Flipkart

Amazon

Amazon

Tuesday, January 8, 2013

வன்புணர்வு - உடை - சமூக வக்கிரம்


                  இந்திய/தமிழ்ச் சூழலில் இக்கட்டுரை எழுப்பப்போகும் எனக்கான எதிர்வினைகளை நங்கு உணர்ந்தே இதை எழுத தொடங்குகிறேன். நிறைய எழுத இருந்தாலும், நேர பற்றாக்குறையால் பெரும்பாலான சொற்கள் எழுதாமலேயே கிடக்கின்றன. அதற்கு முன்னதாக மீனா கந்தாசாமி அவுட்லுக்கில் எழுதிய இக்கட்டுரையையும், நீண்ட நாள் கழித்து நான் எந்த விவாதமுமின்றி ஒத்துக்கொள்ளும் வகையில் ஜெமோ எழுதிய இதையும் படித்து விடுங்களேன்.

நண்பர் @Alexxious ஒரு கீச்சிட்டிருந்தார்.

“வன்புணர்வுக்கு காரணம் உடை என்கிறவன் ஆண் குறியால் சிந்திக்கிறான் !!”

               நைச்சியமானதோரு முள் குத்தல். இந்த சமூகமும் அதன் மனிதர்களும் வெளித்தோற்றத்தில் மாறிய அளவுக்கு உட்புறம் மாறவில்லை. அழுக்கு பிடித்த அசிங்கமான கருத்தியலை அனைத்து மட்டத்திலும் நாம் காண முடிகிறது.


              இரவு பதினோரு மணிக்கு ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிரே விருட்டென கடந்த  ஒரு ஸ்கூட்டியை “தேவடியா, எங்க போய் சுத்தீட்டு வருதோ” என்றான் நண்பன் ஒருவன். அவள் யாரென்று சொல்ல யார் அவனுக்கு உரிமை அளித்தது? அவள் மருத்துவமனையில் இருக்கும் அவள் தாயாரைக்காண செல்லலாம், குடும்ப சூழ்நிலை காரணமாக கால் சென்டரிலோ வேறு எங்கோ வேலைக்கு செல்லலாம், இவ்வளவு ஏன், அவள் பப்பிற்கு கூட செல்லட்டுமே. அவளைத் தேவடியாளாக்க உங்களுக்கோ எனக்கோ என்ன உரிமை இருக்கிறது?
வேசிகள் குறித்த குறுங்கவிதை தொகுப்பு புத்தகமொன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் ஒரு சின்ன ஹைக்கூ இது.


“எங்களை விட நீங்கள் ஒன்றும் மோசமில்லை தான்
 நாங்கள் உடம்பை விற்கிறோம்
 நீங்கள் ஆன்மாவை”

            பெண் என்பவள் பலவித கட்டுப்பாடுகளுக்கு ஆட்பட்டவள் என்ற மன நிலை, சிறு வயது முதலே புகட்டப்பட்டு வரும் சமூகமிது. இதில் எந்த பேதமுமில்லை. பல பெண்களே, இந்த கட்டுரையின் பின்னூட்டத்தில் நாங்கள் எப்படி ஆண்களுக்கு இணையாக முடியும் என்று கேட்டாலும் கேட்பார்கள். அப்படித்தான் நாம் வளர்க்கப்பட்டு இருக்கிறோம்.


            பெண்களே பெண்களுக்கு எதிரி என்ற கூற்றை மெய்பிப்பது போல, எந்ததாயும் தன் பெண்ணை ஒரு “ஆணாக” வளர்க்க முன்வருவது இல்லை. அடக்கம், ஒழுக்கம், கற்பு என்ற பெயரில் பல ஆண்டுகளாக பெண்கள் சுரண்டப்பட்டு வருகிறார்கள். எத்தனை பேர் ஆண்களின் கற்பு குறித்து விலாவாரியாக பேசுகிறார்கள்?

            இவன் உயர்ந்த சாதிக்காரன் இவன் இவளை கற்பழித்திருக்க மாட்டான் என உச்ச நீதிமன்றமே குற்றவாளிகளை விடுதலை செய்கிறது (பன்வாரி தேவி வழக்கு). பல ஆண்டுகளாக பெண்கள் சுரண்டப்படுபவர்களாவே இருக்கிறார்கள், அதுவும் ஜாதி ரீதியில் இது மிகக்கொடுமையானது. ஆனால், இக்கட்டுரை ஜாதி ரீதியை தவிர்த்து விட்டு இன்ன பிற வகைகளை பற்றியே பேசுகிறது. ஏன் எனில், கணவன், அப்பா என பலரால் ஆதிக்கத்துக்கு ஆளாக்கப்படும் படித்த பெண்களுக்கே கூட அது ஆதிக்கம் என்றே புரிவதில்லை.


            ஒரு பக்கம் “பெண்கள் என்றால் துணி துவைச்சு போட்டு, ஆணுக்கு பணிவிடை செய்யணுமின்னு” ஆர் எஸ் எஸ் தலைவரும், இன்னொரு பக்கம் மாணவி அண்ணான்னு சொல்லி கதறி இருந்தால் விட்டு இருப்பார்கள், அவள் மீதும் தப்பு இருக்குன்னு ஒரு கிறுக்கு புடிச்ச சாமியாரும் சொல்லும் போது எந்த மதமும் பெண்கள் மீதான அடக்குமுறையில் இருந்து சளைத்ததல்லன்னு தெளிவாகவே அறிய முடியும். மதுரை ஆதினம், எல்லா பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்றதும், பாண்டிச்சேரி அரசு போட்ட சட்டங்களும் மொத்தமாக அறிவார்ந்த ஒரு சமூகத்தை குழியில் போட்டு புதைக்கக்கூடியவை.


நேரமின்மையால் சொல்ல வந்த கேள்வி பதில்களை பட்டியலிட்டு விடுகிறேன். பின்னூட்டத்தில் வந்து காறி உமிழும் அறிவு ஜீவிக்களுக்கு பதில் அளிக்கப்படும்.


ஏன் பாலியல் ரீதியான சுரண்டல்கள் பல தளத்தில் நடக்கும் போது, ஆடை கட்டுப்பாடு பற்றி அதிகம் எழுத வேண்டும்?

             ஏன் எனில் இங்கு இருப்பவர்கள் எல்லோரும் அறிவு ஜீவி பட்டத்தை தலையில் சுமப்பவர்கள். ஒரு அறிவார்ந்த சமூகத்தின் அடிப்படை அறிவு, ஆணும் பெண்ணும் எப்போதும் சமம் என்பது. இத்தகைய அறிவு ஜீவிக்களே, பெண்களுக்கு கட்டுப்பாடு (ஆடையாகட்டும் எதாகட்டும்) விதிக்கலாம் என்ற எண்ணத்தில் பேசினால், பாமரர்களுக்கு (??!!) எப்படி விளங்க வைப்பது. குடிப்பது தவறென்றால், யார் குடித்தாலும் தவறு தான், பெண்கள் குடித்தால் அதகத்தவறு என்பவன் கூட இன்னமும் பழமை மன நிலையில் இருப்பவன் தான்.

உங்கள் வீட்டுப்பெண்களுக்கு இப்படித்தான்…?

               என் வீட்டுப்பெண் அம்மா, மனைவி, மகள் என யாராக இருந்தாலும், அவர்கள் உடை விஷயத்தில் என் தலையீடு இருக்காது. அறிவார்ந்த ஒரு மனிதனின் செயல்பாடு இது தான்.

எதார்த்தத்தில் நீங்கள் சொல்வது சாத்தியமா?

                 ஒரு காலத்தில் எதார்த்ததில் சாத்தியமில்லாமல் இருந்த பல விஷயங்கள் இன்று சாத்தியம். இது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் மேலாடை அணிய அனுமதிக்கப்படாத பெண்களில் இருந்து செல்போன் வரை எல்லாவற்றிக்கும் பொருந்தும். மாற்றம் நிச்சயம் நிகழும்,அதை நோக்கிய நகர்வின் வேகம் அதில் பங்கெடுக்கும் நபர்களின் கூட்டுத்தொகையை பொருத்தது.

ஆனால், இன்று மினி ஸ்கர்ட் போட்டு என் பெண்ணை வெளியே அனுப்ப முடியுமா?
         
            இன்று ஒரு பெண்ணை இரவிலோ, அல்லது மினி ஸ்கர்ட் போட்டோ அனுப்ப முடியாது என்ற எதார்த்த நிலையை நானும் ஒப்புக்கொள்கிறேன். இங்கே மிக கவனமாக கவனிக்க வேண்டியது, ஆடை குறித்த விவாதத்தில் இரண்டு வகையினர் ஆடை கட்டுப்பாடு குறித்து பேசுகிறார்கள். முதல் தரப்பினர், ஆடை கட்டுப்பாட்டை ஒரு தற்காலிக நிலைப்பாடாக்கி, சமூக மாற்றத்தை முதன்மையாக கோருகிறார்கள். அவர்கள் குறித்து நமக்கு பிரச்சனை இல்லை. அது தான் நமது கருத்தும். இரண்டாவது தரப்பு, பெண்கள் தனக்கு கீழானவர்கள் என்ற அடி மன பழமைவாத புழுப்பிடித்த சாக்கடையிலிருந்து அள்ளித்தெளிக்கும் முத்துக்கள் தான் பிரச்சனையே!

ஒரு பெண் ஆடை குறைவாக அணிந்தால் Provoke ஆகாதா?

        Slut walk என்று ஒரு போராட்டம் இருக்கிறது தெரியுமா? ஒரு பெண் நிர்வாணமாகவே வந்தாலும் அவளைத்தொட எந்த ஒரு ஆணுக்கும் அனுமதி இல்லை என்ற கருத்தை வலியுறுத்துவது அது. அதை அப்படியே நான் வழி மொழிகிறேன். ஒரு பெண் எப்படி இருந்தாலும், அவள் உங்கள் மனைவியாகவோ, ஏன் வேசியாகவோ இருந்தாலும் கூட வன் புணர்ச்சி செய்ய உங்களுக்கு உரிமையில்லை. அப்படி செய்பவன் ஆணே இல்லை என்ற கருத்தை வளரும் ஆண் தலைமுறையின் மனதில் விதைக்க வேண்டும்.





  ஆடை கட்டுபாடு கற்பழிப்புகளை குறைக்குமே?

     அது ஒரு  தற்காலிக மன நிலை எனில் பிரச்சனை இல்லை என முதலிலேயே சொல்லியாயிற்று, ஆனால், இது கற்பழிப்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் என்பது முட்டாள்தனம். 13 வயது, 5 வயது சிறுமியை எல்லாம் Provoked ஆ வா கற்பழிச்சாங்க??? உங்களை பொறுத்த வரை பெண்களை எல்லாம், "இதப்போட்டுக்க" என உத்தரவிடுவது சுலபம். ஆனால், ஆண்களுக்கு கற்றுத்தருவது கடினம். அதுதானே?

இது ஒரு பெரிய சமூக மாற்றம் தான் ஒத்துக்கறேன். அதுக்காக ஊரெங்கும் கொசு என கொசு வலை போர்த்திக்கொண்டு அலைய முடியாது. கொசு ஒழிப்பு தான் ஒரே வழி.   

       மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இப்போதைய நிலையில் தற்காலிக தீர்வாக ஆடை கட்டுப்பாட்டை முன் வைப்பவதற்கும், ஆர் எஸ் எஸ் ப்ஓல, அவர்களையும் சூழ்நிலையையும் பயன்படுத்தி மீண்டும் பெண்களை வீட்டுக்குள் தள்ளும் முட்டாள்களுக்கும் வேறுபாடு உண்டு.  புரிந்து கொள்ளுங்கள்.







7 comments:

  1. நான் முன்வைப்பது, முதல் தரப்பு விவாதத்தையே!

    ReplyDelete
    Replies
    1. விரிவாக ஏதேனும் கேள்வி இருந்தால் கேளுங்கள் :)

      Delete
  2. உன்னை நான் நண்பனாக ஏற்றதற்கு இன்று என்னை பெருமை படுத்திய உனக்கு நன்றி ஷைலேஷ் ! மிக மிக நியாயமான, நிஜமான, உண்மையான, பதிவு, உன் குணத்திற்கு இன்னும் எழுதி இருப்பை, நேரம் இல்லாமையை நானும் ஒப்புக்கொள்கிறேன்! சிறிய பதிவாக இருப்பினும் உன் கருத்து சிறப்பாக அமைந்தது!

    ReplyDelete
  3. Absolute truth. Things I believe very strongly but refrain from airing on social media.
    Rape is not about sex, it's about power, control, violence. Coming from a man, this gives me hope . Nailed it.kudos.

    ReplyDelete
  4. Absolute truth. Clarity of thought , on this topic, from a man is refreshing. Kudos.

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..