Flipkart

Monday, September 29, 2014

மெட்ராஸ் - விமர்சனம்

மெட்ராஸ்

பெங்களூரு வந்து கிட்டத்திட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. நேற்று இரண்டாம் ஆட்டம்  முடித்துவிட்டு வரும் போது நண்பன் ஒருவனிடம் சென்னை-பெங்களூரு ஓப்பீடு பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அலுவலகத்தில் எப்போதும் ஓடும் டாப்பிக். தமிழர்கள் அல்லாதவர்களிடம் மெட்ராஸ் குறித்த ஒரு பிம்பம் உண்டு. தமிழ் இல்லன்னா பிழைக்க முடியாத ஒரு ஊர் அது. சென்னை ஹீட்டுப்பா... எனக்கு பெரிதாக ஸ்டீரியோடைப்புகளில் நம்பிக்கை இல்லை என்பதால் சண்டை வராது. சிரித்துக்கொண்டே போய்விடுவேன்.

நேத்து நண்பன் சொல்லிக்கொண்டிருந்தான். இங்கு எல்லாருக்குமே தமிழோ இந்தியோ தெரியுது. பிரச்சனை இல்லாத ஊர்ண்ணே. என் ஆபிசிலும் இதே தான் சொல்வார்கள். சென்னையில் ஹிந்தி பேசி பிழைக்க முடியாது. பெங்களூரில் கன்னடாக்காரர்களை பார்க்கவே முடிவதில்லை. எல்லாம் பெயர்ந்தவர்கள். இங்கே இருந்த மண்ணின் மைந்தர்கள், வீடு நிலம் மூலம் செட்டில் ஆனவர்கள் ஆனாலும் சரி, தங்கள் மொழி சார்ந்த அடையாளத்தை முற்றிலும் துடைத்தெறிந்து விட்டு வாழ்கிறார்கள். சினிமா, இலக்கியம் என எந்தக்கன்னடத்  தொடர்பும் அவர்கள் மொழி அடையாளத்தை உயிர்ப்புடன் வைக்கும் அளவு இல்லை. இந்த தலைமுறையினருக்காவது சற்று வருத்தம் இருக்கிறது. ஒரு இருபதாண்டுகள் கழித்தால், பெங்களூரில் பெங்களூரியன்ஸ் மட்டும் தான் இருப்பார்கள்.

மன்னிக்கவும். மெட்ராஸ் விமர்சனம் இடத்தான் ஆரம்பித்தேன். முன்னுரை கொஞ்சம் லெந்த்தா போச்சு.
சென்னை பல ஊர்களில் வந்து குவிந்த மக்களின் வாழ்வாதாரம். கட்டிடத்தில் பணிபுரியும் கூலிகள் தொடங்கி ஐடியில் ஐடி கார்டோடு திரியும் கூலிகள் வரை. ஆனால், மெட்ராஸ் அது வேறு. மெட்ராஸ், மெட்ராஸ்காரர்களின் ஊர். புளியந்தோப்பு - தலித்துகள் வாழும், அல்லது அவர்கள் வாழ பணிக்கப்பட்ட பகுதி. ஒரு சுவரை மையமாக வைத்து, அதிகாரத்திணிப்பை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறார் ரஞ்சித்.

தமிழ் பிரபாவின் விமர்சனத்தை கீழே பகிர்ந்துள்ளேன். வரிக்கு வரி நான் எழுத நினைத்ததையும், மேலும் சில வட சென்னை அத்தெண்டிக் அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளதால், விடுபட்டவையை மட்டும் நான் சொல்கிறேன்.

தமிழ் பிரபாவின் விமர்சனம் : https://www.facebook.com/prabha.prabakaran/posts/807940465924748

 பொதுவாக எனக்கு கார்த்தியின் முகம் அலர்ஜி. தெலுங்கு பாணி நடிப்பு அவருடையது. இப்படத்திலும் க்ளைமேக்ஸில் ஸ்கூல் பாடம் உட்பட சில இடத்தில் சிரிப்பு வந்தாலும், ஓரளவு சமாளிக்கிற அளவு ஒன்றியிருக்கார். வட சென்னையின் முகத்தை மிக யதார்த்தமான ஒரு கோணத்தில் காட்டியிருக்கிறார் ரஞ்சித். எல்லாருக்கும் இதில் புரிந்தது மேலோட்டமாய் தலித் அரசியல் - அதிகார அடக்குமுறை மட்டும் தான். எனக்குத்தெரிந்து ரஞ்சித் நுட்பமாய் சொன்னவை/ நான் ரசித்தவை :

1. அம்மக்களிடம் பொங்கும் காதலும், கனவுகளும் - அன்பும், அவன் மனைவியும் மோகம் கொள்ளும் இடங்கள் அனைத்துமே காதலின் உச்சம். எளிய மனிதர்களின் காதலை இதைவிடச்சிறப்பாக சொல்லிவிட முடியுமா எனத்தெரியவில்லை. பையனை புட் பால் பிளேயர் (கால்பந்து வீரன் :-) ) ஆக்குவது தொடங்கி எத்தனை கனவுகள்?

2. கலை. நடனக்குழு, புட்பால், கேரம் என விளையாட்டுகள். எல்லா ஏரியாவிலும் இக்குழுக்களில் திறமைமிக்க எத்தனையோ இளைஞர்கள் இருப்பார்கள். இதைப்பெரும்பாலும் வெறும் சீன் பேக் ட்ராப்பாக மட்டுமே நம்மாட்கள் பயன்படுத்தி வந்தார்கள். ரஞ்சித் கதையோட்டத்தில் அதை இணைத்துள்ளார் - முக்கியமாய் நடனம், புட்பால், கானா.

3. அரசியல் எப்போதுமே ஆடு புலி ஆட்டம் தான். புலிகள் ஆடுகளை மோதவிட்டு வழியுமவற்றின் குருதியை நக்கிக்குடிக்கும் ஆட்டம். மேலிருக்கும் புலிகளுக்கு எல்லாருமே ஆடுகள் தான். தலித் அடையாள அரசியலைத் தாண்டி, மாரி - சேது கூட்டணி, மாரியை போட்டுத்தள்ளிவிட்டு விஜி மேலே வருவது, யார் வந்தாலும் சுவர் தன்னிடம் இருக்கவேண்டுமென நினைக்கும் சேது, அதற்கு மேல், கீழே உள்ள நிலைமை தெரிந்தும் கூட்டணி வைக்கும் தலைவர்கள் (எனக்கு விசி-பாமக ஒரு கூட்டணியில் இருந்ததை குத்தியதாக தெரிந்தது) என ஒரு படி கீழே இருப்பவன் ஆடாகத்தான் பாவிக்கப்படுகிறான்.

4. முதலிலேயே புள்ள குட்டிய படிக்க வைங்கடா என யதார்த்தமாக சொல்லும், ஜாலி இளைஞனாக, கொலை செய்து விட்டு பின் அவ்ளோ தானாடா என பினாத்தும் போதும் நன்றாகவே நடித்திருக்கிறார் கார்த்தி.

5. ஜானி பற்றி ஊரே சிலாகித்து விட்டது. தொப்பி எட்த்துக்கிரேன் பாஸூ... ஹேட்ஸ் ஆஃப் ஜானி :)

                      மொத்தமாக வட சென்னையின் கனவுகள், காதல், அவ்விளைஞர்களின் திறமைகள், அவர்கள் வாழ்க்கைப்பாதையென அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி, அதன் முன் நிற்கும் வரலாற்றின் நெடிய தொடர் சங்கிலி சவால்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தியதால் மெட்ராஸ் மிக முக்கியமான படம்.

                 இன்னொரு பக்கம். பரபரக்கிற ஸ்க்ரீன் ப்ளே. அரசியல் சதுரங்கத்தின் சோல்ஜர்-மந்திரி ஆட்டம், மிக யதார்த்தமான ஒரு காதல், அட்டகாசமான சந்தோஷ் நாரயணின் பிண்ணனி, பாடல்கள் என ஒரு பக்கா கமிர்ஷியல் ஹிட். இதற்காக சில ட்ரேட் ஆஃப்களை ரஞ்சித் செய்திருந்தாலும் அது ஓக்கே தான்.

படம் முடிந்தவுடன் என் நண்பனிடம் இதைத்தான் சொன்னேன்

"ஆரண்ய காண்டம் ஒரு கல்ட் க்ளாசிக்காகி விட்டது, மற்றபடி சென்னை இளைஞர் பாத்திரத்தை கதா நாயகனாக கொண்ட படங்களெல்லாம் கமர்சியல், மெட்ராஸ் இரண்டுக்கும் இடையிலான பேலண்ஸ்"

பாரட்டுக்கள் ரஞ்சித், சந்தோஷ் நாராயண், முரளி. லாங்க் வே டு கோ.


No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..