Flipkart

Amazon

Amazon

Saturday, August 20, 2011

இரத்தம் தொலைத்த இரவுகள் ~ மரணம் - பதிவு 1

இது எனது அனுபவங்கள் பற்றிய பதிவு மட்டுமே.இதில் உள்ள பல கேள்விகளுக்கு என் அடுத்த பதிவில் விடை கிடைக்கும்.அதுவரை பொறுத்திருங்கள்.

இந்த பதிவை கீதா என்ற என் நண்பனின் தாய்க்கும்,கார்த்திகாவுக்கும் சமர்ப்பிக்கிறேன்.                     

                               உங்களை மிக எளிதாக பலவீனப்படுத்த வேண்டும் என நான் நினைத்தால், என்னைக் கண்டு உங்களை பயப்பட வைக்க வேண்டும்.ஆனால் இதில் ஒரு சிக்கல் உண்டு ஒவ்வோருவரும் வெவ்வேறு விஷயத்துக்கு பயப்படுவார்கள்.உங்களை எனக்கு தெரியுமெனில் வேலை எளிது இல்லையென்றால் நீங்கள் எதற்கு பயப்படுவீர்கள் என நான் நிறைய யோசிக்க வேண்டி இருக்கும்.ஆனால் மிக எளிதான வழி ஒன்று உள்ளது.உங்கள் ஆழ் மனதில் உள்ள மரணம் பற்றிய பயத்தை கொஞ்சம் கிளறி விடுவது.

          உலகில் மனித இனம் தோன்றிய தினம் தொட்டு அவன் சிந்தித்தது எல்லாம் அவன் இருப்பை பற்றித்தான்.மரண பயம் ஆதி கால மனிதன் மட்டுமன்றி இன்றைய நவ நாகரீக மனிதன் வரை தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது.நடுவில் மண் மீது இருந்த ஆசையில் வீரச்செறிவு என பலர் வீர"மரணம்" அடைந்தாலும் மரணிக்கும் போது நிச்ச்யம் ஒரு கணமாவது பயந்திருப்பார்கள் என்பது என் எண்ணம்.

Fear of Existence அல்லது Fear of survivability தான் இயற்கையை பார்த்து மனிதன் பயந்ததற்கும் கடவுள் என்ற ஒன்று தோன்றியதற்க்கும் காரணமாய் விளங்கி இருக்க முடியும்.

தற்போது எனக்கு 20 வயது.என் வாழ்வில் பல மரணங்களை கடந்து வந்திருந்தாலும் அதில் நான்கு என்னை மிகவும் பாதித்தவை. மிக நீண்ட யோசனைக்கு பிறகே இந்த பதிவை எழுத ஆரம்பிக்கிறேன்.இந்த சம்பங்கள் நடந்த எந்த இரவிலும் நான் தூங்கவில்லை.முகம் வெளுத்த நிலையில் ஒரு உருவம் என் கனவில் சில வாரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டு இருக்கும்.

மரணம் 1 : ப்ரசாத்



என் பள்ளி பருவம்.ப்ரசாத்துக்கு கால்கள் வராது.(அந்த வயதின் வார்த்தைகள்,மாற்றுத்திறனாளி என விளிக்க இப்போது கற்றுகொண்டுவிட்டேன்)என்ன நோய் என என்னிடம் அவன் அம்மா விளக்கி சொல்லி இருக்கிறார்கள், 5 ஆம் வகுப்பு படிக்கும் போது,அது என்னவென மண்டையில் ஏறவில்லை.அவனை நடக்க வைக்க நாங்கள் நிறைய முயற்சி செய்து இருக்கிறோம்.6ஆவது படிக்கும் போது "சாந்தி" என்ற ஆசிரியை தாவரவியல் எடுப்பார்.அவர் வாரம் ஒரு வகுப்பு இவன் நடக்க வைக்க  வேண்டும் என்றே செலவிடுவார்.நானும் இன்னொரு மாணவனும் இவனுக்கு தோள் கொடுக்க நடக்க முயற்சிப்பான்.முதலிரண்டு முறை முழுதாக முயற்சித்தவன் பின் எதும் செய்யவில்லை.7ஆம் வகுப்பு  முதல் அவன் பள்ளிக்கு வரவில்லை.சிறிது நாட்கள் அவன் தங்கையை அழைத்து வரும் அவன் பெற்றோரிடம் பேசிக் கொண்டு இருந்தேன் பின் அந்த தொடர்பும் அறுந்து விட்டது.

இரண்டு வருடம் கழித்து,ஒரு நாள் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளி தொடங்கிய நேரம்,அவன் அம்மா அவன் தங்கையை அழைத்துக்கொண்டு பள்ளியை விட்டு வேலை நேரத்தில் வெளியேறுவதைப் பார்த்தேன்.பின் ஒரு ஆசிரியை கூறினார்கள்.ப்ரசாத்துக்கு இரண்டு மாதங்களாக உடல் நிலை சரி இல்லை.அன்று காலை,கழிவறை சென்றவன் அங்கேயே மரணித்து இருக்கிறான்.

அந்த வயதில் ப்ரசாத்தின் மரணம் பல கேள்விகளையும் சில பதில்களையும் என்னுள் பதிவு செய்தது.அவன் மரணம் கொஞ்சம் வலித்தாலும் அவன் எங்களோடு பயணித்த போது அவன் அனுபவித்த வலிகளை எண்ணினால் அவன் மரணம் அவனுக்கு நிம்மதியையே தேடி தந்திருக்க்கும் என நினைத்தேன்.

2. தினேஷ் : முன் கூறியவனை போலத்தான் இவனும்,மாற்றுத்திறனாளி. தினேஷ் மரணிக்கும் போது நாங்கள் 11ஆம் வகுப்பு.ஒரு நாள் காலை,பள்ளியின் கண்டிப்பான ஆசிரியை என பெயர் பெற்ற ஒருவர் எங்களிடம் விஷயத்தை சொல்லி அவனை காண அழைத்து செல்லுமாறு நிர்வாகத்திடம் கோர சொன்னார், பல முறை பேசியும் "அதெல்லாம் முடியாது" என மறுத்த நிர்வாகம் என் நண்பன் ஒருவன் "அப்ப நாங்க செத்தாலும் இப்படி தான் பண்ணுவீங்க இல்ல.." என கேட்கவும் இறங்கி வந்தது.

அவனை காண பள்ளி பேருந்தில் சென்றோம்.அவன் இறுதி நிமிடங்களை எங்களிடம் விம்மியபடியே விளக்கினார் அவன் அம்மா."அம்ம்மா காப்பாத்துங்க.. என்ன யாரோ இழுக்குராங்க.." என கூறியபடியே இருந்துள்ளான்.தன் மரணம் நெருங்குவதை உண்ர்ந்தானோ என்னவோ இரண்டு நாட்களாக தனக்கு எதனாலோ பயமாக இருப்பதாக கூறி உள்ளான்.

அவனை காண செல்லும் போது இருந்த மன நிலை வரும் போது வெகுவாக மாறி இருந்தது.அனைவரும் இயல்பு நிலைக்கு வந்து இருந்தார்கள்.இவன் மரணம் எனக்கு பயம்,வருத்தம் போன்றவற்றை விட கேள்விகளை அதிகம் தந்தது.

தினமும் நாளிதழ் படிப்பேன்,விபத்து செய்திகளை மேயும் போதோ அல்லது கண்ணீர் அஞ்சலிகளை கடக்கும் போதோ ஏற்படாத வலியும் பயமும் ஏன் மனிதர்களுக்கு தன்னை சார்ந்த அல்லது தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் ஏற்படுகிறது?



அடுத்தவனுக்கு இதே நிலை வரும் போது ஆறுதல் சொல்லி,தத்துவம் பேசும் மனம் ஏன் தன்னை மட்டும் சுய பச்சாதாபம் கொள்ள வைக்கிறது?

பல விடையில்லா கேள்விகள் அலையெழுப்ப தொடங்கின?

3.கார்த்திகா :  இன்று வரை என் உற்ற நண்பன் இவள் அண்ணன்.அன்று காலை 7.30க்கு என் வகுப்பு ஆசிரியரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி.பள்ளி விடுமுறை எனவும் ஒரு பெண் இறந்து விட்டதாகவும் என் தந்தைக்கு வந்து இருந்தது.இனிஷியல் (டீ.ஆர்) எனக்கு கொஞ்சம் நெருடினாலும் இருக்காது என நினைத்து குளிக்க சென்றேன்.வந்தவுடன் நண்பர்களிடமிருந்து அழைப்பு அது என் நண்பனின் தங்கை! அவன் வீட்டுக்கு நான் சென்ற நேரம் அழுது அழுது சிவந்திருந்தான்.நேற்றே நடந்த நிகழ்ச்சி எங்களுக்கு தெரிய நேரமாகிவிட்டு இருந்தது. தீபாவளி முடிந்த நேரம் அது.குளிக்க நீர் எடுக்க போனவள் மீது விறகு நெருப்பு பற்ற, அணைக்க முயன்று ஓடியுள்ளாள், எதிபாராத விதமாக
காருக்கு போட்டிருக்கும் ப்ளாஸ்டிக் பந்தல் மீது மோத அது அவளை அணைத்துக் கொண்டு விட்டது.மேல் வீட்டுக்காரர் அலறி ஓடி வருவதற்க்குள் அது உருகி அவள் உடலோடு ஒட்டி விட்டது.

நான் சென்ற சமயம் உடலை எடுத்துக்கொண்டு இருந்தார்கள்,அந்த நேரம் யாராவது அவனுடன், நண்பர்கள் செல்ல வேண்டும் என பட்டதால் நண்பனிடம் பைக்கை கொடுத்து விட்டு அவனுடன் சென்றேன்.செல்லும் வழி எங்கும் அவன் அழுதது என்னை பிசைந்து கொண்டே இருந்தது.ஆறுதல் கூற சத்தியமாக தோனவில்லை.அவன் அழுவதில் நியாயம் இருப்பதாக பட்டது.ஆனால் எதோ ஒரு நொடி எதை பற்றியோ வேனின் உள்ளே பேச்சு எழ சில நொடிகள் அவன் அழுகை நின்றது.தெளிவாக 10 வார்த்தைகள் பேசிய பின் மீண்டும் சோகம் வந்து கவ்விக் கொண்டது.மீண்டும் மனதில் கேள்விகள்...

மயானத்தை அடைந்தோம்,அவள் உடலை காண நேரிட்டது.தீக்காயங்கள் இருந்ததால் அவள் உடலை முழுக்க மூடி இருந்தார்கள்.இருப்பினும் சிதைக்கு தீ மூட்டும் வரை நான் அருகிலேயே இருந்ததால் என்னால் அவளை காண முடிந்தது.அது வரை சோகத்தை மறைத்து இருந்த என் கண்கள் அந்த பிஞ்சின் மேனியை தூக்கியதும் வெளியேற்றியது.உண்மையாகவே அவளை தூக்கி ஒரு ட்ராலியில் வைத்து சிதை நெருப்பில் தள்ளிய நொடி,சத்தியமாக செத்துவிட்டேன்.

கார்த்திகா என்னை கேள்விகளுக்கான விடையை நோக்கி தள்ளினாள்.

4)என் நண்பனின் அம்மா :

இவர்கள் எனக்கு ரொம்பவும் நெருக்கம். மிக மிக அற்புதனான ஒரு பெண்மணி.சத்தியமா சொல்றேன், உலகில் யாரை விடவும் பொறுப்பானவர்கள். அவனிடம் நான் கூறி இருக்கிறேன் " உங்க அம்மாவ நம்பி இந்த நாட்டையே வேணுமின்னாலும் கொடுக்கலாம் டா, அவ்வளவு பத்திரமா பாத்துக்க்குவாங்க".எந்த வேலை என்றாலும் முகம் சுளிக்காமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஈடுபாட்டோடு செய்வார்கள்.மனிதர்களை படிக்க தெரிந்தவர்கள்.கடைசியாக  நான்,என் நண்பன்,அவன் தங்கை,என் அம்மா மற்றும் அவன் அம்மா "எத்தன்" படம் பார்த்தோம்.அதற்கு இரண்டொரு வாரம் முன் வீட்டுக்கு வந்து இருந்தவர்கள் ஏனோ மிக வித்தியாசமாக எதிர்காலம் பற்றி நிறைய பேசினார்கள்.இன்று வரை எனக்கு நெருடலாக உள்ள இந்த விஷயத்தை இன்னும் என் நண்பனிடம் கூறவில்லை.எப்போது வீடுக்கு போனாலும் எதாவது அருந்த தராமல் இருந்ததே இல்லை.அவன் நகம் வெட்டுவது,தலை சீவுவது என அனைத்திலும் அந்த அன்னையின் பாசமும் குறுக்கீடும் பிரதிபலிக்கும்.அது எனக்கு பிடிக்காது "அவனுடைய Individuality யை நீங்கள் கெடுக்கிறீர்கள்" என ஒரு முறை கூறி இருக்கிறேன் (என் அம்மா மூலமாக).

சரியாக ஜூலை 1 மதியம் உணவருந்திக் கொண்டு இருந்த போது ஒரு குறுஞ்செய்தி, அவனிடமிருந்து. "ஆக்சிடென்ட் டா.அம்மா செத்துட்டாங்க".சத்தியமாக எனக்கு எதும் தப்பகா தோன்றவில்லை.அம்மா என்றவுடன் ஜெ., என்று எல்லாம் யோசித்தேன்.அவனுக்கு கூப்பிட்டால் எடுக்கவில்லை.பிற நண்பர்களுக்கும் விஷயம் அது வரை தெரியவில்லை. வகுப்புக்கு சென்றவுடன் ஓயாமல் மொபைல் அதிரவே எனக்கு சந்தேகமும் பயமும் பரவ ஆரம்பித்தது.யோசித்து பாருங்கள்.என் வகுப்பு ஆசியரிடம் கூறி விட்டு வெளியே வந்து பேசினேன்.இன்னோரு நண்பன் அழுது கொண்டு இருந்தான்.விளக்கினான்.விபத்து,குல தெய்வ கோவிலுக்கு செல்லும் வழியில் நடந்து இருக்கிறது. தனியாக வெளியே வந்தேன்,என் கல்லூரியில் படிக்கும் மற்ற நண்பர்களுக்கு அடித்தேன் எவனும் எடுக்கவில்லை,அந்த சமயத்திலும் மொபைலை எடுக்க விடாத கல்லூரி மீது கோபம் வந்தது.பேருந்தில் 1 மணி நேரம்,மனம் மிக வெறுமையாக இருந்தது.நிஜமாகவே நான் எதையும் யோசிக்கவே இல்லை.அழ கூடாது என நினைத்து இருந்தாலும் அன்று இரவு என்னை,சந்தீப் அழ வைத்து விட்டான்.அந்த இடத்தில் அவன் அம்மா இல்லாமல் எனக்கு இருக்கவே பிடிக்கவில்லை.ஆனால் அவன் அம்மா அவனுக்கு அவன் தங்கை ரூபத்தில் கூடவே இருந்தாள்.

நான் இத்தனை நாள் தேடித் தேடி படித்த தர்க்க சிந்தனைகள்,தத்துவங்கள் அனைத்தையும் மிக நேர்த்தியாக உண்ர்த்திவிட்டாள் எங்கள் தங்கை.

அப்படி என்ன தான் செய்தாள் அவன் தங்கை? அவள் உறவினர்கள் உதவுவதாக நடித்த நேரம் அது.அவர்கள் அப்பாவும் மிகவும் காயமடைந்து இருந்தார்.

மரணம் பற்றி பலரிடம் கேட்ட போது அவர்கள் பதில் என்ன? ஓஷோவின் பார்வையில் மரணம் என்றால் என்ன


என் அம்மா என்னிடம் "நான் செத்தாலும் இப்படித்தான் இருப்பியா?" என ஒரு நெருங்கிய உறவினரின் சாவுக்கு நான் கலங்காததை பார்த்து கேட்ட போது நான் சொன்ன பதில் ஆகியவற்றை என் அடுத்த பதிவில் எழுத உள்ளேன். இதில் எழுதினால் பதிவின் நோக்கம் திசைமாறுவதாக ஒரு எண்ணம்.

இந்த பதிவை கீதா என்ற என் நண்பனின் தாய்க்கும்,கார்த்திகாவுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

Sunday, August 14, 2011

எங்கே தோற்றோம்? - இது கம்யூனிஸமா?

இந்த பதிவுக்கு முன் இந்த விளக்கங்கள் அவசியம் என்பதால்.இன்று பகல் முழுக்க நண்பர்களுடன் கழிந்தது.மாலை 5 மணி அளவில் நூலகம் செல்ல முடிவேடுத்தேன்,கூடவே சிறூ வயது முதல் பழகி வரும் ஒரு ஏரியா நண்பன்,என்ன்னை விட ஒரு வயது சிறியவன் ஆதலால் என்னை அண்ணா என்று அழைப்பது வழக்கம்.நாங்கள் பைக்கில் கிளம்பினோம்.அம்மா கொடுத்த தேனீர் இன்னும் அடி நாக்கில் இருந்தது,தண்ணீர் குடித்திருக்கலாம்,அவரசரம்.

 நூலகத்தோடு எனது தொடர்பு அலாதியானது.சிறு வயது முதல் நண்பர்கள் அதிகம் என்றாலும் புத்தகம் படிக்க நேரம் ஒதுக்க பழகிக்கொண்டு இருந்தேன்.4ஆம் வகுப்பு முதல் நானே நூலகம் சென்று புத்தகம் தேடுவேன்.இப்போது நினைக்கையில் பெரிய விஷயமாக படுகிறது.கிட்டத்திட்ட இரண்டு மணி   நேரம் புத்தகம் தேடவே சென்றது.பெரியார் புத்தகம் ஒன்றும்,லெனின் மற்றும் சே குவேரா பற்றிய நூல்கலும் எடுத்து வந்தேன்.

இப்போது எனது பால்ய பருவம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.நாத்திக சிந்தனை எனக்குள் தலை தூக்க தொடங்கிய நேரம் 7ஆம் வகுப்பு என நினைக்கிறேன், இப்பொழுது தொடர்பில் இல்லாத சில நண்பர்கள் கிடத்த நேரம்.ராஜா,யுவராஜ்,கௌதம் இதி குறிப்பிடத்தக்கவர்கள். ராஜா பார்க்க ஒல்லியாக இருப்பாம்,காதல் கொண்டேன் தனுஷ்  போல என வைத்துக்கொள்ளுங்கள்.மற்றவர்களை பற்றி அவ்வளவு தேவை இல்லை.
எனக்கு பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களோடு தொடர்பு வைத்துக் கோள்ளும் சுதந்திரம் இருந்ததால் இவர்களுடன் பழக நேரிட்டது. பெட் கட்டி கேரம்,கிரிக்கெட் ஆடும் போது ஏற்ப்பட்ட பழக்கம், நாளடைவில் சந்தித்தல் குறைந்து விட்டது, ஒரே ஏரியாவில் இருந்தாலும் (4 தெருக்களுக்குள்). யுவாராஜ் இவர்களுடன் இருந்து விலகி இரண்டு முறை தேர்ச்சி பெற முடியாமல் இப்பொது தான் +2 தேறினான் என கேள்விப்பட்டேன்.


நாங்கள் நூல்கள் எடுத்து முடித்துவிட்டு வெளியேறினோம்,மேலும் சில பொருடகளை ஒரு கார்ப்பரேட் கடையில் வாங்கி பரிச்சியமான தெருவுக்கு வரும் போது மணி 8ஐ நெருங்கி விட்டு இருந்தது.எங்கள் ஏரியாவுக்கு வந்த உடன் தெரிந்த கடையில் ரீசார்ஜ் செய்ய வண்டியை நிறுத்தினேன்.பக்கத்தில் ஒரு கம்யூ., அலுவலகம் (திருப்பூர் சிகப்பு தொழிலாளர்கள் நிறைந்த நகரம்). ஒருவன் குழறியபடி அந்த மருந்தக (அங்கே தான் ரீ-சார்ஜி செய்வேன்) ஓனரிடன் வாதாடி கொண்டு இருந்தான். கண்களை இடுக்கினேன், இவன் இவன் ராஜா, ஆளே மாறி விட்டு இருந்தான், உடம்பு முழுக்க ஒல்லியானாலும் தொப்பை போட்டு இருந்தான், உதடு கருத்து இருந்தது,கால்கள் முழு அழுக்கு ஏன் என தெரியவில்லை.

இன்னமும் குழறிக்கொண்டு இருந்தான் (வார்த்தை தெளிவாக இருந்தது ஆனால் அர்த்தம் சம்பந்தம் இல்லாததாக இருந்தது).



"யேய் ஊறுக குட்றா...." என்றான். "மாப்ள நல்லா இருக்கியாடா" என்றேன்.

சிறிது நேரம் என்னை வினோதமாக பார்த்தவன் தோளை பிடித்து :டேய் தம்பி நல்லா இருக்கியா டா?" என்றான்.(நானும் அவனும் சம வயதே).

 "ஹ்ம்ம்: என்றேன் கிளம்பியபடி.

என் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பிடித்தான், "வசதியா மாப்ள" என்றான்.(தம்பி போய் விட்டிருந்தது).

"டேய்... இத போட்டு இருந்தா வசதி யா.. கவரிங் டா வேணும்ம்ன்னா எடுத்துக்கோ" -இது நான்

"வேணாம் மாப்ள.. அப்பறம் என்ன பண்ற?"

"இஞ்சினியரிங்க் டா..த்தேர்ட் இயர்.."

"அட நம்ம பையன் ஒருத்தன் கூட... (அந்த பக்கம் இருந்த ஒருவனிடம் கேட்டான் "மச்சான்.. அந்த க்**** பேரு என்ன?") ம்ம் ***** கூட இஞ்சினியரிங்க் தாண்டா படிக்கறான்"

"ஹ்ம்ம்..."

"காலேஜ்ஜுல கெத்தா இருக்கியா டா?"

"ஹ்ம்ம்..ஏதோ மாப்ள சரி நான் கிளம்பறேன்"

"இரு டா.... போன  வாரம் அவன் காலேஜ்ஜுக்கு போனோம், சரக்கு அடிச்சிட்டு தான்.. 3 இழுப்பு (போதைப் பொரும் என பின்பு புரிந்தது) இழுத்துட்டு போய் சரி ஆட்டம்.. எவனோ இவன் ஆளுக்கு நூல் விட்டு இருக்கான்.. பிரிச்சுட்டோம்.. அவனுக்கு 12 தையலாம்...."

"ஓ..."

"சொல்லு மாப்ள... எவனையாது தூக்குனா தான் நம்ம மேல மரியா....(தள்ளாடினான்...ஓரமாக சென்று வாந்தி எடுத்தான்)"

3 நிமிடம் கழித்து  

"சொல்லு மாப்ள உங்க காலேஜ்ல எவனையாவது தூக்கலாம்..சரக்கு மட்டும் ஏற்பாடு பண்ணிரு..."

 நான் -  "ப்ரச்சனை எதும் வர்லியா...அந்த 12 தையல் கேஸ் எதும்?"

"அதான் அண்ணன் இருக்கருல்ல" - கூட இருந்தவன் கம்யூ., அலுவலகத்தில் இருந்த ஒருவனை காட்டி சொன்னான்.35 வயதிருக்கும் அந்த நிமிடம் ஜீன்ஸ் -டீ சர்ட்டில் இருந்தால், டேபிளில் இருந்த கண்ணாடிக்கு அடியில் ஒரு பழைய போட்டோவில் வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தான்.கை கொடுத்துக் கொண்டோம்,அவனும் நிதானத்தில் இல்லை.

"என் நம்பர் நோட் பண்ணிக்க" என்றான்.

என் Galaxy ஐ வாங்கி சிறிது நேரம் பார்த்துவிட்டு தந்தான். என் கூட இருந்த நண்பன் கையில் இருந்த புத்தகங்களை பார்த்தான்,தட்டு தடுமாறி படித்தவனுக்கு அதன் பெயர்களை சொன்னேன்..

"யார் இவனுங்க..."

"டேய் லெனின்..மார்க்ஸ் டா... இந்த கம்யூனிச கொள்கைகளின் தந்தை டா..." என்றேன்.

"நீயும் கட்சில இருக்கியா..சொல்லு அண்ணன் நினைச்சா நீயும் இந்த வாட்டி க்வுன்சிலர்"

எனக்கு அதை தூக்கி தலையில் அடித்துக்கொள்வது என தெரியவில்லை.

அண்ணனிடம் கேட்டேன் "உங்களுக்கு இவங்களை தெரியுமா?"

அண்ணன் " பொலி பீரோ ஆளுங்க தான...எத்தன தடவ கூட்டத்துல இவங்க கூட பேசியிருக்கேன்..தெய்யுமான்னு கேக்குற" என காலரை தூக்கினான்.
கூட வந்தவன் முதுகில் நிமிண்ட புரிந்து கொண்டு ஒரு வழியாக கிளம்பினோம்.

நாம் எங்கே தோற்றிருக்கிறோம்? புரிகிறதா?

எனிவே, ஹாப்பி இண்டிபெண்டென்ஸ் டே

(இந்த பதிவில் சில பேச்சுக்கள் மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. இது உண்மை சம்பவமாக இருந்தாலும் படைப்பாக கருதி மாற்றம் செய்ய எனக்கு முழு உரிமை உண்டு.இது யாரயும் குறிப்பிட்டு எழுதப்பட்டது அல்ல)

Wednesday, July 27, 2011

தேர்வு

எங்கோ எப்போதோ கேட்ட
தேர்தல் பிரச்சாரம் மனதுக்குள்
அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு இங்கிருந்தே
சவால் விடுகிறது.

என்றோ பார்த்த படத்தின் நினைவுகள்
மெலிதாக படர்கின்றன.

காலை கையசைத்த அக்காவின் குழந்தையை
தூக்கி முத்தமிட வேண்டும் என நெஞ்சம் துடிக்கிறது.

சுற்றி இருப்பவர்கள் பரபரப்பாக இருப்பது
சிரிப்பையும் கனத்தையும் ஒரு சேர கூட்டுகிறது.

தினசரி பழகிய மின்விசிறியின் சத்தம் மிக
வினோதமானதாக தோன்றுகிறது.

தினமும் கூட பழகிய முகங்கள் அந்நியப்பட்டு நிற்க்கின்றன.
தாளம் போட்டே பழக்கப்பட்ட கரங்கள், பிசைந்து கொள்கின்றன.

ஏனென்றே தெரியவில்லை, தேர்வு அறையின் கொடூர முகம் சிறு வயதிலிருந்து இன்று வரை மாறவில்லை.

Saturday, June 4, 2011

பாபா ராம்தேவ்வும் பரதேசி!

பாபா ராம்தேவ், இவனை பற்றி பதிவு போடாதே பக்கவாதம் வரும் என பயமுறுத்தும் சிலரும் இதே இணையத்தில் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

              யாரிவன் இத்தனை நாள் இவனுக்கு இல்லாத அக்கறை இப்போது எங்கிருந்து வந்ததது.அன்னா ஹாசாரே தான் இதன் காரணம். நீங்கள் ஒரு விஷயத்தை உற்று கவனிக்க வேண்டும். இந்தியாவில் பல பேர் தினமும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். நமக்கு தெரியா விட்டாலும் உண்மை அது தான். இவ்வளவு பேர் இருக்கு, அன்னா ஹாசாரேவுக்கு ஆதரவு குவிய என்ன காரணம்?


                           விடை மிக எளிது.மற்ற எல்லோருடைய போராட்டங்களிலும் சிறிதாவது சுய நலம் வெளிப்படையாகவே இருக்கும். உதாரணத்திற்கு நம் குழாயடில் தண்ணீர் வரவில்லை என்றோ, நம் உற்வினரை லாக்கப்-டெத் என்றோ தான் போராடிக் கொண்டு இருப்போம்.இந்த போராட்டங்கள் தற்போதைய கார்ப்பரேட் செய்தி சேனல்கள் அல்லது பத்திரிக்கைகளில் வர இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று நாம்  ஃபேமஸ் ஆக இருக்க வேண்டும் அல்லது நாம் யாரை எதிர்க்கிறோமோ அவராவது அப்படி இருக்க வேண்டும்.(உதாரணம் : நம்ம வனிதா)

                          அன்னா ஹசாரேவுக்கு லோக்பால் மூலம் கிடைக்க போவது ஒன்றும் இல்லை. அவர் ஒண்டிக்கட்டை,தன் கிராமத்தை சமூக சேவை மூலம் மாதிரி கிராமமாக மாற்றியவர் , ராணுவத்தில் வேலை பார்த்தவர் போன்றவை தான் அவரை கார்ப்பரேட் செய்தி நிறுவனகங்கள் தேர்ந்தேடுக்க காரணம்! இவரை பற்றி கருத்து வேறுபாடுகள் அதிகமாய் எழ வாய்ப்பு இல்லை. இந்த தாடி வெச்ச பெருச்சாளி இந்த நேரத்துல தான் உள்ள நுழஞ்சான். நல்ல வாயன் சம்பாதிச்சு நாற வாயன் தின்ன கதையா, அன்னா பண்ண  உண்ணாவிரத்தத்த சார் பலன அனுபவிச்சாரு. இங்கே நம்ம கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், சாமியாருங்களோட ப்ளஸ்ஸே பேரு தான். பேரு கெட்டு போச்சுன்னா எல்லாம் போச்சு! இவனுங்க சாய்பாபா முதல் இந்த பனங்கொட்ட தலையன் ராம்தேவ் வரை எல்லோரும் சமூக சேவை முகமூடிய போட்டுக்கறது அதுக்குத்தான். பல சாமியாருங்க பெருகிக்கிட்ட போட்டி கார்ப்பரேட் யுகத்துக்ல இவனுங்க பப்பு வேகனும்ன்னா நான் இந்த சமூகத்தை தாங்குறேன்ன்னு ஒரு இமேஜ் உருவாக்கனும் ( நான் ஈஷாவை இந்த பட்டியலில் சேர்க்க மாட்டேன், அதன் மேல் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் புகழுக்காக சேவை செய்வது இல்லை).

 சாய்பாபா குடி நீர் திட்டத்துக்கு கொடுத்த காசும் இதே ரகம் தான். சரி அதை விடுங்கள். இந்த டாக் என்ன பண்ணுச்சுன்னா, யோகா பண்ணப்போறேன்ன்னு சொல்லி இடம் வாங்குச்சு.அப்பறம் இந்த சீசன்ல யோக பண்ண கூட்டம் வராதுன்னு சொல்லி உண்ணாவிரத்தத ஆரம்பிச்சுருச்சு. சுற்றி ஏர்கூலர்கள், 5000 மின்விசிறிகள் என வருபர்களுக்கு வசதிகள் வேறு! அப்ப சாகும் வரை உண்ணவிரம்ன்னு சொன்னது சும்மாவா?சாகப்போகிறவர்களுக்கு இத்தனை வசதிகள் எதற்கு. உண்ணாவிரத பந்தலில் 750 குடி நீர் குழாய்கள் எதற்கு.இந்த ஊடகங்கள் என்றாவது இவனுக்கு எதிரான கருத்துக்களை போடுமா என்று உற்று நோக்குங்கள். நிச்ச்யம் இல்லை.


                                   தன்னபிக்கை இல்லாத மனிதன் பிடித்து தொங்கும் கயிறு தான் கடவுள், கீழே இருக்கும் நாய்க்கு(பிரச்சனைக்கு) பயந்து அவன் அதை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறான். சிறிது நேரத்தில் நாய் பொறுமை இழந்து அங்கே இருந்து சென்றவுடன் அதற்கு கயிறு தான் காரணம் என்றும் மகிழ்ச்கி கொள்கிறான். இது ஓஷோ சொன்னது. இந்த காவி கபோதிகள் மக்களை வசியப்படுத்த எடுத்த ஆயுதம் தான் இந்த சூமுக சேவை மூகமூடி. ஐரோம் ஷர்மிள் மணிப்பூரில் சிறப்பு காவல் உரியமையை ரத்து செய்யக்கோரி, பெண்களை துனை ராணுவத்தின் பிடியில் இருந்து மீட்ககோரி 10 வருஷமாக உண்ணாவிரதம் இருக்கிறாரே அவருக்கு ஏன் இந்த நாய் ஆதரவு தரவில்லை.
கருப்பு பணம் பற்றி ஏன் இந்த தீடீர் அக்கறை?


                            இவனுக்கு நிச்சயம் காங்கிரஸ் அடி பணியாது.இவன் நேற்று திருட வந்தவன் பரம்பரை பரம்பரையாக 150 வருடங்களாக திருடிகொண்டு இருப்பவனுக்கு இவனை சமாளிக்க தெரியாதா??

இவன் மட்டும் இந்த உண்ணாவிரத்தில் செத்து விட்டால் நான் இனி பதிவுகள் எழுதுவதையே விட்டுவிடுகிறேன்!