Flipkart

Amazon

Amazon

Monday, February 4, 2013

கமலும் நானும் : தேவர் மகனிலிருந்து விஸ்வரூபம் வரை!

                 எனக்கு கமலை ஒரு கலைஞனாக நிரம்ப பிடிக்கும். தமிழ் நாட்டில் உள்ள பல் துறை திறமைகளை உள்ளடக்கிய வெகு சில நைச்சியமான கலைஞர்களுள் கமலும் ஒருவர். ஒரு கலைஞனுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே விஸ்வரூபத்தின் வெளியீட்டை மனப்பூர்வமாக ஆதரித்தேன். யூ ட்யூபிலேயே உள்ள கொலைக்காட்சிகளை விஸ்வரூபத்தில் எடுத்தால் எதிர்ப்போம் என்பது வெறும் ஸ்டண்ட்டு தான். ஆனால், இதுவே கமல் குறித்த என் மதிப்பீடாக எடுத்துக்கொள்ளப்படுவதை நான் விரும்பவில்லை.



              சதிலீலாவதி தொடங்கி மைக்கேல் மதன காமராஜன், வசூல் ராஜா, பஞ்ச தந்திரம் என க்ரேசி-கமல் கூட்டணியை ம்ம்ம் டிவைன் என ரசித்து சுவைத்தவன் தான் நானும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர். பொதுவில் ஒழுக்கம் குறித்து பேசிக்கொண்டு உள்ளுக்குள் அழுக்கை தேக்கும் கோமாளிகள் போல் அல்லாமல், தன் தாம்பத்திய/செக்ஸ் வாழ்க்கையில் வெளிப்படை தன்மையை கடைபிடித்தவர் என பல விஷயங்கள் அவரிடம் எனக்கு பிடிக்கும். இவ்வளவு ஏன்? ஸ்ருதி ஹாசனை அவர் வளர்த்த விதம் இன்று வரை எனக்கு ஆச்சரியம் தான். இதில் என்ன ஆச்சரியம் என்பவர்கள், சம காலத்தில் ஐஸ்வர்யா ரஜினி எவ்வாறு வளர்ந்தார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.



           "ஹே ராம்" போன்ற படம் எடுக்க நிறைய துணிச்சல் வேண்டும். இதில் சுவையே காந்தி "ஹே ராம்" என்றே கத்தவில்லை என்றது தான். கோட்சேவின் கூற்றுப்படி அவ்வளவு சக்தி வாய்ந்த தோட்டாக்களை நெஞ்சில் தாங்கிய வயதான ஒருவர் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாது. நாம் காந்தியை பிம்பமாக பார்த்து பழகிவிட்டதால், காங்கிரஸ் பேரியக்கம் அப்படி அதை வார்த்து விட்டதால் தான் இப்படி. சரி போகட்டும். இப்படி பல விதங்களில் எனக்கு கமலை பிடிக்கும்.



                   நிற்க. ஆனால், நல்லதொரு ரசிகனின் குணம், வெறுமனே முகஸ்துதி செய்வதல்ல. விமர்சிப்பதும் தான். எனக்கு கமலின் சில விமர்சனங்களும் ஆதங்கங்களும் இருக்கவே செய்தன. முதலில் நான் கண்டிக்க வேண்டியது, தேவர் மகனிலும், விருமாண்டியிலும் கமல் கக்கிய நீறு பூத்த நெருப்பாக ஜாதி வெறி. இதிலெல்லாம் ஜாதி வெறியை தூண்டு காட்சிகள் இருக்கு என்று நான் சொல்லவில்லை. இல்லாமலிருந்தால், நன்றாய் இருந்திருக்கும் என்று தான் சொல்கிறேன். முதலில், இது எப்படி ஜாதி வெறியாகும் என கேட்பவர்களுக்கு : ஒரு படம் பார்க்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, ஸ்படர் மேனோ அல்லது நம்ம ஊர் சிவாஜியோ அல்லது அந்நியனோ, திரை அரங்கை விட்டு வெளியேறிய சில மணி நேரத்துக்கு நாம் நம்மை அந்த ஹீரோவாகவே நினைத்துக்கொள்வோம். நம் நடை பாவனை எல்லாம் அவரை இமிடேட் செய்ய முயற்சிக்கும். சிறு வயதில் அதிகமாய் இருக்கும் இந்த எண்ணம், வயதாக வயதாக குறையும். ஆனாலும், என்ன தான் தைரியசாலியாய், நாத்திகனாய் இருந்தாலும் கூட ஒரு திரில்லர் பார்த்துவிட்டு இருட்டை பார்த்தால் சற்று கிலி பிடிக்கத்தான் செய்யும். அதே தான். பெயரின் பின்னால் தேவர், நாடார் என சாதிப்பெயர்கள் ஒட்டிக்கொண்டிருந்த காலகட்டம் இது.


"போற்றிப்பாடடி பொண்ணே..தேவர் காலடி மண்ணே...
 பெருசெல்லாம் சொன்னாங்க... சொன்னபடி நின்னாங்க...
 முக்குலத்த சேர்ந்த தேவர் மகன் தான்...
  முன்னோருக்கு முன்னோரெல்லாம்.....1 2 3 அல்ல ( நூத்து கணக்காம்)"

                   இளசுகள் மத்தியில் சாதி வெறி தூவ இது போதாதா? தன் தந்தையை, தன் குலத்தை பற்றிய பெருமை, அதன் போதை அவன் மனதில் ஏறாதா? இதே படத்தில் வில்லனும் அதே சாதி ஆனாலும், அவனாக தன்னை கற்பனை செய்ய ரசிகன் என்ன கிறுக்கனா? ஒரு தகவல் சொல்கிறேன் கேளுங்கள். கிரேக்க கொடுங்கோல் மன்னன் கலிக்யூலா முதல் ஹிட்லர், ஜப்பான், அமெரிக்கா (இரண்டாம் உலகப்போரின் போது) வரை கடவுளின் வழியில் நேரடியாக பிறந்தவர்கள் நாம் எனக்கூறி தான் போர் வெறியை தன் சிப்பாய்களுக்கு ஊட்டினார்கள்.  விருமாண்டியிலும் இதே ரீதியில், தான் சண்டியர் என குறிப்பிட்ட இளைஞர்கள் திரிய சில திரிகள் இருந்தன.



      இரண்டாவது, நம் தமிழ் சமூகம் முட்டாள்கள் நிரம்பியது (கட்ஜு சொன்னது போல). இதில் வேடிக்கை, அதில் முட்டாள்கள் பலரும் அறிவு ஜீவி பட்டத்தை கட்டிக்கொண்டு ஒரு சமூக பாதுகாப்பில் இருப்பது தான். சரி, விஷயத்திற்கு வருவோம். இத்தகைய முட்டாள் சமூகத்துக்கு, செய்தி சொல்ல சரியான ஊடகம் சினிமா தான். யோசித்து பாருங்கள், எம்.ஜி.ஆருக்கு பிறகு இங்கு சினிமா தொடர்பில்லாத முதல்வர்களே இல்லை. சினிமாவையும், நிஜத்தையும் பிரித்து பார்க்க முடியாத மக்கள் தானே, விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க காரணம்? இத்தகைய சூழலில், பகுத்தறிவை வளர்க்கும் வண்ணம் அவர் ஒரு படம் எடுக்கலைன்னு தான் சொல்லுவேன். "அன்பே சிவம்" ஒரு அற்புதமான படம். எனக்கு அதில் நிறைய மாற்றங்கள் வேண்டும் என தோன்றினாலும், தமிழ் சினிமாவிற்கு இதுவே மிகை. (கழுத்து வரைக்கும் பட்டன் போட்டது அவ்வ்) இதையும் மாற்றினால், அது ஈரானியப்படமாகிவிடும், ஒரு பய தியேட்டருக்கு வரமாட்டான்.



       ஆனால், அன்பே சிவம் தவிர்த்து பெரிய அளவில் கமல் நாத்திகத்தை பரப்பவில்லை. இந்து மதத்தை சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஓட்டினாலும், சைவத்தை மட்டுமே ஓட்டுவதாகக்கூட ஒரு புகார் உண்டு. ஆனால், கமல் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என நான் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன். உன்னைப்போல் ஒருவனிலும் கூட அவர் இந்து மதத்தையும் இஸ்லாத்தையும் ஓட்டிய காட்சியெல்லாம் உண்டு. அவர் சொல்ல வரும் நுண்ணிய கருத்துக்களெல்லாம் ஏ சென்ட்டரோடு முடிந்து போய் விடுவதில் எனக்கு ஏக வருத்தம் தான்.

       மற்றபடி, எனக்கு எல்லா மதங்களும் முட்டாள்தனங்கள் தான் என்பதால், மத உணர்வுகளை புண்படுத்துதல் பற்றி பெரிதாய் கவலையில்லை. முட்டாள்கள் கும்பலாக இருப்பதினால், தனி மனிதன் அவர்களை அறிவின் பக்கம் இழுக்க நினைப்பது ஆபத்து தானே என்பதால் அதை வருத்தத்தோடு தவிர்க்க வேண்டியுள்ளது.


கமல் ரசிகர்களுக்கு ஓரு ட்ரீட் விடீயோ :



கடைசியாய் கமலுக்கு சில வரிகள் :

                       நீங்கள் வியாபாரி என எத்தனை தடவை நீங்களே சொன்னாலும், அதை வெறுமே நம்ப மனம் மறுக்கிறது கமல். தமிழகத்தில் போதுமான அளவு குரல் உள்ளவர் நீங்கள். செய்ய வேண்டியவை நிறைய உள்ளது ஒரு கலைஞனாக மட்டுமல்ல மனிதனாகவும்.

                                                                                                                                                                                செய்வீர்கள் என்ற  நம்பிக்கையில்,
                                                                                                                                                                                         உங்கள் மற்றுமொரு ரசிகன்



No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..