Flipkart

Amazon

Amazon

Wednesday, November 28, 2012

குப்பை 4 - புத்திசாலி சைக்கோக்கள் ~ ஜாதி வெறி !

பொறுப்பு துறப்பு (Disclaimer) : மனிதர்களுக்கு மட்டும் கீழிருக்கும் கட்டுரை. மிருகங்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்.

நான் வாழும் காலகட்டத்தின் மிக முக்கியமா பதிவுகளை படித்துக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். இந்தச் சுட்டிகளை படித்தபின் , நான் பெரும்பாலும் உன்னிப்பாக கவனிக்கும் @paviraksha ட்விட்டரில் சொன்னது. படித்ததில் நானும் அப்படித்தான் உணர்ந்தேன்.

சுட்டிகள் -

இது தருமபுரி சம்பவத்தினூடாக ஜாதி வெறியை சாடுவது.

இது ஜாதி குறித்த புரிதலின் இடை நிலையில் இருப்பவர்களுக்கு புரியும்படி வாசகர் கடிதம் ஒன்றுக்கான முத்துக்குமாரசாமியின் பதில்.

நீங்கள் ஜாதி குறித்த ஆரம்ப கட்ட புரிதலில் இருப்பவர் என்றால், அம்பேத்கர் நூல்களின் வழியாக சிலவற்றை அறிந்து கொள்ளுதல் நலம். தேவி பாலா சொல்வதைப்போல, இந்த ஜாதி வெறியர்கள் கற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள். செய்த தவறை மீண்டும் செய்யாமல், திட்டமிட்டு புதிய தவறை செய்திருக்கிறார்கள். தருமபுரியில் வீடுகள் கொளுத்தப்பட்டது கலவரமல்ல. திட்டமிடப்பட்ட தாக்குதல். "ஆள விட்டுட்டு ஐயிட்டத்த  தூக்குங்க" என விவேக் நகைச்சுவை பாணியில் தெளிவாக அனைவரிடமும் சொல்லப்பட்டு இருக்கு. இது கிட்டத்தட்ட, காஷ்மீரத்த கைப்பற்ற புனித போர் "ஜிகாத்" இட வந்த பதான்கள் வந்த நோக்கம் மறந்து  கொள்ளையில் ஈடுபட்டத நினைவூட்டுகிறது. இதன் வீரியம் என்ன?? எதற்காக இந்த திட்டம்??

1. இந்த மக்கள் மீண்டு எழ இன்னமும் இரண்டு தலைமுறைகள் ஆகும்.

2. இனி இந்த சுத்துப்பட்டியில் எவனுக்கும் ஜாதி இந்து பெண்ணை காதலிக்கிற தைரியம் இருக்காது. (மூன்று சம்பந்தமில்லாத காலனிகளை தாக்கியதன் சூழ்ச்சி  அதுவே)

3.இந்த கருமாந்திரம் புடிச்ச காதல் தேவையா என்ற பேச்சு பரவலாக எழுந்து வருகிறது. மிகமிக ஆபத்தானதொரு கண்ணோட்டமிது.

4. பெரிதாக நடவடிக்கையயும், கவன ஈர்ப்பையும் சம்பாதிக்காமலேயே நினைத்த காரியங்கள நிறைவேற்றியாச்சு. இதன் மூலம், ஜாதி வெறியை பரப்ப, ஒரு கருத்து வெளி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மிகத் தெளிவான திட்டமிடலும், அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர் ஜாதி வெறியர்கள். உள்ளுக்குள் காட்டு மிராண்டியாக இருந்தாலும் வெளியில் அறிவுவெளிகளில் இவர்கள் பிரச்சாரம் செய்து ஈர்க்குமளவு வந்து விட்டார்கள் என்பது வெட்கக்கேடான விஷயம்.

தருமபுரி உண் மை அறியும் குழுவின் அறிக்கை - சுட்டி

இணையத்திலும், பொதுவிலும் வெளிப்படையாக ஜாதி பிரச்சாரம் செய்யுமளவுக்கு வளர்ந்து விட்டது இவர்கள் திமிர். இதில் பெரிய காமெடி, இவர்கள் அம்பேத்கார், பெரியார் படங்களை தங்கள் பேனர்களில் பயன்படுத்துவது. ஏதோ, செய்தது தவறே இல்லை என்பது போலவும், உயிரோடு விட்டதே தியாகம் என்பது போலவும் இவர்களது வாதங்கள் விஷம் தோய்ந்தவை. இதே நேரத்தில், விழுப்புரத்தில் கார்த்திக் (அருந்ததியர்) - கோகிலா (தலித்) காதலித்ததால் கோகிலா கொல்லப்பட்டு இருக்கிறார். இந்தச்சம்பவம் தலித்துகளுக்கு உள்ளேயே ஜாதிவெறி இருக்கிறது பாருங்கள் என இந்தத வெறியர்கள் பேச நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டது. இந்த சம்பவமும் கண்டிக்கத்தக்கதே. ஜாதி வெறி எந்தச் சமூகத்தில் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்க்கபட வேண்டும். அதை மூடி மறைத்தல் ஆகாது. ஆனால், கண்டிப்பதற்கு பதில்  நீங்கள் எதை தின்கிறீர்களோ அதையே நானும் தின்பேன் என்பதாக  இருக்கிறது ஜாதி வெறியர்களின் நியாயம்.

கட்டுரையின் மிக முக்கியமானதொரு இடத்தில் நிற்கிறோம். இன்று என்ன நிலைமையில் ஜாதி வெறி தமிழகத்தை பொருத்தவரை இருக்கிறது. நாம் எந்த நிலையில் இருக்கிறோம். என்ன செய்ய வேண்டும்.

சமீபத்திய சில சம்பவங்கள் : (இவை எல்லாம் கூகுளின் மூலம் திரட்டப்பட்டது. முழுவதும் படிக்க கூகுளில் தேடவும்)

வேளாளக் கவுண்டர் மாநாட்டில் கலப்பு மணத்தை தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நம் குல இளைஞர்களையோ, இளம் பெண்களையோ, வேறு சாதியினர் கலப்பு மணம் செய்தால் (செய்து ஏமாற்றினால் என்கிறார் அது ஒரு கோர்த்த வார்த்தையாகவே தெரிகிறது) கொலை செய்வோம்(வெட்டிட்டு வாங்க நாங்க பாத்துக்கறோம்) என சித்திரா பௌர்ணமி விழாவில் வெளிப்படையாகவே எச்சரிக்கிறார் காடு வெட்டி குரு. அருகில் அன்பு அண்ணன் ராமதாஸ் அமைதியாய் கண்டும் காணாதது போல் உட்கார்ந்திருக்கிறார்.

தலித் அல்லாதோர் இயக்கம் என்றொரு இயக்கத்தை சாதி இந்துக்கள் தென் தமிழகத்தில் துவங்குகிறார்கள். இப்போதிதை கொங்கு சமூகத்தை சேர்ந்தவர்கள் இதை கையில் எடுத்து பரப்புகிறார்கள்.

தலித்துக்கள் சமைத்த உணவை பால்வாடியில் உண்ண மறுத்து நாயக்கர் சமூக குழந்தைகளை புறக்கணிக்க வைக்கிறார்கள் நாயக்கர்கள்.

தலித் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் எங்கள் குழந்தைகள் படிக்காது என பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள் நாடார் பெற்றோர்கள்.

தலித்துக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுத்து அவர்கள் வழிபடுவதை தாங்க முடியாத ரெட்டிகள் காட்டில் குடியேறுகிறார்கள்.

காடுவெட்டி குரு பேசும் ஒரு காணொளி --





ஒரு குட்டி கேள்வி : பிறகெதற்கு  அந்த  இட ஒதுக்கீடு.  வேண்டாம் என்று கூறலாமே?  பாவம் இல்லாதப்பட்டவர்களுக்காக கொண்டுவந்தது தானே அது. "வன்னியரை" பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஏன் கூறீனீர்கள்??

ஜாதி வெறியர்களின் நிலை :

1. சிற்றரசையும், செகுடந்தாளி முருகேசனையும் கொன்ற ஜாதி வெறியர்களோ, கீழ்வெண்மணியில் இருந்த பதட்டக்காரர்களோ இப்போது இல்லை.(இந்த சம்பவங்களை தெரியாது என்றால் கூகுளில் தட்டுங்கள், 21ஆம் நூற்றாண்டில் பேருந்தில் பயணம் செய்தார் சமமாக  கொல்லப்பட்டவர் சிற்றரசு) இப்போதிருக்கும் ஜாதி வெறியர்கள் அவர்களை விட மிக மிக மோசமானவர்கள். Insomnia படத்தில் வரும் கொலையாளி, தான் செய்த கொலையை ஒரு ஆக்சிடென்ட் என்பான். ஆனா, மிக நிதானமான முறையில் 10  நிமிடங்கள் எடுத்து அக்கொலையை செய்திருப்பான். ஒரு சைக்கோ. அதே தான், இன்றைய அனைத்து ஜாதி வெறியர்களும் (எந்த ஜாதியாக இருந்தாலும் சரி), புத்திசாலி சைக்கோக்கள்.

2. ******* பேரவை என்ற அமைப்பு ஒன்று கடந்த மாத தொடக்கத்தில், கலப்பு திருமண எதிர்ப்பு இயக்கம் ஒன்றை நிகழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் இது போன்ற  பிற்போக்கு செயல்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளன. இதில் பல தலைவர்கள் காதலை கண்டித்து பேசுவதோடு அல்லாமல், காதலித்தால் வெட்டுங்கள் என்ற ரீதியிலும் பேசுகிறார்கள்.

3. சென்ற ஆண்டு நடந்த பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒரு உண்மையை விளக்கியது. அதாவது, கலவரம் ஆரம்பித்த காரண இரண்டு 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தத்தம் ஜாதி குறித்து சண்டை இட்டதே. தற்போது, தர்மபுரியில் அடுத்த தலைமுறையை உருவாக்க, ஒன்பதாம் வகுப்பு சிறுவர்களை வன்முறையில் ஈடுபட வைத்துள்ளார்கள் என உண்மை அறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது (கூட படிக்கும் தலித் மாணவிகள் அவர்களை பார்த்து உள்ளார்கள்)

4. இன்று தலித் அல்லாதோர் இயக்கம் என ஒரு போஸ்ட்டரை முக நூலில் பார்ததேன் -  சரியில்லை, இது ஒன்றிணைப்பாய் தெரியவில்லை.

5. வீர அவர்கள்,  வீர இவர்கள் என்றெல்லாம் இணையத்திலும் மற்ற ஊடகங்களிலும் (ஜூவிக்களில் ஜாதி வெறியகளின் பேட்டி வரும் இரண்டு பக்கம் தள்ளிப் பார்த்தால், அவர்தம் கட்சியின் விளம்பரம் ஒன்று வரும். புரிகிறதா?)

6. இவர்கள் கட்சி ஆரம்பித்து கூட்டம் சேர்த்து மலிவான ஜாதி அரசியல் நிகழ்த்துகிறார்கள் என அனைவருக்கும் தெரியும். ஆனால், காதை தீட்டிக்கொள்ளுங்கள், கீழ் நிலையில் பெரும்பாலான ஜாதிக்கட்சிகள் இந்துத்வா போர்வையில் திரியும் லோக்கல் ரவுடிகள் (சின்னச்சின்ன பொறுக்கிகள் - பெரிய கொலை வழக்கெல்லாம் இருக்காது. அடிதடி ம்ம்ம்) துணையுடனே இருக்கிறார்கள். இவர்கள் சில பல கட்சிகளுக்கு ஒன்றாக வேலை பார்ப்பார்கள். உதாரணமாக சில ஜாதி-மதக் கட்சியின் ஆட்களாக நீங்கள் அறிந்தவர்கள் எல்லாம் கூட்டாக சேர்ந்து ஒரு கோவில் திருவிழா போன்ற விஷயத்தை ஒரு லோக்கல் ஏரியாவில் முன்னெடுப்பார்கள்.  பின்னாளில் பந்த் நடத்தும் போதோ , ஆர்ப்பாட்டம் நடத்தும் போதோ பல தலைகளை நீங்கள் பல்வேறு கட்சி போராட்டங்களில் பார்த்த நினைவிருக்கலாம்.

7. இவர்கள் கலப்பு திருமண எதிர்ப்பு பேசுவதன்  பிண்ணனி இஸ்ரேல் பாணி லாஜிக் தான் (யூதர்களை பெரும்பான்மை ஆக்க, யூதர்கள் - ஆராபியர்கள் கலப்பை அனுமதிக்க கூடாது. அராபியர்கள் இருக்கவே கூடாது)

8. இந்த இழிவான ஜாதி அரசியல் நடத்தும் கட்சிகள், 6அவது புள்ளியில் சொன்னது போல கூட்டம் தேற்றி, அதன் மூலம் சீட்டுப் பெற்று, ஆட்சி அதிகாரத்திலும் உட்கார்ந்து விட்டார்கள்.

9. மிக மிக முக்கியமான விஷயம், பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களோடு உட்கார, உணவருந்த மறுத்தல், மேற்குறிப்பிட்ட படி பல வழிகளில் இளைய சமுதாயத்தினரிடம் ஜாதி வெறியை வளர்த்தல். இதற்கு நானே சாட்சி, என் நண்பன் ஒருவன், தன் ஜாதி சார்ந்த ஒரு கலப்பு மன எதிர்ப்பு ஸ்டேட்டஸை "லைக்" பண்ணி இருந்தது எனக்கு பெரிய ஆச்சரியம்/அதிர்ச்சி. அவனுக்கு வயது 20.

நாம் எங்கே இருக்கிறோம் - என்னென்ன செய்ய வேண்டும் : 

1. முதலில் செய்ய வேண்டிய விஷயம், தலித் மக்களுக்குள் இருக்கிற ஜாதி வெறியை அடக்குவது/ஒழிப்பது. இது சிறிதாவது இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. பறையரையும், அருந்ததியினரையும் பிற தாழ்த்தப்பட்டவர்கள் அவமதிப்பது கண்கூடு.

2. இந்த ஜாதி வெறியர்களுக்கு எங்கே இருந்து வந்ததிந்த திமிர்? இந்திய அரசியலமைப்புச்சட்டம், தனக்கான துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை, அடிப்படை உரிமை எனக் குறிப்பிடுகிறது. அதை மறுக்கும் வகையில் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுகிறார்கள் என இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக பா.ம.க மற்றும் பல்வேறு ஜாதி இயக்கங்கள் (ஜாதிக்கட்சிகள் அனைத்தும் தான்) கலப்பு மன எதிர்ப்பை வலுவாக முன்னெடுக்கின்றன. சரத்குமார் இன்னமும் அந்த அளவு வரவில்லை. நல்லது.

3. ஜாதி ரீதியிலான வன்முறையை தூண்டும் பேச்சுக்களை பேசியது யார் என்றாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க அரசு முனைய வேண்டும். காடு வெட்டி குரு , ஜெ.,வை பார்ப்பன வெறி பிடித்தவர் எனக் கூறி விட்டு தனிமனித தாக்குதல், ஜாதி வெறி ஆகியவற்றை அப்பட்டமாய் காட்டியிருப்பார், பாருங்கள்.

4. ஜாதிக் கட்சிகளை, திராவிடக்கட்சிகள் சீந்தாமல் விட வேண்டும். அவர்களுக்கு வருவது கும்பல், கூட்டமல்ல.

5.  மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஜாதியை முழுவதுமாக விளக்கி, அதன் முட்டாள் தனங்களையும் தீமைகளையும் பட்டியலிட வேண்டும். இன்று பார்ப்பனர்கள், பார்ப்பனீயத்தை எழுத்து வடிவம் தவிர வன்முறை வடிவில் செய்வதில்லை. ஆனால், அதை செய்வது ஒரு காலத்தில் பார்ப்பனீயத்தால் பாதிக்கப்பட்ட, இன்றைய ஜாதி இந்துக்கள். வரலாற்றை, இளைஞர்களுக்கு எடுத்துரைத்தல் வேண்டும்.

6. ஒருவன் தன் வாழ்நாளில் குழந்தைப்பருவம் முதல் கேட்டறியும் ஒன்றையே பின்பற்றுபவனாக பெரும்பாலும் உள்ளான். தாய்மொழியை படித்தல், பெற்றோரின் மதத்தை தழுவதல் எல்லாம் இதன் வகையே. எத்தனை பேர் கிறிஸ்த்துவத்தை படித்து அது வேண்டாம் என இந்துவாக இருப்போம். அப்பா இந்து, நீயும் இந்து. ஜூடோயிசம், புத்த மதம் எல்லாம் படித்தா வேண்டாம் என்கிறோம்? சோ, இங்கு ஒருவன் ஆரம்பத்தில் கற்பிக்கப்படுவதை அப்படியே பிடித்துக்கொள்கிறான் என்பது தெளிவாகிறது. எனவே, இந்த லிஸ்ட்டில் ஜாதியை சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஜாதி வெறி, விஷ விதை குழந்தைகள் மனதில் வளர் இளம் பருவத்தில் தூவப்படக்கூடாது. சிறு வயதில் ஒருவன் மனதில் இந்த விதை விழுந்துவிடுமாயின் பின் அவனை மாற்றுவது கடினம்.

7.  மன்றல் போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்த்தப்பட வேண்டும். சேவ் தமிழ்ஸ் போன்ற இயக்கங்கள் ஜாதி மறுப்பை முன்னெடுக்க வேண்டும்.

8. ஜாதி வெறியை தூண்டும் விதமாக பொதுவெளியில் பேச நீதிமன்றத்தின் மூலம் Influential ஆட்களுக்கு தடை வாங்க வேண்டும். (கலப்பு திருமண எதிர்ப்பு - ஜாதி  வன்முறையை தூண்டும் விதமாக பேசுபவரக்ள்). இங்கே நமது அரசியலமைப்புச் சட்டம், கலப்புமனத்திற்கு சில சலுகைகளை அளிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லாரும் தன் துணை தேர்ந்துஎடுக்கும் உரிமை - அடிப்படை உரிமை.

9. எல்லாருக்கும் தெரியும், தலித்துகள் கூட்டமாக வாழும் போது தாக்கப்படுவதில்லை என்று. தர்மபுரியில் தலித் இயக்கங்களின் அளவும் செயல்பாடும் வெகு குறைவு. ஜாதி ஒழிப்பை உறுதி செய்யும் அதே வேளையில், சமூக பாதுகாப்பையும் இவர்களுக்கு உறுதி செய்ய வேண்டும்.

10. அறிவூட்டுதல்  மாணக்கருக்கு, அதன் மூலம் அவர்களுக்கு சமூக நீதி என்றால் என்ன என உணரவைத்தல். இது மிக ம்இக முக்கியமான பணி. இல்லையெனில், விஷமரமான ஜாதீயத்தை வேறோடு வெட்டாமல், கிளைகளை மட்டும்  வளர வளர வெட்டுவது போலாகும்.

11. விவசாயம் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் அடி நாதம், அதை மேம்படுத்த நடவடிக்கை வேண்டும் (தனிக்கட்டுரை வரும்)

எனக்கு நன்றாக தெரியும், என் காலத்தில் ஜாதி ஒழிக்கப்படாது என்று. ஆனாலும், சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்ட திருப்தி எனக்கு. மிக மெல்ல நிச்சயம் அது ஒழிக்கப்படும்.



குறிப்பு : இந்தக்கட்டுரை, இணையவெளியில் வரும் நபர்கள் சிறிது சாதீயம் குறித்த முன்னறிவுடன் வருவார்கள் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது.



----- கிளறுவோம்

Monday, November 19, 2012

குப்பை 3 - காமம்

போடா போடி படத்தில் ஒரு வசனம், "சினிமாவுல ஒருத்தன் அனுஷ்க்காவ கட்டி புடிச்சு ஆடுனா ரசிக்கலாம், அதே என் பொண்டாட்டின்னா ரசிக்க முடியாது?". டேய் என்ன தான் சொல்ல வற? இதே கேள்வியே நயன்தாராவை வெச்சு, உனக்கு பாக்குற பொண்ணு கேட்டா? அதென்ன பொண்ணுங்களுக்கு மட்டும் தான் கற்பா? நீ ஆடுனா, ஆட்டுனா ஓக்கே வா? -- இந்த பத்தி இந்த கட்டுரை குறித்த ஒரு ஹிண்ட் :)

தமிழ் இணைய உலகம் எதற்கெல்லாம் பயன் படுத்தப்படுகிறது தெரியுமா? இங்கே இஸ்ரேலின் அரசியல் முதல் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டிற்கு  காரணம் மைனாரிட்டி தி.மு.கவா அல்லது ஜெ.,வா என்பது வரைக்கும் விவாதித்து அறிவிக்க மேதாவிகள் பலர் உண்டு. அப்படியே கொஞ்சம் கூகுள் பக்கம் சென்று "தமிழ்" என டைப்பி தேடுங்கள், உங்கள் நாக்கு தள்ளிப்போகுமென்பது நிஜம்.

தமிழ் என்ற மொழியை தேடினாலே, காமக்கதைகள் அடங்கிய சுட்டிகள் பல முதல் பக்கத்தை நிரப்பும். அட, என்ன இருந்தாலும் வெள்ளக்காரிய பாக்காம தமிழ்ல படிக்கணுமின்னு ஆர்வம் வளர்ந்திருக்கே என நான் ஒரு புறம் மகிழ்ச்சிக்கூத்தாடினாலும், ச்சே அத ஏன் டா தமிழோட லிங்க்கு பண்ணுறீங்கன்னு கேக்காம இருக்க முடியல. பொது வெளி இணையத்தில் , யாரும் காமம் குறித்து வெளிப்படையா விவாதிக்க முன்வருவதே இல்லை. ஆனா, எல்லாருக்குள்ளும் காமம் அரைத் தூக்கத்தில் இருக்கும் மிருகமாய் புரண்டு கொண்டே தான் இருக்கிறது.

இங்கிலாந்திலோ, ஆஸ்திரேலியாவிலோ, லாஸ் வேகாஸிலோ இன்ன பிற ஆடை குறைந்த இடங்களிலோ, எந்த ஒரு ஆணோ பெண்ணோ எல்லா நேரங்களிலும் காமத்தை சுமந்து திரிவது கிடையாது. எல்லாவற்றையும் இலைமறை காய் மறையாக ஒளித்துப் பேசுகிறேன் பேர்வழி என குழம்பும் இந்திய கலாச்சார குட்டையில், ஒரு கண்களில் எந்த நேரமும் காமம் துருத்திக்கொண்டே நிற்கிறது . இங்கே இலை மறை காய் மறையாக பேசப்படுவதாலேயே, அப்படி என்னத்தான்யா மறைக்கறானுங்க என எட்டிப்பார்க்க தோணுது பல பதின்வயதினருக்கு. இங்கே தான் பெண்களை தனியாக அனுப்ப மனம் பதறுகிறோம். எதேச்சையாகவோ, கட்டு மீறியோ , கழுத்துக்கு கீழ் பார்க்காமல் ஒரு விடலையால் மூன்று நொடிக்கு மேல் பேச முடியவில்லை. கடவுளை பார்த்துக்கூட பேசிவிடுவான் போலிருக்கிறது, ஒரு பெண்ணின் கண்ணைப் பார்த்து பேச முடியவில்லை.

கி.ரா நவம்பர் மாத முதல் விகடனில் ஒரு பேட்டியில் இப்படி கேட்டு இருப்பார். "ஒருத்தன் இருவத்து நாலு மணி நேரமும் அதப்பத்தி நெனச்சுகிட்டு இருந்தா அது வியாதி தான?".  இங்க வெளிப்படையா எதையும் பேசக்கூடாது, ஆனா உள்ளுக்குள்ள என் கண்றாவி வேணுமின்னா இருக்கலாம். சமீபத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் அடைத்துக்கொண்ட கழிவறையை கிளறிய போது, டன் கணக்கில் காண்டங்கள் இருப்பது தெரிந்தது.

இது மேற்கத்திய கலாச்சார தாக்கம், அது இது என்றெல்லாம் இங்குள்ள சில கலாச்சார குப்பை பாதுகாவலர்கள் கூச்சல் போடக்கூடும். அதை எல்லாம் காதுலையே வாங்கதீங்க. இதற்கு முழுக்காரணம், நமது வழக்கொழிந்த கலாச்சார சம்பிரதாயங்கள் தாம்.  "திருமணத்திற்கு முன் பெண்கள் உறவு வெக்கலாம்"னு சொன்ன குஷ்பூவ பார்த்து கண்டிச்ச , கண்ணடிச்ச எல்லாரையும் கேக்குறேன். அவங்க சொல்லாட்டி கூட, அது இங்க இல்லையா? இன்னோருத்தன் பொண்டாட்டிய மனசால நினைச்சா கற்பு போகும்ங்கற ரீதில கணக்கெடுத்த உத்தம புருஷர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுல தான் இருப்பாங்க.

ஒருவன் தான் பால் குடிக்கும் உறுப்பை எப்படி அறிகிறான். அந்தப்பெயராலா? இல்லை. அது உறவுக்கு முன்னால் விளையாடுவதற்காக படைக்கப்பட்டதென்றே அவன் முதன் முதலில் அறிகிறான். அப்போது தவறு இருப்பது உங்களிடம் தானே? நீங்கள் அவனுக்கதை சொல்லிக்கொடுக்க தவறியதால் தானே, அது இன்னதென்று அறிய அவன் புத்தகங்களையோ/நண்பர்களையோ/இணையத்தையோ நாட வேண்டி இருந்தது?

பாடலில், சினிமாவில் ஆபாசம் என்று கதறுபவர்களை பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. அய்யா கனவான்களே, எல்லாருக்கும் (13 வயது முதல்) இணையும் தெரிகிறது, அலைபேசி தெரிகிறது, பலான படம் போடும் தியேட்டர்கள் தெரிகிறது. இதிலெல்லாம் கெடாத ஒருவனா, மும்தாஜோ, மல்லிகா ஷெராவத்தோ ஒரு சிறிய ஐட்டம் சாங்கில் ஆடுவதை பார்த்து கெட்டு விடப்போகிறான். இங்கே "கெட்டுவிடப்போகிறான்" என்ற சொல்லே அபத்தமாக படுகிறது. ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடலை ரசிப்பது போலவே, சூர்யாவின் சிக்ஸ் பேக் உடலும் பெண்ணால் ரசிக்கப்படும் என்பதே என் கருத்து. பெண்ணை வெறும் பதுமையாக பார்ப்பதாக என்னை பெண்ணியவாதிகள் தூற்றக்கூடும். ஆனால், பெண்கள் அப்படி ஆண் நடிகர்களை ரசிப்பார்களா இல்லையா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

பாலியல் கல்வியை எதிர்க்கும் அமைப்புகள், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் அமைப்புகளே அன்றி வேறில்லை. மேற்கத்திய நாடுகளில், ஒரு பெண்ணோ ஆணோ பிடித்த வரை சேர்ந்து வாழக்கூடிய நடைமுறை உள்ளது. ஆனால், இந்தியாவில் குடும்ப அமைப்பு சிதைந்து, விவாகரத்தை நோக்கி எல்லாரும் ஓடும் நிலை வந்த போது, இந்தியா மேற்கத்திய மோகம் கொண்டு அலைவதாக கொக்கரித்தன இதே இந்து அமைப்புகள். ஆனால், இதே போன்றதொரு நிலை, பண்டைய தமிழ் நூல்கள் பலவற்றில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதை வசதியாக மறந்து/மறைத்து விட்டார்கள்.

காதலர் தினத்தில் காதலர்களின் மீது வன்முறையை ஏவி விடும் அமைப்புகளையும், அதை கண்டும் காணாமல் விட்ட போலீஸாரையும்  கண்டிக்காத உங்களுக்கு, மெரீனாவில் காம சரசம் நடத்துபவனை காறித்துப்ப மட்டும் என்ன உரிமை இருக்கிறது. உலகில், எல்லா இடங்களிலும் கள்ளக்காதல், இணைக்கு துரோகம் இழைத்தல் ஆகியவை உண்டு. ஆனால் இந்தியாவில் மட்டும் தான், தன் கணவனை கொலை செய்யும் நிலைக்கு அது இட்டுச்செல்கிறது. காரணம், இந்த கலாச்சாரத்தின் அமைப்பு அப்படி. பிடிக்கவில்லை எனில் பிரிந்து விடலாம் என்ற நிலை இருப்பின், இது போன்ற கொலைகள் நிகழ வாய்ப்புண்டா?

ப்ராய்ட் (Freud) சொல்லுவார், "ஆண்- பெண் உறவு காமம் கலப்பில்லாததாக இருக்க வாய்ப்பே இல்லை". தந்தை-மகள், அம்மா-மகன், தோழி என எந்த உறவாக இருந்தாலும் சரி. இதை நான் ஒரு பொதுவெளியில் உரையாடும் போது, என் தாய்-தந்தை முன் சொல்ல முடியுமா? நிச்சயம் வாய்ப்பில்லை அல்லவா? அப்படியே நான் துணிந்து சொன்னாலும், என்னை தவறாக வளர்ந்த்து போல சித்தரிக்கபடுவேன் அல்லவா?

பள்ளி (உயர் நிலை) , கல்லூரி என்ற அமைப்புகள் வெறும் கல்வி கொடுக்கவா உருவாக்கப்பட்டது? இங்கே உள்ள கல்வி முறை குறித்து காறித்துப்ப ஆயிரம் உண்டு அதை பிறகு வைத்துக்கொள்வோம். ஆனால், மிக முக்கியமாக கல்லூரி என்ற அமைப்பு உருவாக காரணம், பல்வேறு  சூழ்நிலைகளை சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணையும் போது, ஒருவன் பண்படுவான். பல்வேறு கலாச்சாரங்களையும், பல குணம் உள்ள மனிதர்களையும் அவன் எதிர்கொள்ளும் போது அவன் பக்குவமடைவான். இது அவனை எதிர்கால வாழ்க்கைக்கு தயார்படுத்தும் என்பதே. இன்று பெரும்பாலான பெற்றோர் நாடும் பொறியியல் கல்லூரிகளிலும், பிரபல பள்ளிகலும் நிலை எப்படி உள்ளது என உங்களுக்கு தெரியும் தானே! நன்றாக சிந்தித்து பாருங்கள், நாங்கு வருடங்களாக எதிர் பாலினத்தின் அருகிலேயே இருந்தும் பேசாத பழகாத ஒருத்தன்/ஒருத்தி சட்டென மென்பொருள் நிறுவனத்தில் வேலை, கை நிறைய சம்பளம் திடீர் சுதந்திரம் எல்லாம் கிடைத்தால் என்ன செய்வான்/செய்வாள்?

என்ன சொல்ல வர்ர? அப்ப எல்லாத்தையும் அவுத்து விட்டுடலாமா? ஒரு நெறி முறையே வேணாமா? விலங்கு போல எல்லாரோடும் புணரலாமா? என கேள்விக் கணை தொடுக்கும் சகோதர சகோதரிகளே, உங்களிடம் ஓரே ஒரு கேள்வி "இப்ப மட்டும் இங்க என்ன வாழுதாம்?". இன்றைய பிரச்சனை என்னவென்றால், நான் (ஒரு ஆணோ பெண்ணோ) திருமணத்திற்கு முன்னோ பின்னோ உறவு வைப்பது அல்ல. அது குறித்து வெளிப்படையாக பேசுதல் மட்டுமே. வெளிய சொல்லாம வெச்சுகிட்டே , ஓக்கே!!

இப்போதைய தேவை, காமம் குறித்த கல்வி. காமம் குறித்து பேச மேடை. காமம் குறித்த விழிப்புணர்வு. இதோடு நின்று விடாமல், காமத்துக்கும் காதலுக்கு உண்டான வேறுபாட்டையும் வளர் இளம் பிராயத்தில் விளக்குதல் வேண்டும். தனக்கான துணையை தானே தேர்ந்தெடுக்கும் உரிமை, சுதந்திரம் ஆகியவற்றோடு அது குறித்த தெளிவும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இதைச் செய்யும் வரை, ஆயிரம் மதவாதிகள் வந்தாலும் ஒண்ணும் புடுங்க முடியாது :)

- கிளறுவோம்

Tuesday, November 13, 2012

குப்பை 2 - வாழ்த்துக்கள் சார்

"ஹேப்பி தீபாவளி மச்சி" சொல்லி அதிகாலை ஏழு மணிக்கெல்லாம் ஒரு போன் கால். மனதுக்குள் அவனை சபித்தாலும், "சேம் டூ யூ மச்சி, எங்க துப்பாக்கியா?" என இளித்தவாறே கேட்டு வைத்தேன். தீபாவளிக்கள் எல்லா நாட்களைப்போலவும் தான் விடிகின்றன. நரகாரசூரனின் அலறலோ , பூமித்தாயிம் கதறலோ நான் கடந்து வந்து 22 தீபாவளிகளில் எங்கும் காணோம். எங்கும் மகனை வேறொரு பிறப்பெடுத்து கொன்ற ஒரு அப்பாவின் பராக்கிரமத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். நிர்வாண நிலையை அமைதியோடு கொண்டாடும் மகாவீர் வம்சாவழிகளையும் காணவில்லை.

பலருக்கு தீபாவளி எப்போதும் போல ரோட்டோரங்களிலோ, நடை பாதையிலோ கடந்து விடுகிறது. பஸ் டிரவைர், காவல் துறை நண்பர்கள், ஐஸ் வண்டி தள்ளுபவர், அனுமார் வேஷம் போட்டு பிச்சை எடுப்பவர், பஞ்சு மிட்டாய் விற்பவர் என யாரோ ஒருவர் இன்று கொண்டாட்டத்தின் சுவடே தெரியாமல், அங்குமிங்கும் ஓடி வேலைகளை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார். (இதை விசையில் அழுத்துகையில் வெளியில் ஐஸ் வண்டி ஒன்றின் சத்தம் கேட்கிறது)

நண்பர்கள் பலர் தீபாவளி வாழ்த்துக்களை போன் பண்ணியும், இணையம் வழியாகவும் தெரிவித்தார்கள். நானும் பதிலுக்கு "ஹேப்பி தீபாவளி மக்களே" எனச் சொல்லி வைத்தேன். அதில் சிலர் " ரெண்டு விரல நீட்டுறீங்களே நீங்க ஏ.டி.எம்.கே வா" என்ற ரீதியில் "நீங்க பகுத்தறிவுவாதி தானே, எதற்கு தீபாவளி கொண்டாடுறீங்கன்னு" வெறியோட கேட்டாங்க. நான் சொன்னேன் "அண்ணே, நீங்க வாழ்த்து சொன்னீங்களேன்னு நானும் பதிலுக்கு உங்களுக்கு வாழ்த்து சொன்னேன், என் கொண்டாட்ட லட்சணத்தை நீங்கள் பார்த்தீர்களா?" என்றேன்.

இப்படித்தான் இருக்கிறது, நமது பகுத்தறிவின் லட்சணம். இங்கே எவருக்கும் பகுத்தறிவே வேலை செய்யவில்லை என்பேன் நான். ஏன் எனில், இவர்கள் நாத்திகத்தையும் பகுத்தறிவையும் போட்டு குழப்பித்தொலைக்கிறார்கள். அந்த வார்த்தைகளின் அடையாளமும் அர்த்தமுமே மாற்றப்பட்டு விட்டது இங்கே.

நண்பர் ஒருவர் இதே கேள்வியை கேட்ட போது சொன்னேன் "ஆம், நான் தீபாவளி, சரஸ்வதி பூஜை , பக்ரீத் , கிருத்துமஸ் மட்டுமல்ல செவ்வாய் வியாழன் என அனைத்தையும் கொண்டாடுகிறவன். எனக்கு காரணமே தேவையில்லை. ".  வாழ்க்கை மட்டுமல்ல, மரணத்தை கூட கொண்டாடலாம் என்கிறது ஜென். நான் ஜென் நிலையில் இருக்கிறேன் என்றேன். நண்பர் ஒன்றும் சொல்லவில்லை.

@masilan மாசிலன் என்ற ஒருவர், தீபாவளியின் திணிப்பு குறித்து சில கீச்சுக்களை இட்டு இருந்தார்.  அதன் சாரம், இயற்கையை வழிபட்டுக்கொண்டிருந்த திராவிடர்களிடம், ஆரியர்கள் இந்த Deity கலாச்சாரத்தையும், வர்ணாசிரமத்தையும் பரப்பினார்கள் என்பதே. அது குறித்த எந்த ஐயப்பாடும் எனக்கு இல்லை. முதலில் ஒரு காப்பியத்தை, காப்பியமாக கதையாக பார்க்கும் மனோபாவம் நம்மிடம் இல்லாமற் போனது பரிதாபத்திற்குரியதே. யாருக்கு தெரியும் இருநூறு ஆண்டுகள் கழித்து வரப்போகும் மடையர்கள், ஹாரி பாட்டரை நினைத்துக்கூட கொண்டாடலாம்.

அவருடன் இது குறித்து மேலும் விவாதிக்கும் போது, இந்த கொண்டாட்டங்களின் மூலம் , இந்த கதாப்பாத்திரம் தன்னை இருத்திக்கொள்வதாகவும், இந்த கொண்டாட்டம் ஒழியும் வரை அந்த கதாப்பாத்திரம் உண்மையென்றே மக்கள் நினைப்பார்கள் என்றும். கவன ஈர்ப்புக்காக, இந்த நாளை கொண்டாடாமல் புறக்கணிப்பதாகவும் கூறினார். என்னால் , இதை முழுதும் ஏற்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. காந்தி ஜெயந்தியையே "காந்தியை" ப்ரோஜக்ட்  செய்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய ஆதாயத்தை அறுவடை செய்யும் கொண்டாட்டம் என்கிறேன் நான். அதானல், இதும் அது போன்ற ஒன்றே என்பதில் சந்தேகமேதுமில்லை.

நிற்க, எனக்கு நிகழ் கால தலைமுறை குறித்த கவலை சிறிதும் இல்லை. தான் பெரிய புடுங்கி என்ற மன நிலை நான், நீங்கள் என பாரபட்சமின்றி எல்லோரிடமும் இருக்கிறது. நம்மை மாற்றுவது கடினம். ஆனால், எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி, இந்தக்கால குழந்தைகள் நான் பதின் பருவத்தின் கேட்க தொடங்கிய கேள்விகளை- சந்தேகங்களை 6-7 வயதில் கேட்கிறார்கள். "இது பெரியவங்க விஷயம், சொன்னத செய்" போன்ற "அப்பாவின் வார்த்தைகள்" வழக்கொழிந்து போய்விட்டன. நாம் பதில்களை தேடுகிறோம் அல்லது தெரியாது என ஒத்துக்கொள்கிறோம்.  இன்று தகப்பன் - குழந்தைக்கு இடையே உள்ள நெருக்கமும், நமது தெள்ளறிவும் நம்மை பொய் சொல்ல விடுவதில்லை. எழுதிவைத்துக்கொள்ளுங்கள் , இன்னும் அரை நூற்றாண்டுக்குள்ளாக இந்த மூடப்பழக்கங்கள் பெரும்பாலும் மறைந்து வெறும் கொண்டாட்டம் மட்டுமே மீதமிருக்கும். ஒரு குழந்தை தாயை கண்டது போல, நட்புகளோடு இணைந்த ஒரு கொண்டாட்டம், அது மட்டுமே நிஜம்.

நிற்க, இது போன்ற ஒரு நிலைக்கு செல்ல, இன்னும் அரை நூற்றாண்டில் முடியும் என்பது என் திட்டவட்டமான நம்பிக்கையாக இருந்தாலும், மிகத்தீவிரமாக சமய-அரசியல் நடக்கும் ஒரு நாட்டில் இது சாத்தியமா என்ற கேள்வியும் எனக்கு எழாமலில்லை. இங்கே ஒரு மடத்தனம், ஆழப்பதியவிடப்பட்டு இருக்கிறது. வேப்பரமர கோவில்களில் வெறும் காற்று மட்டுமல்ல, அரசியலும் இருக்கிறது. கோவிலை இடிக்கக்கூடாது எனப்போராடுபவர்கள், போராடுவது கோவிலைத்தவிர வேறு சில காரணங்களுக்கும் சேர்த்தே தான். குண்டு வெடிப்புகளும், போராட்டங்களும், இராமர் பாலம், அய்யோத்தி குறித்த தீர்ப்பும், உங்களுக்கு இந்த விஷயம் சென்சிடீவ் என நினைவு ஊட்டுவதற்காகவே. எல்லாரும் மறந்துவிட்டு இருந்தாலும் கூட, உணர்ச்சிகளை தூண்டி அதன் மூலம், அரசியல் நடத்துவதே இந் நாட்டின் இன்றைய நிலைமை.

உங்களுக்கு இராமாயணம் கதை என்று தெரிந்தாலும், உங்களை நீங்களே சந்தேகிக்கும் படி செய்து விடுவது தான் ஆர்.எஸ்.எஸ் அரசியலின் அடி நாதம். உங்களுடைய தெளிவு, அவர்களுடைய பிழைப்பு நாறுவதன் அறிகுறி. நன்றாக கவனித்து பாருங்கள், தீபாவளி ஒரு அனைத்து மத கொண்டாட்டம் என்ற பிம்பம் எழுவதை, இந்து அமைப்புகள் பெரும்பாலும் எதிர்த்தே வந்து இருக்கின்றன. மதம் தான் தங்கள் பிழைப்பு என இவை மிகத்தெளிவாக உணர்ந்திருப்பதே அதற்கு காரணம்.

இது நேரடியாக உங்களை அடிமைப்படுத்துவதை விட கொடுமையானது. மறைமுகமாக, உங்களை மதத்தின் பெயரால் அடிமைபடுத்தும் வேலை இது. நிற்க, மீண்டும் இங்கே, இந்த பகுத்தறிவு புடுங்கிகள் எல்லாம், ஏன் இந்து மத பண்டிகை பத்தியே பேசுறாங்க, மத்த மதமெல்லாம் இவனுங்க கண்ணுக்கு படாதா என்ற பின்னூட்டம் வரும்.

சொல்றேன், இங்கே நாம் தான் மெஜாரிட்டி, இங்கே இந்துக்கள் தான் அதிகம். இந்துக்களை வைத்த பிரதான அரசியலே அதிகம். சிறுபான்மையினரை வைத்து அரசியல் நடந்தாலும், இதைக்காட்டிலும் அது ஒன்றும் பெரிதல்ல என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் 10 நண்பர் குழுவில் எத்தனை சிறுபான்மை நண்பர்கள் இருப்பார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆதாலால், இந்து அரசியலை மட்டும் தனியே எடுத்துப்பேசும் நியாயமும் உங்களுக்கு புரியும்.

இங்கே பகுத்தறிவு உள்ளவர்கள் அனைவரும் ஒதுக்க வேண்டிய விஷயம், முட்டாள்தனமான சம்பிரதாயங்களை மட்டுமே. எண்ணெய் தேய்த்தலோ, கோவிலுக்கு செல்லுதலோ, சில ஓவிங்களின் முன் நமஸ்கரித்தலோ என் கொண்டாட்டத்தில் என்றுமே பங்கு வகித்ததில்லை. அது தீபாவளியாக இருந்தாலும் சரி, நண்பர்கள் தினமாக இருந்தாலும் சரி. நீங்கள், வெளிப்படையாக Atheism பேசி விட்டு, முக்காடு போட்டுக்கொண்டு போய் கும்பிடுபவனை கணக்கில் கொண்டு பேசுவது, காங்கிரஸில் போய் காமராஜர் போன்ற தலைவரை தற்போது தேடுவது போல. கிடைக்காது எனத்தெரிந்தே தங்கள் தரப்புக்கு வலு சேர்க்கும் பொருட்டு, இந்தக் களவாணிகளை கணக்கில் சேர்க்கிறார்கள்.

இதில் மட்டும் தான் சுற்றுப்புற சூழல் கெடுமா, நீங்கள் ஓட்டும் வண்டி, காரு, பிரிட்ஜு எல்லாம் எனக் கேட்பவர்களுக்கு, ஒரு சின்ன தகவல். ஒரு ஆண்டின் மொத்த டாக்ஸிக் புகைகளில் 30 சதவீதம், இந்த ஒரு வாரத்தில் வெளியிடப்படுகிறது.

கொண்டாடுங்கள், வாழ்க்கைய , ஒவ்வொரு நொடியையும் ஏன் மரணத்தையும் கூட.  ஆனால், கொண்டாட்டத்தின் வழிமுறையையும், காரணத்தையும் அறிதல், தெளிதல் அவசிய. பெரியார் சொன்னதையே சொல்லுறேன் "நான் சொல்லுறேன்னு கேக்காதீங்க...உங்களுக்கும் மூள இருக்குல்ல, யோசிச்சு பாருங்க..."



--- கிளறுவோம்



Saturday, November 10, 2012

குப்பை 1 - குழந்தைகள் உலகம்

"ச்சை... இந்தக் குழந்தைங்கள சமாளிக்கறதுக்குள்ள..." அலுத்துக்கொண்டார், அந்த மிலிட்டரி நண்பர். மிஷின் கன்களோடும், சத்தத்தோடும், தோரணையோடும் வாழ்க்கையை அணுக பழகிவிட்டிருந்தவரை பேரக்குழந்தைகளை கவனிக்கச் சொன்னால் வேறு எப்படி இருந்திருக்கும்.

அவர் என்னிடம் சொன்னார் , "ஒரு நாள் இந்தக்குழந்தைங்களோட விளையாட விடாப்புடியா கூட்டிட்டு போச்சு தம்பி, போலீஸ் விளையாட்டாம், நான் உணர்ச்சி வசப்பட்டு திருடன் வேஷம் போட்டு இருந்த குழந்தைய இறுக்க புடிச்சு தூக்கிட்டேன், அதுக்கு அப்பறம் அதுங்க என்னைய விளையாட கூப்பிடுறதே இல்ல... ஆனா அவங்க விளையாடுறப்ப நான் கவனிப்பேன், திருடன போலீஸ் குழந்தை புடிக்காது, சும்மா தொடும், அப்பறம் ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டே கட்டிப் புடிச்சுக்குவாங்க" என்றார்.

"நாட்டுல கூட இப்ப அதான் சார் நடக்குது" என்றேன்.

ஆனால் யோசித்து பார்க்கையில் ஒரு உண்மை சட்டென புரிகிறது. என்றேனும் ஒரு நாள் நீங்கள் குழந்தைகளின் உலகத்தை அணுகி இருக்கிறீர்களா, அவர்களோடு சேர்ந்து பூதமாக, அவுட் ஆனவனாக, கண்ணைக் கட்டிக்கொண்டவனாக, துரத்துபவனாக, ஓடுபவனாக, ஸ்பைடர் மேனாக, பவர் ரேஞ்சர்ஸாக, டோராவாக உறவாடி இருக்கிறீர்களா? குழந்தைகளின் உலகம் அதி அற்புதமானது. நீங்கள் நிஜ உலகில் ஒரு நாட்டின் முதலமைச்சராக இருக்கலாம், பெரிய நிறுவனத்தின் நிர்வாகியாக இருக்கலாம். ஆனால், ஒரு குழந்தையின் சமஸ்தானத்தில் உங்களால் ஒரு சிப்பந்தி வேலையைக்கூட சிறப்பாக செய்யமுடியாது. உங்களுக்கு நிர்வாகம் தெரியலாம், ஆனால் குழந்தைகளைத் தெரியாது. உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். நீங்கள் எந்தப்பணி செய்பவராக இருந்தாலும் சரி, இதை முயன்று பாருங்கள். உங்கள் பணி சார்பான விளையாட்டை விளையாடலாம் என உங்கள் குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் உங்கள் கதாப்பாத்திரத்தையே விளையாண்டு பாருங்கள். நீங்கள் தினசரி செய்யும் கண்ணில் படாத தவறையும், உங்கள் குழந்தை சுட்டிக்காட்டும். குழந்தைகளின் அந்த அதி அற்புத உலகத்தில், உங்களால் எந்த வேடத்தையும் சரியாக செய்ய முடியாது!


என் அம்மா ஆசிரியலாதலால், பள்ளிக்கு அடிக்கடி சென்று வரும் வாய்ப்பும், அந்த குழந்தைகளின் சினேகமும் இயல்பாகவே கிட்டி இருந்தது. ஒரு முறை அவர்கள் கண்ணாமூச்சி ஆடும் போது பார்த்தேன். சத்தியமாக ஆச்சிரியப்பட்டுப்போனேன். அவர்கள் எந்தத் துணியும் உபயோகிக்கவில்லை. கையால் கண்ணை மூடியபடி விளையாண்டு கொண்டு இருந்தார்கள். ஆனாலும், ஒருவரேனும் கண் திறந்து யாராவது தென்படுகிறார்களா என்று பார்க்க முனையவில்லை.

ஒரு பையனை அழைத்து நைசாக கேட்டேன்

"ஏன் டா, கண்ணத்திறந்து லேசா பாத்து இருந்தா யாரையாவது தொட்டு இருக்கலாம் இல்ல..."

"இல்லண்ணே, இந்த வெள்ளாட்டுல கண்ண தொறக்க கூடாது...." சொல்லி விட்டு அடுத்த சுற்று விளையாட போய்விட்டிருந்தான் அவன். எனக்கோ பொட்டிலடித்தாற் போல் ஆகிவிட்டிருந்தது. என்ன பண்ணிக்கொண்டிருக்கிறேன் நான்? சற்று நிதானித்து பார்த்தால் இதைத்தான் எல்லோரும் எப்போதும் செய்து கொண்டிருக்கிறோம்.

குழந்தைகளை பெரியவர்களாக்கும் முயற்சியில் குழந்தைகளிடம் இருக்கவேண்டிய குழந்தைத்தன்மையை கொன்று கொண்டு இருக்கிறோம். இது வரை எனக்கு முத்தம் கொடுத்த எந்த குழந்தையும் நான் என்ன ஜாதி எனக்கேட்டதில்லை. ஆனால், பல முறை கவனித்திருக்கிறேன், முத்தம் பெறுவதற்கு முன் குழந்தையின் ஜாதியை விசாரித்தற்பவர்களை. ஒஷோ சொல்வார், "எனது வாழ்க்கையில் நிகழ்ந்த அழகான விஷயம் எனது குழந்தைப் பருவம் தான். எனக்கு இந்த ஏட்டுக்கல்வியை கட்டாயப்படுத்தி புகுத்த முயற்சிக்காத எனது பாட்டிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்".

குழந்தைகளுக்கு நாம் புகுட்டுவது கல்வியே அல்ல. இந்த சமூகக் குப்பைகளை மேலும் அசுத்தமாக்க, அந்த அசுத்தம் தெரியாமல் அதன் மீது வாசனை திரவியம் தெளிக்கவே நாம் அவர்களுக்கு பழக்கி வருகிறோம். உ ண்மையிலே ஒரு குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை Opinion of Choice அதாவது தேர்ந்தெடுக்கும் உரிமையை நாம் இந்த மண்ணில் பிறக்கும் எந்தக்குழந்தைக்கும் வழங்குவது கிடையாது. என்னவென்று கேட்கிறீர்களா? ஜாதி, மதம் , கடவுள் , படிப்பு, வேலை, நட்பு வட்டம் என அடுக்கிக்கொண்டே போகலாம். சிலருக்கு முட்டாள்த்தனமாக தெரியலாம் இதில் ஜாதி மதத்தை சேர்த்தது, ஆனால் கூர்ந்து படியுங்கள்.

நீங்கள் ஒரு கதவை திறந்து கொண்டு ஒரு வீட்டுக்குள் செல்வதாக வைத்துக்கொள்வோம். இப்போது, யாருக்கு யார் கட்டுப்பட்டவர், யாருக்கு யார் உரிமை கொண்டாடலாம்? உங்களையும் வீட்டையும் பாதுகாப்பதால், கதவு உங்களுக்கு உரிமை கொண்டாடலாமா? அப்படித்தான் குழந்தைகளும், இந்த உலகம் என்னும் வீட்டை அவர்கள்களுக்காக திறந்து விட்ட கதவுகள் நீங்கள். பெற்றவர்கள்  என்ற வார்த்தயிலேயே, நீங்கள் குழந்தையை பெற்றவர்கள் (You're receivers) என்பது உங்களுக்கு தெளிவாகியிருக்க வேண்டும். உங்களுக்கு அவர்கள் மீது உரிமை கொண்டாட சிறிதளவேனும் நியாயமில்லை, அவர்களிடம் அன்பு செய்தலும், அன்பை பெறுதலுமே உங்களுகிடப்பட்ட கடன். அப்படி இருக்க, என் ஜாதி தான் என் பிள்ளை எனச் சொல்வது எந்த வகையில் நியாயம். ஒரு குழந்தை பிறந்தது தொட்டு, இவர் தான் உன் கடவுள், இது தான் உன் சுற்றம் எனத்தொடங்கி இந்த ஜாதிப்பெண்ணைத் தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது வரை நாமே வரையறுக்கிறோமே, இது எந்த வகையில் நியாயம்?

இவை இன்னின்னவென்று மட்டும் ஒரு குழந்தைக்கு விளக்கி உன் பாதையை நீயே தேர்தெடு எனக்கூறும் எத்தனை பெற்றோர்களை உங்களுக்கு தெரியும்?  நம் குழந்தைக்கென ஒரு தனி பார்வை , ஒரு கோணம் உருவாக வேண்டுமென்று என்றேனும் கவலை கொண்டிருக்கிறோமா? அவர்கள் நம் கையை மீறி, நமது அறிவின் எல்லையை மீறி எங்கும் சென்று விடக்கூடாது என்பதில் நாம் எவ்வளவு கவனமாய் இருக்கிறோம்.

நமக்கே விளங்காத, நம்மால் விவரிக்க அல்லது நியாப்படுத்த முடியாத நியதிகளை ஒரு அப்பாவிக் குழந்தையின் செவிகளில் செலுத்துவதை விடவும் ஒரு பெரிய பாவம் இருக்க முடியாது. ஆனால், சிறிதேனும் கூச்சமே இன்றி இந்த பாவத்தை நாம் சிரமேற்கொண்டு வருகிறோம். காரணம், நாமும் இதே சமூகச் சாக்கடையில் வளர்ந்த கொசுக்கள் தான். சுய சிந்தனையையும், தனியான ஒரு கோணத்தையும் உருவாக்குவதை விட்டுவிட்டு, சந்ததியை உருவாக்குகிறோம்.

மலாலா யூசுப் பற்றி பலரும் பெருமையாக பேசும் போது , அந்தச்சிறுமி சொன்ன வாசகம் ஒன்றை குறிப்பிடுவார்கள் "எனக்கு தரையில் அமர்ந்து படிப்பது குறித்து சிறிதேனும் அக்கறையில்லை. எனக்கு வேண்டியதெல்லாம் கல்வி தான். எங்கு அமர்ந்து படித்தாலும் சரி"என்கிறாள் அவள். நான் அவர்களிடம் சொல்வேன் " இவர்களிடம் அவள் கல்வி கற்பதற்கு சும்மா இருந்துவிடலாம்" என்பேன். மிகுந்த ஆத்திரத்தோடு என்னிடம் சண்டைக்கு வருவார்கள். பிறகு அவர்களிடம் " ஒரு பெண்ணை, என்ன காரணமாய் இருந்தாலும், ஒதுக்கி பிரித்து தரையில் அமர வைக்க வேண்டும் என நினைப்பவன்/ள் ஒரு ஆசிரியனாக ஆசானக இருக்க தகுதி உள்ளவனா? அவனிடம் கற்பதன் பெயர் கல்வியா... அந்தக்கல்வியில் அவன் கக்கிய நஞ்சு அல்லவா தோய்க்கப்பட்டு இருக்கும்" எனக் கூறிய பின் அமைதியடைவார்கள்.

நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரை எனக்கு சில வருடங்களாகத் தெரியும். ஒரு மணி நேரம் அளவாளவிக்கொண்டிருந்தோம். பின்  கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டிருந்த அவர் மகனை அழைத்து வந்து பாடச்சொன்னார். அவனுக்கு ஒரு ஏழு வயதிருக்கும்.  சட்டையின் நுனியை திருகிக்கொண்டே, ஆங்கில ரைம்ஸ் சிலவற்றை பாடிக்காட்டினான். அவர் ஒரு பெரிய மென்பொருள் பொறியியலாளர். பையனை, சில லகரங்கள் செலவில் பெரும் தனியார் பள்ளி ஒன்றில் படிக்க வைத்து வந்தார். பையனை பார்த்தேன், பாடி முடித்து விட்டு, மீண்டும் போய் கம்ப்யூட்டரில் அமர்ந்து விளையாடத்தொடங்கினான்.

"என் சார், பையன வெளியில அழைச்சிட்டு போய் விளையாட வெக்கலாமே, இந்த வயசில போய், வீட்டுக்குள்ளையே" என இழுத்து நிறுத்தேன்.

"இல்லப்பா, இந்த ஏரியா ஒரு மாதிரி, இந்த பசங்களோட எல்லாம் சேந்தா இவனுக்கு இவனுங்க பழக்கம் ஒட்டிக்கும்... மோர் ஓவர் அவன் விளையாடுற கேம்ஸ் எல்லாமே, நான் சரி பார்த்து வாங்குனது.. அவன் வயசுக்கு அவன் மூளைய பன் மடங்கு பெறுக்கும். பின்னாடி கம்யூட்டர் இன்ஜினியர் ஆகணும் இல்ல  " என்றார்.

ஒரு ஏழு வயது பையனின் கல்வியை தீர்மானிக்க ஒரு தகப்பனுக்கு உரிமை யார் கொடுத்தது. அவனால் எதிர்க்க முடியாது மற்றும் அவன் என் பணத்தில் குளித்து , உண்டு , உடுத்துகிறான் என்ற கர்வமே அன்றி வேறொன்று இருக்க முடியுமா?

இதை நான் அவரிடம் கேட்கையில் "முட்டாள் தனமான வாதங்கள். என்ன சொல்ல வர்ற. ஒரு தகப்பனா, என் பையனுக்கு என்ன நல்லது கெட்டதுன்னு நான் சொல்லக்கூடாதுன்னு சொல்றியா?" என்றார்.

"அப்படி சொல்ல சார், எது நல்லது கெட்டது ந்னு சொல்லுங்க. ஆனா, அவனை தீர்மானிக்க விடுங்க. அவன் கெட்ட வழியையே தேர்ந்து எடுத்தாலும் சரி, அது தப்புன்னு அவனே உணர ஒரு வழி கண்டு புடிங்க. ஏன்னா ஒரு வேள உங்களுக்கு கெட்டதா படுற சில விஷயங்கள், மத்தவங்களுக்கு சரியா படலாம் இல்ல...."

"என்ன சொல்ல வர்ற... அவன் எந்த பொண்ணோட சுத்தனாலும், நைட்டு பார்ட்டிக்கெல்லாம் போனாலும் அப்படியே விட்டுரு ந்னு சொல்றீயா?"

"சார், அவனுக்கு ஏழு தான் சார் வயசு...  நான் என்ன சொல்லுறேன்னா, அவனுக்கு பார்ட்டின்னா இன்னது, அதுல இது கெட்டது, இது நல்லதுன்னு சொல்லுங்க, அவனா போகணுமா வேணாமான்னு தீர்மானிக்கட்டும். பின்னாடி அவன் ஒரு இன்ஜினியர் ஆகி, வெளி நாடு போகும் போது, காய்ஞ்ச மாடு பாயிற மாதிரி பாஞ்சா என்னா செய்வீங்க?"      ####

ஒரு நாளில் பேசி முடிகிற விஷயமா இது, ஆனாலும் என்ன சொன்னாலும் சரி, அவர் மாறுகிறவராக இல்லை. ஆட்டு மந்தை கூட்டத்தில் தன் மகன் இருந்து விட்டுப்போகட்டும் அதனால் பிழையில்லை, ஆனால், சுய சிந்தனை என்ற பெயரில் தனது கவுரவம் கெடும் வகையில் ஏதேனும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தார் அவர்.

இந்திய சமூகச்சூழலின் சாபக்கேடு இது. இங்கே யார் உருவாக்கினார்கள் எனத்தெரியாமலேயே, மரியாதை/கவுரவத்திற்கான அளவுகோல் அச்சிடப்பட்டு இருக்கிறது. சமூகச்சாக்கடையில் இரண்டற கலந்து விட வேண்டும் என்ற அச்சத்தில், அது குறித்த கேள்விகள் முளையிலேயே கிள்ளப்படுகின்றன. இது பெரியவர்கள் விஷயம் என குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தட்டிக்கழிப்படும் ஒவ்வொரு கேள்விக்கு பின்னாலும், அந்த கேள்விக்கு விடை தெரியாத, விடைக்கு விளக்கமோ நியாயமோ தெரியாத கையாலாகத்தனம் ஒளிந்து கொண்டு இருக்கிறது.

அந்த நண்பரிடம் விடை பெற்று திரும்பும் போது கவனித்தேன். வேலி ஓரமாக ஒரு சிறுவன் நின்று இவனோடு ஏதோ சைகையில் பேசிக்கொண்டு இருந்தான். பதிலுக்கு இவனும் சைகையிலேயே பதில் சொல்லிக்கொண்டிருந்தான் "அப்பா வெளிய போகட்டும் டா"

நான் சிரித்துக்கொண்டேன். குழந்தைகளின் அந்த அதி அற்புத உலகத்தில், உங்களால் எந்த வேடத்தையும் சரியாக செய்ய முடியாது!

--- கிளறுவோம்

#### - இந்த இடத்தில், இதன் தொடர்ச்சியாக எனக்கும் அவருக்கும் இது தொடர்பாக ஒரு நீண்ட விவாதம் நடந்தது. அதில் பாலியல் கல்வி முக்கியமாக பேசப்பட்டதால், அது அடுத்த வார குப்பையில் வெளிவரும்.

Friday, November 9, 2012

குப்பை - ஓர் அறிமுகம்

குப்பை என்ற இந்த Labelலில் வெளிவரும் பதிவுகள் குறித்த குறிப்பு.

மழை , மௌனம் , காதல் இப்படி எதோ ஒன்று கவிதை எழுத கிடைக்காமல் போய் விடாது. நானும் மழையின் நினைவாகவோ, நேற்று படித்த கவிதை தொகுப்பின் நீட்சியாகவோ ஏதோ ஒன்றை கிறுக்கிவிட்டு, ஆகச்சிறந்த பதிவு என அதற்கு பின்னூட்டம் பெறுதல் இன்னும் கைக்கெட்டாத ஒன்றாக மாறிப்போய்விடவில்லை.

ஆனாலும், ஏதோ ஒன்று குறைவதாக, மனதினுள் ஒரு குறை. வட்டியும் முதலும் தொடரை படித்து வந்த பொழுது, அதிலிருக்கும் உண்மை மனதை தாக்கினாலும், அன்றாட மனிதர்களின் ரயில் பயணமொன்றில் நிகழக்கூடிய உணர்ச்சிக்கலவையின் தொகுப்பையே அது பதிவு செய்வதாக ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.

தமிழ் கூறும் நல்லுலகில் விவாததிற்கு பெரிதாக உட்படுத்தப்படுத்தப்படாத சமூக அவலங்களுக்கான காரணிகளின் பட்டியல் மிகப்பெரியது. குழந்தை வளர்ப்பு தொடங்கி, பாலியல் கல்வி வரை இங்கே கூச்சத்தாலோ இமேஜ் போய் விடும் என்ற பயத்தினாலோ விவாதிக்கபடாமல் விடப்பட்ட பல விஷயங்களும், பெரிதென கருதாமையால் விடுபட்ட சில விஷயங்களும் அனேகமுண்டு.

இவ்விஷயங்களை விவாதிக்க போதிய ஞானமோ அறிவோ, இல்லை இதற்கு முன் கோர்ட் படி ஏறி இறங்கிய முன் அனுபவமோ இல்லை எனினும் அவை இத்தொடர் மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நாளை முதல் நல்லதோர் ஆரம்பம் - டைரி மில்க் இல்லாமலேயே.

முதல் தலைப்பு : குழந்தைகள்

சின்ன பகுதி (Teaser) - நீங்கள் ஒரு கதவை திறந்து கொண்டு ஒரு வீட்டுக்குள் செல்வதாக வைத்துக்கொள்வோம். இப்போது, யாருக்கு யார் கட்டுப்பட்டவர், யாருக்கு யார் உரிமை கொண்டாடலாம்? உங்களையும் வீட்டையும் பாதுகாப்பதால், கதவு உங்களுக்கு உரிமை கொண்டாடலாமா?

அப்படித்தான் குழந்தைகளும், இந்த உலகம் என்னும் வீட்டை அவர்கள்களுக்காக திறந்து விட்ட கதவுகள் நீங்கள்.

- அள்ளுவோம்

Wednesday, November 7, 2012

உயிர்-மெய் எழுத்து


அரசுப் பேருந்துகளில் சரியாக பீக் டைமில் வருவது, ஒரு போர் நிகழும் சமயம் விலாசம் விசாரித்து வீடு வந்து சேருவது போலாகும். சரியான சித்ரவதை. ஒவ்வொரு ஜீவனின் மீதும் ஆதி மனிதனுக்குண்டான பூர்வாங்க வாசனை வீசிக்கொண்டிருக்கும். மனித உழைப்பை சுரண்டும் இந்த சமூகத்தில், அந்த சரண்டலுக்கு உள்ளானவன் சென்று சேரும் புகலிடமாய் டாஸ்மாக் மாறிய பின், ஆறு மணி பேருந்துகளில் மணம் கமழ்வது ஒன்றும் ஆச்சரியம் கொள்ள ஏதுமில்லை. நாசிக்குண்டான இயல்பை அது இழந்தால் மட்டுமே சுகமான பயணம் சாத்தியப்படும். அனுவிற்கு இந்த பயணம், பழகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தது.

ஓட்டமும் நடையுமாய் வந்து படியேறினாள் அனு. ஜீவா வருவதற்குள் வீட்டை கூடி விட வேண்டும். வந்துவட்டால் அதிகாரம் தூள் பறக்கும். சில நாட்களில் நானும் கூட உதவிக்கு வருகிறேன், என்று ஆரம்பித்து, இங்க தொட்டு அங்க தொட்டு வித்தியாசமாய் பண்ணுகிறேன் பேர்வழி என நாலு பொருட்களை உடைப்பது தான் மிச்சம்.

சிந்தனைகளுக்கிடையில் வீடு வந்துவிட்டிருந்தது. என்றைக்குமில்லாத திருநாளாக வீட்டுக்காரம்மா பார்வதி மாடிப்படியில் நின்று கொண்டிருந்தாள். இந்த நேரம் மாமி, மாமாவின் வாக்கிங் நேரம். மாமா வெளியே போயிருந்தாலும் மாமி கீழே தான் இருப்பாள். எப்போதும் அனுவாக கீழே வருவது தான் வழக்கம். உபயம் பார்வதியின் மூட்டு வலி. அவசரமாய் உற்பத்திசெய்து கொண்ட புன்னகை ஒன்றை உதிர்த்தபடியே, படியேறினாள் அனு.

“என்னம்மா மூட்டு வலி பரவாயில்லியா? சிரமட்டு மேல ஏறி வந்திருக்கீங்க?”

     கீழ் வீடு தான் பார்வதி அம்மாளின் வீடு. அவளும் அவர் கணவரும் மட்டும் தான், மாமாவிற்கு ஜீவா மீதும் அனு மீதும் கொள்ளைப் பிரியம். இவர்கள் வயதொத்த எல்லோர் மீதும் தான். இந்நேரம் பார்க்கில் உட்கார்ந்து தெருவில் இருக்கும் எல்லாருடனும் வாஞ்சையோடு அளவளாவுவார். இன்றூ அவர் இன்னும் வரவில்லை போலும். அது 30 வருடங்களாக குழந்தை இல்லாத குறையின் வெளிப்பாடக்கூட இருக்கலாம் என்பது ஜீவாவின் கருத்து.

பிரமை பிடித்தாற் போல் இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி அம்மாள்.

“அம்மா,” என அனு அவரை லேசாக தொட்டாள்.

தீயை தீண்டினாற் போல், வெடுக்கென கையை உதறினார் மாமி. எதுவும் பேசாமல் விடுவிடுவென்று படியிறங்கி சென்று விட்டாள். அனுவுக்கு ஒன்றும் புரியவில்லை. இரண்டு முறை கீழிறங்கி சென்று கூப்பிட்டு பார்த்தாள்.

“அவர் வரட்டும் பேசிக்கலாம்” குரல் மட்டும் வந்தது.

“என்னம்மா பேசணும்?”

பதில் வரவில்லை. சரி, அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டு நகர்ந்தாள். அவள் சட்டென நகர்ந்ததுக்கு ஒரு காரணம் இருந்தது. பார்வதி அம்மாளின் இயல்பே அப்படித்தான், சின்னச்சின்ன விஷயத்திற்கெல்லாம் பயங்கரமாக குதிப்பது போலத்தோன்றும். ஆனால் அடி மனதில் பாசம் அவ்வளவு தேங்கிக்கிடக்கும், அதை வெளிப்படுத்த தெரியாமல், கோபமாய் வெளிப்படுத்துவார். அவரை சமாதானப்ப்டுத்துவது, ஒரு குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பதை போல. மிக எளிது.

------------------------------------------------
     ஜீவா இன்னிக்கு கொஞ்சம் லேட். வழக்கமாக வருகைப்பதிவு எழு மணிக்கெல்லாம் நிகழ்ந்துவிட்டிருக்கும். இப்போது மணி எட்டு.
“நாதா… இன்று ஏன் இவ்வளவு தாமதம்?” சமையல் அறையிலிருந்து  கருவேப்பிலைகளின் தாளிப்பிணூடே இருந்து அனுவின் குரல் ஒலித்தது.

     சாதாரண நாட்களில் எல்லாம், இந்த குரல் கேட்ட உடனே, சமையற்கட்டினருகில் ஜீவாவின் நிழலாடும். இன்று குரல் கூட வராததிலிருந்து, இன்று எதோ மூடு சரியில்லை என அறிந்துகொண்டாள்.
“அனு இங்க வா” சிறிது நேரம் கழித்து சுரத்தில்லாமல் ஒலித்தது ஜீவாவின் குரல். போய் அருகில் அமர்ந்து தலையை கோதி விட்டாள். உங்களை நேசிக்கும் ஒரு ஜீவனின் தலைக்கோதலை விட மனதுக்கு ஒரு மருந்து எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காது.

“என்னாச்சு?”

“அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு…”

“இனி இன்னொரு வீடு தேடி அலையணும் அவ்வளவு தானே, இதுக்கு ஏன் அலட்டிக்கற..” அனு ஜீவாவை சமாதானம் பண்ண முயன்றாள்.

என்ன தான் சமாதானம் பண்ண முயன்றாலும், அது சுலபமில்லை என அனுவுக்கு தெரியும். உண்மையை சொல்லி வீடு கேட்ட இடத்தில் எல்லாம், கிண்டல் கேலி செய்து துரத்தினார்களே தவிர, வீடு கொடுக்கவில்லை. வேறு வழியில்லாமல், பொய் சொல்லி வீடு கேட்டு, பின் ஏற்கனவே உண்மை சொல்லி வீடு கேட்டவர்கள் மூலம் எப்படியோ உண்மை தெரிந்து, வாழ்க்கையில் ஒரு பகுதியாக, அவமானப்படுதலும், வீடு தேடுதலும் மாறிப்போய்விட்டிருந்தது.

“அதுக்கு இல்ல அனு, மாமா நம்ம மேல எவ்வளவு பாசம் கெச்சிருந்தாரு.. அவரு மூஞ்சில எப்படி முழிக்கறது” ஜீவாவின் குரல் ஒலித்ததோ ஒழிய முகம் தொங்கியே தான் இருந்தது.

“யாரு உனக்கு சொன்னா?”

“மாமி தான், காரி துப்பாத கொற தான். என்ன என்னம்மோ புழுவ பாக்கற மாதிரி பாக்கறாங்க. மாமா இன்னும் வரல. அவர் வந்த அப்பறம் உங்க சாமான தூக்கி வெளிய ஏறியறேன்னாங்க….” சாதாரண ஜீவாவின் தொனி ஏறியிருந்தது இந்த பேச்சில்.

அதற்குள் கீழே முனகல் சத்தம் கேட்டிருந்தது.

அனு எட்டிப்பார்த்தாள்.

“ஜீவா ஏகப்பட்ட பேர் கூடி இருக்கானுங்க, இன்னிக்கு இடியும் மின்னலும் ஹெவியா இருக்கும்மின்னு நினைக்கிறேன்” என்றாள் அனு.  நான்கு வருடங்களாக 23 வீடு மாறி ஆகிவிட்டது. எத்தனையோ அவமானங்கள், வலிகள், வாழ்க்கையை பக்குவப்படுத்தியாகிவிட்டது. பிரச்சனைகள் வரும் போது அது குறித்து பகடி செய்வது, ஜீவாவிடம் இருந்து ஒட்டிக்கொண்ட பழக்கம். அந்த பழக்கம் தான் அனுவை ஜீவாவிடம் இழுத்துப்போட்டது எனவும் சொல்லலாம்.

“என்னடா செல்லம், இது என் டயாலக் ஆச்சே” சொல்லிக்கொண்டே ஜீவா எட்டிப்பார்த்தான். “எல்லாம் இந்த எதிர் வீட்டு த***** தடியன் செய்யறது. அவன் உன்ன பாக்கற பார்வையே சரி இருக்காது”

“ஏய், கெட்ட வார்த்த பேசுனா அவ்ளொ தான் சொல்லீட்டேன்” கண்களை உருட்டினாள் அனு. ஒரு சொட்டு கண்ணீர் எட்டிப்பார்த்து இருந்தது அந்த கண்களில் இருந்து. என்ன தான் உணர்வுகளை மறைக்க முயன்றாலும், இந்த கண்கள் அதை வெளிப்படுத்தி விடுகின்றன. எப்போதும் எட்டிப் போய் துடைக்கும் ஜீவாவிற்கு இன்று ஏனோ அதை துடைக்கத்தோன்றவில்லை.
தூரத்தில் ஒரு வெளிச்சப்பொட்டு தெரிந்தது, இவ்வளவு மங்கலான வெளிச்சப்பொட்டு மாமா ஸ்கூட்டராகத்தான் இருக்க வேண்டும்.
“கடங்காரி கீழ வாடி” பார்வதி அம்மாளின் குரல் மேலே வரை கேட்டது. அது எப்படித்தான் இந்த வெளிச்சத்தை பார்த்தவுடன் இந்தம்மாளுக்கு இவ்வளவு தைரியம் வருகிறதோ.

யாரையும் எதுவும் பேச வேண்டாம் எனக்கூறி விட்டார் மாமா. எதையும் எப்போதும் உட்கார்ந்து பேசினால் தீர்வு கிடைக்கும் என்பது அவரது சித்தாந்தம். ஆனால், கவுரவத்தின் மீது ஏக பற்று உடையவர். உங்களுக்கு நீங்கள் கட்டி இருக்கும் வேட்டி வேண்டுமா இல்லை கவுரவமா என்றால் கவுரவம் தான் யோசிக்காமலேயே சொல்லிவிடுவார். எனவே இந்த வீட்டில் இடம் கிடைக்கும் என்பது கனவில் கூட நிகழ வாய்ப்பில்லை.



எல்லோரும் அவர்களுக்குள் முனகிக்கொண்டு இருந்தனர். பெரும்பாலும் எல்லாம் கெட்ட வார்த்தைகள். அனு ஒரு மூலையில் குறுகி அழுது கொண்டிருந்தாள். அவளை கீழே வர வேண்டாம் என்று ஜீவா சொல்லியிருந்தும் அனு கேட்காமல் வந்திருந்தாள்.
ஐந்தாறு “தே” வார்த்தைகளை கேட்ட பின் பொறுமை இழந்த அனு கதறி அழ ஆரம்பித்தாள்.

“அப்படி என்னம்மா நாங்க தப்பு பண்ணோம், “

“பண்றதையும் பண்ணீட்டு கேக்கறா பாரு….. “ எதிர் வீட்டு ஆடிட்டரின் குரல் அது.

“தெருவில நாங்க மானம் மரியாதையோட இருக்க வேணாம்” இது மூணாவது வீட்டு பத்மினி.

“நாங்க பண்ணினது தப்பு தான், பெரிய தப்பு. ஆனா, இது வரைக்கும் உண்மைய சொன்ன எங்கயும் வீடு கிடைக்கல. அதனால் தான் பொய் சொன்னோம். உங்கள ஏமாத்தணுமின்னு எந்த நோக்கமும் இல்ல… வேற வழி தெரியல… இன்னும் ஒரு வாரம் டைம் குடுங்க காலி பண்ணீறோம்” ஜீவா பேச மாமா ஜீவாவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“ஒரு வாரம் டைம் வேணுமாமில்ல, பெட்டி படுக்கைய தூக்கி வெளிய ஏறிங்க… ஊர் மேயற கழுதைங்க தான….” என கூட்டத்தில் இருந்து ஒரு குரல் ஒலிக்க ஜீவாவின் ரத்தம் சூடேறியது.

“என்ன டா, ******. எனக்கு பேச தெரியாம இல்ல. அப்படி பேசுனா உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும். நீ வந்து கூட்… குடுத்தியா..  உங்கள மாதிரி வெறும் உடம்புக்கு ஆசைப்படுற காதல் இல்ல இது.. ஒரு பொண்ண பாக்கும் போதே அவ போட்டு இருக்கற பிரா கலர யோசிக்காத ஒரு ஆம்பள முன்னாடி வாங்கடா பாக்கலாம்“ பேசிக்கொண்டிருந்த ஜீவாவை எட்டிப்பிடித்து அமைதிப்படுத்தினார் மாமா.

பின் நிமிர்ந்து எல்லாரையும் பார்த்தும் தெளிவாக ஆனால் உரத்த குரலில் சொன்னார்.

“குழந்தைங்க இங்க தான் தங்குவாங்க. இது நான் உழைச்சு கட்டின வீடு. என் இஷ்டம்… நீங்க எல்லாரும் உங்க வேலைய பாத்துட்டு போலாம்”.
இந்த பதில் கூடி இருந்த கூட்டத்திற்கு மட்டுமல்ல. பார்வதி அம்மாளுக்கும் ஜீவாவிற்குமே அதிர்ச்சியாக இருந்தது. கவுரவம் கவுரவம் என குதிக்கும் மாமாவா இப்படி, உள்ளுக்குள் ஆச்சரிப்பட்டாலும், கண்ணீர் மெல்ல எட்டிப்பார்த்தது ஜீவாவின் இடது கண்ணிலிருந்து.

“நீங்க சரின்னு சொன்னாலும், நாங்க எல்லாம் ஒத்துக்க மாட்டோம். நாங்க எல்லாம் இங்க வாழ வேணாமா?” என ஒருவர் கேட்க கூட்டம் ஆமோதித்தது.

கூட்டம் ஒரு வகையான போதை. கூட்டம் ஒரு வகையான சிறை. சமூகத்தில் தனக்கிருக்கும் மதிப்பை தக்க வைக்கவோ, வலுவாக கூட்டதில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதாக மனதை ஏமாற்றவோ எதோ ஒரு காரணத்தால் கூட்டம் உங்களை சுய கருத்தை கொள்ள விடாமல் செய்து விடும். ஒரு குழு மன நிலை என்றைக்குமே ஒரு பயனுள்ள தனி மனிதனை அமைத்து விடாது, அமையவும் விடாது.

கூட்டம் மீண்டும் முனக ஆரம்பிக்க, இடைவெட்டினார் மாமா.
“என்ன நீங்கெல்லாம் யோக்கியமா?” கேட்டுவிட்டு எதிர்வீட்டு வைத்தியலிங்கத்தை முறைத்தார் மாமா.

“நீ அனுவ எப்படி பாப்பன்னு எனக்கு தெரியாதா? உன் வீட்டுல ஒரு வேலக்காரி இருந்தாளே, உன் மக வயசிருக்கும் அவ கிட்ட நீ என்ன பண்ணின, அவ வேலைய விட்டுப் போகும் போது என் கிட்ட எல்லாத்தையும் கொட்டிட்டு தான் போனா…. ஆடிட்டர் சார், போன மாசம், ***** இண்டஸ்ட்ரீஸ் கணக்கு முடிச்சீங்களே, அந்த பைவ் ஸ்டார் ஹோட்டல்ல, அது என்ன வகையான கவுரவம் சார்… லஞ்சம் வாங்கறது பெத்த தாய…. “ நிறுத்திக்கொண்டார் மாமா.

கூட்டம் ஸ்தம்பித்துப்போய் இருந்தது. இதுவரை அவர்கள் சாந்தமான மாமாவையே பார்த்துவந்துள்ளனர். யாரை பார்த்தாலும் “சவுக்கியமா கொழந்தே” என்றே அழைப்பார்.

பார்வதியிடமே சிறு சத்தம் இல்லை. இப்படி ஒரு கணவரை அவள் 30 வருடமாக பார்த்தில்லை.

"காமம்ங்கறது உங்களுக்கெல்லாம் வெறும் உடல் சார்ந்த விஷயம். அதானால தான் இத இவ்வளவு பெருசு படுத்துறீங்க.
இவங்களுக்குள்ள இருக்கற அன்ப உங்களால புரிஞ்சுக்க முடியாது. ஏன்னா அன்புக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையே. நீங்க பண்ணாத தப்பு என்னத்த இந்த கொழந்தைங்க பண்ணீட்டாங்க?"
"அக்கா தங்கச்சின்னு பொய் சொல்லி வீடு கேட்டு இப்படி, மானமுள்ளவங்க எல்லாம் இந்த தெருவில வாழ வேணாம்... கருமம் கருமம்..." தலையில் அடித்துக்கொண்டது கூட்டத்திருந்த ஒரு பெண் குரல்.

"உண்மைய சொல்லி வீடு கேட்டு இருந்தா நீங்க குடுத்து இருப்பீங்களா? உங்க மான ரோஷத்த பத்தி எனக்கு தெரியாது, இந்த தெருவுல எத்தன பேரு சொந்த சம்பாத்தியத்துல வீடு கட்டுனீங்க எத்தன பேரு ஊர ஏச்சு கட்டுனீங்கன்னு எனக்கு தெரியும். இவங்க உணர்வுகள நீங்க புரிஞ்சுக்கலைன்னாலும் பராவாயில்ல, அத காயப்படுத்தாதீங்க..."
 
மாமா தொண்டையை கணைத்துக்கொண்டு மீண்டும் சொன்னார்.

“என் வீடு, என் இஷ்டம். இதுக்கு மேல இதப்பத்தி பேசுனா உங்க மரியாதை தான் கெடும். கெளம்பலாம்” சொல்லிவிட்டு விறுவிறுவென உள்ளே சென்றுவிட்டார் மாமா.

பார்வதி அம்மாள் இருவரையும் பார்த்துய் பேந்த பேந்த விழித்தாள். பின் உள்ளே சென்று விட்டாள். கூட்டம் கலைந்தது, முனுமுனுத்த படியே.


அன்றிறவு,

“ஏங்க” பார்வதி பரிமாறிக்கொண்டே மாமாவை உசுப்பினாள்.
“என்ன கேக்கப்போறன்னு தெரியும் பார்வதி, கவுரவம் கவுரவமின்னு குதிப்பீங்களே அதானே…”
இல்லீங்க, அக்கா தங்கச்சின்னு சொல்லீட்டு இப்படி தப்பான உறவு வெச்சுட்டு இருக்காங்களே.. ரெண்டு பேரும் பொம்பளைங்க வெக்கமே இல்லாம…. இவங்கள எப்படிங்க…”

"அவங்களுக்குள்ள இருக்கற காதல், காமத்தோட நீட்சி பார்வதி. இப்ப நம்ம ரெண்டு பேருக்கும், ஒருத்தருக்கு ஒருத்தோரட துணை தேவைப்படுது... இது என்ன காமமா? அந்த மாதிரி தான் இவங்களும்....."

சாப்பிடுவதை நிறுத்தி விட்டு சிறிது நேரம் பார்வதியையே வெறித்தார் மாமா.

“சொல்லுங்க, ஏன்?” பார்வதி அம்மாளின் குரல் சுரத்தில்லாமல் தான் ஒலித்தது. வயதானவர்களை புரிந்து கொளவது மிகக்கடிமான செயல், அவர்களுக்கே கூட. பார்வதி அம்மாளுக்கு இப்போது வரை, தனக்கு ஜீவா, அனுவின் மீது கோபம் இருக்கிறதா, அது இந்த கூட்டத்தால் மிகைப்படுத்தப்பட்டதா எனத்தெரியவில்லை. அதனால் தானோ என்னவோ மாமா அப்படி பேசியும், அவளுக்கு அதை எதிர்க்கணும் என்று தோன்றவில்லை.

“கௌதம பார்த்தேன்” என்றார் மாமா. சட்டென நிமிர்ந்தாள் பார்வதி அம்மாள்.

           கௌதம், இவர்களின் மகன். எல்லோரும் நினைப்பது போல இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாமல் இல்லை. இருந்தான் , கௌதம் , ஒரே மகன். கட்டுப்பாடோடும் செல்லத்தோடும் வளர்த்து வந்தார்கள். எல்லாம் அவன் பதின் வயதை எட்டும் வரை தான். பதின் வயதில், அவனுள் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அவனுள் தூங்கிக்கிடந்த பெண்ணின் தன்மை மெல்ல மெல்ல வெளிப்பட ஆரம்பித்தது. வெளியிலும் சொல்ல முடியாமல், உள்ளுக்குள்ளும் வைத்துக்கொள்ள தெரியாமல் அவன் நரக வேதனையை அனுபவித்ததென்னவோ உண்மை.

இந்த விஷயம் மெல்ல கசிந்த போது மாமாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவனை வீட்டை விட்டு அனுப்பி விட்டார். அவனை வீட்டை விட்டு அனுப்பும் போது அவர் அதை வலியோடு தான் செய்தார் என சொல்வதற்கில்லை. ஆனால், காலம் வலிகளை தர தவறுவதில்லை. சமூகம் குறித்த பயத்தால் தான் செய்த பிழையை அவர் நன்கு உணர்ந்திருந்தார். இத்தனை தூக்கமில்லாத இரவுகளில் இந்த சமூகம் ஒரு நாள் கூட தனக்கு தாலாட்டு பாடியதில்லை.

பார்வதி அம்மாள் ஒன்றும் பேசத்தோன்றாமல் பார்த்துக்கொண்டிருக்க அவர் தொடர்ந்தார்.

“போன வருஷம் ஒரு நாள் ரயில் வந்துகிட்டு இருக்கும் போது, ஒரு நாலு பேர் கூட்டமா வந்து பிச்ச கேட்டாங்க. ஒரு பத்து ரூபா குடுத்தேன். ஒருத்தி அத வாங்காம, என் மூஞ்சில துப்பீட்டு நகர்ந்துட்டா. அப்ப தான் கவனிச்சேன், முகத்துல அந்த தழும்பு, அந்த நம்ப கவுதம்…” அவர் குரல் தழுதழுத்தது.

 “அதுக்கப்பறம் எப்படியெல்லாமோ அவன தேடிப்பாத்தேன். அவன் கிடைக்கல, அவன் கடைசியா மண்ண வாரி இறைச்சது இன்னும் எனக்கு நினைவிருக்கு”, வழியும் கண்ணீரை துடைக்கக்கூட தோன்றாமல் பேசிக்கொண்டிருந்தார் கணேசமூர்த்தி.

பார்வதியால் பேச முடியவில்லை. நடந்ததை நினைத்துப்பார்த்து கண்ணீர் விடத்தான் முடிந்தது. தான் பிடிவாதம் பிடித்திருந்தால், ஒரு வேளை கவுதம் இன்று தங்களோடு இருந்திருப்பானோ. தெரியவில்லை. ஆனால், பிள்ளை பாசத்தை தாண்டி அன்று கவுரவம் கண்ணை மறைத்தது ஆச்சரியம் தான். இரண்டாவது மகன் பிறக்கும் சமயம் பார்த்து, கவுதமை இவர் துரத்தியதும், பின் சாக்கு போக்கு சொல்லி, பின் உண்மை வெளிப்பட்டு, அழுது புரண்டு, தேத்திக்கொண்டு, வாழ்க்கையை இந்த சாக்கடை சமூகத்தில் இணைத்துக்கொண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

மெல்ல அவரே தொடர்ந்தார்.


“கொழந்தைகள் டீ, அவங்களுக்கு எது சரின்னு படுறதோ அதப்பண்ணுறாங்க…. அதப்பண்ண அவங்களுக்கு உரிமை இருக்கு. அவங்களா அத பண்ணல, அவங்க சரீரம் அத கேக்கறது… புத்தியும் மனசும் அவங்கள கேக்குது. இதுவும் இயற்கை தான்… நம்மால தான் புரிஞ்சுக்க முடியல. நாகரீகம்ங்கற பேருல என்ன என்னமோ பண்ணுறோம், சடங்குகள சம்பரதாயங்கள மாத்திக்கறோம். இது அவங்க வாழ்க்க அவங்க விருப்பம், அவங்க இஷ்ட்டப்படி அவங்கள வாழ விட்டுடலாம்”.

அவர் உணர்ந்து பேசினாரா, இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை பார்வதிக்கு,

“இருங்க, கொழந்தைங்க சமைச்சு இருக்க மாட்டாங்க, நான் போய் அவங்களையும் சாப்பிட அழைச்சுட்டு வர்றேன்…” என்று எழுந்தாள்.

“ரெண்டு பேத்துக்கு மட்டும் தான்டீ சமச்சுருக்க…”

“ நான் சாப்பிடுறது இப்ப ரொம்ப முக்கியமா, அவங்கள வேற திட்டிட்டேன் பசியோட இருப்பாங்க….  திருப்பி சமைச்சுக்கலாம்” சொல்லிக்கொண்டே படியேறினாள்.

சிரித்துக்கொண்டார் கணேச மூர்த்தி, இந்தப் பெண்களைத்தான் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.







பின் குறிப்பு :

இந்த்தக்கதை யாரையும் புண்படுத்தவோ, காயப்படுத்தவோ எழுதப்பட்டதல்ல. இது போல, பொறுப்பு துறப்பு எனக்கு புதிது எனினும், கதையின் சீரியஸ்னெஸ் கருதி இதை சொல்கிறேன். மாற்றுக்கருத்துள்ள நண்பர்கள், விவாததத்திற்கு வரவேற்க்கப்படுகிறார்கள்.


கதையின் சுவாரசியம் கெடாத வகையிலும், ஜீவாவிடம் மேலோங்கி இருக்கும் வகையிலும், ஜீவா எட்டிப்பார்த்தான் என ஒரு இடத்தில் வரும். மற்றபடி எங்கேயும் ஜீவாவின் பால் குறிப்பிடப்பட்டு இருக்காது. இதையே ஆங்கிலத்தில் எழுதுவது எளிது. தமிழில் இது கத்தி மேல் நடக்கிற வேலை. ஜீவா பெண்ணைப்போல உடை தரித்திருப்பாள் என்பதும், ஏனைய பிரவும் வாசகர்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.