Flipkart

Amazon

Amazon

Saturday, December 22, 2012

பாலியல் வன்முறைகளும் பசப்பல்களும்!


                ஆறு நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாக்கப்படும் தேசத்தில், எங்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வியாபித்திருக்கும் போது, டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட/பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மட்டும் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதும் , எல்லோரும் கிளர்ந்து எழுவதும் அல்லது எழுவதாக ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே, நிகழ்ந்தது அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவம் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. மாறி மாறி கற்பழித்த பின், அந்த பெண்ணின் பிறப்புறுப்பிற்குள் இரும்பு கம்பியை சொருகி உள்ளனர் எச்சிக்கலை நாய்கள். அந்தப்பெண் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவரது குடல் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது. இது போன்ற ஐந்து லட்சம் நிகழ்வுகள் உள்ளன. இவற்றில் கேஸ் பதிவு செய்யப்பட்டவை, அவற்றின் தண்டனை பெற்றவர்கள் வெகு சொற்மே.

              இவ்விஷயத்தை ஒரு நாள் முழுக்க ஒளிபரப்பிய மீடியாக்களின் எழுச்சி வெறும் விளம்பரம் தேடும் சென்ஷேஷன் மட்டுமே. இன்றைய நிலையில் மீடியாக்களின் கடமை செய்தி சென்று சேர்ப்பது என்பதைத்தாண்டி பணம் ஈட்டுவதுமாகி விட்டது. மீடியா இப்போது ஒரு “தொழில்”. அவர்களை நொந்து பயனில்லை. பொது மக்களின் இந்தக்கோபம் வெறும் அந்த கணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு தான். குணமான உடன் வேலை தருகிறேன் என்ற பி.ஜே.பியின் அறிவிப்பும், சோனியா சென்று பார்த்ததும் வெறும் அரசியல் அன்றி வேறில்லை.

            முதலில் இந்த மன நிலை எப்படி நமக்கு வந்தது? ஏன் “மறந்து கொண்டிருப்பது” மக்கள் இயல்பாக மாறிப்போனது?  கொஞ்சம் வரலாற்றை பின் நோக்கி சென்று பார்த்தால், எந்த ஒரு வரலாற்று ஆய்வாளனுக்கும் இந்தியா ஒரு தேசமாக அமைந்தது வியப்பையே அளிக்கும். ஒரு தேசத்திற்கான அடிப்படையை வரலாற்றியலாளர்களின் வழி ஆராய்ந்தால் அது நிலப்பரப்பு, மொழி, மக்கள் மன நிலை, கலாச்சாரம் என பல்வேறு தளங்களில் ஒத்திசைவை கொண்டிருக்கும். ஆனால், இந்தியாவில் இப்படிப்பட்ட ஒத்திசைவை காண முடியாத வியப்பில் தான் இந்தியாவை “சப்-காண்டினென்ட்” என்றும் “வேற்றுமையில் ஒற்றுமை” காணும் தேசம் என்றும் போற்றுகிறோம். இதற்கான காரணம் ஆங்கிலேயர்கள் என்பதோடு நிறுத்திக்கொண்டு, இன்றைய நிலைக்கு வருவோம். நூறு கோடி மக்கள் உள்ள ஒரு தேசம். நிலப்பரப்பால், மொழியால் பல்வேறு விதமான பிரச்சனைகளை தினமும் எதிர்கொள்ளும் மக்கள். தினம் தினம் புதிதாக ஒரு பிரச்சனை. மக்களின் இயல்பாக மறதி மாறிப்போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணி. தினமும் கிளர்ந்தெழும் புதிய பிரச்சனைகள், பழைய பிரச்சனைகளை மறக்கடிக்கின்றன.

               சரி மீண்டும், டெல்லி விவகாரத்திற்கு வருவோம். ஐரோம் ஷர்மிள், மணிப்பூர் பெண்கள், இலங்கைப் போரில் நிகழ்ந்த பாலியல் குற்றங்கள், தினம் தினம் இதையே அனுபவிக்கும் பழங்குடியினப்பெண்கள் என எல்லாவற்றையும் கடந்து விட்டு, டெல்லியை பற்றி மட்டும் பேசுவது எந்த வகையிலும் அநியாயமே. Castration பண்ண வேண்டும், தூக்கில் போட வேண்டும் என்ற கருத்துக்கள் சற்று ஆழ்ந்து யோசித்தால் கொஞ்சம் அதிகமாக தோன்றினாலும், இது போன்ற தண்டனைகள் மற்றவர்களுக்கு பயம் வர வேண்டும் என்ற நோக்கிலேயே முன் வைக்கப்படுகின்றன. இந்தியாவில் இந்தச்சட்டமெல்லாம் இப்போதைக்கு வராது என கற்பூரத்தின் மேல் சத்தியம் செய்ய நான் தயார். என்ன தான் குடிமக்கள் இந்தப்பிரச்சனையை உணர்ச்சிப்பூர்வமாக அணுகினாலும், அரசோ நீதிமன்றமோ சட்டதிற்குட்பட்டே எதையும் செய்ய முடியும். தண்டனைகள் கடுமாயானால் தவறுகள் குறையும் என்பது சரிதான். ஆனால், இங்கே இருக்கிற சட்டப்படி தண்டனை வழங்கவே ஆண்டுக்கணக்கில் ஆகிறதே. இப்படி ஒரு Castration/Sentence to death தண்டணை இருந்தால், அது இது கருணை மனு என தண்டனை கிடைப்பதற்குள் குற்றவாளி போயே சேர்ந்துவிடுவானே. இதே போல, இன்று டெல்லி பெண்ணிற்கு நிகழ்ந்த அநியாத்திற்கு பதறுபவர்கள், தினமும் நிகழும் எந்த ஒரு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட போதும் இந்த அளவு பொங்கியதாக தெரியவில்லை. இதற்கு குறிப்பிடத்தகுந்த சில காரணங்கள், நடந்தது டெல்லி என்பதும் அந்த சம்பத்திற்கு மீடியா முக்கியத்துவம் கொடுத்து விவரித்து பரிதாபத்தை ஏற்படுத்தியதுமே ஆகும். இதை தவறென்று சொல்ல முடியாதெனினும், இந்த ஒரு விஷயத்தை கையிலேடுத்த மீடியாக்கள் தினமும் சொல்லொண்ணா துயரில் சிக்கித்தவிக்ககும் பல பெண்களை ஏன் கிஞ்சித்தேனும் பார்க்கவில்லை என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை. மற்ற சம்பவங்களெல்லாம் வெறும் பெட்டி செய்தியோடு முடிந்து போய், பெட்டி கேசாக அது ஆகியும் விடுகிறது. வெளியில் தெரியாமலேயே போய்விட்ட கொடுமைகள் ஏராளம்.



                இவை ஒரு புறம் இருக்க, ராம்சிங் மன நலமற்றவன் போல் நடித்ததும், பின் கலாச்சார பாதுகாவல வேடம் பூணுவதும் ஆபத்தான ஒரு முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இந்த நிலையிலும் கூட அந்தப்பெண் இரவில் வெளியே சென்றது தவறு, பெண்களின் உடை ஆபாசமாக இருப்பாதால் கற்பழிப்புகள் நிகழ்கின்றன என்ற கருத்துக்கள் பிற்போக்குத்தனமானவை மட்டுமல்ல, பெண்களின் அடிப்படை உரிமையே கேள்விக்குள்ளாக்குபவை.

                இன்று நாகையில் ஒரு நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறாள். நேற்று திருச்சந்தூரில் ஒரு பதிமூன்று வயது மாணவி. இதற்கெல்லாமும் உடை தான் காரணமா சொல்லுங்கள்?.

            இதற்கான தீர்வுகளையும், இனி வரும் காலத்தில் நிகழப்போவதையும் அலசுவோம். பிற்போக்குத்தனம் பேசுபவர்களுக்கு கசக்கக்கூடும் ஆன போதிலும் காலத்தின் கட்டாயமாக இனி நான் குறிப்பிடுபவை நிகழ்ந்தே தீரும்.

1.பாலியல் கல்வி. ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவின் தன்மையையும் மனிதனின் வளர்ச்சி நிலைகளையும் முன்னிறுத்தி பாலியல் கல்வி அளிக்கப்பட வேண்டும். இது குறித்த தனி முழு கட்டுரை, இங்கே.

2.   Value based Education. இது மிக முக்கியமான ஒன்று. ஆன்மாவின் சாரம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்று தான் என்பதும், கூடு மட்டுமே வேறுபட்டுள்ளது என்பதும், சிறு குழந்தை முதலே ஆண்/பெண் என இருவர் மனதிலும் விதைக்கப்பட வேண்டும். பரஸ்பர மரியாதையை ஏற்படுத்த வேண்டும். பெண்ணை தன் சுகங்களுக்கான இச்சைக்குரிய பொருளாய் பார்ப்பதிலிருந்து விடுபட்டு, தன்னைப்போலவே ரத்தமும், சதையும் , ஆசையும் ,உணர்வும், சோகமும், சந்தோஷமும், கருத்துகளும் கொண்ட ஒரு சக ஆன்மா என்ற உணர்ச்சியை ஆண் குழந்தைகள் மனதில் விதைத்தல் வேண்டும். அதே நேரத்தில், பெண்களுக்கும் பாலியல் கல்வியும், ஆண்கள் உலகை பற்றிய அறிமுகமும் தேவை.

3.   சமூகச்சூழலில் பெண்களும் ஆண்களும் கலந்து பழகும் ஒரு நேர்மையான சூழல் வளர வேண்டும். சிறு வயது முதலே ஆண்/பெண் வகுப்பறை முதல் பேருந்து வரை எங்கும் தொடர்கிறது. வகுப்பறையிலும் பேருந்திலும் முன் பின் அறியாத ஆணும் பெண்ணும் சகஜமாய் ஒரே சீட்டில் அமர்ந்து பயணிக்கூடிய முதிர்ச்சி பெற்ற சமூகம் உருவாக வேண்டும்.

4.   தனக்கு சமமாக ஒரு பெண்ணை மதிக்கும் பண்பு, குழந்தைப்பருவத்தில் தொடங்குவதற்கு தன் தந்தை தன் தாயை நடத்தும் விதம் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண் தான் வீட்டின் “தல” என்ற மனோபாவத்தில் ஊறிப்போய்விட்ட நாம், இவ்விடயத்தில் மாற சற்று காலம் ஆகும்.

5.   பெண்களுக்கான உடை விஷயமோ வேறு எதுவோ கட்டுப்பாடுகள் கொண்டு வரும் மூடத்தனத்தை கண்டிப்பாக ஏற்க முடியாது. முக நூலில், ரவி பிரகாஷ் போன்ற நான் அதிகம் மதிக்கும் நண்பர்கள் சிலர் இப்போதைக்கான வழி “துஷ்ட்டனைக்கண்டால் தூர விலகுவது” என்ற ரீதியில் பெண்களுக்கான பாதுகாப்பு உத்திகளை சொல்வதாக, இரவில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம் என்ற ரீதியில் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். என்னால் இந்த கருத்துக்களை முழுமையாக ஏற்கவோ மறுக்கவோ இயலவில்லை. ஏன் எனில், நிதர்சனத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. முட்கள் தூவட்ட பாதை ஒன்றை கடக்க நேரும் போது, செருப்பில்லாதற்காக நம்மை நொந்து கொண்டே, முட்களை தூவியவனையும் அதை அப்படியே விட்டிருப்பனையும் சபிக்கலாமே அன்றி, முட்களின் மேல் வீம்பாக நடக்கலாகாது. இவ்வழி நின்று, அந்த கருத்தாக்கங்களை ஆராய்ந்தாலும் கூட, முட்களை என்றுமே நீக்காமல் போய் விடுவோமோ என்ற பயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பாதுகாப்பு கருதி சொல்லப்படும் ஒரு விஷயம் பெண்களின் வளர்ச்சிக்கு, நிரந்தர முட்டுக்கட்டையாக மாறி விடக்கூடாது. இரவில் பெண்கள் நடமாடும் அளவிற்கு பாதுகாப்பான ஒரு நாட்டை உருவாக்குவது எத்தனை வருடங்களுக்குத்தான் கனவாகவே இருக்கும்?

6.   விளையாடும் போது “இதை” அணிந்து கொண்டு விளையாடு என்று சொன்னது ஒரு வகை முட்டாள்தனமென்றால், இதை அணிந்து கொண்டு ரோட்டில் நட என்பது இன்னொரு வகை முட்டாள்தனம். முட்டாள்தனங்களில் எந்த மதமும் ஒன்றுக்கொண்று சலித்தது இல்லை.

7.   “ங்கோ” என ஆரம்பித்து வார்த்தை ரீதியாக தாக்கும் போது கூட, பெண்களை மையமிட்ட தாக்குதலே, ஆண்களில் மனதில் எழுகிறது. இந்த பிம்பமும் Value based education மூலம் உடைக்கப்பட வேண்டும்.

8.   விரும்புகிறீகளோ இல்லையோ, இன்னமும் ஒரே நூற்றாண்டில், பாலியல் சுதந்திரம் இந்தியாவில் நிலவும். நினைத்த ஆண்/பெண்ணுடன் உறவு கொள்ளுதல் சகஜமாகும். சூமுகத்தின் பல மட்டங்களில் இப்போதே நிலவும் இந்த நிலை, மேற்கத்திய கலாச்சார தாக்கம் நிறைந்த வேலை செய்பவர்களிடம் நிச்சயம் பரவலாகும். ஸ்ட்ரெஸ்சை போக்க வேறு வழி தெரியல என்ற வாதம் முன் வைக்கப்படும்.

9.   பாலியல் தாக்குதல்களை பல்வேறு நிலைகளில் காண வேண்டும். பழங்குடியின பெண்களிடம் நிகழ்த்தபடும் பாலியல் வன்முறைகள், பாலியல் ரீதியில் சுரண்டப்பட்ட தலித் பெண்கள் போன்றவர்களின் பிரச்சனைகள் மேற்கண்ட எவற்றோடும் தொடர்பு படுத்த முடியாத ஒன்று. இவற்றிகான ஒரே தீர்வு, அம்மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது தான். அதே போல, வக்கிர மன நிலை பிடித்தவர்களால், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்ப்டும் குழந்தைகளை காப்பற்றுவதும் அவர்களுக்கு அளிப்படும் பாலியல் கல்வியை பொறுத்து தான்.

10. இந்த விடயம் என்றில்லாமல் பொதுவாகவே இந்திய நீதித்துறை படு வேகம். தாமப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதை நினைவில் கொண்டு, இத்தனை பெரிய , கலாச்சார-மொழி வேறுபாடுகள் கொண்ட நாட்டுக்கு ஏதுவாய் நீதிமன்றங்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். ஓயாமல் வாய்தா கொடுக்கும் வாய்ப்புகள் மறு பரிசீலணை செய்யப்பட வேண்டும்.

                 கலாச்சாரம் என்ற போலிப்போர்வை போத்திக்கொண்டு இன்னமும் முடை நாற்றமடிக்கும் கழிவுகளை அப்போர்வையினுள்ளேயே கழித்துக்கொண்டு கிடக்கத்தான் எனக்கு ஆசை என நீங்கள் சொன்னால், உங்களை அந்த கலா மாஸ்ட்டாரால் கூட காப்பற்ற முடியாது.

3 comments:

  1. well said........ur composition towards the problem is so nice and this should be followed

    ReplyDelete
  2. நீங்க உங்களோட கருத்துக்களை ஆழமா பதிவு செஞ்சுருக்கிங்க, நல்ல விஷயம், ஆனா இந்த பிரச்சனை மட்டுமில்லாம நம்ம தேசத்துல மலிஞ்சு போய் இருக்க எல்லா விதமான குற்றங்களும் ஒன்னுக்கொன்னு பினைஞ்சு கிடக்கு, அதை பத்தி தெளிவா விளக்கி, அதுக்கான தீர்வையும் எழுதுனா நல்லாருக்கும், நீங்க எழுதறிங்களா? இல்லை நான் எழுதவா? ஏன்னா நான் என்ன எழுதனும்னு யோசிக்கறனோ அதை எனக்கு முன்னாடி நீங்க எழுதிடறிங்க, உங்க எழுத்து அளவுக்கு என்னோடது கூர்மை இல்லை, அதான் கேட்டேன்

    ReplyDelete
  3. பின்னி பிணைஞ்சு - ஜாதி ரீதியான தாக்குதல்கள், தலித்/பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்கள் அவற்றின் வரலாறு எல்லாம் பலரால் எழுதப்பட்ட புத்தகங்கள். அதை ஒரு பதிவில் அடக்கி விட முடியாது.

    அதற்கான தீர்வை எழுதலாம். நீங்க எழுதுங்களேன். எனக்கு கொஞ்சம் படிக்க ஆசை!

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..