அறிவாசான் தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் அரிய பேச்சுக்களின் ஒரு தொகுப்பு பகிரப்படுகிறது.
Monday, December 24, 2012
Sunday, December 23, 2012
ஆடை குறைப்பு - எதிர்வினை - விவாதம்
எனது பாலியல் வன்முறைகளும் பசப்பல்களும்! கட்டுரையை படித்த நண்பர் கணேஷ் வசந்த் ஆற்றிய எதிர்வினை இது.
அன்புள்ள கணேஷ் வசந்த்,
ஜெயமோகன் தளத்தை நிறைய வாசிப்பதாலோ என்னவோ, இப்படி தொடங்கவே வருகிறது. ஆனால், பயப்படாமல் படியுங்கள், அவரைப்போல மெலோ ட்ராமாவோ, உங்களை இனி மேல் சந்திக்க விரும்பவில்லை போன்ற எச்சரிக்கைகளோ விடுக்கப்போவதில்லை.
எனது காமம் குறித்த கட்டுரையை நீங்கள் படிக்கவில்லை என்ற முடிவிற்கே நான் வர வேண்டியுள்ளது. ஏன் எனில் அதில் நான் பதிலளித்த பல கேள்விகளை நீங்கள் மீண்டும் எழுப்பி உள்ளீர்கள். கற்பழிப்பு குறித்தும் அதற்கான தண்டனை குறித்தும் நாமிருவம் சற்றேறக்குறைய ஒரே மன நிலையில் இருப்பதாக படுகிறது. எனவே ஆடை சுதந்திரத்தை பற்றி மட்டுமே இப்பதில் கட்டுரை பேசக்கடவுது.
முதலில் ஒன்றை தெளிபடுத்திக்கொள்வோம். பெண்களின் உடை பற்றி கருத்து சொல்லும் உரிமை நம்மிருவருக்கும் இருப்பதால் தானே இந்த விவாதமே நடக்கிறது. ஆனால், கருத்தை தெரிவிக்கும் உரிமையும், கருத்தை திணப்பதும் வேறு வேறு என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். சானியா, விளையாடும் உடை எனக்கு ஆபாசமாக படுகிறது என்று நான் சொன்னால் அது என் கருத்து. அதையே “சானியா இந்த உடை அணிந்து விளையாடக்கூடாது என்றோ, இந்த உடையைத்தான் அணிய வேண்டும்” என்றோ கூறுவது கருத்து திணிப்பு. அதை நான் நேரடியாக அவரிடம் சொன்னாலும், அறிக்கையாக வெளியிட்டாலும் அது திணிப்பே தான். எனவே, கருத்து சொல்ல உங்களுக்கு பூரண உரிமை உண்டு. நீங்களே சொன்னதைப்போல உங்கள் வீட்டு பெண்ணே ஆனாலும் திணிக்க உரிமை இல்லை.
“இன்னொரு ஹைதர் அலி காலத்து வசனம் வச்சிருக்காங்க, “பெண்களோட ஆடைல இல்ல குறை அதை பார்க்கும் ஆண்கள் கண்ணில் தான் இருக்கிறது குறை”ன்னு, இந்த வசனத்த ஆட்டோல எழுதிப்போடும் நாளை ஆவலோடு நான் எதிர்பார்கிறேன்! இத ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு பெண்களுக்கு ஒரு விசயத்த சொல்ல விரும்புறேன், நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஆண்களோட கண்கள் காமப்பார்வைன்கிற குறை அதிகம் உள்ள கண்களே, இது ஒரு அசிங்கமான குணம்தான், சந்தேகமே இல்ல”
இல்லை, கணேஷ் இதை அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. இது இயற்கை. இது இல்லாமல், எதுவுமே இல்லை. பெண் இதே போல ஆணை பார்ப்பதில்லை என்பதெல்லாம் பொய் கணேஷ். கடந்த வாரம் உலகம் அழிந்தால் என்ன செய்வீர்கள் அதற்கு முந்தைய நாள் என்ற கேள்வியை “18-21” வயதுள்ள பெண்களிடம் கேட்க நேர்ந்தது. அவர்களின் விடையில் “டேட்டிங்க்” தவறாமல் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பெண்களின் மொபைலில் சூர்யாவின் சட்டையற்ற படம் வால்பேப்பராக இருந்ததை சாட்சியாக பார்த்த அனுபவம் உண்டு. அவர்களுக்கு அதை வெளிப்படுத்தும் ஸ்பேஸ் இல்லை.
இந்தப்பார்வையை இரண்டு வெவ்வேறு கோணங்களில் இருந்து ஆராய்வோம்.முதலில், இயற்கை விதியின் படி ஆண் மீது பெண்ணும், பெண் மீது ஆணும் கவர்ச்சி கொள்வது இயல்பு. இந்த இயல்பே, எந்த ஒரு இனத்தின் (மனித/மிருக) பெருக்கத்திலும் பங்கு வகிக்கிறது. இரண்டாவது வரலாற்று ரீதியானது. நமது வரலாற்றில் பல்லாயிரக்காண ஆண்டுகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் ஆடை அணியவே (ஆண்/பெண்) உரிமை மறுக்கப்பட்டனர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். (இங்கே மீண்டும் ஒரு விஷயத்தை எல்லோரும் குறித்துக்கொள்ளுங்கள், சென்ற கட்டுரையும், அதற்கான வசந்தின் எதிர்வினையும் மேல் மட்ட/ நடுத்தர – பொதுவெளியில் நடமாடும் பெண்களை குறித்தே எழுதப்பட்டது. பழங்குடியின/தலித்/இலங்கை இவை எல்லாம் இதில் சற்றும் தொடர்பில்லாதவை.)
மேற்கத்திய கலாச்சாரம் மாறிய அளவிற்கு இந்தியாவில் கலாச்சாரம் மாறாத (வளராத என்றே நான் குறிப்பிடுவேன்) தற்கு ஏகப்பட்ட காரணிகள் உண்டு. அதில் நாம் காலனியாக இருந்தது, நமது பொருளாதார நிலைமை, இஸ்லாமிய இந்துத்வா பழமைவாதிகள் போன்றவை முக்கியமானவை. இவை பெண்ணை ஆணிலிருந்து வேறுபடுத்தி ஆணாதிக்க மனோ நிலையை வளர்த்தவை. இதில் ஹிஜாப் பற்றியேல்லாம் நான் பேச ஆரம்பித்தால், ஹைதர் அலி காலத்திலிருந்து தோண்டி எடுத்து என்னை திட்டுவார்கள் என்பதால், அதை விட்டு விட்டு பெரும்பான்மை சூழலை கவனிப்போம்..
உங்கள் ஆடை கட்டுப்பாடு குறித்த காரணங்களுக்கான எதிர்வினையாற்றும் முன், ரவிக்கை முகலாயர்கள் கொண்டுவந்தது என்பதனை நினைவில் கொள்க. நீங்கள் சொல்லும் அனைத்தும் நிதர்சனம் குறித்த உங்கள் கவலைகளின் பரிணாமம் என்றே பார்க்கிறேன். ஆனால், நீங்களும் மாற்றம் நிகழும் போது அதில் ஒத்திசைவோடு பங்கேற்பீர்கள் என்றே நம்புகிறேன். அதே போல சினிமா பார்த்து விட்டு அதில் போடும் உடைகள் தான், “சுதந்திர உடைகள்” ந்னு நினைக்கும் மனப்பாங்கு உள்ளவர்களை விட்டுவிடலாம்.
காரணிகளில் வராத இது :
“ஆனா இந்த மாதிரி அசிங்கமான குணம் ஆண்களுக்கு இருக்குங்கிறது நிச்சயமா பெண்களுக்கு தெரியும்னு நான் நம்புறேன்! பெண்களுக்குள்ள சிறப்பு குணம் அது! ஆனா அப்பிடி தெரிஞ்சும், பெண்கள் ஆடைக்குறைப்ப செய்யறது... ஆணோட மோசமான பார்வைய அங்கீகரிக்கிறது மற்றும் தூண்டுவது மாதிரியான செயல்தானே? இது ஒரு தப்பான தூண்டுதல்ன்னு நெனைக்கிறேன். “
இஸ்லாமியர்களிடம் ஹிஜாப் (பர்தா) குறித்து நியாயம் கேட்டால், ஒரு பெண்ணின் முகமே பாலியல் ரீதியாக உணர்ச்சிகளை தூண்டக்கூடியது என்பார்கள். நான் சொல்கிறேன், குரலே பாலியல் ரீதியில் ஒரு ஆணை தூண்டக்கூடியது. ஸ்ரேயா கோஷலின் குரலில் “மாஜா மாஜா” பாடல் கேட்டு இருக்கிறீர்களா? (சில்லுன்னு ஒரு காதல்). அதைக்கேட்ட பின்னும் குறியில் ஏதேனும் மாற்றம் ஏற்படாவிட்டாலும் கூட மனதிலாவது காமத்தின் சாயல் படிந்தே தீரும் எந்த ஒரு ஆணுக்கும். ஒரு பெண் சிரிப்பதை பார்த்தால் கூட காம உணர்வு ஏற்படும் தான். இது உடை விஷயத்தில் மற்ற எதனையும் விட அதிகம் என்பதை உங்கள் வழி நின்று நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், “சேலை” தான் உலகின் மிக செக்ஸியான (பாலியல் ரீதியில் ஒரு ஆணை கவர்ந்திழுக்கக்கூடிய உடை) “சேலை” தான் என்கிறேன். இது குறித்த மேலதிக தகவல்களை நீங்கள் லக்கி போன்ற ஆன்றோர்களை கேட்டும் தெளிவடையலாம். நிச்சயம் ஒரே விடீயோக்களை லைக் செய்திருக்கும் எங்கள் கருத்து மாற வாய்ப்பில்லை. எனவே, ஒரு பெண் உங்களை ஆடை குறைப்பு செய்து தான் தூண்ட வேண்டும் என்பதல்ல, ஒரு களுக் சிரிப்பில், கொஞ்சல் பார்வையில் சாய்த்து விடலாம். நீங்கள் சொல்வது போல, 99 சதவீத பெண்கள் தங்களை ஆண்கள் பார்க்க வேண்டும் என விரும்புவார்களே தவிர, தங்கள் அந்தரங்கத்தை ஆண்கள் பார்க்க வேண்டும் என கடைவிரிக்க மாட்டார்கள். அந்த உடை அவர்களின் சவுகரியம் கருதியே. இன்னொன்று, அப்படியே அப்பெண்கள் (மிகச்சொற்பமான எண்ணிக்கையில்) “காட்டுவதற்காகவே” உடையணிந்ததாய் உங்களுக்கு தெரிந்தால், “அதை பார்ப்பது” ஆண்களின் இயல்பே. இயற்கை நியதி அது. பிம்பம்கள் புணரப்படுவது (மனதளவில் நீங்கள் குறிப்பிட்ட நிலை) இயற்கையே.
இனி நீங்கள் ஏன் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு தேவை என்றீர்கள் என்பதையும், அதற்கு நீங்கள் அடுக்கும் காரணங்களையும் அவறிற்கான பதிலையும்/ எதிர் கேள்வியையும் பார்ப்போம்.
1. நீங்கள் கோவிலில் பூசாரியை எப்படிப்பார்க்கிறீர்கள்? கிண்டலாகவாகவா? முதல் பட்டன் கழட்டி விடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ரீதியிலான கிண்டலோ/கேலியோ/எரிச்சல் மனப்பான்மையோ எதிர் பாலினத்திடம் இருந்து கிடைக்கிறதா? கேலியும் கிண்டலும் அளவு மீறாம இருக்கற வரைக்கும் பிரச்சனை இல்ல. கிண்டல் வேற, Bullying வேற, ரேப் வேற
2. இது தான் உண்மை நிலவரம். ஒத்துக்கறேன். ஆனா, இதை மாற்றணுமின்னு தானே கரடி மாதிரி கத்திகிட்டு இருக்கேன். எதார்த்தம் இது தான்னு நானும் நீங்களும் பேசுவது மாதிரியே, நாளைக்கு உங்க பையனும் என் பையனும் பேசிக்க கூடாதுன்னு ஆசைப்படுறேன் அது தப்பா? சமூகம் அப்படி பாக்குதுன்னு பழிய தூக்கி போடாதீங்க. யாருங்க சமூகம்? நீங்களும் நானும் மாறுற மாதிரி நம்மள உள் அடக்கிய இந்த சமூகம் மாறமால போயிடும். கலிலியோ சொன்னப்ப ஒட்டுமொத்த சமூகமும் அவருக்கு எதிராத்தான் இருந்துச்சு. உலகம் தட்டைன்னு எழுதி கொடுத்த அப்புறம் தான் அவருக்கு மரண தண்டனையில இருந்தே விடுதலை கிடைச்சுது. சமூகம் சொன்னதுனால் உலகம் தட்டையா என்ன? நாம் பேசுவது இன்றைய சமுதாயத்தை பற்றி மட்டும் அல்ல, வரும் காலத்தின் இந்த சமுதாயத்தின் போக்கையுன் குறித்தே என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நான் அடுத்த வீட்டு பெண் பற்றி மட்டுமல்ல, என் மனைவி, என் மகள் என அனைவரையும் உத்தேசித்தே பேசுகிறேன்.
3. நீங்கள் சந்தித்த பெண்களை போன்றவர்களை நானும் சந்தித்தே உள்ளேன். இன்றைய சூழ் நிலையில் பெரும்பான்மை பெண்களுக்கான அரசியல்/சமூக அறிவு மெருமளவில் வளரவில்லை. இது குறித்து எந்த பெண்ணும் பின்னூட்டத்தில் என்னை கேள்விகேட்க மாட்டார். ஏன் என்பதற்கு ஒரு சிறிய காரணம், இங்கே வந்து இந்த தலைப்பை படிக்கும் பெண்களில் பெரும்பாலானோர் தங்கள் தோழிகளில் பலருக்கு இவற்றில் உள்ள ஞானத்தின் அளவை அறிந்திருப்பர். இவர்கள் பேசும் போது கூட “மொக்க போடாதடீ” என்ற பதிலே இவர்களுக்கு கிடைத்திருக்க கூடும். ஒரு வேளை பெண்கள் குறித்த என் புரிதல் தவறாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால் , இந்த பத்திக்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறேன்.
4. “அந்த மாதிரி ஆடை” – இது ஒரு சமூக நோய்கூறு மன நிலை வசந்த். என் மனதளவில் சொல்லுகிறேன். அந்த உடையில் ஆசிரியரையும், மருத்துவரையும் நான் ஏற்பேன். எவ்வித தயக்கமும் இல்லாமல். இத்தனைக்கும் என் தாய் ஒரு ஆசிரியை. உங்களுக்கு தெளிவாகவே விளக்குகிறேன். நீங்கள் நெருங்கிய ஒருவரின் சிகிச்சைக்காக மேற்கத்திய நாடு செல்கிறீகள் என்று வைத்துக்கொள்வோம். அங்கே இருக்கும் மருத்துவரின் ஆடையை பார்த்துவிட்டு திரும்ப வந்துவிடுவீர்களா? இதற்கு பதிலாக கலாச்சாரத்தை இழுக்காதீர்கள். இந்த கலாச்சாரத்தின் பெரும் பகுதி வழக்கொழிந்த குப்பை. கொஞ்சமே கொஞ்சம் இருக்கும் நல்ல விசயங்களுக்காக மொத்த கலாச்சார குப்பையும் சுமக்க முடியாது. நீங்கள் இதை படிக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். அடுத்து, பன்னாட்டு நிறுவனங்கள். வசந்த், அது நம்மை அடிமையாக்கும் ஒரு முயற்சி தான். ஆண்களுக்கு கூடத்தான் “பார்மல்” பேண்ட் சர்ட் அணிந்து வர வேண்டும் என்ற விதி உள்ளது. அதன் அர்த்தம் நமது டீ-ஷர்ட் நம்மை ஆபாசமாக காட்டுகிறது என்பதா? சரி, ஒரு நிறுவன கழிவறையில் டன் கணக்கில் காண்டங்கள் கண்டுஎடுத்ததை இக்கட்டுரையில் குறிப்பிட்டேனே? எதிர் வினையை எதிர்பார்க்கிறேன்.
5. வசதி – ஆண்கள் ஆடை குறைப்பு – என்ன வசந்த் நம்ம இருவத்தி நாலு மணி நேரமும் ட்யூட்டிலயேவா இருக்கோம்? இல்ல, வாக்கிங்க் போறப்பையோ, பக்கத்து தெருவுக்கோ லுங்கில இல்லாம , டை கட்டிட்டு தான் போறீங்களா? டூர் போகும் போது எல்லாம் டீ-ஷர்ட் ஜீன்ஸா இல்ல பார்மல் டக்-இன்னா?
இதை விட வசதியான உடை உடுத்தும் பெண்கள்//// இத கேட்டா எனக்கே டென்ஷன் ஆகுது வசந்த். பெண் வேஷம் போட்ட நடிகர்களோட பேட்டிய படிங்க அந்த உடைகளின் சிரமம் புரியும்.
அடுத்து தன்னம்பிக்கை. உடைக்கும் தன்னம்பிக்கையும் சம்மந்தம் இருக்குன்றத ஒத்துக்குவீங்கறத நம்புறேன். புது உடை நமக்கு தன்னம்பிக்கை அளிப்பது போல. மீண்டும், நீங்க தடுமாறுறத நான் தான் இயற்கைன்னு ஒத்துக்கறேனே. நீங்க தடுமாறுறீங்கன்ற காரணத்துக்காக உடைகளை ஏன் மாற்றணும். நான் சொன்னது போல ஒரு பெண்ணின் பார்வை, சிரிப்பு கூட என்னை தடுமாற வைக்கும் (உண்மை தானே?) அப்போ சிரிக்கவும், பேசவும் கட்டுப்பாடு விதிச்சிடலாமா?
அடுத்து பெண்கள் ஏன் பெண்களுக்கான உடை சுதந்திரத்தை ஆதரிக்கிறார்கள். இது இருக்கட்டும். நான் கேட்கிறேன். உங்களுக்கு, இந்த பார்மல் பேண்ட் போட்டுட்டு வேலைக்கு வான்னு சொன்னப்ப கொஞ்சம் சங்கடமா இல்ல. சரி, நாளைக்கே உங்க கம்பேனி “கோட்-சூட்” போட்டுட்டு கோபி ஸ்டைல வந்தாத்தான் உள்ள விடுவோம்ன்னு சொன்னா போராட மாட்டீங்க?
சரி, பெண் ஆணை ஈர்க்கை முயற்சிப்பதற்காக உடை அணிகிறாள் என்ற உங்கள் வாதிற்காக கேட்கிறேன். ஆண் ஒரு பெண்ணை ஈர்க்க தனது திறமைகளை வெளிப்படுத்தி வழியும் போது, அதை பெரிய தவறென பார்க்காத நீங்கள், ஒரு பெண் ஒரு ஆணை வசீகரிக்க முயல்வதில் ஏன் குற்றம் காணுகிறீர்கள்? நீங்கள் ஆர்ம்ஸ் ஏற்றிக்காட்டுவது எதற்கு? எதிர்த்த வீட்டு மாமாவின் அன்பை பெறவா? பெண் ஒரு ஆணை கவர முயற்சிப்பதும் இயற்கை என்ற ரீதியிலேயே நான் பார்க்கிறேன். இது தேவை இல்லாத/ சிறு பிள்ளைத்தனமான ஒரு கவர்ச்சி முயற்சியே ஆனாலும் அது இயற்கையின் நியதி என்றே பார்க்கிறேன் நான்.
நீங்கள் சொல்வது போல, சில நோய்க்கூறு மன நிலை உடைய ஆண்கள் பெண்களின் இந்த உடையை ஒரு குறையாக சொல்லிவிடக்கூடாது என்ற உங்களது கவலையை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில் , இதற்கான தீர்வாக தலைமுறை வழியாக மெல்ல ஒரு மாற்றத்தை ஆண்கள் மனதில் ஏற்படுத்தாமல் ஆடை கட்டுப்பாட்டை அதற்கு தீர்வாக சுட்டுவது ஏமாற்றத்தையே அளிக்கிறது.
இதற்கு மாற்றுத்தீர்வாக பாலியல் கல்வி, Value based education , பெண்-ஆண் இடையேயான புரிதல் வளர்த்தல், இரண்டு பேருக்கும் ஆன்மா ஒன்று தான்- கூடு தான் வேறு என அறிய வைத்தல் என பல அடுத்த தலைமுறைக்கான தீர்வுகளை பேசி இருந்தேன். அது குறித்து நீங்கள் பேசாததும் வருத்தமே அளிக்கிறது. எனக்கு நான் வருங்காலத்தில் செய்ய வேண்டியதை சொல்வதாகவும், நீங்கள் நிகழ் காலம் குறித்த உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாகவுமே படுகிறது.
நீங்கள் என்னை மேற்கத்திய பித்தன் என்றே தூற்றினாலும் கூட கவலையில்லை. அப்படிப்பட்ட கட்டடற்ற ஒரு உடை சுதந்திரத்தை தான் நான் விரும்புகிறேன். “கோவா”வில் நுழைந்த போது முதலில் எனக்கு தோன்றிய கேள்வி “இவர்களுக்கு எல்லாம் எப்படி மூடு வரும்” என்பதாகத்தான் இருந்தது. சற்று நாட்களில் என்னால் மார்பை , பால் கொடுக்க பயன்படும் உறுப்பின் உபரிச்சதையாக என்னால் பார்க்க முடிந்தது. கண், காதை பார்ப்பதைப்போல.
இப்படி பார்க்கும் ஒரு தலைமுறையைத் தான் நான் உருவாக்க முயற்சிக்க வேண்டுமே அன்றி, கட்டுப்பாடுகளை விதிக்கலாகாது, நீங்கள் சொல்லும் கட்டுபாடு ஒரு வேளை இடைக்கால ஒரு தீர்வாக அமையுமேயன்றி முற்றான தீர்வாகாது. நிதர்சனம், சமூகம் என்ற போர்வையில் நான் சாதியையோ, தீண்டாமையோ நியாப்படுத்தினால் உங்களுக்கு வரும் கோபம் போன்றதே, இந்த விசயத்தில் உங்களுக்கு நிகழ்ந்த எதிர்வினைகளும். தயவு செய்து, நிதர்சனத்தை பேசும் போது, இப்போது நிதர்சனம் இப்படி இருக்கிறது. வருங்காலத்தில் இவையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பட்டியலிடும் பொதும், அதன் தொலை நோக்கை ஆராய்ந்து பாருங்கள். மற்றவரின் இடத்திலிருந்தும்.
நன்றி
கூத்தாடி
நன்றி
கூத்தாடி
Saturday, December 22, 2012
பாலியல் வன்முறைகளும் பசப்பல்களும்!
ஆறு நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல்
ரீதியாக வன்முறைக்கு ஆளாக்கப்படும் தேசத்தில், எங்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்
வியாபித்திருக்கும் போது, டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட/பாலியல்
வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மட்டும் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதும்
, எல்லோரும் கிளர்ந்து எழுவதும் அல்லது எழுவதாக ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
உண்மையிலேயே, நிகழ்ந்தது அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
மாறி மாறி கற்பழித்த பின், அந்த பெண்ணின் பிறப்புறுப்பிற்குள் இரும்பு கம்பியை சொருகி
உள்ளனர் எச்சிக்கலை நாய்கள். அந்தப்பெண் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவரது குடல் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது. இது
போன்ற ஐந்து லட்சம் நிகழ்வுகள் உள்ளன. இவற்றில் கேஸ் பதிவு செய்யப்பட்டவை, அவற்றின்
தண்டனை பெற்றவர்கள் வெகு சொற்மே.
இவ்விஷயத்தை ஒரு நாள் முழுக்க ஒளிபரப்பிய
மீடியாக்களின் எழுச்சி வெறும் விளம்பரம் தேடும் சென்ஷேஷன் மட்டுமே. இன்றைய நிலையில்
மீடியாக்களின் கடமை செய்தி சென்று சேர்ப்பது என்பதைத்தாண்டி பணம் ஈட்டுவதுமாகி விட்டது.
மீடியா இப்போது ஒரு “தொழில்”. அவர்களை நொந்து பயனில்லை. பொது மக்களின் இந்தக்கோபம்
வெறும் அந்த கணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு தான். குணமான உடன் வேலை தருகிறேன்
என்ற பி.ஜே.பியின் அறிவிப்பும், சோனியா சென்று பார்த்ததும் வெறும் அரசியல் அன்றி வேறில்லை.
முதலில் இந்த மன நிலை எப்படி நமக்கு வந்தது? ஏன்
“மறந்து கொண்டிருப்பது” மக்கள் இயல்பாக மாறிப்போனது? கொஞ்சம் வரலாற்றை பின் நோக்கி சென்று பார்த்தால்,
எந்த ஒரு வரலாற்று ஆய்வாளனுக்கும் இந்தியா ஒரு தேசமாக அமைந்தது வியப்பையே அளிக்கும்.
ஒரு தேசத்திற்கான அடிப்படையை வரலாற்றியலாளர்களின் வழி ஆராய்ந்தால் அது நிலப்பரப்பு,
மொழி, மக்கள் மன நிலை, கலாச்சாரம் என பல்வேறு தளங்களில் ஒத்திசைவை கொண்டிருக்கும்.
ஆனால், இந்தியாவில் இப்படிப்பட்ட ஒத்திசைவை காண முடியாத வியப்பில் தான் இந்தியாவை
“சப்-காண்டினென்ட்” என்றும் “வேற்றுமையில் ஒற்றுமை” காணும் தேசம் என்றும் போற்றுகிறோம்.
இதற்கான காரணம் ஆங்கிலேயர்கள் என்பதோடு நிறுத்திக்கொண்டு, இன்றைய நிலைக்கு வருவோம்.
நூறு கோடி மக்கள் உள்ள ஒரு தேசம். நிலப்பரப்பால், மொழியால் பல்வேறு விதமான பிரச்சனைகளை
தினமும் எதிர்கொள்ளும் மக்கள். தினம் தினம் புதிதாக ஒரு பிரச்சனை. மக்களின் இயல்பாக
மறதி மாறிப்போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணி. தினமும் கிளர்ந்தெழும் புதிய பிரச்சனைகள்,
பழைய பிரச்சனைகளை மறக்கடிக்கின்றன.
சரி மீண்டும், டெல்லி விவகாரத்திற்கு
வருவோம். ஐரோம் ஷர்மிள், மணிப்பூர் பெண்கள், இலங்கைப் போரில் நிகழ்ந்த பாலியல் குற்றங்கள்,
தினம் தினம் இதையே அனுபவிக்கும் பழங்குடியினப்பெண்கள் என எல்லாவற்றையும் கடந்து விட்டு,
டெல்லியை பற்றி மட்டும் பேசுவது எந்த வகையிலும் அநியாயமே. Castration பண்ண வேண்டும்,
தூக்கில் போட வேண்டும் என்ற கருத்துக்கள் சற்று ஆழ்ந்து யோசித்தால் கொஞ்சம் அதிகமாக
தோன்றினாலும், இது போன்ற தண்டனைகள் மற்றவர்களுக்கு பயம் வர வேண்டும் என்ற நோக்கிலேயே
முன் வைக்கப்படுகின்றன. இந்தியாவில் இந்தச்சட்டமெல்லாம் இப்போதைக்கு வராது என கற்பூரத்தின்
மேல் சத்தியம் செய்ய நான் தயார். என்ன தான் குடிமக்கள் இந்தப்பிரச்சனையை உணர்ச்சிப்பூர்வமாக
அணுகினாலும், அரசோ நீதிமன்றமோ சட்டதிற்குட்பட்டே எதையும் செய்ய முடியும். தண்டனைகள் கடுமாயானால் தவறுகள் குறையும் என்பது சரிதான். ஆனால், இங்கே இருக்கிற சட்டப்படி தண்டனை வழங்கவே ஆண்டுக்கணக்கில் ஆகிறதே. இப்படி ஒரு Castration/Sentence to death தண்டணை இருந்தால், அது இது கருணை மனு என தண்டனை கிடைப்பதற்குள் குற்றவாளி போயே சேர்ந்துவிடுவானே. இதே போல, இன்று டெல்லி பெண்ணிற்கு நிகழ்ந்த அநியாத்திற்கு பதறுபவர்கள், தினமும் நிகழும் எந்த ஒரு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட போதும் இந்த அளவு பொங்கியதாக தெரியவில்லை. இதற்கு குறிப்பிடத்தகுந்த சில காரணங்கள், நடந்தது டெல்லி என்பதும் அந்த சம்பத்திற்கு மீடியா முக்கியத்துவம் கொடுத்து விவரித்து பரிதாபத்தை ஏற்படுத்தியதுமே ஆகும். இதை தவறென்று சொல்ல முடியாதெனினும், இந்த ஒரு விஷயத்தை கையிலேடுத்த மீடியாக்கள் தினமும் சொல்லொண்ணா துயரில் சிக்கித்தவிக்ககும் பல பெண்களை ஏன் கிஞ்சித்தேனும் பார்க்கவில்லை என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை. மற்ற சம்பவங்களெல்லாம் வெறும் பெட்டி செய்தியோடு முடிந்து போய், பெட்டி கேசாக அது ஆகியும் விடுகிறது. வெளியில் தெரியாமலேயே போய்விட்ட கொடுமைகள் ஏராளம்.
இவை ஒரு புறம் இருக்க, ராம்சிங் மன நலமற்றவன் போல் நடித்ததும்,
பின் கலாச்சார பாதுகாவல வேடம் பூணுவதும் ஆபத்தான ஒரு முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடிய
சாத்தியம் இருக்கிறது. இந்த நிலையிலும் கூட அந்தப்பெண் இரவில் வெளியே சென்றது தவறு,
பெண்களின் உடை ஆபாசமாக இருப்பாதால் கற்பழிப்புகள் நிகழ்கின்றன என்ற கருத்துக்கள் பிற்போக்குத்தனமானவை
மட்டுமல்ல, பெண்களின் அடிப்படை உரிமையே கேள்விக்குள்ளாக்குபவை.
இன்று நாகையில் ஒரு நான்காம் வகுப்பு
படிக்கும் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறாள். நேற்று திருச்சந்தூரில்
ஒரு பதிமூன்று வயது மாணவி. இதற்கெல்லாமும் உடை தான் காரணமா சொல்லுங்கள்?.
இதற்கான தீர்வுகளையும், இனி வரும் காலத்தில்
நிகழப்போவதையும் அலசுவோம். பிற்போக்குத்தனம் பேசுபவர்களுக்கு கசக்கக்கூடும் ஆன போதிலும்
காலத்தின் கட்டாயமாக இனி நான் குறிப்பிடுபவை நிகழ்ந்தே தீரும்.
1.பாலியல்
கல்வி. ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவின் தன்மையையும் மனிதனின் வளர்ச்சி நிலைகளையும்
முன்னிறுத்தி பாலியல் கல்வி அளிக்கப்பட வேண்டும். இது குறித்த தனி முழு கட்டுரை, இங்கே.
2.
Value
based Education. இது மிக முக்கியமான ஒன்று. ஆன்மாவின் சாரம் ஆணுக்கும் பெண்ணுக்கும்
ஒன்று தான் என்பதும், கூடு மட்டுமே வேறுபட்டுள்ளது என்பதும், சிறு குழந்தை முதலே ஆண்/பெண்
என இருவர் மனதிலும் விதைக்கப்பட வேண்டும். பரஸ்பர மரியாதையை ஏற்படுத்த வேண்டும். பெண்ணை
தன் சுகங்களுக்கான இச்சைக்குரிய பொருளாய் பார்ப்பதிலிருந்து விடுபட்டு, தன்னைப்போலவே
ரத்தமும், சதையும் , ஆசையும் ,உணர்வும், சோகமும், சந்தோஷமும், கருத்துகளும் கொண்ட ஒரு
சக ஆன்மா என்ற உணர்ச்சியை ஆண் குழந்தைகள் மனதில் விதைத்தல் வேண்டும். அதே நேரத்தில்,
பெண்களுக்கும் பாலியல் கல்வியும், ஆண்கள் உலகை பற்றிய அறிமுகமும் தேவை.
3.
சமூகச்சூழலில்
பெண்களும் ஆண்களும் கலந்து பழகும் ஒரு நேர்மையான சூழல் வளர வேண்டும். சிறு வயது முதலே
ஆண்/பெண் வகுப்பறை முதல் பேருந்து வரை எங்கும் தொடர்கிறது. வகுப்பறையிலும் பேருந்திலும்
முன் பின் அறியாத ஆணும் பெண்ணும் சகஜமாய் ஒரே சீட்டில் அமர்ந்து பயணிக்கூடிய முதிர்ச்சி
பெற்ற சமூகம் உருவாக வேண்டும்.
4.
தனக்கு
சமமாக ஒரு பெண்ணை மதிக்கும் பண்பு, குழந்தைப்பருவத்தில் தொடங்குவதற்கு தன் தந்தை தன்
தாயை நடத்தும் விதம் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண் தான் வீட்டின் “தல” என்ற
மனோபாவத்தில் ஊறிப்போய்விட்ட நாம், இவ்விடயத்தில் மாற சற்று காலம் ஆகும்.
5.
பெண்களுக்கான
உடை விஷயமோ வேறு எதுவோ கட்டுப்பாடுகள் கொண்டு வரும் மூடத்தனத்தை கண்டிப்பாக ஏற்க முடியாது.
முக நூலில், ரவி பிரகாஷ் போன்ற நான் அதிகம் மதிக்கும் நண்பர்கள் சிலர் இப்போதைக்கான
வழி “துஷ்ட்டனைக்கண்டால் தூர விலகுவது” என்ற ரீதியில் பெண்களுக்கான பாதுகாப்பு உத்திகளை
சொல்வதாக, இரவில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம் என்ற ரீதியில் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
என்னால் இந்த கருத்துக்களை முழுமையாக ஏற்கவோ மறுக்கவோ இயலவில்லை. ஏன் எனில், நிதர்சனத்தில்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. முட்கள் தூவட்ட பாதை ஒன்றை கடக்க நேரும் போது, செருப்பில்லாதற்காக
நம்மை நொந்து கொண்டே, முட்களை தூவியவனையும் அதை அப்படியே விட்டிருப்பனையும் சபிக்கலாமே
அன்றி, முட்களின் மேல் வீம்பாக நடக்கலாகாது. இவ்வழி நின்று, அந்த கருத்தாக்கங்களை ஆராய்ந்தாலும்
கூட, முட்களை என்றுமே நீக்காமல் போய் விடுவோமோ என்ற பயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
பாதுகாப்பு கருதி சொல்லப்படும் ஒரு விஷயம் பெண்களின் வளர்ச்சிக்கு, நிரந்தர முட்டுக்கட்டையாக
மாறி விடக்கூடாது. இரவில் பெண்கள் நடமாடும் அளவிற்கு பாதுகாப்பான ஒரு நாட்டை உருவாக்குவது
எத்தனை வருடங்களுக்குத்தான் கனவாகவே இருக்கும்?
6.
விளையாடும்
போது “இதை” அணிந்து கொண்டு விளையாடு என்று சொன்னது ஒரு வகை முட்டாள்தனமென்றால், இதை
அணிந்து கொண்டு ரோட்டில் நட என்பது இன்னொரு வகை முட்டாள்தனம். முட்டாள்தனங்களில் எந்த
மதமும் ஒன்றுக்கொண்று சலித்தது இல்லை.
7.
“ங்கோ”
என ஆரம்பித்து வார்த்தை ரீதியாக தாக்கும் போது கூட, பெண்களை மையமிட்ட தாக்குதலே, ஆண்களில்
மனதில் எழுகிறது. இந்த பிம்பமும் Value based education மூலம் உடைக்கப்பட வேண்டும்.
8.
விரும்புகிறீகளோ
இல்லையோ, இன்னமும் ஒரே நூற்றாண்டில், பாலியல் சுதந்திரம் இந்தியாவில் நிலவும். நினைத்த
ஆண்/பெண்ணுடன் உறவு கொள்ளுதல் சகஜமாகும். சூமுகத்தின் பல மட்டங்களில் இப்போதே நிலவும்
இந்த நிலை, மேற்கத்திய கலாச்சார தாக்கம் நிறைந்த வேலை செய்பவர்களிடம் நிச்சயம் பரவலாகும்.
ஸ்ட்ரெஸ்சை போக்க வேறு வழி தெரியல என்ற வாதம் முன் வைக்கப்படும்.
9.
பாலியல்
தாக்குதல்களை பல்வேறு நிலைகளில் காண வேண்டும். பழங்குடியின பெண்களிடம் நிகழ்த்தபடும்
பாலியல் வன்முறைகள், பாலியல் ரீதியில் சுரண்டப்பட்ட தலித் பெண்கள் போன்றவர்களின் பிரச்சனைகள்
மேற்கண்ட எவற்றோடும் தொடர்பு படுத்த முடியாத ஒன்று. இவற்றிகான ஒரே தீர்வு, அம்மக்களின்
வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது தான். அதே போல, வக்கிர மன நிலை பிடித்தவர்களால், பாலியல்
வன்முறைக்கு ஆளாக்கப்ப்டும் குழந்தைகளை காப்பற்றுவதும் அவர்களுக்கு அளிப்படும் பாலியல்
கல்வியை பொறுத்து தான்.
10. இந்த விடயம் என்றில்லாமல் பொதுவாகவே இந்திய நீதித்துறை படு வேகம். தாமப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதை நினைவில் கொண்டு, இத்தனை பெரிய , கலாச்சார-மொழி வேறுபாடுகள் கொண்ட நாட்டுக்கு ஏதுவாய் நீதிமன்றங்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். ஓயாமல் வாய்தா கொடுக்கும் வாய்ப்புகள் மறு பரிசீலணை செய்யப்பட வேண்டும்.
கலாச்சாரம் என்ற போலிப்போர்வை போத்திக்கொண்டு
இன்னமும் முடை நாற்றமடிக்கும் கழிவுகளை அப்போர்வையினுள்ளேயே கழித்துக்கொண்டு கிடக்கத்தான்
எனக்கு ஆசை என நீங்கள் சொன்னால், உங்களை அந்த கலா மாஸ்ட்டாரால் கூட காப்பற்ற முடியாது.
Monday, December 17, 2012
கடற்கரை(றை) - சிறுகதை
உப்பு வாசம் கலந்த பழக்கப்பட்ட
காற்று முகத்தில் அறைந்து முடியை அலைந்து விட்டு சென்றது. செருப்புகளை பைக்கினருகில்
கழட்டி விட்டு விட்டு, வாசுகியின் கையை லேசாகப்பற்றியபடி மணலில் ஏறி நடக்கத்தொடங்கினான்
விநயன். வாசுகி, விரல்களை அவன் உள்ளங்கையில் நிரடிக்கொண்டே நடந்தாள். புதிதாய் உடைத்துத்
துருவிய தேங்காய் என குறுகுறுப்பூட்டியது அவள் விரல்கள்.
இருவரது கைகளும் கண்ணாம்மூச்சி ஆடிக்கொண்டே வந்தன. வாசுகி, அவன் தோள் மீது சாய்வதும் நகர்வதுமாக இருந்தாள். மண்ணில் அவர்கள் கால்கள் புதைவதும் எழுவதும் ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம் போல ஒரு ஒத்திசைவை கொண்டிருந்தன.
வானம் வாசுகியின்
மேனியை பிரதிபலிப்பதாய் வெளிர் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது. வானத்தை பார்த்துக் கொண்டே நடந்த விநயனை தன் முகம் நோக்கித்திருப்பினாள் வாசுகி.
“ம்ம்…”
“இன்னியோட ரெண்டு வருஷமாச்சு”
“ம்ம்…”
“இன்னமும் ரெண்டு வாரத்துல என்ன இன்னோருத்தன் கைல புடிச்சுக்கொடுத்துருவாங்க,
அப்பறம் இதே பீச்சுல ம்ம் ம்ம்ன்னு பினாத்திண்டு அலையப்போறேள்”
சிரித்துக்கொண்டான்
விநயன். அவளது செயற்கையான வழக்குக்கென யூகித்துக்கொண்டாள்.
“அப்படி விட்டுடுவனா என் செல்லத்த? இப்ப கூட நீ சரின்னு
சொன்னா உங்க அப்பா கிட்ட பேசுறேன்”.
இதற்குள்
கடல் சொற்ப தொலைவில் வந்திருக்க,
உட்கார தோதான இடத்தை நான்கு கண்களும் பிரிந்து தேடின. சுற்றிலும் மணலைக் காட்டிலும் அதிகமாய் காதல் ஜோடிகள் அமர்ந்திருந்தன.
இந்தியாவில் மக்கள் தொகை பெருகியதற்காக மீண்டும் ஒருமுறை வருத்தப்பட்டான்
விநயன். வாசுகியின் கையை இன்னமும் இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தான்.
வாசுகி அவனுக்கு கிடைத்த ஒரு பரிசு. அவனுக்கு கிடைத்த
ஒரே பரிசு. சிறு வயது முதல் தாய் தந்தை முகத்தைக் கூட பார்க்காமல் அநாதை பட்டம் சூடி வளர்ந்தவனுக்கு அன்பின் மொத்த உருவாய் கிடைத்தாள் அவள்.
இதற்குள் ஒரு ஜோடி மணலை தட்டிவிட்டபடியே
ஒரு நிலப்பரப்பை காலி செய்ய, விநயனும் வாசுகியும் அந்த இடத்தை
தற்காலிகமாக நிரப்பினர். வாசுகி கையில் மணலை குவித்துப் பார்ப்பதும்,
பின் அதை தன் விரல்களினூடாக அருவி போல் கொட்டுவதுமாக இருந்தாள்.
விநயன் கழுத்தை முடிந்தவாக்கிலெல்லாம் திருப்பி கண்ணில் பட்டவர்களை கவனித்துக்கொண்டிருந்தான்.
அவன் கவனத்தை கலைக்கும் விதமாக
அவன் காது மடல்களை அவளது உஷ்ண சுவாசம் தீண்டியது. முகத்தை திருப்பி
அந்த சுகத்தை இழக்க விரும்பாதவனாய், அவள் மடி மீது வைத்திருந்த
தன் தலையை திருப்பாமலேயே “ம்ம்ம்ம்…” என்றான்.
“வந்ததுல இருந்து உம்முகொட்டிக்கிட்டே இருக்கீங்க. வேற
எதுவுமே பேசல, இப்ப பேசப்போறீங்களா? இல்ல
நான் போகட்டா?” போலியாய் கோபப்பட்டுக்கொண்டே அவன் மடி வைத்திருந்த
தொடையை மெல்ல அசைத்தாள் வாசுகி.
“எத்தனை காதல் ஜோடிகள் பாத்தியா?” சம்மந்தம் இல்லாமல்
ஒரு கேள்வியை கேட்ட அவனை பொய்க்கோபம் மாறாமல் பார்த்தாள் வாசுகி.
“நம்ம கதைய கேக்கவே யாரும் இல்ல… இதுல ஊர்ல இருக்கறவங்க
கத நமக்கெதுக்கு?”
“இதுல எல்லாருமே நம்மல மாதிரி காதலிக்கறவங்கன்னு சொல்ல முடியாது. கள்ளக்காதல் ஜோடிங்க கூட நிறைய இருக்காங்க. எங்க ஆபிஸ்
ல சுமதி இருக்க்காள்ள….” சொல்லிக்கொண்டே கொண்டே போனவனை அசுவாரசியமாய்
பார்த்தாள் வாசுகி. உரையாடலின் இடையிலும் அவன் முடிகளை கோதிக்கொண்டிருந்த
தன் விரல்களை நிறுத்தினாள் வாசுகி.
“எனக்கென்னவோ அந்த மும்பை மாபிள்ளைக்குத்தான் வாசுகிய கட்டிக்கற யோகமோன்னு தோணுது”
“அப்ப நான் தப்பிச்சேனா?” கேட்டுக்கொண்டே தன் விரல்களை
அவள் இடையில் படர விட்டான் விநயன். பேசுவதை ஒரு வினாடி நிறுத்திவிட்டு
சொக்கிக்கிடந்த வாசுகி, பின் சுதாரித்து அவன் விரல்களை
கிள்ளி அங்கிருந்து எடுத்து விட்டாள்.
“சரி, கிளம்பு
போய் மிஸ்டர் சந்திரமௌலிய பார்த்து இப்பவே பொண்ணு கேக்கறேன்”
“ஆமாம் இவரு மௌன
ராகம் கார்த்திக்…. தம்பி எங்கப்பா தளபதி படத்துல வர ஷோபனா அப்பா கேரக்ட்டர், முடிவு
மாற மாட்டார்.”
“பாத்துக்கலாம்”
எல்லா ஆண்களும் சொல்லும் அதே அசால்ட்டான அபிநயத்தில் சொன்னான். பேதைகளுக்கு தைரியமூட்டுவதாய்
எண்ணி கற்காலத்திலிருந்து சொல்லப்படும் வார்த்தை அது.
“இதுங்களுக்கெல்லாம்
வேற எடமா கெடைக்கல, இங்க வந்து தான் இவனுங்க காதல வளக்கணுமாம், கொழந்த குட்டிய கூட்டிக்கு வர முடியுதா?” ஒருவன் லேசான போதை வாடையடிக்க இவர்களை
பார்த்தப்படியே திட்டிக்கொண்டே மணல் துகள்கள் காலை இடற தள்ளாடியபடி நடந்தான்.
ஆரம்பத்தில்
எல்லாம் இப்படி நடந்தால், விநயன் கோபப்படுவதும், சொன்னவனை அடிக்கப்பாய்வதும் அடிக்கடி
நடக்கும். காலப்போக்கில் இதெல்லாம் பழகிவிட, அமைதியாய் இருக்கக் கற்றுக்கொண்டான்.
ஆனபோதும் உதடுகள்
“ஏன் நீ தான் கட்டி விடுறது…” என முணுமுணுத்தன.
இன்னமும் மடியிலிருந்து தலையை எடுக்காமலேயே அவளைப்பார்த்துச்சொன்னான் “ஏதோ இவனுங்க
எல்லாம் யோக்கியம் மாதிரி?”
“ஏன்? அவர் கேட்டது
சரி தான? நாம பண்றது தப்பு தானே?” அவனை சீண்டி விடுவதற்கென்ற எள்ளல் தொனியில் கேள்வி
ஒன்றை உதிர்தாள் வாசுகி.
“என்ன தப்ப பண்ணீட்டோம்
அப்படி? காதலர்களுக்கான ஸ்பேஸ் இங்க கொடுக்கப்படல. இவனுங்க ப்ளாஸ்டிக்க பீச்சுல போடுவானுங்க,
கண்ட எடத்துல ஒண்ணுக்கடிப்பானுங்க, பஸ்ஸுல இருந்துகிட்டு மூஞ்சில எச்சி துப்புவானுங்க…
இதெல்லாம் இவனுங்க கலாச்சாரத்த கெடுக்காது. நாம தான் கெடுத்துட்டோமா?” மூச்சு விடாமல்
பேசியனவனை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் வாசுகி.
“பாவம், நாலு பேர்
கொழந்தைங்கள கூட்டிக்கிட்டு வர வேண்டாம்?” மேலும் சீண்டும் நினைப்பில் இரண்டு புருவங்களையும்
வில் போல் மேலே ஏற்றி கேட்டாள்.
அந்த சில வினாடி இடைவேளையில், அவள் முகத்தின் வனப்பை
ரசித்துக்கொண்டிருந்தவனாய் காணப்பட்ட விநயன் , கேள்வியால் இயக்கம் தடைபட்டு “ம்ம் லவ்
பண்றதுக்குன்னு ஒரு இடத்த கட்டி விடச்சொல்லு” என முணகினான். மீண்டும் அவன் கைகள் அவள்
இடையில் படர முயல,
“இதத்தான் சொன்னாங்க”
என்று தட்டிவிட்டாள். கோபமாய் மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்தவனை சமாதானப்படுத்தும்
முயற்சியாய், “அங்க பாரேன்” என அவனது முகவாயை பிடித்து திருப்பினாள்.
இரண்டு
குழந்தைகள் ஒரு மணல் வீட்டை, கோட்டையை சிறிது சிறிதாக கட்டியிருந்தார்கள். விருட்டென
வந்த ஒரு அலை அவர்கள் அரை மணி நேர உழைப்பை சட்டென கரைத்து விட்டு விழுந்து சென்று மறைந்தது.
ஒரு வினாடி திகைத்த அந்த குழந்தைகள், மீண்டும் மணலை அள்ளி அடுத்த வீட்டை கட்ட ஆரம்பித்திருந்தன.
கவனித்துப்பார்த்த
விநயன் பின் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டான். ரத்தச்சிகப்பு நிறத்திற்காய்
இன்னேரம் மாறியிருந்த வானத்தையும் அதில் கருங்கீற்றுக்களாய் தெரியும் பறவைகளையும் பார்த்துக்கொண்டிருந்தான்.
“இப்ப என்ன கோவம்
சாருக்கு?”
“தெரியாதாக்கும்…”
“இப்ப என்ன பண்ணினா
கோவம் போகும்?”
“தெரியாதாக்கும்”
வாசுகி மீண்டும் விநயனை மடியில் கிடத்த அவன் எதிர்ப்பேதும்
இன்றி சாய்ந்தான். வாசுகி மெல்ல குனிந்து தன் மெல்லிய இதழ்களை அவன் இதழ்களின் மீது
பதித்தாள். நெடு நாள் பசியெடுத்த வண்டு மலரை நுழைந்தது போல அவள் இதழை சுவைத்துக்கொண்டிருந்தான்
அவன். முதன் முதலில் அவன் முத்தமிடுவது எப்படி எனக்கேட்டு அவள் விழுந்து விழுந்து சிரித்தது
நினைவிற்கு வந்து பழிப்புக்காட்டியது.
“அய்யோ எம் பொண்ணே…
அய்யோ” என்ற குரல் அவன் காதில் விழவும் யாரோ வீசியெறிந்த மணல் துகள்கள் அவன் காதில்
விழுவதற்கும் சரியாய் இருந்தது.
விருட்டென வாசுகி எழுந்து நிற்க,
இவனும் எழுந்து நின்று காதிலும் உடையிலும் இருந்த மணல்களை தட்ட ஆரம்பித்தான். அதற்குள்ளாக
மணலை அள்ளிப்போட்டிருக்கும் என யூகிக்க்கூடிய வேகத்தில் வந்த ஒரு குண்டம்மா எதிரில்
நின்றவாறு இரைந்து கொண்டிருந்தாள். காதில் வாசுகி தன் அம்மா தான் அந்த குண்டு மாமி
என்றும், கூட இருப்பவர்கள் முறையே அப்பா, மற்றும்
தூரத்து சொந்த மாமா, மாமியென்றும் தெளிவித்தாள்.
“இப்படி என் மானத்த
வாங்குறாளே… வாடீ இங்க…” அந்த அம்மா மேலும் ஆத்திரம் வந்தவளாய் கத்திக்கொண்டே மணலில்
கஷ்ட்டப்பட்டு இவர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க, மழையில் நனைந்த கோழிக்குஞ்சு
தாய்க்கோழியின் அடியில் பதுங்குவதைப் போல அவன்
விரல்களை பிடித்து தோள்களுக்குப் பின்னால் பதுங்கினாள் வாசுகி.
“அய்ய்யோ… என்ன
குலமோ.. அவனோட போய் ஈஷிண்டு நிக்கறாளே…” சொல்லியபடியே குண்டம்மா இரண்டடி ஆக்க்ரோஷமாயும்
அதே நேரம் உடல் ஒத்துழைக்காத படியால் ஆடி அசைந்தும் இரண்டடி எடுத்து வைக்க., விநயன்
வாசுகியை காப்பாற்றும் விதமாய் அவளை ஒரு கையால் மறைத்துக்கொண்டே, இன்னொரு கையை குண்டம்மாவை
நோக்கி நீட்டினான்.
“ நாங்க ரெண்டு
பேரும் காதலிக்கறோம். இப்படி ஊர் பாக்கற மாதிரி கத்தாதீங்க. எதுவா இருந்தாலும் உக்காந்து
பேசலாம்”
“ஊர் பாக்கறது
இப்பத்தான் தெரியறதோ…” என ஏதோ சொல்ல வாயெடுத்த குண்டம்மாவை கையமர்த்தினார் வாசுகியின்
அப்பா என அவன் கிசுகிசுத்த மனிதர். “இப்ப நீ எங்க கூட வரப்போறியா இல்லியா?”
அவள் பதிலேதும்
சொல்லமலிருக்க விநயன் முந்திக்கொண்டு “எதுவாயிருந்தாலும் இங்கையே பேசலாம்” என்றான்.
“உன்கிட்ட பேச
என்ன டா இருக்கு, நாயே..” என்றவர் மீண்டும் வாசுகியை பார்த்து “வரப்போறியா இல்லியா?
இப்ப வரல நீ எப்பயும் இனி என் வீட்டுக்கு வரக்கூடாது” என்றார். குரலின் கட்டை இது தான்
கடைசி முறை என்பதை பறைசாற்றும் விதமாய், உச்ச ஸ்தாயில் அமைந்திருந்தது.
இதற்கும் வாசுகி பேசாமல் இருக்கவே மேலும்
சில மண் தூற்றல்களுடனும் அர்ச்சனைகளுடனும் கிளம்பிச்சென்றது குண்டம்மாவின் குடும்பம்.
வாசுகியின் கை இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தது. கண்களில் இருந்து பொது இடமெனக்கருதியோ
என்னவோ, கர்நாடகத்தண்ணீரைப் போல யோசித்து யோசித்து வழிந்து கொண்டிருந்ததது கண்ணீர்.
“ஏய்… வாசு… அழாத”
சமாதனப்படுத்த முயன்று தோற்வன் சற்று நேரம் மௌனமாய் அப்படியே நின்றான். நிமிடங்கள்
மௌனமாய் கழிந்தன. சற்று நேரம் மேலே பார்த்துக்கொண்டிருந்தவன், “கண்டுபிடித்துவிட்டேன்”
என்றான்.
மெல்ல தலையை அவன்
தோளில் இருந்து தூக்கி “என்ன?” என்றாள்.
“நிலாவில் தண்ணீர்
இருக்கிறது” என்றான்.
சோகத்திலிருந்து
நீங்கி சற்றே ஆச்சரியப்பட்டவளாய் “எப்படி?” என்றாள்.
“இதோ” என்றவன்
அவள் கண்ணிலிருந்து வழிந்த நீரை ஆட்காட்டி விரலால் சுண்டி விட்டான்.
குறு நகை ஒன்று
மெல்ல உதிர்ந்தது.
சிரித்தாள், சிரித்தான். சிரித்தார்கள்.
இருவருமாய் திரும்பி
கடலின் பக்கம் பார்த்தார்கள். அந்தக்குழந்தைகள் மீண்டும் தாங்கள் கட்டிய கோட்டையின்
அருகில் நின்று அலைக்காய் காத்துக்கொண்டிருந்தன.
Subscribe to:
Posts (Atom)