Flipkart

Amazon

Amazon

Tuesday, January 29, 2013

அனுபவம் : திருப்பூர் புத்தக கண்காட்சி


               புத்தகம் என்ற வார்த்தையை பிரித்தெழுதச்சொன்னால் புது அகம் என்றே பிரிப்பேன் நான்நண்பர் வேதாளம் ஒரு முறை அவருக்கு மிகப்பிடித்த கீச்சுகளில் ஒன்றாகபுத்தகங்கள் புரட்டுகின்றன, நம்மைஎன்ற கீச்சை குறிப்பிட்டார். மனதிற்கு அவ்வளவு நெருக்கமானவை புத்தகங்கள். ஒரு வாசிப்பனுபவம் தரும் சுகம், ஒரு அனாதாமதேய பயணம் தரும் சுகத்தை ஒத்தது. யோசித்து பாருங்கள், அரூவமாக ஒரு பயணம், பிறிதொருவரின் வாழ்க்கையினூடே, அவர்களின் அனுபவங்களினூடே, அவர்களின் சுகதுக்களினூடே, அவர்களின் அழுகைனூடே ஒரு பயணம். யாரோ ஒருவராக, அடையளமற்றவராக பயணிப்பது சுகம். புத்தகங்கள் வாயிலாக நாம் வாழ்வை ரசமாக தரிசிக்க முடியும்.

             மூன்று நாட்கள் கொடைக்கானல் சுற்றுலா முடிந்து, இன்று தான் திருப்பூர் புத்தக திருவிழா செல்லும் பேரு வாய்த்தது. ஐந்தரை மணி வாக்கில் உள்ளே நுழைந்தேன். ஆரம்பம் தொட்டே புத்தகங்கள் என்னை கேலி செய்து கொண்டே இருந்தது போல பிரமை தட்டியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. புத்தகங்களை வாங்கும் போது முதலில் விலையை தேடும் அனுபவம் நிறைய வலி தரக்கூடியது. விலைக்காக ஒரு நூலை புறக்கணித்தல் அவ்வளவு எளிதானதல்ல. ஒரு குவளை நீரை இரு மான்கள் குடிக்க நினைத்தது போல, இரண்டு புத்தகங்களில் ஒன்றை எடுக்க சொன்னால் மனது வெறுமனே என்னை முறைக்கிறது. இன்று வாங்க வேண்டிய புத்தகங்கள் குறித்து ஒரு கணக்கெடுக்கத்தான் வந்திருந்தேன் என்பதால், மனதுக்குள் புத்தகங்களை வரிசைப்படித்தியபடியே நடந்தேன்.

                   காவல் கோட்டம் (சாகித்திய அகாதெமி ஸ்டாலில் குறைந்த விலையில் கிடைக்கிறது), கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை, ஜானகிராமனின் மோக முள், பா.ராவின் டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம், எஸ்.ராவின் புத்தனாவது சுலபம், ஆலீஸின் அற்புத உலகம், ஆதலினால் உட்பட சில புத்தகங்கள், கி.ராவின் புத்தகங்களில் நான்கு, அழகிய பெரியவனின் சமீபத்திய நூல்கள், ஜெமோவின் அனல்காற்று, விஷ்ணுபுரம், கொற்றவை, பின்தொடரும் நிழலின் குரல், ஜே.கேவின் நூல்கள் இரண்டு, சுந்தர ராமசாமியின் நூல்கள், .முத்து கிருஷ்ணனின்அப்சலை தூக்கிலிடாதே” (அருந்ததி ராய் எழுதியதன் மொழிபெயர்ப்பு), மலம் தோய்ந்த மானுடம், கூடங்குளம் பற்றிய ஒரு நூல், பிரமிளின் மறு பதிப்புகள், வண்ண நிலவனின் மறக்க முடியாத மனிதர்கள், லா..ராவின் நூல்கள் சில, கலைஞரின் நெஞ்சுக்கு நீதி, யாரோ ஒருவர் எழுதிய அடியாள் என்ற நூல், அசோகமித்திரனின் சில நாவல்கள், சாருவின் எக்சைல், எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், காமரூப கதைகள், ஜீரோ டிகிரி, என் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதாவின் நூல்களுள் நான் படிக்காதவை என பட்டியலின் நீளம் பெரிதாகிக்கொண்டே போனது. (இதைத்தவிர சில நூல்கள் மனதில் குறித்தவை, பெயர் மறந்துவிட்டது) இதைத்தவிர அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி, லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் (War and peace) சிட்னி ஷெல்டன், அகதா கிறிஸ்டி, ஜெஃப்ரி ஆர்சர் எழுதிய சில நூல்களை குறித்து தொலைத்துவிட்டேன். மொத்தம் கணக்குப்படி பதினோறாயிரத்தை தாண்டி விட்டது. இதுவும் கூட நிறைய குறைத்தலுக்கு பின்னால் தான். நண்பர்கள் சிலர் புத்தகம் பகிர்வதாக சொல்லியுள்ளதால், அவர்களோடு கலந்தாலோசித்த பின் இன்னமும் குறையலாம். கிழக்கில் அரவிந்தன் நீலகண்டன் விஷம் கக்கியிருக்கும் கம்யூனிசம் குறித்த நூல் இருந்தது வாங்கலாமா வேண்டாமா என யோசித்தபடி இருக்கிறேன்.

            
காலச்சுவடு பதிப்பகத்தை மேய்ந்து கொண்டிருந்த போது, உங்கள் பெயரென்ன என ஒருவர் கேட்டார். , எங்கேயோ பார்த்த முகம் என அவதானப்பதற்குள் என் பெயரைச்சொல்லி தான் தான் அரசு என அறிமுகப்படுத்திக்கொண்டார். ஏற்கனவே, இவரது புகைப்படத்தை பார்த்து தொலைபேசியிலும் அளவளாவி இருக்கிறேன் எனினும்நேரில் இன்னமும் இளமையாக தோன்றுகிறார். இவரை தம்பி என விளிப்பதா இல்லை அண்ணனென்பதா என ஒரு கணம் குழம்பிப்போனேன். இவரோடு பதிவர் சிவா அண்ணனும், லெனினும் (கீழே இருக்கும் வீடியோவில் நம் ராஜநாயஹம் சாரை பேட்டி கண்டவர்) உடனிருந்தார். புத்தகங்கள் குறித்தும் எதிலிருந்து இலக்கியத்தை தொடங்கலாம் என்றும் வழிகாட்டினார்கள். ஒவ்வொருவரும் ஒரு நூலகம் நடத்துமளவு புத்தகம் குவித்துள்ளவர்கள். மணல் கடிகை, மோக முள் ஆகியற்றை வாங்குமாறு அண்ணன் பரிந்துரைத்தார். (ஏற்கனவே லிஸ்டில் இருந்ததை அவரிடம் நான் சொல்லவில்லை). அண்ணன் பரிந்துரைத்த ஜேஜே சில குறிப்புகளை ( நீண்ட நாட்களாக படிக்க நினைத்த நூல்) ஒரு பதிவர் எனக்கு ஓசியில் தருவதாக சொல்லி இழுத்தடித்த கதையை இங்கே நினைவு கூர்கிறேன் (ஏனுங்க உங்களுக்குத்தான் J).

   நான் பார்த்த வரை பெரும்பாலான கூட்டம், சமையல் செய்யும் நூல்கள், ஜோதிட நூல்கள் என ரயிலில் விற்கக்கூடிய புத்தகங்களையே அதிகம் மொய்த்தது. இதை விட அதிக கூட்டம் டெல்லி அப்பளத்துக்கும், பஞ்சு மிட்டாய்க்கும் தான் அலை மோதியது. நிறைய நல்ல இலக்கிய நூல்களை வாங்க ஆளிலில்லாது போல ஒரு தோற்றம். எல்லா ஸ்டால்களிலும் நன்றாகவே புத்தகம் அடுக்கி இருந்தார்கள், உயிர்மையைத்தவிர. உயிர்மையில் நூல்களை தேட வேண்டி இருந்தது.

சாகித்திய அகாதெமி ஸ்டாலில் பல நூல்கள் சகாய விலையில் கிடைத்தது, மனதுக்கு ஆறுதலளித்தது. சேர்தளம் நண்பர்கள் இம்முறை ஒரு ஸ்டால் அமைத்திருந்தார்கள்.



இன்னமும் காத்திருக்கின்றன புத்தகங்கள். வாங்கிவந்து மறுபடியும் எழுதுகிறேன்.  
          
Verdict : திருப்பூர் சுற்று வட்டாரங்களில் இருப்பின் தவறவிடாமல் வாருங்கள். புத்தகங்கள் நம்மை தேர்ந்தெடுக்கட்டும்!

1 comment:

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..