Flipkart

Amazon

Amazon

Showing posts with label ட்விட்டர். Show all posts
Showing posts with label ட்விட்டர். Show all posts

Monday, June 9, 2014

ட்விட்டரை விட்டு பெண்கள் ஓடுவது ஏன் - ட்விட்டர் - பெண்ணியம்?

ட்விட்டருக்கு போய் மாமாங்கம் இருக்கும். மோடி வெற்றி குறித்த அலசல் கட்டுரை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. போன வாரம் பேஸ்புக்கில் சோனியா அக்காவோடு லேசாக வழக்கம் போல சண்டை போட்டிருந்தேன். எதிர்வினை ஆற்றுபவர்களை பொதுவாக திட்டுவதற்கு. அவர்கள் இன்று ஒரு சுட்டியை பகிர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது "இப்ப என்ன என்ன செய்ய சொல்ற" என தம்பி மாதவன் ஸ்லாங்கில்.  அவசர அவசரமாய் இதை எழுதுகிறேன். படிக்கவும், வேலையும் தலைக்கு மேல் கிடக்கிறது.

ட்விட்டரில் அஜித் - விஜய், ராஜா - ரகுமான், நீயா நானா டாபிக்குகளோடு பெண்ணியம் குறித்த சண்டையும் பேமஸ். /// பெரும்பாலும் இது போல் இணையவெளியில் பெண்கள்/பெண்ணியம் பற்றி பொருமுபவர்களுக்கு சொல்லெண்ணா பல துயரங்கள் இருக்கும். வீட்டில் பெண்டாட்டியிடம் வாங்கிய விளக்குமாற்றடியின் ஈரம் காய்வதற்குள் "அவன கொல்லாம விடமாட்டேண்டீ" என கவுண்டர் பாய்வாறே, அது போல....  /// - இப்படித்தான் இதை பகடியாய் எழுதலாம் என துவங்கினேன். எரிச்சலாய் இருக்கிறது. என்னோடு பேசும் பல பெண்கள் என்னிடம் சொல்லும் ஒரே விஷயம் இது தான். எங்களுக்கு எல்லோரிடமும் எல்லாவற்றையும் உன்னிடம் பேசுவது போலவே பேசிவிட வேண்டும் என்று ஆசை தான். ஆனால், என்ன செய்ய. அவர்கள் ஆண்களாயிற்றே.

ஏன் நான் ஆணில்லையா? என்பேன். "ம்ஹூம்...சொல்லப்போனால் அவர்கள் தான் ஆண்களில்லை" என்பார்கள். நேற்றும் சேர்த்து இந்த பிரச்சனை எப்படி தொடங்குகிறது என்று பார்ப்போம். பெரும்பாலும் இது போல இவர்களின் வெறிக்கு இலக்காவது சோனியா (@raajakumaari) தான் என்பதால், நான்கைந்து வருட ட்விட்டர் குப்பை கொட்டிய அனுபவத்தில் சொல்கிறேன். இது முழுக்க முழுக்க குழு மனப்பான்மையால் வருவது.

நான் ஒரு ஜாதி வெறி பிடித்த கவுண்டனை திட்டுகிறேன் என வைத்துக்கொள்வோம். கவுண்டன் என தன்னை எண்ணும் ஒவ்வொருத்தனும் சம்மந்தமே இல்லாமல் என் மேல் பாய்வார்கள். அதே தான் இங்கும் பிரச்சனை. ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும் ஆண்கள் மேல் குறிப்பிட்டு போடப்படும் ட்வீட்டோ ஸ்டேட்டஸோ, சிலரால் தனக்கானதாக கருதப்பட்டு அதனால் வன்மம் வளர்ந்து, குழு மனப்பான்மை அதை ஊதி விட்டு.... உஸ்ஸ்...

இது சம்மந்தப்பட்ட சில பல ட்வீட்டுகளை தேடிப்பார்ட்ட போது கடும் ஆயாசம் தான் ஏற்பட்டது. உலக அரசியல், இஸ்ரேலிய போர் நிறுத்தம் எல்லாம் பேசி விட்டு, எதிர்வினை என வரும் போது தனிமனித தாக்குதலை எடுப்பதில் தமிழர்கள் கில்லாடிகள். ராஜா, ரகுமான் ஹெட்வெயிட் என தொடங்குவது , "இவ என்ன பெரிய இவளா" "இத சொல்ல இவ யாரு" என நீள்கிறது.

என்னுடைய தோழிகள் பெரும்பாலும் டாம்பாய்க்கள். ஒரு முறை பீச்சில் நானும் என் தோழி ஒருத்தியும் நடந்து செல்கையில் நான்கு பேர் இருந்த கும்பலில் ஒருத்தன் என் தோழியின் மாரை பார்த்து பால் குடித்தால் நன்றாய் இருக்கும் என்றான். நான் செயல்பட ஆரம்ப்பிப்பதற்குள் அவள் ரிடார்ட் என்ன தெரியுமா? "உங்கம்மா கிட்ட நின்னு போச்சா?" என பரிதாபமய் உதடு குவித்து கேட்டுவிட்டு சகஜமாகி என் தோளில் கை போட்டு என்னோடு வேறேதோ பேசிக்கொண்டு நடந்து விட்டாள்.

எத்தனை பெண்களை இப்படி இருக்க வைக்க முடியும்? தமிழ் இணையவெளி என்றாலே என்னால் பெண்களை ட்விட்டரில் சேருங்கள் என சொல்ல முடியவில்லை. கெட்ட வார்த்தைகள் பிரச்சனை இல்ல. என் தோழிகள் அனைவரிடமும் நான் ஆண்களோடும் பேசும் அதே வார்த்தைகள் தான். கேனக்கூதி உட்பட. பிரச்சனை தனி மனித தாக்குதல் தான். மிக்சர் தின்னுதல் எனத்தொடங்கும். இங்கே பேசுபவர்கள் கணவர்கள் எல்லாம் மிக்சர் தின்கிறார்களாம். சரி, இப்போது உங்கள் மனைவி, நீங்களிங்கே டைப்புகையில் யாரோடு பக்கோடா கொறிக்கிறாள் என்ற கேள்வியை தொண்டையோடு முழுங்கி விட்டு, கடக்க வேண்டி இருக்கிறது.

இங்கு பேசிக்கொண்டிருந்த பெண்கள் ஒதுங்கிவிட்டார்கள் அல்லது தங்கள் வட்டத்தை சுருக்கிக்கொண்டு விட்டார்கள். ஆக எரிச்சலாய் இருக்கிறது. அவர்கள் பேசுவது சுத்த அபத்தம் என உங்களுக்கு தோன்றினால் கூட அதை கருத்து கொண்டு எதிர்கொள்ள முடியாதா ஐயா? என்னவோ போங்க :-(  ஆனால் ஒன்று புரிகிறது. நீங்கள் எல்லாம் ஏன் உங்கள் மனைவி தங்கை தோழிகளை தமிழ் ட்விட்டருலகில் நுழைய விடவில்லை என. இணையத்துக்கான முகமூடிகள் விதவிதமான டிசைனிலானவை.

தொடர்புடைய பதிவுகள் :

தோழர் மே 17 உமரின் ட்விட்லாங்கர் : http://t.co/Yc3KOzluwW

குப்பை : Bullying - வார்த்தை வன்புணர்ச்சி


http://www.koothaadi.in/2013/01/blog-post_8.html

http://www.koothaadi.in/2013/02/blog-post_1259.html

Saturday, April 27, 2013

இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்கல!

        
                          படுக்கையில் வீழ்வதற்கும் உறக்கம் நம்மை ஆட்கொள்வற்கும் இடைப்பட்ட நேரத்தில் மனித மனம்  நிகழ்த்திவிடும் பயணம் அசாத்தியமானது. படுத்தவுடன் உறங்கிவிடுபவர்கள்  இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். சில இரவுகள் ஏதோ ஒரு பாடலினாலோ, பேருந்தில் ஒரு நொடி கவனித்த பெண் பழைய காதலி சாயலில் இருந்ததினாலோ என ஏதோ ஒரு காரணத்திற்காக உறக்கமில்லாமல் கடந்ததும் உண்டு. நேற்றைய இரவு என் உறக்கத்தை கலைத்துப் போட்டது நண்பர் @raGuCயின் ஒற்றை ட்வீட்.

அதற்கான என் பதிகளும் அவரது ட்விட்லாங்கரும் :
http://t.co/gWBMpsX4xx

           ட்வீட்டின் சாரத்தை கவனித்தவர்களுகும், ரகுவை அறிந்தவர்களுக்கும் நன்றாக புரியும். அந்த ட்வீட்டின் பின்னால் இருப்பது விரக்தி. "யாமர்க்கும் குடியல்லோம்" என பயோ வைத்திருக்கும் ஒருவர், "சாதியை பிடித்துக்கொள்ளுங்கள் இல்லையேல் அழிக்கப்படுவீர்கள்" என கீச்சுவது, எனக்கு எதைஎதையோ நினைவூட்டிவிட்டது.


           
                 மனித குல வரலாற்றின் ஏதேதோ பாகங்கள் சிதறல்களாய் என்னைச் சுற்றி வட்டமிட்டன. ஈழத்தின் வரலாறு, இன்று சரணடைந்து வாழ வழியற்று பாலியல் தொழில் செய்யும் சகோதரிகளின் கதை, எரியும் பனிக்காட்டில் மனைவியையே கூட்டிக்கொடுத்து பிழைக்க வேண்டிய மக்களின் நிலை என அறுந்தறுந்து ஏதேதோ நினைவுகள்.   நானறிந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நண்பர்களின் முகமும், தோழிகளின் அழுகையும் மேலும் உறக்கம் கலைத்து மனதை பிசைந்தன. என் வீடு கொஞ்சம் வித்தியாசமானது, அம்மா அப்பாவிற்கு நிச்சியிக்கப்பட்ட திருமணமெனினும், அவர்கள் இருவரும் ஜாதி மீது பற்று அற்றவர்கள். கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிக்கும் பருவத்திலேயே ஜாதிய விழுமியங்கள் குறித்தான கருத்தாக்கம் எனக்கும் தெளிவாக உருவானது. சாதிய கட்டமைப்பு இன்றைய நிலையில் தேவையில்லை என்பதே அன்று முதல் இன்று வரை எனது எண்ணமாக இருந்தது, இருக்கிறது.



                          என் அம்மா ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை. நம்புங்கள், அங்கு புதிதாக ஆசிரியையாய் வந்த ஒரு Scheduled Caste வகுப்பை சேர்ந்த ஆசிரியை உபயோப்படுத்தியதை (டீ க்ளாஸ், தட்டு, இன்ன பிற) மற்ற ஆசிரியைகள் தொடமாட்டார்கள். இத்தனைக்கும் இது தென்னகத்தில் அல்ல, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள .பள்ளி ஒன்றில். அதன் பிறகு அவர்களிடம் பேசி, மேலதிகாரியிடம் புகார் அளிக்கப்படும் என மிரட்டி, கொஞ்சம் சகஜமாக இருக்கிறது நிலைமை இப்போது. தோழி ஒருத்தியின் பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள். அப்பா தலித், பெண் கொங்கு சமூத்தின் முக்கிய சாதி. சந்தேகமே இல்லாமல் ஏகப்பட்ட பிரச்சனைகள்.  தற்போது அவளுக்கு இருபது வயது, ஆறு வயதில் மேல் சாதி வீட்டினரின் சட்டியை தொட்டதற்காய் காலில் போடப்பட்ட சூட்டின் வலி இன்னமும் அவள் கண்ணீரில் வழிகிறது.



                          கிராமம், நகரம் என எந்தப்பாகுபாடுமில்லாமல் சாதி தமிழகமெங்கும் கோலோச்சிக் கொண்டு இருக்கிறது. கடந்து பத்தாண்டுகளில் அதன் வேகம் பன்மடங்கு பெருகி இருக்கிறது. பரமக்குடி, தருமபுரி, மரக்கானம் என சமீபத்திய நிகழ்வுகள் பெரும் அச்சத்தை தருகின்றன. கிராமங்களில் சாதி வெளிப்படையாக பேசப்பட்டாலும், நகரங்களில் அந்நிலை இல்லாமல் இருந்தது. தற்போது நகரங்களிலும் சாதியை வெளிப்படையாக பேசக்கூடிய சூழ்நிலை வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். ஜனனி அய்யர், நரேஷ் அய்யர் என பேஷன் பெயர்கள் ஒரு காரணம். ஒரு புறம் ராமதாசு, இன்னொரு புறம் கொங்கு ஈசுவரன் வகையறாக்கள், தேவர் விழாக் கூட்டம் என ஜாதியை மையமிட்ட விழாக்கள் மற்றொரு காரணம்.



                          மேற்கண்ட அச்சத்தைத் தான் ரகுவின் கீச்சு பிரதிபலித்தது. இத்தனை நாள் நடத்திய போராட்டங்கள் அத்தனையும் கடந்த சில வருடங்களில் உடைத்தெறியப்பட்டு மீண்டும் நாற்பதுகளுக்கே சென்ற உணர்வை தருகிறது. அவரது தர்க்கங்களை இல்லை என என்னால் புறந்தள்ளிவிட முடியவில்லை. தேவர் ஜெயந்தியையோ, ராமதாசு நடத்திய வன்னியர் கூட்டத்தையோ பார்த்த யாருக்கும் இது தான் தோன்றும். ஏகப்பட்ட இளைஞர்கள் ஆட்டுமந்தைகளைப்போல் அங்கே குவிந்து கிடந்தனர். மதுவோடு சேர்த்து அவர்தம் சாதி பெருமையையும் அவர்களை வெறிகொள்ளச் செய்திருப்பதை கண்கூடாக காண முடிந்தது. ஏதோ காலத்தில் அவர்கள் முன்னோர்கள் நிகழ்த்தியதாக சொல்லப்படும் வீரதீர செயல்கள் தற்போது அவர்களை நிதானமிழக்கச் செய்வதை உணரமுடிகிறது, மதுவை விட ஆபத்தான, அதிக நாள் நிலைக்ககூடிய போதையிது.



ஒரு சாதி வெறியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

“சார் கவாஸ்க்கர தெரியுமா?”

“ஓ”


“ரோஹன்?”

“யாரது?”

“அவர் பையன் சார். என்ன பண்றான் தெரியுமா?”

“பிசினஸ்?”

“க்ரிக்கெட். டீம்ல இடம் கெடைக்காம உட்கார்ந்திருக்கான் தெரியுமா சார்? அப்பா பண்ண சாதனைக்கே பையன் உரிமை கொண்டாட முடியாது.”

                          தேவர் பெருமகனார் பண்ண நல்ல விசயங்களுக்கோ, காமாரஜர் ஆற்றிய தொண்டுகளுக்கோ, தீரன் சின்னமலை செய்த வீரசெயல்களுக்கோ அவர்கள் மட்டுமே பொறுப்பு. அவற்றை உரிமை கொண்டாட இத்தேசத்திற்கே உரிமை இல்லை என்னும் போது, சாதியின் பெயரால் அதை சுருக்குவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?



                          இது ஒரு புறம் எனில் தலித்துகள் கூட சாதியை வேண்டாம் என ஒதுக்கவில்லை என்றார் ரகு. மிகச்சரி தான். அதிகாரத்துக்கு எதிராய் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுவதை ஜாதி வெறி என்றுவிட முடியாது தான். எனவே தான் விசி ஜாதிக்கட்சி என்பது மிக மேலோட்டமான கருத்தியல் என திரும்பத்திரும்ப பதிவு செய்திருக்கிறேன். ஆனால், இந்த அடையாள அரசியலைத் தாண்டி, விழுப்புரம் கோகிலா சம்பவம் மூலமாக வெளிச்சத்திற்கு வந்தது, தலித்துகளுக்கு உள்ளான சாதி வன்மம்.

                          சமீப காலங்களில், எங்கெங்கிலும் சாதி ஒற்றுமை பலப்படுத்தபடுவது கண்கூடு. தேவர் விழாவும், வன்னியர் சாதி மாநாடும், கொமுக எல்லாம் ஒரு பருக்கை உதாரணம் தான். எப்போதுமே, வேட்பாளர் தேர்வு சாதியை முன்வைத்து நடக்கும் திராவிட அரசியலில் (திமுக, அதிமுக என எந்தக்கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல) ஜாதிக்கு, ஜாதிவெறிக்கு எதிராக ஒரு அரசு செயல்படும் என எதிர்பார்த்தால் நம்மை விட முட்டாள்கள் இருக்கவே முடியாது. அதன் காரணமாகத்தான் பெரியார் போன்ற ஒரு தலைவர் வேண்டும் என்றேன். ஒற்றை போராளி என்ற அர்த்தத்தில் அல்ல, இயக்கம் சார்ந்த பாதுகாப்பு அல்லது ஒருகிணைப்புக்காக.

                          யோசித்துப்பார்த்தால், ரகு சொல்வதைப் போல சாதி கவசம் இல்லாதவர்கள் எல்லாம் அழித்தொழிக்கப்படுவார்கள் என்றே தோன்றுகிறது. என்ன செய்ய? என் சாதியை தூக்கிப்பிடிக்கவா? அக்கொடியை தொடுகையில் கையில் மலம் புரட்டியது போல உணர்வேனே என்ன செய்ய? தாழ்த்தப்பட்ட தோழிகளின் கண்ணீர் என்னை சுட்டெரிக்குமே என்ன செய்ய?

                          “The Longest Yard” என்றோரு படம். சிறை குறித்த ஒரு சுமாரான ஆங்கிலப்படம். ஒரு கால்பந்து வீரன். ஏற்கனவே, பணத்திற்காக  Match Fixingஇல் ஈடுபட்டு இருப்பான் அவன். ஒரு கட்டத்தில், மீண்டும் வேண்டுமென்றே தோற்க வேண்டும் அல்லது, வாழ்க்கை முழுக்க சிறையில் கழிக்க வேண்டும் என்ற நிலையில் பின்னதை தேர்ந்தெடுப்பான் அவன்.



                          ஒரு அற்புதமான வசனம். அவனுக்கும் ஏற்கனவே ஒரு போலீஸ் வார்டனை அடித்து அதற்காக தண்டனை காலம் முடிந்து இருபது ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஒருவருக்கும்,
             
“Do you regret for hitting the warden now?”

“No”


“Do you still feel that one shot is worth the 20 years you spent in the closed hell?”

“Worth every second”

                          அவ்வளவே. ஒரே ஒரு அடி. ஒரு பெருமிதம். இருபது வருடங்கள் சிறையில் கழித்தாலும் பராயில்லை என ஒருவருக்கு தோன்றுமா? இது வெறும் சினிமா காட்சி அல்ல. வரலாறு நெடுக இப்பெருமிதத்திற்காகத் தான் ஒவ்வொரு மனிதனும் போராடுகிறான். சாதியை தூக்கிப்பிடிப்பவன் கூட அதைத் தன் பெருமையாகவே பார்க்கிறான். அதில் தான், சில நாய்கள் குளிர் காய்கின்றன.

                           சத்தியமாக என்னால் என் சாதியை தூக்கிப்பிடிக்க முடியாது, எந்த சாதியையும். ஏன் எனில், நான் வளர்ந்தது அப்படி. என் மூளை அப்படி சிந்திப்பதை விட செயலற்றுப்போய்விடவே விரும்பும். அப்படி ஒரு நிலை வந்தால், அப்போராட்டத்தில் நாசமத்துப் போகிறேன் என்றே சொல்வேன். ஆனால், ரகு சொன்னது போல “Surivival of the fittest” கணக்கில் சாதிக்கொடி பிடித்தலை சேர்த்தாகி விட்டதா?? இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறா என்னும் மேம்போக்கான எண்ணம், இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்கல? என அதை சரியானதாக்கும் நாள் அருகில் தான் இருக்கிறதா? இவ்வெழுத்தும் பேச்சும் வெறும் வெளிவேஷமென நம் ஒவ்வொருவர் மனதிலும் சாதி சாக்கடை இன்னமும் இருக்கிறதா? எல்லோரும் மனதிற்கும் ராமதாசு தானா? :-(




ஒரே ஒரு உறுதியை இங்கே எடுக்கிறேன். என் திருமணம் சாதி மறுப்புத்திருமணமாகத்தான் இருக்கும். என் குழந்தை எந்த மதம்/சாதியையும் சார்ந்து வளராது.

கொந்தளிப்பான கடல் போல மனம் அலைகிறது. முக நூலில் பூபதி முருகேஷ் ஒரு பதிவிடுகிறார். நீங்கள் என்ன சொன்னாலும் என் சமூகத்தை வெறுத்தொதுக்க முடியவில்லை என்ற ரீதியில். இத்தனைக்கும் நான் பார்த்த வரையில் பொது வெளியில் சாதி பற்றி அதிகமாக வெறிகொள்ளாதவர் அவர். அப்படியெனில் ரகு சொன்னது தான் வருங்காலமா? அனுபவஸ்த நண்பர்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். ஏதோ, சினிமா விமர்சனங்களையும், நகைச்சுவையையும் மட்டும் எழுதி இந்த வலைமனையை வைத்திருக்க விரும்பவில்லை.எழுத்து மட்டும் தானா என்பவர்களுக்கு, நான் என்ன செய்கிறேன் என நண்பர்கள் அறிவார்கள், புகைப்படம் எடுத்து இணையதளங்களில் பகிர்ந்து யாரையும் நம்பவைக்கவேண்டிய அவசியம் இல்லை! சாதிவெறி சார்ந்த கருத்துக்களுக்கு எதிர்காலத்தில் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்க முடியாமல் போகும் என தோன்றும் போது, வலைமனையை மூடிவிட்டு, என் வாழ்க்கையை மட்டுமாது என் கொள்கைப்படி வாழ்ந்துவிடுவேன்.

இங்கு மூச்சுவிடுவதே எமக்கு போராட்டம் தான். இங்கு யாவரும் போராளிகள் தான்!

                          மண்டியிட்டு வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று உயிர்விடுதலே மேல்!




     
               

Wednesday, May 23, 2012

Twitter ~ ட்விட்டர் என்னும் மாய உலகம்


இந்த ட்விட்டர் ஒன்றும் மாய உலகமல்ல! 140 எழுத்துக்களுக்குள் உங்கள்

கருத்தக்களை அடக்கும் வித்தையை கற்றால் இந்த களிற்றை எளிதில்

வசப்படுத்தி விடலாம்.

ஏ.ஆர்  ரஹ்மான் பாட்டு கூட முதல் தடவை கேட்கும் போது பிடிக்காது. எனவே

 ரெண்டே நாள்ல அக்கெளன்ட்ட டீ ஆக்டிவேட் பண்ணீறாதீங்க. பழக பழக

ட்விட்டர் இனிக்கும்.

ட்விட்டருக்கு வரும் புதியவர்கள் (தமிழ் ட்வீட்ஸ் படிக்க விரும்புபவர்கள்) கடைபிடிக்க வேண்டிய சில ரூல்ஸ், அடிப்படை ட்விட்டர் விதிகள் மற்றும் சில விளக்கங்கள் :

டைம் லைன் (Time line) : இது தான் உங்கள் ட்விட்டர் ஹோம் பேஜ். இதில் நீங்கள் தொடரும் நபர்கள் அனைவரின் கீச்சுக்களும் நேரவாரியாக இடம் பெறும் (லேட்டஸ்ட் பர்ஸ்ட்)

பாலோயிங்க் (Following) : நீங்கள் தொடருபவர்கள் , இவர்களின் கீச்சுகள் தான் உங்கள் டி.எல் (அதாவது டைம் லைனில்) இடம் பெறும்.

பாலோயர்ஸ் (Followers) : இவர்கள் உங்களை தொடருபவர்கள்.

லிஸ்ட் (List) : பல பேர் உபயோகப்படுத்தாத வசதி இது. இது கூகுள் ப்ளஸ்ஸில் வரும் லிஸ்ட் போலத்தான் அதாவது. நீங்கள் ஒரு 1000 பேரை பாலோ செய்வதாக வைத்துக்கொள்வோம். அதில் ஒரு 10 பேர் ஒரு வகையான நகைச்சுவை ட்வீட் செய்பவர்கள், ஒரு 30 பேர் சச்சின் போன்ற பிரபலங்கள் என்றால் நீங்கள் இவர்களை உங்கள் லிஸ்ட்டின் மூலம் வகை படுத்தி வைக்கலாம்.  இதன் இன்னொரு முக்கியமான வசதி, ஒரு வேளை நீங்கள் ஒரு குறிபிட்ட லிஸ்ட்டை மட்டும் உங்கள் டி எல் ஆக பார்க்க விரும்பினால் அதையும் செய்யலாம்.

@கனெக்ட் : நீங்கள் ஒருவரின் கீச்சுக்கு பதில் அனுப்ப விரும்பினால் அவரது ஹேண்டில் (@ க்கு பின்னால் வருவது ஹேண்டில் இது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் www.twitter.com/koothaadi யில் @koothaadi என்பது ஹேண்டில் SHAN – கூத்தாடி என்பது பெயர் ) போட்டு அனுப்பலாம் , இதை எல்லோரும் பார்க்க முடியும். இதற்கு பெயர் தான் மென்ஷன்! (குறிப்பிடுதல்)

ரீ ட்வீட் (மறு கீச்சு) : நீங்கள் பாலோ செய்யும் நபர் செய்யும் ஒரு கீச்சு உங்களை மிகம் கவ்ர்ந்தால் அது உண்மையாகவே பிறரை சென்றடைய வேண்டும் என நீங்கள் நினைத்தால் ரீட்வீட் செய்யுங்கள். இது உங்களை தொடர்பவர்களை சென்று அடையும்.

ஃபேவரிட் : நீங்கள் என்றாவது மீண்டும் பார்க்க விரும்பும் கீச்சுக்களை ஃபேவரிட் செய்து கொள்ளலாம் இது புக் மார்க் போன்றது.

# டேக் : இது தேடுதலை எளிமையாக்க அறிமுகபடுத்தப்பட்ட்து. இந்த # ஐ அடுத்து வரும் வார்த்தை குறித்து தேட இதை கிளிக்கினால் போதும் . இது தமிழ் போன்ற பிற மொழிகளுக்கு பொருந்தாது எனினும் வாட்ச் இல்லாத போதும் இடது கையை பார்க்கும்  பழக்கம் போல தொற்றிக்கொண்டு விட்டது.

Block வசதி : உங்களை ஒருவர் தொல்லை படுத்தினால் அவரை உங்கள் தொடர்பிலிருந்து துண்டிக்க இது.

செக்கீயூரிட்டி : சிலரது கீச்சுக்கு அருகில் ஒரு பூட்டு சிம்பள் வரும். அதாவது இவர்களை தொடர வேண்டும் எனில் கிட்ட்த்தட்ட பிரண்ட் ரிக்வெஸ்ட் போல இவர்களது அனுமதி பெறுதல் அவசியம். என்னை பொறுத்த வரை புதிய ட்விட்டர்கள் தங்கள் கீச்சுகளுக்கு பூட்டுப்போடுதல் நன்றன்று!

வெரிபைடு சிம்பள் : இது உண்மையான அக்கெளண்ட் என்பதை குறிக்கும் , பிரபலமானவர்களுக்கு வழங்கப்படும்.( https://support.twitter.com/groups/31-twitter-basics/topics/111-features/articles/119135-about-verified-accounts )

டைரக்ட்டு மெசேஜ் (Direct Message or DM) : இது சேட்(Chat) போல

1 ட்விட்டருக்கும் பேஸ்புக்குக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் , Follow எனப்படும் தொடருதல் வசதியாகும். இது கிட்டதிட்ட, முக நூலில் உள்ள சப்ஸ்கிரைப் போன்றது.

2. ஒருவர் உங்களை தொடர்ந்தால் நீங்கள் போடும் அனைத்து ட்வீட்டுகளும் (கீச்சுகளும்) அவரது டைன்லைனில் வரும் என்பதை நினைவு வெய்யுங்கள்

3. நீங்கள் தமிழில் கீச்ச விரும்பினால் அழகி போன்ற எதேனும் ஒரு ட்ரான்ஸ்லிற்ரேஷன் மென்பொரும் உங்களுக்கு உபயோகப்படும்.

4. புதிதாய் தமிழ் ட்விட்டர் உலகிற்கு வருபவர்கள் வார இதழ் வாசற்படி மூலமாகவே பெரும்பாலும் வருகிறார்கள்.

5. நீங்கள் விரும்பினால் நட்பை உருவாக்கிகொள்ளுங்கள் ஆனால் அந்தரங்க விஷயங்களை அவசரப்பட்ட்டு வெளியிட வேண்டாம்.

6. ஒருவரது கீச்சுக்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் ரீட்வீட் செய்யுங்கள். ஆள் யாராய் இருந்தாலும் பரவாயில்லை.

7. நீங்கள் பின் தொடரதா நபரின் ப்ரோபலை நீங்கள் கடக்க நேர்ந்து அது உங்களுக்கு பிடித்து இருந்தால் அதை பின் தொடருங்கள் . அவர் உங்களை தொடர்கிறாரா இல்லையா என்ற குறுகிய எண்ணம் வேண்டாம்.

8 உங்களை புதிதாய் ஒருவர் பின் தொடர்ந்தால் அவருக்கு ஒரு நன்றி கூறுங்கள் . அவர் ப்ரோபைல் உங்களை கவர்ந்தால் அவரை பின் தொடருங்கள்.

9 Hi this user is making nasty things about you... போன்ற மெசேஜ்ஜுகள் எதாவது கண்டால் கிளிக்க வேண்டாம் அது ஸ்பாம், உங்கள் அக்கவுண்ட்டை ஹாக் செய்ய செய்த வித்தை!

  முக்கியமான கடைசி பாய்ன்ட் , யாராவது கீச்சுவது உங்கள் நம்பிக்கைக்கு, கருத்துக்கு எதிராக இருந்தால் , கருத்தை எதிர்த்து கீச்சுங்கள் , அதை சொல்பவரை எதிர்க்காதீர்கள். ஆரோக்கியமான விவாதம் தான் நமது மன்மோகன் சிங் போன்ற மே(பே)தை ஆளும் ஜனநாயகத்துக்கு பெருமை!