Flipkart

Amazon

Amazon

Tuesday, June 4, 2013

சாதியம் நோக்கி அடி எடுக்கும் தமிழ் சினிமா - மற்றுமொரு பக்கம் 6

                                            வினையூக்கியின் கட்டுரை போட்டிக்கு கட்டுரைகளை சமர்பிக்க இன்னமும் 10 நாட்களே உள்ளன. அதற்காக படித்தும் எழுதியும் கொண்டிருக்கும் போது நேற்று முக நூலில் அருண் (தமிழ் ஸ்டுடியோ) எழுதிய குட்டிப்புலி விமர்சனமும் அதற்கு பலர் ஆற்றிய எதிர்வினைகளையும் காண நேர்ந்தது. அதில் முக்கியமான எதிர்வினை ராஜன் குறையினுடையது. ஏன் இதை முக்கியம் என குறிப்பிடுகிறேன் என்றால், அவர் பொதுபுத்தியின் பாற்பட்ட விமர்சனம் என்கிறார். தமிழ் ஸ்டுடியோ அருண் தனது விமர்சனத்தில் சசிக்குமாரை ராமதாசோடு ஒப்பிட்டு அவரை மிக ஆபத்தானர் என குறிப்பிட்டு இருந்தார். இன்னொரு பக்கம்  நண்பர் அதிஷா குட்டிப்புலியை பார்த்துவிட்டு கதறி இருந்தார்.

                                     குட்டிப்புலியை விமர்சிக்கும் பணியை தூசு தட்டி எடுக்க இப்பதிவுகளே காரணம். ராஜன் குறை விஸ்தாரமாக பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதி இருந்தார். அதில் கூறியுள்ளபடியே சுப்பிரமணியபுரம் நல்ல படம் தான். உண்மையிலேயே அது ஒரு Trend setter. அதே போல சமுத்திரக்கனியும், சசிக்குமாரும் ஒருவர் இயக்கி மற்றவர் நடித்த சில படங்களும் எந்த குறைகளும்/கறைகளும் இல்லாதவை தான். ஆனால், விவாதத்துக்குரிய இரு படங்களும் சசிக்குமார் நடித்தவை. அவரிடமும், சமுத்திரக்கனியிடமும் உதவி இயக்குனார இருந்தவர்கள் இயக்கியவை. கதையில், திரைக்கதையில் படமாக்கப்பட்ட விதத்தில் சசிக்குமாருக்கு தொடர்பேயில்லை என கண்ணை மூடிக்கொண்டு நாம் இயக்குனர்களை மட்டும் குற்றம் சாட்டிவிடலாம்.  எனவே, நாம் சசிக்குமாரை விட்டுவிட்டு இந்த இரு படங்களையும் மட்டும் விமர்சிப்போம். (சசிக்குமார் நாடோடிகளில் கலப்பு மணத்தை வெளிப்படையாக ஆதரித்ததாக ராஜன் குறை சொன்னதை அப்படியே ஏற்று)

                                    ஆங்கிலத்தில் Camouflage என்பார்கள். நம்மூரில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்போமே அது போல. மேலோட்டமாக பார்த்தால் தெரியாது, ஆனால் ஒரு கருத்து படத்தினூடாக பார்வையாளனின் மனதில் மெல்ல ஏற்றப்பட்டிருக்கும். சுந்திரபாண்டியனில் ஆரம்ப வசனம் ஒரு பொட்டல்வெளியை காட்டி "எவனாவது பாடுபட்டு வளத்துன பொண்ணுக மனச கெடுத்தாக்க அவன வெட்டிக்கூறு போடுற இடமும் இது தான்". ஓரிரு வார்த்தைகள் மாறுபட்டு இருக்கலாம். ஆனால், கவனியுங்கள். இந்த வார்த்தை தேர்வு முக்கியமானது. இதை ராஜன் குறை சொல்வதை போல யதார்த்ததின் பிரதிபலிப்பு என ஏற்றுக்கொள்ளவே இயலாது.

                              இதே வசனத்தை நாம் கொஞ்சம் மாற்றிப்போடுவோம். "இதே எடம் தான் நம் பெண்களை உருகி உருகி காதலிக்கும் அப்பாவி பசங்களை,  நம்ம சாதி வெறியர்கள் வெட்டிப்புதைக்கும் இடம்..." இரண்டு வசனங்களுக்கும் எவ்வளவு மாறுபாடு வருகிறது கவனித்தீர்களா? முன்னது சிலரை குஷிப்படுத்துவதற்கென்றே எழுதப்பட்டது. பின்னது அவர்களை காண்டாக்கிவிடும். இதே போன்ற பல விஷ விதைகள் படம் முழுக்க உள்ளன. சுந்திரபாண்டியனில் கொலை செய்து விட்டு (நண்பன் செய்தது என க்ளைமேக்சில் வரும்) அதை பேசித்தீர்த்துக்கொள்ளும் முறை (ஊர்-ஜாதி பெருசுகள்) ஒரு Camouflage.

                            குட்டிப்புலியில் தன் ஜாதி பெண்களை பிற ஜாதி ஆண்கள் சைட் அடித்தால் கூட (அது போலீஸ் என்றாலும்) தூக்கிப்போட்டு மிதிக்கும் ஹீரோ தன் ஜாதி இளைஞர்கள் நாலு பேரை கூடவே வைத்துக்கொண்டு சைட் அடிக்கிறார், தன் ஜாதி பெண்களை மட்டும். இதில் பொம்பள என ஆரம்பித்து அவர்களை தூக்குவது போல் தூக்கி கீழே எறியும் வசனங்கள் வேறு.

                            இதை ஏன் நான் Camouflage என்கிறேன் என்றால், வினி சர்ப்பனா என்ற ஒரு இளம் பத்திரிக்கையாளர், குட்டிப்பிலியை கிழித்து விட்டு கடைசியாக, ஊர் காவல் தெய்வங்கள் (லோக்கல் சாமிகள்) எப்படி உருவாகிறார்கள் என காட்டியது பாராட்டுக்குரியது என்றிருந்தார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. கவனியுங்கள், படத்தில் கௌரவக் கொலைகள் செய்பவர்கள் குலசாமியாக்கப்படுகிறார்கள். அவர்கள் ஹீரோ ஆக்கப்படுகிறார்கள். இது ஒருவகையான Envisage. நம் மனதில் மறைந்துள்ள சொல்லமுடியாத எண்ணத்தின் வெளிப்பாடு.

                         ஏன் இது யதார்த்தம் அல்ல என்றால், யதார்த்தம் பட்டவர்தனமாக இருக்க வேண்டும். வணிக சினிமாவில் யதார்த்தத்தை எடுத்துக்கொண்டால், நீங்கள் காதலையும், வழக்கும் எண் 18/9யையும், மகாநதியையும் காட்டலாம். இதில் எல்லாம் வணிக சினிமாவுக்கான சில சமரங்கள் இருந்தன என்றாலும் அவை எந்தப்பக்கச்சார்பும் எடுக்காதவை. யாரையும் குஷிப்படுத்தி அதன் மூலம் லாபம் பார்க்கலாம் என்ற நோக்கில் எடுக்கப்படாதவை.



                        சரி இதற்காக சசிக்குமாரை ராமதாசுடன் ஒப்பிட வேண்டுமா எனில் இல்லை என்றே சொல்வேன். என்னை பொறுத்தவரையில் புலியை விட, பசுந்தோல் போற்றிய புலி ஆபத்தானது. ஜாதி வெறியை வெளிப்படையாய் காட்டுபவனை விட, அதை வாழைப்பழத்தில் ஊசி போல வலிக்காமல் சொருகுபவன் ஆபத்தானவன். சசிக்குமார் இதில் வெறும் நடிகர் தான் எனினும், இதில் நடித்ததை அவர் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

           நீங்கள் கேட்கலாம், இது அவ்வளவு ஆபத்தானதா. இந்த படத்தை பார்த்த உடனே எல்லோரும் தெருவில் இறங்கி கௌரவக்கொலை செய்யப்போகிறார்களா என்றால் இல்லை. ஆனாலும் இப்படம் அவ்வாறு செய்பவர்கள் செய்தவர்களுக்கு ஒரு மனோபலத்தை அளிக்கும். நாம் யாரும் இந்தியனையோ , அந்நியனையோ பார்த்து அவர்களைப் போல மாறிவிடவில்லை தான். ஆனால் நம் மனதில் ஒரு சின்ன பாதிப்பை ஒரு ஓரத்தில் அவை ஏற்படுத்தி இருக்கும்.

             இதை இங்கே சொல்ல முக்கிய காரணம். இது தமிழ் சினிமா. இங்கே காலம் காலமாக அரசியல் செய்பவர்கள், முதல்வர்கள் ஆனவர்கள் சினிமா நடிகர்கள், நடிகைகள். இன்றும் எம்.ஜி.ஆர் செத்துட்டார் எனச்சொன்னால் அடிக்கும் கிராமங்கள் உள்ளன. இன்னமும் எம்,ஜி,ஆர் சமாதியில் காதை வைத்து அவர் வாட்சு ஓடுதா, அவர் எதாவது பேசுவாரா எனக்கேட்கும் ஜனக்கும்பல் உள்ளது. இப்படி சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்து நோக்கத்தெரியாத நல்ல சினிமா எதுவென்றே அறியாமல், மசாலா குப்பைகளை ரசித்துப்பழகிய ஒரு சமூகத்தில் இப்படம் நிச்சயம் ஆபத்தானது தான். குப்பை தான். ஒதுக்கித்தள்ள வேண்டியது. நல்லதை மட்டும் எடுக்குமளவு நம் சமூகமின்னும் வளரல சாமி.
                       

No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..