https://www.facebook.com/SHAN4Luv/posts/860157000664185
இன்று மதியம் தான் ஜில்லை பார்க்க நேரம் வாய்த்தது. காலையில் இருவருவமே அவரவர் அமேரிக்க ஆன்சைட்டிடம் பொய் சொல்லிக்கொண்டிருந்தோம். மதியம் என் பழைய டீம்மேட் ஒருத்தனை பார்க்க செல்கையில் எதிர்பட்டாள்.
இந்த முறையும் வழியை மறித்தபடியே தான் நின்றாள். அவளை கவனியாயது போல, இயல்பாக எக்ஸ்கியூஸ் மீ சொல்லியபடியே அவள் இடுப்பை தொட்டு இன்னொரு புறம் நகர்த்த பார்த்தேன். கையை தட்டிவிட்டு விட்டு முறைத்தாள். இரு கைகளையும் தனது மணல் முகடுகளுக்கு குறுக்காக கட்டியபடி, இடப்புறமாக சற்றேறக்குறைய 60 டிகிரி கோணத்தில் கீழே பார்த்து முறைத்தாள்.
நான் அவள் முகத்தை என்னை நோக்கி திருப்ப முயன்றேன். பிடிக்கும் போது போக்கு காட்டி பின் வழுக்கும் சாரைப்பாம்பு போல, என்னை ஒரே ஒரு மைக்ரோ வினாடி தனது பார்வையால் தீண்டி விட்டு வலப்பக்கம் திரும்பிக்கொண்டாள். அவள் கூந்தல் மெல்ல என் கைகளின் மேல் உரசி விலகியது. அவற்றை லேசாக இழுத்து, கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் உலவவிட்டபடியே மெல்ல தடவினேன்.
உங்களிடம் சொல்லி இருக்கிறேனா? பொதுவாகவே எனக்கு பெண்களிடம் ஈர்ப்பான விஷயம் கூந்தல் தான். புதிதாய் பிறந்த பூனைக்குட்டிக்கு மூன்றாம் வாரம் முளைக்கும் மீசை போல அவ்வளவு மென்மையான முடி ஜில்லுக்கு.. அவள் தலையை கோதி விட்டு முகர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொர்க்கத்தில் இப்படித்தான் வாசனை அடிக்கும் என மனப்பூர்வமாக நம்பி வந்திருக்கிறேன்.
அடர்த்தியான கருப்பில் லேசான பழுப்பு தூவிய நிறம். அவளிடம் நான் விழுந்ததே அந்த மசுருக்காத்தான் என பல முறை சொல்லியிருக்கிறேன். அவளுக்கு "மயிர்" என்ற வார்த்தை பிடிக்காது. கிடக்கட்டும். என்ன என்றேன். இது F1 ட்ராக்காடா என்றாள் தனது செந்நிற வானவில்லை சுட்டினாள். யாரோ மொழிபெயர்த்து படித்துக்காட்டியிருக்கிறார்கள். தமிழை பொறுமையாய் எழுத்துக்கூட்டி படிக்கும் ஜாதியில்லை அவள்.
சிரித்தபடியே இன்னமும் என்னென்னவோ சொல்லலாமே என்றேன். ஏவாளின் புருவம், மாலை பீடித்த ஆறாம் விநாடி இளம் ஆரஞ்சில் தென்படும் மூன்றாம் பிறை நிலா....
ஸ்ஸ் நிறுத்து என்றாள்.
இதழோரம் புன்னகையை தேக்கியபடி, அவள் விழி முயல்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணின் குழிக்குள்ளிருந்து தப்பிக்க வழி தேடுவது போல அவை அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. மீண்டும் தலையை குனிந்த படி ஏதோ முணுமுணுத்தாள்.
சிரித்தபடியே யாரேனும் கவனிக்கிறார்களா என சுற்றிலும் லேசாக தலையை திருப்பி, இமையை முழுவதாக கீழிறக்கி மீண்டும் திறக்கையில் விழியை மறுபுறம் கொண்டு சென்று பார்த்தேன். அங்குமிங்குமாக சிலர் அரைப்பார்வையும் முழு கவனத்தையும் என் மீது வைத்துக்கொண்டிருந்தார்கள்.
சட்டென கன்னத்தில் ஏதோ பாதி வெட்டிய ஸ்ட்ராபெரி பழமொன்று உரசினாற் போல் இருந்தது. திரும்பிப்பார்த்தேன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கம்பளம் விரிக்கப்பட்ட தரை ஏசியில் விரைத்து கிடந்தது. ஜில்லு தென்படவில்லை.
#ஜில்_கதைகள் #ஜில்_கதை_2 #தொடரும்
No comments:
Post a Comment
போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..