Flipkart

Amazon

Amazon

Wednesday, December 12, 2012

மண், மரம், இன்ஜினியர்கள்


                     ஏப்ரல் மே மாத செய்தித்தாள்களை திறந்தால், பாரளுமன்ற ஒத்திவைப்பு, தண்ணீர் தர அக்கம்பக்க மாநிலங்கள் மறுப்பு, விவசாயிகள் தற்கொலை, நாராயணசாமி பேட்டிகள், ஆண்மை தரவல்ல டாக்ட்டரின் விஜய விபரங்களோடு கூடவே குவியலாய் தென்படும் “ஆள் பிடிக்கும் விளம்பரங்கள்”. ஆறாவது படிக்கும் அரை நிஜார் அணிந்த சிறுவன் முதல், இன்ஜினியரிங்க் முடித்து வேலை கிடைக்காமல் வீட்டிலிருக்கும் இளைஞன் வரை எல்லாரையும் தூற்ற ஏதுவாய் அமைந்து விடும் இவ்விளம்பரங்கள் தென்படும் வேளையில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வந்துவிட்டிருக்கும்.

                    ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் “அப்பவே ஒழுங்க படிச்சிருந்தா” “பாத்துக்க, இது போட்டி உலகம்” போன்ற இன்சொற்களின் கோர்வை ஓசையையும், வாஞ்சை பூத்த கொஞ்சல் மொழிகளையும் கேட்க இயலும். இரண்டொரு நாளில் மறந்து போகப்போகிற முகங்களை காட்டி பில் கேட்சிடம் வேலைக்கு சேரும் கனவு இளம் மூளைகளில் விதைக்கப்பட்டும், திணிக்கப்பட்டும் அடுத்த தலைமுறை தயாரிக்கப்படும் நேரம்.

                   வியாபாரத்தின் இன்னல்கள் தெரிந்தவர்கள், விவசாயத்தின் வருங்காலம் அறிந்தோர், “பாதுகாப்பான பகுதியிலேயே வாழ்ந்து பழகிய” ஏனைய மிடில் க்ளாஸ் பெருமக்கள் அனைவரும் அடுத்த தலைமுறை நிச்சயம் ஒரு ஒயிட் காலர் ஜாப்பை கைக்கொள்ளுதலையே விரும்புகிறார்கள். இதில் பருவம் எய்திய காலம் தொடங்கி, தடிமான நூல்களோடு மல்லுக்கட்டிய சிறுவர்,சிறுமிகளைத் தவிர ஏனையோருக்கு பொறியியல் கல்லூரிகளை மார்கெட் போன நடிகையாய் தாராளமாக திறந்து வைத்து காத்திருக்கிறது தமிழ்நாடு.

              தெருவில் மற்றவர்கள் கில்லியோ கிரிக்கெட்டோ ஆடுகையில் தடிமனான புத்தகங்களோடு போராடி ஐஐடியில் நுழைந்த ஒரு சிலரைத்தவிர மீதி எல்லோருக்குமாக சேர்த்து அவதரித்த கல்வித்தந்தைகளின் மூலம் கட்டப்படுகிறது பந்தயக்குதிரையின் கண். எல்.கே.ஜீ சீட்டுக்கு பதினேழு லட்சம், ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூவிற்கு சேர்த்து சில லட்சங்கள் என காதில் விழும், இன்ஜினியரிங்க் மீதான மோகத்தை வைத்து அறுவடை செய்யப்படும் பள்ளிக்கல்வி குறித்தான தகவல்கள், ஆயாசம் தருபவை.

                  கல்வியை, பந்தயத்திற்கு குதிரையை தயாரிக்கும் ஒரு களமாய் நாம் மாற்றி மாமாங்கம் ஆகிறது. நேர்கோட்டில் ஓடுவதைத்தவிர வேறொன்றும் அறியாதவனாய்/ளாய் ஒரு தலைமுறை பண உரம் போட்டு வளர்க்கப்படுகிறது. இப்படி பணம் கொழிக்கும் எந்த கல்வி நிறுவனமும் புத்தியை வளர்த்ததாய் தெரியவில்லை. மாறாக, பதினோறாம் வகுப்பின் இரண்டாம் நாள் தொட்டு, பொதுத்தேர்வுக்கான பாடங்கள் மனனம் செய்ய வைக்கப்படுகின்றன. வைக்கோல் கன்றுக்காய் பால் சுறக்கும் தாய்ப்பசுவாய், காசைக் கொண்டு போய் அழுகிறோம், இந்த கயவர்களிடம். ஏற்கன்வே, பலமுறை விவாதிக்கப்பட்ட இவற்றை, இங்கேயே விட்டுவிட்டு கொஞ்சம் பொறியியல் கல்லூரிகள் பக்கம் நகர்வோம்.

                    கவுன்சிலிங்குக்கு முந்தன நாள் இரவு, திடீரென சரஸ்வதி வேஷமிட்ட ரம்யா கிருஷ்ணன், கனவில் வந்து, எதையோ நாக்கில் எழுதிவைக்க, ஏதோ ஒரு தைரியத்தில் நானும் பொறியியல் பயில ஒரு கல்லூரியை தேர்ந்தெடுத்தேன். அதன் பின்னான என் அனுபவங்கள், சங்கடமானவை. இதை விட பொருத்தமான ஒரு வார்த்தையை எந்த ஒரு பொறியியல் மாணவனாலும் தேர்ந்தெடுத்துவிட முடியாது. பணம் செலவழித்து தன் பிள்ளைகளை பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கும் பெற்றோர்களில் பெரும்பாலோனோர் பிள்ளைகளுக்கு எந்த ஒரு தொந்தரவுகள் கொடுப்பதில்லை தான். தேவைக்கு மீறிய வசதிகள் செய்துகொடுக்கப்படுகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பெரும்பாலான பிள்ளைகளுக்கு பொறியியல் படிப்பதே ஒரு பெரும் சுமையாக மாறிப்போகிறது. தன் தகுதிக்கு மீறிய ஒன்றை தான் கைக்கொள்ள நினைப்பதாக எண்ணியே, படிப்பை துறந்தோர் பலர்.


                      தமிழகத்தில் வெகுசில இடங்களிலேயே பொறியியல் கற்பிக்கப்படுகிறது. மீதி இடங்களில், பெரும்பாலான பண முதலைகள் க்ராபிக்ஸில் கட்டங்களை காகிதத்தில் எழுப்பி, ஏமாந்து வருபவர்களிடம் இருந்து வரும் நன்கொடையில் தான் நிஜ கட்டிடமே எழுப்புகிறார்கள். மீதமிருக்கும் பொறியியல் கல்லூரிகள் குறித்த பின் வரும் தகவல்கள் முக்கியமானவை, சில நுணுக்கமான உள் நோக்கம் கொண்டவை. அவை என்னென்ன?

1.    நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது கல்லூரிகளில், பொறியியல் பயிற்றுவிக்கப்படுவதில்லை. மாறாக, படித்தல், மனனம் செய்தல் அதை மீண்டும் கக்குதல் என்ற வகையிலேயே கல்வி செல்கிறது. இதன் சாராம்சம் மிக எளிது, கழுதைகளைக்கூட சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக்கும் காலம் விரைவில் வரும் நேரத்தில், பெரும்பாலான பேராசியர்கள் விரும்பி கற்பித்தலை தன் தொழிலாக தேர்வு செய்வதில்லை. அது அவர்கள் மீது பொருளாதாரத்தாலோ வேறு காரணிகளாலோ திணிக்கப்படுகிறது, 2nd and 3rd Tier என சொல்லக்கூடிய கல்லூரிகளில் உள்ளவர்கள் தரம் பெரும்பாலும் மோசம் தான். (ஒரு வேளை நீங்கள் என் பேராசியராக இருந்தால், உங்களை நான் இங்கு குறிப்பிடவில்லை என்று தெளிவடைக).

2.    ஒரு பொறியியல் கல்லூரியின் தினசரி அலுவல்கள் அயர்ச்சி அளிப்பதாய் இருக்கும். எல்லா வேலைகளுக்கும் Procedural setup ஒன்று இருக்கும். அது அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என்று பெரிய தலை முதல் சின்ன தலை வரை அனைவரும் எதிர்பார்ப்பார்கள். இந்த மாதிரியான எரிச்சலூட்டும் வேலைகள் உங்களை முதல் முறையே சலிப்படையே செய்துவிடும். இரண்டாம் முறை இந்தச்செயலை செய்யும் போது, ஏனோதானோ என்றே செய்யத்தோன்றும். உதாரணமாக, ஒரு பேராசியர் தனது வகுப்புகளுக்கு கொடுத்த அசைன்மென்டுகளுக்கான கோப்பை மெய்ன்டைன் செய்வது, ஒர் கோப்பையை கையில் வைத்திருக்கும் போது மனைவிடம் சிக்கி அவளை சமாளிப்பது போன்றது. காலை முதல் மாலை வரை எதேனும் ஒரு வேலை தேவையோ இல்லையோ கணக்கிற்காக செய்ய வைக்கப்படுவீர்கள். இதன் மூலம், வேலை செய்ததாய் காட்டிக்கொண்டால் போதும் என்ற மன நிலை வளர ஆரம்பிக்கும்!

3.       மாணவர்களின் நிலை இதை விட பரிதாபமானது. வளர் இளம் பருவத்தில் “ஏப்ரல் மாதம்” “இனிது இனிது” படங்களை விடுமுறையில் பார்த்த நினைவு மாறாமல், வண்ண வண்ண கனவுகளுடன் கல்லூரிக்கும் நுழையும் அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இது அடிமாடாக செல்வதைவிடவும் கொடுமையாய் இருக்கப்போகிறதென. ஆறு சப்ஜெக்ட் தியரி, மூன்று லேபுகள். கொஞ்சம் விழிபிதுங்கித்தான் போவான், எந்தக்கொம்பனும். மிகக்குறிப்பாக, வளரும் நிலையில் இருக்கும் பல கல்லூரிகள் மாணவர்களை படாத பாடு படுத்தும். சில வேளைகளில், பொறியியல் மாணவர்கள், தினத்தேர்வு எழுதுவதும், மனனம் செய்து ஒப்பிக்கும் காட்சியும் நகைப்பையும், பரிதவிப்பையும் ஒரு சேர ஏற்படுத்த வல்லவை. கரும்புச்சாறு இயந்திரத்தில் மாட்டிய சக்கையென வருபவனை, சில பேஸ்புக் அரவணைத்து தாலாட்டினாலும் கூட, உடனே சாட்டில் வந்து அடுத்த நாளைக்கான பணிகளை நினைவூட்டும் நண்பர்களே அதிகமிருப்பார்கள். இதன் காரணி, கொஞ்சம் ஆர்வக்கோளாறுள்ள நிர்வாகிகள், தன் கல்லூரியை வேறொரு கல்லூரி போல ஆக்க வேண்டும் என எண்ணி, அலப்பறையான விதிகளை போட்டு மாணவர்களை விழிபிதுங்க வைப்பார்கள்.

4.    ஒரு அசைன்மென்ட் (ஒரு பத்து பக்கம் எழுதவேண்டி இருக்கும்) எவனாவது ஒருவனால் எழுதப்பட்டு வகுப்பறை முழுவதற்குமாய், சேவை புரியும். ஆனாலும், கணக்குக்காகவும் பழக்கத்திற்காகவும் செய்ப்பட்டே வருகிறது. மாணவர்களுக்கு அது குறித்த புரிதல் வர வேண்டும் என அளிக்கப்பட்ட “அசைன்மென்ட்” கான்செப்ட்டின் இன்றைய மரூஉ தான் “பார்த்து எழுதுக”.

5.    ஒரு பொறியியலாளன் யோசிப்பவனாய், ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பவனாய், அந்த தீர்வில் உள்ள குழப்பம் நீக்குபவனாய், இப்படி பல வேலைகள் புரிய வேண்டும். ஆனால், இன்றைய இரண்டாம் மூன்றாம் நிலைக்கல்லூரிகள் வெறும் காசுக்காக செயல்பட்டு, வெற்று மனிதர்களை, சான்றிதழோடு அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் படித்து வெளிவரும் பலர், வேலையை செய்யும் திறனில்லாமல் இருக்கிறார்கள் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதைச்சொன்னவுடன், நாங்கள் "ப்ளேஸ்மன்ட் ட்ரைனிங்" தருகிறோம் என்பார்கள் பல கல்லூரிகளில். மிகச்சில கல்லூரிகளிலேயே இது தரமாக நடப்படுகிறது என்பதை தவிர்த்து, இவர்கள் இதற்கு பணமும் தனியாக (பீஸ் தவிர) வாங்குகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. அப்போ, வேலை கிடைக்காத பசங்களுக்கு காசு திருப்பி தருவாங்களான்றீங்களா? அஸ்கு புஸ்கு! இதை விட கொடுமை, எனக்கு உங்கள் ட்ரைனிங் வேணாம், நானா பாத்துக்கறேன்னு ஒரு பையன் சொன்னா, அவனை கேம்பஸிற்கு வரும் நிறுவனங்ளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கமாட்டார்கள். இவர்களின் ஆய்வரங்ககளும் அதன் விதிகளும் மீண்டும் உங்களை வேலை செய்ததாய் காண்பிக்க தூண்டுமேயன்றி கற்றுத்தராது.  

6.       வீட்டுக்கு வீடு பிஸ்கெட் விற்பவன் மாதிரி ஒரு ட்ரஸ் கோட் விதியை கொண்டவை பல கல்லூரிகள். நண்பன் ஒருவனின் கல்லூரியில் தினமும் துறைத்தலைவரே வாசலில் நின்று பிஸ்கட்டுகள் சரியாக இருக்கின்றனவா என எண்ணிப்பார்ப்பாராம். முழுக்கை சட்டை (மடித்து விடாமலிருத்தல் முக்கியம்), பார்மல் காற்சட்டை, இவற்றிக்கு மேலாக கொளுத்தும் வெய்யிலிலும் சரி, சொதசொதக்கும் மழையிலும் சரி, ஒரு ஷூ. தொப்பி வைத்தால், ஜெய்சங்கர் பட வில்லன் போலவே இருப்பார்கள் எல்லா மாணவர்களும். இதெல்லாம் எதற்கு? மேலோட்டமாக ஆராய்தால், பண்பாட்டை காப்பறவென்றோ, ஒழுக்கத்தின் கோட்பாடென்றோ தோன்றினாலும், ஓர் ஆழ்ந்த உளவியில் இதனுள் உறைந்திருக்கிறது. ஆங்கில கம்பேனிகாரனுக்காய், ஒரு அடிமை தயாரிக்கும் கடை தான் இன்றைய பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள். அவர்களின் நடை,உடை, பாவனைகளோடு நம்மை பொருந்திப்போக செய்யும் முயற்சி இது. முட்டாள் தனமானது. கல்லூரி ஒன்றில் உணவருந்திக்கொண்டு இருந்தபோது நண்பன் ராமகிருஷ்ணன் கேட்டான் “பாவம் டா பசங்க.. அவனுங்க ஸ்பூன் ல சாப்புடுறானுங்க.. சரி… இப்ப சாப்பிட மடிச்சு விட்ட கைய எறக்கின அசிங்கமா இருக்கும். மடிச்சு விட்டா, அவரு கத்துவாரு. மூளையே கெடையாதா இவனுங்களுக்கு”.

7.                 சரி, இந்த ட்ரஸ் கோட் எல்லாம் வெளிநாட்டை பார்த்து காப்பி அடித்தது. அடித்ததை முழுசா அடிச்சாங்களான்னா அதுவும் கிடையாது. தன்னிச்சையான செயல்பாட்டை ஒரு மாணவனிடம் இருந்து எதிர்பார்க்கவே முடியாது. பெரும்பாலான கல்லூரிகள் ஸ்பூன் பீடிங்கின் உச்சத்தை தொட்டுவிட்டிருக்கின்றன. வெளியில் வந்து ஒரு மனிதனாக இருப்பதற்கான எந்த ஒரு வழிமுறையும் ஒருவனுக்கு கற்றுத்தரப்படுவதே இல்லை. இந்த “ஸ்பூன் பீடிங்” அவனுக்கு/அவளுக்கு மீள முடியாத ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. முட்டாள் தனமான இவர்களின், ஆக்கப்பூர்வமான வழிகாட்டுதல்களால், அவன் தன்னால் சுயமாக ஒரு முடிவு எடுக்க முடியாது என்ற மன நிலையை அடைகிறான். இவனாக முடிவெடுக்க வேண்டிய நிர்பந்த சூழல்கள் பின்னால் வாழ்வில் தோன்றும் போது, இந்த பலவீனம் இவனை/இவளை தவறான முடிவுகளை நோக்கி உந்துகிறது.

8.           அடக்கி வைத்து பீறிட்ட மறுநொடி தரும் ஆசுவாசம் விவரிக்க இயலாதது. இந்த கோட்பாடு எல்லாவற்றிகும் பொருந்தும். அடக்கி வைக்கப்பட்ட ஒருவனின் பதின் வயது ஆசைகள், அவன் கையில் பணமும் சுதந்திரமும் கிடைத்தவுடன் பொங்கிப்பெருக்கெடுக்கும். கல்லூரி முடியும் தருவாயில் ஒரு ஆண்/பெண் இருப்பதையும், இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் தோற்றத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இது விளங்கும். சமீபத்தில், ஒரு மென்பொருள் நிறுவன கழிவறையில் டன் கணக்கில் காண்டங்கள் கண்டு பிடிக்கப்பட்டதும் இதிலடங்கும்.

9.   மிகப்பெரும்பாலான மாணவர்கள் ஆசை காட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்பட்டவர்கள் தான். ஆனாலும் வெகு சிலர், விருப்பமின்றி வேறு துறை தேர்தெடுக்க நினைத்து சமூக நிர்பந்தம் காரணமாக பொறியியல் பொறியல் ஆக்கப்பட்டவர்கள். இவர்களின் நிலையோ இன்னும் பரிதாபம். விரும்பாமல் எதையும் படிக்க முடியாது என்பது உண்மை என்றாலும், பொறியியலுக்கு அது ரொம்பவே பொருந்தும். பெரும்பாலானவர்கள் தங்களுக்கு இது ஒத்துவராது என தெரிந்துகொள்வதற்குள்ளாகவே நான்காண்டுகள் கடந்து விடுகின்றன.

10.   ஒரு கொடுமையான நகை-முரண் ஒன்று உள்ளது. சில கல்வி-டாடிக்கள் பள்ளி கல்லூரி என அனைத்தும் வைத்திருப்பார்கள்.(யாருய்யா சின்னூட்ட பத்தி கத்துறது, கம்முன்னு இருய்யா...) சில பேர், அதே பள்ளி, அதே கல்லூரி எனப் படித்து அங்கேயே பேராசிரியர் ஆகிவடுதலும் உண்டு. தன்னை ஏமாற்றிய கல்வி கூடத்தை பழிவாங்கும் நுண்-உளவியலோ என்ற சந்தேகம் எனக்கு நெடு நாளாய் உண்டெனினும், “The Shawshank Redemption” இல் வரும் “Intitutionalized” என்ற வார்த்தை இவர்களுக்கு வெகு பொருத்தமாய் இருக்கும். இவர்களில் பலரால் இந்த இடம் நீங்கய வெளி உலகில் ஒரு வாழ்க்கை நிகழ்த்த முடியுமா என்பது கேள்விக்குறியே.

11. இவர்கள் பணம் வாங்கிக்கொண்டு நடத்தும் மென் திறன் வளர்ச்சி பயிரலங்கள் நகைச்சுவையின் உச்சம். ஆங்கில நாழிதழ்கள் படிப்பது ஆங்கில மொழித்திறனை வளர்க்கத்தான் என கண்டுபிடித்த பலரின் கண்றாவியான அறிவுகரைகளை பெரும்பாலான மாணவர்கள் பின்பற்ற முயன்றே வெறுப்படைந்திருப்பர். காரணி, மாணவர்கள் வெளி உலகத்தை அறிந்து கொள்ளுதல் குறித்த எந்த ஒரு கவலையும் இவர்களுக்கு கிடையாது. செய்தி படிக்கும் நோக்கன்றி வேறு எந்த நோக்கத்திற்காக ஒரு செய்தித்தாள் படித்தாலும் அதனால் எந்தப்பயனும் இராது. அப்படி படித்தலும் சாத்தியமில்லை.

                        கற்பனை வற்றிப்போன ஒரு வெற்று மனிதனை கொஞ்சம் டிகிரி தாள் என்னும் சான்றிதழோடு வெளியே தள்ளுகின்றன பல கல்லூரிகள். பொறியியலின் சாரம், “செய்வது – செய்தலில் மூலம் கற்பது” என்பதனை அறியாத கல்லூரிகள், அணுவுலைக்கழிவுகளைப்போல என்ன செய்வதென்றே தெரியாத ஒரு தலைமுறையை கொட்டிக்கொண்டே இருக்கிறது. பொத்தாம் பொதுவாக எல்லாருக்கும் இடம் கிடைக்கும் வண்ணம், நானூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருப்பது ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாத அதே நேரத்தில், பனிரெண்டாம் வகுப்பில் அடிக்கும் அட்டை மனப்பாடம் பொறியியலுக்கு தொடர்பில்லாது என்பதனையும் மறுக்க முடியாது. ஒரு முழு Reform பள்ளி மற்றும் உயர்கல்வியில் அவசரமாக தேவைப்படுகிறது. சுயநிதி கல்லூரிகளுக்கு சில கட்டுப்பாடுகள், பொதுவிதிகள் அமைக்கும் முதுகெலும்புள்ள ஒரு அரசு இயந்திரம் அவசியப்படுகிறது. இதைத்தவிர, ஒவ்வொரு சுயநிதி கல்லூரி நிர்வாகமும், பேராசிரியர்களும், பொறுப்புணர்ந்து செயல்படவேண்டும். 

                   இவற்றுக்கு எல்லாம் மேலாக பெற்றோர்கள், பிள்ளைகளை முதலீடாக பார்ப்பதை நிறுத்த வேண்டும். பொறியியல் சேப் ஜோன் என்ற மாயையிலிருந்து விடுபட்டு வாழ்க்கையின் தேடலாக கல்வியை முன்னிறுத்த வேண்டுமேயன்றி அது, பணத்திற்கானதாய் மாறிவிடுதல் கூடாது. ஒருவன் 18 வயதை அடைகையில், தன் வாழ்க்கை குறித்த தெளிவு, தன் கேரியர் குறித்த எண்ணம்/ஆசை அவனுள் உதித்திருக்க வேண்டும். பணத்தை தாண்டி மற்ற காரணங்களுக்காக ஒருவன் ஒரு துறையை தேர்ந்தெடுக்க முன் வர வேண்டும். There are plenty of opportunities and education left unexplored என்பார் நண்பர் ஒருவர். அந்த கல்வியை வாய்ப்புகளையும் தேடிப்பிடிக்க வேண்டும் அடுத்த தலைமுறை.




2 comments:

  1. 100% true Indiala mattum thaan eppadi.varuntha thakka vishayam

    ReplyDelete
  2. எதுக்கு படிக்கறனு கேட்டா சம்பாதிக்கறதுக்குனு பதில் கிடைக்கற காலத்தல வேற என்ன நடக்கும்?
    முதல்ல பணம் சம்பாதிக்கறதுக்குனு படிக்கறத விடனும், அப்பதான் எல்லாம் மாறும்

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..