Flipkart

Sunday, August 28, 2011

அன்னா ஹசாரே - ஒரு Branded காந்தியவாதி

                                   அன்னா ஹசாரே... அப்பா என்ன ஒரு பேராதரவு,கூட்டம். கிரிக்கெட் வோர்ல்ட் கப்புக்கு அப்பறம்,தேசிய உணர்வு இந்த ஒரு மாசமாத்தான் பொங்கி வழியுது.முதலில் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் யூத்துகளுக்கு ஒரு கேள்வி "டேய்..உங்களுக்கு வெக்கமே இல்லையா டா"... எவனோ ஒரு 70 வயசு தாத்தா சொன்னாத் தான் நீங்க ஊழல எதிர்ப்பீங்களா? ஏன் உங்க அம்ம ரேஷன்காரன் மண்னெண்ணை அடிச்சத பத்தி சொன்னதே இல்லயா? இல்ல நீங்க ஆர்.டி.ஓ ஆபிஸ்ல காசு குடுக்காம தான் லைசென்ஸ் வாங்கினியா? அப்ப எல்லாம் வராத தேசிய உணர்வு உனக்கு இப்ப மட்டும் பொங்கி வழியுதா?

அன்னா இப்போதைக்கு நடுத்தர வர்கத்த பார்வையாளர்களா வெச்சு இருக்கற தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளோட ஒரு Brand அவ்வளவுதான்.நல்ல விளம்பர வருவாய்ங்க உண்மையாவே. நம்பிக்க இல்லன்னா இத படிங்க.. http://goo.gl/B7A5L
                                அன்னா இவ்ளோ பாப்புலர் ஆக காரணம் ரொம்ப சின்னது.இதை படிக்கும் நீங்கள் ஒரு நடுத்தர வர்க்க பெரும்பான்மை சுய-நலவாதி. அட ஆமாங்க, இந்தியாவின் பெரும்பான்மையாக பார்க்கப்படுவது நடுத்தர வர்க்கம் தான்(Middle and upper-middle class).சரி,எப்படின்னு கேக்குறீங்களா? ஒரு மார்க்கெட்டிங் நுட்பம் (Marketing Stratergy) சொல்றேன் கேளுங்க. நீங்க நம்ம இந்தியாவின் தேசிய சேனல் என்.டி டீவிலயோ இல்ல டைம்ஸ்லயோ இந்த அன்னா பத்தின நியூஸ் வரும் போது வரும் விளம்பரங்கள பாருங்க, எல்லாமே நடுத்தர வர்க்கதினர குறி வெச்சு எடுக்கப்பட்டது.இவங்களுக்கு யாரு செத்தாலும் கவல இல்ல, நந்திக்கிராம் நிலம் பத்தி கவல இல்ல,விவசாயிக்கு நியாயமான கூலி கிடைக்காதத பத்தி கவல இல்ல,ஆனா தன்னை பாதிக்கிற விஷயம் ஊழல்ன்னு ஒரு எண்ணம்!தன் வீட்டுக்கு கீழ ரோடு இல்லாத்துக்கு காரணம் அந்த கான்ட்ராக்டர் செஞ்ச ஊழல்.. அதனால தான் இவங்களுக்கு ஊழல்வாதிகள் மேல கோவம். ஆனா,பணத்துக்கு பின்னாடி ஓடுறதாலயோ என்னவோ,ஊழல ஒழிக்க ஒரு 7 பேரு போதும்ன்னு நெனச்சுட்டாங்க.
                                      சரி.. அப்படி என்ன எனக்கு அன்னா மேல கோவம்றீங்களா? ஒண்ணும் இல்லங்க.. அது செரி உங்களுக்கு என்ன அவரு மேல அவ்வளவு பாசம்?அவரு ஊழல ஒழிக்க பிறந்த மகான் இல்ல? இத்தன நாள் அவரு பண்ண போராட்டங்களுக்கு நீங்க ஏன் ஆதரவு தெரிவிக்கல??ஒண்ணு நல்லா தெரிஞ்சுக்குங்க.. ஊழல்ன்னால வாழ்றது அரசியல்வாதிங்க மட்டும் இல்ல, அம்பானிக்களும் தான்.நினைச்சு பாருங்க என்ன ஒரு அசுர வளர்ச்சி அம்பானி காட்டினாரு? லஞ்சம் கொடுத்து இருக்கவே மாட்டாருன்னா நினைக்குறீங்க? 2ஜி ஊழல் மாட்டின ரிலையன்ஸ் அன்னாவோட உண்ணாவிரத்த ஸ்பான்ஸர் பண்ணுது தெரியுமா?

   அன்னாவுக்கு ஆதரவா குரல் எழுப்பற எத்தன பேரு கீழ உள்ள தகவல்களை எல்லாம் படிச்சீங்க?விக்கிபீடியாவில் அன்னா பற்றி!

இத்தன குரல் குடுக்கற அன்னா பண்ண தப்புங்கள விக்கிபீடியால யார் யார் படிச்சீங்க?

1.அஞ்சா நெஞ்சன் ,காந்தியவாதியின் பிறந்த நாள் கொண்டாட்டம் 2 லட்ச ரூபாய் செலவில்

2.அவரு ஊர்ல பஞ்சாயத்து தேர்தலே நடந்தது இல்ல.. அன்னா தான் அன்னப்போஸ்ட்டு!

3.இவருக்கு நம்ம பாஜக ஆட்சில கொடுத்த விருதுகள் கீழ..


4.இந்தியாவின் சேவகர்,இந்தியாவின் ஊழலுக்கு எதிரான முகமான இவர், குஜராத் அண்ணன் மோடிய ரொம்ப நல்லவர்ன்னு சொல்லி மாட்டி பின்னால பல்டி அடிச்சாரு.

5."மாரத்தியர்களுக்கு தான் மும்பை"ன்னு நம்ம தாக்ரே தாக்குன கருத்துக்கு அன்னா ஆதரவு உங்களுக்கு தெரியுமா? (அப்ப அவனவன் ஊர பிரிச்சு விடியறதுக்குள்ள அவஅவன்ட்டயே குடுத்தறலாமா?)

                  சரி,நீ என்ன புடுங்குன இவர பத்தி பேசன்னு கேக்கறீங்களா? இதே கேள்விய நான் திருப்பி உங்க கிட்ட கேட்டா?

ஐரோம் ஷர்மிள்'னு ஒரு பொண்ணு.உங்களுக்கு ஆயிரம் வேல இருந்தாலும் பரவாயில்ல தயவு செஞ்சு இத படிங்க. "The worlds longest hunger Striker" இவங்க தெரியுமா?? காரணம் தெரிஞ்சா ஒரு இந்தியன் சொல்லிக்க அசிங்கப்படுவீங்க..

இத பாருங்க...

போராட்டம்
IROM Sharmila - ஐரோம் ஷர்மிளா
நான் இராணுவத்துக்கு எதிரா எதையும் சொல்லல..இவங்க மணிப்பூர்ல 1974ல இருந்து இப்ப வரைக்கும் நடைமுறைல இருக்கற  Armed Forces (Special Powers) Act, 1958 (AFSPA), ரத்து பண்ண சொல்லி போராடிகிட்டு இருக்காங்க.

விக்கிபீடியாவில் -- http://en.wikipedia.org/wiki/Irom_Chanu_Sharmila (தயவு செஞ்சு படிங்க)

வீரப்பன புடிக்கப் போன போலீஸ் பண்ண அட்டூழியங்கள் தெரியுமா? 

            நம்மள பாதிக்கற ஊழல்ன்ன உடனே வலிக்குதா?? செரி இப்ப என்ன பண்ணனும்ன்றீங்களா? இத்தன நாள் இருந்த மாறி மூடிகிட்டு இருங்க இல்லன்னா மத்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுங்க.எல்லாத்துக்கும் முதல்ல லோக்பால் பத்தி தெரிஞ்சுகிட்டு அப்பறம் எவனுக்காவது ஆதரவு நிலைப்பாட்டை எடுங்க.


 Jan Lokpal                 Lokpal 2.3

 நல்ல விஷயங்கள் - Blue
கெட்ட விஷ்யங்கள் - வறுமையின் நிறம்!
      அதுக்காக எல்லாரும் போராட்டத்த தூக்கி போட்டுட்டு போங்கன்னு சொல்லல.தெரிஞ்சுசுகிட்டு பேசுங்க. ஜன்-லோக்பால்லயும் நிறைய ஓட்டைங்க இருக்கு.என்னென்னன்னா..

1)NGO -அதாவது இந்த Trust எல்லாம் லோக்பாலுக்கு கீழ வராதாம் - அன்னா வரைவுப்படி. கருப்புப் பணத்த வெள்ளையா மாத்தறதே இவனுங்க தான். சா(நா)ய் பாபா, நம்ம ராம்தேவ் எல்லா நாயிங்களும் இந்த வரம்புல வராதாம்!

2)லோக்பாலே தான் அது பத்துன புகாருங்கள எல்லாம் அவங்களே தான் விசாரிப்பாங்களாம்

3)லோக்-ஆயுக்தா எல்லாம் மாநிலங்கள் எடுக்கும் முடிவாம்! 

              நல்லா யோசிச்சு பாருங்க..ஒரு 7 பேரு குழு,எத்தன பேர விசாரிக்க முடியும்? எத்தன ஆர்.டி.ஓ,எத்தன ஹெல்த் இன்ஸ்பெக்டர்ஸ்,எத்தன வி.ஏ.ஓ எத்தன???

அப்ப என்ன தான் பண்ணனும்றீங்களா? எல்லாருக்கும் கற்பிக்கனும்.மனிதாபிமானம்,தனி மனித ஒழுக்கம் வளரனும்.அத கல்வி சொல்லி குடுக்கனும். அதுக்கான ஒரு அரசு அமையனும். சுரண்டல்கள் நிக்கனும்.ஒருத்தன் வாழ ஊரே உழைக்கறது புரியனும்! 

ஜெய் ஹிந்த்,ஆகஸ்ட் யுத்தம் எல்லாம் ஒரு வார்த்தை,மாய வார்த்தை , உங்களை முட்டாளாக்கும்,நடைபெறாததை நடந்து விட்டதாக,எழுச்சியை உண்டு பண்ணக்கூடிய ஒரு வார்த்தையே ஒழிய அப்படி சொல்வதால் மட்டும் ஊழல் ஒழிந்து விடாது!

இந்த இரண்டுக்கும் பொதுவாக,மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் நபர்கள் விசாரிக்க கூடிய ஒரு அமைப்பு தான் லோக்பாலாக இருக்க வேண்டும். ஆனால் மறுபடியும் சொல்றேன், நம்ம நீதிபதி வேதனையோட சொன்னாரே "ஊழல வேணும்னா சட்டப்பூர்வமா ஆக்கிறலாம்..".கல்வி தான் ஊழலை ஒழிக்கும்..

திருடனா பார்த்து திருந்தாவிட்டால்...Tuesday, August 23, 2011

அம்மா.... - சிறுகதை


                       ஏற்கனவே கதையை படித்தவர்கள் கவனத்திற்கு : கதையின் தொடர்ச்சி இணைக்கப்பட்டுள்ளது.

             குறிப்பு : ஒரு வளர் பருவ சிறுமியை மையக்கருவாக்கி அவளது கருத்துக்கள் தாங்கி வெளிவரும் இக்கதை,உண்மை சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட கற்பனை.இதில் உண்மை சம்பவத்தின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.இக்கதை யாரையும் பிரதிபலிக்கவில்லை.


ஜூன் 30, வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி :

                            அன்று மாலை வீடு வழக்கத்தை விட பரபரப்பாக இருந்தது.நான் பள்ளியில் இருந்து வீடு திரும்இக்கொண்டு இருக்கிறேன்.நான்,! நான் சூர்யா, இப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறேன்.சமச்சீர் கல்வி அது இது என இன்று வரை பாடங்கள் எடுத்த பாடு இல்லை.

                                         நான் வீடு திரும்பிய போது அப்பாவும் அம்மாவும் நூல்களை ஏதோ செய்து கொண்டு இருந்தனர் . எங்கள் ஊரின் பெரும்பாலான குடும்பங்களின் வயற்றுப்பாடு இது தான்,ஆனால் என் அம்மாவிடம் இருந்த அதிஷ்டமும் உழைப்பும் எங்களை நன்றாகவே வைத்து இருந்தது. அத்தனை வேலையிலும் நான் முகம் கழுவுவதற்குள் காபி எடுத்து வந்திருந்தார்.

ஜூன் 30, மாலை 8.00 மணி :

அண்ணன்,கல்லூரியில் இருந்து தொலைபேசியில் அழைத்தான்.பரஸ்பர விசாரிப்புகளுக்கு பின் இந்த வாரம் வீட்டுக்கு வருவதாக தெரிவித்தான்.அவன் நாளையே வர வேண்டி இருக்கும் என எங்கள் யாருக்கும் தெரியாது.

ஜூன் 30, இரவு 11.00 மணி :

இன்று தான் சாப்பிட இவ்வளவு நேரம் ஆகிறது.இன்று வியாழன்,வரும் ஞாயிறு எங்கள் கோவில் திருவிழா.அதனால் தான் வேலைகளை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.கோவில் திருவிழவிற்கு 5 லட்சம் நன்கொடை கொடுத்து இருந்தோம்.சேமியா உப்புமாவை எல்லோரும் சாப்பிட்டோம்.நான் தூங்க சென்றேன்.அப்பாவும் அம்மாவும் அவர்கள் வேலைக்கு.


ஜூலை 1 காலை 2. மணி :

காதோரம் கிசுகிசுத்தார் என் அம்மா.கண்களை கசக்கிக் கொண்டு எழுந்தேன். "என்னம்மா?"

"அம்மா கோவிலுக்கு போயிட்டு வர்ரேன். காலைல அத்தைக்கிட்ட தல வாரிக்கிட்டு ஸ்கூலுக்கு போகனும்"

"ம்ம்...."

                மெல்ல எழுந்து சென்றேன்.அப்பா ஜென்னை துடைத்துக்கொண்டு இருந்தார். கண்களில் தூக்ககலக்கம்.நிழல் ஆடியது.அம்மா,இரண்டாவது அத்தை,தாத்தா எல்லாம் ஏற வண்டியை ஊற விட்டார் அப்பா.கையசைத்து விட்டு வந்து படுக்கையில் விழுந்தேன்.

ஜூலை 1 காலை 5.13 :

என்னை ஒருவர் வந்து எழுப்ப முயல,நான் விழித்து விட்டேன்.வேறு யாரோ அவருடன் வாக்குவாதம் புரிவது காதில் விழுந்தது.

"அப்பறமா.. அவங்க வந்ததுகப்பறம் எழுப்பிக்கலாம்"

"சும்மா இருங்க...ஜனம் எல்லாம் இப்பவே கூடிருச்சு"

அவர்கள் பேசிக்கொண்டிருக்க நானே எழுந்து உட்கார்ந்தேன்.என் சித்தப்பாக்கள் இருவரும் அங்கே நின்று கொண்டு இருந்தார்கம்.கண்களை கசக்கி மணியை பார்த்தேன்."போய் பல்லு விளக்கீட்டு முகம் கழுவீட்டு வாம்ம்மா " என்றார்கள்.வார்த்திய்ல் அசாத்திய அழுத்தம்.ஏன் இப்போதே எழ வேண்டும் என்ற என் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.

நான் முகம் கழுவி வந்த போது வீடு முழுக்க ஜனத்திரள்... அனைத்து சொந்தக்காரர்களும் கூடி இருந்தார்கள்.எனக்கு ஏதோ தப்பாக இருப்பது தெரிந்தது,ஆனால் என்னவென புரியவில்லை. சித்தப்பா மெதுவாக ஆரம்பித்தார்.

"அப்பா அம்மா போன காரு ஆக்சிடெண்ட் ஆயிடிச்சாம்...ஒண்ணும் இல்ல சின்ன காயம் தான்...ஈரோட்டுக்கு எடுத்துட்டு போய் இருக்காங்க..."
அவர் எடுத்துட்டு போய் இருக்காங்க என்று சொன்ன போது சின்ன காயத்தின் ஆழம் எனக்கு புரிந்து போயிற்று.அவர் கண்களை பார்த்தேன்.

"அவ்வளவு தானா? "

தலைகுனிந்தபடியே அழலானார்.எனக்கு இன்னும் புரியவில்லை.என்ன தான் நடந்தது?"யாராவது சொல்லித்தொலைங்க என்ன தான் ஆச்சு..என் கிட்ட மறைச்சு என்ன பண்ணப்போறீங்க..." முதல் தடவையாய் அதிர்ந்து பேசுகிறேன்.

பலர் மெல்ல மெல்ல ஒரு துக்க விஷயத்தை சொல்வது சிறந்த முறை என நினைக்கிறார்கள். அதில் சுத்தமாக உண்மை இல்லை. நம்பிக்கை அளித்து விட்டு உடனே அதை கலைக்கும் அந்த செயல்.

"கார் டிவைடர்ல மோதி ஆக்சிடென்ட் ஆயிடுச்சு..அப்பா தூக்க கலக்கத்துல வண்டிய விட்டுட்டார். கார் அப்செட் ஆயிடுச்சு..அம்மா தான் கைய நீட்டி உதவிக்கு ஆள் கூப்பிட்டு இருக்காங்க..ஆனா கார உடைச்சு எடுக்கறதுக்குள்ள.."

"எடுக்கறதுக்குள்ள....."

"அம்மா..." பெருங்குரலேடுத்து அழ ஆரம்பித்தார்.

உடைந்து கீழே உக்கார்ந்தேன். "அம்ம்ம்மாஅ......" என்னையும் அறியாமல் வீறிட தொடங்கினேன்.

அரைமணி நேரம் அழுது கொண்டே இருந்தேன்.அம்மாவின் நினைவுகள் ஆக்ரமித்தபடியே இருந்தன.எனக்கும் அவனுக்கும்(என் அண்ணன்) அம்மா தான் எல்லாம்,தலை பின்னுவதிலிருந்து, உடைகள் வாங்குவது வரை அவள் கற்றுக்கொடுத்த படி தான் நாங்கள் பழகி இருந்தோம்.

ஜூ லை 1 காலை 7.00 :

அம்மாவை கொண்டு வந்தார்கள். இன்று அதிகாலை என்னை உச்சி முகர்ந்த அம்மாவை ஒரு மூட்டையை போல தூக்கிக்கொண்டு வந்தார்கள்.

ஒரு அமானுஷ்யமான சூழ்நிலை அங்கே நிலவுவதாக மனசுக்கு பட்டது.எனக்கு மரணம் நிகழ்ந்த வீடுகள் இடிக்காது.பலரின் அழுகை மிகைபடுத்த பட்டது போல தெரியும்.

"பாடி வண்டி வந்துருச்சு", நேற்று வரை "அண்ணி ஆன்ணி" என அழைத்த அத்தை, அம்மாவை உடல் என்றாள்.மரணம் அடையாளங்களை எவ்வளவு எளிதாக அழித்து விடுகிறது?

அம்மா மனிதர்களை மிக எளிதில் எடை போடக்கூடியவர்.ஒருவரின் முக்கியதுவத்தை அவர் இறக்கும் போது கண்டுபிடித்து விடலாம் என கூறுவார்.

என்னால் அம்மாவை காண முடியவில்லை.இதற்கு பதில் நானும் அவர்களுடன் சென்று இறந்திருக்கலாம். எப்போதும் சிரிக்கும் அந்த முகம் இப்பொது சாம்பல் நிறத்தில்.கீழே இறக்கி மஞ்சள்,விபூதி என எதை எதையோ பூசினார்கள். நான் என் அம்மா முகத்தை தொட முயற்சிக்க பலர் வந்து  தடுத்த்தார்கள். அந்த நேரம் அழுகையோடு இயலாமையும் சேர்ந்து கோபம் எழுந்தது.மீண்டும் இரண்டு மண் நேரம் மீள முடியாமல் அழுதேன்.


ஜூ லை 1 காலை 9.30 :

        நாக்கு வரண்டு விட்டிருந்தது.தண்ணீர் கேட்க தோன்றவில்லை.மெதுவாக தலை தூக்கி அழுகிறவர்களைப் பார்த்தேன்.அவர்களும் துவண்டு விட்டிருந்தார்கள். புதிதாக யாராவது வந்தால் அழுகுரல் அதிகமாமதும்,இரண்டொரு நிமிடங்களில் சகஜமாவதும் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது.எழுந்தேன்,மனதின் பலவீனம் உடலை தாக்கி இருந்ததால் பந்தலின் துணை தேவைப்பட்டது.பந்தலை பிடித்து எழுந்து நின்றேன்.அம்மாவின் முகத்தை பார்க்க முடியவில்லை,எந்நாளும் நிறைந்திருக்கும் வசீகரம் இல்லை,ஓளி இழந்த நிலவைப் போல இருந்தது. 

அம்மா தோளில் கைவைத்தது போன்ற உண்ர்வு தோணிக்க திரும்பினேன்.தீடீரென மஞ்சள் நிறத்தில் எல்லாம் தெரிந்தது.நான் மயங்கி சரிவதை உண்ர்கிறேன் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
நான் கண் விழித்த போது, அப்பாவை அழைத்து வந்து இருந்தார்கள்.அருகிலேயே ஒரு மருத்துவமனையில் முதலுதவி செய்து அழைத்து வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டு இருந்தது.அவருக்கும் சரியான அடி.. தாடை எலும்பு நொறுங்கி இருந்தது.வாயில் இருந்து ரத்தம் எச்சிலோடு கலந்து ஒழுகிக்கொண்டு இருந்தது. அழத் திராணி அற்று இருந்தார்.கால்கள் இரண்டிலும் பலத்த சேதம் ஆனாலும் அதை விட அவரது குற்ற உணர்ச்சியே அவரை அதிக சேதப்படுத்தி இருக்கும்.பார்க்கும் எல்லோரும்,நீங்கள் தூங்காமல் வண்டி ஓட்டி சென்றது தவறு என அவரை குதறி இருந்தார்கள் மறைமுகமாக.

                          அன்று சனிக்கிழமை,என் உறவினர்கள்,ஒரு கோழியை அறுத்து அம்மாவுடன் அனுப்ப தயாராகிவிட்டு இருந்தனர்.அண்ணன் அழுது கொண்டு இருதான்,அவன் அழுது நான் பார்த்தது இதுவே முதல் தடவை.அம்மா கொண்டு செல்லப்பட்டார்கள்.அண்ணனின் நண்பர்கள் இருவரும் சேர்ந்து அழுது கொண்டே அம்மாவை தூக்கிச் செல்வதை பார்த்தேன்.அவர்களை குறிப்பிட்டே ஆக வேண்டும் ப்ரவீண் மற்றும் சந்தீப்,பேதங்களை கடந்த ஒரு உறவு அது.உடன் பிறக்காத சகோதரர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னை தங்கைஎன்றும் என் அம்மவை அம்மா என்றுமே தான் கூறூவார்கள்.அடக்க முடியாமல் அழுது கொண்டிருக்கிறேன் என்ற உணர்ச்சி அவ்வப்போது உரைக்கிறது. நான் முதன்முதலில் விலக்கான போது அம்மா சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது."இனி எப்பவும் யார் முன்னாடியும் அழக்கூடாது....".ஆனால் அவர்களே இன்றைக்கு...அம்மாவின் சிதைக்கு தீ மூட்டும் வரை என்ன நடந்திருக்கும் என்பதை உங்களுக்கு சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை.


ஜூ லை 1 இரவு : 


ஆனால்,அன்றைய இரவு கொடூரமானது. நீண்ட நேரம் சுவற்றை வெறித்துக்கொண்டு இருந்த நான் எப்போது தூங்கினேன் என தெரியவில்லை.ஒரு கூரிய முனை கொண்ட கோடாரியை வைத்து எங்கள் அனைவரையும் துரத்தும் ஒருவன்,கடைசியாக என் அண்ணங்களை நெருங்க நான் விழித்துக்கொண்டேன்.முகமெல்லாம் வேர்த்து இருந்தது.மீண்டும் வெறித்தபடியே இரவை கழித்தேன்.அம்மாவின் நினைவுகள் அனைத்து செயல்களையும் ஆக்ரமித்தது.

ஜூலை 2  காலை : 

                  இன்று என் அப்பாவை பார்க்க செல்கிறோம்.ஈரோட்டில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறார்.இன்று கால்களில் அறுவை சிகிச்சை செய்து டட்டு பொருத்த இருக்கிறார்கள். அறுவை வெற்றிகரமாக முடிந்து அவரை 2 மணிக்குத்தான் பார்க்க முடிந்தது.அவரால் பேச முடியவில்லை.என் உறவினர்கள் என் அண்ணனிடம் தொழில் பற்றி எதோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.அவனால் அதில் கருத்தை செலுத்த முடியாததால் மற்ற இருவரும் கேட்டுக்கொண்டு இருந்தனர். இவர்கள் எப்படி இவ்வளவு சீக்கிரம் இயல்பாப் மாறினார்கள்? "அம்மா..அம்மா.." என உருகியதெல்லாம் பொய்யோ??  அம்மாவின் இழப்பு எதையும் யாரையும் நம்பவிடாமல் செய்த்து விட்டடு. மருத்துவமனைகளை எனக்கு பிடிக்காது, அழுகை,பயம் ,மருந்து வாசனை இது எல்லாம் என் வயிற்றை பிசைந்து கொண்டே இருந்தன.அவ்வப்போது "எதாவது சாப்பிடு" என நச்சரித்து எரிச்சலூக்கொண்டு இருந்தார்கள்.

ஜூலை 2 இரவு 11.00 :

                            இரவு,வீடு திரும்பிக்கொண்டு இருக்கிறோம்.நாளை அம்மவிற்கு முடிக்க வேண்டிய சடங்குகள் சிலவற்றை முக்க வேண்டுமாம். ப்ரவீண் அண்ணனுடன் பேசிக்கொண்டு இருந்தான்,அவர்களுக்கு முன் சீட்டில் இருந்ததால் நன்றாகவே கேட்டது.இவன் நாத்திகன், ஏற்கனவே ஒருவர் கோவிலுக்கு சென்ற போது இறந்தது குறித்து அவன் கிண்டல் அடித்து இருந்தது நெஞ்சை இப்போது கீறியது.

"மச்சான்..."

என் அண்ணன் அழுக ஆரம்பித்தான். 

"நடந்தத யோசிக்காத டா..."

"இல்ல டா... Futureஅ நெனச்சா தான்...."

15 நிமிடங்கள் எதிர்காலம் குறித்து எதேதோ பேசினார்கள். இதற்கு நடுவில் நான் நினைவை இழந்து தூங்கிவிட்டிருந்தேன்.

என்னை எழுப்பி பின்னால் கூப்பிட்டான்.போனேன். 

மெதுவாக ஆரம்பித்தான் "நீ ரொம்ப அழல" என்றான்.என் அண்ணனை பார்த்தேன் அவன் ஜன்னலுக்கு வெளியே வெறித்துக் கொண்டு இருந்தான். 

தொடர்ந்தான்

"சாவு எப்ப வரும்ன்னு தெரியாது... அப்பா அதுக்கு முன்னாடி செகண்ட் யோசிச்சு இருப்பாரா..இப்படி ஆகும்ன்னு.....ஒரே செகண்ட் தான் இல்ல..."

பேசிக்கொண்டே இருந்தவன்,அலைபேசி ஒலி எழுப்ப அதை காதுக்கு கொடுத்தான். "அம்மா...ம்ம் வந்துட்டு இருக்...."

அவன் பேசும் அதே வினாடி. ஏதோ ஒரு பேருந்து மீது மோது வதை தடுக்க எங்கள் ஓட்டுனர் வேனை திருப்பி உள்ளார்.பாலத்தை உடைத்துக்கொண்டு அது கீழ் உள்ள சாலையை நோக்கி உருள ஆரம்பித்தது.

ஒரு கணம்,எதோ ஒரு பலமான பொருள் நெற்றியில் மோதியது போல உணர்ந்தேன்,தாங்க முடியாத வலி.ஒரே கணம் தான்.அடுத்த கணம் வலி காணாமல் போய் விட்டு இருந்தது. மெல்ல எழுந்தேன்.அண்ணன் வலியில் துடித்துக் கொண்டு இருந்தான்.இரண்டொருவர் சுற்றி வந்து வேனை திருப்ப முயற்சித்து கொண்டு இருந்தார்கள்.யாரும் என்னை கவனித்ததாக தெரியவில்லை. அப்போது தான் கவனித்தேன் என்னால் என் அண்ணனை தொட முடியவில்லை. 

என் உடலை பார்த்தேன்.ஏதோ வெள்ளையாக இருந்தேன்.Transparent ஆக. ப்ரவீண் அண்ணாவும் அப்படித் தான் இருந்தார்கள், வெள்ளையாக...எங்கள் இருவரையும் யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.என்னைப் போல வேனில் தெரிந்த பெண்னின் தலையில் கியர் பாக்ஸ் மோதி அவள் தலை பிளந்து இருந்தது.அது... நான்.... நான்....எனக்கு பயமாக இருந்தது.எனக்கு வலிக்கவில்லை....ஏன்?

"அண்ணா.." குரல் நடுங்க கூப்பிடேன்.

"ஒரே செகண்ட் தான் இல்ல..."

பின் குறிப்பு : புரியாதவர்கள் கடசி இரண்டு பத்திகளை திருப்பி படிக்கவும்..குறிப்பை எழுதும்  நொடி வரை,எனது கேரக்டரை சைலேஷ் என்றே குறிப்பிட்டு இருந்தேன்.இப்போது அது ப்ரவீண் என மாற்றப்பட்டுள்ளது.


Saturday, August 20, 2011

இரத்தம் தொலைத்த இரவுகள் ~ மரணம் - பதிவு 1

இது எனது அனுபவங்கள் பற்றிய பதிவு மட்டுமே.இதில் உள்ள பல கேள்விகளுக்கு என் அடுத்த பதிவில் விடை கிடைக்கும்.அதுவரை பொறுத்திருங்கள்.

இந்த பதிவை கீதா என்ற என் நண்பனின் தாய்க்கும்,கார்த்திகாவுக்கும் சமர்ப்பிக்கிறேன்.                     

                               உங்களை மிக எளிதாக பலவீனப்படுத்த வேண்டும் என நான் நினைத்தால், என்னைக் கண்டு உங்களை பயப்பட வைக்க வேண்டும்.ஆனால் இதில் ஒரு சிக்கல் உண்டு ஒவ்வோருவரும் வெவ்வேறு விஷயத்துக்கு பயப்படுவார்கள்.உங்களை எனக்கு தெரியுமெனில் வேலை எளிது இல்லையென்றால் நீங்கள் எதற்கு பயப்படுவீர்கள் என நான் நிறைய யோசிக்க வேண்டி இருக்கும்.ஆனால் மிக எளிதான வழி ஒன்று உள்ளது.உங்கள் ஆழ் மனதில் உள்ள மரணம் பற்றிய பயத்தை கொஞ்சம் கிளறி விடுவது.

          உலகில் மனித இனம் தோன்றிய தினம் தொட்டு அவன் சிந்தித்தது எல்லாம் அவன் இருப்பை பற்றித்தான்.மரண பயம் ஆதி கால மனிதன் மட்டுமன்றி இன்றைய நவ நாகரீக மனிதன் வரை தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது.நடுவில் மண் மீது இருந்த ஆசையில் வீரச்செறிவு என பலர் வீர"மரணம்" அடைந்தாலும் மரணிக்கும் போது நிச்ச்யம் ஒரு கணமாவது பயந்திருப்பார்கள் என்பது என் எண்ணம்.

Fear of Existence அல்லது Fear of survivability தான் இயற்கையை பார்த்து மனிதன் பயந்ததற்கும் கடவுள் என்ற ஒன்று தோன்றியதற்க்கும் காரணமாய் விளங்கி இருக்க முடியும்.

தற்போது எனக்கு 20 வயது.என் வாழ்வில் பல மரணங்களை கடந்து வந்திருந்தாலும் அதில் நான்கு என்னை மிகவும் பாதித்தவை. மிக நீண்ட யோசனைக்கு பிறகே இந்த பதிவை எழுத ஆரம்பிக்கிறேன்.இந்த சம்பங்கள் நடந்த எந்த இரவிலும் நான் தூங்கவில்லை.முகம் வெளுத்த நிலையில் ஒரு உருவம் என் கனவில் சில வாரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டு இருக்கும்.

மரணம் 1 : ப்ரசாத்என் பள்ளி பருவம்.ப்ரசாத்துக்கு கால்கள் வராது.(அந்த வயதின் வார்த்தைகள்,மாற்றுத்திறனாளி என விளிக்க இப்போது கற்றுகொண்டுவிட்டேன்)என்ன நோய் என என்னிடம் அவன் அம்மா விளக்கி சொல்லி இருக்கிறார்கள், 5 ஆம் வகுப்பு படிக்கும் போது,அது என்னவென மண்டையில் ஏறவில்லை.அவனை நடக்க வைக்க நாங்கள் நிறைய முயற்சி செய்து இருக்கிறோம்.6ஆவது படிக்கும் போது "சாந்தி" என்ற ஆசிரியை தாவரவியல் எடுப்பார்.அவர் வாரம் ஒரு வகுப்பு இவன் நடக்க வைக்க  வேண்டும் என்றே செலவிடுவார்.நானும் இன்னொரு மாணவனும் இவனுக்கு தோள் கொடுக்க நடக்க முயற்சிப்பான்.முதலிரண்டு முறை முழுதாக முயற்சித்தவன் பின் எதும் செய்யவில்லை.7ஆம் வகுப்பு  முதல் அவன் பள்ளிக்கு வரவில்லை.சிறிது நாட்கள் அவன் தங்கையை அழைத்து வரும் அவன் பெற்றோரிடம் பேசிக் கொண்டு இருந்தேன் பின் அந்த தொடர்பும் அறுந்து விட்டது.

இரண்டு வருடம் கழித்து,ஒரு நாள் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளி தொடங்கிய நேரம்,அவன் அம்மா அவன் தங்கையை அழைத்துக்கொண்டு பள்ளியை விட்டு வேலை நேரத்தில் வெளியேறுவதைப் பார்த்தேன்.பின் ஒரு ஆசிரியை கூறினார்கள்.ப்ரசாத்துக்கு இரண்டு மாதங்களாக உடல் நிலை சரி இல்லை.அன்று காலை,கழிவறை சென்றவன் அங்கேயே மரணித்து இருக்கிறான்.

அந்த வயதில் ப்ரசாத்தின் மரணம் பல கேள்விகளையும் சில பதில்களையும் என்னுள் பதிவு செய்தது.அவன் மரணம் கொஞ்சம் வலித்தாலும் அவன் எங்களோடு பயணித்த போது அவன் அனுபவித்த வலிகளை எண்ணினால் அவன் மரணம் அவனுக்கு நிம்மதியையே தேடி தந்திருக்க்கும் என நினைத்தேன்.

2. தினேஷ் : முன் கூறியவனை போலத்தான் இவனும்,மாற்றுத்திறனாளி. தினேஷ் மரணிக்கும் போது நாங்கள் 11ஆம் வகுப்பு.ஒரு நாள் காலை,பள்ளியின் கண்டிப்பான ஆசிரியை என பெயர் பெற்ற ஒருவர் எங்களிடம் விஷயத்தை சொல்லி அவனை காண அழைத்து செல்லுமாறு நிர்வாகத்திடம் கோர சொன்னார், பல முறை பேசியும் "அதெல்லாம் முடியாது" என மறுத்த நிர்வாகம் என் நண்பன் ஒருவன் "அப்ப நாங்க செத்தாலும் இப்படி தான் பண்ணுவீங்க இல்ல.." என கேட்கவும் இறங்கி வந்தது.

அவனை காண பள்ளி பேருந்தில் சென்றோம்.அவன் இறுதி நிமிடங்களை எங்களிடம் விம்மியபடியே விளக்கினார் அவன் அம்மா."அம்ம்மா காப்பாத்துங்க.. என்ன யாரோ இழுக்குராங்க.." என கூறியபடியே இருந்துள்ளான்.தன் மரணம் நெருங்குவதை உண்ர்ந்தானோ என்னவோ இரண்டு நாட்களாக தனக்கு எதனாலோ பயமாக இருப்பதாக கூறி உள்ளான்.

அவனை காண செல்லும் போது இருந்த மன நிலை வரும் போது வெகுவாக மாறி இருந்தது.அனைவரும் இயல்பு நிலைக்கு வந்து இருந்தார்கள்.இவன் மரணம் எனக்கு பயம்,வருத்தம் போன்றவற்றை விட கேள்விகளை அதிகம் தந்தது.

தினமும் நாளிதழ் படிப்பேன்,விபத்து செய்திகளை மேயும் போதோ அல்லது கண்ணீர் அஞ்சலிகளை கடக்கும் போதோ ஏற்படாத வலியும் பயமும் ஏன் மனிதர்களுக்கு தன்னை சார்ந்த அல்லது தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் ஏற்படுகிறது?அடுத்தவனுக்கு இதே நிலை வரும் போது ஆறுதல் சொல்லி,தத்துவம் பேசும் மனம் ஏன் தன்னை மட்டும் சுய பச்சாதாபம் கொள்ள வைக்கிறது?

பல விடையில்லா கேள்விகள் அலையெழுப்ப தொடங்கின?

3.கார்த்திகா :  இன்று வரை என் உற்ற நண்பன் இவள் அண்ணன்.அன்று காலை 7.30க்கு என் வகுப்பு ஆசிரியரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி.பள்ளி விடுமுறை எனவும் ஒரு பெண் இறந்து விட்டதாகவும் என் தந்தைக்கு வந்து இருந்தது.இனிஷியல் (டீ.ஆர்) எனக்கு கொஞ்சம் நெருடினாலும் இருக்காது என நினைத்து குளிக்க சென்றேன்.வந்தவுடன் நண்பர்களிடமிருந்து அழைப்பு அது என் நண்பனின் தங்கை! அவன் வீட்டுக்கு நான் சென்ற நேரம் அழுது அழுது சிவந்திருந்தான்.நேற்றே நடந்த நிகழ்ச்சி எங்களுக்கு தெரிய நேரமாகிவிட்டு இருந்தது. தீபாவளி முடிந்த நேரம் அது.குளிக்க நீர் எடுக்க போனவள் மீது விறகு நெருப்பு பற்ற, அணைக்க முயன்று ஓடியுள்ளாள், எதிபாராத விதமாக
காருக்கு போட்டிருக்கும் ப்ளாஸ்டிக் பந்தல் மீது மோத அது அவளை அணைத்துக் கொண்டு விட்டது.மேல் வீட்டுக்காரர் அலறி ஓடி வருவதற்க்குள் அது உருகி அவள் உடலோடு ஒட்டி விட்டது.

நான் சென்ற சமயம் உடலை எடுத்துக்கொண்டு இருந்தார்கள்,அந்த நேரம் யாராவது அவனுடன், நண்பர்கள் செல்ல வேண்டும் என பட்டதால் நண்பனிடம் பைக்கை கொடுத்து விட்டு அவனுடன் சென்றேன்.செல்லும் வழி எங்கும் அவன் அழுதது என்னை பிசைந்து கொண்டே இருந்தது.ஆறுதல் கூற சத்தியமாக தோனவில்லை.அவன் அழுவதில் நியாயம் இருப்பதாக பட்டது.ஆனால் எதோ ஒரு நொடி எதை பற்றியோ வேனின் உள்ளே பேச்சு எழ சில நொடிகள் அவன் அழுகை நின்றது.தெளிவாக 10 வார்த்தைகள் பேசிய பின் மீண்டும் சோகம் வந்து கவ்விக் கொண்டது.மீண்டும் மனதில் கேள்விகள்...

மயானத்தை அடைந்தோம்,அவள் உடலை காண நேரிட்டது.தீக்காயங்கள் இருந்ததால் அவள் உடலை முழுக்க மூடி இருந்தார்கள்.இருப்பினும் சிதைக்கு தீ மூட்டும் வரை நான் அருகிலேயே இருந்ததால் என்னால் அவளை காண முடிந்தது.அது வரை சோகத்தை மறைத்து இருந்த என் கண்கள் அந்த பிஞ்சின் மேனியை தூக்கியதும் வெளியேற்றியது.உண்மையாகவே அவளை தூக்கி ஒரு ட்ராலியில் வைத்து சிதை நெருப்பில் தள்ளிய நொடி,சத்தியமாக செத்துவிட்டேன்.

கார்த்திகா என்னை கேள்விகளுக்கான விடையை நோக்கி தள்ளினாள்.

4)என் நண்பனின் அம்மா :

இவர்கள் எனக்கு ரொம்பவும் நெருக்கம். மிக மிக அற்புதனான ஒரு பெண்மணி.சத்தியமா சொல்றேன், உலகில் யாரை விடவும் பொறுப்பானவர்கள். அவனிடம் நான் கூறி இருக்கிறேன் " உங்க அம்மாவ நம்பி இந்த நாட்டையே வேணுமின்னாலும் கொடுக்கலாம் டா, அவ்வளவு பத்திரமா பாத்துக்க்குவாங்க".எந்த வேலை என்றாலும் முகம் சுளிக்காமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஈடுபாட்டோடு செய்வார்கள்.மனிதர்களை படிக்க தெரிந்தவர்கள்.கடைசியாக  நான்,என் நண்பன்,அவன் தங்கை,என் அம்மா மற்றும் அவன் அம்மா "எத்தன்" படம் பார்த்தோம்.அதற்கு இரண்டொரு வாரம் முன் வீட்டுக்கு வந்து இருந்தவர்கள் ஏனோ மிக வித்தியாசமாக எதிர்காலம் பற்றி நிறைய பேசினார்கள்.இன்று வரை எனக்கு நெருடலாக உள்ள இந்த விஷயத்தை இன்னும் என் நண்பனிடம் கூறவில்லை.எப்போது வீடுக்கு போனாலும் எதாவது அருந்த தராமல் இருந்ததே இல்லை.அவன் நகம் வெட்டுவது,தலை சீவுவது என அனைத்திலும் அந்த அன்னையின் பாசமும் குறுக்கீடும் பிரதிபலிக்கும்.அது எனக்கு பிடிக்காது "அவனுடைய Individuality யை நீங்கள் கெடுக்கிறீர்கள்" என ஒரு முறை கூறி இருக்கிறேன் (என் அம்மா மூலமாக).

சரியாக ஜூலை 1 மதியம் உணவருந்திக் கொண்டு இருந்த போது ஒரு குறுஞ்செய்தி, அவனிடமிருந்து. "ஆக்சிடென்ட் டா.அம்மா செத்துட்டாங்க".சத்தியமாக எனக்கு எதும் தப்பகா தோன்றவில்லை.அம்மா என்றவுடன் ஜெ., என்று எல்லாம் யோசித்தேன்.அவனுக்கு கூப்பிட்டால் எடுக்கவில்லை.பிற நண்பர்களுக்கும் விஷயம் அது வரை தெரியவில்லை. வகுப்புக்கு சென்றவுடன் ஓயாமல் மொபைல் அதிரவே எனக்கு சந்தேகமும் பயமும் பரவ ஆரம்பித்தது.யோசித்து பாருங்கள்.என் வகுப்பு ஆசியரிடம் கூறி விட்டு வெளியே வந்து பேசினேன்.இன்னோரு நண்பன் அழுது கொண்டு இருந்தான்.விளக்கினான்.விபத்து,குல தெய்வ கோவிலுக்கு செல்லும் வழியில் நடந்து இருக்கிறது. தனியாக வெளியே வந்தேன்,என் கல்லூரியில் படிக்கும் மற்ற நண்பர்களுக்கு அடித்தேன் எவனும் எடுக்கவில்லை,அந்த சமயத்திலும் மொபைலை எடுக்க விடாத கல்லூரி மீது கோபம் வந்தது.பேருந்தில் 1 மணி நேரம்,மனம் மிக வெறுமையாக இருந்தது.நிஜமாகவே நான் எதையும் யோசிக்கவே இல்லை.அழ கூடாது என நினைத்து இருந்தாலும் அன்று இரவு என்னை,சந்தீப் அழ வைத்து விட்டான்.அந்த இடத்தில் அவன் அம்மா இல்லாமல் எனக்கு இருக்கவே பிடிக்கவில்லை.ஆனால் அவன் அம்மா அவனுக்கு அவன் தங்கை ரூபத்தில் கூடவே இருந்தாள்.

நான் இத்தனை நாள் தேடித் தேடி படித்த தர்க்க சிந்தனைகள்,தத்துவங்கள் அனைத்தையும் மிக நேர்த்தியாக உண்ர்த்திவிட்டாள் எங்கள் தங்கை.

அப்படி என்ன தான் செய்தாள் அவன் தங்கை? அவள் உறவினர்கள் உதவுவதாக நடித்த நேரம் அது.அவர்கள் அப்பாவும் மிகவும் காயமடைந்து இருந்தார்.

மரணம் பற்றி பலரிடம் கேட்ட போது அவர்கள் பதில் என்ன? ஓஷோவின் பார்வையில் மரணம் என்றால் என்ன


என் அம்மா என்னிடம் "நான் செத்தாலும் இப்படித்தான் இருப்பியா?" என ஒரு நெருங்கிய உறவினரின் சாவுக்கு நான் கலங்காததை பார்த்து கேட்ட போது நான் சொன்ன பதில் ஆகியவற்றை என் அடுத்த பதிவில் எழுத உள்ளேன். இதில் எழுதினால் பதிவின் நோக்கம் திசைமாறுவதாக ஒரு எண்ணம்.

இந்த பதிவை கீதா என்ற என் நண்பனின் தாய்க்கும்,கார்த்திகாவுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

Sunday, August 14, 2011

எங்கே தோற்றோம்? - இது கம்யூனிஸமா?

இந்த பதிவுக்கு முன் இந்த விளக்கங்கள் அவசியம் என்பதால்.இன்று பகல் முழுக்க நண்பர்களுடன் கழிந்தது.மாலை 5 மணி அளவில் நூலகம் செல்ல முடிவேடுத்தேன்,கூடவே சிறூ வயது முதல் பழகி வரும் ஒரு ஏரியா நண்பன்,என்ன்னை விட ஒரு வயது சிறியவன் ஆதலால் என்னை அண்ணா என்று அழைப்பது வழக்கம்.நாங்கள் பைக்கில் கிளம்பினோம்.அம்மா கொடுத்த தேனீர் இன்னும் அடி நாக்கில் இருந்தது,தண்ணீர் குடித்திருக்கலாம்,அவரசரம்.

 நூலகத்தோடு எனது தொடர்பு அலாதியானது.சிறு வயது முதல் நண்பர்கள் அதிகம் என்றாலும் புத்தகம் படிக்க நேரம் ஒதுக்க பழகிக்கொண்டு இருந்தேன்.4ஆம் வகுப்பு முதல் நானே நூலகம் சென்று புத்தகம் தேடுவேன்.இப்போது நினைக்கையில் பெரிய விஷயமாக படுகிறது.கிட்டத்திட்ட இரண்டு மணி   நேரம் புத்தகம் தேடவே சென்றது.பெரியார் புத்தகம் ஒன்றும்,லெனின் மற்றும் சே குவேரா பற்றிய நூல்கலும் எடுத்து வந்தேன்.

இப்போது எனது பால்ய பருவம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.நாத்திக சிந்தனை எனக்குள் தலை தூக்க தொடங்கிய நேரம் 7ஆம் வகுப்பு என நினைக்கிறேன், இப்பொழுது தொடர்பில் இல்லாத சில நண்பர்கள் கிடத்த நேரம்.ராஜா,யுவராஜ்,கௌதம் இதி குறிப்பிடத்தக்கவர்கள். ராஜா பார்க்க ஒல்லியாக இருப்பாம்,காதல் கொண்டேன் தனுஷ்  போல என வைத்துக்கொள்ளுங்கள்.மற்றவர்களை பற்றி அவ்வளவு தேவை இல்லை.
எனக்கு பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களோடு தொடர்பு வைத்துக் கோள்ளும் சுதந்திரம் இருந்ததால் இவர்களுடன் பழக நேரிட்டது. பெட் கட்டி கேரம்,கிரிக்கெட் ஆடும் போது ஏற்ப்பட்ட பழக்கம், நாளடைவில் சந்தித்தல் குறைந்து விட்டது, ஒரே ஏரியாவில் இருந்தாலும் (4 தெருக்களுக்குள்). யுவாராஜ் இவர்களுடன் இருந்து விலகி இரண்டு முறை தேர்ச்சி பெற முடியாமல் இப்பொது தான் +2 தேறினான் என கேள்விப்பட்டேன்.


நாங்கள் நூல்கள் எடுத்து முடித்துவிட்டு வெளியேறினோம்,மேலும் சில பொருடகளை ஒரு கார்ப்பரேட் கடையில் வாங்கி பரிச்சியமான தெருவுக்கு வரும் போது மணி 8ஐ நெருங்கி விட்டு இருந்தது.எங்கள் ஏரியாவுக்கு வந்த உடன் தெரிந்த கடையில் ரீசார்ஜ் செய்ய வண்டியை நிறுத்தினேன்.பக்கத்தில் ஒரு கம்யூ., அலுவலகம் (திருப்பூர் சிகப்பு தொழிலாளர்கள் நிறைந்த நகரம்). ஒருவன் குழறியபடி அந்த மருந்தக (அங்கே தான் ரீ-சார்ஜி செய்வேன்) ஓனரிடன் வாதாடி கொண்டு இருந்தான். கண்களை இடுக்கினேன், இவன் இவன் ராஜா, ஆளே மாறி விட்டு இருந்தான், உடம்பு முழுக்க ஒல்லியானாலும் தொப்பை போட்டு இருந்தான், உதடு கருத்து இருந்தது,கால்கள் முழு அழுக்கு ஏன் என தெரியவில்லை.

இன்னமும் குழறிக்கொண்டு இருந்தான் (வார்த்தை தெளிவாக இருந்தது ஆனால் அர்த்தம் சம்பந்தம் இல்லாததாக இருந்தது)."யேய் ஊறுக குட்றா...." என்றான். "மாப்ள நல்லா இருக்கியாடா" என்றேன்.

சிறிது நேரம் என்னை வினோதமாக பார்த்தவன் தோளை பிடித்து :டேய் தம்பி நல்லா இருக்கியா டா?" என்றான்.(நானும் அவனும் சம வயதே).

 "ஹ்ம்ம்: என்றேன் கிளம்பியபடி.

என் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பிடித்தான், "வசதியா மாப்ள" என்றான்.(தம்பி போய் விட்டிருந்தது).

"டேய்... இத போட்டு இருந்தா வசதி யா.. கவரிங் டா வேணும்ம்ன்னா எடுத்துக்கோ" -இது நான்

"வேணாம் மாப்ள.. அப்பறம் என்ன பண்ற?"

"இஞ்சினியரிங்க் டா..த்தேர்ட் இயர்.."

"அட நம்ம பையன் ஒருத்தன் கூட... (அந்த பக்கம் இருந்த ஒருவனிடம் கேட்டான் "மச்சான்.. அந்த க்**** பேரு என்ன?") ம்ம் ***** கூட இஞ்சினியரிங்க் தாண்டா படிக்கறான்"

"ஹ்ம்ம்..."

"காலேஜ்ஜுல கெத்தா இருக்கியா டா?"

"ஹ்ம்ம்..ஏதோ மாப்ள சரி நான் கிளம்பறேன்"

"இரு டா.... போன  வாரம் அவன் காலேஜ்ஜுக்கு போனோம், சரக்கு அடிச்சிட்டு தான்.. 3 இழுப்பு (போதைப் பொரும் என பின்பு புரிந்தது) இழுத்துட்டு போய் சரி ஆட்டம்.. எவனோ இவன் ஆளுக்கு நூல் விட்டு இருக்கான்.. பிரிச்சுட்டோம்.. அவனுக்கு 12 தையலாம்...."

"ஓ..."

"சொல்லு மாப்ள... எவனையாது தூக்குனா தான் நம்ம மேல மரியா....(தள்ளாடினான்...ஓரமாக சென்று வாந்தி எடுத்தான்)"

3 நிமிடம் கழித்து  

"சொல்லு மாப்ள உங்க காலேஜ்ல எவனையாவது தூக்கலாம்..சரக்கு மட்டும் ஏற்பாடு பண்ணிரு..."

 நான் -  "ப்ரச்சனை எதும் வர்லியா...அந்த 12 தையல் கேஸ் எதும்?"

"அதான் அண்ணன் இருக்கருல்ல" - கூட இருந்தவன் கம்யூ., அலுவலகத்தில் இருந்த ஒருவனை காட்டி சொன்னான்.35 வயதிருக்கும் அந்த நிமிடம் ஜீன்ஸ் -டீ சர்ட்டில் இருந்தால், டேபிளில் இருந்த கண்ணாடிக்கு அடியில் ஒரு பழைய போட்டோவில் வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தான்.கை கொடுத்துக் கொண்டோம்,அவனும் நிதானத்தில் இல்லை.

"என் நம்பர் நோட் பண்ணிக்க" என்றான்.

என் Galaxy ஐ வாங்கி சிறிது நேரம் பார்த்துவிட்டு தந்தான். என் கூட இருந்த நண்பன் கையில் இருந்த புத்தகங்களை பார்த்தான்,தட்டு தடுமாறி படித்தவனுக்கு அதன் பெயர்களை சொன்னேன்..

"யார் இவனுங்க..."

"டேய் லெனின்..மார்க்ஸ் டா... இந்த கம்யூனிச கொள்கைகளின் தந்தை டா..." என்றேன்.

"நீயும் கட்சில இருக்கியா..சொல்லு அண்ணன் நினைச்சா நீயும் இந்த வாட்டி க்வுன்சிலர்"

எனக்கு அதை தூக்கி தலையில் அடித்துக்கொள்வது என தெரியவில்லை.

அண்ணனிடம் கேட்டேன் "உங்களுக்கு இவங்களை தெரியுமா?"

அண்ணன் " பொலி பீரோ ஆளுங்க தான...எத்தன தடவ கூட்டத்துல இவங்க கூட பேசியிருக்கேன்..தெய்யுமான்னு கேக்குற" என காலரை தூக்கினான்.
கூட வந்தவன் முதுகில் நிமிண்ட புரிந்து கொண்டு ஒரு வழியாக கிளம்பினோம்.

நாம் எங்கே தோற்றிருக்கிறோம்? புரிகிறதா?

எனிவே, ஹாப்பி இண்டிபெண்டென்ஸ் டே

(இந்த பதிவில் சில பேச்சுக்கள் மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. இது உண்மை சம்பவமாக இருந்தாலும் படைப்பாக கருதி மாற்றம் செய்ய எனக்கு முழு உரிமை உண்டு.இது யாரயும் குறிப்பிட்டு எழுதப்பட்டது அல்ல)