உப்பு வாசம் கலந்த பழக்கப்பட்ட
காற்று முகத்தில் அறைந்து முடியை அலைந்து விட்டு சென்றது. செருப்புகளை பைக்கினருகில்
கழட்டி விட்டு விட்டு, வாசுகியின் கையை லேசாகப்பற்றியபடி மணலில் ஏறி நடக்கத்தொடங்கினான்
விநயன். வாசுகி, விரல்களை அவன் உள்ளங்கையில் நிரடிக்கொண்டே நடந்தாள். புதிதாய் உடைத்துத்
துருவிய தேங்காய் என குறுகுறுப்பூட்டியது அவள் விரல்கள்.
இருவரது கைகளும் கண்ணாம்மூச்சி ஆடிக்கொண்டே வந்தன. வாசுகி, அவன் தோள் மீது சாய்வதும் நகர்வதுமாக இருந்தாள். மண்ணில் அவர்கள் கால்கள் புதைவதும் எழுவதும் ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம் போல ஒரு ஒத்திசைவை கொண்டிருந்தன.
வானம் வாசுகியின்
மேனியை பிரதிபலிப்பதாய் வெளிர் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது. வானத்தை பார்த்துக் கொண்டே நடந்த விநயனை தன் முகம் நோக்கித்திருப்பினாள் வாசுகி.
“ம்ம்…”
“இன்னியோட ரெண்டு வருஷமாச்சு”
“ம்ம்…”
“இன்னமும் ரெண்டு வாரத்துல என்ன இன்னோருத்தன் கைல புடிச்சுக்கொடுத்துருவாங்க,
அப்பறம் இதே பீச்சுல ம்ம் ம்ம்ன்னு பினாத்திண்டு அலையப்போறேள்”
சிரித்துக்கொண்டான்
விநயன். அவளது செயற்கையான வழக்குக்கென யூகித்துக்கொண்டாள்.
“அப்படி விட்டுடுவனா என் செல்லத்த? இப்ப கூட நீ சரின்னு
சொன்னா உங்க அப்பா கிட்ட பேசுறேன்”.
இதற்குள்
கடல் சொற்ப தொலைவில் வந்திருக்க,
உட்கார தோதான இடத்தை நான்கு கண்களும் பிரிந்து தேடின. சுற்றிலும் மணலைக் காட்டிலும் அதிகமாய் காதல் ஜோடிகள் அமர்ந்திருந்தன.
இந்தியாவில் மக்கள் தொகை பெருகியதற்காக மீண்டும் ஒருமுறை வருத்தப்பட்டான்
விநயன். வாசுகியின் கையை இன்னமும் இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தான்.
வாசுகி அவனுக்கு கிடைத்த ஒரு பரிசு. அவனுக்கு கிடைத்த
ஒரே பரிசு. சிறு வயது முதல் தாய் தந்தை முகத்தைக் கூட பார்க்காமல் அநாதை பட்டம் சூடி வளர்ந்தவனுக்கு அன்பின் மொத்த உருவாய் கிடைத்தாள் அவள்.
இதற்குள் ஒரு ஜோடி மணலை தட்டிவிட்டபடியே
ஒரு நிலப்பரப்பை காலி செய்ய, விநயனும் வாசுகியும் அந்த இடத்தை
தற்காலிகமாக நிரப்பினர். வாசுகி கையில் மணலை குவித்துப் பார்ப்பதும்,
பின் அதை தன் விரல்களினூடாக அருவி போல் கொட்டுவதுமாக இருந்தாள்.
விநயன் கழுத்தை முடிந்தவாக்கிலெல்லாம் திருப்பி கண்ணில் பட்டவர்களை கவனித்துக்கொண்டிருந்தான்.
அவன் கவனத்தை கலைக்கும் விதமாக
அவன் காது மடல்களை அவளது உஷ்ண சுவாசம் தீண்டியது. முகத்தை திருப்பி
அந்த சுகத்தை இழக்க விரும்பாதவனாய், அவள் மடி மீது வைத்திருந்த
தன் தலையை திருப்பாமலேயே “ம்ம்ம்ம்…” என்றான்.
“வந்ததுல இருந்து உம்முகொட்டிக்கிட்டே இருக்கீங்க. வேற
எதுவுமே பேசல, இப்ப பேசப்போறீங்களா? இல்ல
நான் போகட்டா?” போலியாய் கோபப்பட்டுக்கொண்டே அவன் மடி வைத்திருந்த
தொடையை மெல்ல அசைத்தாள் வாசுகி.
“எத்தனை காதல் ஜோடிகள் பாத்தியா?” சம்மந்தம் இல்லாமல்
ஒரு கேள்வியை கேட்ட அவனை பொய்க்கோபம் மாறாமல் பார்த்தாள் வாசுகி.
“நம்ம கதைய கேக்கவே யாரும் இல்ல… இதுல ஊர்ல இருக்கறவங்க
கத நமக்கெதுக்கு?”
“இதுல எல்லாருமே நம்மல மாதிரி காதலிக்கறவங்கன்னு சொல்ல முடியாது. கள்ளக்காதல் ஜோடிங்க கூட நிறைய இருக்காங்க. எங்க ஆபிஸ்
ல சுமதி இருக்க்காள்ள….” சொல்லிக்கொண்டே கொண்டே போனவனை அசுவாரசியமாய்
பார்த்தாள் வாசுகி. உரையாடலின் இடையிலும் அவன் முடிகளை கோதிக்கொண்டிருந்த
தன் விரல்களை நிறுத்தினாள் வாசுகி.
“எனக்கென்னவோ அந்த மும்பை மாபிள்ளைக்குத்தான் வாசுகிய கட்டிக்கற யோகமோன்னு தோணுது”
“அப்ப நான் தப்பிச்சேனா?” கேட்டுக்கொண்டே தன் விரல்களை
அவள் இடையில் படர விட்டான் விநயன். பேசுவதை ஒரு வினாடி நிறுத்திவிட்டு
சொக்கிக்கிடந்த வாசுகி, பின் சுதாரித்து அவன் விரல்களை
கிள்ளி அங்கிருந்து எடுத்து விட்டாள்.
“சரி, கிளம்பு
போய் மிஸ்டர் சந்திரமௌலிய பார்த்து இப்பவே பொண்ணு கேக்கறேன்”
“ஆமாம் இவரு மௌன
ராகம் கார்த்திக்…. தம்பி எங்கப்பா தளபதி படத்துல வர ஷோபனா அப்பா கேரக்ட்டர், முடிவு
மாற மாட்டார்.”
“பாத்துக்கலாம்”
எல்லா ஆண்களும் சொல்லும் அதே அசால்ட்டான அபிநயத்தில் சொன்னான். பேதைகளுக்கு தைரியமூட்டுவதாய்
எண்ணி கற்காலத்திலிருந்து சொல்லப்படும் வார்த்தை அது.
“இதுங்களுக்கெல்லாம்
வேற எடமா கெடைக்கல, இங்க வந்து தான் இவனுங்க காதல வளக்கணுமாம், கொழந்த குட்டிய கூட்டிக்கு வர முடியுதா?” ஒருவன் லேசான போதை வாடையடிக்க இவர்களை
பார்த்தப்படியே திட்டிக்கொண்டே மணல் துகள்கள் காலை இடற தள்ளாடியபடி நடந்தான்.
ஆரம்பத்தில்
எல்லாம் இப்படி நடந்தால், விநயன் கோபப்படுவதும், சொன்னவனை அடிக்கப்பாய்வதும் அடிக்கடி
நடக்கும். காலப்போக்கில் இதெல்லாம் பழகிவிட, அமைதியாய் இருக்கக் கற்றுக்கொண்டான்.
ஆனபோதும் உதடுகள்
“ஏன் நீ தான் கட்டி விடுறது…” என முணுமுணுத்தன.
இன்னமும் மடியிலிருந்து தலையை எடுக்காமலேயே அவளைப்பார்த்துச்சொன்னான் “ஏதோ இவனுங்க
எல்லாம் யோக்கியம் மாதிரி?”
“ஏன்? அவர் கேட்டது
சரி தான? நாம பண்றது தப்பு தானே?” அவனை சீண்டி விடுவதற்கென்ற எள்ளல் தொனியில் கேள்வி
ஒன்றை உதிர்தாள் வாசுகி.
“என்ன தப்ப பண்ணீட்டோம்
அப்படி? காதலர்களுக்கான ஸ்பேஸ் இங்க கொடுக்கப்படல. இவனுங்க ப்ளாஸ்டிக்க பீச்சுல போடுவானுங்க,
கண்ட எடத்துல ஒண்ணுக்கடிப்பானுங்க, பஸ்ஸுல இருந்துகிட்டு மூஞ்சில எச்சி துப்புவானுங்க…
இதெல்லாம் இவனுங்க கலாச்சாரத்த கெடுக்காது. நாம தான் கெடுத்துட்டோமா?” மூச்சு விடாமல்
பேசியனவனை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் வாசுகி.
“பாவம், நாலு பேர்
கொழந்தைங்கள கூட்டிக்கிட்டு வர வேண்டாம்?” மேலும் சீண்டும் நினைப்பில் இரண்டு புருவங்களையும்
வில் போல் மேலே ஏற்றி கேட்டாள்.
அந்த சில வினாடி இடைவேளையில், அவள் முகத்தின் வனப்பை
ரசித்துக்கொண்டிருந்தவனாய் காணப்பட்ட விநயன் , கேள்வியால் இயக்கம் தடைபட்டு “ம்ம் லவ்
பண்றதுக்குன்னு ஒரு இடத்த கட்டி விடச்சொல்லு” என முணகினான். மீண்டும் அவன் கைகள் அவள்
இடையில் படர முயல,
“இதத்தான் சொன்னாங்க”
என்று தட்டிவிட்டாள். கோபமாய் மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்தவனை சமாதானப்படுத்தும்
முயற்சியாய், “அங்க பாரேன்” என அவனது முகவாயை பிடித்து திருப்பினாள்.
இரண்டு
குழந்தைகள் ஒரு மணல் வீட்டை, கோட்டையை சிறிது சிறிதாக கட்டியிருந்தார்கள். விருட்டென
வந்த ஒரு அலை அவர்கள் அரை மணி நேர உழைப்பை சட்டென கரைத்து விட்டு விழுந்து சென்று மறைந்தது.
ஒரு வினாடி திகைத்த அந்த குழந்தைகள், மீண்டும் மணலை அள்ளி அடுத்த வீட்டை கட்ட ஆரம்பித்திருந்தன.
கவனித்துப்பார்த்த
விநயன் பின் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டான். ரத்தச்சிகப்பு நிறத்திற்காய்
இன்னேரம் மாறியிருந்த வானத்தையும் அதில் கருங்கீற்றுக்களாய் தெரியும் பறவைகளையும் பார்த்துக்கொண்டிருந்தான்.
“இப்ப என்ன கோவம்
சாருக்கு?”
“தெரியாதாக்கும்…”
“இப்ப என்ன பண்ணினா
கோவம் போகும்?”
“தெரியாதாக்கும்”
வாசுகி மீண்டும் விநயனை மடியில் கிடத்த அவன் எதிர்ப்பேதும்
இன்றி சாய்ந்தான். வாசுகி மெல்ல குனிந்து தன் மெல்லிய இதழ்களை அவன் இதழ்களின் மீது
பதித்தாள். நெடு நாள் பசியெடுத்த வண்டு மலரை நுழைந்தது போல அவள் இதழை சுவைத்துக்கொண்டிருந்தான்
அவன். முதன் முதலில் அவன் முத்தமிடுவது எப்படி எனக்கேட்டு அவள் விழுந்து விழுந்து சிரித்தது
நினைவிற்கு வந்து பழிப்புக்காட்டியது.
“அய்யோ எம் பொண்ணே…
அய்யோ” என்ற குரல் அவன் காதில் விழவும் யாரோ வீசியெறிந்த மணல் துகள்கள் அவன் காதில்
விழுவதற்கும் சரியாய் இருந்தது.
விருட்டென வாசுகி எழுந்து நிற்க,
இவனும் எழுந்து நின்று காதிலும் உடையிலும் இருந்த மணல்களை தட்ட ஆரம்பித்தான். அதற்குள்ளாக
மணலை அள்ளிப்போட்டிருக்கும் என யூகிக்க்கூடிய வேகத்தில் வந்த ஒரு குண்டம்மா எதிரில்
நின்றவாறு இரைந்து கொண்டிருந்தாள். காதில் வாசுகி தன் அம்மா தான் அந்த குண்டு மாமி
என்றும், கூட இருப்பவர்கள் முறையே அப்பா, மற்றும்
தூரத்து சொந்த மாமா, மாமியென்றும் தெளிவித்தாள்.
“இப்படி என் மானத்த
வாங்குறாளே… வாடீ இங்க…” அந்த அம்மா மேலும் ஆத்திரம் வந்தவளாய் கத்திக்கொண்டே மணலில்
கஷ்ட்டப்பட்டு இவர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க, மழையில் நனைந்த கோழிக்குஞ்சு
தாய்க்கோழியின் அடியில் பதுங்குவதைப் போல அவன்
விரல்களை பிடித்து தோள்களுக்குப் பின்னால் பதுங்கினாள் வாசுகி.
“அய்ய்யோ… என்ன
குலமோ.. அவனோட போய் ஈஷிண்டு நிக்கறாளே…” சொல்லியபடியே குண்டம்மா இரண்டடி ஆக்க்ரோஷமாயும்
அதே நேரம் உடல் ஒத்துழைக்காத படியால் ஆடி அசைந்தும் இரண்டடி எடுத்து வைக்க., விநயன்
வாசுகியை காப்பாற்றும் விதமாய் அவளை ஒரு கையால் மறைத்துக்கொண்டே, இன்னொரு கையை குண்டம்மாவை
நோக்கி நீட்டினான்.
“ நாங்க ரெண்டு
பேரும் காதலிக்கறோம். இப்படி ஊர் பாக்கற மாதிரி கத்தாதீங்க. எதுவா இருந்தாலும் உக்காந்து
பேசலாம்”
“ஊர் பாக்கறது
இப்பத்தான் தெரியறதோ…” என ஏதோ சொல்ல வாயெடுத்த குண்டம்மாவை கையமர்த்தினார் வாசுகியின்
அப்பா என அவன் கிசுகிசுத்த மனிதர். “இப்ப நீ எங்க கூட வரப்போறியா இல்லியா?”
அவள் பதிலேதும்
சொல்லமலிருக்க விநயன் முந்திக்கொண்டு “எதுவாயிருந்தாலும் இங்கையே பேசலாம்” என்றான்.
“உன்கிட்ட பேச
என்ன டா இருக்கு, நாயே..” என்றவர் மீண்டும் வாசுகியை பார்த்து “வரப்போறியா இல்லியா?
இப்ப வரல நீ எப்பயும் இனி என் வீட்டுக்கு வரக்கூடாது” என்றார். குரலின் கட்டை இது தான்
கடைசி முறை என்பதை பறைசாற்றும் விதமாய், உச்ச ஸ்தாயில் அமைந்திருந்தது.
இதற்கும் வாசுகி பேசாமல் இருக்கவே மேலும்
சில மண் தூற்றல்களுடனும் அர்ச்சனைகளுடனும் கிளம்பிச்சென்றது குண்டம்மாவின் குடும்பம்.
வாசுகியின் கை இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தது. கண்களில் இருந்து பொது இடமெனக்கருதியோ
என்னவோ, கர்நாடகத்தண்ணீரைப் போல யோசித்து யோசித்து வழிந்து கொண்டிருந்ததது கண்ணீர்.
“ஏய்… வாசு… அழாத”
சமாதனப்படுத்த முயன்று தோற்வன் சற்று நேரம் மௌனமாய் அப்படியே நின்றான். நிமிடங்கள்
மௌனமாய் கழிந்தன. சற்று நேரம் மேலே பார்த்துக்கொண்டிருந்தவன், “கண்டுபிடித்துவிட்டேன்”
என்றான்.
மெல்ல தலையை அவன்
தோளில் இருந்து தூக்கி “என்ன?” என்றாள்.
“நிலாவில் தண்ணீர்
இருக்கிறது” என்றான்.
சோகத்திலிருந்து
நீங்கி சற்றே ஆச்சரியப்பட்டவளாய் “எப்படி?” என்றாள்.
“இதோ” என்றவன்
அவள் கண்ணிலிருந்து வழிந்த நீரை ஆட்காட்டி விரலால் சுண்டி விட்டான்.
குறு நகை ஒன்று
மெல்ல உதிர்ந்தது.
சிரித்தாள், சிரித்தான். சிரித்தார்கள்.
இருவருமாய் திரும்பி
கடலின் பக்கம் பார்த்தார்கள். அந்தக்குழந்தைகள் மீண்டும் தாங்கள் கட்டிய கோட்டையின்
அருகில் நின்று அலைக்காய் காத்துக்கொண்டிருந்தன.
பின்னிட்டிங்க..., ஒரே நாள்ள பிரச்சனை முடிஞ்சது
ReplyDelete