Flipkart

Tuesday, November 13, 2012

குப்பை 2 - வாழ்த்துக்கள் சார்

"ஹேப்பி தீபாவளி மச்சி" சொல்லி அதிகாலை ஏழு மணிக்கெல்லாம் ஒரு போன் கால். மனதுக்குள் அவனை சபித்தாலும், "சேம் டூ யூ மச்சி, எங்க துப்பாக்கியா?" என இளித்தவாறே கேட்டு வைத்தேன். தீபாவளிக்கள் எல்லா நாட்களைப்போலவும் தான் விடிகின்றன. நரகாரசூரனின் அலறலோ , பூமித்தாயிம் கதறலோ நான் கடந்து வந்து 22 தீபாவளிகளில் எங்கும் காணோம். எங்கும் மகனை வேறொரு பிறப்பெடுத்து கொன்ற ஒரு அப்பாவின் பராக்கிரமத்தை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். நிர்வாண நிலையை அமைதியோடு கொண்டாடும் மகாவீர் வம்சாவழிகளையும் காணவில்லை.

பலருக்கு தீபாவளி எப்போதும் போல ரோட்டோரங்களிலோ, நடை பாதையிலோ கடந்து விடுகிறது. பஸ் டிரவைர், காவல் துறை நண்பர்கள், ஐஸ் வண்டி தள்ளுபவர், அனுமார் வேஷம் போட்டு பிச்சை எடுப்பவர், பஞ்சு மிட்டாய் விற்பவர் என யாரோ ஒருவர் இன்று கொண்டாட்டத்தின் சுவடே தெரியாமல், அங்குமிங்கும் ஓடி வேலைகளை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார். (இதை விசையில் அழுத்துகையில் வெளியில் ஐஸ் வண்டி ஒன்றின் சத்தம் கேட்கிறது)

நண்பர்கள் பலர் தீபாவளி வாழ்த்துக்களை போன் பண்ணியும், இணையம் வழியாகவும் தெரிவித்தார்கள். நானும் பதிலுக்கு "ஹேப்பி தீபாவளி மக்களே" எனச் சொல்லி வைத்தேன். அதில் சிலர் " ரெண்டு விரல நீட்டுறீங்களே நீங்க ஏ.டி.எம்.கே வா" என்ற ரீதியில் "நீங்க பகுத்தறிவுவாதி தானே, எதற்கு தீபாவளி கொண்டாடுறீங்கன்னு" வெறியோட கேட்டாங்க. நான் சொன்னேன் "அண்ணே, நீங்க வாழ்த்து சொன்னீங்களேன்னு நானும் பதிலுக்கு உங்களுக்கு வாழ்த்து சொன்னேன், என் கொண்டாட்ட லட்சணத்தை நீங்கள் பார்த்தீர்களா?" என்றேன்.

இப்படித்தான் இருக்கிறது, நமது பகுத்தறிவின் லட்சணம். இங்கே எவருக்கும் பகுத்தறிவே வேலை செய்யவில்லை என்பேன் நான். ஏன் எனில், இவர்கள் நாத்திகத்தையும் பகுத்தறிவையும் போட்டு குழப்பித்தொலைக்கிறார்கள். அந்த வார்த்தைகளின் அடையாளமும் அர்த்தமுமே மாற்றப்பட்டு விட்டது இங்கே.

நண்பர் ஒருவர் இதே கேள்வியை கேட்ட போது சொன்னேன் "ஆம், நான் தீபாவளி, சரஸ்வதி பூஜை , பக்ரீத் , கிருத்துமஸ் மட்டுமல்ல செவ்வாய் வியாழன் என அனைத்தையும் கொண்டாடுகிறவன். எனக்கு காரணமே தேவையில்லை. ".  வாழ்க்கை மட்டுமல்ல, மரணத்தை கூட கொண்டாடலாம் என்கிறது ஜென். நான் ஜென் நிலையில் இருக்கிறேன் என்றேன். நண்பர் ஒன்றும் சொல்லவில்லை.

@masilan மாசிலன் என்ற ஒருவர், தீபாவளியின் திணிப்பு குறித்து சில கீச்சுக்களை இட்டு இருந்தார்.  அதன் சாரம், இயற்கையை வழிபட்டுக்கொண்டிருந்த திராவிடர்களிடம், ஆரியர்கள் இந்த Deity கலாச்சாரத்தையும், வர்ணாசிரமத்தையும் பரப்பினார்கள் என்பதே. அது குறித்த எந்த ஐயப்பாடும் எனக்கு இல்லை. முதலில் ஒரு காப்பியத்தை, காப்பியமாக கதையாக பார்க்கும் மனோபாவம் நம்மிடம் இல்லாமற் போனது பரிதாபத்திற்குரியதே. யாருக்கு தெரியும் இருநூறு ஆண்டுகள் கழித்து வரப்போகும் மடையர்கள், ஹாரி பாட்டரை நினைத்துக்கூட கொண்டாடலாம்.

அவருடன் இது குறித்து மேலும் விவாதிக்கும் போது, இந்த கொண்டாட்டங்களின் மூலம் , இந்த கதாப்பாத்திரம் தன்னை இருத்திக்கொள்வதாகவும், இந்த கொண்டாட்டம் ஒழியும் வரை அந்த கதாப்பாத்திரம் உண்மையென்றே மக்கள் நினைப்பார்கள் என்றும். கவன ஈர்ப்புக்காக, இந்த நாளை கொண்டாடாமல் புறக்கணிப்பதாகவும் கூறினார். என்னால் , இதை முழுதும் ஏற்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. காந்தி ஜெயந்தியையே "காந்தியை" ப்ரோஜக்ட்  செய்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய ஆதாயத்தை அறுவடை செய்யும் கொண்டாட்டம் என்கிறேன் நான். அதானல், இதும் அது போன்ற ஒன்றே என்பதில் சந்தேகமேதுமில்லை.

நிற்க, எனக்கு நிகழ் கால தலைமுறை குறித்த கவலை சிறிதும் இல்லை. தான் பெரிய புடுங்கி என்ற மன நிலை நான், நீங்கள் என பாரபட்சமின்றி எல்லோரிடமும் இருக்கிறது. நம்மை மாற்றுவது கடினம். ஆனால், எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி, இந்தக்கால குழந்தைகள் நான் பதின் பருவத்தின் கேட்க தொடங்கிய கேள்விகளை- சந்தேகங்களை 6-7 வயதில் கேட்கிறார்கள். "இது பெரியவங்க விஷயம், சொன்னத செய்" போன்ற "அப்பாவின் வார்த்தைகள்" வழக்கொழிந்து போய்விட்டன. நாம் பதில்களை தேடுகிறோம் அல்லது தெரியாது என ஒத்துக்கொள்கிறோம்.  இன்று தகப்பன் - குழந்தைக்கு இடையே உள்ள நெருக்கமும், நமது தெள்ளறிவும் நம்மை பொய் சொல்ல விடுவதில்லை. எழுதிவைத்துக்கொள்ளுங்கள் , இன்னும் அரை நூற்றாண்டுக்குள்ளாக இந்த மூடப்பழக்கங்கள் பெரும்பாலும் மறைந்து வெறும் கொண்டாட்டம் மட்டுமே மீதமிருக்கும். ஒரு குழந்தை தாயை கண்டது போல, நட்புகளோடு இணைந்த ஒரு கொண்டாட்டம், அது மட்டுமே நிஜம்.

நிற்க, இது போன்ற ஒரு நிலைக்கு செல்ல, இன்னும் அரை நூற்றாண்டில் முடியும் என்பது என் திட்டவட்டமான நம்பிக்கையாக இருந்தாலும், மிகத்தீவிரமாக சமய-அரசியல் நடக்கும் ஒரு நாட்டில் இது சாத்தியமா என்ற கேள்வியும் எனக்கு எழாமலில்லை. இங்கே ஒரு மடத்தனம், ஆழப்பதியவிடப்பட்டு இருக்கிறது. வேப்பரமர கோவில்களில் வெறும் காற்று மட்டுமல்ல, அரசியலும் இருக்கிறது. கோவிலை இடிக்கக்கூடாது எனப்போராடுபவர்கள், போராடுவது கோவிலைத்தவிர வேறு சில காரணங்களுக்கும் சேர்த்தே தான். குண்டு வெடிப்புகளும், போராட்டங்களும், இராமர் பாலம், அய்யோத்தி குறித்த தீர்ப்பும், உங்களுக்கு இந்த விஷயம் சென்சிடீவ் என நினைவு ஊட்டுவதற்காகவே. எல்லாரும் மறந்துவிட்டு இருந்தாலும் கூட, உணர்ச்சிகளை தூண்டி அதன் மூலம், அரசியல் நடத்துவதே இந் நாட்டின் இன்றைய நிலைமை.

உங்களுக்கு இராமாயணம் கதை என்று தெரிந்தாலும், உங்களை நீங்களே சந்தேகிக்கும் படி செய்து விடுவது தான் ஆர்.எஸ்.எஸ் அரசியலின் அடி நாதம். உங்களுடைய தெளிவு, அவர்களுடைய பிழைப்பு நாறுவதன் அறிகுறி. நன்றாக கவனித்து பாருங்கள், தீபாவளி ஒரு அனைத்து மத கொண்டாட்டம் என்ற பிம்பம் எழுவதை, இந்து அமைப்புகள் பெரும்பாலும் எதிர்த்தே வந்து இருக்கின்றன. மதம் தான் தங்கள் பிழைப்பு என இவை மிகத்தெளிவாக உணர்ந்திருப்பதே அதற்கு காரணம்.

இது நேரடியாக உங்களை அடிமைப்படுத்துவதை விட கொடுமையானது. மறைமுகமாக, உங்களை மதத்தின் பெயரால் அடிமைபடுத்தும் வேலை இது. நிற்க, மீண்டும் இங்கே, இந்த பகுத்தறிவு புடுங்கிகள் எல்லாம், ஏன் இந்து மத பண்டிகை பத்தியே பேசுறாங்க, மத்த மதமெல்லாம் இவனுங்க கண்ணுக்கு படாதா என்ற பின்னூட்டம் வரும்.

சொல்றேன், இங்கே நாம் தான் மெஜாரிட்டி, இங்கே இந்துக்கள் தான் அதிகம். இந்துக்களை வைத்த பிரதான அரசியலே அதிகம். சிறுபான்மையினரை வைத்து அரசியல் நடந்தாலும், இதைக்காட்டிலும் அது ஒன்றும் பெரிதல்ல என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் 10 நண்பர் குழுவில் எத்தனை சிறுபான்மை நண்பர்கள் இருப்பார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆதாலால், இந்து அரசியலை மட்டும் தனியே எடுத்துப்பேசும் நியாயமும் உங்களுக்கு புரியும்.

இங்கே பகுத்தறிவு உள்ளவர்கள் அனைவரும் ஒதுக்க வேண்டிய விஷயம், முட்டாள்தனமான சம்பிரதாயங்களை மட்டுமே. எண்ணெய் தேய்த்தலோ, கோவிலுக்கு செல்லுதலோ, சில ஓவிங்களின் முன் நமஸ்கரித்தலோ என் கொண்டாட்டத்தில் என்றுமே பங்கு வகித்ததில்லை. அது தீபாவளியாக இருந்தாலும் சரி, நண்பர்கள் தினமாக இருந்தாலும் சரி. நீங்கள், வெளிப்படையாக Atheism பேசி விட்டு, முக்காடு போட்டுக்கொண்டு போய் கும்பிடுபவனை கணக்கில் கொண்டு பேசுவது, காங்கிரஸில் போய் காமராஜர் போன்ற தலைவரை தற்போது தேடுவது போல. கிடைக்காது எனத்தெரிந்தே தங்கள் தரப்புக்கு வலு சேர்க்கும் பொருட்டு, இந்தக் களவாணிகளை கணக்கில் சேர்க்கிறார்கள்.

இதில் மட்டும் தான் சுற்றுப்புற சூழல் கெடுமா, நீங்கள் ஓட்டும் வண்டி, காரு, பிரிட்ஜு எல்லாம் எனக் கேட்பவர்களுக்கு, ஒரு சின்ன தகவல். ஒரு ஆண்டின் மொத்த டாக்ஸிக் புகைகளில் 30 சதவீதம், இந்த ஒரு வாரத்தில் வெளியிடப்படுகிறது.

கொண்டாடுங்கள், வாழ்க்கைய , ஒவ்வொரு நொடியையும் ஏன் மரணத்தையும் கூட.  ஆனால், கொண்டாட்டத்தின் வழிமுறையையும், காரணத்தையும் அறிதல், தெளிதல் அவசிய. பெரியார் சொன்னதையே சொல்லுறேன் "நான் சொல்லுறேன்னு கேக்காதீங்க...உங்களுக்கும் மூள இருக்குல்ல, யோசிச்சு பாருங்க..."--- கிளறுவோம்1 comment:

  1. சின்ராஸ்10:51 PM, November 13, 2012

    மாப்பி தேவையானது.. மிக்க நன்று;)

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..