Flipkart

Amazon

Amazon

Friday, December 14, 2012

எதாவது செய்யணும் சார்! - சிறுகதை


                    நான் வழக்கமாக பூ வாங்கும் பூக்காரியின் மகனவன். என் மனைவியின் ஆதர்ச பூக்காரி அவள். நாங்கள் இந்த ஊருக்கு வந்த புதிதில் குடியிருந்த தெருவிலுள்ள, ஒரு பெரிய பெருமாள் கோவிலின் முன் அமர்ந்து பூ விற்றுக்கொண்டிருப்பாள். என்னமோ அவளிடம் வாங்கும் பூக்களில் மட்டும் தான் இயற்கை மணமுண்டு என்பாள் அவள். இதற்காகவே வீடு மாறி சென்ற பின்னும் இரண்டு கிலோமீட்டர் சுற்றி வந்து இவளிடமே பூ வாங்கிச்செல்வேன். ஒரு முறை, கண்டுபிடிக்க முடியாது என்றெண்ணி வேறொரு கடையில் வாங்கிச்சென்ற போது, நவீன சினிமாக்களில் வரும் அம்மன் போல, கோரதாண்டவம் ஆடித்தீர்த்து விட்டாள் என் பத்தினி. முயன்று பார்த்துவிட்டேன், இந்த பூவின் தனித்துவத்தை இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவதாரங்களையும் தாரங்களையும் நம்மால் என்றுமே புரிந்து கொள்ள முடியாது போலும்!

           கிட்டத்திட்ட இருபது வருடங்களாக அவனை பார்த்து வருகிறேன், நான் திருமணமான புதிதில் அம்மாவின் காலையே சுற்றி வந்து கொண்டிருப்பான். பள்ளியில் சேர்த்து விடச்சொல்லி என் போன்ற பலரும் சொன்ன பிறகே, அவனை பூக்காரி பள்ளியில் சேர்த்ததாக நினைவு. எனவே அவன் படிப்பு விஷயத்தில் அவ்வப்போது அக்கறை இருப்பதாக காட்டிக்கொள்வதும், அதற்கு நானுமொரு காரணம் என கர்வம் கொள்வதும் என் கைமீறிய நிகழ்வுகள்.

           படிப்பை பொருத்தவரையில் அவன் அதிஷ்டம் செய்தவன் என்றே சொல்வேன். “அப்பனை தின்று பிறந்தவன்” போன்ற ஏச்சுக்களை தாங்க முடியாமல் கணவன் ஊரைத் துறந்த பூக்காரியிடம் இதைச்சொன்னால், மனமிகமகிழ்வாள். அவன் படிக்க நிதியுதவி கிடைத்ததால் நான் இப்படிச் சொல்லவில்லை. பள்ளி நூல்களைத் தாண்டி அவன் ஏகப்பட்ட புத்தகங்களை வாங்கிப் படித்தான். எனக்கே புரியாத சில புத்தகங்களை அவன் படித்து விவரிக்கையிலும், விமர்சிக்கையிலும், பெண் பார்க்க சென்ற அன்று மச்சினியை பார்த்து இளித்தது போல இலக்கின்றி சிரித்து வைப்பேன்.

           ஒரு நாள் எதேச்சையாக தொடங்கியது எங்கள் நட்பு. எனக்கே வெட்கமாய்த்தானிருந்தது, என்னை விட பல வயது குறைந்த ஒரு சிறுவனுடன் நட்பு பாராட்ட. ஆனால், அப்படித்தான் அது அமையப்பெற்றது. எனக்கும் வாசிப்புக்கும் வெகு தூரம். சலூனில் முடி வெட்டும் முன்னர் கிடைக்கும் நேரத்திலேயே என் வாசிப்பனுபவம் ஞானப்பராப்தி பெற்று விட்டது. ஆனால், அவன் வாசிப்புக்கலையை அனுபவித்தறிந்தான் எனச்சொல்வதே சரி. வாசித்தல், ஒருவனின் சிந்தனனை போக்கையும், வாழ்க்கை முறையையும் மாற்றும் என்பதை அவன் வாயிலாக கண்டேன். என்னை புத்தகங்கள் ஈர்க்காவிட்டாலும் அவன் ஈர்த்து விட்டான்.

     அன்றொரு நாள் பூக்காரி, உரிமையுடன் கேட்டுக்கொண்டதன் பேரில் தொடங்கியது அது.

“அண்ணே, இவனுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க அண்ணே.. அவிக அப்பன மாதிரியே கண்டதையும் படிச்சிட்டு, கண்ட மாதிரி பேசுறான். ஒழுங்கா பாடத்த படிக்க சொல்லுங்க… மத்தவங்க மாதிரி என்னால காசு, பணம் குடுத்து படிக்க வெக்க முடியுமா?”

அவன் அப்பா, தீவிர கம்யூனிசவாதி. கம்யூனிசவாதி என்று சொன்னால் இன்றைய கம்யூனிஸ்டு கட்சிக்காரர்களோடு சேர்த்து குழப்பிக்கொள்ளக்கூடாது. தோழர் ஜீவாவை போல “பிழைக்கத் தெரியாத” மனிதரவர். மார்க்சியத்தை படித்தவர். அவர் இல்லாத போதும் கூட, அவன் தாயையும் மீறி இவனை மார்க்ஸ் ஈர்த்தது ஆச்சரியமே.

“என்னப்பா ஒழுங்கா படிக்க மாட்டேன்றியாமே…” அவன் கையில் புரட்டிக்கொண்டிருந்த சிகப்பு கலர் புக்கை பார்த்துவிட்டு சொன்னேன் “இதப்படிக்கற நேரம் பாடபுக்க படிக்கலாமில்ல….”

“என்ன சார் இப்படி சொல்லீட்டீங்க..” எனத்தொடங்கி மார்க்ஸ் வெகுகாலத்துக்கு முன்பே தன் வறுமையை புரிந்து கொண்டதை பற்றி எல்லாம் சொன்னான்.

“நான் நல்லாத்தான் சார் படிக்கிறேன். அம்மாவுக்கு நானும் அப்பா மாதிரி ஆயிடுவனோன்னு பயம்”.

“அடுத்து என்ன படிக்கிற? இன்ஜினியரிங்கா?” என்றேன் பேச்சை மாற்ற விரும்பி. அவன் மீண்டும் மார்க்ஸ் குறித்து விளக்கமளித்தால், அதை கேட்கும் பொறுமை என் செவிகளுக்கு இல்லை.

“இல்ல சார், சட்டம் படிக்கலாமின்னு இருக்கேன்”

“சட்டமா? அதுல என்னப்பா பெருசா சம்பாதிக்க முடியும்?”

“அப்ப சம்பாதிக்கறதுக்காகத்தான் படிப்பா சார்?”

“வேறெதுக்கு?”

“இல்ல சார், காசுக்காக நான் படிக்கல. என் படிப்பு என் மனத்திருப்திக்கு. அது எனக்கு அர வயிறொ கால் வயிறோ ஊத்துனா கூட போதும் சார்”.

அதன் பின் விரும்பியோ விரும்பாமலோ, பூ வாங்கச் செல்லும் போதெல்லாம் அவனுடன் பேசுவது வழக்கமாகிவிட்டது. அவனோடு பேசும் போதெல்லாம் விவாதம் எழுவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

ஒரு முறை,

“கடவுள் இல்லங்கற, சரி. அந்த கடவுள் இருக்கப்போய் தானே , அம்மா பூ வித்து நீ படிச்ச”

“அது ஜனங்களோட முட்டாள்தனம் சார். பொண்டாட்டிக்கு பூ குடுக்கறவன் இருக்கற வரைக்கும் பூ விக்கும்” என்றான்.

“அது சரி, அப்ப ஏன் கோவிலுக்கு முன்னாடி வியாபாரம் பண்ணுறாங்க 
உங்கம்மா.. இடத்த மாத்த வேண்டியது தான” கேட்டுவிட்டு பெருமிதமாய் அவனை பார்த்தேன்.

“முட்டாள்கள் கூடுமிடத்தில் தானே சார் தொழில் செய்ய முடியும்”.

      இப்படியான பல வாதங்களில் தோற்று போய்விடும்போதெல்லாம், என்னை விட அதிக ஞானமுள்ள ஒருத்தர் அவனை வாதிட்டு தோற்கடிப்பார்கள் என எண்ணி சுயதிருப்தி அடைவேன். ஆமாம், சுயதிருத்தி என்றொரு வார்த்தை உண்டா? சரி, அது இலக்கியவாதிகளின் பிரச்சனை. நமக்கென்ன. பெரும்பாலும் கடவுள் குறித்த விவாதம் வரும் போதெல்லாம்   “அப்பறம் ஏன் சார் எங்க அப்பா..” என ஒரு நிமிடம் வெறிப்பான். அதற்கு எனக்கு சத்தியமாய் பதில் தெரியவில்லை. தெரியாத ஒன்றுக்காக வக்காலத்து வாங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவனோடு எப்போது பேசினாலும், ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அவன் வெறும் பேச்சோடு நிற்கிறவனாக தெரியவில்லை. லத்தீன் அமேரிக்க நாடுகளின் மீதான அமேரிக்க ஆதிக்கம் முதல் தர்மபுரி கலவரம் வரை அனைத்தையும் அலசுவான். “எதாவது செய்யணும் சார்” என்பான் அடிக்கடி.

“தர்மபுரில 300 வீடுகள எரிச்சு உடைமங்கள நாசம் பண்ணீட்டாங்க.. எதாவது செய்யணும் சார்.”

“இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் நடத்தறது நியாயமே இல்ல.. எதாவது செய்யணும் சார்”

            சாத்தியமா இல்லையா என்றெல்லாம் அவனுக்கு கவலை இல்லை. எதாவது செய்யணும்; எதாவது. சொல்வதோடு நிற்காமல் அதில் என்ன செய்ய முடியும் என்று யோசிப்பான். சாத்தியமெனில் அதை செய்தும் முடிப்பான். உள்ளூர் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடுவான். எங்கு மக்கள் போராட்டம் நிகழ்தாலும் இவன் தலை அதிலெங்காவது தென்படும்.

இப்போதெல்லாம் மனைவி பூ கேட்பது வெகுவாக குறைந்திருந்தது. வயதாகி விட்டதாலோ என்னவோ, யாருக்கு தெரியும். அவனுடனான என் சந்திப்புகளும் கடந்த சில ஆண்டுகளாக குறைந்திருந்தது. அவன் இப்போது அம்மாவை சுற்றும் பிள்ளை அல்லவே. ஆனால், பூக்காரி என்னை பார்க்கும் போதெல்லாம் எதாவது அவனை பற்றி சொல்லிக்கொண்டேயிருப்பாள். அதை விட புலம்புவாள் எனக்கூறுதல் தகும். கடந்த ஆறு மாதங்களாக அவனை நான் முற்றிலும் மறந்திருந்தேன்.  ஊர் ஊராக கோவில் கோவிலாக சுற்றி விட்டு வந்திருந்தோம். எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடோ, ஆர்வமோ இருந்ததில்லை. அப்பா தொடங்கி, மனைவி வரையிலாக, என் ஆன்மீகம் என் கம்பேனியங்களின் விருப்படியே அமைந்து வந்தது.

“என்னங்க எல்லாக்கோவிலையும் பார்த்துட்டோம், திரும்ப ஒரு தடவ நம்ம பெருமாள் கோவில் போயிட்டு வந்துடலாமே…”

“சரி, ஒரு ரெண்டு நாள் போகட்டும்” அப்போதைக்கு சொல்லி வைத்தேன். 
எத்தனை கோவில் கட்டி வெச்சு இருக்காங்க ச்சை, ஆயாசமாய் இருந்ததெனக்கு.

என் பைக்கை பார்த்தேன். நீண்ட நாள் கவனிப்பின்றி , விவாகரத்தான சினிமா நடிகை போல இருந்தது அது. அதை தள்ளிக்கொண்டு மெக்கானிக்கல் ஷாப்பில் விட்டுவிட்டு வந்து ஒரு சிகரெட்டை வாங்கி உதட்டோரம் ஒட்டவைத்துக்கொண்டேன். எப்பவாவது சிகரெட் உண்டு. மனைவி கூடவே இருந்ததால் ஆறு மாசமா தொட முடியாத ஏக்கம் அரித்துக்கொண்டே இருந்தது. ரசித்து புகைத்துக்கொண்டிருந்தேன். ஒரு ஆம்னி வேன் அதிவேகத்தில், கொஞ்சம் தாறுமாறாக நான் நின்றிருந்த சாலைக்கு எதிர்புற ஒன்வேயில் வந்தது. தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு சைக்கிள்காரனை நேருக்கு நேர் தட்டித்தூக்கியது. அந்த வேனில் இருந்தவன், ஜன்னல் கண்ணாடியை இறக்கி ஒரு முறை எட்டிப் பார்த்தான். வேணுமின்னே தான் செஞ்சுருக்கான், ப்ளடி ராஸ்கல், என் மனசாட்சி திட்டியது. மீதி சிகரெட்டை ஆழ ஒரு முறை இழுத்துவிட்டு, வேகவேகமாய் அவனை நோக்கி நடந்தேன்.

             அங்கு கிடந்தவன், அவன், ஆம், அவனே தான். பூக்காரியின் மகன். மனசு கேட்காமல், சட்டென ஓடிப்போய் அவனை மடியில் கிடத்தி விட்டேன். ஆனால், என்ன செய்வதென்று தெரியவில்லை. எல்லாரும் சுற்றி நின்று  எதோ முனுமுனுத்துக்கொண்டிருந்தார்கள். அதற்குள் ஓடி வந்த ட்ராபிக் போலீஸ்காரர் ஒருவர், ஒரு அவசர ஊர்தியை வரவழைத்து அதில் ஏற்றிவிட்டார். நான் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். மரணமைடந்தவர்களை நிறைய பார்த்திருந்தாலும், மரணமடைவதை முதன் முறையாக இப்போது பார்க்கிறேன். அவன் ஆவி பிரிவதாக நான் கண்டது கற்பனையா நிஜமா என நினைவில்லை, மருத்துவமனையை அடைகையில், அவன் சலனமற்றுக் கிடந்தான். சம்பிரதாய சமாதானங்களோடு அவன் இறந்து விட்டதாக அறிவித்தார்கள்.

        பூக்காரியை என் மனைவி சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள். உலகமே முடிந்துவிட்ட பின் தனி மரமாய் நிற்பவளுக்கு என்ன ஆறுதல் கூறிவிட முடியும். நான் மெல்ல வந்தவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன். பலர் தான் அவனுக்கு விடுத்த எச்சரிக்கை பற்றியும் அதை அவன் புறந்தள்ளியதது குறித்தும் வருந்திக்கொண்டு இருந்தார்கள். அந்த பேச்சுக்களில் வருத்ததை விட, “இவனுக்கு வேணும்” என்ற ஆழ்மன வக்கிரமே அதிகம் தொனித்தது.

“எத்தன முற சொல்லி இருப்பேன் தெரியுங்களா, அந்த கவுன்சிலர் எவ்வளவு மணல் அள்ளுனா உனக்கென்ன, உன் பொழப்ப கவனின்னு, ஹ்ம்ம்ம் பூமி அம்மா மாதிரின்னான். இப்ப இவன் அம்மாவை யாருகாப்பாத்துவா சொல்லுங்க”

வெளியில் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார் “பின்னாடில இருந்து வந்து மோதி இருக்கானுங்க சார். இவனுங்கள இப்படியே விட்டுட கூடாது. எதாவது செய்யணும் சார்”. நானும் சொல்லிவைத்தேன் “ஆமாங்க, எதாவது செய்யணும்”.




3 comments:

  1. நல்லாருக்கு நண்பரே

    ReplyDelete
  2. நல்லா எழுதியிருக்கீங்க நண்பரே..

    ReplyDelete
  3. நல்லா எழுதியிருக்கீங்க நண்பரே..

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..