ஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான். ஒரு நாள் அவன் தன் மனைவியை ஒரு சிறிய தவறு செய்ததற்காக கிணற்றில் தள்ளி கொன்று விட்டான். அவனிடம் யாரும் பேசவில்லை . அவனுக்கு அவன் தவறை எடுத்து சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை. தன் உயிருக்கு பயந்து எல்லோரும் வாய மூடிக்கிட்டு இருந்தாங்க. அப்ப அந்த வழியா ஒரு ஜென் குரு போனார். அவர் சொத்து என எதுவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதால் உடை கூட உடுத்தாமல் நிர்வாணமாக வாழ்பவர்.
அவன் அவரிடம் ஓடி வந்து “நான் தவறு செய்து விட்டேன், என் கோபத்தால் என் அன்பு மனைவியை கொன்று விட்டேன். எனக்கு இந்த கோபத்தை குறைக்க வழி தெரியவில்லை. நீங்கள் சொல்லுங்கள்” என்றான்.
அவர் சிரித்துக் கொண்டே அவன் பெயரை கேட்டார்.
“சாந்தன்,” என்றான் அவன். அவர் சிரிப்பு இன்னும் பெரிதானது. அவனுக்கு கோபம் வந்தாலும் அடக்கி கொண்டான்.
“நல்ல பெயர். கோபத்தை வெல்ல வேண்டுமானால் நீ எல்லாவற்றையும் துறக்க வேண்டும். இந்த உலகத்தில் இருக்கும் எதுவுமே உனக்கு சொந்த மானதல்ல என உதற வேண்டும்” என்றார்.
அவன் உடனே அனைவரும் ஆச்சரியப்படும்படி அவன் தன் உடை அனைத்தையும் கழட்டி அதே கிணற்றுக்குள் போட்டான். இனி அவர் போலவே வாழ்வதாக சபதமேற்று சென்றான்.
அதன் பின் அவனை பற்றிய விதவிதமான செய்திகள் கிடைத்தன. அவனை தரிசிப்பதே புண்ணியம் என உலக மக்கள் எண்ணினார்கள். 20 வருடங்கள் கடந்தன. அதே ஊரில் இருந்து ஒருவன் தூர தேச பயணம் ஒன்று மேற்கொள்ளும் வழியில் சாந்தன் வழியில் உள்ள ஊரில் தங்கியிருப்பதாக கேள்விப்பட்டு அவனை காண சென்றான்.
இவனுக்கு அவன் முகம் இன்னும் குரூரமாகவே பட்டது. சாந்தன் அவனை அடையாளம் கண்டு கொண்டாலும் தன் தகுதிக்கு குறைவென எண்ணி கண்டுகொள்ளாதது போல நடித்தான். அவன் அகத்திரையை கிழிக்க வேண்டும் என நினைத்தான்.
“உன் பெயர் என்ன?” என கேட்டான்
இப்போது சாந்தன் நடிக்க விரும்பவில்லை.
“நான் தான் சாந்தன்,” என்றான்.
“அட சொன்ன உடன் உங்கள் பெயர் நினைவில் நிற்க மறுக்கிறதே, திரும்ப சொல்லுங்கள்” என்றான்.
“நான் சாந்தன், உன் ஊர் காரன் தான்,”
“ஓ என்ன பெயர் சொன்னீர்கள்?”
“அடேய்,”, பக்கத்தில் இருந்த ஒரு காணிக்கை பழத்தில் இருந்து கத்தியை எடுத்தான் சாந்தன் “இன்னோரு முறை கேள் நான் யாரென்று காட்டுகிறேன், நான் என் மனைவியை கொன்ற அதே சாந்தன் டா” என்றான்.
“ஆம் அதே சாந்தன் தான்” என சொல்லிவிட்டு இவன் எழுந்து போய் விட்டான்.
நீதி : பல வருட உழைப்பு வீணாக ஒரு நொடி கோபமே போதுமானது