1. அந்த தோழி கல்லூரி பருவத்தை கடந்து ஆறேழு ஆண்டுகள் ஆகி இருக்கும். நேற்று நீயா நானாவை பார்த்து விட்டு, கல்லூரி கால நட்பில் பெண்கள் தன் நண்பனை தொட அனுமதிக்கக்கூடாது என்றார். எனக்கு தலை கிறுகிறுத்துவிட்டது. சிறு பிள்ளை போல குட் டச் பேட் டச் இவருக்கு சொல்லிக்கொடுக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. தொடுதல் என்றால் மாரை பிடித்து பிசைதல் என்று நினைத்திருப்பாரோ? ஏதோ ஒரு பாறையில் ஏறுகையில் கையை பிடித்து தூக்கி விடுதல், காய்ச்சல் அடிக்கும் போது "ஏன் டீ லூசு, டாக்ட்டர்ட்ட போனியா" என்று நெற்றி தொடுதல் எல்லாம் காமத்தில் சேருமென்றுஎன்னால் ஏற்கவே முடியவில்லை.
அந்த வயதிற்கென இருக்கும் இனக்கவர்ச்சியை நான் முழுதாக புறந்தள்ளவில்லை. அதே நேரத்தில், ஆக்சிடென்ட்டை தவிர்க்க ஹெல்மெட் போட்டு செல்வதற்கும், ரோட்டில் செல்லவே மாட்டேன் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. Explicit ஆக உன் சுண்டு விரல் கூட என் கை விரல்களின் மீது கூட படக்கூடாது என ஒரு ஆண் பெண் நட்பு இருப்பது சாத்தியமே இல்லை. நட்பின் அடிப்படையான நம்பிக்கை அங்கு சிதைக்கப்படுகிறதே?
பெற்றோர் பக்கம் நின்று ஒன்றே ஒன்றை சொல்கிறேன் - இப்படி முழுக்க உங்கள் கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கப்படும் பெண்ணை கல்லூரி முடிந்தவுடன் கட்டிக்க்கொடுப்பார்கள் எனில் கூட பரவாயில்லை. ஆனால், முழுக்க கட்டுப்பாட்டில் இருந்து விட்டு, வேலைக்கு செல்லும் போது முழுக்க சுதந்திரம் கிடைத்தால், அதை சரியாக பயன்படுத்தும் பக்குவம் அவர்களுக்கு இருக்காது. காரணம் நீங்கள் இத்தனை நாள் செய்த Spoon Feeding.
ஒரு வயதிற்கு என நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. பதின்ம வயதில் (Adolescence age) இனக்கவர்ச்சி அதில் ஒன்று. பெற்றோர்களாக நீங்களும் அதை கடந்தே வந்திருப்பீர்கள். கைப்பிடித்து வழிகாட்டியாக அந்த வயதில் உதவுதல் சரியாய் இருக்குமே அன்றி, அடைத்து வைத்து 22இல் டான்னு அவளுக்கு/அவனுக்கு பொறுப்பு வந்துரும் அப்ப அவுத்து உட்டுடுவேன் என்பது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். பொறுப்பு ஒரு Continuous process.
2. மேற்சொன்ன காரணிகள் நேராக இட்டுச்செல்வது எங்க பொண்ணு "தப்பா" போயிருமோ என்று. உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், காதலிப்பதை "தப்பு" என சொல்வீர்களே ஆனால், அவர்கள் உங்களை புழுவினும் கீழாகத்தான் பார்ப்பார்கள். என் சாதி சமூகம் தான் எனக்கு முக்கியம் என வெறி பிடித்து அலைபவர்கள் அலையுங்கள்; உங்களை திருத்துவது என் வேலை இல்லை.
என் பெண்ணுக்கு தேர்ந்தெடுக்க தெரியாது அல்லது உறவினர்களால் சாதியை விட முடியாமல் பிடித்து தொங்குபவர்களுக்கு சொல்கிறேன், உங்கள் மகனுக்கோ மகளுக்கோ காதலிக்க கற்றுக்கொடுங்கள், தன் துணையை தேர்ந்தெடுக்க அவருக்கு உரிமையை கொடுக்கும் முன்னர், அதற்கான பக்குவத்தையும் நீங்களே உருவாக்கிவிடுங்கள்.
உங்கள் உறவினர்களுக்கு, சாதிக்கு நேர்மையாய் இருப்பதை விட, உங்கள் மார்பை தன் கவசமென எண்ணி, நீங்கள் நல்லதைத் தவிர வேறெதுவும் நினைக்க மாட்டீர்கள் என எண்ணி உங்கள் அனுமதி முக்கியமென எண்ணும் உங்கள் பெண்ணுக்கு பிடித்த அப்பாவை வாழ்ந்து பாருங்கள். அதன் சுகமே தனி சார்!
3. கமல் டீடீக்கு முத்தம் கொடுத்தது சரியா?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா, முடியல. இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள். தனி மனித ஒழுக்கம் பேணுபவர்கள் யாரும் மற்றவர்கள் மீது அதை திணிக்க மாட்டார்கள். சொந்த வாழ்க்கையில் தான் ஒழுக்கம் என நம்புவதை கடை பிடிக்க முடியாதவர்களுக்கு "பார், இவனை விட நான் ஒழுக்கமானவன் தான்" என தன் மனதை சமாதானப்படுத்த ஒரு ஆள் தேவைப்படுகிறார். பார்க்கும் எல்லோரையும் குறை கூறி அதன் மூலம் தனது ஒழுக்கமின்மையை போக்கிக்கொள்கிறார்கள் இவர்கள்.
இவர்களுக்கான பதில் இது தான்.
ஏனய்யா, இது தவறென்றால் |
இதுவும் தவறா? |
மகள்களை பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று! - தங்க மீன்கள்.
No comments:
Post a Comment
போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..