Flipkart

Amazon

Amazon

Saturday, April 27, 2013

இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்கல!

        
                          படுக்கையில் வீழ்வதற்கும் உறக்கம் நம்மை ஆட்கொள்வற்கும் இடைப்பட்ட நேரத்தில் மனித மனம்  நிகழ்த்திவிடும் பயணம் அசாத்தியமானது. படுத்தவுடன் உறங்கிவிடுபவர்கள்  இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். சில இரவுகள் ஏதோ ஒரு பாடலினாலோ, பேருந்தில் ஒரு நொடி கவனித்த பெண் பழைய காதலி சாயலில் இருந்ததினாலோ என ஏதோ ஒரு காரணத்திற்காக உறக்கமில்லாமல் கடந்ததும் உண்டு. நேற்றைய இரவு என் உறக்கத்தை கலைத்துப் போட்டது நண்பர் @raGuCயின் ஒற்றை ட்வீட்.

அதற்கான என் பதிகளும் அவரது ட்விட்லாங்கரும் :
http://t.co/gWBMpsX4xx

           ட்வீட்டின் சாரத்தை கவனித்தவர்களுகும், ரகுவை அறிந்தவர்களுக்கும் நன்றாக புரியும். அந்த ட்வீட்டின் பின்னால் இருப்பது விரக்தி. "யாமர்க்கும் குடியல்லோம்" என பயோ வைத்திருக்கும் ஒருவர், "சாதியை பிடித்துக்கொள்ளுங்கள் இல்லையேல் அழிக்கப்படுவீர்கள்" என கீச்சுவது, எனக்கு எதைஎதையோ நினைவூட்டிவிட்டது.


           
                 மனித குல வரலாற்றின் ஏதேதோ பாகங்கள் சிதறல்களாய் என்னைச் சுற்றி வட்டமிட்டன. ஈழத்தின் வரலாறு, இன்று சரணடைந்து வாழ வழியற்று பாலியல் தொழில் செய்யும் சகோதரிகளின் கதை, எரியும் பனிக்காட்டில் மனைவியையே கூட்டிக்கொடுத்து பிழைக்க வேண்டிய மக்களின் நிலை என அறுந்தறுந்து ஏதேதோ நினைவுகள்.   நானறிந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நண்பர்களின் முகமும், தோழிகளின் அழுகையும் மேலும் உறக்கம் கலைத்து மனதை பிசைந்தன. என் வீடு கொஞ்சம் வித்தியாசமானது, அம்மா அப்பாவிற்கு நிச்சியிக்கப்பட்ட திருமணமெனினும், அவர்கள் இருவரும் ஜாதி மீது பற்று அற்றவர்கள். கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிக்கும் பருவத்திலேயே ஜாதிய விழுமியங்கள் குறித்தான கருத்தாக்கம் எனக்கும் தெளிவாக உருவானது. சாதிய கட்டமைப்பு இன்றைய நிலையில் தேவையில்லை என்பதே அன்று முதல் இன்று வரை எனது எண்ணமாக இருந்தது, இருக்கிறது.



                          என் அம்மா ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை. நம்புங்கள், அங்கு புதிதாக ஆசிரியையாய் வந்த ஒரு Scheduled Caste வகுப்பை சேர்ந்த ஆசிரியை உபயோப்படுத்தியதை (டீ க்ளாஸ், தட்டு, இன்ன பிற) மற்ற ஆசிரியைகள் தொடமாட்டார்கள். இத்தனைக்கும் இது தென்னகத்தில் அல்ல, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள .பள்ளி ஒன்றில். அதன் பிறகு அவர்களிடம் பேசி, மேலதிகாரியிடம் புகார் அளிக்கப்படும் என மிரட்டி, கொஞ்சம் சகஜமாக இருக்கிறது நிலைமை இப்போது. தோழி ஒருத்தியின் பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள். அப்பா தலித், பெண் கொங்கு சமூத்தின் முக்கிய சாதி. சந்தேகமே இல்லாமல் ஏகப்பட்ட பிரச்சனைகள்.  தற்போது அவளுக்கு இருபது வயது, ஆறு வயதில் மேல் சாதி வீட்டினரின் சட்டியை தொட்டதற்காய் காலில் போடப்பட்ட சூட்டின் வலி இன்னமும் அவள் கண்ணீரில் வழிகிறது.



                          கிராமம், நகரம் என எந்தப்பாகுபாடுமில்லாமல் சாதி தமிழகமெங்கும் கோலோச்சிக் கொண்டு இருக்கிறது. கடந்து பத்தாண்டுகளில் அதன் வேகம் பன்மடங்கு பெருகி இருக்கிறது. பரமக்குடி, தருமபுரி, மரக்கானம் என சமீபத்திய நிகழ்வுகள் பெரும் அச்சத்தை தருகின்றன. கிராமங்களில் சாதி வெளிப்படையாக பேசப்பட்டாலும், நகரங்களில் அந்நிலை இல்லாமல் இருந்தது. தற்போது நகரங்களிலும் சாதியை வெளிப்படையாக பேசக்கூடிய சூழ்நிலை வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். ஜனனி அய்யர், நரேஷ் அய்யர் என பேஷன் பெயர்கள் ஒரு காரணம். ஒரு புறம் ராமதாசு, இன்னொரு புறம் கொங்கு ஈசுவரன் வகையறாக்கள், தேவர் விழாக் கூட்டம் என ஜாதியை மையமிட்ட விழாக்கள் மற்றொரு காரணம்.



                          மேற்கண்ட அச்சத்தைத் தான் ரகுவின் கீச்சு பிரதிபலித்தது. இத்தனை நாள் நடத்திய போராட்டங்கள் அத்தனையும் கடந்த சில வருடங்களில் உடைத்தெறியப்பட்டு மீண்டும் நாற்பதுகளுக்கே சென்ற உணர்வை தருகிறது. அவரது தர்க்கங்களை இல்லை என என்னால் புறந்தள்ளிவிட முடியவில்லை. தேவர் ஜெயந்தியையோ, ராமதாசு நடத்திய வன்னியர் கூட்டத்தையோ பார்த்த யாருக்கும் இது தான் தோன்றும். ஏகப்பட்ட இளைஞர்கள் ஆட்டுமந்தைகளைப்போல் அங்கே குவிந்து கிடந்தனர். மதுவோடு சேர்த்து அவர்தம் சாதி பெருமையையும் அவர்களை வெறிகொள்ளச் செய்திருப்பதை கண்கூடாக காண முடிந்தது. ஏதோ காலத்தில் அவர்கள் முன்னோர்கள் நிகழ்த்தியதாக சொல்லப்படும் வீரதீர செயல்கள் தற்போது அவர்களை நிதானமிழக்கச் செய்வதை உணரமுடிகிறது, மதுவை விட ஆபத்தான, அதிக நாள் நிலைக்ககூடிய போதையிது.



ஒரு சாதி வெறியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

“சார் கவாஸ்க்கர தெரியுமா?”

“ஓ”


“ரோஹன்?”

“யாரது?”

“அவர் பையன் சார். என்ன பண்றான் தெரியுமா?”

“பிசினஸ்?”

“க்ரிக்கெட். டீம்ல இடம் கெடைக்காம உட்கார்ந்திருக்கான் தெரியுமா சார்? அப்பா பண்ண சாதனைக்கே பையன் உரிமை கொண்டாட முடியாது.”

                          தேவர் பெருமகனார் பண்ண நல்ல விசயங்களுக்கோ, காமாரஜர் ஆற்றிய தொண்டுகளுக்கோ, தீரன் சின்னமலை செய்த வீரசெயல்களுக்கோ அவர்கள் மட்டுமே பொறுப்பு. அவற்றை உரிமை கொண்டாட இத்தேசத்திற்கே உரிமை இல்லை என்னும் போது, சாதியின் பெயரால் அதை சுருக்குவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?



                          இது ஒரு புறம் எனில் தலித்துகள் கூட சாதியை வேண்டாம் என ஒதுக்கவில்லை என்றார் ரகு. மிகச்சரி தான். அதிகாரத்துக்கு எதிராய் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுவதை ஜாதி வெறி என்றுவிட முடியாது தான். எனவே தான் விசி ஜாதிக்கட்சி என்பது மிக மேலோட்டமான கருத்தியல் என திரும்பத்திரும்ப பதிவு செய்திருக்கிறேன். ஆனால், இந்த அடையாள அரசியலைத் தாண்டி, விழுப்புரம் கோகிலா சம்பவம் மூலமாக வெளிச்சத்திற்கு வந்தது, தலித்துகளுக்கு உள்ளான சாதி வன்மம்.

                          சமீப காலங்களில், எங்கெங்கிலும் சாதி ஒற்றுமை பலப்படுத்தபடுவது கண்கூடு. தேவர் விழாவும், வன்னியர் சாதி மாநாடும், கொமுக எல்லாம் ஒரு பருக்கை உதாரணம் தான். எப்போதுமே, வேட்பாளர் தேர்வு சாதியை முன்வைத்து நடக்கும் திராவிட அரசியலில் (திமுக, அதிமுக என எந்தக்கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல) ஜாதிக்கு, ஜாதிவெறிக்கு எதிராக ஒரு அரசு செயல்படும் என எதிர்பார்த்தால் நம்மை விட முட்டாள்கள் இருக்கவே முடியாது. அதன் காரணமாகத்தான் பெரியார் போன்ற ஒரு தலைவர் வேண்டும் என்றேன். ஒற்றை போராளி என்ற அர்த்தத்தில் அல்ல, இயக்கம் சார்ந்த பாதுகாப்பு அல்லது ஒருகிணைப்புக்காக.

                          யோசித்துப்பார்த்தால், ரகு சொல்வதைப் போல சாதி கவசம் இல்லாதவர்கள் எல்லாம் அழித்தொழிக்கப்படுவார்கள் என்றே தோன்றுகிறது. என்ன செய்ய? என் சாதியை தூக்கிப்பிடிக்கவா? அக்கொடியை தொடுகையில் கையில் மலம் புரட்டியது போல உணர்வேனே என்ன செய்ய? தாழ்த்தப்பட்ட தோழிகளின் கண்ணீர் என்னை சுட்டெரிக்குமே என்ன செய்ய?

                          “The Longest Yard” என்றோரு படம். சிறை குறித்த ஒரு சுமாரான ஆங்கிலப்படம். ஒரு கால்பந்து வீரன். ஏற்கனவே, பணத்திற்காக  Match Fixingஇல் ஈடுபட்டு இருப்பான் அவன். ஒரு கட்டத்தில், மீண்டும் வேண்டுமென்றே தோற்க வேண்டும் அல்லது, வாழ்க்கை முழுக்க சிறையில் கழிக்க வேண்டும் என்ற நிலையில் பின்னதை தேர்ந்தெடுப்பான் அவன்.



                          ஒரு அற்புதமான வசனம். அவனுக்கும் ஏற்கனவே ஒரு போலீஸ் வார்டனை அடித்து அதற்காக தண்டனை காலம் முடிந்து இருபது ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஒருவருக்கும்,
             
“Do you regret for hitting the warden now?”

“No”


“Do you still feel that one shot is worth the 20 years you spent in the closed hell?”

“Worth every second”

                          அவ்வளவே. ஒரே ஒரு அடி. ஒரு பெருமிதம். இருபது வருடங்கள் சிறையில் கழித்தாலும் பராயில்லை என ஒருவருக்கு தோன்றுமா? இது வெறும் சினிமா காட்சி அல்ல. வரலாறு நெடுக இப்பெருமிதத்திற்காகத் தான் ஒவ்வொரு மனிதனும் போராடுகிறான். சாதியை தூக்கிப்பிடிப்பவன் கூட அதைத் தன் பெருமையாகவே பார்க்கிறான். அதில் தான், சில நாய்கள் குளிர் காய்கின்றன.

                           சத்தியமாக என்னால் என் சாதியை தூக்கிப்பிடிக்க முடியாது, எந்த சாதியையும். ஏன் எனில், நான் வளர்ந்தது அப்படி. என் மூளை அப்படி சிந்திப்பதை விட செயலற்றுப்போய்விடவே விரும்பும். அப்படி ஒரு நிலை வந்தால், அப்போராட்டத்தில் நாசமத்துப் போகிறேன் என்றே சொல்வேன். ஆனால், ரகு சொன்னது போல “Surivival of the fittest” கணக்கில் சாதிக்கொடி பிடித்தலை சேர்த்தாகி விட்டதா?? இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறா என்னும் மேம்போக்கான எண்ணம், இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்கல? என அதை சரியானதாக்கும் நாள் அருகில் தான் இருக்கிறதா? இவ்வெழுத்தும் பேச்சும் வெறும் வெளிவேஷமென நம் ஒவ்வொருவர் மனதிலும் சாதி சாக்கடை இன்னமும் இருக்கிறதா? எல்லோரும் மனதிற்கும் ராமதாசு தானா? :-(




ஒரே ஒரு உறுதியை இங்கே எடுக்கிறேன். என் திருமணம் சாதி மறுப்புத்திருமணமாகத்தான் இருக்கும். என் குழந்தை எந்த மதம்/சாதியையும் சார்ந்து வளராது.

கொந்தளிப்பான கடல் போல மனம் அலைகிறது. முக நூலில் பூபதி முருகேஷ் ஒரு பதிவிடுகிறார். நீங்கள் என்ன சொன்னாலும் என் சமூகத்தை வெறுத்தொதுக்க முடியவில்லை என்ற ரீதியில். இத்தனைக்கும் நான் பார்த்த வரையில் பொது வெளியில் சாதி பற்றி அதிகமாக வெறிகொள்ளாதவர் அவர். அப்படியெனில் ரகு சொன்னது தான் வருங்காலமா? அனுபவஸ்த நண்பர்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன். ஏதோ, சினிமா விமர்சனங்களையும், நகைச்சுவையையும் மட்டும் எழுதி இந்த வலைமனையை வைத்திருக்க விரும்பவில்லை.எழுத்து மட்டும் தானா என்பவர்களுக்கு, நான் என்ன செய்கிறேன் என நண்பர்கள் அறிவார்கள், புகைப்படம் எடுத்து இணையதளங்களில் பகிர்ந்து யாரையும் நம்பவைக்கவேண்டிய அவசியம் இல்லை! சாதிவெறி சார்ந்த கருத்துக்களுக்கு எதிர்காலத்தில் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்க முடியாமல் போகும் என தோன்றும் போது, வலைமனையை மூடிவிட்டு, என் வாழ்க்கையை மட்டுமாது என் கொள்கைப்படி வாழ்ந்துவிடுவேன்.

இங்கு மூச்சுவிடுவதே எமக்கு போராட்டம் தான். இங்கு யாவரும் போராளிகள் தான்!

                          மண்டியிட்டு வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று உயிர்விடுதலே மேல்!




     
               

No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..