர்சனம் செய்யக்கூட லாயக்கில்லாதவை. அப்படி வேண்டுமென்றால் கொஞ்சம் யோசித்து காதலை எழுதத்தான் உங்களுக்கு என்ன தயக்கம்? கஜினியைத் தவிர மத்த எல்லா படங்களிலும் முருகதாஸின் காதல் போர்ஷன் மொக்கை தான். காதலுக்கும், கிறுக்குப்பிடிப்பதற்கும் இருக்கும் அந்த நூல் அளவு வித்தியாசத்தை அவர் கவனிக்க தவறிவிடுகிறார் போலும்.

          இரண்டாவது விஜயையின் இன்ட்ரோ அபத்தத்தின் உச்சம். ஐந்து பேர் ஆளுக்கு நான்கு முறை சுட்டும் ஒரே தோட்டா தான் பாய்கிறது. அவரையும் காப்பாற்றி விடுகிறார்கள். அவர் ஏன் இராவில் காய்கறி எடுத்துப்போனார் என்பதற்கு லாஜிக் வேறு. படம் ஆரம்பிப்பதே அந்த ப்ளாஷ் பேக் சீனில் தான். ஆனால், அந்த ப்ளாஷ் பேக்கில் தற்கொலை கூஸ் பம்ப் மட்டும் இல்லையெனில் படமே விழுந்திருக்கும். யோசித்து பாருங்கள். 37 வயது ஆள் இன்னமும் காலேஜ் பிரண்ட்ஸோடு, ப்ரபசரோடு ஊருக்குள் சும்மா இருக்கிறாரா? இதற்கு அவர் வெளி நாடு போய் விட்டு ஊருக்கு வந்தவர் என்றாவது காட்டி இருக்கலாம். 22 வயதில் கல்லூரி முடித்திருப்பார். 15 வருடங்களாய் என்ன செய்தார்? சரி. முதல் சீனில் அவரை கிஞ்சித்தும் மதிக்காத கிராமத்து ஆட்கள் அடுத்த சீனிலேயே அவரை தலை மேல் தூக்கி வைக்கின்றனர். இதெல்லாம் விஜய் என்ற ஒற்றை மனிதனால் தெரியாமல் போனது. வேறு யாரென்றாலும் இந்தக்குறைகள் பெரிதாய் தெரிந்திருக்கும். செம்ம வீக்கான திரைக்கதை. Character establishment இன்னமும் மிக வலுவாய் செய்யப்பட்டிருக்க வேண்டிய பாத்திரம் ஜீவா.

       ஊரில் பிறந்தது முதல் இருப்பவர் கல்லூரி நண்பர்களிடம் தான் இது யார் நிலம் என்பாரா? இந்த நண்பர்கள், ஊர் இளசுகள் எல்லாம் சென்னை வந்து இவர் கேஸ் நடத்த உதவ மாட்டார்களா? கூலி வேலைக்கு போறது ஓக்கே. ஆனா ஒருத்தர் கூடவா இவர் கூட இருக்க மாட்டாங்க? அதென்ன கூலி வேலை மட்டும், ஒரு கம்ப்யூட்டர் தட்டுறவன் கூடவா ஊர்ல உருவாகி இருக்க மாட்டான், விஜயை தவிர?
         விவசாயிக்கு தெரிந்த ஒரே வழி என தற்கொலை செய்வது செம்ம சீன். இதன் பிறகு அப்படியே ஜம்ப் அடித்தால் அந்த பைப் சீக்வன்ஸ் மட்டும் தான் அடுத்த கூஸ் பம்ப் சீன். இடையில் வரும் சில்லறை தூக்கிப்போடும் சண்டை, மற்ற எல்லா சண்டைகளும் எடுக்கணுமேன்னு எடுத்தது. 90களின் டெக்னிக். இந்த சண்டை எல்லாம் பில்லர்ஸ். இதே நேரத்தில் ரமணாவில் எவ்வளவு பரபரப்பாய் திரைக்கதை சுழன்று கொண்டிருந்தது என்பதை நினைவில் நிறுத்தவும்.

     இந்த இடத்தில் இரண்டு விஷயங்கள். பெரு-நகர மக்களை நேரடியாய் தங்கள் அக்கறையின்மைக்காய் குற்றம் சாட்டியதை பாராட்டியே ஆக வேண்டும். பலர் இந்த இடத்தில் சுற்றி வளைத்திருப்பார்கள். ஆனால், வழக்கம் போல ஒற்றை மனிதத்தீர்வை முன்வைத்ததை தவிர்த்திருக்கலாம். இது வணிக சினிமா, தீர்வு எல்லாம் தரவில்லை என்பவர்களுக்கு, இதையே ஜெண்டில் மேனுக்கு சொல்லலாமா? சிவாஜிக்கு? இதெல்லாம் சமூக பிரஞ்ஞை இல்லாதவர்களுக்கு நஞ்சு. இவங்க தான் நாளைக்கு ஓட்டுப்போடப்போற மாஸ்.

   இந்த இடத்தில் பேசப்பட்டதில் முக்கால்வாசி நம்மாழ்வாருடையது. குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், திமுகவை மட்டும் நைசா தாக்கி, ஜெவை விட்டது கயவாளித்தனம். அதே போல அந்த கம்யூனிச டயலாக் அவசியமில்லாத இடைச்செருகல். ஆனால், இதை எல்லாம் விட்டுவிடலாம். ஏன் எனில் இது பணம் செய்ய எடுக்கப்பட்ட சினிமா, மாற்று சினிமாவோ, டாக்குமெண்ட்ரியோ அல்ல என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். விவசாயத்திற்கு இது ட்ரிப்யூட் என படத்தை பார்க்க சொன்னால் அது கயவாளித்தனம். திருப்பூரில் ஞாயிறு அன்று ஒரு டிக்கெட்150 ப்ரோ. ஒரு கிலோ அரிசியோட கொள்முதல் வெலை என்ன?

திரைக்கதையை பொறுத்த வரை, தற்கொலை சீன், பேட்டி சீன் இரண்டும் இடையே திணிக்கப்பட்ட சீன்கள். அவற்றில் அவ்வளவு கற்பனை வறட்சி. எதிர்பார்த்த க்ளைமேக்ஸ்.

விஜயை தவிர்த்து ஒரு சிறு நடிகர் நடித்திருந்தால் இந்த படத்தின் நிலை என்ன? ஏன் விஜயகாந்த் என வைத்துக்கொள்வோம். என்னவாகியிருக்கும்? ஒரு சுமாரான கமர்சியல் படம், திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால், நல்ல படமாய் இருந்திருக்கும் என்பதைத்தவிர கொண்டாட, கிண்டலடிக்க கூட படத்தில் ஏதும் இல்லை.

பிகி : செல்பி புள்ள பாடலுக்கு முந்தைய சீனுக்காவே இந்த படத்தை சுமார் படம் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.

Monday, September 29, 2014

மெட்ராஸ் - விமர்சனம்

மெட்ராஸ்

பெங்களூரு வந்து கிட்டத்திட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. நேற்று இரண்டாம் ஆட்டம்  முடித்துவிட்டு வரும் போது நண்பன் ஒருவனிடம் சென்னை-பெங்களூரு ஓப்பீடு பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அலுவலகத்தில் எப்போதும் ஓடும் டாப்பிக். தமிழர்கள் அல்லாதவர்களிடம் மெட்ராஸ் குறித்த ஒரு பிம்பம் உண்டு. தமிழ் இல்லன்னா பிழைக்க முடியாத ஒரு ஊர் அது. சென்னை ஹீட்டுப்பா... எனக்கு பெரிதாக ஸ்டீரியோடைப்புகளில் நம்பிக்கை இல்லை என்பதால் சண்டை வராது. சிரித்துக்கொண்டே போய்விடுவேன்.

நேத்து நண்பன் சொல்லிக்கொண்டிருந்தான். இங்கு எல்லாருக்குமே தமிழோ இந்தியோ தெரியுது. பிரச்சனை இல்லாத ஊர்ண்ணே. என் ஆபிசிலும் இதே தான் சொல்வார்கள். சென்னையில் ஹிந்தி பேசி பிழைக்க முடியாது. பெங்களூரில் கன்னடாக்காரர்களை பார்க்கவே முடிவதில்லை. எல்லாம் பெயர்ந்தவர்கள். இங்கே இருந்த மண்ணின் மைந்தர்கள், வீடு நிலம் மூலம் செட்டில் ஆனவர்கள் ஆனாலும் சரி, தங்கள் மொழி சார்ந்த அடையாளத்தை முற்றிலும் துடைத்தெறிந்து விட்டு வாழ்கிறார்கள். சினிமா, இலக்கியம் என எந்தக்கன்னடத்  தொடர்பும் அவர்கள் மொழி அடையாளத்தை உயிர்ப்புடன் வைக்கும் அளவு இல்லை. இந்த தலைமுறையினருக்காவது சற்று வருத்தம் இருக்கிறது. ஒரு இருபதாண்டுகள் கழித்தால், பெங்களூரில் பெங்களூரியன்ஸ் மட்டும் தான் இருப்பார்கள்.

மன்னிக்கவும். மெட்ராஸ் விமர்சனம் இடத்தான் ஆரம்பித்தேன். முன்னுரை கொஞ்சம் லெந்த்தா போச்சு.




சென்னை பல ஊர்களில் வந்து குவிந்த மக்களின் வாழ்வாதாரம். கட்டிடத்தில் பணிபுரியும் கூலிகள் தொடங்கி ஐடியில் ஐடி கார்டோடு திரியும் கூலிகள் வரை. ஆனால், மெட்ராஸ் அது வேறு. மெட்ராஸ், மெட்ராஸ்காரர்களின் ஊர். புளியந்தோப்பு - தலித்துகள் வாழும், அல்லது அவர்கள் வாழ பணிக்கப்பட்ட பகுதி. ஒரு சுவரை மையமாக வைத்து, அதிகாரத்திணிப்பை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறார் ரஞ்சித்.

தமிழ் பிரபாவின் விமர்சனத்தை கீழே பகிர்ந்துள்ளேன். வரிக்கு வரி நான் எழுத நினைத்ததையும், மேலும் சில வட சென்னை அத்தெண்டிக் அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளதால், விடுபட்டவையை மட்டும் நான் சொல்கிறேன்.

தமிழ் பிரபாவின் விமர்சனம் : https://www.facebook.com/prabha.prabakaran/posts/807940465924748

 பொதுவாக எனக்கு கார்த்தியின் முகம் அலர்ஜி. தெலுங்கு பாணி நடிப்பு அவருடையது. இப்படத்திலும் க்ளைமேக்ஸில் ஸ்கூல் பாடம் உட்பட சில இடத்தில் சிரிப்பு வந்தாலும், ஓரளவு சமாளிக்கிற அளவு ஒன்றியிருக்கார். வட சென்னையின் முகத்தை மிக யதார்த்தமான ஒரு கோணத்தில் காட்டியிருக்கிறார் ரஞ்சித். எல்லாருக்கும் இதில் புரிந்தது மேலோட்டமாய் தலித் அரசியல் - அதிகார அடக்குமுறை மட்டும் தான். எனக்குத்தெரிந்து ரஞ்சித் நுட்பமாய் சொன்னவை/ நான் ரசித்தவை :

1. அம்மக்களிடம் பொங்கும் காதலும், கனவுகளும் - அன்பும், அவன் மனைவியும் மோகம் கொள்ளும் இடங்கள் அனைத்துமே காதலின் உச்சம். எளிய மனிதர்களின் காதலை இதைவிடச்சிறப்பாக சொல்லிவிட முடியுமா எனத்தெரியவில்லை. பையனை புட் பால் பிளேயர் (கால்பந்து வீரன் :-) ) ஆக்குவது தொடங்கி எத்தனை கனவுகள்?

2. கலை. நடனக்குழு, புட்பால், கேரம் என விளையாட்டுகள். எல்லா ஏரியாவிலும் இக்குழுக்களில் திறமைமிக்க எத்தனையோ இளைஞர்கள் இருப்பார்கள். இதைப்பெரும்பாலும் வெறும் சீன் பேக் ட்ராப்பாக மட்டுமே நம்மாட்கள் பயன்படுத்தி வந்தார்கள். ரஞ்சித் கதையோட்டத்தில் அதை இணைத்துள்ளார் - முக்கியமாய் நடனம், புட்பால், கானா.

3. அரசியல் எப்போதுமே ஆடு புலி ஆட்டம் தான். புலிகள் ஆடுகளை மோதவிட்டு வழியுமவற்றின் குருதியை நக்கிக்குடிக்கும் ஆட்டம். மேலிருக்கும் புலிகளுக்கு எல்லாருமே ஆடுகள் தான். தலித் அடையாள அரசியலைத் தாண்டி, மாரி - சேது கூட்டணி, மாரியை போட்டுத்தள்ளிவிட்டு விஜி மேலே வருவது, யார் வந்தாலும் சுவர் தன்னிடம் இருக்கவேண்டுமென நினைக்கும் சேது, அதற்கு மேல், கீழே உள்ள நிலைமை தெரிந்தும் கூட்டணி வைக்கும் தலைவர்கள் (எனக்கு விசி-பாமக ஒரு கூட்டணியில் இருந்ததை குத்தியதாக தெரிந்தது) என ஒரு படி கீழே இருப்பவன் ஆடாகத்தான் பாவிக்கப்படுகிறான்.

4. முதலிலேயே புள்ள குட்டிய படிக்க வைங்கடா என யதார்த்தமாக சொல்லும், ஜாலி இளைஞனாக, கொலை செய்து விட்டு பின் அவ்ளோ தானாடா என பினாத்தும் போதும் நன்றாகவே நடித்திருக்கிறார் கார்த்தி.

5. ஜானி பற்றி ஊரே சிலாகித்து விட்டது. தொப்பி எட்த்துக்கிரேன் பாஸூ... ஹேட்ஸ் ஆஃப் ஜானி :)

                      மொத்தமாக வட சென்னையின் கனவுகள், காதல், அவ்விளைஞர்களின் திறமைகள், அவர்கள் வாழ்க்கைப்பாதையென அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி, அதன் முன் நிற்கும் வரலாற்றின் நெடிய தொடர் சங்கிலி சவால்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தியதால் மெட்ராஸ் மிக முக்கியமான படம்.

                 இன்னொரு பக்கம். பரபரக்கிற ஸ்க்ரீன் ப்ளே. அரசியல் சதுரங்கத்தின் சோல்ஜர்-மந்திரி ஆட்டம், மிக யதார்த்தமான ஒரு காதல், அட்டகாசமான சந்தோஷ் நாரயணின் பிண்ணனி, பாடல்கள் என ஒரு பக்கா கமிர்ஷியல் ஹிட். இதற்காக சில ட்ரேட் ஆஃப்களை ரஞ்சித் செய்திருந்தாலும் அது ஓக்கே தான்.

படம் முடிந்தவுடன் என் நண்பனிடம் இதைத்தான் சொன்னேன்

"ஆரண்ய காண்டம் ஒரு கல்ட் க்ளாசிக்காகி விட்டது, மற்றபடி சென்னை இளைஞர் பாத்திரத்தை கதா நாயகனாக கொண்ட படங்களெல்லாம் கமர்சியல், மெட்ராஸ் இரண்டுக்கும் இடையிலான பேலண்ஸ்"

பாரட்டுக்கள் ரஞ்சித், சந்தோஷ் நாராயண், முரளி. லாங்க் வே டு கோ.


Saturday, June 15, 2013

ரஜினி : மற்றுமொரு பக்கம் - 7


            வசூல் மன்னன் - சூப்பர் ஸ்டார் - அமிதாப் போன்ற பாலிவுட் நடிகர்களெல்லாம் அப்பாவாக நடிக்கப்போன பின்னரும், தனக்கு மகளாய் நடித்த நடிகைகள் தனக்கு அம்மாவை நடிக்க இன்றும் யூத்தாக நடித்துக்கொண்டிருப்பவர் - தமிழகத்தின் அப்பழுக்கற்ற ஹீரோ என்ற பிம்பம் உடையவர் - வாய்ஸ் உடையவர் - பல்வேறு நாடுகளில் ரசிகர்களைக் கொண்ட - அனைத்து சென்டர்களிலும் ரசிகர்களை கொண்ட நடிகர் - அதற்கும் மேலானவர் - ஆதர்சம் - ரஜினிக்குண்டான பிம்பம் பிரம்மாண்டமானது.

             ரஜினி எப்படி இந்த இடத்தை பிடித்தார்.  எண்பதுகளில் ரஜினி படம் வந்து தான் ரஜினிப்படத்தை தியேட்டரை விட்டு தூக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் எல்லாமே சூப்பர் ஹிட் என சொல்லிவிட முடியாமல் இருந்தது. 1980ஐ எடுத்துக்கொள்வோம். 79இல் வந்த அன்னை ஓர் ஆலயம் சூப்பர் ஹிட். 1980இன் ஆரம்பத்தில் வந்த பில்லா ப்ளாக்பஸ்டர், ஆனால் அதை தொடர்ந்த காலி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி எல்லாம் வந்த வேகத்தில் சுருங்கின, மீண்டும் பொல்லாதவன் ஹிட், முரட்டுக்காளை ஹிட். இங்கே ப்ளாப் ஆன படங்களை மக்கள் நினைவே வைத்துக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

        ஒரு வருடத்திற்கு ரஜினி நாலு ஹிட் கொடுக்கிறார் என்பதே பேச்சு, அவர் எத்தனை நடித்தால் என்ன? ரஜினி மிக வேகமாக பி,சி சென்ட்டர்களின் ஆதர்ச நாயகனாக வளர்ந்து நின்றார். ஏ க்ளாஸ் ரசிகர்கள் அவர் படத்தை இப்போது ரசிக்கத்துவங்கி இருந்தனர். தளபதிக்கு பிறகு ரஜினி க்ராபில் ஏற்றம் தான். இப்போது தான் ரஜினியின் படங்களில் ஒரு சின்ன மாற்றம் வருகிறது. தளபதி, ராபின் ஹுட், உழைப்பாளி என ரஜினி ஏற்று நடித்த பல வேடங்கள் ஏழை வேஷம். தங்களுள் ஒருவராக ரஜினியை கொண்டாட வைத்தது இது தான். நம் மக்கள் சினிமா முட்டாள்கள் இதற்கு வகைதொகையே கிடையாது. எம்.ஜி.ஆர் சாக மாட்டான் என நம்புபவனுக்கும், ரஜினி வாய்ஸ் சரியாய் இருக்கும் என எண்ணுபவனுக்கும், விஜயால் நாடாள முடியும் என நம்புபவனுக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.



             எங்கே விட்டேன், ம்ம்... பாஷா, பாஷாவிற்கு பிறகான படங்களில் ரஜினி பணக்காரனாக நடிக்க ஆரம்பித்தார்.  ஏழைகளால், கூட இருக்கும் துரோகிகளால் (இவர்கள் ஏழையாக அண்டிப்பிழைப்பவர்களாக இருப்பார்கள்) வஞ்சிக்கப்படும் ஹீரோ. முத்து படத்தில் பணக்காரராக இருந்தும் வேலைக்காரனாக, அருணாசலத்திலும் அப்படியே, படையப்பாவிலும் தன் சொத்து மணிவண்ணனால் ஏய்க்கப்படும்.

         ரஜினிக்கு ஏற்கனவே ஒரு இமேஜ் உண்டு. அவரது கேரக்டர்கள் பல நேரம் திருநீறு பூசிக்கொண்டிருக்கும் (பக்தியாம்), பெற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும், அநியாயம் என பொதுபுத்தியில் அமையப்பெற்றிருக்கும் எதையாவது கண்டால் பொங்கும், மற்றபடி பொதுபுத்தியை அப்படியே பின்பற்றும். படையப்பாவில் பாம்பை காப்பாற்றும், சாமி கும்பிடும், திமிர் பிடித்த பெண்ணை விரும்பாத, அம்மா சொன்னால் அதை செய்யும் பையன் (உஷ்ஷ்.... இதெல்லாம்).  பொதுபுத்தியில் நல்ல பையன் என இப்படிப்பட்ட பையங்களைத்தான் சொல்வார்கள்.

        என்பதுகளில் ரஜினியின் ரசிகனாய் இருந்தவர்கள் இப்போது தங்கள் மகன்கள் ரஜினியின் ரசிகனாய் இருப்பதற்கு தடையேதும் நிச்சயம் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் ரஜினி தான் Controversialஆக ஒன்றுமே சொல்லவில்லையே, அரைத்த மாவையே தானே அரைத்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே இந்தச் சமூகம் எப்படி உள்ளதோ ஆணாதிக்கம் (பொம்பள பொம்பளையா இருக்கணும் - படையப்பா, மன்னன்), சாதீய இறுக்கங்கள் (எந்தப்படத்திலாவது ரஜினி வேற்று/தாழ்ந்த சாதி பெண்ணை மணப்பதாக குறியீடு இருந்தால் சொல்லுங்கள்), என அத்தனையும் ஏற்றுக்கொண்டும் சிபிட்சத்தை கடைசியில் தரும் ஒரு பாத்திரமாக இருக்கும் ரஜினியினுடையது.

                           இதெல்லாம் வெறும் குறியீடுகளே. இதெல்லாம் நல்லது தானேப்பா என்றேர்களேயானால் உங்களை வெள்ளந்தியாகவே பார்க்கவேண்டியுள்ளது. இதெல்லாம் சும்மா உல்லுல்லாயி... சிவாஜியில் தமிழ் காலாச்சார் (ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இல்லை) பெண் வேண்டும் என்பார் ரசிநீ (Back sorry Post mordernism) ஸ்ரேயாவை கோவிலில் பார்ப்பார். நல்ல விஷயம் என்றார் நண்பர். வாருய்யா என அமர்த்தி ஒரு கூடை சன்லைட் பாட்டை ஸ்லோ மோஷனின் ஓடவிட்டேன், வெள்ளையாய் ஒரு திராவகம் ஒழுக (வாயிலிருந்தய்யா) ரசித்து பார்த்தார். அப்பறம் திரும்பி  இளித்தார். ரஜினி சங்கர் போன்றவர்களின் டெம்ப்ளேட் ரொம்ப எளிது, இச்சமூகத்தில் எதையும் சீர்திருத்தாக, எந்த கருத்தையும் ஆழமாய் முன் வைக்காத, ஆனால் அதே நேரத்தில் சமூகத்தை சுபிட்சமடைய வைக்கும் ஒரு ஹீரோ + அடக்க ஒடுக்கமான அவன் காதலி பாடலில் மட்டும் கவர்ச்சி காட்டுவாள் + நினைத்ததையே சொல்லும் அம்மா, அவள் பேச்சை கேட்டு நடக்கும் நல்ல பையன் ஹீரோ.

             இது தான் ரஜினியின் வெற்றி பார்முலா. இச்சமூகத்தின் மொத்த Envisageஐ பட ஹீரோ செய்வார். வெல்வார். ரஜினிக்கு ரசிகர்கள் குவிந்தது இப்படித்தான். இதே காலகட்டத்தில் கமல் பரீச்சை செய்தார், ரிஸ்க் எடுத்தார். அவரை ஏன் பலரும் பரிந்துரைப்பதில்லை? உங்களுக்கே தெரியும் இருப்பினும் விரிவாக அலசலாம். அடுத்த மற்றுமொரு பக்கத்தில் :)

       

Tuesday, June 4, 2013

சாதியம் நோக்கி அடி எடுக்கும் தமிழ் சினிமா - மற்றுமொரு பக்கம் 6

                                            வினையூக்கியின் கட்டுரை போட்டிக்கு கட்டுரைகளை சமர்பிக்க இன்னமும் 10 நாட்களே உள்ளன. அதற்காக படித்தும் எழுதியும் கொண்டிருக்கும் போது நேற்று முக நூலில் அருண் (தமிழ் ஸ்டுடியோ) எழுதிய குட்டிப்புலி விமர்சனமும் அதற்கு பலர் ஆற்றிய எதிர்வினைகளையும் காண நேர்ந்தது. அதில் முக்கியமான எதிர்வினை ராஜன் குறையினுடையது. ஏன் இதை முக்கியம் என குறிப்பிடுகிறேன் என்றால், அவர் பொதுபுத்தியின் பாற்பட்ட விமர்சனம் என்கிறார். தமிழ் ஸ்டுடியோ அருண் தனது விமர்சனத்தில் சசிக்குமாரை ராமதாசோடு ஒப்பிட்டு அவரை மிக ஆபத்தானர் என குறிப்பிட்டு இருந்தார். இன்னொரு பக்கம்  நண்பர் அதிஷா குட்டிப்புலியை பார்த்துவிட்டு கதறி இருந்தார்.

                                     குட்டிப்புலியை விமர்சிக்கும் பணியை தூசு தட்டி எடுக்க இப்பதிவுகளே காரணம். ராஜன் குறை விஸ்தாரமாக பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதி இருந்தார். அதில் கூறியுள்ளபடியே சுப்பிரமணியபுரம் நல்ல படம் தான். உண்மையிலேயே அது ஒரு Trend setter. அதே போல சமுத்திரக்கனியும், சசிக்குமாரும் ஒருவர் இயக்கி மற்றவர் நடித்த சில படங்களும் எந்த குறைகளும்/கறைகளும் இல்லாதவை தான். ஆனால், விவாதத்துக்குரிய இரு படங்களும் சசிக்குமார் நடித்தவை. அவரிடமும், சமுத்திரக்கனியிடமும் உதவி இயக்குனார இருந்தவர்கள் இயக்கியவை. கதையில், திரைக்கதையில் படமாக்கப்பட்ட விதத்தில் சசிக்குமாருக்கு தொடர்பேயில்லை என கண்ணை மூடிக்கொண்டு நாம் இயக்குனர்களை மட்டும் குற்றம் சாட்டிவிடலாம்.  எனவே, நாம் சசிக்குமாரை விட்டுவிட்டு இந்த இரு படங்களையும் மட்டும் விமர்சிப்போம். (சசிக்குமார் நாடோடிகளில் கலப்பு மணத்தை வெளிப்படையாக ஆதரித்ததாக ராஜன் குறை சொன்னதை அப்படியே ஏற்று)

                                    ஆங்கிலத்தில் Camouflage என்பார்கள். நம்மூரில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்போமே அது போல. மேலோட்டமாக பார்த்தால் தெரியாது, ஆனால் ஒரு கருத்து படத்தினூடாக பார்வையாளனின் மனதில் மெல்ல ஏற்றப்பட்டிருக்கும். சுந்திரபாண்டியனில் ஆரம்ப வசனம் ஒரு பொட்டல்வெளியை காட்டி "எவனாவது பாடுபட்டு வளத்துன பொண்ணுக மனச கெடுத்தாக்க அவன வெட்டிக்கூறு போடுற இடமும் இது தான்". ஓரிரு வார்த்தைகள் மாறுபட்டு இருக்கலாம். ஆனால், கவனியுங்கள். இந்த வார்த்தை தேர்வு முக்கியமானது. இதை ராஜன் குறை சொல்வதை போல யதார்த்ததின் பிரதிபலிப்பு என ஏற்றுக்கொள்ளவே இயலாது.

                              இதே வசனத்தை நாம் கொஞ்சம் மாற்றிப்போடுவோம். "இதே எடம் தான் நம் பெண்களை உருகி உருகி காதலிக்கும் அப்பாவி பசங்களை,  நம்ம சாதி வெறியர்கள் வெட்டிப்புதைக்கும் இடம்..." இரண்டு வசனங்களுக்கும் எவ்வளவு மாறுபாடு வருகிறது கவனித்தீர்களா? முன்னது சிலரை குஷிப்படுத்துவதற்கென்றே எழுதப்பட்டது. பின்னது அவர்களை காண்டாக்கிவிடும். இதே போன்ற பல விஷ விதைகள் படம் முழுக்க உள்ளன. சுந்திரபாண்டியனில் கொலை செய்து விட்டு (நண்பன் செய்தது என க்ளைமேக்சில் வரும்) அதை பேசித்தீர்த்துக்கொள்ளும் முறை (ஊர்-ஜாதி பெருசுகள்) ஒரு Camouflage.

                            குட்டிப்புலியில் தன் ஜாதி பெண்களை பிற ஜாதி ஆண்கள் சைட் அடித்தால் கூட (அது போலீஸ் என்றாலும்) தூக்கிப்போட்டு மிதிக்கும் ஹீரோ தன் ஜாதி இளைஞர்கள் நாலு பேரை கூடவே வைத்துக்கொண்டு சைட் அடிக்கிறார், தன் ஜாதி பெண்களை மட்டும். இதில் பொம்பள என ஆரம்பித்து அவர்களை தூக்குவது போல் தூக்கி கீழே எறியும் வசனங்கள் வேறு.

                            இதை ஏன் நான் Camouflage என்கிறேன் என்றால், வினி சர்ப்பனா என்ற ஒரு இளம் பத்திரிக்கையாளர், குட்டிப்பிலியை கிழித்து விட்டு கடைசியாக, ஊர் காவல் தெய்வங்கள் (லோக்கல் சாமிகள்) எப்படி உருவாகிறார்கள் என காட்டியது பாராட்டுக்குரியது என்றிருந்தார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. கவனியுங்கள், படத்தில் கௌரவக் கொலைகள் செய்பவர்கள் குலசாமியாக்கப்படுகிறார்கள். அவர்கள் ஹீரோ ஆக்கப்படுகிறார்கள். இது ஒருவகையான Envisage. நம் மனதில் மறைந்துள்ள சொல்லமுடியாத எண்ணத்தின் வெளிப்பாடு.

                         ஏன் இது யதார்த்தம் அல்ல என்றால், யதார்த்தம் பட்டவர்தனமாக இருக்க வேண்டும். வணிக சினிமாவில் யதார்த்தத்தை எடுத்துக்கொண்டால், நீங்கள் காதலையும், வழக்கும் எண் 18/9யையும், மகாநதியையும் காட்டலாம். இதில் எல்லாம் வணிக சினிமாவுக்கான சில சமரங்கள் இருந்தன என்றாலும் அவை எந்தப்பக்கச்சார்பும் எடுக்காதவை. யாரையும் குஷிப்படுத்தி அதன் மூலம் லாபம் பார்க்கலாம் என்ற நோக்கில் எடுக்கப்படாதவை.



                        சரி இதற்காக சசிக்குமாரை ராமதாசுடன் ஒப்பிட வேண்டுமா எனில் இல்லை என்றே சொல்வேன். என்னை பொறுத்தவரையில் புலியை விட, பசுந்தோல் போற்றிய புலி ஆபத்தானது. ஜாதி வெறியை வெளிப்படையாய் காட்டுபவனை விட, அதை வாழைப்பழத்தில் ஊசி போல வலிக்காமல் சொருகுபவன் ஆபத்தானவன். சசிக்குமார் இதில் வெறும் நடிகர் தான் எனினும், இதில் நடித்ததை அவர் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

           நீங்கள் கேட்கலாம், இது அவ்வளவு ஆபத்தானதா. இந்த படத்தை பார்த்த உடனே எல்லோரும் தெருவில் இறங்கி கௌரவக்கொலை செய்யப்போகிறார்களா என்றால் இல்லை. ஆனாலும் இப்படம் அவ்வாறு செய்பவர்கள் செய்தவர்களுக்கு ஒரு மனோபலத்தை அளிக்கும். நாம் யாரும் இந்தியனையோ , அந்நியனையோ பார்த்து அவர்களைப் போல மாறிவிடவில்லை தான். ஆனால் நம் மனதில் ஒரு சின்ன பாதிப்பை ஒரு ஓரத்தில் அவை ஏற்படுத்தி இருக்கும்.

             இதை இங்கே சொல்ல முக்கிய காரணம். இது தமிழ் சினிமா. இங்கே காலம் காலமாக அரசியல் செய்பவர்கள், முதல்வர்கள் ஆனவர்கள் சினிமா நடிகர்கள், நடிகைகள். இன்றும் எம்.ஜி.ஆர் செத்துட்டார் எனச்சொன்னால் அடிக்கும் கிராமங்கள் உள்ளன. இன்னமும் எம்,ஜி,ஆர் சமாதியில் காதை வைத்து அவர் வாட்சு ஓடுதா, அவர் எதாவது பேசுவாரா எனக்கேட்கும் ஜனக்கும்பல் உள்ளது. இப்படி சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்து நோக்கத்தெரியாத நல்ல சினிமா எதுவென்றே அறியாமல், மசாலா குப்பைகளை ரசித்துப்பழகிய ஒரு சமூகத்தில் இப்படம் நிச்சயம் ஆபத்தானது தான். குப்பை தான். ஒதுக்கித்தள்ள வேண்டியது. நல்லதை மட்டும் எடுக்குமளவு நம் சமூகமின்னும் வளரல சாமி.
                       

Saturday, February 2, 2013

எனக்கு பவர் ஸ்டாரை பிடிக்காது!

         ஒரு காலத்தில் பவர் ஸ்டார் என கூகுளில் தேடினால் "பவன் கல்யாணின்" போட்டோக்கள் வந்துவிழும். தெலுங்கில் நீண்ட நாளாக அவர் தான் பவர் ஸ்டார். சிறிது காலம் முன்பு, தெலுங்கில் இப்படி ஒருவர் இருப்பது கூட தெரியாமல், தமிழ் படங்களின் ஒருவர் தலைகாட்டினார், தமிழ் படமென்றால், யாருமே பார்க்காத, அவர் மட்டுமே எடுத்து பார்க்கக்கூடிய படங்கள். அவர்...இவர்...



          பவர் ஸ்டாரை பற்றி நீண்ட நாட்களாகவே எழுத வேண்டும் என நினைத்திருந்த பதிவு இது. கண்ணா படம் வந்த போது எழுதினால் பத்தோடு பதினோன்றாக ஆகிவிடக்கூடும் என்பதாலும் நேரமின்மையாலும் இவ்வளவு லேட்.

      எனக்கு லட்டு படம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரிரு இடங்களைத்தவிர எங்குமே சிரிப்பு வரவில்லை. சுத்த அடாசு. ஆனாலும், படம் ஹிட். முன் பின் தெரியாத முதல் பட நடிகரை (லத்திகா எத்தனை பேர் பார்த்தீர்கள்??) கண்டவுடன் விசில் பறக்கிறது. ரஜினி, கமல் எல்லாம் அடைந்த கலை உச்சங்களை அவர் தொட்டுவிடவில்லை தான். ஆனால், இவர்களில் யாருக்கும் முதல் படத்தில் இப்படியொரு கைத்தட்டல் நிச்சயம் கிடைத்ததில்லை. எனக்கு பவர் ஸ்டாரையும் பிடிக்காது. அவருக்கென நடிப்போ, அதற்கேற்ற உடலசைவுகளொ வேறெதுவுமோ இல்லை. அவர் ஒரு "நடிகராக" ஜெயிக்கவில்லை. பிற்காலத்தில் அவர் நடிப்புத்திறமையை மெருகேற்றிக்கொள்ளவேண்டும் என ஜெமோ போன்ற  நிகழ் கால சினிமா கடவுள்களை வேண்டிக்கொள்கிறேன்.

         பவர் ஸ்டார் அடைந்த உச்சம் குறித்தோ, அவரின் நிலை குறித்தோ எதுவும் நான் சொல்லப்போவதில்லை. ஆனால், பவரின் இன்றைய நிலை மிக முக்கியமான இரண்டு தரவுகளை நமக்கு உரக்கச்சொல்கிறது.

     ஒன்று இணையத்தின் வளர்ச்சி. ஒரு வேளை பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை இல்லாதிருந்தால் லத்திகாவோ, பவர் ஸ்டாரோ சுத்தமாக கவனிக்கப்படாமலேயே தான் போயிருப்பார்கள். தன்னை தானே ஹீரோ என்று அழைத்துக்கொண்டு இவர் செய்த காமெடிக்களுக்கென இவரை ஓட்ட ஒரு பட்டாளம் உருவானது. கிஞ்சித்தும் சீரியஸ்னெஸ் இன்றி இவர் சீரியஸாகவே பேசுவது போல பேசிக்கொண்டிருப்பதை கிண்டல் அடிக்க அதன் மூலம் தன் கெத்தை உயர்த்திக்கொள்ள என முக நூலில் ஸ்டேட்டஸுகள் பறந்தன. இதில் இரண்டு விதமான ஸ்டேட்டஸுகளை பார்க்க முடிந்தது. ஒன்று, இவன் யாரடா கோமாளி என ஏளனம் செய்யும் வண்ணம் ஆரம்பித்த ஸ்டேட்டஸுகள். இரண்டாவது, ரஜினி ஜோக்குகள் பாணியில் வஞ்சப்புகழ்ச்சிகள்.

உதாரணத்திற்கு ஒன்று,

பவர் ஸ்டார் ஒரு நாள் விமானத்தில் இருந்து தன் பர்ஸை கீழே விட்டுவிட்டார்,

ஸ்விஸ் பேங்க் உருவானது.

இது ஒரு பழைய ரஜினி ஜோக். பவர் ஸ்டாருக்காக தூசு தட்டப்பட்டு எடுக்கப்பட்டது. எப்போதுமே மனித மனம், தன்னை விட ஒருவனை கீழாக நினைக்க, அல்லக்கையாக பார்க்க, தான் ஓட்டினால் கேட்டு சகித்துக்கொள்ள ஒருவனை தேடுகிறது. சிக்கியவர் பவர் ஸ்டார். அது முக்கியமல்ல. இணையத்தின் வீச்சம் எந்த அளவு இருக்கிறது என்று பார்த்தீர்களா?


        இப்போஸ்டரை அடித்தவர்கள், இவரின் நடிப்புத்திறமையை பார்த்து ரசிகர்களானவர்களா?

   ஆனால் இதையே சாக்காக வைத்துக்கொண்டு, இணையத்தை வைத்து ஒரு புரட்சி உருவாவது (எகிப்து, துனிசியா, இரான் எலெக்ஷன்) போல நடக்குமா என்று கேட்காதீர்கள். ஒரு பொது மொழி வேண்டும் அதற்கு. அதற்கும் மேல் இப்படி ஒவ்வொருவருவரும் தனக்கென படித்தோ படிக்காமலோ தெரிந்தோ கேட்டோ வைத்திருக்கவேண்டுமே என ஒரு கருத்து வைத்திருக்கவும் கூடாது.

இரண்டாவது முக்கியமான விஷயம், இவர் வெற்றி பெற்ற வழி. உங்களுக்கு எதில் அதிக கூச்சம்? மேடையில் பேசுவதிலா? மனைவியின் அப்பாவோடு உரையாடுவதிலா? நடனமாடுவதிலா? மற்றவர்கள் முன் மனைவியை செல்லப்பெயர் சொல்லி அழைப்பதிலா? இப்படி நிச்சயமாக ஏதேனும் ஒரு கூச்சத்தால் நீங்கள் அவதிப்பட்டிருப்பீர்கள். யாராவது ஓட்டுவார்களோ என ஏதேனும் ஒரு விஷயத்தை நிச்சயம் செய்யாமல் விட்டிருப்பீர்கள்.

     ஆனால், எத்தனை பேர் அதை விடாப்பிடியாய் முயன்று இருக்கிறோம்? அதைத்தான் செய்தார் பவர் ஸ்டார். ஆங்கிலம் பழகும் ஒருத்தியை "பீட்டர் டா" நாம் கிண்டலடிப்பது போலத்தான் பவர் ஸ்டாரும் கிண்டலடிக்கப்பட்டார். ஆனால், இப்படி ஒரு மனிதன் சீரியஸான ஒரு முகமே இல்லாமல், நிஜ வாழ்க்கையில் கூட காமெடியாகவே வாழ்ந்துவிட முடியுமா என ஆச்சரிப்படும்படியாக இன்று வரை ஒரு இடத்தில் கூட எந்த வித எடக்குமடக்கான கேள்விகளுக்கும் கூட சிரித்த படியே பதில் அளிக்கிறார்.

      யாரோடு நடிக்க விருப்பம் என்றால் "ஐஸ்வர்யா" என்கிறார். ரஜினி எனக்கு போட்டி என்கிறார். நியாமாக கோபம் வர வேண்டிய நமக்கு சிரிப்பு வருகிறது. காரணம், சொல்லும் போது அவருடைய பாடி லேங்குவேஜ் அப்படி. அது ஒரு நகைச்சுவை என எல்லோராலும் எடுத்துக்கொள்ள முடிகிறது. அவர் தனக்கு உருவாக்கிக்கொண்ட பிம்பம் அப்படிப்பட்டது. சினிமாக்களில் செந்திலை பார்த்து இப்படி நிஜ உலகில் கவுண்டமணி போன்ற ஒருவர் இருந்தால் கூட செந்தில் போல ஒருவர் இருக்க முடியுமா? என்று தானே எண்ணி இருந்தோம். இதோ, நிஜ உலகில் ஒருவர், தன் மேல் எந்த ஒரு அறிவு ஜீவி பிம்பத்தையும் தரிக்காமல், சிரிப்பு முலாம் பூசிக்கொண்டு நிற்கிறார். இவர் விதூஷகர் கூட இல்லை. ஆனாலும், எல்லோருக்கும் இவரை பிடிக்கிறது. சர்கஸில் கோமாளியை ரசிப்பது போல, எள்ளல் செய்தாவது பவர் ஸ்டாரை ரசிக்கிறோம்.

   நம்மை பொறுத்த வரை பவர் ஸ்டாரை ஓட்டியது, கலாய்த்தது எல்லாமே " நமக்கு ஒரு அடிம சிக்கீட்டாண்டா" பாணியில் செய்யப்பட்டவை. ஆனால், அவரோ அலட்சியமாக சற்றும் பொறுமை குறையாமல் ( நம்ம கோட்டு கோபி விடாப்புடியா ட்ரை பண்ணியும் கூட) இப்போது நினைத்ததை முடித்து விட்டார். இப்போது ஷங்கரின் "ஐ"யில் முக்கிய கதாப்பாத்திரம் பவர் ஸ்டார். அவர் இன்னமும் சில ஆண்டுகளில் காணாமல் போய் விடுவார் (இதே திறமையோடு எதையும் வளர்த்துக்கொள்ளாமலிருந்தால்). ஆனால், அவர் கற்றுக்கொடுத்த பாடம் முக்கியமானது.

"என்ன நீ கிறுக்கன்னு நெனச்சு கலாய்ச்ச, நான் உன்ன லூசு ஆக்கி பாசு ஆகி போயிட்டே இருக்கேன்"