Flipkart

Amazon

Amazon

Friday, January 24, 2014

நாம் ஏன் வாசிப்பதில்லை?

                                  

               அகில உலக தமிழ் பெஸ்ட் செல்லரான என் புக் ஒரு காப்பி கூட விற்கவில்லை. நான் புத்தகமே போடவில்லை என்று அதற்கு ஒரு மொன்னையான சாக்கு சொல்கிறார்கள். ச்சே.... இப்படியெல்லாம் தமிழ் எழுத்தாளர்கள் புலம்பித்தீர்க்க என்ன காரணம்? பொதுவாக நாம் ஏன் வாசிப்பதில்லை? அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கியம் எனில் அலறி அடித்து பின்னங்கால் புட்டத்தில் பட ஏன் மக்கள் தெறித்து ஓடுகிறார்கள்?

                                  தமிழனை சிந்திக்க விடாமல் மொன்னையான கத்தி ஆக்கியதற்கு பெரும்பாலும் "இணைய மொன்னைகள்" சினிமாவின் அதிலும் குறிப்பாக மசாலா சினிமாவின் பக்கம் கையை நீட்டுவர். ஓரளவு உண்மை தான் எனினும் முழுக்க முழுக்க இது உண்மையல்ல. இது மட்டுமே தமிழக மக்கள் சிந்திக்க மறந்ததற்கு காரணியல்ல.

பொதுவாகவே நாம் மகா சோம்பேறிகள். நமக்கு இன்பம் உடனடியாய் கிடைக்க வேண்டும். இதற்கான பல சான்றுகளை என்னால் தர முடியும்.  நமக்கு ஏன் ஹாக்கியை விட, கால்பந்தை விட க்ரிக்கெட்டின் மீது ஆர்வம் அதிகம் தெரியுமா? சடசடவென விழும் பவுண்டரிகள் தான் முக்கிய காரணம். ஒரு கோல் போடுற வரைக்கும் எவன்யா உட்கார்ந்து பார்ப்பான் புட்பாலை?  20-20யின் பெரிய வெற்றிக்கு இதான் காரணம். ஓவருக்கு இரண்டு பவுண்டரியாவது நிச்சயம். எப்போது பரபரப்பிலேயே இன்பத்திலேயே இருக்கலாம்.

இன்னொரு விஷயம் சொல்லவா? உலகிலேயே மிகக்குறைந்த "செக்ஸ் பொஷிஷன்களை" மட்டும் தனது வாழ் நாளில் ட்ரை செய்பவர்கள் இந்தியர்கள் தானாம். எவ்வளவு சோம்பேறிகள் பார்த்தீர்களா நாம்? ஏனய்யா செக்ஸுக்கு கூட உங்களால் கொஞ்சம் மெனக்கெட முடியாதா?

சரி, இன்னமும் விரிவாய் பேசுவோம். நமது மக்கள் தொகையில் நிறைய ஏழைகள். அடுத்த வேளை சோற்றுக்கு உழைப்பவர்கள். எப்போதுமே உடம்பால் அதீதமாக உழைப்பவர்களின் மூளை சோர்ந்து யோசிக்கும் திறன் குறைதல் இயல்பு. இவர்களை குறிவைத்து நாம் இலக்கியம் படைப்பதில்லை. இவர்கள் கதை மாந்தர்கள் எனினும் இது இவர்களுக்கான புத்தகமல்ல ;-)

 நாம் உண்மையிலேயே Concentrate செய்ய வேண்டியது வளர்ந்து வரும் தலைமுறையினரின் மீது தான். இங்கே பிரச்சனைகள் நாம் குழந்தைகளை செக்கு மாடு போல வளர்ப்பது தான். நாமக்கல் பண்ணைகளிலும் சாரி பள்ளிகளிலும் பின் ஏதோ ஒரு உப்புமா பொறியியல் கல்லூரியிலும் பயிலும் மாணவனுக்கு இலக்கிய பரிச்சயம் அல்லது பொதுவாக வாசிப்பு பரிச்சயம் ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவு.

எனக்கு இவ்விடத்தில் ஒரு நீண்ட நாள் சந்தேகம் மீண்டும் வெளிப்படுகிறது.  இலக்கியம்ன்னா என்னா சார்? "சிவகாமி தன் சபதத்தை முடித்துக்கொள்வது" ஏன் இலக்கியத்தில் சேராமல் போய் விடுகிறது. வாசகனிட்ம் உழைப்பை கோரி நிற்பது தான் இலக்கியம் எனில் அமியையும், கி.ராவையும் நாம் புறந்தள்ளி விடமுடியுமா?   சரி, வரலாற்றை விடுந்து சமகால வாழ்வை, மனிதர்களை (அதிலும் சிலர் விளிம்பு நிலை மனிதர்களை) பற்றி பேசினால் தான் இலக்கியமா? எனில் இன்றைய சம காலம் நாளைய வரலாறு ஆயிற்றே???  பொன்னியின் செல்வன் இலக்கியமில்லை எனில் அந்தமான் நாயக்கரும் இலக்கியம் இல்லை தானே?

 ஏதோ ஒரு உணர்வை நமக்கு ஊட்டும், வாழ்கையை பல்வேறு புதிய பரிணாமங்களின் மூலம் அலச்செய்யும் எல்லா புத்தகங்களுமே முக்கியமானவை தான் (இனி இலக்கியம் வேண்டாம் புத்தகமென்றே இருக்கட்டும்).  எழுத்தாளர்கள் தான் புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை நான் கடுமையாக மறுக்கிறேன். அவர்கள் அதைச்செய்தால் அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், அவர்களால் மட்டுமே ஆகக்கூடிய காரியமே அல்ல அது.  வாசகர்களால் மட்டுமே ஓரு புத்தகத்தை பரவச்செய்ய முடியும்.

ஆனால், துரதிஷ்ட்டவசமாக, நமக்கு ஒரு ஒவ்வாமை இருக்கிறது. இலக்கியம் அல்லது பொதுவாக நிறைய வாசிக்கத்தொடங்கியவுடன் ஒரு மமதை வருகிறது. நாம் நம்மை விட நிறைய வாசிப்பவர்களிடம் பழகத்தொடங்குகிறோம். வாசிப்பு குறைந்த நம்முடைய உறவினர், நண்பர்களுக்கு அது வேறு ஏதோ அறிவாளி உலகமப்பா என்ற பிம்பத்தை நாம் தான் ஏற்படுத்துகிறோம். ஒரு வகையில் நாம் அதனை மிகவும் நேசிக்கவும் செய்கிறோம். அங்கே அவர் சொன்னார், இங்கே இவர் சொன்னார்... என கோட்டு போடாமல் ஒரு கோபியை வாழ்வது யாருக்குத்தான் கசக்கும்??

நான் இதுவரை சந்தித்த பலரும் வாசிப்பை அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் திணிப்பதே இல்லை (கவனிக்க - அறிமுகம் அல்ல).  இங்கே சில பெயர்களை குறிப்பிட எண்ணி பின் கைவிடுகிறேன். நாம் பார்த்த சினிமாவையோ, பாடலையோ போல புத்தகத்தை வாசகர்கள் அல்லாதவர்களிடம் நாம் பகிர்வதில்லை. பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம் அவ்வளவு உழைப்பை தர யாரும் தயாராயில்லை.

 திருப்பூர் புத்தக கண்காட்சியில் வாங்கிய நான் படித்து முடித்த புத்தகங்கள் யாரிடம் இருக்கின்றன என்றே தெரியவில்லை. எல்லாம் நானே வலிய திணித்து "படிச்சுட்டு குடுங்க" என்று கொடுத்தவை. வாசிப்பிற்கு புதியவர்களை இழுப்பது உண்மையாகவே சள்ளை பிடித்த வேலை. சிலருக்கு "அனல் காற்று".. சிலருக்கு "சுஜாதா - சொர்கத்தீவு, என் இனிய இயந்திரா" சிலருக்கு "பொன்னியின் செல்வன்" சிலருக்கு "ராஜேஷ்குமார் - பிகேபி" சிலருக்கு கி.ரா/ சிலருக்கு நேரடி வரலாறு, அரசியல் என ஒவ்வொருவருக்கான வாசிப்புத்தூண்டில் அவர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதாக இருக்கும். இதில் மிகச்சில வெற்றிகள், நிறைய நிறைய தோல்விகளுமே எனக்கு கிடைத்துள்ளன.

ஆனாலும், முடிந்தவரை புத்தகங்களை தேடித்தேடி வாசிக்காத என் நண்பர்களிடமே கொடுக்கிறேன். கிட்டத்திட்டா மாஃபியாவுக்கு ஆள் சேர்த்தல் தான். ஆனால், மாஃபியாவுக்கு ஆள் சேரவேண்டுமல்லவா? ஆள் சேர்த்தல் கேவலமில்லையா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
எனக்கு தெரிந்த 100 பேரில் 60 பேர் வாசிப்பதேயில்லை. 20 பேர் நியூஸ் பேப்பர்/இணையம் மட்டும். 13 இந்திய-ஆங்கில பிக்ஷன்ஸ். மீதி உள்ளவர்கள் தான் ஜே.கே.ரவுலிங்க் முதல் ஜெயகாந்தன் வரை கலந்து கட்டி வாசிப்பவர்கள்.  நமது கடைசி காலத்திற்குள் முதல் வட்டத்தினரை கொஞ்சமாவது வாசிக்க வைத்துவிட்டால் போதும். "ருசி கண்ட கிழட்டுப்பூனை தன்னால் முடியாவிட்டாலும் தன் குட்டிகளுக்கு ருசியை காட்டி விடும்".

--  Business oritented/ Academic oriented எழுத்துக்களை  சிலாகித்தும், இலக்கியம் - பிக்ஷன் எல்லாம் குப்பை, இங்க்க்லீஷ் படிச்சாவாது வக்காபுலரி வளரும் (இது சரி எனினும், இது மிகக்கேவலமான நோக்கம் என்பது எனது துணிபு. Vocabulary should be a by-product) என்றும் இன்று கூறிய ஒருவரிடம் ஏன் நாம் வாசிக்கவில்லை என்ற வினா எழ...அவருக்கு சொன்ன பதில் பதிவாக.

கொசுறு - தோழிக்கு (அந்த ஒருவர் - நாம ஆம்பளைங்க கிட்ட எப்ப பாஸ் பேசினோம்) அராத்து தெரியும். அவர் போட்ட டீசர் நல்ல ஓப்பனிங்க் தானே என்றாள். சரி ட்ஹான், ட்வீட்ஸ் எல்லாம் மக்களிடம் இதை எடுத்து செல்லும். ஆனால் பஞ்ச் மட்டுமே வாசிப்பு அல்ல. அது மீண்டும் நம்மை சோம்பேறி தான் ஆக்கும். ஆனா, ஓப்பனிங்குக்கு ஓக்கேன்னேன். அவர் அந்த பார்ல அராஜகம் ஆயிரத்துக்கு பதிலா தற்கொலை குறுங்கதைகள குடுத்து படிக்க சொல்லி இருக்கணும்... :-))))



No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..