Flipkart

Wednesday, November 7, 2012

உயிர்-மெய் எழுத்து


அரசுப் பேருந்துகளில் சரியாக பீக் டைமில் வருவது, ஒரு போர் நிகழும் சமயம் விலாசம் விசாரித்து வீடு வந்து சேருவது போலாகும். சரியான சித்ரவதை. ஒவ்வொரு ஜீவனின் மீதும் ஆதி மனிதனுக்குண்டான பூர்வாங்க வாசனை வீசிக்கொண்டிருக்கும். மனித உழைப்பை சுரண்டும் இந்த சமூகத்தில், அந்த சரண்டலுக்கு உள்ளானவன் சென்று சேரும் புகலிடமாய் டாஸ்மாக் மாறிய பின், ஆறு மணி பேருந்துகளில் மணம் கமழ்வது ஒன்றும் ஆச்சரியம் கொள்ள ஏதுமில்லை. நாசிக்குண்டான இயல்பை அது இழந்தால் மட்டுமே சுகமான பயணம் சாத்தியப்படும். அனுவிற்கு இந்த பயணம், பழகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தது.

ஓட்டமும் நடையுமாய் வந்து படியேறினாள் அனு. ஜீவா வருவதற்குள் வீட்டை கூடி விட வேண்டும். வந்துவட்டால் அதிகாரம் தூள் பறக்கும். சில நாட்களில் நானும் கூட உதவிக்கு வருகிறேன், என்று ஆரம்பித்து, இங்க தொட்டு அங்க தொட்டு வித்தியாசமாய் பண்ணுகிறேன் பேர்வழி என நாலு பொருட்களை உடைப்பது தான் மிச்சம்.

சிந்தனைகளுக்கிடையில் வீடு வந்துவிட்டிருந்தது. என்றைக்குமில்லாத திருநாளாக வீட்டுக்காரம்மா பார்வதி மாடிப்படியில் நின்று கொண்டிருந்தாள். இந்த நேரம் மாமி, மாமாவின் வாக்கிங் நேரம். மாமா வெளியே போயிருந்தாலும் மாமி கீழே தான் இருப்பாள். எப்போதும் அனுவாக கீழே வருவது தான் வழக்கம். உபயம் பார்வதியின் மூட்டு வலி. அவசரமாய் உற்பத்திசெய்து கொண்ட புன்னகை ஒன்றை உதிர்த்தபடியே, படியேறினாள் அனு.

“என்னம்மா மூட்டு வலி பரவாயில்லியா? சிரமட்டு மேல ஏறி வந்திருக்கீங்க?”

     கீழ் வீடு தான் பார்வதி அம்மாளின் வீடு. அவளும் அவர் கணவரும் மட்டும் தான், மாமாவிற்கு ஜீவா மீதும் அனு மீதும் கொள்ளைப் பிரியம். இவர்கள் வயதொத்த எல்லோர் மீதும் தான். இந்நேரம் பார்க்கில் உட்கார்ந்து தெருவில் இருக்கும் எல்லாருடனும் வாஞ்சையோடு அளவளாவுவார். இன்றூ அவர் இன்னும் வரவில்லை போலும். அது 30 வருடங்களாக குழந்தை இல்லாத குறையின் வெளிப்பாடக்கூட இருக்கலாம் என்பது ஜீவாவின் கருத்து.

பிரமை பிடித்தாற் போல் இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி அம்மாள்.

“அம்மா,” என அனு அவரை லேசாக தொட்டாள்.

தீயை தீண்டினாற் போல், வெடுக்கென கையை உதறினார் மாமி. எதுவும் பேசாமல் விடுவிடுவென்று படியிறங்கி சென்று விட்டாள். அனுவுக்கு ஒன்றும் புரியவில்லை. இரண்டு முறை கீழிறங்கி சென்று கூப்பிட்டு பார்த்தாள்.

“அவர் வரட்டும் பேசிக்கலாம்” குரல் மட்டும் வந்தது.

“என்னம்மா பேசணும்?”

பதில் வரவில்லை. சரி, அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டு நகர்ந்தாள். அவள் சட்டென நகர்ந்ததுக்கு ஒரு காரணம் இருந்தது. பார்வதி அம்மாளின் இயல்பே அப்படித்தான், சின்னச்சின்ன விஷயத்திற்கெல்லாம் பயங்கரமாக குதிப்பது போலத்தோன்றும். ஆனால் அடி மனதில் பாசம் அவ்வளவு தேங்கிக்கிடக்கும், அதை வெளிப்படுத்த தெரியாமல், கோபமாய் வெளிப்படுத்துவார். அவரை சமாதானப்ப்டுத்துவது, ஒரு குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பதை போல. மிக எளிது.

------------------------------------------------
     ஜீவா இன்னிக்கு கொஞ்சம் லேட். வழக்கமாக வருகைப்பதிவு எழு மணிக்கெல்லாம் நிகழ்ந்துவிட்டிருக்கும். இப்போது மணி எட்டு.
“நாதா… இன்று ஏன் இவ்வளவு தாமதம்?” சமையல் அறையிலிருந்து  கருவேப்பிலைகளின் தாளிப்பிணூடே இருந்து அனுவின் குரல் ஒலித்தது.

     சாதாரண நாட்களில் எல்லாம், இந்த குரல் கேட்ட உடனே, சமையற்கட்டினருகில் ஜீவாவின் நிழலாடும். இன்று குரல் கூட வராததிலிருந்து, இன்று எதோ மூடு சரியில்லை என அறிந்துகொண்டாள்.
“அனு இங்க வா” சிறிது நேரம் கழித்து சுரத்தில்லாமல் ஒலித்தது ஜீவாவின் குரல். போய் அருகில் அமர்ந்து தலையை கோதி விட்டாள். உங்களை நேசிக்கும் ஒரு ஜீவனின் தலைக்கோதலை விட மனதுக்கு ஒரு மருந்து எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காது.

“என்னாச்சு?”

“அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு…”

“இனி இன்னொரு வீடு தேடி அலையணும் அவ்வளவு தானே, இதுக்கு ஏன் அலட்டிக்கற..” அனு ஜீவாவை சமாதானம் பண்ண முயன்றாள்.

என்ன தான் சமாதானம் பண்ண முயன்றாலும், அது சுலபமில்லை என அனுவுக்கு தெரியும். உண்மையை சொல்லி வீடு கேட்ட இடத்தில் எல்லாம், கிண்டல் கேலி செய்து துரத்தினார்களே தவிர, வீடு கொடுக்கவில்லை. வேறு வழியில்லாமல், பொய் சொல்லி வீடு கேட்டு, பின் ஏற்கனவே உண்மை சொல்லி வீடு கேட்டவர்கள் மூலம் எப்படியோ உண்மை தெரிந்து, வாழ்க்கையில் ஒரு பகுதியாக, அவமானப்படுதலும், வீடு தேடுதலும் மாறிப்போய்விட்டிருந்தது.

“அதுக்கு இல்ல அனு, மாமா நம்ம மேல எவ்வளவு பாசம் கெச்சிருந்தாரு.. அவரு மூஞ்சில எப்படி முழிக்கறது” ஜீவாவின் குரல் ஒலித்ததோ ஒழிய முகம் தொங்கியே தான் இருந்தது.

“யாரு உனக்கு சொன்னா?”

“மாமி தான், காரி துப்பாத கொற தான். என்ன என்னம்மோ புழுவ பாக்கற மாதிரி பாக்கறாங்க. மாமா இன்னும் வரல. அவர் வந்த அப்பறம் உங்க சாமான தூக்கி வெளிய ஏறியறேன்னாங்க….” சாதாரண ஜீவாவின் தொனி ஏறியிருந்தது இந்த பேச்சில்.

அதற்குள் கீழே முனகல் சத்தம் கேட்டிருந்தது.

அனு எட்டிப்பார்த்தாள்.

“ஜீவா ஏகப்பட்ட பேர் கூடி இருக்கானுங்க, இன்னிக்கு இடியும் மின்னலும் ஹெவியா இருக்கும்மின்னு நினைக்கிறேன்” என்றாள் அனு.  நான்கு வருடங்களாக 23 வீடு மாறி ஆகிவிட்டது. எத்தனையோ அவமானங்கள், வலிகள், வாழ்க்கையை பக்குவப்படுத்தியாகிவிட்டது. பிரச்சனைகள் வரும் போது அது குறித்து பகடி செய்வது, ஜீவாவிடம் இருந்து ஒட்டிக்கொண்ட பழக்கம். அந்த பழக்கம் தான் அனுவை ஜீவாவிடம் இழுத்துப்போட்டது எனவும் சொல்லலாம்.

“என்னடா செல்லம், இது என் டயாலக் ஆச்சே” சொல்லிக்கொண்டே ஜீவா எட்டிப்பார்த்தான். “எல்லாம் இந்த எதிர் வீட்டு த***** தடியன் செய்யறது. அவன் உன்ன பாக்கற பார்வையே சரி இருக்காது”

“ஏய், கெட்ட வார்த்த பேசுனா அவ்ளொ தான் சொல்லீட்டேன்” கண்களை உருட்டினாள் அனு. ஒரு சொட்டு கண்ணீர் எட்டிப்பார்த்து இருந்தது அந்த கண்களில் இருந்து. என்ன தான் உணர்வுகளை மறைக்க முயன்றாலும், இந்த கண்கள் அதை வெளிப்படுத்தி விடுகின்றன. எப்போதும் எட்டிப் போய் துடைக்கும் ஜீவாவிற்கு இன்று ஏனோ அதை துடைக்கத்தோன்றவில்லை.
தூரத்தில் ஒரு வெளிச்சப்பொட்டு தெரிந்தது, இவ்வளவு மங்கலான வெளிச்சப்பொட்டு மாமா ஸ்கூட்டராகத்தான் இருக்க வேண்டும்.
“கடங்காரி கீழ வாடி” பார்வதி அம்மாளின் குரல் மேலே வரை கேட்டது. அது எப்படித்தான் இந்த வெளிச்சத்தை பார்த்தவுடன் இந்தம்மாளுக்கு இவ்வளவு தைரியம் வருகிறதோ.

யாரையும் எதுவும் பேச வேண்டாம் எனக்கூறி விட்டார் மாமா. எதையும் எப்போதும் உட்கார்ந்து பேசினால் தீர்வு கிடைக்கும் என்பது அவரது சித்தாந்தம். ஆனால், கவுரவத்தின் மீது ஏக பற்று உடையவர். உங்களுக்கு நீங்கள் கட்டி இருக்கும் வேட்டி வேண்டுமா இல்லை கவுரவமா என்றால் கவுரவம் தான் யோசிக்காமலேயே சொல்லிவிடுவார். எனவே இந்த வீட்டில் இடம் கிடைக்கும் என்பது கனவில் கூட நிகழ வாய்ப்பில்லை.எல்லோரும் அவர்களுக்குள் முனகிக்கொண்டு இருந்தனர். பெரும்பாலும் எல்லாம் கெட்ட வார்த்தைகள். அனு ஒரு மூலையில் குறுகி அழுது கொண்டிருந்தாள். அவளை கீழே வர வேண்டாம் என்று ஜீவா சொல்லியிருந்தும் அனு கேட்காமல் வந்திருந்தாள்.
ஐந்தாறு “தே” வார்த்தைகளை கேட்ட பின் பொறுமை இழந்த அனு கதறி அழ ஆரம்பித்தாள்.

“அப்படி என்னம்மா நாங்க தப்பு பண்ணோம், “

“பண்றதையும் பண்ணீட்டு கேக்கறா பாரு….. “ எதிர் வீட்டு ஆடிட்டரின் குரல் அது.

“தெருவில நாங்க மானம் மரியாதையோட இருக்க வேணாம்” இது மூணாவது வீட்டு பத்மினி.

“நாங்க பண்ணினது தப்பு தான், பெரிய தப்பு. ஆனா, இது வரைக்கும் உண்மைய சொன்ன எங்கயும் வீடு கிடைக்கல. அதனால் தான் பொய் சொன்னோம். உங்கள ஏமாத்தணுமின்னு எந்த நோக்கமும் இல்ல… வேற வழி தெரியல… இன்னும் ஒரு வாரம் டைம் குடுங்க காலி பண்ணீறோம்” ஜீவா பேச மாமா ஜீவாவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“ஒரு வாரம் டைம் வேணுமாமில்ல, பெட்டி படுக்கைய தூக்கி வெளிய ஏறிங்க… ஊர் மேயற கழுதைங்க தான….” என கூட்டத்தில் இருந்து ஒரு குரல் ஒலிக்க ஜீவாவின் ரத்தம் சூடேறியது.

“என்ன டா, ******. எனக்கு பேச தெரியாம இல்ல. அப்படி பேசுனா உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும். நீ வந்து கூட்… குடுத்தியா..  உங்கள மாதிரி வெறும் உடம்புக்கு ஆசைப்படுற காதல் இல்ல இது.. ஒரு பொண்ண பாக்கும் போதே அவ போட்டு இருக்கற பிரா கலர யோசிக்காத ஒரு ஆம்பள முன்னாடி வாங்கடா பாக்கலாம்“ பேசிக்கொண்டிருந்த ஜீவாவை எட்டிப்பிடித்து அமைதிப்படுத்தினார் மாமா.

பின் நிமிர்ந்து எல்லாரையும் பார்த்தும் தெளிவாக ஆனால் உரத்த குரலில் சொன்னார்.

“குழந்தைங்க இங்க தான் தங்குவாங்க. இது நான் உழைச்சு கட்டின வீடு. என் இஷ்டம்… நீங்க எல்லாரும் உங்க வேலைய பாத்துட்டு போலாம்”.
இந்த பதில் கூடி இருந்த கூட்டத்திற்கு மட்டுமல்ல. பார்வதி அம்மாளுக்கும் ஜீவாவிற்குமே அதிர்ச்சியாக இருந்தது. கவுரவம் கவுரவம் என குதிக்கும் மாமாவா இப்படி, உள்ளுக்குள் ஆச்சரிப்பட்டாலும், கண்ணீர் மெல்ல எட்டிப்பார்த்தது ஜீவாவின் இடது கண்ணிலிருந்து.

“நீங்க சரின்னு சொன்னாலும், நாங்க எல்லாம் ஒத்துக்க மாட்டோம். நாங்க எல்லாம் இங்க வாழ வேணாமா?” என ஒருவர் கேட்க கூட்டம் ஆமோதித்தது.

கூட்டம் ஒரு வகையான போதை. கூட்டம் ஒரு வகையான சிறை. சமூகத்தில் தனக்கிருக்கும் மதிப்பை தக்க வைக்கவோ, வலுவாக கூட்டதில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதாக மனதை ஏமாற்றவோ எதோ ஒரு காரணத்தால் கூட்டம் உங்களை சுய கருத்தை கொள்ள விடாமல் செய்து விடும். ஒரு குழு மன நிலை என்றைக்குமே ஒரு பயனுள்ள தனி மனிதனை அமைத்து விடாது, அமையவும் விடாது.

கூட்டம் மீண்டும் முனக ஆரம்பிக்க, இடைவெட்டினார் மாமா.
“என்ன நீங்கெல்லாம் யோக்கியமா?” கேட்டுவிட்டு எதிர்வீட்டு வைத்தியலிங்கத்தை முறைத்தார் மாமா.

“நீ அனுவ எப்படி பாப்பன்னு எனக்கு தெரியாதா? உன் வீட்டுல ஒரு வேலக்காரி இருந்தாளே, உன் மக வயசிருக்கும் அவ கிட்ட நீ என்ன பண்ணின, அவ வேலைய விட்டுப் போகும் போது என் கிட்ட எல்லாத்தையும் கொட்டிட்டு தான் போனா…. ஆடிட்டர் சார், போன மாசம், ***** இண்டஸ்ட்ரீஸ் கணக்கு முடிச்சீங்களே, அந்த பைவ் ஸ்டார் ஹோட்டல்ல, அது என்ன வகையான கவுரவம் சார்… லஞ்சம் வாங்கறது பெத்த தாய…. “ நிறுத்திக்கொண்டார் மாமா.

கூட்டம் ஸ்தம்பித்துப்போய் இருந்தது. இதுவரை அவர்கள் சாந்தமான மாமாவையே பார்த்துவந்துள்ளனர். யாரை பார்த்தாலும் “சவுக்கியமா கொழந்தே” என்றே அழைப்பார்.

பார்வதியிடமே சிறு சத்தம் இல்லை. இப்படி ஒரு கணவரை அவள் 30 வருடமாக பார்த்தில்லை.

"காமம்ங்கறது உங்களுக்கெல்லாம் வெறும் உடல் சார்ந்த விஷயம். அதானால தான் இத இவ்வளவு பெருசு படுத்துறீங்க.
இவங்களுக்குள்ள இருக்கற அன்ப உங்களால புரிஞ்சுக்க முடியாது. ஏன்னா அன்புக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையே. நீங்க பண்ணாத தப்பு என்னத்த இந்த கொழந்தைங்க பண்ணீட்டாங்க?"
"அக்கா தங்கச்சின்னு பொய் சொல்லி வீடு கேட்டு இப்படி, மானமுள்ளவங்க எல்லாம் இந்த தெருவில வாழ வேணாம்... கருமம் கருமம்..." தலையில் அடித்துக்கொண்டது கூட்டத்திருந்த ஒரு பெண் குரல்.

"உண்மைய சொல்லி வீடு கேட்டு இருந்தா நீங்க குடுத்து இருப்பீங்களா? உங்க மான ரோஷத்த பத்தி எனக்கு தெரியாது, இந்த தெருவுல எத்தன பேரு சொந்த சம்பாத்தியத்துல வீடு கட்டுனீங்க எத்தன பேரு ஊர ஏச்சு கட்டுனீங்கன்னு எனக்கு தெரியும். இவங்க உணர்வுகள நீங்க புரிஞ்சுக்கலைன்னாலும் பராவாயில்ல, அத காயப்படுத்தாதீங்க..."
 
மாமா தொண்டையை கணைத்துக்கொண்டு மீண்டும் சொன்னார்.

“என் வீடு, என் இஷ்டம். இதுக்கு மேல இதப்பத்தி பேசுனா உங்க மரியாதை தான் கெடும். கெளம்பலாம்” சொல்லிவிட்டு விறுவிறுவென உள்ளே சென்றுவிட்டார் மாமா.

பார்வதி அம்மாள் இருவரையும் பார்த்துய் பேந்த பேந்த விழித்தாள். பின் உள்ளே சென்று விட்டாள். கூட்டம் கலைந்தது, முனுமுனுத்த படியே.


அன்றிறவு,

“ஏங்க” பார்வதி பரிமாறிக்கொண்டே மாமாவை உசுப்பினாள்.
“என்ன கேக்கப்போறன்னு தெரியும் பார்வதி, கவுரவம் கவுரவமின்னு குதிப்பீங்களே அதானே…”
இல்லீங்க, அக்கா தங்கச்சின்னு சொல்லீட்டு இப்படி தப்பான உறவு வெச்சுட்டு இருக்காங்களே.. ரெண்டு பேரும் பொம்பளைங்க வெக்கமே இல்லாம…. இவங்கள எப்படிங்க…”

"அவங்களுக்குள்ள இருக்கற காதல், காமத்தோட நீட்சி பார்வதி. இப்ப நம்ம ரெண்டு பேருக்கும், ஒருத்தருக்கு ஒருத்தோரட துணை தேவைப்படுது... இது என்ன காமமா? அந்த மாதிரி தான் இவங்களும்....."

சாப்பிடுவதை நிறுத்தி விட்டு சிறிது நேரம் பார்வதியையே வெறித்தார் மாமா.

“சொல்லுங்க, ஏன்?” பார்வதி அம்மாளின் குரல் சுரத்தில்லாமல் தான் ஒலித்தது. வயதானவர்களை புரிந்து கொளவது மிகக்கடிமான செயல், அவர்களுக்கே கூட. பார்வதி அம்மாளுக்கு இப்போது வரை, தனக்கு ஜீவா, அனுவின் மீது கோபம் இருக்கிறதா, அது இந்த கூட்டத்தால் மிகைப்படுத்தப்பட்டதா எனத்தெரியவில்லை. அதனால் தானோ என்னவோ மாமா அப்படி பேசியும், அவளுக்கு அதை எதிர்க்கணும் என்று தோன்றவில்லை.

“கௌதம பார்த்தேன்” என்றார் மாமா. சட்டென நிமிர்ந்தாள் பார்வதி அம்மாள்.

           கௌதம், இவர்களின் மகன். எல்லோரும் நினைப்பது போல இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாமல் இல்லை. இருந்தான் , கௌதம் , ஒரே மகன். கட்டுப்பாடோடும் செல்லத்தோடும் வளர்த்து வந்தார்கள். எல்லாம் அவன் பதின் வயதை எட்டும் வரை தான். பதின் வயதில், அவனுள் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அவனுள் தூங்கிக்கிடந்த பெண்ணின் தன்மை மெல்ல மெல்ல வெளிப்பட ஆரம்பித்தது. வெளியிலும் சொல்ல முடியாமல், உள்ளுக்குள்ளும் வைத்துக்கொள்ள தெரியாமல் அவன் நரக வேதனையை அனுபவித்ததென்னவோ உண்மை.

இந்த விஷயம் மெல்ல கசிந்த போது மாமாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவனை வீட்டை விட்டு அனுப்பி விட்டார். அவனை வீட்டை விட்டு அனுப்பும் போது அவர் அதை வலியோடு தான் செய்தார் என சொல்வதற்கில்லை. ஆனால், காலம் வலிகளை தர தவறுவதில்லை. சமூகம் குறித்த பயத்தால் தான் செய்த பிழையை அவர் நன்கு உணர்ந்திருந்தார். இத்தனை தூக்கமில்லாத இரவுகளில் இந்த சமூகம் ஒரு நாள் கூட தனக்கு தாலாட்டு பாடியதில்லை.

பார்வதி அம்மாள் ஒன்றும் பேசத்தோன்றாமல் பார்த்துக்கொண்டிருக்க அவர் தொடர்ந்தார்.

“போன வருஷம் ஒரு நாள் ரயில் வந்துகிட்டு இருக்கும் போது, ஒரு நாலு பேர் கூட்டமா வந்து பிச்ச கேட்டாங்க. ஒரு பத்து ரூபா குடுத்தேன். ஒருத்தி அத வாங்காம, என் மூஞ்சில துப்பீட்டு நகர்ந்துட்டா. அப்ப தான் கவனிச்சேன், முகத்துல அந்த தழும்பு, அந்த நம்ப கவுதம்…” அவர் குரல் தழுதழுத்தது.

 “அதுக்கப்பறம் எப்படியெல்லாமோ அவன தேடிப்பாத்தேன். அவன் கிடைக்கல, அவன் கடைசியா மண்ண வாரி இறைச்சது இன்னும் எனக்கு நினைவிருக்கு”, வழியும் கண்ணீரை துடைக்கக்கூட தோன்றாமல் பேசிக்கொண்டிருந்தார் கணேசமூர்த்தி.

பார்வதியால் பேச முடியவில்லை. நடந்ததை நினைத்துப்பார்த்து கண்ணீர் விடத்தான் முடிந்தது. தான் பிடிவாதம் பிடித்திருந்தால், ஒரு வேளை கவுதம் இன்று தங்களோடு இருந்திருப்பானோ. தெரியவில்லை. ஆனால், பிள்ளை பாசத்தை தாண்டி அன்று கவுரவம் கண்ணை மறைத்தது ஆச்சரியம் தான். இரண்டாவது மகன் பிறக்கும் சமயம் பார்த்து, கவுதமை இவர் துரத்தியதும், பின் சாக்கு போக்கு சொல்லி, பின் உண்மை வெளிப்பட்டு, அழுது புரண்டு, தேத்திக்கொண்டு, வாழ்க்கையை இந்த சாக்கடை சமூகத்தில் இணைத்துக்கொண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

மெல்ல அவரே தொடர்ந்தார்.


“கொழந்தைகள் டீ, அவங்களுக்கு எது சரின்னு படுறதோ அதப்பண்ணுறாங்க…. அதப்பண்ண அவங்களுக்கு உரிமை இருக்கு. அவங்களா அத பண்ணல, அவங்க சரீரம் அத கேக்கறது… புத்தியும் மனசும் அவங்கள கேக்குது. இதுவும் இயற்கை தான்… நம்மால தான் புரிஞ்சுக்க முடியல. நாகரீகம்ங்கற பேருல என்ன என்னமோ பண்ணுறோம், சடங்குகள சம்பரதாயங்கள மாத்திக்கறோம். இது அவங்க வாழ்க்க அவங்க விருப்பம், அவங்க இஷ்ட்டப்படி அவங்கள வாழ விட்டுடலாம்”.

அவர் உணர்ந்து பேசினாரா, இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை பார்வதிக்கு,

“இருங்க, கொழந்தைங்க சமைச்சு இருக்க மாட்டாங்க, நான் போய் அவங்களையும் சாப்பிட அழைச்சுட்டு வர்றேன்…” என்று எழுந்தாள்.

“ரெண்டு பேத்துக்கு மட்டும் தான்டீ சமச்சுருக்க…”

“ நான் சாப்பிடுறது இப்ப ரொம்ப முக்கியமா, அவங்கள வேற திட்டிட்டேன் பசியோட இருப்பாங்க….  திருப்பி சமைச்சுக்கலாம்” சொல்லிக்கொண்டே படியேறினாள்.

சிரித்துக்கொண்டார் கணேச மூர்த்தி, இந்தப் பெண்களைத்தான் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.பின் குறிப்பு :

இந்த்தக்கதை யாரையும் புண்படுத்தவோ, காயப்படுத்தவோ எழுதப்பட்டதல்ல. இது போல, பொறுப்பு துறப்பு எனக்கு புதிது எனினும், கதையின் சீரியஸ்னெஸ் கருதி இதை சொல்கிறேன். மாற்றுக்கருத்துள்ள நண்பர்கள், விவாததத்திற்கு வரவேற்க்கப்படுகிறார்கள்.


கதையின் சுவாரசியம் கெடாத வகையிலும், ஜீவாவிடம் மேலோங்கி இருக்கும் வகையிலும், ஜீவா எட்டிப்பார்த்தான் என ஒரு இடத்தில் வரும். மற்றபடி எங்கேயும் ஜீவாவின் பால் குறிப்பிடப்பட்டு இருக்காது. இதையே ஆங்கிலத்தில் எழுதுவது எளிது. தமிழில் இது கத்தி மேல் நடக்கிற வேலை. ஜீவா பெண்ணைப்போல உடை தரித்திருப்பாள் என்பதும், ஏனைய பிரவும் வாசகர்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.2 comments:

 1. பெற்றோரின் கௌரவம் சாதாரண குழந்தைகளையே பெரிய அளவில் பாதிக்கையில்... இது போலான மாற்றுதன்மை கொண்டவர்களின் பாடு திண்டாட்டம்தான்... ஒரே கதையில் இரு வேறு தரப்புகளின் பார்வையைகளை காட்டி...
  பாராட்டபட வேண்டிய படைப்பு..!!

  //இந்தக்கதை யாரையும் புண்படுத்தவோ, காயப்படுத்தவோ எழுதப்பட்டதல்ல.// இந்த டிஸ்கிக்கு அவசியமே இல்லாத அளவிற்கு எழுதி உள்ளீர்கள்....

  நல்ல நடை,நீங்கள் சொல்வது போலான கத்தி மேல் நடக்கும் விஷயத்தை கையாண்ட விதம் நன்று...

  - லாஓசி என்கிற சந்து!
  @_santhu

  ReplyDelete
 2. சூப்பர்!!
  கதையை கொண்டு போன விதம் ., அந்த காரணத்தை அறிந்துகொள்ளும் (வாசிப்பவனின்) ஆர்வத்தை கடைசி வரை குறையாமல் தக்கவைத்துக் கொண்டீர் !!!அதற்கொரு ஷொட்டு!!!!!

  கதையின் கருத்து தவிர கூட்டத்தை பற்றிய உங்கள் வரிகள் நன்று .,
  //கூட்டம் ஒரு வகையான போதை. கூட்டம் ஒரு வகையான சிறை. சமூகத்தில் தனக்கிருக்கும் மதிப்பை தக்க வைக்கவோ, வலுவாக கூட்டதில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதாக மனதை ஏமாற்றவோ எதோ ஒரு காரணத்தால் கூட்டம் உங்களை சுய கருத்தை கொள்ள விடாமல் செய்து விடும். ஒரு குழு மன நிலை என்றைக்குமே ஒரு பயனுள்ள தனி மனிதனை அமைத்து விடாது, அமையவும் விடாது.//

  இருந்தாலும் இவ்வளவு பெரிய வாக்கிய அமைப்பை வேறு எப்படியாவது மாற்றியிருக்கலாம் .,#புரிஞ்சுக்க கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு ., that's it !!!
  -gollum @ smeogol

  ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..