கடவுள் குறித்த என்னுடைய நினைவுகள் ஒரு மாரியம்மன் கோவிலில் என் அம்மாவுக்கு சாமி வந்திலிருந்து தொடங்குகின்றன. எனக்கு மிகச்சிறிய வயது அப்போது. பார்த்தது நினைவில் இல்லை எனினும், அது குறித்து வீட்டில் அவ்வப்போது பேசியதின் விளைவாக தோன்றிய காட்சிப் பிம்பம் நான் அதை பார்த்ததாகவே எண்ணச்செய்கிறது. திருமணம் ஆகும் போது, அப்பா நாத்திகர் – திமுக காரர். சொற்பகாலம் கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். அரசியலை விட்டுவந்த பிறகு, குடும்பம்-குழந்தை என சுமை அழுத்த, ஏதோ ஒரு நோய்க்கு வேண்டப்போய் வழக்கம்போலவே ஆட்டுமந்தையிலொன்றாய் அரைகுறை ஆத்திகரானார் அப்பா. அரைகுறை என நான் குறிப்பிடுவதன் காரணம், கடவுள் குறித்த தர்க்கங்களோ, உணர்ச்சிகளோ இல்லையெனினும் "ஒரு வேள இருந்துட்டா... எதுக்கு வம்பு?" என சாமி கும்பிட வந்தவர் அவர்.
பால்ய காலங்களில் எனக்கு பிடித்த கற்பனை விளையாட்டு தோழர்களுள் தொந்தி விநாயகரும், முருகனும், ரேகான் என்ற ஒரு பேயும் கூட ஒரு அங்கம். பின்னொரு கோடைக்கால மதியத்தில், தொந்தியோடு இருப்பதால் தான் உனக்கு பெண் கிடைக்கவில்லை என கணபதியை நான் ஒரண்டை இழுக்க முடிவுக்கு வந்தது அந்த சினேகம். பின்னர் விவரம் தெரிந்துவிட்டதாக கர்வம் கொண்ட பொழுதுகளில் புத்தகங்களின் பால் ஈர்க்கப்பட்டு, பல மனிதர்களையும், கடவுள்களையும் தர்க்கங்களையும் கடந்த பின் சட்டென ஒரு நாள் கரைந்து போய் இருந்தது, சாமி கும்பிடும் பழக்கம்.
எதேச்சயாய் ஒரு நாள், அம்மா வைத்த விபூதியை தட்டிவிட்டு "எனக்கிதெல்லாம் பிடிக்கலம்மா" என்ற போது அவள் அதிர்ந்து தான் போயிருப்பாள். ஆனால், காலப்போக்கில், அவள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது , அப்பா "அம்மா... தாயே மகமாயி, காப்பாத்தும்மா" எனக்கதறி, "இந்த .... பயலாலதான் எல்லாம்... உன்னய பகச்சான்ல" என்ற போது, படுக்கையிலிருந்தவாரே உச்சு கொட்டி அவரை அதட்டியதும் அதே அம்மா தான். சட்டென கையைப்பிடித்து கரகரவென வந்த அழுகையை அடக்கிக்கொண்டேன். ஒரு வாரம் கழித்து அம்மா வீடு திரும்பிய அன்று அவளுக்கு தோசை ஊட்டிவிட்டுக்கொண்டிருக்கும் போது, "மொத வாய் உனக்கு" என அவள் என் கையை திருப்பி எனக்கே ஊட்டிவிட்ட போது தோன்றியது, கடவுளை வெளியில் தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை.
கடந்த வாரம் இஸ்லாமிய தோழி ஒருத்தியுடன் ஏதேச்சயாய் தொடங்கிய கடவுள் குறித்த விவாதம் பால்ய கால நினைவுகளை கிளறி விட்டது. பத்து புத்தகங்களை படித்து விட்டு, "வேர் இஸ் திஸ் போப், ஐ வாண்ட் டூ ஆர்கியூ வித் ஹிம்" என அலைந்ததும், அனைத்து மதங்களையும் ஒட்டுமொத்தமாய் அழித்துவிட்டு மக்கள் திருந்தி தேன் ஆறு ஓட ஆரம்பிக்கையில் விழித்து காலி சொம்பில் தண்ணீர் துழாவிய கனவுகளுமாய் நினைவில் இழைகிறது. யோசித்து பார்த்தால் வியப்பாய் இருக்கிறது, அறிவியல் எவ்வளவு வளர்ந்தால் என்ன? நம்பிக்கையை அடிப்படையாய் வைத்துக்கொண்டு பேசுகிற மனிதர்களிடம் எவ்வாறு விவாதிப்பது?
கல்பனா சாவ்லாவே விண்வெளிக்கு விநாயகரை தூக்கிச்சென்றாளே?
என்ன இருந்தாலும், எவ்வளவு சாதித்தாலும், மனித மனத்தால் சகித்துக்கொள்ள முடியாத பாரங்களை சுமக்க ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது. லஞ்சம் வாங்குவனாயினும், ஆரோக்கியம் வேண்டுபவனாயினும் கடவுளை பாட்னராக்கி கொள்வதில் மனத்திருப்தி காண்கிறார்கள்.
ஏதேனும் "விடுமுறை" நாட்களில் வீட்டு வாசலில் எந்த வேடம் அணிந்தவன் வந்து நின்றாலும், "இப்ப தான் இந்த கோவிலுக்கு போகணுமின்னு நெனச்சேன், சாமியே வந்துருச்சு" எனக்காசு போடுவார் அம்மா. நான் நினைத்துக்கொள்வேன், "அவனை பொறுத்த வரை நீ தான் சாமி". கடவுள் ஒரு நாளில் நேரில் வந்தால் அவரைக் கொன்று போடுவார்கள் என்றே தோன்றுகிறது (அய்ய்யய்யோ இது என் கதையின் ஒன் லைன் ஆச்சே, திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறேனே... சுட்டுடுவாங்களே...). பெரு நகரச் சாலையில் ஓவியம் வரைபனில் தொடங்கி, பொம்மை விற்பவன், சிலை வடிப்பவன், பிச்சை எடுப்பவர்கள், ஏன் மதசார்புள்ள (அற்றவும் தான்) அரசுகள் எத்தனை பேர் "இன் த நேம் ஆஃப் காட்"இல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கடவுள் நேரில் வந்தால், ஒரு நாளில் கோடிக்கணக்கானோரின் பிழைப்பு அம்பேல்!
எப்போது சாருவின் "முள்"ஐ மீள் வாசிப்பு செய்தாலும், கண் முன் தோன்றி மறையும் "தீபா" ஒருத்தி விட்டுப் போன சவாலாய் இன்னமும் இருக்கிறது "உன்ன சாமி கும்பிட வெச்சு காமிக்கிறேன்". கோவிலுக்கு செல்லும் வழியில் விபத்தில் உயிரிழந்த நண்பனின் தாயின் சிதையை எரித்து விட்டு திரும்புகையில் கூடியிருந்த சனம் போலவே மனமும் இல்லாத கடவுளை சபித்துக்கொண்டே வந்தது. உலகில் பலருக்கு கடவுள் குறித்த நம்பிக்கை இழப்புகளிலிருந்து தான் தொடங்குகிறது. பிரிவு, வறுமை, வேலை இழப்பு, பணம் பறிபோதல் , மரணம் என ஏதோ ஒன்றின் இழப்பில் தான் கடவுள் மீதான நம்பிக்கையோ, அவ நம்பிக்கையோ துவங்குகிறது. "கடவுள் இருக்கான் கொமாரு" என்றோ "என்ன சார் கடவுள் இது, என்ன மாதிரியான சிஸ்டம் சார் இது" என வெதும்பும் போதோ, எப்படியாயினும் கடவுள் குறித்த நம்பிக்கை உணர்வுப்பூர்வமானது.
"பசியிலிருப்பவனிடமும் காதலிருப்பவனிடமும்
அதன் அறிவியல் காரணிகளை சொல்லிக்கொண்டிருந்தால்
நீங்கள் ஒரு முட்டாள் அறிவுஜீவி"
என்ற என் பழைய கவிதை நினைவுக்கு வந்தது. இது கடவுள் நம்பிக்கைகக்கும் அட்சர சுத்தமாய் பொருந்தும் என்றே தோன்றுகிறது. ஈழத்தின் கதை எத்தனை பேரை நாத்திகராக்கியிருக்கும்? மொத்த குடும்பத்தையும் கோவிலுக்கு வண்டி கட்டி கிளம்பிய நாளில் பரிகொடுத்த மீதமிருக்கும் ஒருவர், இனி கோவிலுக்கு செல்வாரா? ஒரு சடலத்தை அடக்கம் செய்ய மின் மயானம் நோக்கிப்போகையில், யாரோ ஒருவர், "என் சமூகம் உனக்கு முன்பாக செல்கிறது" என மைக்கில் அலறுகிறாரே. அவர் ஏன் இன்னமும் ஆத்திகராய் இருக்கிறார்?
நீலமணியின் கவிதை ஒன்று நினைவுச்சுழலில் இருந்து வந்து விழுகிறது
"தட்டினால் திறக்கப்படும் என்கிறார்கள்
சாத்தி வைப்பானேன்?"
இன்னொன்று, நீலமணி இந்த மாதிரி ஹைக்கூக்களில் கில்லாடி
"என்ன வரம் வேண்டுமென்று கேட்டார் கடவுள்
அது தெரியாத நீ என்ன கடவுளென்றேன்"
மனவளர்ச்சியற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்றில் சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்க்கும் இன்பராஜ், சுமதி டீச்சர், அக்குழந்தைகளை கவனிப்பதையே தனது வாழ்கையாக்கிக்கொண்ட சாந்தி பெர்ணாண்டஸ் சிஸ்டர், போராடுவதையே வாழ்கையாக்கிக்கொண்ட திருமுருகன் காந்தி அண்ணன் போன்றோர், பிச்சை எடுத்தாலும் குழந்தைகளை யாராவது பிச்சை எடுக்கவிடுவதைக்கண்டால் பொங்கி அவர்களிடம் குழந்தையை மீட்கும் ஒரு முதிய பிச்சைக்காரர், உலகம் அழியுமென வதந்தி கிளம்பிய அன்று ஒரு லட்சத்தை எல்லோருக்கும் பிரித்து வழங்கிய ஈரோட்டு பெரியவர் என எத்தனை எத்தனை கடவுள்களால் சூழப்பட்டு இருக்கிறோம் நாம். எப்போதோ மேத்ஸ் நோட்டின் கடைசி பக்கத்தில் எழுதிய பழைய கவிதை ஒன்று நினைவில் இடறுகிறது.
"பார்க்குமிடமெங்கும் பரவிக்கிடக்கிறார் கடவுள்
நின்று புன்னகைக்க நேரமின்றி
விரைந்து கடக்கிறோம் நாம்
கோவிலுக்கு."
No comments:
Post a Comment
போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..