Flipkart

Amazon

Amazon

Saturday, August 20, 2011

இரத்தம் தொலைத்த இரவுகள் ~ மரணம் - பதிவு 1

இது எனது அனுபவங்கள் பற்றிய பதிவு மட்டுமே.இதில் உள்ள பல கேள்விகளுக்கு என் அடுத்த பதிவில் விடை கிடைக்கும்.அதுவரை பொறுத்திருங்கள்.

இந்த பதிவை கீதா என்ற என் நண்பனின் தாய்க்கும்,கார்த்திகாவுக்கும் சமர்ப்பிக்கிறேன்.                     

                               உங்களை மிக எளிதாக பலவீனப்படுத்த வேண்டும் என நான் நினைத்தால், என்னைக் கண்டு உங்களை பயப்பட வைக்க வேண்டும்.ஆனால் இதில் ஒரு சிக்கல் உண்டு ஒவ்வோருவரும் வெவ்வேறு விஷயத்துக்கு பயப்படுவார்கள்.உங்களை எனக்கு தெரியுமெனில் வேலை எளிது இல்லையென்றால் நீங்கள் எதற்கு பயப்படுவீர்கள் என நான் நிறைய யோசிக்க வேண்டி இருக்கும்.ஆனால் மிக எளிதான வழி ஒன்று உள்ளது.உங்கள் ஆழ் மனதில் உள்ள மரணம் பற்றிய பயத்தை கொஞ்சம் கிளறி விடுவது.

          உலகில் மனித இனம் தோன்றிய தினம் தொட்டு அவன் சிந்தித்தது எல்லாம் அவன் இருப்பை பற்றித்தான்.மரண பயம் ஆதி கால மனிதன் மட்டுமன்றி இன்றைய நவ நாகரீக மனிதன் வரை தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது.நடுவில் மண் மீது இருந்த ஆசையில் வீரச்செறிவு என பலர் வீர"மரணம்" அடைந்தாலும் மரணிக்கும் போது நிச்ச்யம் ஒரு கணமாவது பயந்திருப்பார்கள் என்பது என் எண்ணம்.

Fear of Existence அல்லது Fear of survivability தான் இயற்கையை பார்த்து மனிதன் பயந்ததற்கும் கடவுள் என்ற ஒன்று தோன்றியதற்க்கும் காரணமாய் விளங்கி இருக்க முடியும்.

தற்போது எனக்கு 20 வயது.என் வாழ்வில் பல மரணங்களை கடந்து வந்திருந்தாலும் அதில் நான்கு என்னை மிகவும் பாதித்தவை. மிக நீண்ட யோசனைக்கு பிறகே இந்த பதிவை எழுத ஆரம்பிக்கிறேன்.இந்த சம்பங்கள் நடந்த எந்த இரவிலும் நான் தூங்கவில்லை.முகம் வெளுத்த நிலையில் ஒரு உருவம் என் கனவில் சில வாரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டு இருக்கும்.

மரணம் 1 : ப்ரசாத்



என் பள்ளி பருவம்.ப்ரசாத்துக்கு கால்கள் வராது.(அந்த வயதின் வார்த்தைகள்,மாற்றுத்திறனாளி என விளிக்க இப்போது கற்றுகொண்டுவிட்டேன்)என்ன நோய் என என்னிடம் அவன் அம்மா விளக்கி சொல்லி இருக்கிறார்கள், 5 ஆம் வகுப்பு படிக்கும் போது,அது என்னவென மண்டையில் ஏறவில்லை.அவனை நடக்க வைக்க நாங்கள் நிறைய முயற்சி செய்து இருக்கிறோம்.6ஆவது படிக்கும் போது "சாந்தி" என்ற ஆசிரியை தாவரவியல் எடுப்பார்.அவர் வாரம் ஒரு வகுப்பு இவன் நடக்க வைக்க  வேண்டும் என்றே செலவிடுவார்.நானும் இன்னொரு மாணவனும் இவனுக்கு தோள் கொடுக்க நடக்க முயற்சிப்பான்.முதலிரண்டு முறை முழுதாக முயற்சித்தவன் பின் எதும் செய்யவில்லை.7ஆம் வகுப்பு  முதல் அவன் பள்ளிக்கு வரவில்லை.சிறிது நாட்கள் அவன் தங்கையை அழைத்து வரும் அவன் பெற்றோரிடம் பேசிக் கொண்டு இருந்தேன் பின் அந்த தொடர்பும் அறுந்து விட்டது.

இரண்டு வருடம் கழித்து,ஒரு நாள் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளி தொடங்கிய நேரம்,அவன் அம்மா அவன் தங்கையை அழைத்துக்கொண்டு பள்ளியை விட்டு வேலை நேரத்தில் வெளியேறுவதைப் பார்த்தேன்.பின் ஒரு ஆசிரியை கூறினார்கள்.ப்ரசாத்துக்கு இரண்டு மாதங்களாக உடல் நிலை சரி இல்லை.அன்று காலை,கழிவறை சென்றவன் அங்கேயே மரணித்து இருக்கிறான்.

அந்த வயதில் ப்ரசாத்தின் மரணம் பல கேள்விகளையும் சில பதில்களையும் என்னுள் பதிவு செய்தது.அவன் மரணம் கொஞ்சம் வலித்தாலும் அவன் எங்களோடு பயணித்த போது அவன் அனுபவித்த வலிகளை எண்ணினால் அவன் மரணம் அவனுக்கு நிம்மதியையே தேடி தந்திருக்க்கும் என நினைத்தேன்.

2. தினேஷ் : முன் கூறியவனை போலத்தான் இவனும்,மாற்றுத்திறனாளி. தினேஷ் மரணிக்கும் போது நாங்கள் 11ஆம் வகுப்பு.ஒரு நாள் காலை,பள்ளியின் கண்டிப்பான ஆசிரியை என பெயர் பெற்ற ஒருவர் எங்களிடம் விஷயத்தை சொல்லி அவனை காண அழைத்து செல்லுமாறு நிர்வாகத்திடம் கோர சொன்னார், பல முறை பேசியும் "அதெல்லாம் முடியாது" என மறுத்த நிர்வாகம் என் நண்பன் ஒருவன் "அப்ப நாங்க செத்தாலும் இப்படி தான் பண்ணுவீங்க இல்ல.." என கேட்கவும் இறங்கி வந்தது.

அவனை காண பள்ளி பேருந்தில் சென்றோம்.அவன் இறுதி நிமிடங்களை எங்களிடம் விம்மியபடியே விளக்கினார் அவன் அம்மா."அம்ம்மா காப்பாத்துங்க.. என்ன யாரோ இழுக்குராங்க.." என கூறியபடியே இருந்துள்ளான்.தன் மரணம் நெருங்குவதை உண்ர்ந்தானோ என்னவோ இரண்டு நாட்களாக தனக்கு எதனாலோ பயமாக இருப்பதாக கூறி உள்ளான்.

அவனை காண செல்லும் போது இருந்த மன நிலை வரும் போது வெகுவாக மாறி இருந்தது.அனைவரும் இயல்பு நிலைக்கு வந்து இருந்தார்கள்.இவன் மரணம் எனக்கு பயம்,வருத்தம் போன்றவற்றை விட கேள்விகளை அதிகம் தந்தது.

தினமும் நாளிதழ் படிப்பேன்,விபத்து செய்திகளை மேயும் போதோ அல்லது கண்ணீர் அஞ்சலிகளை கடக்கும் போதோ ஏற்படாத வலியும் பயமும் ஏன் மனிதர்களுக்கு தன்னை சார்ந்த அல்லது தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் ஏற்படுகிறது?



அடுத்தவனுக்கு இதே நிலை வரும் போது ஆறுதல் சொல்லி,தத்துவம் பேசும் மனம் ஏன் தன்னை மட்டும் சுய பச்சாதாபம் கொள்ள வைக்கிறது?

பல விடையில்லா கேள்விகள் அலையெழுப்ப தொடங்கின?

3.கார்த்திகா :  இன்று வரை என் உற்ற நண்பன் இவள் அண்ணன்.அன்று காலை 7.30க்கு என் வகுப்பு ஆசிரியரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி.பள்ளி விடுமுறை எனவும் ஒரு பெண் இறந்து விட்டதாகவும் என் தந்தைக்கு வந்து இருந்தது.இனிஷியல் (டீ.ஆர்) எனக்கு கொஞ்சம் நெருடினாலும் இருக்காது என நினைத்து குளிக்க சென்றேன்.வந்தவுடன் நண்பர்களிடமிருந்து அழைப்பு அது என் நண்பனின் தங்கை! அவன் வீட்டுக்கு நான் சென்ற நேரம் அழுது அழுது சிவந்திருந்தான்.நேற்றே நடந்த நிகழ்ச்சி எங்களுக்கு தெரிய நேரமாகிவிட்டு இருந்தது. தீபாவளி முடிந்த நேரம் அது.குளிக்க நீர் எடுக்க போனவள் மீது விறகு நெருப்பு பற்ற, அணைக்க முயன்று ஓடியுள்ளாள், எதிபாராத விதமாக
காருக்கு போட்டிருக்கும் ப்ளாஸ்டிக் பந்தல் மீது மோத அது அவளை அணைத்துக் கொண்டு விட்டது.மேல் வீட்டுக்காரர் அலறி ஓடி வருவதற்க்குள் அது உருகி அவள் உடலோடு ஒட்டி விட்டது.

நான் சென்ற சமயம் உடலை எடுத்துக்கொண்டு இருந்தார்கள்,அந்த நேரம் யாராவது அவனுடன், நண்பர்கள் செல்ல வேண்டும் என பட்டதால் நண்பனிடம் பைக்கை கொடுத்து விட்டு அவனுடன் சென்றேன்.செல்லும் வழி எங்கும் அவன் அழுதது என்னை பிசைந்து கொண்டே இருந்தது.ஆறுதல் கூற சத்தியமாக தோனவில்லை.அவன் அழுவதில் நியாயம் இருப்பதாக பட்டது.ஆனால் எதோ ஒரு நொடி எதை பற்றியோ வேனின் உள்ளே பேச்சு எழ சில நொடிகள் அவன் அழுகை நின்றது.தெளிவாக 10 வார்த்தைகள் பேசிய பின் மீண்டும் சோகம் வந்து கவ்விக் கொண்டது.மீண்டும் மனதில் கேள்விகள்...

மயானத்தை அடைந்தோம்,அவள் உடலை காண நேரிட்டது.தீக்காயங்கள் இருந்ததால் அவள் உடலை முழுக்க மூடி இருந்தார்கள்.இருப்பினும் சிதைக்கு தீ மூட்டும் வரை நான் அருகிலேயே இருந்ததால் என்னால் அவளை காண முடிந்தது.அது வரை சோகத்தை மறைத்து இருந்த என் கண்கள் அந்த பிஞ்சின் மேனியை தூக்கியதும் வெளியேற்றியது.உண்மையாகவே அவளை தூக்கி ஒரு ட்ராலியில் வைத்து சிதை நெருப்பில் தள்ளிய நொடி,சத்தியமாக செத்துவிட்டேன்.

கார்த்திகா என்னை கேள்விகளுக்கான விடையை நோக்கி தள்ளினாள்.

4)என் நண்பனின் அம்மா :

இவர்கள் எனக்கு ரொம்பவும் நெருக்கம். மிக மிக அற்புதனான ஒரு பெண்மணி.சத்தியமா சொல்றேன், உலகில் யாரை விடவும் பொறுப்பானவர்கள். அவனிடம் நான் கூறி இருக்கிறேன் " உங்க அம்மாவ நம்பி இந்த நாட்டையே வேணுமின்னாலும் கொடுக்கலாம் டா, அவ்வளவு பத்திரமா பாத்துக்க்குவாங்க".எந்த வேலை என்றாலும் முகம் சுளிக்காமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஈடுபாட்டோடு செய்வார்கள்.மனிதர்களை படிக்க தெரிந்தவர்கள்.கடைசியாக  நான்,என் நண்பன்,அவன் தங்கை,என் அம்மா மற்றும் அவன் அம்மா "எத்தன்" படம் பார்த்தோம்.அதற்கு இரண்டொரு வாரம் முன் வீட்டுக்கு வந்து இருந்தவர்கள் ஏனோ மிக வித்தியாசமாக எதிர்காலம் பற்றி நிறைய பேசினார்கள்.இன்று வரை எனக்கு நெருடலாக உள்ள இந்த விஷயத்தை இன்னும் என் நண்பனிடம் கூறவில்லை.எப்போது வீடுக்கு போனாலும் எதாவது அருந்த தராமல் இருந்ததே இல்லை.அவன் நகம் வெட்டுவது,தலை சீவுவது என அனைத்திலும் அந்த அன்னையின் பாசமும் குறுக்கீடும் பிரதிபலிக்கும்.அது எனக்கு பிடிக்காது "அவனுடைய Individuality யை நீங்கள் கெடுக்கிறீர்கள்" என ஒரு முறை கூறி இருக்கிறேன் (என் அம்மா மூலமாக).

சரியாக ஜூலை 1 மதியம் உணவருந்திக் கொண்டு இருந்த போது ஒரு குறுஞ்செய்தி, அவனிடமிருந்து. "ஆக்சிடென்ட் டா.அம்மா செத்துட்டாங்க".சத்தியமாக எனக்கு எதும் தப்பகா தோன்றவில்லை.அம்மா என்றவுடன் ஜெ., என்று எல்லாம் யோசித்தேன்.அவனுக்கு கூப்பிட்டால் எடுக்கவில்லை.பிற நண்பர்களுக்கும் விஷயம் அது வரை தெரியவில்லை. வகுப்புக்கு சென்றவுடன் ஓயாமல் மொபைல் அதிரவே எனக்கு சந்தேகமும் பயமும் பரவ ஆரம்பித்தது.யோசித்து பாருங்கள்.என் வகுப்பு ஆசியரிடம் கூறி விட்டு வெளியே வந்து பேசினேன்.இன்னோரு நண்பன் அழுது கொண்டு இருந்தான்.விளக்கினான்.விபத்து,குல தெய்வ கோவிலுக்கு செல்லும் வழியில் நடந்து இருக்கிறது. தனியாக வெளியே வந்தேன்,என் கல்லூரியில் படிக்கும் மற்ற நண்பர்களுக்கு அடித்தேன் எவனும் எடுக்கவில்லை,அந்த சமயத்திலும் மொபைலை எடுக்க விடாத கல்லூரி மீது கோபம் வந்தது.பேருந்தில் 1 மணி நேரம்,மனம் மிக வெறுமையாக இருந்தது.நிஜமாகவே நான் எதையும் யோசிக்கவே இல்லை.அழ கூடாது என நினைத்து இருந்தாலும் அன்று இரவு என்னை,சந்தீப் அழ வைத்து விட்டான்.அந்த இடத்தில் அவன் அம்மா இல்லாமல் எனக்கு இருக்கவே பிடிக்கவில்லை.ஆனால் அவன் அம்மா அவனுக்கு அவன் தங்கை ரூபத்தில் கூடவே இருந்தாள்.

நான் இத்தனை நாள் தேடித் தேடி படித்த தர்க்க சிந்தனைகள்,தத்துவங்கள் அனைத்தையும் மிக நேர்த்தியாக உண்ர்த்திவிட்டாள் எங்கள் தங்கை.

அப்படி என்ன தான் செய்தாள் அவன் தங்கை? அவள் உறவினர்கள் உதவுவதாக நடித்த நேரம் அது.அவர்கள் அப்பாவும் மிகவும் காயமடைந்து இருந்தார்.

மரணம் பற்றி பலரிடம் கேட்ட போது அவர்கள் பதில் என்ன? ஓஷோவின் பார்வையில் மரணம் என்றால் என்ன


என் அம்மா என்னிடம் "நான் செத்தாலும் இப்படித்தான் இருப்பியா?" என ஒரு நெருங்கிய உறவினரின் சாவுக்கு நான் கலங்காததை பார்த்து கேட்ட போது நான் சொன்ன பதில் ஆகியவற்றை என் அடுத்த பதிவில் எழுத உள்ளேன். இதில் எழுதினால் பதிவின் நோக்கம் திசைமாறுவதாக ஒரு எண்ணம்.

இந்த பதிவை கீதா என்ற என் நண்பனின் தாய்க்கும்,கார்த்திகாவுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

8 comments:

  1. maranam marakka mudiyaathathu thaan.. anaivarukkum pothuvaanathum kuuda.. maranapayaththudan vaalththukkal

    ReplyDelete
  2. @மதுரை சரவணன் : அடுத்த பதிவில் பயத்தை போக்க முயற்சித்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. :( :( really i dono da wat to say..., as im a part of these bad occassions i dono wat to comment..., but yu remembered me everything once again..., "kastamana kalangal"

    ReplyDelete
  4. @Tr sandeep

    வலிகளை கடக்காமல் வாழ்க்கை இல்லை!

    ReplyDelete
  5. santhosangala eirkum manasuku
    vazhigala eirka theriyala..

    ReplyDelete
  6. @நந்தினி : அவள் சொல்ல வந்தது சந்தோஷங்கள ஏற்க்கும் மனசுக்கு வலிகள ஏற்க தெரியல...

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..