Flipkart

Amazon

Amazon

Thursday, December 5, 2013

நாவலிலிருந்து

                     அவள் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தாள். மார்பு ஒவ்வொரு அடிக்கும் விம்மி விம்மி தாழ்ந்து கொண்டிருந்தது. நெற்றியிலும் கழுத்திலும் வியர்வை கசகசத்தது. முன் கழுத்திலிருந்து கிளம்பிய வியர்வை மார்ப்பு குழியின் வழியோடி தொப்புளில் நின்று குறுகுறுப்பூட்டியது.

             காதுதருகில் கிசுகிசுப்பாய் ஒரு குரல் சில சமயம் கெஞ்சும் தொனியிலும், சில சம்யம் அதிகாரமாகவும், சில முறை  மன்னிப்பு கேட்கும் பாவனையும் நிற்கச்சொல்லிக்கொண்டே இருந்தது. அதை புறக்கணித்தபடி அவள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாள். அந்தக் குரல் மிகவும் நெருக்கமான குரல் என மனது அவளிடம் சொல்லிக்கொண்டே இருந்தது.

              எப்போதோ காதலித்த பழைய காதலர்களுள் ஒருவனாக இருக்கலாம். அவள் காதலர்களை நினைத்துக்கொண்டாள். எழுத்துக்கள் வட்டமிட்டு பல்வேறு பெயர்களை காட்டின. ஏனோ முரளியின் பெயர் ஆதிக்கம் செலுத்தியது போலிருந்தது.  அவனை நினைத்துக்கொண்டாள். அவனுக்கு இப்போது திருமணம் முடிந்திருக்கலாம். குழந்தை கூட இருக்கலாம். எதாவது ஒரு குழந்தைக்கோ அல்லது அது செல்லமாக வளர்க்கும் நாய்க்கோ தன் பெயர் வைத்திருப்பான். எப்போதாவது அவன் மனைவி இடது கழுத்தறுகே முத்தமிட்டு கடிக்கும் போது தன்னை நினைத்துக்கொள்வானாயிருக்கும்.

             காதோர கிசுகிசுப்பு இதற்குள் கூச்சலாய் மாறி மீண்டும் கிசுகிசுப்பாகி  இருந்தது. எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என யோசித்து பார்த்தாள்.  அந்த குரலிற்கு நிற்கக்கூடாது என்பதற்காகவே ஓடுவதாகவே தோன்றியது. எப்போதிலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறோம் என யோசிக்க முயன்றாள். ஏதோ கனவின் மத்தியில் இருப்பது போல இருந்தது. இந்த ஓட்டத்தின் தொடக்கமே அடுத்த நொடி நிகழவிருப்பதாய்
தோன்றியது. திரும்பி பார்க்கலாமா என யோசித்தாள். ஆனால், பயமானது ஆர்வம் பாசம் என அனைத்தையும் வென்றது.  மீண்டும் துவண்ட கால்களை கோணல் மாணலாக வைத்து ஓடலானாள்.

ஓடிக்கொண்டிருப்பது நின்று திரும்பிப்பார்க்க பயந்து தான் என அவளுக்கு தோன்றியது. வாழ்ந்து கொண்டிருப்பது மரணத்தின் மீதான பயத்தால் தான் என்று அவளுக்கு தோன்றியது. கோபப்படுவது இயலாமையின் சாரம் என்று தோன்றியது. எதிர்காலத்தையே பார்த்து ஓடுவது நினைவுகள் தரக்கூடிய வலியிலிருந்து தப்பிக்கவே என்று தோன்றியது. கனவிலியே இருக்க விரும்புவது விழிக்க விருப்பமினையால் என்று தோன்றியது.

விழிப்பு அவளை துரத்திக்கொண்டிருப்பதாக தோன்றியது.


------

அடுத்த ஜென்மத்தில் நான் சொல்லி "2324"ஆம் ஆண்டு ஈ-புத்தக , ஆடியோ புத்தக திருவிழாவிற்கு வெளிவர இருக்கும் எனது "மணல் மழை" நாவலில் இருந்து.

No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..