Flipkart

Amazon

Amazon

Tuesday, August 23, 2011

அம்மா.... - சிறுகதை


                       ஏற்கனவே கதையை படித்தவர்கள் கவனத்திற்கு : கதையின் தொடர்ச்சி இணைக்கப்பட்டுள்ளது.

             குறிப்பு : ஒரு வளர் பருவ சிறுமியை மையக்கருவாக்கி அவளது கருத்துக்கள் தாங்கி வெளிவரும் இக்கதை,உண்மை சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட கற்பனை.இதில் உண்மை சம்பவத்தின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.இக்கதை யாரையும் பிரதிபலிக்கவில்லை.


ஜூன் 30, வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி :

                            அன்று மாலை வீடு வழக்கத்தை விட பரபரப்பாக இருந்தது.நான் பள்ளியில் இருந்து வீடு திரும்இக்கொண்டு இருக்கிறேன்.நான்,! நான் சூர்யா, இப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறேன்.சமச்சீர் கல்வி அது இது என இன்று வரை பாடங்கள் எடுத்த பாடு இல்லை.

                                         நான் வீடு திரும்பிய போது அப்பாவும் அம்மாவும் நூல்களை ஏதோ செய்து கொண்டு இருந்தனர் . எங்கள் ஊரின் பெரும்பாலான குடும்பங்களின் வயற்றுப்பாடு இது தான்,ஆனால் என் அம்மாவிடம் இருந்த அதிஷ்டமும் உழைப்பும் எங்களை நன்றாகவே வைத்து இருந்தது. அத்தனை வேலையிலும் நான் முகம் கழுவுவதற்குள் காபி எடுத்து வந்திருந்தார்.

ஜூன் 30, மாலை 8.00 மணி :

அண்ணன்,கல்லூரியில் இருந்து தொலைபேசியில் அழைத்தான்.பரஸ்பர விசாரிப்புகளுக்கு பின் இந்த வாரம் வீட்டுக்கு வருவதாக தெரிவித்தான்.அவன் நாளையே வர வேண்டி இருக்கும் என எங்கள் யாருக்கும் தெரியாது.

ஜூன் 30, இரவு 11.00 மணி :

இன்று தான் சாப்பிட இவ்வளவு நேரம் ஆகிறது.இன்று வியாழன்,வரும் ஞாயிறு எங்கள் கோவில் திருவிழா.அதனால் தான் வேலைகளை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.கோவில் திருவிழவிற்கு 5 லட்சம் நன்கொடை கொடுத்து இருந்தோம்.சேமியா உப்புமாவை எல்லோரும் சாப்பிட்டோம்.நான் தூங்க சென்றேன்.அப்பாவும் அம்மாவும் அவர்கள் வேலைக்கு.


ஜூலை 1 காலை 2. மணி :

காதோரம் கிசுகிசுத்தார் என் அம்மா.கண்களை கசக்கிக் கொண்டு எழுந்தேன். "என்னம்மா?"

"அம்மா கோவிலுக்கு போயிட்டு வர்ரேன். காலைல அத்தைக்கிட்ட தல வாரிக்கிட்டு ஸ்கூலுக்கு போகனும்"

"ம்ம்...."

                மெல்ல எழுந்து சென்றேன்.அப்பா ஜென்னை துடைத்துக்கொண்டு இருந்தார். கண்களில் தூக்ககலக்கம்.நிழல் ஆடியது.அம்மா,இரண்டாவது அத்தை,தாத்தா எல்லாம் ஏற வண்டியை ஊற விட்டார் அப்பா.கையசைத்து விட்டு வந்து படுக்கையில் விழுந்தேன்.

ஜூலை 1 காலை 5.13 :

என்னை ஒருவர் வந்து எழுப்ப முயல,நான் விழித்து விட்டேன்.வேறு யாரோ அவருடன் வாக்குவாதம் புரிவது காதில் விழுந்தது.

"அப்பறமா.. அவங்க வந்ததுகப்பறம் எழுப்பிக்கலாம்"

"சும்மா இருங்க...ஜனம் எல்லாம் இப்பவே கூடிருச்சு"

அவர்கள் பேசிக்கொண்டிருக்க நானே எழுந்து உட்கார்ந்தேன்.என் சித்தப்பாக்கள் இருவரும் அங்கே நின்று கொண்டு இருந்தார்கம்.கண்களை கசக்கி மணியை பார்த்தேன்."போய் பல்லு விளக்கீட்டு முகம் கழுவீட்டு வாம்ம்மா " என்றார்கள்.வார்த்திய்ல் அசாத்திய அழுத்தம்.ஏன் இப்போதே எழ வேண்டும் என்ற என் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.

நான் முகம் கழுவி வந்த போது வீடு முழுக்க ஜனத்திரள்... அனைத்து சொந்தக்காரர்களும் கூடி இருந்தார்கள்.எனக்கு ஏதோ தப்பாக இருப்பது தெரிந்தது,ஆனால் என்னவென புரியவில்லை. சித்தப்பா மெதுவாக ஆரம்பித்தார்.

"அப்பா அம்மா போன காரு ஆக்சிடெண்ட் ஆயிடிச்சாம்...ஒண்ணும் இல்ல சின்ன காயம் தான்...ஈரோட்டுக்கு எடுத்துட்டு போய் இருக்காங்க..."
அவர் எடுத்துட்டு போய் இருக்காங்க என்று சொன்ன போது சின்ன காயத்தின் ஆழம் எனக்கு புரிந்து போயிற்று.அவர் கண்களை பார்த்தேன்.

"அவ்வளவு தானா? "

தலைகுனிந்தபடியே அழலானார்.எனக்கு இன்னும் புரியவில்லை.என்ன தான் நடந்தது?



"யாராவது சொல்லித்தொலைங்க என்ன தான் ஆச்சு..என் கிட்ட மறைச்சு என்ன பண்ணப்போறீங்க..." முதல் தடவையாய் அதிர்ந்து பேசுகிறேன்.

பலர் மெல்ல மெல்ல ஒரு துக்க விஷயத்தை சொல்வது சிறந்த முறை என நினைக்கிறார்கள். அதில் சுத்தமாக உண்மை இல்லை. நம்பிக்கை அளித்து விட்டு உடனே அதை கலைக்கும் அந்த செயல்.

"கார் டிவைடர்ல மோதி ஆக்சிடென்ட் ஆயிடுச்சு..அப்பா தூக்க கலக்கத்துல வண்டிய விட்டுட்டார். கார் அப்செட் ஆயிடுச்சு..அம்மா தான் கைய நீட்டி உதவிக்கு ஆள் கூப்பிட்டு இருக்காங்க..ஆனா கார உடைச்சு எடுக்கறதுக்குள்ள.."

"எடுக்கறதுக்குள்ள....."

"அம்மா..." பெருங்குரலேடுத்து அழ ஆரம்பித்தார்.

உடைந்து கீழே உக்கார்ந்தேன். "அம்ம்ம்மாஅ......" என்னையும் அறியாமல் வீறிட தொடங்கினேன்.

அரைமணி நேரம் அழுது கொண்டே இருந்தேன்.அம்மாவின் நினைவுகள் ஆக்ரமித்தபடியே இருந்தன.எனக்கும் அவனுக்கும்(என் அண்ணன்) அம்மா தான் எல்லாம்,தலை பின்னுவதிலிருந்து, உடைகள் வாங்குவது வரை அவள் கற்றுக்கொடுத்த படி தான் நாங்கள் பழகி இருந்தோம்.

ஜூ லை 1 காலை 7.00 :

அம்மாவை கொண்டு வந்தார்கள். இன்று அதிகாலை என்னை உச்சி முகர்ந்த அம்மாவை ஒரு மூட்டையை போல தூக்கிக்கொண்டு வந்தார்கள்.

ஒரு அமானுஷ்யமான சூழ்நிலை அங்கே நிலவுவதாக மனசுக்கு பட்டது.எனக்கு மரணம் நிகழ்ந்த வீடுகள் இடிக்காது.பலரின் அழுகை மிகைபடுத்த பட்டது போல தெரியும்.

"பாடி வண்டி வந்துருச்சு", நேற்று வரை "அண்ணி ஆன்ணி" என அழைத்த அத்தை, அம்மாவை உடல் என்றாள்.மரணம் அடையாளங்களை எவ்வளவு எளிதாக அழித்து விடுகிறது?

அம்மா மனிதர்களை மிக எளிதில் எடை போடக்கூடியவர்.ஒருவரின் முக்கியதுவத்தை அவர் இறக்கும் போது கண்டுபிடித்து விடலாம் என கூறுவார்.

என்னால் அம்மாவை காண முடியவில்லை.இதற்கு பதில் நானும் அவர்களுடன் சென்று இறந்திருக்கலாம். எப்போதும் சிரிக்கும் அந்த முகம் இப்பொது சாம்பல் நிறத்தில்.கீழே இறக்கி மஞ்சள்,விபூதி என எதை எதையோ பூசினார்கள். நான் என் அம்மா முகத்தை தொட முயற்சிக்க பலர் வந்து  தடுத்த்தார்கள். அந்த நேரம் அழுகையோடு இயலாமையும் சேர்ந்து கோபம் எழுந்தது.மீண்டும் இரண்டு மண் நேரம் மீள முடியாமல் அழுதேன்.


ஜூ லை 1 காலை 9.30 :

        நாக்கு வரண்டு விட்டிருந்தது.தண்ணீர் கேட்க தோன்றவில்லை.மெதுவாக தலை தூக்கி அழுகிறவர்களைப் பார்த்தேன்.அவர்களும் துவண்டு விட்டிருந்தார்கள். புதிதாக யாராவது வந்தால் அழுகுரல் அதிகமாமதும்,இரண்டொரு நிமிடங்களில் சகஜமாவதும் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது.எழுந்தேன்,மனதின் பலவீனம் உடலை தாக்கி இருந்ததால் பந்தலின் துணை தேவைப்பட்டது.பந்தலை பிடித்து எழுந்து நின்றேன்.அம்மாவின் முகத்தை பார்க்க முடியவில்லை,எந்நாளும் நிறைந்திருக்கும் வசீகரம் இல்லை,ஓளி இழந்த நிலவைப் போல இருந்தது. 

அம்மா தோளில் கைவைத்தது போன்ற உண்ர்வு தோணிக்க திரும்பினேன்.தீடீரென மஞ்சள் நிறத்தில் எல்லாம் தெரிந்தது.நான் மயங்கி சரிவதை உண்ர்கிறேன் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.




நான் கண் விழித்த போது, அப்பாவை அழைத்து வந்து இருந்தார்கள்.அருகிலேயே ஒரு மருத்துவமனையில் முதலுதவி செய்து அழைத்து வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டு இருந்தது.அவருக்கும் சரியான அடி.. தாடை எலும்பு நொறுங்கி இருந்தது.வாயில் இருந்து ரத்தம் எச்சிலோடு கலந்து ஒழுகிக்கொண்டு இருந்தது. அழத் திராணி அற்று இருந்தார்.கால்கள் இரண்டிலும் பலத்த சேதம் ஆனாலும் அதை விட அவரது குற்ற உணர்ச்சியே அவரை அதிக சேதப்படுத்தி இருக்கும்.பார்க்கும் எல்லோரும்,நீங்கள் தூங்காமல் வண்டி ஓட்டி சென்றது தவறு என அவரை குதறி இருந்தார்கள் மறைமுகமாக.

                          அன்று சனிக்கிழமை,என் உறவினர்கள்,ஒரு கோழியை அறுத்து அம்மாவுடன் அனுப்ப தயாராகிவிட்டு இருந்தனர்.அண்ணன் அழுது கொண்டு இருதான்,அவன் அழுது நான் பார்த்தது இதுவே முதல் தடவை.அம்மா கொண்டு செல்லப்பட்டார்கள்.அண்ணனின் நண்பர்கள் இருவரும் சேர்ந்து அழுது கொண்டே அம்மாவை தூக்கிச் செல்வதை பார்த்தேன்.அவர்களை குறிப்பிட்டே ஆக வேண்டும் ப்ரவீண் மற்றும் சந்தீப்,பேதங்களை கடந்த ஒரு உறவு அது.உடன் பிறக்காத சகோதரர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னை தங்கைஎன்றும் என் அம்மவை அம்மா என்றுமே தான் கூறூவார்கள்.அடக்க முடியாமல் அழுது கொண்டிருக்கிறேன் என்ற உணர்ச்சி அவ்வப்போது உரைக்கிறது. நான் முதன்முதலில் விலக்கான போது அம்மா சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது."இனி எப்பவும் யார் முன்னாடியும் அழக்கூடாது....".ஆனால் அவர்களே இன்றைக்கு...அம்மாவின் சிதைக்கு தீ மூட்டும் வரை என்ன நடந்திருக்கும் என்பதை உங்களுக்கு சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை.


ஜூ லை 1 இரவு : 


ஆனால்,அன்றைய இரவு கொடூரமானது. நீண்ட நேரம் சுவற்றை வெறித்துக்கொண்டு இருந்த நான் எப்போது தூங்கினேன் என தெரியவில்லை.ஒரு கூரிய முனை கொண்ட கோடாரியை வைத்து எங்கள் அனைவரையும் துரத்தும் ஒருவன்,கடைசியாக என் அண்ணங்களை நெருங்க நான் விழித்துக்கொண்டேன்.முகமெல்லாம் வேர்த்து இருந்தது.மீண்டும் வெறித்தபடியே இரவை கழித்தேன்.அம்மாவின் நினைவுகள் அனைத்து செயல்களையும் ஆக்ரமித்தது.

ஜூலை 2  காலை : 

                  இன்று என் அப்பாவை பார்க்க செல்கிறோம்.ஈரோட்டில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறார்.இன்று கால்களில் அறுவை சிகிச்சை செய்து டட்டு பொருத்த இருக்கிறார்கள். அறுவை வெற்றிகரமாக முடிந்து அவரை 2 மணிக்குத்தான் பார்க்க முடிந்தது.அவரால் பேச முடியவில்லை.என் உறவினர்கள் என் அண்ணனிடம் தொழில் பற்றி எதோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.அவனால் அதில் கருத்தை செலுத்த முடியாததால் மற்ற இருவரும் கேட்டுக்கொண்டு இருந்தனர். இவர்கள் எப்படி இவ்வளவு சீக்கிரம் இயல்பாப் மாறினார்கள்? "அம்மா..அம்மா.." என உருகியதெல்லாம் பொய்யோ??  அம்மாவின் இழப்பு எதையும் யாரையும் நம்பவிடாமல் செய்த்து விட்டடு. மருத்துவமனைகளை எனக்கு பிடிக்காது, அழுகை,பயம் ,மருந்து வாசனை இது எல்லாம் என் வயிற்றை பிசைந்து கொண்டே இருந்தன.அவ்வப்போது "எதாவது சாப்பிடு" என நச்சரித்து எரிச்சலூக்கொண்டு இருந்தார்கள்.

ஜூலை 2 இரவு 11.00 :

                            இரவு,வீடு திரும்பிக்கொண்டு இருக்கிறோம்.நாளை அம்மவிற்கு முடிக்க வேண்டிய சடங்குகள் சிலவற்றை முக்க வேண்டுமாம். ப்ரவீண் அண்ணனுடன் பேசிக்கொண்டு இருந்தான்,அவர்களுக்கு முன் சீட்டில் இருந்ததால் நன்றாகவே கேட்டது.இவன் நாத்திகன், ஏற்கனவே ஒருவர் கோவிலுக்கு சென்ற போது இறந்தது குறித்து அவன் கிண்டல் அடித்து இருந்தது நெஞ்சை இப்போது கீறியது.

"மச்சான்..."

என் அண்ணன் அழுக ஆரம்பித்தான். 

"நடந்தத யோசிக்காத டா..."

"இல்ல டா... Futureஅ நெனச்சா தான்...."

15 நிமிடங்கள் எதிர்காலம் குறித்து எதேதோ பேசினார்கள். இதற்கு நடுவில் நான் நினைவை இழந்து தூங்கிவிட்டிருந்தேன்.

என்னை எழுப்பி பின்னால் கூப்பிட்டான்.போனேன். 

மெதுவாக ஆரம்பித்தான் "நீ ரொம்ப அழல" என்றான்.என் அண்ணனை பார்த்தேன் அவன் ஜன்னலுக்கு வெளியே வெறித்துக் கொண்டு இருந்தான். 

தொடர்ந்தான்

"சாவு எப்ப வரும்ன்னு தெரியாது... அப்பா அதுக்கு முன்னாடி செகண்ட் யோசிச்சு இருப்பாரா..இப்படி ஆகும்ன்னு.....ஒரே செகண்ட் தான் இல்ல..."

பேசிக்கொண்டே இருந்தவன்,அலைபேசி ஒலி எழுப்ப அதை காதுக்கு கொடுத்தான். "அம்மா...ம்ம் வந்துட்டு இருக்...."

அவன் பேசும் அதே வினாடி. ஏதோ ஒரு பேருந்து மீது மோது வதை தடுக்க எங்கள் ஓட்டுனர் வேனை திருப்பி உள்ளார்.பாலத்தை உடைத்துக்கொண்டு அது கீழ் உள்ள சாலையை நோக்கி உருள ஆரம்பித்தது.

ஒரு கணம்,எதோ ஒரு பலமான பொருள் நெற்றியில் மோதியது போல உணர்ந்தேன்,தாங்க முடியாத வலி.ஒரே கணம் தான்.அடுத்த கணம் வலி காணாமல் போய் விட்டு இருந்தது. மெல்ல எழுந்தேன்.அண்ணன் வலியில் துடித்துக் கொண்டு இருந்தான்.இரண்டொருவர் சுற்றி வந்து வேனை திருப்ப முயற்சித்து கொண்டு இருந்தார்கள்.யாரும் என்னை கவனித்ததாக தெரியவில்லை. அப்போது தான் கவனித்தேன் என்னால் என் அண்ணனை தொட முடியவில்லை. 

என் உடலை பார்த்தேன்.ஏதோ வெள்ளையாக இருந்தேன்.Transparent ஆக. ப்ரவீண் அண்ணாவும் அப்படித் தான் இருந்தார்கள், வெள்ளையாக...எங்கள் இருவரையும் யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.என்னைப் போல வேனில் தெரிந்த பெண்னின் தலையில் கியர் பாக்ஸ் மோதி அவள் தலை பிளந்து இருந்தது.அது... நான்.... நான்....எனக்கு பயமாக இருந்தது.எனக்கு வலிக்கவில்லை....ஏன்?

"அண்ணா.." குரல் நடுங்க கூப்பிடேன்.

"ஒரே செகண்ட் தான் இல்ல..."

பின் குறிப்பு : புரியாதவர்கள் கடசி இரண்டு பத்திகளை திருப்பி படிக்கவும்..குறிப்பை எழுதும்  நொடி வரை,எனது கேரக்டரை சைலேஷ் என்றே குறிப்பிட்டு இருந்தேன்.இப்போது அது ப்ரவீண் என மாற்றப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..