Flipkart

Amazon

Amazon

Friday, June 14, 2013

இந்திய தேசியமும் கிரிக்கெட்டும் ஐபிஎல்லும்!

 முதலில் இப்படி ஒரு கட்டுரை போட்டியை அறிவித்தமைக்காக வினையூக்கிக்கு நன்றி. மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழ் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இது நிச்சயம் ஒரு உண்ணாவிரதத்தை முடிக்கும் பழச்சாறு போன்றது  :)

தமிழ் சொற்களின் முக்கியத்துவம், போட்டி விதிமுறை எல்லாம் தனித்தழின் பயன்பாட்டை வலியுறுத்தினாலும், இவை அனைத்தும்  கேள்வியிலேயே உள்ளதாலும், பொதுப்பயன்பாடு காரணமாகவும் மட்டைப்பந்து கிரிக்கெட் என்றே இக்கட்டுரையில் சுட்டப்படுகிறது.

           ஆங்கிலேயேர்கள்  தொடங்கி விட்டுச்சென்ற எல்லாவற்றையுமே நாம் இன்னமும் கொண்டாடிக்கொண்டு தான் இருக்கிறோம். அவற்றுள் முதன்மையானது ஆங்கிலேயே விளையாட்டான கிரிக்கெட். கிரிக்கெட்டுக்கும் இந்திய தேசியத்துக்கும் ஒரு பிணைப்பு உருவாகி வெகு காலமாகி விட்டது. இத்தொடர்பை காலத்தின் துணை கொண்டு இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம்.

           சுதந்திரம் கிடைத்த, அல்லது அதற்கு சற்று முந்தைய காலங்களில் இந்தியாவை பொறுத்த வரையில் கிரிக்கெட் ஒரு ஆங்கிலேயே விளையாட்டு. ஆனாலும், ஆங்கிலேய அரசில் பணியாற்றிய இந்திய அதிகாரிகளும், நிலச்சுவாந்தாரர்களும் கிரிக்கெட்டை அறிந்து வைத்திருந்தனர். அக்காலகட்டங்களில் கிரிக்கெட்டில் ஆங்கிலேயர்களை வீழ்த்துவது "அவர்கள் விளையாட்டில் அவர்களை தோற்கடிப்பது" என்ற ரீதியில் இந்தியர்களால் கொண்டாடப்பட்டது.

           ஐம்பதுகளில் வெறும் ஆறு நாள் போட்டிகள் (டெஸ்ட்) மட்டுமே இருந்த காரணத்தால், பல்வேறு போட்டிகள் வெற்றி தோல்வி இன்றியே முடிவடைந்தன (Draw). ஆனாலும் தனிப்பட்ட சாதனைகளும், எதிரணியை திணறடித்தலும் வெற்றியாக கொண்டாடப்பட்டது. அக்காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட்டை விட கொண்டாப்பட்ட ஒரு விளையாட்டு ஹாக்கி (Hockey). 1928 முதல் 1956 வரை நடந்த அனைத்து ஒலிம்பிக்கிலும் இந்திய ஹாக்கி அணி, தங்கங்களை குவித்தது.

            இரண்டாவதாக தொடங்கிய கிரிக்கெட் ஊடான புதிய-தேசியவாதம் (Neo-Nationalism) முக்கியமானது, அரசியல் கலந்தது, உலகமயமாக்கலை அடிப்படையாய் கொண்டது, இன்று வரையிலும் நீடிப்பது. இந்த தேசியவாதத்தை புரிந்து கொள்ள நாம் கொஞ்சம் இந்திய அரசியலையும் புரிந்து கொள்ளல் வேண்டும். இந்தியா, பார்ப்பனர்கள் ஆதிக்கம் மிகுந்த ஒரு நாடு. இதற்கான வரலாற்று ரீதியான காரணங்கள் எத்தனையோ உண்டு. சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் பல்வேறு துறைகளின் உயர் பொறுப்புகளில் அமர்ந்த பல்வேறு நபர்கள் பார்ப்பனர்களாகவே இருந்து ஒரு வேளை எதேச்சையானாதாக கூட இருக்கலாம். ஆனால், அவர்கள் தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட நியமனங்களில் பார்ப்பனர்களை நியமித்தது நிச்சயம் ஏதேச்சையானது அல்ல.

             கிரிக்கெட்டை பொறுத்த வரையில் ஆங்கிலேயே அரசில் மேற்தட்டில் இருந்தவர்கள் பார்ப்பனர்கள் என்பதால் பார்ப்பனர்கள் கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டதும் அவ்விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தியதும் இயற்கையானது. சுதந்திரத்திற்கு முன், பம்பாய் பிரசிடென்சி முதல் தர போட்டித்தொடரில் ஆங்கிலேயே, பார்சி, இந்து, முஸ்லீம் அணிகள் மோதும். இந்து  அணியில் அப்போதே பார்ப்பன ஆதிக்கம் காணப்பட்டது.

              இந்த புதிய  தேசியவாதம் எண்பதுகளின் தொடக்கத்தில் அல்லது மத்தியில் பரவத்தொடங்கியதாக பல்வேறு வரலாற்று ஆசியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஒரு மிக முக்கிய காரணம் தொலைக்காட்சி. வானோலியை போல் அல்லாமல் தொலைக்காட்சி தங்களுக்கு வீரர்களோடு மெய்நிகர் (Virtual) நெருக்கத்தை தருவதாக பல்வேறு பார்வையார்கள் அப்போதைய கணக்கெடுப்பொன்றில் தெரிவித்திருந்தனர். தொலைக்காட்சிகளும், வித்தியசமான படக்கோணங்களும் (Camera angles) பார்வையாளர்களை கவர்ந்திருந்தன.

              இந்தச் சூழ்நிலையில், 1983 இல் இந்திய அணி கிரிக்கெட் உலகப்கோப்பையை வென்ற போது, இந்திய ஊடகங்கள் எந்த மொழிப்பாகுபாடும் இல்லாமல் உலகை நாம் வென்றுவிட்டோம், உலகில் நாம் தான் தலைசிறந்தவர்கள் என்ற ரீதியில் கொண்டாடத்துவங்கின. ஒரு குறியீடாக நடிகர் சார்லி வடிவேலுவை தூக்கிக்கொண்டு வெற்றி வெற்றி என நாச்சியப்பன் பாத்திரக்கடைக்கு ஓடுவதை எடுத்துக்கொள்ளவும்.

                இப்போதும் கூட, இந்திய கிரிக்கெட் அணியிலும், ஊடகத்துறையிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலும் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாக இருந்தது ஏதேச்சையாக அமைந்தது என்றே நாம் எடுத்துக்கொள்வோம். இங்கே இருந்து சாதி ரீதியில் எதையும் ஆராயாமல் இந்த புதிய தேசியம் வளர்ந்த விதத்தை பற்றி பார்ர்போம். எந்த ஒரு தேசத்திலும் ஊடகங்களின் பங்கு முக்கியமானது.  அவை காட்சி ஊடகங்கள் ஆகட்டும், அல்லது பத்திரிக்கை ஊடகம் ஆகட்டும், மக்களின் மன நிலையை கட்டமைப்பதில் ஊடகங்கள் பெரும் பங்கு ஆற்றுகின்றன. திரும்பத்திரும்ப சொல்லப்படும் எதுவும் நம்பப்படும் என்பதற்கேற்ப கிரிக்கெட் இந்தியாவின் மிகமுக்கியமான விளையாட்டாக, அதையும் தாண்டி தேசிய கவுரமாக முன்னிறுத்தப்பட்டது. அது மக்களால் மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ளப்பட்டது.

                 இக்காலகட்டத்தில் பதவிவேற்ற ராஜீவ் காந்தியும் ஒரு கிரிக்கெட் பிரியர். இவரும் இந்தியா கிரிக்கெட்டில் வெல்வது இந்தியாவின் கவுரவம் சம்மந்தப்பட்டது என சொல்லிவைக்க அம்மாயை மெல்ல மெல்ல கட்டமைக்கபட்டது. மற்ற விளையாட்டுக்களை பின் தள்ளி "சோம்பேறிகளின் விளையாட்டு" என ஒரு காலத்தில் விளையாட்டு ஆசியர்களால் ஒதுக்கப்பட்ட கிரிக்கெட் முன்னிறுத்தப்பட்டது. இன்றளவும் இந்தியா 83 இல் உலகப்கோப்பையை வென்றது பாடமாக இருக்கிறதே ஒழிய , ஹாக்கியில் நாம் குவித்த ஆரம்ப கால ஒலிம்பிக் மெடல்கள் குறித்து எந்தப்பாடமும் இல்லை. சச்சின் குறித்தும் நம் பாட நூல்களில் இருப்பது நாம் அறிந்ததே. இந்தியாவின் கடைசி ஹாக்கி தங்கப்பதக்கம் 1980 ஒலிம்ப்பிக்கில் வாங்கியது தான். அதன் பிறகு துவங்கிய கிரிக்கெட் மோகம் இப்போதும் தொடர்கிறது.

            இதே நேரத்தில் பெருநிறுவனங்கள் (Corporates) கிரிக்கெட் சந்தைக்குள் நுழைந்தன. பெரும் விளம்பரங்களின் மூலம் கிரிக்கெட் வீரர்கள் நட்சத்திரங்கள் ஆக்கப்பட்டார்கள். சாலை சந்திப்புகளில் விளம்பர பலகைகளில் ஏதேனும் பெரு நிறுவன பொருளை வாங்கச்சொல்லி கண் சிமிட்டினார்கள். கிரிக்கெட் பரவியது! எல்லோரும் (ஒரு மட்டையும், பந்தும் இருந்தால் மட்டும் போதும்) எளிதாக விளையாடிவிடலாம் என்ற விசயமும் இதை  பிள்ளைகள் மத்தியில் பிரபலமாக்கியது.

            1987இல் இந்தியாவில் நிகழ்ந்த ரிலையன்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது நிகழ்ந்தவற்றை அறிந்தவர்கள் நாங்கு ஆண்டுகளில் கிரிக்கெட் மோகம் எப்படி இந்தியர்களிடையே வெகுவேகமாக பரவியிருக்கிறது என்பதை அறிந்திருப்பார்கள். இந்தியாவும் பாக்கிஸ்தானும் இரண்டு அரையிறுதிகளில் தனித்தனியே இருக்க, ஒரு வேளை இறுதிப்போட்டிக்கு இவ்விரு அணிகளும் தகுதி பெற்றால் என்னென்ன ஆகுமோ என பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர் மும்பை போலீசார். ஆனால், இரண்டு அணிகளுமே அரையிரறுதியில் தோல்வியுற்றன. பாக் அணி அரையிறுதியில் தோல்வியுற்றதை இந்தியாவே கொண்டாடடியதில் இருந்து தேசியத்துக்கும் கிரிக்கெட்டுக்குமான தொடர்பு, பாக் மீதான காழ்ப்பு எல்லாவற்றையும் ஒரு சேர அறிந்துகொள்ளலாம்.

           இப்படியாக கிரிக்கெட் பெரு நிறுவனகங்களின் தோள்களில் ஏறி, ஊடக உதவியுடன் இந்திய மக்களின் மனங்களின் ஆழமாக வேரூன்றியது. கிரிக்கெட் வீரர்கள் இந்தியர்களின் ஆதர்ச நாயகர்கள் ஆனார்கள். கிரிக்கெட்டை ஒட்டி வெளிவந்த படங்களும் வெற்றிபெற்றன. கிரிக்கெட் பற்றி தெரியாமல் இருப்பது முட்டாள்தனம் என்ற எண்ணமும் வளரத்தொடங்கியது. கடந்த இருபது ஆண்டுகளின் புதிய தேசிய எண்ணமும், கிரிக்கெட்டும் ஒன்றை ஒன்றை ஆதரித்து பெருமளவு வளர்ந்து, வேறூன்றி விட்டன.

         இந்த கட்டத்துல தான் வந்து சேர்ந்தது ஐபிஎல். ஐசிஎல் என்ற ஜீ குழுமத்தின் கிரிக்கெட் போட்டித்தொடருக்கு எதிராகவும், இந்தியாவில் கிரிக்கெட்டை வளர்க்கப்போகிறோம் என்ற ஜிலுஜிலு வாசகத்துடனும் நழைந்தது ஐபிஎல்.  அணிக்கு இருபதே ஓவர்கள், அதிரடி ஆட்டக்காரர்கள், நடனப்பெண்கள் என எதை எடுத்தாலும் கவர்ச்சி, எங்கு நோக்கினும் கவர்ச்சி. திரைப்படத்தை போல் மூன்றே மணி நேரம். திரைப்பட நட்சத்திரங்கள் அணிகளை வாங்கியும், உற்சாகப்படுத்தியும் இருக்க, ஐபிஎல் முதல் தொடர் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது.

           இந்த தொடர்வெற்றி கொஞ்சம் ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்தாலும் ஆறு தொடர்களாக தொடர்கிறது என்பது தான் உண்மை. ஐபிஎல்லின் அடிப்படையான பிராந்திய அணிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்த பிராந்திய ரீதியிலான பாசம், இருபது ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த கிரிக்கெட்-தேசியம் இடையிலான உறவை அசைத்துப்பார்த்தது முற்றிலும் உண்மையே.

          ரசிகர்கள் வீரர்களை தேசத்தின் பிரதிநிதிகளாக பார்ப்பது  நின்று போய், மாநிலத்தின், இனத்தின் பிரதிநிதிகளாய் பார்க்க ஆரம்பித்தார்கள். ஜார்கண்ட்காரான தோனி சென்னைப்பையனாக பார்க்கப்பட்டார். ஒரு பிராந்திய ரீதியான வெறுப்புணர்வு உருவானது. சச்சின் போன்ற தனி நபர்கள் மாநில உணர்வுகளையும் தாண்டி ஈர்த்தனர் என்பது நிஜம் தான் ஆனாலும் அந்தச்சதவீதம் மிகக்குறைவு. வெளி மாநிலத்தில் வசிக்கும் பெரும்பாலானோரிடம் "என்னப்பா உங்க டீம்  நேத்து ஊத்திக்கிச்சா" எனக்கேட்கும் அளவு பிராந்திய உணர்வு பரவியிருந்தது. அணி வீரர்களிடையே கூட மோதல் எழுந்தது. (கோஹ்லி, கம்பீர்) இருவரும் இந்திய அணிக்கென விளையாடினாலும் ஐபிஎல்லில் முட்டிக்கொண்டனர்.

         இப்படி தேசிய உணர்வு பிராந்திய உணர்வாய் மாறிக்கொண்டிருந்த நேரத்தில் கிரிக்கெட்டை அடிவேரோடு சாய்க்கும் நிகழ்ச்சிகள் தற்போது நடந்தேறியுள்ளன. ஐபிஎல் ஆறில் ஸ்ரீசாந்த் உட்பட ராஜஸ்தான் அணி வீரர்கள் சூதாட்டத்தில் (Not only betting, also Fixing)  பங்கேற்றது, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச்செய்ததுள்ளது. அதன் பிறகு குந்த்ரா, குருநாத் மெய்யப்பன் மீதான புகார்கள் ஐபிஎல் மொத்தமும் ஒரு திரைக்கதைக்கு உட்பட்டு நடப்பதாக ரசிகர்களை நினைக்கச்செய்திருக்கின்றன. இதன் விளைவுகள் என்னவென்று போகபோகத்தான் தெரியும். ஆனால், இப்போதைக்கு கிரிக்கெட் மீதான ஒரு வெறுப்பு தேசம் முழுக்க பரவியிருக்கிறது !



No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..