Flipkart

Amazon

Amazon

Wednesday, June 6, 2012

ஒரு தற்கொலை கடிதம்



                          எண்பதுகளின் நடுவில் இருந்து இன்று வரை தமிழ் சினிமாவில்
 பரவலாக வருடம் ஒரு முறையாவது இடம்பெறும் பாக்கியம் உடைய காட்சி
 தற்கொலை. தற்கொலை குறித்த பார்வை மனிதனுக்கு மனிதன் வேறுபட்டே உள்ளது. பெரும்பாலானோரின் கருத்து தற்கொலை கோழைகளின் முடிவு என்பதே. இதனை தர்க்க ரீதியாக எதிர்ப்போர் முன் வைக்கும் வாதம், உலக மக்கள் அஞ்சி நடுங்குவது மரணத்தை கண்டு தான், இந்த மரணத்தை தழுவ ஒருவனுக்கு அசாத்திய தைரியம் வேண்டும் என்பதே.

ஆனால் , என்னை பொருத்த வரையில் இந்த உலகின் மிகக்கடினமான செயல் வாழ்வது தான். ஆம், வாழ்க்கை கடினமானது. ஜீவனத்தின் துயரம், ஜீரணத்தின் துயரை அனுபவித்தவர்கள் உணர வாய்ப்பில்லை. எதேனும் ஒரு போராட்டத்தின் போது தற்கொலை  செய்து கொண்டு உயிர் துறப்போர், கவனம் ஈர்க்க முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் அடைகிறார்கள். உங்களுக்கு நினைவிருந்தால் எகிப்து புரட்சி பற்றி எரிந்தது, ஒரு இளைஞன் தன்னை தானே எரித்துக் கொண்ட பிறகு தான்.

ஆனால், இது போன்ற தற்கொலைகள் மிகச் சிறிய அளவிலேயே நடைபெறுகின்றன. நாம் அன்றாட வாழ்வில் கடக்கும் தற்கொலைகள் “புன்னகை மன்னன்” அல்லது “கழுகு” ஸ்டைலில் நடைபெறுபவை தான். நீண்ட நாள் முன்பு, மிக்ச்சரியாக ஒரு வருடம் முன்பு, என்னை பாதித்த மூன்று மரணங்கள் ஒரே வாரத்தில் நிகழ்ந்தன அவற்றில் இரண்டு தற்கொலைகள்.
சரி, இதுக்கு முன்னால போட்டது எல்லாம் பீடிகைங்க. மேட்டர் என்ன்ன்னா, ரொம்ப நாளா தற்கொலை கடிதம் ஒண்ணு எழுதணுமின்னு ஆசை. உண்மைய சொல்லனுமின்னா இந்த ஆசை வந்திருக்காத மனுஷனே இருக்க முடியாது. சொல்ல வெக்கப்பட்டுட்டு விட்டிருப்பாங்க. சோ, இது உண்மைன்னும் வெச்சுக்கலாம், பொய்ன்னும் வெச்சுக்கலாம் உங்க இஷடம். இந்த கடிதம் என் நண்பர்கள் யாருக்காவது மனக்கசப்பை ஏற்படுத்தினால் மன்னிச்சூ.


               பின் வரும் கடிதம் , ஒரு உண்மை தற்கொலை கடித்தத்தை தழுவி எழுதப்பட்டது. பெயர்கள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளன. என் ஒரு சில நண்பர்கள் இது யாரென கணிக்கக்கூடும் . அப்படி கணிப்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். இறந்தவர்களை பற்றிய அலசல் இப்போது தேவையற்றது. நினைவுகளை நெஞ்சோடு வைக்கவும்.



               அவள் மட்டும் படிக்கவும்


          ஹேய், உனக்கு நான் முதலும் கடைசியுமா எழுதற கடிதம் இது. இப்பெல்லாம் எவன் லெட்டர்ல லவ் பண்றான். இத கூட ஒரு மெயிலாவோ இல்ல எஸ்.எம்.எஸ் ஆவோ அனுபிச்சுவிட்றலாமுன்னு தான் பாத்தேன். ஆனா, ஏனோ எழுதனுமின்னு தோணுச்சு. இன்னிக்கு என்ன தேதி? ஏன் இந்த கேள்வின்னு பாக்கறியா? எனக்கு தெரியும் நீ இந்த கடிதத்த கண்டிப்பா உன் வாழ்க்கை முழுக்க படிச்சுகிட்டே இருப்பன்னு.

           என்ன மன்னிச்சுரு சிந்து, இது உனக்கு எவ்வளவு பெரிய தண்டனைன்னு எனக்கு தெரியும். நான் செத்து, அது மூலமா உனக்கு ஒரு அழியாத குற்ற உணர்ச்சிய ஏற்படுத்தீட்டேன். என்ன மன்னிச்சிரு, ப்ளீஸ். என்னால முடியல சிந்து, தூங்க சாப்பிட எதுவுமே முடியல. எங்கம்மா என் தலைய தடவி என்னாச்சுன்னு ஒவ்வொரு தடவ கேக்குறப்பையும் அதுக்கு பதில் சொல்ல முடியாம, நான் தவிச்ச தவிப்ப மரணத்தால தான் சிந்து போக்க முடியும். நாம வளத்த நாய , எதோ ஒரு காரணத்துக்காக விட்டுட்டு போகறப்போ, அது நம்ம பின்னாலயே வருமே, அந்த மாதிரி தான் என் மனசும் பண்ணுது.

என் வாழ்க்கை முழுக்க நான் இத அனுபவிச்சிருக்கேன் சிந்து. வெறுப்பு. என்ன சுத்தி இருக்கறவங்க பெரும்பாலும் என்ன வெறுத்தவங்க தான். என்ன நேசிச்சவங்களும் இருக்கத்தான் செஞ்சாங்க, ஆனா வெறுத்தவங்க தான் அதிகம். அதுவும் என்னப் புடிக்கும்ன்னு சொன்ன முதல் பொண்ணு நீ தான். காதலிக்கறதுக்கு முன்னால காதல் குறித்த கற்பனைகள் ஏராளம் கொண்டிருந்த சராசரி வாலிபன் தான் நானும். உன் காதல் என்னை கற்பனைகளுக்கெல்லாம் எட்டாத மாய உலகத்துக்கு என்னை இட்டுச் சென்றது.  நீயும் நானும் மட்டும், மரம் செடி நிலவு போன்ற பேசத்தெரியாத கபடமறியாத சகாக்களினூடே களித்து திரிந்தோம்.

எனக்கு நண்பர்கள் அதிகம். உறவினர்கள விட நண்பர்கள அதிகம் நம்புனவன் நான். நீ வந்த பிறகு உன்னால எத்தனை நண்பர்கள இழந்தேன்னு உனக்கே தெரியும். உனக்கென நான் பரிந்து பேசி, நீ இவளால அனுபவிப்ப டான்னு சொல்லிட்டு போன நண்பர்கள் எத்தனை பேருன்னு உனக்கு தெரியும். அப்ப எல்லாம் இப்படி ஒரு நாள் வருமுன்னு நான் நினைச்சு கூட பாக்கல. காதலுக்காக தற்கொலைன்னு பேப்பர்ல படிச்சப்ப போது, என் நண்பர்கள் இறந்த போது கூட, கோழைன்னு சொல்லி கோப்ப்பட்டது நினைவிருக்கு  எனக்கு. ஆனா, ஒண்ணு சொல்றேன் சிந்து, காதல் தோல்வி தான் உலகின் மிகக் கொடுமையான வலி. ஒருத்தரோட மரணத்த கூட தாங்கிடலாம். ஆனா, நம்ம விரும்பற ஒரு உசுரு நம்மள வெறுக்கறத தாங்க முடியாது. ஒரு குழந்தை கண் முன்னால தாயை கொல்ற மாதிரி நீசத்தனமான செயல் அது.

                நமக்குள்ள இருந்த உறவு செத்த பிறகு, அந்த வலி என்ன மெல்ல மெல்ல கொல்ல ஆரம்பிச்சுது. இத்தனை நாளா எனக்குள்ள இருந்த அகம்பாவம் என்னையே மெல்ல மெல்ல கொல்ல ஆரம்பிச்சுது. நான் எடுக்கற முடிவுகள் எல்லாம் சரின்னு நினைச்சு நான் செஞ்ச எல்லாமே இப்போ தப்பா தோணுது. ஒரு காபி கப்ப கூட எங்க வெக்கறதுன்னு என்னால தீர்மானிக்க முடியல. நான் செய்யற எல்லாமே தப்புங்கற மனநிலை எனக்குள்ளே வளர ஆரம்பிச்சுது. அந்த வலிய என்னால தாங்க முடியல. அந்த வலிக்கு ஒரு வடிவம் கொடுக்கறதுக்காக என்னை நானே துன்புறுத்திக்க ஆரம்பிச்சேன். இது என்னை சுத்தி இருக்கற மத்தவங்களையும் பாதிச்சுது. அவங்க யாருக்கும் தொல்லை தராம இருக்கத்தான் இந்த தற்கொலை முடிவு.

  நான் உன்னை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கணும்னு இத எழுதல. உன்னைப் போல வேற எந்த பெண்ணும் இதுக்கு பிறகு நடந்துக்க கூடாதுங்கற நப்பாசை தான். கடைசி வரைக்கும் காதலா நட்பான்னே தெரியாத ஒரு உறவு நமக்குள்ள நீடிச்சது எனக்கே ஆச்சரியமா இருக்கு! அவ்வளவு பெரிய மாக்கானா நான்? ஒவ்வொரு தடவை நமக்குள் உரிமை பிரச்சனை எழுந்த போது, மன்மோகன் போல பதிலே சொல்லாமல் மெகு சாமர்த்தியமாக நீ கையாண்ட விதத்தை கண்டு நான் வியக்கேன்.



பல தடவை நம்ம உறவு ஆரம்ப கட்டங்கள்ல இருந்தப்போ,  நான் செத்தா என்ன பண்ணுவன்னு கேப்பேன், நியாபகம் இருக்கா. இப்ப பாரு, அது உண்மையா நடக்கறப்போ அத பாக்க எனக்கு குடுத்து வெக்கல. சே, என்னென்னமோ பேசிக்கிட்டே போறேன். நான் இந்த லெட்டர் எதுக்காக எழுத ஆரம்பிச்சேன், ம்ம்ம், நான் சாவப்போறேன். நீ கொடுத்த மன வலிக்கான, ஒரு தர்க்க உடம்பு தான் இந்த மரணம். என்ன மன்னிச்சுரு டீ, எல்லா பெண்களும் உன் போலவே தெரிகிறார்கள். யாராவது ரெண்டு லவ்வர்ஸ் பார்க்குல உட்கார்ந்து இருந்தா அவங்கள கல் எடுத்து அடிக்க ஆரம்பிச்சுடுறேன். குரோதம், பொறாமை என் கிட்ட பொங்கி வழியுது. யார் மேல காட்டறதுன்னு தெரியல. கேக்கறனேன்னு தப்பா நினைக்காத, அவன் தோள் மீது சாயும் போது என் கரங்கள் உன் நினைவில் வரவில்லையா? எப்படி இந்த இரட்டை வாழ்க்கைய உன்னால நிம்மதியா வாழ முடியுது? அப்பா அம்மாவுக்காகவா? பொய்! இதெல்லாம் நடக்கும்னு உனக்கு முன்னாடியே தெரியும் உனக்கு. காதல் என நான் நின்ற போது நீ மறுக்கவும் இல்லை ஒத்துக்கொள்ளவும் இல்லை. வெறுமனே சிரித்தாய். அதன் அர்த்தம் இப்போது தான் விளங்குகிறது எனக்கு.

இந்த வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது. உணவு, உடை என அடிப்படை தேவைகளுக்காக போராடும் மக்கள் கூட வாழ்க்கையை தைரியத்தோடு எதிர்கொள்ளும் போது, கேவலம் காதல் என்னை மரணத்தை தழுவ வைக்கிறது. என் முகமூடிகள் அனைத்தும் இன்று கிழிந்துவிட்டன. இத்தனை நாள் மேதாவித்தனங்களின் அடியில் கிடந்த அந்த திராணியற்ற மனிதன் இன்று இறந்து விட்டான்.