இந்த அத்தியாயத்தில் வரும் என் காதலிகள்
அனைவருக்கும் பொதுப் பெயர்
“தீபா”.
டீச்சர்களில் யாரையும் காதலிக்கவில்லை
என்று யாராவது சொன்னால் அதற்கு இரண்டே அர்த்தங்கள் தான். ஒன்று
நீங்கள் படித்தது முழுக்க ஆண்கள் உள்ள, அவர்களே ஆசிரியராயும்
இருக்கும் பள்ளி. இரண்டு, நீங்கள் சொல்வது
பொய். நான்காம் வகுப்பில், பட்டு ஜரிகை சரசரக்க வந்த தீபா டீச்சர்
தான் என் முதல் காதலி. இப்போது கூட சாரு நிவேதிதாவின்
“முள்” படித்தால், அவர் கன்னத்தை
தடவும் ஸ்பரிசம் ஒரு நொடி கானலாய் தோன்றும். நான் ஏழாவது முடித்து
லீவில் இருக்கையில் அவர் சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து கொள்ள, முடிந்து போனது அந்த காதல். இப்போது கூட கல்லூரி பேராசிரியை
ஒருவர் திருமணத்தின் போது என் மனம் சுக்கு நூறாய் உடைந்து அதை நான் தேடிக்கொண்டு இருபதற்கு
காரணம் அந்த தீபா டீச்சரின் சாயலும் ஒரு காரணியாக இருக்கலாம்.
பள்ளியில் அதன் பிறகு எண்ணிலடங்காத
என்னிலடங்காத காதல்கள். “மச்சி அவ பாக்கறாடா” என தொடங்கிய இரண்டு காதல்கள். ஸ்கூலிலேயே காதலித்து அதை
இப்போது வரை காப்பாற்றும் ஒரே நண்பனான செந்திலிடம் சொல்லப்போய் வெளியில் தெரிந்த தீபாவின்
மீதான பிரேமை, பதினொன்றாம் வகுபுல் முதல் நாள் பார்த்து,
அவள் உடுத்தியிருந்த ஆரஞ்சு வண்ண சுடியை மாதம் முழுக்க சிலாகித்து,
அவள் பயாலஜி எடுத்ததால், ஒரு மணி நேரம் அவளை பயங்கரமாய்
மிஸ் செய்து, இன்னமும் தொடரிலிருக்கும் அவளிடம் நான் சொல்லவே
இல்லை என் காதலை. இப்போது, மாஸ்டர் டிகிரி
படித்துக்கொண்டிருக்கிறாள். திருமண பத்திரிக்கைகாக பயந்தபடி காத்திருக்கிறேன்.
அவ்வப்போது அவள் குறுஞ்செய்தி வரும் போதெல்லாம் விம்மி அடங்குகிறது மனசு.
என்னை பொறுத்த வரை,
கடவுளுக்கு அடுத்த படியாக உலகின் மிகபெரிய மித் ஒரு தடவை தான் காதல்
பூக்கும் என்பது தான். எனக்குள்ளும் என்னை சுற்றியும்,
நொடி தோறும் காதல்கள் பூத்துக்கொண்டே இருக்கின்றன. சின்ன வயசில் சர்க்கஸில் பார்த்த அந்த கயிற்றின் மேல் நடப்பவளை இன்று வரை திருப்பூரில்
எப்போது சர்க்கஸ் போட்டாலும், சென்று தேடிக்கொண்டிருக்கும் அப்பா
நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார் காதலை. பேச்சு வாக்கில் அந்த
பெயர் கேட்கும் போதோ, நாங்கள் யாராவது ஓட்டும் போதோ, கல்யாணம் செய்து கொள்ளாத அவர் மாமனை நினைத்து, ஒரு நொடி
மின்னல் கீற்றாய் வெட்கச்சிரிப்பை உதிர்க்கும் கௌரிப்பாட்டிக்கு திருமணம் நடந்து அவர்
கணவனும் இறந்துவிட்டார்.
கல்லூரியின் ஆரம்ப காலங்களில்,
ஒரு பெண்ணின் பின்னால் கிறுக்கன் போல திரிந்த அனுபவம், இப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவைக்கும். பேருந்துகளில்
சில, முகநூலில் சில என நான் காதலித்தவர்களின் எண்ணிக்கையை விட
என்னை காதலித்தவர்கள் எண்ணிக்கை வெகு குறைவே. இப்போது வரை காதலித்துக்கொண்டிருக்கும்
கல்லூரி தோழி தீபாவை, “நாங்க லவ் பண்றோம் டா” என நண்பன் வந்து சொன்ன நாளின் இரவு மறக்க முடியாதது. காதலிப்பவளிடம் நட்போடு பழகுவதின் ஆகப்பெரும் சிக்கல் இது தான். அவள் இதை படித்து விட்டு, “யார்டா அது” என கேட்கும் போது, உள்ளே வழியும் உதிரத்தை மறைத்து சிரிக்க
வேண்டும்.
யோசித்து பார்த்தால், வட்டியும் முதலுமில் ராஜு முருகன்
நட்பு குறித்து சொன்னது காதலுக்கும் பொருந்துகிறது. “ஒரு காலத்துல
யாரோ ஒருத்தருக்கு நம்ம தான் உலகமாக இருந்தோம். இப்ப அவங்க உலகத்துலயே
நாம இல்ல”.
No comments:
Post a Comment
போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..