Flipkart

Amazon

Amazon

Tuesday, September 23, 2014

ஜில் கதை - 4

#ஜில்_கதைகள்

FB link - https://www.facebook.com/SHAN4Luv/posts/862637873749431?notif_t=like

ஜில் சோகமாக தன் காஃபி கப்பையே வெறித்தப்படி அமர்ந்திருந்தாள். சற்று நெருங்கி அமர்ந்து அவள் தோளில் கையைப்போட்டு இடப்புற கண்ணில் வழியலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்த நீரை தட்டி விட்டேன்.

தன் தோளை ஒரு முறை குலுக்கி என் கையை உதறியவள், "இந்தக் கண்ண தொடைக்கலாம்ல" என பொய்யாய் கோபப்பட்டாள்.

"என்னாச்சு ஜில்லு"

"ஒண்ணுமில்ல போ"

"என்னாச்சுன்னு கேக்கறேன்ல சொல்லு"

"பயமாயிருக்கு டா"

"ஏன்"

 மிக லேசாக தன் கருத்தை திருப்பினாள். வளர்பிறையில் நிலவு நாளுக்கு நாள் வளர்வதை பொறுமையோடு அமர்ந்து கவனித்திருக்கிறீர்களா? பதினைந்து நாள் நிகழ்வை இரண்டே நொடியில் நிகழ்த்திக்காட்டினால் ஜில். அவள் கருங்கூந்தல் இரவகன்று மெல்ல முக நிலவு உதயமானது. நிலவின் கண்களில் நீர்.

"ச்சு.... பாரு, கண்ல வெச்சுருக்கற உன் பிரண்டு கரையறா"

முறைத்தாள். அவள் தோழியின் நிறத்தை கிண்டல் செய்யும் போதெல்லாம், "இவர் அப்படியே வெண்ணிலா கலரு"ம்பா. இன்று அதீத மேக்கப்பிலிருந்தாள். அவளது மொச்சைக்கொட்டைகளை சுற்றி இடப்பட்டிருந்த ஐ லைனர் கரைந்து கன்னம் வரை கோடாய் வழிந்திருந்தது. இதிலும் அழகாய்த் தான் இருக்கிறாள். அழகான பெண்களுக்கு எது நிகழ்ந்தாலும், அதை அழகுணர்ச்சி மிக்கதாகவே பிம்பப்படுத்தி விடுகிறது மனது.

"இப்ப என்னாச்சு சொல்லப்போறியா இல்லையா?"

"இது சரிவருமா டா?"

 எனக்குப்புரிந்தது. எங்களைப்பற்றி கேட்கிறாள்.

"தெரியல ஜில்லு.... இப்போதைக்கு ஒரு இருபது லைக் வருது.... ஒரு ரெண்டு ஷேர்... நாலு டிஎம்... நீ உண்மை கேரக்டர்ன்னு வேற நம்புறாங்க... சரி வரும்ன்னு தான் நெனைக்கறேன்.."

"ஒத படுவ... நாயே... நெஜமாவே பயமாயிருக்கு டா...எங்க வீட்ட பத்தி உனக்கு தெரியாது"

"உஷ்ஷ்ஷ்..." அவள் உதட்டை என் முதல் மூன்று விரல்களால் அழுத்தி மூடினேன். நான்காம் விரலால் அவள் முகத்தை என்னை நோக்கி திருப்பினேன். என் முகம் இருந்த நெருக்கத்தை பார்ததும்  அவள் இதழ்கள் தங்களை அனிச்சையாய் ஈரப்படுத்திக்கொண்டன. எனக்கு சிரிப்பு வந்தது. லேசாய் கண்கள் சொருகி மூடினாள்.

"அடச்சீ...சீரியஸா ஒரு டயலாக் ரெடி பண்ணா சட்டுன்னு மூட ம்ம்மூடாக்கற"

"ஹா ஹா...ஷை... நீ இருக்கியே" என்றாள் கண்ணீர் சிதறி விழ சிரித்துக்கொண்டே. பெண்கள் அழுது முடித்துவுடன் குலுங்கிச்சிரிக்கும் காட்சி தான் தாய்மைக்கு அடுத்தபடியாய் மிக அழகானது. அடுத்த முறை உங்கள் காதலி அழுகையில் துடைத்து விடாமல் அவளை சிரிக்க வைக்க முயற்சி செய்யுங்கள் (முடியவில்லை எனில் ஜில்லுக்கு தெரியாமல் என்னை தொடர்பு கொள்ளுங்கள்)

"சரி... இங்க பாரு... இது ஏன் ஆரம்பிச்சு...எதுவரைக்கும் போகும் எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனா, நீ என்னைய விட்டு விலகணும்ன்னு நீயா நினைக்கற வரைக்கும், இங்க யாரும், யாரும், என்ன உன் கிட்ட இருந்து பிரிக்க மாட்டாங்க, நான் உட்பட"

"நெஜம்மா?"

 நான் ஒரு புன்னகையோடு அவள் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் கண்களில் கலவரம் மறைந்து வெட்கம் உதிப்பது தெரிந்தது. பெண்களையும் குழந்தைகளியும் ஏன் ஒப்பிடுகிறார்கள் எனப் புரிந்தது போலிருந்து. ஏன் இப்படி ஒருத்தியிடம் காதலில் விழுந்தேன் என வியப்பாய் இருந்த அதே சமயம், அவளோடு அந்த நொடியில் மீண்டும் காதலில் விழத்தயாராய் இருந்தேன்.

யோசனையை மறைக்க இதழ்களில் புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நிமிர்ந்தேன். ஜில் அங்கு இல்லை. எதிரில் டேபிள் மின் விளக்கை பிரதிபலித்தபடி காலியாய் இருந்தது.

No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..