Flipkart

Amazon

Amazon

Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, October 28, 2014

ரமணா > கத்தி - ஏன்?

குறிப்பு :  கத்தி படத்தை ஏற்கனவே பலர் கிழித்து, கொண்டாடி எல்லாம் தொங்கவிட்டாயிற்று. விஜயை பகடி செய்வதோ, வெற்றி என கொக்கரிப்பதோ, கோக்ககோலாவில் நடிச்சுட்டு இத சொல்லலாமா என பொங்குவதோ இப்பதிவின் நோக்கமல்ல. இது 'சினிமா' விமர்சனம்.

               போதிய நேரமில்லாத காரணத்தால், முதலில் கதை மற்றும் அதன் கருவை விவாதித்து விட்டு பின் திரைக்கதையை அலசலாம். வழக்கம் போல ஒரு மிக வலிமையான கரு. விவசாயம் எப்படி உலகமயமாக்கலால் அழிகிறது. ஒரு விவசாய கிராமம். அதனிடம் இருக்கும் ஒரு வளம், அதாகப்பட்டது விவசாயத்திற்கு அடிப்படையான தண்ணீர். அதை உறிஞ்ச துடிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். உண்மையிலேயே வலுவான கதைக்கரு தான். தண்டகாரன்ய காடுகளில் தொடங்கி நக்சலைட்டுகளுக்கான அடிப்படை காரணம் வரை, உலகமயமாக்கலின் பின்னான வளச்சுரண்டலில் உரைந்திருக்கிறது.

             கத்தியின் திரைக்கதைக்கு முன் ரமணாவின் திரைக்கதையை யோசித்துப்பாருங்கள். முதல் காட்சியில் இருந்தே செட்டிங் தி ஸ்டேஜ் அது. விஜயகாந்த்தின் கேரக்ட்டரைஷேசன் மெல்லமாய், அழுத்தமாய் பதிவு செய்யப்படும். அது ஏன் என ஒரு சின்ன கேள்விக்குறி நமக்குள் விழுந்து அது விஸ்வரூபம் எடுக்கையில் ஒரு ப்ளாஷ் பேக்.  ரமணாவின் முக்கிய ப்ளஸ், அதன் திரைக்கதை தான். எல்லா கேரக்டர்களுக்கும் வேண்டிய முக்கியத்துவம் கொடுத்து, அந்த கேரக்டர் தனது குணாதிசயத்தை கடைசி வரை கொண்டிருப்பது போன்ற திரைக்கதை. எத்தனை கூஸ் பம்ப் மொமெண்ட்ஸ்? மருத்துவமனையில் பிணத்துக்கு வைத்தியம் பார்ப்பது தொடங்கி, "We are not sentimental fools" வரையில். யூகி சேது கேரக்டருக்கு எத்தனை வலு?  நீங்களே ஒவ்வொரு சீனாய் நினைத்துக்கொள்ளுங்கள். சுமாராய் நடிக்கக்கூடிய யார் நடித்திருந்தாலும் ஹிட் அடித்திருக்கும். நல்ல திரைக்கதை அது.

             ஆனால், இதையே கத்திக்கு பொருத்தி பார்த்தால் தெரியும். பார்வையாளன் தியேட்டருக்கு வந்த முதல் 10 நிமிடத்தில் அவனை கதைக்குள் இழுக்க வேண்டும் என்கிறார் சிட் பீல்ட். சமந்தா கால்ஷீட் இருப்பதற்காவும், பாட்டு படத்தில் வேண்டும் என்பதற்காவும் ஏனோ தானோவென 40 நிமிடங்களை சுட்டுத்தள்ளி இருக்கிறார் முருகதாஸ். சதீஷின் காமெடி, சமந்தாவின் லவ் சீன்ஸ் எல்லாம் விமர்சனம் செய்யக்கூட லாயக்கில்லாதவை. அப்படி வேண்டுமென்றால் கொஞ்சம் யோசித்து காதலை எழுதத்தான் உங்களுக்கு என்ன தயக்கம்? கஜினியைத் தவிர மத்த எல்லா படங்களிலும் முருகதாஸின் காதல் போர்ஷன் மொக்கை தான். காதலுக்கும், கிறுக்குப்பிடிப்பதற்கும் இருக்கும் அந்த நூல் அளவு வித்தியாசத்தை அவர் கவனிக்க தவறிவிடுகிறார் போலும்.

          இரண்டாவது விஜயையின் இன்ட்ரோ அபத்தத்தின் உச்சம். ஐந்து பேர் ஆளுக்கு நான்கு முறை சுட்டும் ஒரே தோட்டா தான் பாய்கிறது. அவரையும் காப்பாற்றி விடுகிறார்கள். அவர் ஏன் இராவில் காய்கறி எடுத்துப்போனார் என்பதற்கு லாஜிக் வேறு. படம் ஆரம்பிப்பதே அந்த ப்ளாஷ் பேக் சீனில் தான். ஆனால், அந்த ப்ளாஷ் பேக்கில் தற்கொலை கூஸ் பம்ப் மட்டும் இல்லையெனில் படமே விழுந்திருக்கும். யோசித்து பாருங்கள். 37 வயது ஆள் இன்னமும் காலேஜ் பிரண்ட்ஸோடு, ப்ரபசரோடு ஊருக்குள் சும்மா இருக்கிறாரா? இதற்கு அவர் வெளி நாடு போய் விட்டு ஊருக்கு வந்தவர் என்றாவது காட்டி இருக்கலாம். 22 வயதில் கல்லூரி முடித்திருப்பார். 15 வருடங்களாய் என்ன செய்தார்? சரி. முதல் சீனில் அவரை கிஞ்சித்தும் மதிக்காத கிராமத்து ஆட்கள் அடுத்த சீனிலேயே அவரை தலை மேல் தூக்கி வைக்கின்றனர். இதெல்லாம் விஜய் என்ற ஒற்றை மனிதனால் தெரியாமல் போனது. வேறு யாரென்றாலும் இந்தக்குறைகள் பெரிதாய் தெரிந்திருக்கும். செம்ம வீக்கான திரைக்கதை. Character establishment இன்னமும் மிக வலுவாய் செய்யப்பட்டிருக்க வேண்டிய பாத்திரம் ஜீவா.

       ஊரில் பிறந்தது முதல் இருப்பவர் கல்லூரி நண்பர்களிடம் தான் இது யார் நிலம் என்பாரா? இந்த நண்பர்கள், ஊர் இளசுகள் எல்லாம் சென்னை வந்து இவர் கேஸ் நடத்த உதவ மாட்டார்களா? கூலி வேலைக்கு போறது ஓக்கே. ஆனா ஒருத்தர் கூடவா இவர் கூட இருக்க மாட்டாங்க? அதென்ன கூலி வேலை மட்டும், ஒரு கம்ப்யூட்டர் தட்டுறவன் கூடவா ஊர்ல உருவாகி இருக்க மாட்டான், விஜயை தவிர?
         விவசாயிக்கு தெரிந்த ஒரே வழி என தற்கொலை செய்வது செம்ம சீன். இதன் பிறகு அப்படியே ஜம்ப் அடித்தால் அந்த பைப் சீக்வன்ஸ் மட்டும் தான் அடுத்த கூஸ் பம்ப் சீன். இடையில் வரும் சில்லறை தூக்கிப்போடும் சண்டை, மற்ற எல்லா சண்டைகளும் எடுக்கணுமேன்னு எடுத்தது. 90களின் டெக்னிக். இந்த சண்டை எல்லாம் பில்லர்ஸ். இதே நேரத்தில் ரமணாவில் எவ்வளவு பரபரப்பாய் திரைக்கதை சுழன்று கொண்டிருந்தது என்பதை நினைவில் நிறுத்தவும்.

     இந்த இடத்தில் இரண்டு விஷயங்கள். பெரு-நகர மக்களை நேரடியாய் தங்கள் அக்கறையின்மைக்காய் குற்றம் சாட்டியதை பாராட்டியே ஆக வேண்டும். பலர் இந்த இடத்தில் சுற்றி வளைத்திருப்பார்கள். ஆனால், வழக்கம் போல ஒற்றை மனிதத்தீர்வை முன்வைத்ததை தவிர்த்திருக்கலாம். இது வணிக சினிமா, தீர்வு எல்லாம் தரவில்லை என்பவர்களுக்கு, இதையே ஜெண்டில் மேனுக்கு சொல்லலாமா? சிவாஜிக்கு? இதெல்லாம் சமூக பிரஞ்ஞை இல்லாதவர்களுக்கு நஞ்சு. இவங்க தான் நாளைக்கு ஓட்டுப்போடப்போற மாஸ்.

   இந்த இடத்தில் பேசப்பட்டதில் முக்கால்வாசி நம்மாழ்வாருடையது. குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், திமுகவை மட்டும் நைசா தாக்கி, ஜெவை விட்டது கயவாளித்தனம். அதே போல அந்த கம்யூனிச டயலாக் அவசியமில்லாத இடைச்செருகல். ஆனால், இதை எல்லாம் விட்டுவிடலாம். ஏன் எனில் இது பணம் செய்ய எடுக்கப்பட்ட சினிமா, மாற்று சினிமாவோ, டாக்குமெண்ட்ரியோ அல்ல என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். விவசாயத்திற்கு இது ட்ரிப்யூட் என படத்தை பார்க்க சொன்னால் அது கயவாளித்தனம். திருப்பூரில் ஞாயிறு அன்று ஒரு டிக்கெட்150 ப்ரோ. ஒரு கிலோ அரிசியோட கொள்முதல் வெலை என்ன?

திரைக்கதையை பொறுத்த வரை, தற்கொலை சீன், பேட்டி சீன் இரண்டும் இடையே திணிக்கப்பட்ட சீன்கள். அவற்றில் அவ்வளவு கற்பனை வறட்சி. எதிர்பார்த்த க்ளைமேக்ஸ்.

விஜயை தவிர்த்து ஒரு சிறு நடிகர் நடித்திருந்தால் இந்த படத்தின் நிலை என்ன? ஏன் விஜயகாந்த் என வைத்துக்கொள்வோம். என்னவாகியிருக்கும்? ஒரு சுமாரான கமர்சியல் படம், திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால், நல்ல படமாய் இருந்திருக்கும் என்பதைத்தவிர கொண்டாட, கிண்டலடிக்க கூட படத்தில் ஏதும் இல்லை.

பிகி : செல்பி புள்ள பாடலுக்கு முந்தைய சீனுக்காவே இந்த படத்தை சுமார் படம் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.

Monday, September 29, 2014

மெட்ராஸ் - விமர்சனம்

மெட்ராஸ்

பெங்களூரு வந்து கிட்டத்திட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. நேற்று இரண்டாம் ஆட்டம்  முடித்துவிட்டு வரும் போது நண்பன் ஒருவனிடம் சென்னை-பெங்களூரு ஓப்பீடு பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அலுவலகத்தில் எப்போதும் ஓடும் டாப்பிக். தமிழர்கள் அல்லாதவர்களிடம் மெட்ராஸ் குறித்த ஒரு பிம்பம் உண்டு. தமிழ் இல்லன்னா பிழைக்க முடியாத ஒரு ஊர் அது. சென்னை ஹீட்டுப்பா... எனக்கு பெரிதாக ஸ்டீரியோடைப்புகளில் நம்பிக்கை இல்லை என்பதால் சண்டை வராது. சிரித்துக்கொண்டே போய்விடுவேன்.

நேத்து நண்பன் சொல்லிக்கொண்டிருந்தான். இங்கு எல்லாருக்குமே தமிழோ இந்தியோ தெரியுது. பிரச்சனை இல்லாத ஊர்ண்ணே. என் ஆபிசிலும் இதே தான் சொல்வார்கள். சென்னையில் ஹிந்தி பேசி பிழைக்க முடியாது. பெங்களூரில் கன்னடாக்காரர்களை பார்க்கவே முடிவதில்லை. எல்லாம் பெயர்ந்தவர்கள். இங்கே இருந்த மண்ணின் மைந்தர்கள், வீடு நிலம் மூலம் செட்டில் ஆனவர்கள் ஆனாலும் சரி, தங்கள் மொழி சார்ந்த அடையாளத்தை முற்றிலும் துடைத்தெறிந்து விட்டு வாழ்கிறார்கள். சினிமா, இலக்கியம் என எந்தக்கன்னடத்  தொடர்பும் அவர்கள் மொழி அடையாளத்தை உயிர்ப்புடன் வைக்கும் அளவு இல்லை. இந்த தலைமுறையினருக்காவது சற்று வருத்தம் இருக்கிறது. ஒரு இருபதாண்டுகள் கழித்தால், பெங்களூரில் பெங்களூரியன்ஸ் மட்டும் தான் இருப்பார்கள்.

மன்னிக்கவும். மெட்ராஸ் விமர்சனம் இடத்தான் ஆரம்பித்தேன். முன்னுரை கொஞ்சம் லெந்த்தா போச்சு.




சென்னை பல ஊர்களில் வந்து குவிந்த மக்களின் வாழ்வாதாரம். கட்டிடத்தில் பணிபுரியும் கூலிகள் தொடங்கி ஐடியில் ஐடி கார்டோடு திரியும் கூலிகள் வரை. ஆனால், மெட்ராஸ் அது வேறு. மெட்ராஸ், மெட்ராஸ்காரர்களின் ஊர். புளியந்தோப்பு - தலித்துகள் வாழும், அல்லது அவர்கள் வாழ பணிக்கப்பட்ட பகுதி. ஒரு சுவரை மையமாக வைத்து, அதிகாரத்திணிப்பை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறார் ரஞ்சித்.

தமிழ் பிரபாவின் விமர்சனத்தை கீழே பகிர்ந்துள்ளேன். வரிக்கு வரி நான் எழுத நினைத்ததையும், மேலும் சில வட சென்னை அத்தெண்டிக் அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளதால், விடுபட்டவையை மட்டும் நான் சொல்கிறேன்.

தமிழ் பிரபாவின் விமர்சனம் : https://www.facebook.com/prabha.prabakaran/posts/807940465924748

 பொதுவாக எனக்கு கார்த்தியின் முகம் அலர்ஜி. தெலுங்கு பாணி நடிப்பு அவருடையது. இப்படத்திலும் க்ளைமேக்ஸில் ஸ்கூல் பாடம் உட்பட சில இடத்தில் சிரிப்பு வந்தாலும், ஓரளவு சமாளிக்கிற அளவு ஒன்றியிருக்கார். வட சென்னையின் முகத்தை மிக யதார்த்தமான ஒரு கோணத்தில் காட்டியிருக்கிறார் ரஞ்சித். எல்லாருக்கும் இதில் புரிந்தது மேலோட்டமாய் தலித் அரசியல் - அதிகார அடக்குமுறை மட்டும் தான். எனக்குத்தெரிந்து ரஞ்சித் நுட்பமாய் சொன்னவை/ நான் ரசித்தவை :

1. அம்மக்களிடம் பொங்கும் காதலும், கனவுகளும் - அன்பும், அவன் மனைவியும் மோகம் கொள்ளும் இடங்கள் அனைத்துமே காதலின் உச்சம். எளிய மனிதர்களின் காதலை இதைவிடச்சிறப்பாக சொல்லிவிட முடியுமா எனத்தெரியவில்லை. பையனை புட் பால் பிளேயர் (கால்பந்து வீரன் :-) ) ஆக்குவது தொடங்கி எத்தனை கனவுகள்?

2. கலை. நடனக்குழு, புட்பால், கேரம் என விளையாட்டுகள். எல்லா ஏரியாவிலும் இக்குழுக்களில் திறமைமிக்க எத்தனையோ இளைஞர்கள் இருப்பார்கள். இதைப்பெரும்பாலும் வெறும் சீன் பேக் ட்ராப்பாக மட்டுமே நம்மாட்கள் பயன்படுத்தி வந்தார்கள். ரஞ்சித் கதையோட்டத்தில் அதை இணைத்துள்ளார் - முக்கியமாய் நடனம், புட்பால், கானா.

3. அரசியல் எப்போதுமே ஆடு புலி ஆட்டம் தான். புலிகள் ஆடுகளை மோதவிட்டு வழியுமவற்றின் குருதியை நக்கிக்குடிக்கும் ஆட்டம். மேலிருக்கும் புலிகளுக்கு எல்லாருமே ஆடுகள் தான். தலித் அடையாள அரசியலைத் தாண்டி, மாரி - சேது கூட்டணி, மாரியை போட்டுத்தள்ளிவிட்டு விஜி மேலே வருவது, யார் வந்தாலும் சுவர் தன்னிடம் இருக்கவேண்டுமென நினைக்கும் சேது, அதற்கு மேல், கீழே உள்ள நிலைமை தெரிந்தும் கூட்டணி வைக்கும் தலைவர்கள் (எனக்கு விசி-பாமக ஒரு கூட்டணியில் இருந்ததை குத்தியதாக தெரிந்தது) என ஒரு படி கீழே இருப்பவன் ஆடாகத்தான் பாவிக்கப்படுகிறான்.

4. முதலிலேயே புள்ள குட்டிய படிக்க வைங்கடா என யதார்த்தமாக சொல்லும், ஜாலி இளைஞனாக, கொலை செய்து விட்டு பின் அவ்ளோ தானாடா என பினாத்தும் போதும் நன்றாகவே நடித்திருக்கிறார் கார்த்தி.

5. ஜானி பற்றி ஊரே சிலாகித்து விட்டது. தொப்பி எட்த்துக்கிரேன் பாஸூ... ஹேட்ஸ் ஆஃப் ஜானி :)

                      மொத்தமாக வட சென்னையின் கனவுகள், காதல், அவ்விளைஞர்களின் திறமைகள், அவர்கள் வாழ்க்கைப்பாதையென அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி, அதன் முன் நிற்கும் வரலாற்றின் நெடிய தொடர் சங்கிலி சவால்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தியதால் மெட்ராஸ் மிக முக்கியமான படம்.

                 இன்னொரு பக்கம். பரபரக்கிற ஸ்க்ரீன் ப்ளே. அரசியல் சதுரங்கத்தின் சோல்ஜர்-மந்திரி ஆட்டம், மிக யதார்த்தமான ஒரு காதல், அட்டகாசமான சந்தோஷ் நாரயணின் பிண்ணனி, பாடல்கள் என ஒரு பக்கா கமிர்ஷியல் ஹிட். இதற்காக சில ட்ரேட் ஆஃப்களை ரஞ்சித் செய்திருந்தாலும் அது ஓக்கே தான்.

படம் முடிந்தவுடன் என் நண்பனிடம் இதைத்தான் சொன்னேன்

"ஆரண்ய காண்டம் ஒரு கல்ட் க்ளாசிக்காகி விட்டது, மற்றபடி சென்னை இளைஞர் பாத்திரத்தை கதா நாயகனாக கொண்ட படங்களெல்லாம் கமர்சியல், மெட்ராஸ் இரண்டுக்கும் இடையிலான பேலண்ஸ்"

பாரட்டுக்கள் ரஞ்சித், சந்தோஷ் நாராயண், முரளி. லாங்க் வே டு கோ.


Tuesday, June 4, 2013

சாதியம் நோக்கி அடி எடுக்கும் தமிழ் சினிமா - மற்றுமொரு பக்கம் 6

                                            வினையூக்கியின் கட்டுரை போட்டிக்கு கட்டுரைகளை சமர்பிக்க இன்னமும் 10 நாட்களே உள்ளன. அதற்காக படித்தும் எழுதியும் கொண்டிருக்கும் போது நேற்று முக நூலில் அருண் (தமிழ் ஸ்டுடியோ) எழுதிய குட்டிப்புலி விமர்சனமும் அதற்கு பலர் ஆற்றிய எதிர்வினைகளையும் காண நேர்ந்தது. அதில் முக்கியமான எதிர்வினை ராஜன் குறையினுடையது. ஏன் இதை முக்கியம் என குறிப்பிடுகிறேன் என்றால், அவர் பொதுபுத்தியின் பாற்பட்ட விமர்சனம் என்கிறார். தமிழ் ஸ்டுடியோ அருண் தனது விமர்சனத்தில் சசிக்குமாரை ராமதாசோடு ஒப்பிட்டு அவரை மிக ஆபத்தானர் என குறிப்பிட்டு இருந்தார். இன்னொரு பக்கம்  நண்பர் அதிஷா குட்டிப்புலியை பார்த்துவிட்டு கதறி இருந்தார்.

                                     குட்டிப்புலியை விமர்சிக்கும் பணியை தூசு தட்டி எடுக்க இப்பதிவுகளே காரணம். ராஜன் குறை விஸ்தாரமாக பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதி இருந்தார். அதில் கூறியுள்ளபடியே சுப்பிரமணியபுரம் நல்ல படம் தான். உண்மையிலேயே அது ஒரு Trend setter. அதே போல சமுத்திரக்கனியும், சசிக்குமாரும் ஒருவர் இயக்கி மற்றவர் நடித்த சில படங்களும் எந்த குறைகளும்/கறைகளும் இல்லாதவை தான். ஆனால், விவாதத்துக்குரிய இரு படங்களும் சசிக்குமார் நடித்தவை. அவரிடமும், சமுத்திரக்கனியிடமும் உதவி இயக்குனார இருந்தவர்கள் இயக்கியவை. கதையில், திரைக்கதையில் படமாக்கப்பட்ட விதத்தில் சசிக்குமாருக்கு தொடர்பேயில்லை என கண்ணை மூடிக்கொண்டு நாம் இயக்குனர்களை மட்டும் குற்றம் சாட்டிவிடலாம்.  எனவே, நாம் சசிக்குமாரை விட்டுவிட்டு இந்த இரு படங்களையும் மட்டும் விமர்சிப்போம். (சசிக்குமார் நாடோடிகளில் கலப்பு மணத்தை வெளிப்படையாக ஆதரித்ததாக ராஜன் குறை சொன்னதை அப்படியே ஏற்று)

                                    ஆங்கிலத்தில் Camouflage என்பார்கள். நம்மூரில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்போமே அது போல. மேலோட்டமாக பார்த்தால் தெரியாது, ஆனால் ஒரு கருத்து படத்தினூடாக பார்வையாளனின் மனதில் மெல்ல ஏற்றப்பட்டிருக்கும். சுந்திரபாண்டியனில் ஆரம்ப வசனம் ஒரு பொட்டல்வெளியை காட்டி "எவனாவது பாடுபட்டு வளத்துன பொண்ணுக மனச கெடுத்தாக்க அவன வெட்டிக்கூறு போடுற இடமும் இது தான்". ஓரிரு வார்த்தைகள் மாறுபட்டு இருக்கலாம். ஆனால், கவனியுங்கள். இந்த வார்த்தை தேர்வு முக்கியமானது. இதை ராஜன் குறை சொல்வதை போல யதார்த்ததின் பிரதிபலிப்பு என ஏற்றுக்கொள்ளவே இயலாது.

                              இதே வசனத்தை நாம் கொஞ்சம் மாற்றிப்போடுவோம். "இதே எடம் தான் நம் பெண்களை உருகி உருகி காதலிக்கும் அப்பாவி பசங்களை,  நம்ம சாதி வெறியர்கள் வெட்டிப்புதைக்கும் இடம்..." இரண்டு வசனங்களுக்கும் எவ்வளவு மாறுபாடு வருகிறது கவனித்தீர்களா? முன்னது சிலரை குஷிப்படுத்துவதற்கென்றே எழுதப்பட்டது. பின்னது அவர்களை காண்டாக்கிவிடும். இதே போன்ற பல விஷ விதைகள் படம் முழுக்க உள்ளன. சுந்திரபாண்டியனில் கொலை செய்து விட்டு (நண்பன் செய்தது என க்ளைமேக்சில் வரும்) அதை பேசித்தீர்த்துக்கொள்ளும் முறை (ஊர்-ஜாதி பெருசுகள்) ஒரு Camouflage.

                            குட்டிப்புலியில் தன் ஜாதி பெண்களை பிற ஜாதி ஆண்கள் சைட் அடித்தால் கூட (அது போலீஸ் என்றாலும்) தூக்கிப்போட்டு மிதிக்கும் ஹீரோ தன் ஜாதி இளைஞர்கள் நாலு பேரை கூடவே வைத்துக்கொண்டு சைட் அடிக்கிறார், தன் ஜாதி பெண்களை மட்டும். இதில் பொம்பள என ஆரம்பித்து அவர்களை தூக்குவது போல் தூக்கி கீழே எறியும் வசனங்கள் வேறு.

                            இதை ஏன் நான் Camouflage என்கிறேன் என்றால், வினி சர்ப்பனா என்ற ஒரு இளம் பத்திரிக்கையாளர், குட்டிப்பிலியை கிழித்து விட்டு கடைசியாக, ஊர் காவல் தெய்வங்கள் (லோக்கல் சாமிகள்) எப்படி உருவாகிறார்கள் என காட்டியது பாராட்டுக்குரியது என்றிருந்தார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. கவனியுங்கள், படத்தில் கௌரவக் கொலைகள் செய்பவர்கள் குலசாமியாக்கப்படுகிறார்கள். அவர்கள் ஹீரோ ஆக்கப்படுகிறார்கள். இது ஒருவகையான Envisage. நம் மனதில் மறைந்துள்ள சொல்லமுடியாத எண்ணத்தின் வெளிப்பாடு.

                         ஏன் இது யதார்த்தம் அல்ல என்றால், யதார்த்தம் பட்டவர்தனமாக இருக்க வேண்டும். வணிக சினிமாவில் யதார்த்தத்தை எடுத்துக்கொண்டால், நீங்கள் காதலையும், வழக்கும் எண் 18/9யையும், மகாநதியையும் காட்டலாம். இதில் எல்லாம் வணிக சினிமாவுக்கான சில சமரங்கள் இருந்தன என்றாலும் அவை எந்தப்பக்கச்சார்பும் எடுக்காதவை. யாரையும் குஷிப்படுத்தி அதன் மூலம் லாபம் பார்க்கலாம் என்ற நோக்கில் எடுக்கப்படாதவை.



                        சரி இதற்காக சசிக்குமாரை ராமதாசுடன் ஒப்பிட வேண்டுமா எனில் இல்லை என்றே சொல்வேன். என்னை பொறுத்தவரையில் புலியை விட, பசுந்தோல் போற்றிய புலி ஆபத்தானது. ஜாதி வெறியை வெளிப்படையாய் காட்டுபவனை விட, அதை வாழைப்பழத்தில் ஊசி போல வலிக்காமல் சொருகுபவன் ஆபத்தானவன். சசிக்குமார் இதில் வெறும் நடிகர் தான் எனினும், இதில் நடித்ததை அவர் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

           நீங்கள் கேட்கலாம், இது அவ்வளவு ஆபத்தானதா. இந்த படத்தை பார்த்த உடனே எல்லோரும் தெருவில் இறங்கி கௌரவக்கொலை செய்யப்போகிறார்களா என்றால் இல்லை. ஆனாலும் இப்படம் அவ்வாறு செய்பவர்கள் செய்தவர்களுக்கு ஒரு மனோபலத்தை அளிக்கும். நாம் யாரும் இந்தியனையோ , அந்நியனையோ பார்த்து அவர்களைப் போல மாறிவிடவில்லை தான். ஆனால் நம் மனதில் ஒரு சின்ன பாதிப்பை ஒரு ஓரத்தில் அவை ஏற்படுத்தி இருக்கும்.

             இதை இங்கே சொல்ல முக்கிய காரணம். இது தமிழ் சினிமா. இங்கே காலம் காலமாக அரசியல் செய்பவர்கள், முதல்வர்கள் ஆனவர்கள் சினிமா நடிகர்கள், நடிகைகள். இன்றும் எம்.ஜி.ஆர் செத்துட்டார் எனச்சொன்னால் அடிக்கும் கிராமங்கள் உள்ளன. இன்னமும் எம்,ஜி,ஆர் சமாதியில் காதை வைத்து அவர் வாட்சு ஓடுதா, அவர் எதாவது பேசுவாரா எனக்கேட்கும் ஜனக்கும்பல் உள்ளது. இப்படி சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்து நோக்கத்தெரியாத நல்ல சினிமா எதுவென்றே அறியாமல், மசாலா குப்பைகளை ரசித்துப்பழகிய ஒரு சமூகத்தில் இப்படம் நிச்சயம் ஆபத்தானது தான். குப்பை தான். ஒதுக்கித்தள்ள வேண்டியது. நல்லதை மட்டும் எடுக்குமளவு நம் சமூகமின்னும் வளரல சாமி.
                       

Tuesday, May 31, 2011

எத்தன் - எஸ்கேப் !

சத்தியமாக இந்த வலைமனையை தொடங்கும் போது திரை விமர்சனம் எழுதும் எண்ணம் கிடையவே கிடையாது.என்னமோ இதில் உலக தலைவர் ஒபாமாவை பார்த்து நான் கேட்கிறேன் என அளந்து விடத்தான் எண்ணி இருந்தேன் ஆனால் இன்று பதிவு போட வேண்டும் என்று நினைத்தது முதல் இன்று பார்த்த படமே மனிதில் சுற்றி வெறுப்பேற்றியதால் இந்த பதிவு.


                                                           எத்தனை நீங்கள் பார்க்க வேண்டும் என நான் விரும்புவதால் பெரிதாக கதை சொல்லப் போவதில்லை.முழு கதை படிக்க வேண்டும் என்றால் அதற்க்கென்றே சிலர் விமர்சனம் போடுவார்கள் அங்கே சென்று படித்துக் கொள்ளுங்கள்.
                            படம் ஆரம்பிக்கும் போது விமலும் சனுக்ஷாவும் ஊரை விட்டு ஓடிப் போகிறார்கள்.விமல் காக்கி உடையில் இருப்பதும் ஒரு இன்ஸ்பெக்டர் அவன் மட்டும் என் கைல கெடச்சான் என வில்லனிடம் புலம்புவதும், நாம் களவாணி பார்ட் - 2  வந்து இருக்கிற உணர்வை தருகிறது.


                          இந்த பாரா சனுக்ஷாவுக்காகவே எழுதப்பட்டது.கால் கோடி சம்பளம் கேட்கிறார் (மேனேஜர்) என பட்சி பயம் காட்டினாலும், பார்த்தவுடன் கவரும் ரயில் நிலைய குழந்தை போல இருக்கிறார்.பார்த்தவுடன் மனதி பச்சக். யாரோ ஒருவர் விமர்சனத்தில் பக்கத்து வீட்டு பெண் போல இருக்கிறார் என எழுதி இருந்தார்.உங்கள் வீட்டு பக்கத்தில் அப்படி ஒரு பெண் இருந்தால் சொல்லுமையா தலையை அடகு வைத்தாவது திருமணம் செய்து கொள்கிறேன்.ரேணிகுண்டாவை விட இப்போது குண்டாக தெரிகிறார்.ஆனாலும் உங்களுக்கு இங்கே டும் டும் டும் படத்தில் விவேக் சொன்ன வசனத்தை நினைவு கூற விழைகிறேன்.செல்லத்திற்கு சேலை அல்லது தாவணி தவிற பிற உடைகள் அவ்வளவு பொருந்தவில்லை என்பது கூடுதல் தகவல்.கன்னத்தில் ஒரு பரு கொள்ளை அழகு :)




                  மீண்டு(ம்) படத்திற்கு வருவோம். தாஜ்நூர் என்பவர் இசை,இதை நீக்கி விட்டு படத்தை மறுபடி ரிலீஸ் செய்தால் 100 நாள் ஓடும்.பாடல் எதுவுமே சரிட்யில்லை. பிண்ணனி பரவாயில்லை ரகம். சிங்கம்புலி வரும் காட்சிகள் ரசிக்க  வைக்கின்றன(உதாரணம் : நமீதா போஸ்டர தொட்டுட்டு வா) . பொதுவாக ஒரு படம் ஏ,பி, அல்லது சி கிளாஸ்களில் கைத்தட்டல் வாங்கும். பாக்ஸ்ஸில் உக்காந்து இருப்பவன் கை தட்டும் ஸீனுக்கு 10 ரூபாய் டிக்கெட்காரன் புரியாமல் தலையில் அடித்துக்கொள்வான். ஆனால் இந்த படத்தில் சில சீன்கள், இவர் அவர் என அனைவரையும் விழுந்து சிரிக்க வைத்து விடுகிறது.சட்டய கழட்டிட்டு ஒத்தைக்கு ஒத்த வான்னு இன்ஸ்பெக்ட்டர கூப்டுட்டு அவன் சட்டய தூக்கிட்டு ஓடும் காட்சி அதகளம்.எம்.எஸ் பாஸ்கர் ஓரிரு இரட்டை அர்த்த வசங்கள் பேசினாலும் அனைத்துமே நண்பர்களுக்குள் அடிக்கும் காமெடி போல சட்டென சிரிக்க வைத்து விடுகிறது.மனோ பால பொல்லாதவன் போலவே ஒரு வேடம் பண்ணி இருக்கிறார்.இயக்குனர் சில காட்சிகளில் தடுமாறி இருக்கிறார்.லாஜிக் சில இடங்களில் மிஸ்ஸ்ங் விமல் ஒரே நாளில் சீரியஸ் ஆக கடன் பற்றி வருந்த ஆரம்பிப்பது நெருடல்.ஆனால் லாஜிக் மீறாமல் சினிமாவே இல்லை என்பதால் ஏற்றுக்கொள்ளலாம்.மே மாதம் இந்த படத்தை பார்க்காமல் விட்டால் அவன் பிற படங்களை பார்க்கவே மாட்டன் என்று அர்த்தம்.

எத்தன் -  பாடல்கள் இல்லாவிட்டால் சதம் அடித்து இருக்கும்.