Flipkart

Amazon

Amazon

Monday, March 25, 2013

கடவுள் - மற்றுமொரு பக்கம் - 3 :





                        கடவுள் குறித்த என்னுடைய  நினைவுகள் ஒரு மாரியம்மன் கோவிலில் என் அம்மாவுக்கு சாமி வந்திலிருந்து தொடங்குகின்றன.  எனக்கு மிகச்சிறிய வயது அப்போது. பார்த்தது நினைவில் இல்லை எனினும், அது குறித்து வீட்டில் அவ்வப்போது பேசியதின் விளைவாக தோன்றிய காட்சிப் பிம்பம் நான் அதை பார்த்ததாகவே எண்ணச்செய்கிறது. திருமணம் ஆகும் போது, அப்பா நாத்திகர் – திமுக காரர். சொற்பகாலம் கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். அரசியலை விட்டுவந்த பிறகு, குடும்பம்-குழந்தை என சுமை அழுத்த, ஏதோ ஒரு நோய்க்கு வேண்டப்போய் வழக்கம்போலவே ஆட்டுமந்தையிலொன்றாய் அரைகுறை ஆத்திகரானார் அப்பா. அரைகுறை என நான் குறிப்பிடுவதன் காரணம், கடவுள் குறித்த தர்க்கங்களோ, உணர்ச்சிகளோ இல்லையெனினும் "ஒரு வேள இருந்துட்டா... எதுக்கு வம்பு?" என சாமி கும்பிட வந்தவர் அவர்.

                            பால்ய காலங்களில் எனக்கு பிடித்த கற்பனை விளையாட்டு தோழர்களுள் தொந்தி விநாயகரும், முருகனும், ரேகான் என்ற ஒரு பேயும் கூட ஒரு அங்கம். பின்னொரு கோடைக்கால மதியத்தில், தொந்தியோடு இருப்பதால் தான் உனக்கு பெண் கிடைக்கவில்லை என கணபதியை நான் ஒரண்டை இழுக்க முடிவுக்கு வந்தது அந்த சினேகம்.  பின்னர் விவரம் தெரிந்துவிட்டதாக கர்வம் கொண்ட பொழுதுகளில் புத்தகங்களின் பால் ஈர்க்கப்பட்டு, பல மனிதர்களையும், கடவுள்களையும் தர்க்கங்களையும் கடந்த பின் சட்டென ஒரு நாள் கரைந்து போய் இருந்தது, சாமி கும்பிடும் பழக்கம்.

                   எதேச்சயாய் ஒரு நாள், அம்மா வைத்த விபூதியை தட்டிவிட்டு "எனக்கிதெல்லாம் பிடிக்கலம்மா" என்ற போது அவள் அதிர்ந்து தான் போயிருப்பாள். ஆனால், காலப்போக்கில், அவள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது , அப்பா "அம்மா... தாயே மகமாயி, காப்பாத்தும்மா" எனக்கதறி, "இந்த .... பயலாலதான் எல்லாம்... உன்னய பகச்சான்ல" என்ற போது, படுக்கையிலிருந்தவாரே உச்சு கொட்டி அவரை அதட்டியதும் அதே அம்மா தான். சட்டென கையைப்பிடித்து கரகரவென வந்த அழுகையை அடக்கிக்கொண்டேன். ஒரு வாரம் கழித்து அம்மா வீடு திரும்பிய அன்று அவளுக்கு தோசை ஊட்டிவிட்டுக்கொண்டிருக்கும் போது, "மொத வாய் உனக்கு" என அவள் என் கையை திருப்பி எனக்கே ஊட்டிவிட்ட போது தோன்றியது, கடவுளை வெளியில் தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

                              கடந்த வாரம் இஸ்லாமிய தோழி ஒருத்தியுடன் ஏதேச்சயாய் தொடங்கிய கடவுள் குறித்த விவாதம் பால்ய கால நினைவுகளை கிளறி விட்டது.  பத்து புத்தகங்களை படித்து விட்டு, "வேர் இஸ் திஸ் போப், ஐ வாண்ட் டூ ஆர்கியூ வித் ஹிம்" என அலைந்ததும், அனைத்து மதங்களையும் ஒட்டுமொத்தமாய் அழித்துவிட்டு மக்கள் திருந்தி தேன் ஆறு ஓட ஆரம்பிக்கையில் விழித்து காலி சொம்பில் தண்ணீர் துழாவிய கனவுகளுமாய் நினைவில் இழைகிறது.  யோசித்து பார்த்தால் வியப்பாய் இருக்கிறது, அறிவியல் எவ்வளவு வளர்ந்தால் என்ன? நம்பிக்கையை அடிப்படையாய் வைத்துக்கொண்டு பேசுகிற மனிதர்களிடம் எவ்வாறு விவாதிப்பது?
கல்பனா சாவ்லாவே விண்வெளிக்கு விநாயகரை தூக்கிச்சென்றாளே?
என்ன இருந்தாலும், எவ்வளவு சாதித்தாலும், மனித மனத்தால் சகித்துக்கொள்ள முடியாத பாரங்களை சுமக்க ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது. லஞ்சம் வாங்குவனாயினும், ஆரோக்கியம் வேண்டுபவனாயினும் கடவுளை பாட்னராக்கி கொள்வதில் மனத்திருப்தி காண்கிறார்கள்.

   

                             ஏதேனும் "விடுமுறை" நாட்களில் வீட்டு வாசலில் எந்த வேடம் அணிந்தவன் வந்து நின்றாலும், "இப்ப தான் இந்த கோவிலுக்கு போகணுமின்னு நெனச்சேன், சாமியே வந்துருச்சு" எனக்காசு போடுவார் அம்மா. நான் நினைத்துக்கொள்வேன், "அவனை பொறுத்த வரை நீ தான் சாமி". கடவுள் ஒரு நாளில் நேரில் வந்தால் அவரைக் கொன்று போடுவார்கள் என்றே தோன்றுகிறது (அய்ய்யய்யோ இது என் கதையின் ஒன் லைன் ஆச்சே, திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறேனே... சுட்டுடுவாங்களே...). பெரு நகரச் சாலையில் ஓவியம் வரைபனில் தொடங்கி, பொம்மை விற்பவன், சிலை வடிப்பவன், பிச்சை எடுப்பவர்கள், ஏன் மதசார்புள்ள (அற்றவும் தான்) அரசுகள் எத்தனை பேர் "இன் த நேம் ஆஃப் காட்"இல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கடவுள் நேரில் வந்தால், ஒரு நாளில் கோடிக்கணக்கானோரின் பிழைப்பு அம்பேல்!


                                                        எப்போது சாருவின் "முள்"ஐ மீள் வாசிப்பு செய்தாலும், கண் முன் தோன்றி மறையும்  "தீபா" ஒருத்தி விட்டுப் போன சவாலாய் இன்னமும் இருக்கிறது "உன்ன சாமி கும்பிட வெச்சு காமிக்கிறேன்". கோவிலுக்கு செல்லும் வழியில் விபத்தில் உயிரிழந்த நண்பனின் தாயின் சிதையை எரித்து விட்டு திரும்புகையில் கூடியிருந்த சனம் போலவே மனமும்  இல்லாத கடவுளை சபித்துக்கொண்டே வந்தது. உலகில் பலருக்கு கடவுள் குறித்த நம்பிக்கை இழப்புகளிலிருந்து தான் தொடங்குகிறது. பிரிவு, வறுமை, வேலை இழப்பு, பணம் பறிபோதல் , மரணம் என ஏதோ ஒன்றின் இழப்பில் தான் கடவுள் மீதான நம்பிக்கையோ, அவ நம்பிக்கையோ துவங்குகிறது. "கடவுள் இருக்கான் கொமாரு" என்றோ "என்ன சார் கடவுள் இது, என்ன மாதிரியான சிஸ்டம் சார் இது" என வெதும்பும் போதோ, எப்படியாயினும் கடவுள் குறித்த நம்பிக்கை உணர்வுப்பூர்வமானது.

"பசியிலிருப்பவனிடமும் காதலிருப்பவனிடமும்
அதன் அறிவியல் காரணிகளை சொல்லிக்கொண்டிருந்தால்
நீங்கள் ஒரு முட்டாள் அறிவுஜீவி"

                     என்ற என் பழைய கவிதை நினைவுக்கு வந்தது. இது கடவுள் நம்பிக்கைகக்கும் அட்சர சுத்தமாய் பொருந்தும் என்றே தோன்றுகிறது. ஈழத்தின் கதை எத்தனை பேரை நாத்திகராக்கியிருக்கும்? மொத்த குடும்பத்தையும் கோவிலுக்கு வண்டி கட்டி கிளம்பிய நாளில் பரிகொடுத்த மீதமிருக்கும் ஒருவர், இனி கோவிலுக்கு செல்வாரா? ஒரு சடலத்தை அடக்கம் செய்ய மின் மயானம் நோக்கிப்போகையில், யாரோ ஒருவர், "என் சமூகம் உனக்கு முன்பாக செல்கிறது" என மைக்கில் அலறுகிறாரே. அவர் ஏன் இன்னமும் ஆத்திகராய் இருக்கிறார்?

 நீலமணியின் கவிதை ஒன்று நினைவுச்சுழலில் இருந்து வந்து விழுகிறது

"தட்டினால் திறக்கப்படும் என்கிறார்கள்
சாத்தி வைப்பானேன்?"

இன்னொன்று, நீலமணி இந்த மாதிரி ஹைக்கூக்களில் கில்லாடி

"என்ன வரம் வேண்டுமென்று கேட்டார் கடவுள்
 அது தெரியாத நீ என்ன கடவுளென்றேன்"

                                         மனவளர்ச்சியற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்றில் சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்க்கும் இன்பராஜ், சுமதி டீச்சர், அக்குழந்தைகளை கவனிப்பதையே தனது வாழ்கையாக்கிக்கொண்ட சாந்தி பெர்ணாண்டஸ் சிஸ்டர், போராடுவதையே வாழ்கையாக்கிக்கொண்ட திருமுருகன் காந்தி அண்ணன் போன்றோர், பிச்சை எடுத்தாலும் குழந்தைகளை யாராவது பிச்சை எடுக்கவிடுவதைக்கண்டால் பொங்கி அவர்களிடம் குழந்தையை மீட்கும் ஒரு முதிய பிச்சைக்காரர், உலகம் அழியுமென வதந்தி கிளம்பிய அன்று ஒரு லட்சத்தை எல்லோருக்கும் பிரித்து வழங்கிய ஈரோட்டு பெரியவர் என எத்தனை எத்தனை கடவுள்களால் சூழப்பட்டு இருக்கிறோம் நாம். எப்போதோ மேத்ஸ் நோட்டின் கடைசி பக்கத்தில் எழுதிய பழைய கவிதை ஒன்று நினைவில் இடறுகிறது.

"பார்க்குமிடமெங்கும் பரவிக்கிடக்கிறார் கடவுள்
 நின்று புன்னகைக்க நேரமின்றி
விரைந்து கடக்கிறோம் நாம்
கோவிலுக்கு."

Tuesday, March 12, 2013

மற்றுமொரு பக்கம் -2 ஆதலினால் காதல்கள் செய்வோம்


                                இந்த அத்தியாயத்தில் வரும் என் காதலிகள் அனைவருக்கும் பொதுப் பெயர்தீபா”.

          டீச்சர்களில் யாரையும் காதலிக்கவில்லை என்று யாராவது சொன்னால் அதற்கு இரண்டே அர்த்தங்கள் தான். ஒன்று நீங்கள் படித்தது முழுக்க ஆண்கள் உள்ள, அவர்களே ஆசிரியராயும் இருக்கும் பள்ளி. இரண்டு, நீங்கள் சொல்வது பொய். நான்காம் வகுப்பில்,  பட்டு ஜரிகை சரசரக்க வந்த தீபா டீச்சர் தான் என் முதல் காதலி. இப்போது கூட சாரு நிவேதிதாவின்முள்படித்தால், அவர் கன்னத்தை தடவும் ஸ்பரிசம் ஒரு நொடி கானலாய் தோன்றும். நான் ஏழாவது முடித்து லீவில் இருக்கையில் அவர் சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து கொள்ள, முடிந்து போனது அந்த காதல். இப்போது கூட கல்லூரி பேராசிரியை ஒருவர் திருமணத்தின் போது என் மனம் சுக்கு நூறாய் உடைந்து அதை நான் தேடிக்கொண்டு இருபதற்கு காரணம் அந்த தீபா டீச்சரின் சாயலும் ஒரு காரணியாக இருக்கலாம்.

        பள்ளியில் அதன் பிறகு எண்ணிலடங்காத என்னிலடங்காத காதல்கள். “மச்சி அவ பாக்கறாடாஎன தொடங்கிய இரண்டு காதல்கள். ஸ்கூலிலேயே காதலித்து அதை இப்போது வரை காப்பாற்றும் ஒரே நண்பனான செந்திலிடம் சொல்லப்போய் வெளியில் தெரிந்த தீபாவின் மீதான பிரேமை, பதினொன்றாம் வகுபுல் முதல் நாள் பார்த்து, அவள் உடுத்தியிருந்த ஆரஞ்சு வண்ண சுடியை மாதம் முழுக்க சிலாகித்து, அவள் பயாலஜி எடுத்ததால், ஒரு மணி நேரம் அவளை பயங்கரமாய் மிஸ் செய்து, இன்னமும் தொடரிலிருக்கும் அவளிடம் நான் சொல்லவே இல்லை என் காதலை. இப்போது, மாஸ்டர் டிகிரி படித்துக்கொண்டிருக்கிறாள். திருமண பத்திரிக்கைகாக பயந்தபடி காத்திருக்கிறேன். அவ்வப்போது அவள் குறுஞ்செய்தி வரும் போதெல்லாம் விம்மி அடங்குகிறது மனசு.

              என்னை பொறுத்த வரை, கடவுளுக்கு அடுத்த படியாக உலகின் மிகபெரிய மித் ஒரு தடவை தான் காதல் பூக்கும் என்பது தான். எனக்குள்ளும் என்னை சுற்றியும், நொடி தோறும் காதல்கள் பூத்துக்கொண்டே இருக்கின்றன. சின்ன வயசில் சர்க்கஸில் பார்த்த அந்த கயிற்றின் மேல் நடப்பவளை இன்று வரை திருப்பூரில் எப்போது சர்க்கஸ் போட்டாலும், சென்று தேடிக்கொண்டிருக்கும் அப்பா நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார் காதலை. பேச்சு வாக்கில் அந்த பெயர் கேட்கும் போதோ, நாங்கள் யாராவது ஓட்டும் போதோ, கல்யாணம் செய்து கொள்ளாத அவர் மாமனை நினைத்து, ஒரு நொடி மின்னல் கீற்றாய் வெட்கச்சிரிப்பை உதிர்க்கும் கௌரிப்பாட்டிக்கு திருமணம் நடந்து அவர் கணவனும் இறந்துவிட்டார்.

              கல்லூரியின் ஆரம்ப காலங்களில், ஒரு பெண்ணின் பின்னால் கிறுக்கன் போல திரிந்த அனுபவம், இப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவைக்கும். பேருந்துகளில் சில, முகநூலில் சில என நான் காதலித்தவர்களின் எண்ணிக்கையை விட என்னை காதலித்தவர்கள் எண்ணிக்கை வெகு குறைவே. இப்போது வரை காதலித்துக்கொண்டிருக்கும் கல்லூரி தோழி தீபாவை, “நாங்க லவ் பண்றோம் டாஎன நண்பன் வந்து சொன்ன நாளின் இரவு மறக்க முடியாதது. காதலிப்பவளிடம் நட்போடு பழகுவதின் ஆகப்பெரும் சிக்கல் இது தான். அவள் இதை படித்து விட்டு, “யார்டா அதுஎன கேட்கும் போது, உள்ளே வழியும் உதிரத்தை மறைத்து சிரிக்க வேண்டும்.
    
                யோசித்து பார்த்தால், வட்டியும் முதலுமில் ராஜு முருகன் நட்பு குறித்து சொன்னது காதலுக்கும் பொருந்துகிறது. “ஒரு காலத்துல யாரோ ஒருத்தருக்கு நம்ம தான் உலகமாக இருந்தோம். இப்ப அவங்க உலகத்துலயே நாம இல்ல”.


Sunday, March 3, 2013

மற்றுமொரு பக்கம் - தொடர் பத்தி - 1

                இரண்டு நாள் இருக்கும். காலை பேருந்துக்காக காத்திருந்த போது கோகுல் தம்பி கூப்பிட்டான்.

"அண்ணே, நல்லா எழுதி இருக்கேண்ணே... தமிழ் "ஈசி" தான்" என்றான்.

          கொஞ்சம் இருமி, அந்த நேரத்தில் யோசித்து "அட, பொதுத்தேர்வு தொடங்கி விட்டதே" என பின் மண்டையில் பல்பு எரிந்து பின் வழக்கமான தேர்வு அறிவுரைகள் சொல்லிவிட்டு வைத்தேன். இந்த வருடம் பொதுத்தேர்வை வழக்கம் போல லட்சக்கணக்கில் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

            குப்பை கூளங்களை போல, வரைமுறை இல்லாமல் பொறியியல் கல்லூரிகளை திறந்து வைத்திருக்கிறோம். முன்பொரு காலத்தில் நிலக்கிழார், பெரு முதலாளி வர்க்கம், இன்று கல்லூரிகளை திறந்து வைத்து, கடை விரித்திருக்கிறது. ரேவதி அக்கா ஊரெல்லாம் அநியாய வட்டிக்கு கடன் வாங்கிய காசையையும், முருகேசன் சித்தப்பா விவசாய நிலம் விற்ற காசையும் தங்கப்பல் தெரிய சிரித்து வாங்கி வயிறு வளர்க்கிறார்கள். டொனேஷன் போக, ஏகப்பட்ட கட்டணங்கள்.

            நாலு வருட என் பொறியியல் வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்த ஒரே பாடம்  "நீ இதுக்கு சரி பட்டு வர மாட்ட" என்பது தான். கல்வி தந்தைகள் எல்லாரும் களவாணிகள் என்று நான் சொல்லவில்லை, அப்படி இல்லாதிருந்திருந்தால் நன்றாயிருக்குமே என அங்கலாய்க்கிறேன். சமூகம் பற்றிய அறிவை சற்றும் கற்றுத்தராமல், கார்பரெட்டுகளுக்கான அடிமைகளை வளர்த்தெடுக்கும் கல்விமுறை தான் இன்றைய இஞ்சினியரிங். வளர்ந்த வளரும் கல்லூரிகளில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பல நேரங்களில், இது சிறையா என சந்தேகிக்க வைக்கும். வளரதா கல்லூரிகளில் பேனரில் மட்டும் கட்டடங்களை காட்டி பணம் கறந்து , வெற்று மேசைகளை தேய்க்க வைக்கிறார்கள்.

எனக்கு தெரிந்து தோட்டா ஜெகன் அண்ணன் முதல் நண்பர் சுனில் வரை ஐடி வேலையை உதறி விட்டு வந்தவர்கள் எத்தனையோ பேர். வாழ்க்கையை கற்றுக்கொடுக்காமல் வெறும் வேலைவாய்ப்புக்கான கல்வியை தான் நாம் கொண்டாடி வருகிறோம்.


              இன்றைய குழந்தை வளர்ப்பு பெரும்பாலும் "கார்ப்பரேட் " மயமாகிவிட்டது. பிள்ளைகளை முதலீடாக பார்க்க பழகி விட்டோம். மூன்றாம் வீட்டு கீதா குழந்தை கற்றுக்கொள்வதாலேயே பாட்டும், பக்கத்து சீட்டு சுப்பிரமணியம் பையன் விளையாடுவதாலேயே டென்னிஸ் கோச்சிங்கும் நம் பிள்ளைகளுக்கும் அவசிமாகிப்போகிறது.

        சூப்பர் சிங்கரில் தலைகாட்டாத, இன்ஜினியரிங், மெடிக்கல் படிப்பதை தன் கனவென கொள்ளாத, வந்த மாமாவுக்கு ரைம்ஸ் பாடி காட்டாத, அம்மாவை மம்மி என்று அழைக்காத குழந்தைகள் சாபங்களாக பார்க்கப்படுகின்றன. கில்லியும், கபடியும் இருப்பது கூட தெரியாமல், அம்புலி மாமாவையும் டைகரையும் காட்டாமலேயே ஒரு தலைமுறை வளர்ந்து விடுதல் என் வரையில் கொடுமை.

          நான்கைந்து வருடங்கள் இருக்கும். ஒரு மே மாதத்தில், மோகன் அவசர அவசரமாக அதிகாலை ஒன்பதரை வாக்கில் காதினுள் இரைந்து எழுப்பினான். அவனோடு படித்த முகம் தெரியாத ஒருவனின் மரணச்செய்தி. பைக் கேட்டவனோடு கூடவே சென்றேன். ப்ளஸ் டூவில் தோல்வி, மரணத்திற்கு அவனை இட்டுச்சென்றுள்ளது. உண்மையில் அதுவா அவனி அது நோக்கி நெட்டித்தள்ளியது??

       அந்த சாவு வீட்டில் கூடியிருந்த கூட்டம், அவன் ஒரு வேளை சாகாமல் இருந்திருந்தால் அவனை பேசிப்பேசியே கொன்றிருக்காதா? என் சார் பையன் என அவன் அப்பாவை தூண்டி விட்டு கொன்றிருக்காதா? இந்த தேர்வுகளும் இஞ்சினியரிங்கும் தான் வாழ்க்கை என ஒரு தலைமுறையையே ஏமாற்றி அவர்கள் குழந்தை பருவத்தை, பதின்பருவத்தை கொன்றிருக்கிறோம்.

        விடியலுக்கு முந்தைய நேரம், ஒரு ரயில் நிலையத்தில் நின்ற ரயிலிருந்து இறங்கி, ஒரு பதினொரு வயது மதிக்கத்தக்க சிறுவனிடம் கேட்டேன்.

"தம்பி நீ ஸ்கூலுக்கு போவலியா?"

" போன வருஷம் வரைக்கும் போனேன். எழுத படிக்க தெரியும், அம்மாவுக்கு மேலுக்கு முடியல, அப்பா இல்ல.. அதான்" என்றான்.

"ஸ்கூலுக்கு போயிட்டு வந்து புத்தகம் விக்கலாமே", ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டே கேட்டேன்.

"அம்மாக்கு எதுனா ஆச்சுன்னா கூட இருந்து பாத்துக்குறியா?"

 படித்தவர்களுக்கே உரிய கள்ளப்பார்வை பார்த்து, மௌனமாய் நின்றேன்.

"படிக்கறேன் சார் இப்பவும்.  நல்லா எழுத படிக்க தெரியும். பின்னால பொறுமையா பத்தாப்பு எழுதிக்கலாம். இன்னமும் ஒரு பத்து வருசங்களிச்சு வாங்க, எங்கம்மா பேர்ல ஒரு புக்கு கட, இங்கயே வெச்சுகாட்றேன்"

   இன்ஜினியரிங்கை விட பெரிய படிப்புகள், அதிகாலை ரயில் நிலையங்களில் கிடைக்கின்றன.








       
 

மற்றுமொரு பக்கம் - புதிய பத்தி - அறிமுகம்

                      



       விஷுவல் மீடியத்தின் எழுச்சி எழுத்தின் முக்கியத்துவத்தையும் நித்தியத்துவத்தையும் குறைத்து வருகிறது. மனுஷ், சாரு போன்ற எழுத்தாளர்கள் கூட இ-புக் பக்கம் செல்வது போல தெரியும் போதெல்லாம், புது புத்தகத்தின் வாசம் மூச்சை நிறைத்து நெஞ்சை அடைக்கிறது.

                   விஷூவல் மீடியத்தின் பக்கம் செல்ல நண்பர்கள் முயற்சி எடுத்து, அது ஒரு பக்கம் நடந்து வந்தாலும், உள்ளே புழுக்கத்தில் ...
உழன்று கொண்டிருக்கும் எழுத்துக்காரணை, வாசிப்பு அனுபவந்த்தை நுகர்ந்தவனை சத்தமின்றி கொன்று விட முடியவில்லை. தன் கடைசி தபாலை விநியோகித்து விட்டு பணி ஓய்வு பெறும் தபால்காரனை போல, ஏக்கத்துடன் என் வளர்ச்சியை பார்க்கும் அவனை புறந்தள்ளி விட முடியவில்லை.

                     இன்னொரும் புறம் பதிவுலகம் மெல்ல கலகலத்துப்போய், பதிவுகள் வழக்கொழியும் என்ற நிலையில் முகநூலும் ட்விட்டரும் எழுத்துகளை கொஞ்சம் வாழ வைக்கும் என்றே தோன்றுகிறது. இதற்கு
Parisalkaaran Krishna Kumar அண்ணனுக்கு வந்த வரவேற்பான ஷேர்கள் ஒரு சாட்சி.

                    இன்னுமொரு பக்கம், வருங்காலத்தில் வாரப்பத்திரிக்கைகள் எல்லாம் இணையத்தை மையமாக கொண்டே இயங்கும் என்ற அவதானிப்பு என்னுள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. கதைகளும், தொடர்களும் முதலில் இணையத்திலும் பின் இதழ்களில் வரும் காலம் தொலைவில் இல்லை.

                        இவற்றை எல்லாம் தாண்டியும் என்னுள் இருக்கும் எழுத்துக்காரனுக்கு தீனி போடவும், இனி முக நூலை களமாக்கி, வார இதழ்களில் வெளிவருவது போல "பத்தி" எழுதலாம் என உத்தேசம்.

                         என் ஆசை நிறைவேறினால், இந்த பத்தியே கூட விரைவில் விகடனிலோ குங்குமத்திலோ வெளியாகலாம். (ம்ம்க்கும் என் ஆசைகள் எல்லாம் நிறைவேறி இருந்தால் சற்று முன்பு சாட் செய்த ஃபேக் ஐடியோடு சேர்த்து எனக்கு 13439 பெண்டாட்டிகள் இருந்திருப்பார்கள்)

                            நிச்சயம் அந்த வாரத்தின் சென்ஷனலைஸ்டு நியூஸ் சொல்லி உங்களை அறுத்து விட மாட்டேன். நான் ஏறிவுடன் பெருந்துறைக்கு டிக்கெட் நீட்டும் எந்த பெயர் தெரியாத பேருந்து நடத்துனர், பத்து நாள் முன்பு இறந்து போன எங்கள் ஏரியா டெயய்லர் தாத்தா என முகம் தொலைத்த ம்அனிதர்களும் அவர்களின் சொல்லப்படாத கதைளும் ஏராளம் இருக்கின்றன.

                          என் பத்தியின் வரவேற்பு உங்கள் ஷேர்களின் மூலம் மட்டுமே என்னால் கணக்கிடப்படும். இதுவரை படிக்காதவர்கள் நிச்சயம் லைக் தான் செய்வீர்கள். ஆனால், அதனால் பயனில்லை. வெறும் ஷேரை மட்டுமே கணிக்கிடப்போகிறேன்.

                            இன்று முதல் ஒவ்வொரு வாரமும், என் முக நூல் பிரத்தியேக பக்கத்திலும் என் சுவற்றிலும், என் வலை மனையிலும்....

"மற்றுமொரு பக்கம்"


 http://www.facebook.com/matrumorupakkam#!/

பின் குறிப்பு : உங்கள் வரவேற்பை பெற்ற குப்பை தொடர் கட்டுரை தொகுப்புகள் நிச்சயம் தொடரும். இந்த "மற்றுமொரு பக்கம்" பத்தி, குறுந்தொகுப்பு, முக நூல் ஸ்பெஷல், இன்னமும் வாசிப்பை நேசிப்பர்களுக்கும் அதற்கும் நேரம் குறைவாக இருப்போர்க்கும் சென்று சேர்க்கும் தளம்.

 இலக்கியத்திற்கு முக நூல் சரிபட்டே வராது என்பது என் தனி எண்ணம். என்ன ஆகிறதென்று பார்ப்போமே.